பெருங்கதை/4 10 பிரச்சோதனன் தூது விட்டது
- பாடல் மூலம்
4 10 பிரச்சோதனன் தூதுவிட்டது
வாயில் காவலன் தூதர் வந்தமையைத் தெரிவித்தல்
தொகுஒருங்குநன் கியைந்தவ ருறைவுழி யொருநாள்
திருந்துநிலைப் புதவிற் பெருங்கத வணிந்த
வாயில் காவலன் வந்தடி வணங்கி
ஆய்கழற் காலோ யருளிக் கேண்மதி
உயர்மதி லணிந்த வுஞ்சையம் பெருநகர்ப் 5
பெயர்வில் வென்றிப் பிரச்சோ தனனெனும்
கொற்ற வேந்தன் றுதுவர் வந்துநம்
முற்றம் புகுந்து முன்கடை யாரென
அந்தளிர்க் கோதையைப் பெற்றது மற்றவன்
தந்தை தந்த மாற்றமுந் தலைத்தாள் 10
இன்பம் பெருக வெதிர்வனன் விரும்பி
பதுமையென்னுந் தூதி
தொகுவல்லே வருக வென்றலின் மல்கிய
மண்ணியன் மன்னர்க்குக் கண்ணென வகுத்த
நீதி நன்னூ லோதிய நாவினள்
கற்றுநன் கடங்கிச் செற்றமு மார்வமும் 15
முற்ற நீங்கித் தத்துவ வகையினும்
கண்ணினு முள்ளே…
குறிப்பி னெச்ச நெறிப்பட நாடித்
தேன்றெரிந் துணருந் தன்மை யறிவினள் 20
உறுப்புப்பல வறுப்பினு முயிர்தவ றிருக்கினும்
நிறுத்துப்பல வூசி நெருங்க வூன்றினும்
கறுத்துப்பல கடிய காட்டினுங் காட்டாது
சிறப்புப்பல செயினுந் திரிந்துபிறி துரையாள்
பிறைப்பூ ணகலத்துப் பெருமக னவன்மாட்டுக் 25
குறித்தது கூறுதல் செல்லாக் கொள்கையன்
இன்னது செய்கென வேவ லின்றியும்
மன்னிய கோமான் மனத்ததை யுணர்ந்து
முன்னியது முடிக்கு முயற்சிய ளொன்னார்
சிறந்தன பின்னுஞ் செயினு மறியினும் 30
புறஞ்சொ றுற்றாது புகழுந் தன்மையன்
புல்லோர் வாய்மொழி யொரீஇ நல்லோர்
துணிந்த நூற்பொருள் செவியுளங் கெழீஇப்
பணிந்த தீஞ்சொற் பதுமை யென்னும்
கட்டுரை மகளொடு கரும நுனித்து 35
விட்டுரை விளங்கிய விழுப்புக ழாளரும்
கற்ற நுண்டொழிற் கணக்கருந் திணைகளும்
காய்ந்த நோக்கிற் காவ லாளரும்
தீன்றார் மார்பன் றிருநகர் முற்றத்துக்
கைபுனைந் தோருங் கண்டு காணார் 40
வாசவதத்தைக்குப் பிரச்சோதனன் அளித்த பொருள்கள்
தொகுஐயைந் திரட்டி யவன வையமும்
ஒள்ளிழைத் தோழிய ரோரா யிரவரும்
சேயிழை யாடிய சிற்றிற் கலங்களும்
பாசிழை யல்குற் றாய ரெல்லாம்
தம்பொறி யொற்றியதச்சுவினைக் கூட்டத்துச் 45
செம்பொ னணிகலஞ் செய்த செப்பும்
தாயுந் தோழியுந் தவ்வையு மூட்டுதல்
மேயல ளாகி மேதகு வள்ளத்துச்
சுரைபொழி தீம்பா னுரைதெளித் தாற்றித்
தன்கை சிவப்பப் பற்றித் தாங்காது 50
மகப்பா ராட்டுந் தாயரின் மருட்டி
முகைப்புரை மெல்விரல் பானய மெய்த
ஒளியுகிர் கொண்டு வளைவா யுறீஇச்
சிறகர் விரித்து மெல்லென நீவிப்
பறவை கொளீஇப் பல்லூழ் நடாஅய்த் 55
தன்வாய் மழலை கற்பித் ததன்வாய்ப்
பரத கீதம் பாடுவித் தெடுத்த
மேதகு கிளியு மென்னடை யன்னமும்
அடுதிரை முந்நீர் யவனத் தரசன்
விடுநடைப் புரவியும் விசும்பிவர்ந் தூரும் 60
கேடில் விமானமு நீரியங்கு புரவியும்
கோடி வயிரமுங் கொடுப்புழிக் கொள்ளான்
சேடிள வனமுலைத் தன்மக ளாடும்
பாவை யணிதிறை தருகெனக் கொண்டுதன்
பட்டத் தேவிப் பெயர்நனி போக்கி 65
எட்டி னிரட்டி யாயிர மகளிரும்
அணங்கி விழையவு மருளான் மற்றென்
வணங்கிறைப் பணைத்தோள் வாசவ தத்தைக்
கொருமக ளாகெனப் பெருமகன் பணித்த
பாவையு மற்றதன் கோயிலுஞ் சுமக்கும் 70
கூனுங் குறளு மேனாங் கூறிய
நருமதை முதலா நாடக மகளிரும்
ஆன்வீற் றிருந்த வரும்பெற லணிகலம்
தான்வீற் றிருத்தற்குத் தக்கன விவையென
முடியுங் கடகமு முத்தணி யாரமும் 75
தொடியும் பிறவுந் தொக்கவை நிறைந்த
முடிவாய்ப் பேழையு முயசுங் கட்டிலும்
தவிசுங் கவரியுந் தன்கை வாளும்
குடையுந் தேரு மிடையற வில்லா
இருங்களி யானை யினமும் புரவியும் 80
வேறுவே றாகக் கூறுகூ றமைத்துக்
காவ லோம்பிக் காட்டினிர் கொடுமினென்
றாணை வைத்த வன்னோர் பிறரும்
நெருங்கிமேற் செற்றி யொருங்குவந் திறுப்பப்
பழியி லொழுக்கிற் பதுமை யென்னும் 85
கழிமதி மகளொடு கற்றோர் தெரிந்த
கொல்வ லாளர் கொண்டனர் புக்குத்தம்
கால்வ லிவுளிக் காவலர் காட்டத்
பதுமை ஓலையை உதயணனிடம் அளித்தல்
தொகுதொடித்தோள் வேந்தன்முன் றுட்கென் றிறைஞ்சினன்
வடிக்கே ழுண்கண் வயங்கிழை குறுகி 90
முகில்விரல் கூப்பி யிகழ்வில ளிறைஞ்சி
உட்குறு முவண முச்சியிற் சுமந்த
சக்கர வட்டமொடு சங்குபல பொறித்த
தோட்டுவினை வட்டித்துக் கூட்டரக் குருக்கி
ஏட்டுவினைக் கணக்க னீடறிந் தொற்றிய 95
முடக்கமை யோலை மடத்தகை நீட்டி
மூப்பினு முறையினும் யாப்பமை குலத்தினும்
அன்பினுங் கேளினு மென்றிவை பிறவினும்
…..
மாசனம் புகழு மணிபுனைந் தியற்றிய
ஆசனத் திழிந்த வமைதிகொ ளிருக்கையன் 100
உதயணன் ஓலையை வாங்குதல்
தொகுசினைகெடிற் றன்ன செங்கேழ்ச் செறிவிரல்
தணிக்கவின் கொண்ட தகைய வாக
அருமறை தாங்கிய வந்த ணாளரொடு
புருணிறை செந்நாப் புலவ ருளப்பட
ஏனோர் பிறர்க்கு நாணா டோறும் 105
கலனிறை பொழிய கவியி னல்லதை
இலமென மலரா வெழுத்துடை யங்கையின்
ஏற்றனன் கொண்டு வேற்றுமை யின்றிக்
கோட்டிய முடிய னேட்டுப்பொறி நீக்கி
மெல்லென விரித்து வல்லிதி னோக்கிப் 110
ஓலையிலெழுதிய செய்தி
தொகுபிரச்சோ தனனெனும் பெருமக னோலை
உரைச்சேர் கழற்கா லுதயணன் காண்க
இருகுல மல்ல திவணகத் தின்மையிற்
குருகுலக் கிளைமை கோடல் வேண்டிச்
சேனையொடு சென்று செங்களம் படுத்துத் 115
தானையொடு தருத றானெனக் கருமையிற்
பொச்சாப் போம்பிப் பொய்க்களிறு புதைஇ
இப்படித் தருகென வேவினே னெமர்களை
அன்றைக் காலத் தந்நிலை நினையா
தின்றைக் காலத் தெற்பயந் தெடுத்த 120
கோமா னெனவே கோடல் வேண்டினேன்
ஆமா நோக்கி யாயிழை தன்னொடு
மகப்பெறு தாயோ டியானு முவப்பப்
பெயர்த்தென் னகரி யியற்பட வெண்ணுக
தன்னல திலனே தையலுந் தானும் 125
என்னல திலனே யினிப்பிற னாகலென்
பற்றா மன்னனைப் பணிய நூறிக்
கொற்றங் கொண்டதுங் கேட்டனென் றெற்றென
யான்செயப் படுவது தான்செய் தனனினிப்
பாம்பு மரசும் பகையுஞ் சிறிதென 130
ஆம்பொரு ளோதின ரிகழா ரதனாற்
றேம்படு தாரோன் றெளிதலொன் றிலனாய்
ஓங்குகுடை நீழ லுலகுதுயின் மடியக்
குழவிகொள் பவரி னிகழா தோம்பிப்
புகழ்பட வாழ்க புகழ்பிறி தில்லை 135
ஆகிய விழுச்சீர் ரரும்பெற லமைச்சன்
யூகியை யெமரொடு முடனே விடுக்க
கரும முண்டவற் காணலுற் றனெனென
ஒருமையிற் பிறவு முரைத்தவை யெல்லாம்
பெருமையிற் கொள்கெனப் பிரியாது புணர்த்த 140
மந்திர விழப்பொருண் மனத்தே யடக்கி
வெந்திறல் வீரன் விளங்கிய முறுவலன்
உதயணன் பதுமையை வினாவுதல்
தொகுஆனாக் காத லவந்திகை தன்னகர்
மேனாட் காலை வெவ்வழற் பட்ட
தீயுண் மாற்றம் வாயல வெனினும் 145
உரையெழுதி வந்தவிவ் வோலையு ளுறாக்குறை
பழுதா லென்று பதுமையை நோக்கப்
பவழச் செவ்வாய் படிமையிற் றிறந்து
முகில்விரல் காப்பி முற்றிழை யுரைக்கும்
பரும யானையிற் பற்றா ரோட்டிய 150
பெருமையின் மிக்கவெம் பெருமகன் றன்னோ
டொருநாட்டுப் பிறந்த வுயிர்புரை காதற்
கண்ணுறு கடவுண் முன்னர் நின்றென்
ஒண்ணுதற் குற்றது மெய்கொலென் றுள்ளிப்
படுசொன் மாற்றத்துச் சுடர்முகம் புல்லெனக் 155
குடைகெழு வேந்தன் கூறாது நிற்பச்
சினப்போர்ச் செல்வ முன்ன மற்றுநின்
அமைச்சரோ டதனை யாராய்ந் தனன்போல்
நூனெறி மரபிற் றான்றிவு தளரான்
தொடுத்த மாலை யெடுத்தது போல 160
முறைமையின் முன்னே தெரிய வவனெம்
இறைமகற் குரைத்தன னித்துணை யளவவன்
மாய விருக்கைய ளாய்வ தாமென
நீட்ட மின்றவ ணீயள விடினே
கூட்ட மெய்து நாளு மிதுவென 165
இன்றை நாளே யெல்லை யாகச்
சென்ற திங்கட் செய்தவ னுரைத்தனன்
ஆண மாகிய வருந்தவன் வாய்மொழி
பேணு மாதலிற் பெருமகன் றெளிந்தனன்
ஒத்த தோவது வத்தவ வந்தென 170
வாழ்த்துபு வணங்கிய வயங்கிழை கேட்பத்
உதயணன் கூறுதல்
தொகுதாழ்த்துணைத் தலைப்பொறிக் கூட்டம் போலப்
பொய்ப்பின் றொத்தது செப்பிய பொருளென
உறுதவற் புகழ்ந்து மறுவில் வாய்மொழி
மனத்தமர் தோழரொடு மன்னவன் போந்து 175
திருக்கிளர் முற்றம் விருப்பொடு புகுந்து
உதயணன் பண்ணிகாரங்களைக் காணுதல்
தொகுபல்வகை மரபிற் பண்ணி காரம்
செல்வன வெல்லாஞ் செவ்விதிற் கண்டு
உதயணன் வந்தோரை உபசரித்தல்
தொகுவந்தோர்க் கொத்த வின்புறு கிளவி
அமிர்துகலந் தளித்த வருளின னாகித் 180
தமர்திறந் தேவி தானுங் கேட்கென
வேறிடம் பணித்தவர் வேண்டுவ நல்கி
யாறுசெல் வருத்த மூறின் றோம்பி
உதயணன் யூகிக்குக் கூறுதல்
தொகுஅவந்தியர் கோமா னருளிட நூனெறி
இகழ்ந்துபிழைப் பில்லா வியூகி சென்றிவண் 185
நிகழ்ந்ததுங் கூறிநின் னீதியும் விளக்கி
நெடித்தல் செல்லாது வாவென வழிநாள்
விடுத்தன னவரொடு விளங்கிழை நகர்க்கென்.
4 10 பிரச்சோதனன் தூதுவிட்டது முற்றிற்று.