பெருங்கதை/4 8 தேவியைத் தெருட்டியது

  • பாடல் மூலம்

4 8 தேவியைத் தெருட்டியது

உதயணன் செயல்

தொகு

மீட்டுத்தலைப் புணர்ந்த காலை மேவார்
கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடுந்தே
உருவ வெண்குடை யுதயண குமரன்
ஒருநலத் தோழன் யூகந்த ராயற்
கருளறம் படாஅ னகத்தே யடக்கி 5
முகனமர் கிளவி முன்னின் றுரைப்பின்
ஏதின்மை மீனு மேனோர் மாட்டெனக்
காதற் றேவிக்குக் கண்ணா யொழுகும்
தவமுது மகட்குத் தாழ்ந்தருள் கூறிப்
பயனுணர் கேள்விப் பதுமா பதியைத் 10
தாங்கருங் காதற் றவ்வையை வந்து
காண்க வென்றலுங் கணங்குழை மாதரும்

பதுமாபதி வாசவதத்தையைக் காணல்

தொகு

அரியார் தடங்க ணவந்திகை யவன்றனக்
குயிரேர் கிழத்தியாகலி னுள்ளகத்
தழிதல் செல்லாண் மொழியெதிர் விரும்பிப் 15
பல்வகை யணிகளு ணல்லவை கொண்டு
தோழிய ரெல்லாஞ் சூழ்வன ரேந்தச்
சூடுறு கிண்கிணி பாடுபெயர்ந் தரற்றக்
காவல னீக்க நோக்கி வந்து
தாதலர் கோதைத் தையலுக் கிசைத்தவன் 20
அணங்கருஞ் சீறடி வணங்கலின் வாங்கிப்
பொற்பூண் வனமுலை பொருந்தப் புல்லிக்
கற்புமேம் படீஇயர் கணங்குழை நீயென
ஆசிடைக் கிளவி பாசிழை பயிற்றி
இன்பஞ் சிறந்த பின்றை யிருவரும் 25
விரித்தரி தியற்றிய வெண்கா லமளிப்
பழிப்பில் பள்ளி பலர்தொழ வேறித்
திருவிரண் டொருமலர் சேர்ந்தவ ணுறையும்
பொருவரு முருவம் பொற்பத் தோன்றி
…..

உதயணன் யூகியை வினவுதல்

தொகு

பேரத் தாணியுட் பெரியோர் கேட்ப 30
ஒன்னார்க் கடந்த யூகியை நோக்கி
வென்வே லுதயணன் விதியுளி வினவும்
முன்னா னெய்திய முழுச்சிறைப் பள்ளியுட்
இன்னா வெந்துய ரென்க ணீக்கிய
பின்னாட் பெயர்த்துநின் னிறுதியும் பிறைநுதற் 35
றேவியைத் தீயினுண் மாயையின் மறைத்ததும்
ஆய காரண மறியக் கூறெனக்
கொற்றவன் கூற மற்றவ னுரைக்கும்

யூகி கூற்று

தொகு

செங்கா னாரையொடு குருகுவந் திறைகொளப்
பைங்காற் கமுகின் குலையுதிர் படுபழம் 40
கழனிக் காய்நெற் கவர்கிளி கடியும்
பழன வைப்பிற் பாஞ்சால ராயன்
ஆற்றலின் மிக்க வாருணி மற்றும்
ஏற்றலர் பைந்தா ரேயர்க் கென்றும்
நிலத்தொடு தொடர்ந்த குலப்பகை யன்றியும் 45
தலைப்பெரு நகரமுந் தனக்குரித் தாக்கி
இருந்தனன் மேலு மிகழ்ச்சியொன் றிலனாய்ப்
பிரச்சோ தனனோ டொருப்பா டெய்தும்
ஓலை மாற்றமுஞ் சூழ்ச்சியுந் துணிவும்
காலம் பார்க்குங் கருமமு மெல்லாம் 50
அகத்தொற்றாளரி னகப்பட வறிந்தவன்
மிகப்பெரு முரட்சியை முருக்கு முபாயம்
மற்றிக் காலத் தல்லது மேற்சென்று
வெற்றிக் காலத்து வீட்டுத லரிதென
அற்புப் பாச மகற்றி மற்றுநின் 55
ஒட்ப விறைவியை யொழிந்தன் மரீஇக்
கருமக் கட்டுரை காணக் காட்டி
உருமண் ணுவாவோ டொழிந்தோர் பிறரும்
மகதநன் னாடு கொண்டுபுக் கவ்வழி
இகலடுநோன்றா ளிறைமகற் கிளைய 60
பதுமா பதியொடு வதுவை கூட்டிப்
படைத்துணை யவனாப் பதிவயிற் பெயர்ந்தபின்
கொடைத்தகு குமரரைக் கூட்டினே னிசையக்
கொடித்தலை மூதெயில் கொள்வது வலித்தனென்
மற்றவை யெல்லா மற்ற மின்றிப் 65
பொய்ப்பொருள் பொருந்தக் கூறினு ம்பபொருள்
தெய்வ வுணர்விற் றெரிந்துமா றுரையா
தைய நீங்கியெம் மறிவுமதித் தொழுகிய
பெருமட மகடூஉப் பெருந்தகை மாதால்
நின்னினு நின்மாட்டுப் பின்னிய காதற் 70
றுன்னிய கற்பிற் றேவி தன்னினும்
எண்ணிய வெல்லாந் திண்ணிய வாயின
இருநிலம் விண்ணோ டியைந்தனர் கொடுப்பினும்
பெருநில மன்ன ரேயதை யல்லது
பழமையிற் றிரியார் பயன்றெரி மாக்கள் 75
கிழமையிற் செய்தனன் கெழுதகை தருமெனக்
கோனேறி வேந்தே கூறுங் காலை
நூனெறி யென்றியா னுன்னிடைத் துணிந்தது
பொறுத்தனை யருளென நெறிப்படுத் துரைப்ப

உதயணன் கூற்று

தொகு

வழுக்கிய தலைமையை யிழுக்க மின்றி 80
அமைத்தனை நீயென வவையது நடுவண்
ஆற்றுளிக் கூற வத்துணை யாயினும்
வேற்றுமைப் படுமது வேண்டா வொழிகென
உயிரொன் றாதல் செயிரறக் கூறி

வாசவதத்தை பதுமாபதியாகிய இருவர் செயல்

தொகு

இருவரு மவ்வழித் தழீஇயின ரெழுந்துவந் 85
தொருபெருங் கோயில் புகுந்த பின்னர்
வாசவ தத்தையொடு பதுமா பதியை
ஆசி லயினி மேவரத் தரீஇ
ஒருகலத் தயில்கென வருடலை நிறீஇயபின்
வளங்கெழு செல்வத் திளம்பெருந் தேவி 90
அரும்பெறற் காதலன் றிருந்தடி வணங்கியப்
பெருந்தகு கற்பினெம் பெருமக டன்னொடு
பிரிந்த திங்க ளெல்லாம் பிரியா
தொருங்கவ ணுறைதல் வேண்டுவ லடிகள்
அவ்வர மருளித் தருதலென் குறையெனத் 95
திருமா தேவியொடுந் தீவிய மொழிந்துதன்
முதற்பெருங் கோயிற்கு விடுப்பப் போயபின்

உதயணன் கூறுதல்

தொகு

பாடகச் சீறடிப் பதுமா பதியொடு
கூடிய கூட்டக் குணந்தனை நாடி
ஊடிய தேவியை யுணர்வினு மொளியினும் 100
நாடுங் காலை நன்னுதன் மடவோய்
நின்னொ டொத்தமை நோக்கி மற்றவள்
தன்னொடு புணர்ந்தேன் றளரியல் யானென

வாசவதத்தை சினத்தல்

தொகு

ஒக்கு மென்றசொ லுள்ளே நின்று
மிக்குநன் குடற்ற மேவல ளாகிக் 105
கடைக்கண் சிவப்ப வெடுத்தெதிர் நோக்கி
என்னே ரென்ற மின்னேர் சாயலைப்

உதயணன் வாசவதத்தையைத் தெருட்டி மகிழ்தல்

தொகு

பருகுவனன் போலப் பல்லூழ் முயங்கி
உருவி னல்லது பெண்மையி னின்னொடு
திருநுதன் மடவோய் தினையனைத் தாயினும் 110
வெள்வேற் கண்ணி யொவ்வா ளென்றவள்
உவக்கும் வாயி னயத்தகக் கூறித்
தெருட்டியுந் தெளித்து மருட்டியு மகிழ்ந்தும்
இடையற வில்லா வின்பப் புணர்ச்சியர்
தொடைமலர்க் காவிற் படையமை கோயிலுள் 115
ஆனாச் சிறப்பி னமைதி யெல்லாம்
ஏனோர்க் கின்றென வெய்திய வுவகையர்
அறைகடல் வையத் தான்றோர் புகழ
உறைகுவனர் மாதோ வுவகையின் மகிழ்ந்தென்.

4 8 தேவியைத் தெருட்டியது முற்றிற்று.