பெருங்கதை/4 7 வாசவதத்தை வந்தது

  • பாடல் மூலம்

4 7 வாசவதத்தை வந்தது

அமைச்சர் வாசவதத்தையை உதயணன்பால் விடுத்தல்

தொகு

ஆணை வேந்த னமர்ந்துதுயில் பொழுதின்
வாணுதன் மாதரை மதியுடை யமைச்சர்
அன்பியாத் தியன்ற தன்பாற் கணவன்
மண்பாற் செல்வ மாற்றி மற்றோர்
பெண்பாற் செல்வம் பேணுத லின்மையும் 5
எரிசின மொய்ம்பிற் றரிசகன் றங்கை
பண்பொடு புணர்ந்த பதுமா பதியையும்
பொருபடை வேந்தனை வெரீஇப் புணர்த்த
கருமக் காம மல்ல தவண்மாட்
டொருமையி னோடாது புலம்பு முள்ளமும் 10
இரவும் பகலு மவண்மாட் டியன்ற
பருவர னோயோ டரற்றும் படியும்
இன்னவை பிறவு நன்னுத றேற
மறப்பிடைக் காட்டுதல் வலித்தன ராகிச்
சிறப்புடை மாதரைச் சிவிகையிற் றரீஇப் 15
பெறற்கருங் கொழுநன் பெற்றி காண்கென
ஆய்மணி விளக்கத் தறையகம் புகுத்தலின்

உதயணனுடைய நிலை

தொகு

மாமணித் தடக்கை மருங்கிற் றாழ்தரத்
தன்பாற் பட்ட வன்பின னாகிக்
கரண நல்லியாழ் காட்டுங் காலை 20
மரணம் பயக்கு மதர்வைத் தாயநின்
கடைக்க ணோக்கம் படைப்புண் ணகவயின்
அழனெய் பெய்தென் றாற்றே னென்னை
மழலையங் கிளவி மறந்தனை யோவென
வாய்சோர்ந் தரற்றா வாசங் கமழும் 25
ஆய்பூந் தட்டத் தகத்தோடு தெற்றிய
தாமம் வாட்டுங் காம வுயிர்ப்பினன்
கனவி னினையுங் கணவனைக் கண்டே

வாசவதத்தையின் செயல்

தொகு

நனவினு மிதுவோ நறுந்தார் மார்பன்
தன்னல தில்லா நன்னுதன் மகளிரை 30
மறுதர வில்லாப் பிரிவிடை யரற்றுதல்
உறுகடல் வரைப்பி னுயர்ந்தோற் கியல்பெனல்
கண்டனெ னென்னுந் தண்டா வுவகையள்
நூனெறி வழாஅ நுனிப்பொழுக் குண்மையின்
ஏனை யுலகமு மிவற்கே யியைகெனக் 35
கணவனை நோக்கி யிணைவிரல் கூப்பி
மழுகியவொளியின ளாகிப் பையெனக்
கழுமிய காதலொடு கைவலத் திருந்த
கோட பதியின் சேடணி கண்டே
மகக்காண் டாயின் மிகப்பெரிது விதும்பிச் 40
சார்ந்தன ளிருந்து வாங்குபு கொண்டு
கிள்ளை வாயி னன்ன வள்ளுகிர்
நுதிவிரல் சிவப்பக் கதியறிந் தியக்கலிற்
காதலி கைந்நயக் கரணங் காதலன்
ஏதமில் செவிமுத லினிதி னிசைப்ப 45

உதயணனுடைய செயல்

தொகு

வாசவ தத்தாய் வந்தனை யோவெனக்
கூந்தன் முதலாப் பூம்புற நீவி
ஆய்ந்த திண்டோ ளாகத் தசைஇ
என்வயி னினையா தேதிலை போல
நன்னுதன் மடவோய் நாள்பல கழிய 50
ஆற்றிய வாறெனக் கறியக் கூறென

வாசவதத்தை வாளா விருத்தல்

தொகு

மாற்றுரை கொடாஅண் மனத்தோ டலமரீஇக்
கோட்டுவன ளிறைஞ்சிக் கொடுங்குழை யிருப்ப

மீட்டும் உதயணன் அரற்றல்

தொகு

மயங்குபூஞ் சோலை மலைவயி னாடிப்
பெயர்ந்த காலை நயந்தனை யொருநாள் 55
தழையுங் கண்ணியும் விழைவன தம்மென
வேட்டம் போகிய போழ்திற் கோட்டம்
கூரெரி கொளுவ வாரஞ ரெய்தி
இன்னுயிர் நீத்த விலங்கிழை மடவோய்
நின்னணி யெல்லா நீக்கி யோராப் 60
பின்னணி கொண்டு பிறளே போன்றனை
எரியகப் பட்டோ ரியற்கை யிதுவோ
தெரியே னெனக்கிது தெரியக் கூறென
ஆனா வுவகையொ டவண்மெய் தீண்டியும்
தேனார் படலைத் திருவளர் மார்பன் 65
கனவென வறியான் காதலின் மறுத்தும்
சினமலி நெடுங்கண் சேர்த்திய பொழுதின்

அமைச்சர் வாசவதத்தையை உதயணனிடமிருந்து பிரித்தல்

தொகு

வழுக்கில் சீர்த்தி வயந்தக னடைஇ
ஒழுக்கிய றிரியா யூகியொ டுடனே
நாளை யாகு நண்ணுவ தின்றுநின் 70
கேள்வ னன்பு கெடாஅ னாகுதல்
துயிலுறு பொழுதிற்றோன்றக் காட்டுதல்
அயில்வேற் கண்ணி யதுநனி வேண்டித்
தந்தே மென்பது கேளெனப் பைந்தொடி
புனைகொல் கரையி னினைவனள் விம்மி 75
நிறையில ளிவளென வறையுநன் கொல்லென
நடுங்கிய நெஞ்சமோ டொடுங்கீ ரோதி
வெம்முலை யாகத்துத் தண்ணெனக் கிடந்த
எழுப்புரை நெடுந்தோண் மெல்லென வெடுத்து
வழுக்கில் சேக்கையுள் வைத்தனள் வணங்கி 80
அரும்பெறல் யாக்கையி னகலு முயிர்போற்
பெரும்பெயர்த் தேவி பிரிந்தனள் போந்துதன்
ஈனாத் தாயோ டியூகியை யெய்தப்

உதயணன் விழித்து அரற்றல்

தொகு

போரார் குருசில் புடைபெயர்ந் துராஅய்
மறுமொழி தாராய் மடவோ யெனக்கென 85
உறுவரை மார்பத் தொடுக்கிய புகுவோன்
காணா னாகிக் கையற வெய்தி
ஆனா வின்றுயி லனந்தர் தேறிப்
பெருமணி பெற்ற நல்குர வாளன்
அருமணி குண்டு கயத்திட் டாங்குத் 90
துயிலிடைக் கண்ட துணைநலத் தேவியை
இயல்புடை யங்க ணேற்றபிற் காணா
தரற்று மன்னனை யருமறை நாவின்

வயந்தகன் உதயணனிடம் கூறல்

தொகு

வயத்தகு வயந்தகன் வல்விரைந் தெய்தி
இருளும் பகலு மெவ்வமொ டிரங்குதல் 95
பொருளஃ தன்றே புரவலர் மாட்டெனக்
காரணக் கிளவி கழறுவனன் காட்டத்

உதயணன் கூற்று

தொகு

தோணி சேனைத் திறன்மீக் கூரிய
பிடிமகிழ் யானைப் பிரச்சோ தனன்மகள்
வடிமலர்த் தடங்கண் வாசவ தத்தையென் 100
பள்ளிப் பேரறை பையெனப் புகுந்து
நல்லியா ழெழீஇ நண்ணுவன ளிருப்ப
வாச வெண்ணெ யின்றி மாசொடு
பிணங்குபு கிடந்த பின்னுச்சேர் புறத்தொடு
மணங்கமழ் நுதலு மருங்குலு நீவி 105
அழிவுநனி தீர்ந்த வாக்கையே னாகிக்
கழிபே ருவகையொடு கண்படை கொளலும்
மறுத்தே நீங்கினள் வயந்தக வாராய்
நிறுத்த லாற்றே னெஞ்ச மினியெனக்

வயந்தகன் கூற்று

தொகு

கனவிற் கண்டது நனவி னெய்துதல் 110
தேவர் வேண்டினு மிசைதல் செல்லாது
காவ லாள கற்றோர் கேட்பிற்
பெருநகை யிதுவெனப் பேர்த்துரை கொடாஅ
ஆடலு நகையும் பாடலும் விரைஇ
மயக்கமி றேவி வண்ணங் கொண்டோர் 115
இயக்கி யுண்டீண் டுறைவதை யதற்கோர்
காப்பமை மந்திரங் கற்றனென் யானென
வாய்ப்பறை யறைந்து வாழ்த்துப்பல கூறி
ஒருதலைக் கூற்றொடு திரிவில னிருப்பப்

உதயணன் செயல்

தொகு

பண்டே போலக் கண்படை மம்மருட் 120
கண்டே னானே கனவன் றாயின்
மாறி நீங்குமோ மடமொழி தானெனத்
தேறியுந் தேறான் றிருவமர் மார்பன்
நள்ளிரு ணீங்கலும் பள்ளி யெழுந்து
காமர் கற்றங் கைதொழு தேத்தத் 125
தாமரைச் செங்கண் டகைபெறக் கழீஇக்
குளம்புங் கோடும் விளங்குபொன் னழுத்திச்
சேடணி சேதா விளையன வின்னே
கோடி முற்றிக் கொண்டனிர் வருகெனத்
தெரிமலர்க் கோதைத் தேவியை யுள்ளி 130
அருமறை யாளர்க் கெழுமுறை வீசி
நனவிற் கண்ட நன்னுதன் மாதரைக்
கனவெனக் கொண்டலி னினியோர்க்கு முரையான்
காமுறு நெஞ்சிற் காதலர்ப் பிரிந்தோர்க்
கேமுறு வேட்கை யாகு மென்ப 135
தீதுகொ லென்னப் பற்பல நினைஇ

வயந்தகன் உதயணனிடம் கூறுதல்

தொகு

இருந்த செவ்வியுள் வயந்தகன் குறுகி
ஆனாச் செல்வத் தந்தணன் மற்றுநாம்
மேனா ணிகழ்ந்த மேதகு விழுமத்
தறம்பெரு ளின்ப மென்ற மூன்றினும் 140
சிறந்த காதலி சென்றுழித் தரூஉம்
மகதத் தெதிர்ந்த தகுதி யாளன்
மதுகாம் பீர வனமெனுங் காவினுட்
புகுதந் திருந்து புணர்க்கு மின்றவட்
சேறு மெழுகெனச் சிறந்தன னாகி 145

உதயணன் செயல்

தொகு

மாறா மகிழ்ச்சியொடு மன்னவன் விரும்பிக்
கொடுஞ்சி நெடுந்தேர் கோல்கொள வேறி
நெடுங்கொடி வீதி நீந்துபு போகி
வித்தக வினைஞர் சித்திர மாக
உறழ்படச் செய்த வொண்பூங் காவின் 150
எறுழ்மிகு மொய்ம்ப னிழிந்தகம் புகவே

யூகியினிலைமை

தொகு

நோயற வெறியு மருந்தோ ரன்ன
வாய்மொழிச் சூழ்ச்சித் தோழற் குணர்த்தலிற்
குழன்ற குஞ்சி நிழன்றெருத் தலைத்தரக்
கழுவாது பிணங்கிய வழுவாச் சடையினன் 155
மறப்போ ரானையின் மதந்தவ நெருக்கி
அறப்பே ராண்மையி னடக்கிய யாக்கையன்
கல்லுண் கலிங்கங் கட்டிய வரையினன்
அல்லூ ணீத்தலி னஃகிய வுடம்பினன்
வெற்ற வேந்தன் கொற்றங் கொள்கெனச் 160
செற்றத் தீர்ந்த செய்தவச் சிந்தையன்

வாசவதத்தையின் நிலைமை

தொகு

நன்னுத லரிவையும் பொன்னெனப் போர்த்த
பசலை யாக்கையொடு பையு ளெய்தி
உருப்பவிர் மண்டிலத் தொருவயி னோடும்
மருப்புப் பிறையின் மிகச்சுடர்ந் திலங்காது 165
புல்லெனக் கிடந்த நுதலினொ டலமந்
தியல்பிற் றிரியா வின்பெருங் கிழவனை
வியலக வரைப்பின் மேவர வேண்டி
விரத விழுக்கலம் விதியுளி யணிந்து
திரித லில்லாச் செந்நெறிக் கொள்கையன் 170
பொன்னிறை சுருங்கா மண்டிலம் போல
நன்னிறை சுருங்கா ணாடொறும் புறந்தரீஉத்
தன்னெறி திரியாத் தவமுது தாயொடும்
விருத்துக் கோயிலுட் கரப்பறை யிருப்ப

உதயணன் யூகியை அறிந்துகொண்டு தழுவல்

தொகு

யாப்புடைத் தோழ னரசனொ டணுகிக் 175
காப்புடை முனிவனைக் காட்டின னாக
மாசின் மகதத்துக் கண்டோ னல்லன்
யூகி மற்றிவ னொளியல தெல்லாம்
ஆகா னாகலு மரிதே மற்றிவன்
மார்புற முயங்கலும் வேண்டுமென் மனனென 180
ஆராய் கின்றோற் ககலத்துக் கிடந்த
பூந்தண் மாலையொடு பொங்குநூல் புரள
இதுகுறி காணென விசைப்பது போல
நுதிமருப் பிலேகை நுண்ணிது தோன்ற
ஐயந் தீர்ந்து வெய்துயிர்த் தெழுந்துநின் 185
நூறில் சூழ்ச்சி யூகந்த ராய
நாறிருங் கூந்தலை மாறிப் பிறந்துழிக்
காணத் தருகுறு முனிவனை நீயினி
யாணர்ச் செய்கை யுடைத்தது தெளிந்தேன்
வந்தனை யென்றுதன் சந்தன மார்பிற் 190
பூந்தார் குழையப் புல்லினன் பொருக்கெனத்
தீந்தேன் கலந்த தேம்பால் போல
நகையுருத் தெழுதரு முகத்த னாகித்
துறந்தோர்க் கொத்த தன்றுநின் சிறந்த
அருள்வகை யென்னா வகலுந் தோழனைப் 195
பொருள்வகை யாயினும் புகழோய் நீயினி
நீங்குவை யாயி னீங்குமென் னுயிரெனப்

வாசவதத்தையின் வருகை

தொகு

பூங்கழை மாதரைப் பொருக்கெனத் தம்மென்
றாங்கவன் மொழிந்த வல்ல னோக்கி
நன்னுதன் மாதரைத் தாயொடு வைத்த 200
பொன்னணி கோயில் கொண்டனர் புகவே

வாசவதத்தையின் செயல்

தொகு

காரிய மிதுவெனச் சீரிய காட்டி
அமைச்ச ருரைத்த திகத்த லின்றி
மணிப்பூண் மார்பன் பணித்தொழி லன்மை
நல்லா சார மல்லது பிரிந்த 205
கல்லாக் கற்பிற் கயத்தியேன் யானென
நாண்மீ தூர நடுங்குவன ளெழுந்து
தோண்மீ தூர்ந்த துயர நீங்கக்
காந்த ணறுமுகை கவற்று மெல்விரல்
பூண்கல மின்மையிற் புல்லெனக் கூப்பிப் 210
பிரிவிடைக் கொண்ட பின்னணி கூந்தல்
செருவடு குருசி றாண்முதற் றிவள
உவகைக் கண்ணீர் புறவடி நனைப்பக்
கருவி வானிற் கார்த்துளிக் கேற்ற
அருவி வள்ளியி னணிபெறு மருங்குலள் 215
இறைஞ்சுபு கிடந்த சிறந்தோட் தழீஇச்
செல்ல றீரப் பல்லூழ் முயங்கி

உதயணன் சாங்கியத்தாயை நோக்கிக் கூறல்

தொகு

அகல நின்ற செவிலியை நோக்கித்
துன்பக் காலத்துத் துணையெமக் காகி
இன்ப மீதற் கியைந்துகை விடாது 220
பெருமுது தலைமையி னொருமீக் கூரிய
உயர்தவக் கிழமைநும் முடம்பி னாகிய
சிற்றுப காரம் வற்றல் செல்லா
தால வித்திற் பெருகி ஞாலத்து
நன்றி யீன்ற தென்றவட் கொத்த 225
சலமி லருண்மொழி சாலக் கூறி

யாவரும் நகர் செல்லல்

தொகு

இரவிடைக் கண்ட வண்ணமொ டிலங்கிழை
உருவ மொத்தமை யுணர்ந்தன னாகி
ஆய்பெருங் கடிநக ரறியக் கோயிலுள்
தேவியை யெய்திச் சிறப்புரை பரப்ப 230
இருங்கண் முரசம் பெருந்தெரு வறைதலின்
மாணக ருவந்து மழைதொட நிலந்த
சேணுயர் மாடத்து மீமிசை யெடுத்த
விரிப்பூங் கொடியொடு விழவயர்ந் தியற்றி
அமைச்ச னாற்றலு நண்பின தமைதியும் 235
நயத்தகு நன்னுத லியற்பெரு நிறையும்
வியத்தன ராகி மதித்தனர் பகரப்
பஞ்ச வண்ணத்துப் படாகை நுடங்கக்
குஞ்சர வெருத்திற் குடைநிழற் றந்த
புண்ணிய நறுநீர் துன்னினர் குழீஇ 240
அரசனுந் தேவியுந் தோழனு மாடி
விலைவரம் பறியா விழுத்தகு பேரணி
தலைவரம் பானவை தகைபெற வணிந்து
கூறுதற் காகாக் குறைவி லின்பமொடு
வீறுபெற் றனரான் மீட்டுத்தலைப் புணர்ந்தென். 245

4 7 வாசவதத்தை வந்தது முற்றிற்று.