பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/ஓர் இறைத் தத்துவ 'ஹஜ்' பெருநாள்

ஓர் இறைத் தத்துவ ‘ஹஜ்’ பெருநாள்


‘ஒரே இறைவன்’

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஈராக் நாட்டில் தோன்றியவர் ஏப்ரஹாம் என்றழைக்கப்படும் நபி இபுறாஹீம் அவர்கள். இவரை உலக மக்களில் மூன்றில் இரு பங்கினரான யூத, கிருத்துவ, இஸ்லாமிய சமயப் பெருமக்கள் ஓர் இறை தத்துவத்தை உலகுக்குப் போதித்த மாபெரும் தீர்க்கதரிசியாகக் கருதிப் போற்றுகின்றனர்.

இவர் தோன்றிய காலம் அறியாமையிருள் மண்டிக் கிடந்த காலம். இவர் அந் நாட்டின் புகழ்பெற்ற குருமார் குடும்பத்தில் பிறந்தவராயினும் இறைவனின் பெயரால் குருமார்கள் செய்துவந்த கொடுஞ் செயல்களும், தங்களையே கடவுளாக மக்கள் வணங்க வேண்டுமெனக் கட்டளையிட்ட மன்னர்களின் அதிகாரத்துவமும் இப்ராஹீம் நபி அவர்களின் உள்ளத்தை வேதனைப்படுத்தின. இறைவன் பெயரால் நடைபெற்றுவந்த கொடுஞ் செயல்களை வன்மையாகக் கண்டித்ததால் ஆட்சியாளர், குருமார்களின் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளானார். எதற்கும் அஞ்சாமல் ‘என்னுடைய வாழ்வும் மரணமும் யாருடைய கையில் உள்ளனவோ அவனே எனது இறைவன்’ எனப் போதித்தார். இதன் விளைவாகத் தந்தையால் வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டார். மன்னனால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். ஆயினும், ஓரிறைத் தத்துவத்தை அசைக்க முடியாத நம்பிக்கையாளராக விளங்கிய இபுறாஹீம் (அலை) இறைவனால் படைக்கப்பட்டவைகளும் மனிதனால் உருவாக்கப்பட்டவைகளும் வணங்குதற்குரியவை அல்ல. அனைத்தையும் படைத்த இறைவன் மட்டுமே வணங்குதற்குரியவன் என்ற கருத்தைத் துணிவாக மக்களிடையே பரப்பி வந்தார். இதற்காக அடுக்கடுக்கான துன்பங்களை அடைந்தார். இறுதியில் நாட்டைவிட்டு வெளியேறித் தன் மனைவியோடு ஊர் ஊராக அலைந்து திரிந்து ஒரே இறைவன் என்ற தத்துவத்தைத் தொடர்ந்து போதித்தார்.

தியாகச் சிகரம்

இத் தூய இறை பணியில் தம் இளமைக்காலம் முழுவதையும் செலவிட்டு முதுமையின் எல்லைக்கோட்டை அடைந்தார். தனக்குப்பின் உண்மை இறையுணர்வை உலக மக்களுக்கு உணர்த்தும் தன் ஓரிறைத் தத்துவ இயக்கத்தைத் தொடர்ந்து நடத்த வாரிசு ஏதும் இல்லையே எனக் கவலைமிகக் கொண்டார். இறைவனிடம் முறையிட்டுக் கண்ணீர் வடித்தார்.

இறைவனின் கருணையினால் எண்பது வயதைக் கடந்த முதுமையில் பிள்ளைப் பேறு கிடைத்தது. தன் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி, வழி தவறிய மக்களை நேர்வழிப்படுத்த பிள்ளைப் பேறு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார். மகனும் தந்தைக்கு உற்ற பிள்ளையாக இஸ்மாயீல் எனும் பெயரோடு வளர்ந்து பிள்ளைப் பிராயத்தை அடைந்தார். அம் மகிழ்ச்சிக்கு ஒரு நாள் பெரும் சோதனை ஏற்பட்டது. தன் மகனைத் தானே இறைவனுக்கு பலியிடுவதுபோல் இபுறாஹீம் நபி கனவு கண்டார். அக்கனவை இறைவனின் கட்டளையாகவே கருதி மனைவியிடமும் மகனிடமும் கூறினார். தாயும் பிள்ளையும் இறை கட்டளையாகவே இதனை ஏற்றனர். கனவைக் கேட்ட சிறுவர் இஸ்மாயீல் தந்தையை நோக்கி ‘இறைவனின் நாட்டப்படியே, என்னை உங்கள் கையால் அறுத்துப் பலியிடுங்கள்; நான் பொறுமையாக இருப்பேன்’ எனத் தன் தந்தைக்கு தைரியம் கூறித் தன் பூரண சம்மதத்தைத் தெரிவித்தாார்.

தியாகத் திருநாள்
‘ஈதுல் அள்ஹா’ பெருநாள்

இபுறாஹீம் (அலை) தன் குமாரர் இஸ்மாயிலை பலியிடப் போகும்போது இறைவனே அப் பலியைத் தடுத்து நிறுத்தி, அதற்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியிடுமாறு பணித்தான். இறைவனுக்காகத் தன் உயிரையே உவப்போடு தரத் துணிந்த இத் தியாகச் சம்பவத்தை நினைவு கூரும் நாளாகத்தான் ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாள் உலக முஸ்லிம்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

‘ஹஜ்’

இந் நாள் ஹஜ் பெருநாளாகவும் அமைந்துள்ளது. இபுறாஹீம் நபி அவர்களும் அவர் தம் குமாரர் இஸ்மாயீல் (அலை) அவர்களும், உலக மக்கள் அனைவரும் உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென உலகில் முதன் முதலாகக் கட்டப்பட்ட இறையில்லமாகிய மக்காவிலுள்ள கஃபா எனும் இறையில்லத்தைப் புதுப்பித்துக் கட்டி, உலகெங்கும் வாழும் இறையடியார்கள் இறைவன் பெயரால் கஃபா இறையில்லத்தில்கூடி ‘ஒரே இறைவன்’ என்ற உன்னதக் கொள்கையை செயல் வடிவில் நிறைவேற்ற ஹஜ் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர்.

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு இபுறாஹீம் (அலை) அவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை இறையடியார்கள் ஏற்று இன்றும் அதை நிறைவேற்றி வருகிறார்கள்.

ஐப்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் இறுதிக் கடமையாக இஃது அமையலாயிற்று. ‘ஹஜ்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘சந்திக்க நாடுவது’ என்பது பொருளாகும்.

உலக முதல் இறையில்லம்

கஃபா மக்கா நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இறையில்லமாகும். முதல் மனிதரான ஆதாம் இறை வணக்கம் புரிவதற்கென உருவான இவ்விறையில்லம் தியாக சீலர் இப்ராஹீம் (அலை) நபிகள் நாயகம் போன்ற வர்களால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகும்.

கஃபா என்ற அரபுச் சொல்லுக்கு வட்ட வடிவானது என்பது பொருளாகும். சதுரமானது என்ற பொருளும் உண்டு. வட்ட வடிவிலான பரந்த வெளியில் சதுர வடிவில் அமைந்துள் கட்டடமே கஃபா இறையில்லமாகும்.

கருங்கற்களால் கட்டப்பட்ட இக் கட்டடம் 40 அடி நீளமும் 25 அடி அகலமும் 50 அடி உயரமும் கொண்டதாகும். 7 அடி உயரத்தில் நுழைவாயில் ஒன்றுள்ளது. அதனுள் எதுவுமே இல்லை. ஒரே வெற்றிடம். ஆண்டிற்கு இரண்டொரு முறையே இந்நுழைவாயில் திறக்கப்படுகிறது. இதனுள் இறைவணக்கம் புரியக்கூடாது என்பது விதி. இக் கட்டடத்தின்மீது வெள்ளி, தங்க ஜரிகைகளால் திருக்குர் ஆன் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிறப்பட்டுத் திரை போர்த்தப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள 125 கோடி முஸ்லிம்கள் கஃபா இறையில்லம் இருக்கும் திசையை நோக்கியே ஐவேளை தொழுவர். ஆனால் கஃபா இறையில்லத்தில் தொழுகை புரிவோருக்கு திசைக் கட்டுப்பாடு ஏதுமில்லை. கஃபாவைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் நின்று இறைவணக்கம் புரிவர்.

யாருக்கு ‘ஹஜ்’ கடமை

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளுள் ஐந்தாவது கடமையாக அமைந்துள்ள ஹஜ் கடமை அனைத்து முஸ்லிம்களாலும் கடைபிடிக்கப்பட வேண்டிய கடமையாயினும், வயது வந்த, சித்த சுவாதீனமும் சுய வருமானமும் நல்ல உடல் நலமும் உள்ள முஸ்லிம் ஆண்-பெண் இரு சாரார்களும் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.

ஹஜ் பயணம் மேற்கொள்பவர் தன் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகிய அனைவரையும் துறந்து வெளியேறுகிறார். வீடு வாசல், சொத்து சுகங்கள் அனைத்தையும் விட்டு நீங்குகிறார். தான் வழக்கமாக வாழ்ந்து வந்த வசதியான சுக வாழ்வைத் துறந்து மிக மிக எளிய வாழ்க்கைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்கிறார். பற்று பாசங்களை முற்றாக விட்டு ஒதுங்குகிறார். இறைச் சிந்தனையைத் தவிர்த்து மற்றவற்றையெல்லாம் தியாகம் செய்யும் உள்ளுணர்வை முழுமையாகப் பெறுகிறார். இறைவனை நோக்கிச் செல்லும் இறுதிப் பயணத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதையே இது சுட்டுவதாக உள்ளது.

ஹஜ்ஜின்போது உடல் தூய்மை உள்ளத் தூய்மையோடு உடலுறவு கொள்ளுதல், தீய சொற்களைப் பேசுதல், புறம் பேசுதல், பொறாமை, பகைமை, சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி விடுகின்றனர். நெஞ்சமெல்லாம் இறையுணர்வும் இறையச்சமும் மிக்கவர்களாக இறைகட்டளைக்கு முழுமையாக அடி பணியும் அடியவர்களாக மாறி விடுகின்றனர்.

‘எஹ்ராம்’ உடை

ஹஜ் பயணம் செய்வோர் கஃபாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் இருந்தே தம் ஆடம்பர ஆடைகளையும் அணிமணிகளையும் முழுமையாக களைந்து விட்டு வெற்றுடம்புமீது தைக்கப்படாத இரு துண்டு துணிகளைப் போர்த்திக் கொள்கிறார்கள். இதுவே ‘எஹ்ராம்’ உடை என அழைக்கப்படுகிறது. அரசராயினும் ஆண்டியாயினும் அனைவரும் ஒரே மாதிரியான எஹ்ராம் உடை உடுத்துவது கட்டாயமாகும். இதே உடை தான் இறந்த (மையத்) சடலத்தின் மீது போர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமத்துவ உணர்வு

கஃபாவில் எஹ்ராம் உடையணிந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிக்கின்றனர். அவர்கள் பல்வேறு நாடுகளை, மொழிகளை, பண்பாட்டை, கலாச்சாரப் போக்குகளை, வாழ்க்கை முறை களை, நடையுடை பாவனைகளைப் பேணுபவர்கள், பல்வேறு நிறத்தினர். ஆனால் ஹஜ்ஜின்போது அனைவரையும் அன்புச் சகோதரர்களாகக் கருதுகின்றனர்.

ஒரே மொழியில் ஒருசேர “லப்பைக் அல்லாஹாம்ம லப்பைக்” என முழங்குகிறார்கள் “இறைவா! இதோ உன் ஆணைக்கிணங்க வந்து விட்டேன்!” என்பது இதன் பொருளாகும். இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற நம்பிக்கையைப் பெறுகிறார்கள்.

ஹஜ்ஜின் உச்சகட்ட நிகழ்ச்சியாக ஹாஜிகள் அருகிலுள்ள அராஃபாத் மைதானத்தில் கூடாரமிட்டு ஒரு நாள் தங்குகிறார்கள். ஒரே மாதிரியான கூடாரங்களில் ஒரே மாதிரியான எஹ்ராம் உடையணிந்த ஹாஜிகள் அனைவரும் ஒரே மாதிரியான இறையுணர்வோடவே இறை வணக்கம் புரிகின்றார்கள். இங்கும் ஹாஜிகள் இறைவனை நோக்கி மேற்கண்டவாறு முழங்குகிறார்கள். துஆ செய்கின்றார்கள்.

மறுநாள் இறையுணர்வையும் இறையச்சத்தையும் தங்கள் உள்ளத்தில் தேக்கியவர்களாகத் திரும்புகின்றனர். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் முஸ்லிம்கள் கஃபா இறையில்லம் ஏகி மனித வாழ்வின் சூட்சம நோக்குகளைச் செயல் வடிவாக உணர்ந்து தெளிகின்றனர். தியாக வாழ்வு வாழ, இறைவனின் இன்னருளைப் பெற்று உய்ய வழிகாட்டியாய் அமைகிறது ஹஜ் பயணம்.

நன்றி : தினமணி