பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/இஸ்லாமியப் புத்தாண்டு 'முஹர்ரம்'

இஸ்லாமியப் புத்தாண்டு
‘முஹர்ரம்’


உலக முஸ்லிம்கள் முஹ்ர்ரத்தைப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய ஆண்டு ‘ஹிஜ்ரி’ என அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு மாதங்களில் முதல் மாதம் முஹர்ரம். கடைசி மாதம் துல்ஹஜ்.

ரமலான், பக்ரீத் பெருநாள்களுக்கு அடுத்தபடியாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது முஹர்ரம் திருநாளாகும்.

‘ஹிஜ்ரி’ ஆண்டு நபிகள் நாயகம் (சல்) வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும்.

நபிகள் நாயகம் (சல்) மக்காவிலிருந்து மதீனா நோக்கி ‘ஹிஜ்ரத்’ செய்த நாளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. ‘ஹிஜ்ரத்’ என்ற சொல்லுக்கு இடம் மாறிச் செல்லுதல் என்பது பொருளாகும். மக்கா குறைஷிகளின் கொடுமைகளிலிருந்து தப்பி, இஸ்லாத்தைப் பரப்ப நபிகள் நாயகம் (சல்) மதீனா சென்ற நிகழ்ச்சியே ‘ஹிஜ்ரத்’ ஆகும்.

இஸ்லாமியப் புத்தாண்டு மாதமான முஹர்ரம் உழைப்பைப் போற்றும் மாதமுமாகும். உழைப்பை மிகவும் உயர்த்திப் போற்றுவது இஸ்லாம். ஒவ்வொரு முஸ்லிமும் உழைத்தே சாப்பிட வேண்டும். கடுமையாக உழைத்தே ஊதியம் தேட வேண்டும். அந்த உழைப்பு உடல் உழைப்பாகவோ மன உழைப்பாகவோ இருக்கலாம்.

அக்கால அரபு மக்களின் உடல், மன உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தொழிலாக வியாபாரம் அமைந்திருந்தது.

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ‘ஹஜ்’ கடமையை இனிது முடித்த முஸ்லிம்கள் அடுத்து வரும் முஹர்ரம் மாதத்தில் வியாபாரக் கடமையை முனைப்பாக மேற்கொள்வார்கள்.

எனவே, ஆன்மீக உணர்வுக்கு அடுத்த நிலையில் உழைப்பைப் போற்றும் மாதமாக ‘முஹர்ரம்’ அமைந்துள்ளது.

புனிதமிகு முஹர்ரம் மாதத்தில் கோபம், குரோதம், வன்மம், பலாத்காரம், வன்முறை போன்ற தீய உணர்வுகை நெஞ்சத்திலிருந்து அறவே அகற்றி அன்பு, அருள், அமைதி, சாந்தம், மகிழ்ச்சி போன்ற நல்ல உணர்வுகளை நெஞ்சத்தில் நிரப்பி வாழ வழிகாட்டுகிறது முஹர்ரம்.

இம்மாதத்தில் முஸ்லிம்கள் சண்டை சச்சரவுகளில் அறவே ஈடுபடக்கூடாது; போர் செய்வதை முழுக்க விலக்க வேண்டும். எனவே, வன்செயல் உணர்வற்ற, போர் விலக்கப்பட்ட அதாவது ஹராமாக்கப்பட்ட புனிதமாதம் எனும் பொருளிலேயே ‘முஹர்ரம்’ எனப் பெயர் அமைந்துள்ளது.

இஸ்லாமிய மார்க்க அடிப்டையில் முஹர்ரம் மாதம் புனித மாதமாகக் கருதப்படுகிறது. “முஹர்ரம் மாதத்தின் முதல் நாளில் நோன்பு நோற்பவர்கள் அடுத்த இரண்டாண்டுப் பாவங்களிலிருந்து காக்கப்படுவர்” என்றார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

“இம்மாதத்தின் முதல் நாள் இரவு முழுமையும் கண் விழித்து இறை வணக்கம் புரிவோரின் கடந்த ஆண்டுப் பாவங்கள் முழுமையாக மன்னிக்கப்படுகின்றன” என்பதும் நபிகள் நாயகம் (சல்) வாக்காகும்.

இவ்வாறு இறை வணக்கம் புரிவதற்கும் நோன்பு நோற்பதன் வாயிலாகப் பாவச் செயல்களிலிருந்து விடுபடு வதற்கும் ஏற்ற புனித மாதமாக முஹர்ரம் அமைந்துள்ளது.

இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மட்டுமல்லாது வரலாற்று அடிப்படையிலும் சிறப்புமிக்க மாதமாக முஹர்ரம் அமைந்துள்ளது. அதிலும் முஹர்ரம் பத்தாம் நாள் மிக முக்கியத்துவமுடைய, போற்றத்தக்க நாளாக அமைந்துள்ளது.

எகிப்திய கொடுங்கோலன் பிர்அவ்ன் பிற தெய்வங்களை வணங்காது தன்னையே இறைவனாக வணங்குமாறு மக்களைக் கட்டாயப்படுத்தினான். மறுத்தவர்களைக் கொன்று குவித்தான். தன்னை கடவுளாக வணங்க மறுத்ததோடு அனைத்தையும் படைத்துக் காக்கும் இறைவனாகிய அல்லாஹ்வே வணங்கத்தகுந்த ஏக இறைவன் எனக் கூறிய மோசஸ் எனும் மூஸா (அலை) அவர்களையும் அவரது கூட்டத்தாரையும் அழித்தொழிக்க பெரும் படையோடு விரட்டிச் சென்றான். மூஸாவுக்காக செங்கடல் பிளந்து நின்று வழி விட்டது. அவர்கள் கரையேறியதும் பிளந்து நின்ற செங்கடல் ஒன்றிணைந்தது. துரத்தி வந்த எதிரிகள் கடலில் மூழ்கி மாண்டனர். இந்நிகழ்ச்சி நடந்தது முஹர்ரம் பத்தாம் நாள். இதனையே இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் முஹர்ரம் மாத ஆஸூரா நோன்பாக நோற்கிறார்கள். ரமலானுக்கு அடுத்த முக்கியத்துவம் நிறைந்த புனித நோன்பு ஆஸூரா நோன்பாகும்.

இஸ்லாமியக் கோட்பாட்டின்படி வானம், பூமி, சந்திர சூரிய மற்றும் கோளங்கள் முஹர்ரம் பத்தாம் நாளன்று இறைவனால் படைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

உலகில் முதன்முதல் மழை பெய்ததும் முதல் மனிதராகிய ஆதாமும் ஹவ்வாவும் இறைவனால் படைக் கப்பட்டதும் முஹ்ரம் பத்தாம் நாளன்றுதான்.

‘நோவா’ என அழைக்கப்படும் நூஹ் (அலை) ஊழிப் பெரு மழையிலிருந்து பிற உயிரினங்களைக் காக்க பன்னெடுங்காலம் கடலில் மிதந்து திரிந்து இறுதியாகக் கரை இறங்கிய நாள் முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

‘டேவிட்’ எனும் தாவூது (அலை) அவர்களின் பாவ மன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொண்டதும், ஒரே இறைவன் எனும் உயரிய இறைத் தத்துவத்தைப் பரப்பி, தன் மகனையே இறைவனுக்காகப் பலியிடத் துணிந்த ஏப்ரஹாம் எனும் இபுறாஹீம் நபியின் அரிய இறை பணிக்காக ‘கலீல்’ எனும் பட்டத்தை இறைவனிடமிருந்து பெற்றதும் இதே முஹர்ரம் பத்தாம் நாள் அன்றுதான்.

‘ஜீசஸ்’ எனும் ஈசா (அலை) அவர்களை இறைவன் விண்ணகத்திற்கு உயர்த்திப் பெருமைப்படுத்தியதும் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான்.

நபிகள் நாயகத்தின் பேரர் ஹாசைன் (ரலி) இஸ்லாமிய சமுதாய நலனுக்காகவும் மார்க்கத்தை நிலை நிறுத்து வதற்காகவும் கர்பலா என்னுமிடத்தில் தன் குடும்பத்தோடும் மக்களோடும் எதிரிகளால் கொல்லப்பட்டதும் முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான். நீதியையும் நேர்மையையும் காக்க இறைவழியின் எந்தத் தியாகத்தையும் செய்யப் பின்னடையக் கூடாது என்ற உண்மையை உணர்த்தும் நிகழ்ச்சியாக இத்துயரச் சம்பவம் அமைந்தது.

இந் நிகழ்வால் முஹர்ரம் மாதச் சிறப்புக் கூடவோ குறையவோ இல்லை. இறுதித் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கும் இறுதி வேதம் திருக்குர்ஆனுக்கும் பின்னர் நிகழ்ந்த எந்தச் சம்பவமும் புனிதமானவையோ போற்றத்தக்க முக்கியத்துவமுடையதோ அல்ல.

இவ்வாறு முஹர்ரம் மாதம் இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலும் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாற்று அடிப்படையிலும் போற்றத்தக்கப் புனித மாதமாகவும் புத்தாண்டுப் பெருநாளாகவும் அமைந்து மகிழ்வூட்டுகிறது. இந்நாளில் இறையருள் பெற இரு கரமேந்தி துவா (இறை வேட்டல் செய்வோமாக.

நன்றி : தினமணி