பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/இஸ்லாமிய இறைமறை பிறந்தது எவ்வாறு?


இஸ்லாமிய இறைமறை
பிறந்தது எவ்வாறு?


இறை தந்த திருவேதம்

இஸ்லாமிய நெறியானது இறைமறையாகிய திருக்குர் ஆனை அடியொற்றி அமைந்த மார்க்கமாகும். இவ்வேதம் இறைவனால் அவனது திருத்துதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்டதாகும்.

எழுதப் படிக்க அறவே தெரியாத பெருமானாருக்கு இத்திருமறை இறைவனால் எவ்வாறு அருளப்பட்டது?

நபிகள் நாயகம் (சல்) முப்பத்தெட்டு வயதை எட்டிய போது தம்மைச் சுற்றி வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வில் மிகுந்திருந்த சமூக ஒழுக்கக் கேடான செயல்களைக் கண்டு மிகவும் மனம் வருந்தினார். தம்மைச் சுற்றிப் பரவிக்கிடந்த அறியாமை, ஒழுங்கீனம், சீர்குலைவு, இறைவனுக்குக இணைவைத்தல் போன்ற சமூகக் கேடுகள் ஒழிய வழி தேடி, ஹிரா குகையில் அமர்ந்து, பசியடக்கி, தன் ஆன்மாவையும் இதயத்தையும் சிந்தனையையும் பரிசுத்தமாக்க முனைந்தார். திருந்திய உலகு காண விரும்பினார். தனிமைத் தவ வாழ்வை மேற்கொண்டார்.

இறைச் செய்தி
வெளிப்பட்ட பாங்கு

தனிமைத் தியானத்திலிருக்கும் பெருமானார் முன் சில சமயம் விண்ணில் ஒளித்திரள்கள் ஒருங்கு திரண்டு தோன்றும். அவற்றை அவர் வியப்போடு உற்றுநோக்கும் போது மறைந்துபோகும். மெல்லிய குரலில் யாரோ பேசுவது போன்று தெளிவில்லாமல் கேட்கும். செவிமடுத்து உற்றுக் கேட்கும்போது அவ்வொளி நின்றுபோகும். அடிக்கடி தனக்கு ஏற்படும் இவ்வினோதமான அனுபவத்தை பெருமானார் யாரிடத்தும் கூறியதில்லை.

நபிகள் நாயகம் (சல்) நாற்பது வயதடைந்த நிலையில் ஹிரா குகையில் தனிமையில் தியானத்திலிருந்தபோது, ‘காப்ரியேல்’ எனப்படும் வானவர் தலைவராகிய ஜீப்ரீல் (அலை) அவர்கள் மானிட வடிவில் மின்வெட்டுப்போல் நாயகம் முன்பாகத் தோற்றமளித்து ‘தீன் நெறி பெற தவமிருக்கிறீர்களோ? எனக் கூறி மறைந்தார். நபிகள் நாயகம் வியப்பும் திகைப்பும் அடைந்தார்.

ஹிரா குகையில் மறுநாள் இரவும் பெருமானார் முன்தோன்றிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் என் உயிரிணையவரே, இன்னும் இங்குதான் இருக்கிறீரா? எனக் கூறி மறைந்தார். நபிகள் நாயகம் வியப்பிலாழ்ந்தார்.

மூன்றாவது முறையாக பெருமானார் முன் முழுமை யாகத் தோற்றமளித்த வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இறைவனின் திருத்தூதராக நியமிக்கப்பட்டுள்ள முஹம்மதே திருமறையை ஓதுவீராக” எனப் பணித்தார். எழுத்தறியாத பெருமானாரோ “படிக்காத நான் வேதம் ஒதுவது எங்ஙனம்?” என வினவினார். ஜிப்ரீல் (அலை) அண்ணலாரை அணைத்து, பின் திருமறையை ஒதுவீராக! எனக் கூறினார். பெருமானார் வாயைத் திறந்து ஒதத் தொடங்கினார். முதல் இறைவசனத் தெளிவும் உண்மைப் பொருளும் பெருமானாரின் உள்ளத்தே புகுந்து நிறைந்தன; நிலைத்தன.

முதல் இறைவசனம்

இவ்வாறு ‘இக்ரஉ’ எனத் தொடங்கும் நான்கு இறைமறை வசனங்கள் பெருமானார் வாய் மூலம் முதன் முதலாக வெளிப்பட்டன.

முதல் இறைவசனம் வெளிப்பட்டது புனித ரமலான் 27 ஆம் நாள் (கி.பி 610, ஆகஸ்ட் 24ஆம் நாள்) ‘லைலத்துல் கத்ர்’ இரவாகும்.

இதன்பின் 40 வயதிலிருந்து பெருமானார் மறைவு வயதான 63ஆம் வயது வரை 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக வெளிப்பட்டு முழுமையடைந்தது. இதைப்பற்றி இறைவன் தன் திருமறையில், “மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஒதிக் காண்பிக்கும் பொருட்டு இந்தக் குர்ஆனைப் பல பாகங்களாக நாம் பிரித்தோம். “அதற்காகவே இதனைச் சிறிது சிறிதாக இறக்கி வைத்தோம்.” என அல்லாஹ் கூறியுள்ளான்.

வஹீயாக வந்த இறைச்செய்தி

சில சமயம் பெருமானார்க்கு ஒலி வடிவில் இறைச் செய்தி வானவர் தலைவரால், இறைக் கட்டளைப்படி அறிவிக்கப்படும். வேறு சில சமயங்களில் ஒளி வடிவிலும், உருவ வடிவிலும் ஜிப்ரீல் (அலை) அவர்களால் இறைச் செய்தி அறிவிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு அறிவிக்கப் படுவது ‘வஹீ’ என அழைக்கப்படுகிறது.

இவ்வாறு, சிறுகச் சிறுகப் பெறப்பட்ட இறை மொழிகளின் தொகுப்பே ‘திருக்குர்ஆன்’ என்னும் திருமறை.

பெருமானார் 63 வயதையடையும்போது இறப்பதற்குச் சின்னாட்கள் முன்பே இறைவனால் திருமறை முழுமையாக் கப்பட்டது. 23 ஆண்டுகள் இறைவனால் வானவர் தலைவ ரான ஜிப்ரீல் (அலை) மூலம் பெருமானார் பெற்ற இறை மொழிகளே ‘திருக்குர்ஆன்’. இது யாராலும் இயற்றப்பட்டதல்ல. இறைவனால் அளிக்கப்பட்டது.

திருத்தப்படா திருமறை

திருக்குர்ஆன் 114 அத்தியாயங்களைக் கொண்டது. 6666 வசனங்கள் உள்ளன. 86,430 சொற்களில் 3,22,671 எழுத்துகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. மொத்தம் 1,05,684 புள்ளிகள் உள்ளன. 1400 ஆண்டுகட்கு மேலாகியும் இத்திருக்குர்ஆனில் ஒரு புள்ளிகூட மாற்றப்படவோ திருத்தப்படவோ நீக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை திருத்தப்படா திருமறையாக திருக்குர்ஆன் விளங்கி வருகிறது.

நன்றி: ஓம் சக்தி