பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/ஈத்துவக்கும் இன்பத் திருநாள்


ஈத்துவக்கும் இன்பத்
திருநாள்


வணங்குங்கள்
வழங்குகள்

ரமளான் பெருநாள். உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினரான முஸ்லிம் பெருமக்கள் உலகளாவிய முறையில் மகிழ்வோடும் பூரிப்போடும் கொண்டாடி மகிழும் பெருநாள்.

ரமளான் மாதம் முழுமையும் மிக அதிகமான இறை வணக்கங்களில் ஈடுபட்டும் பகல் முழுமையும் ஒரு சொட்டு நீலம் பருகாமல் நோன்பு நோற்றல். இல்லாதோருக்கு ஏழையின் பங்கான ஜகாத் எனும் தானத்தை வாரி வழங்கியும், இறையருளைப் பெற்ற பெருமிதத்தோடும் பெருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இம்மாதம் இறைமறையாகிய திருக்குர்ஆன் பிறந்த புனித மாதமாகவும் போற்றப்படுகிறது. இம்மாதத்தில் வழக்கமான ஐவேளைத் தொழுகையோடு, ஒவ்வொரு நாள் இரவிலும் ‘தராவீஹ்’ எனும் சிறப்புத் தொழுகையும் முஸ்லிம்களால் நடத்தப்படுகிறது. இறைமறை பிறந்த இரவாக கருதப்படும் ‘லைலத்துல் கத்ர்’ இரவு முழுமையும் இறை வணக்கமும் இறை தியானமும் செய்யப்படுகிறது. இம்மாதம் முழுமையும் அதிக அளவில் இறை வணக்கங்கள் நிறைவேற்றப்படுவதால் ஒவ்வொரு முஸ்லிம் உள்ளமும் இறையுணர்வால் பொங்கிப் பொழிகிறது. மறை வகுத்த இறைநெறி இம்மியும் பிசகாது வாழ்ந்து இறையருளைப் பெற ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளமும் அவாவுகிறது. உறுதி கொள்கிறது. இதற்கேற்ப உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்தும் பயிற்சிக்களமாக ரமளான் மாதம் அமைகிறது.

‘ரமளான்’ என்ற சொல்லுக்கு ‘சுட்டெரித்தல்’, ‘பொசுக்குதல்’, ‘கரித்தல்’ எனப் பல பொருள்கள் உண்டு.

ஒவ்வொரு முஸ்லிமும் இம்மாதத்தில் மேற்கொள்ளும் சிறப்புத் தொழுகைகள், நோன்பு, ஜகாத் எனும் ஏழைவரி வழங்கல் ஆகிய செயற்பாடுகளால் தங்கள் மேல் படியும் தீய உணர்வுகளை, தீமைகளைச் சுட்டெரித்து மனிதப் புனிதனாகிறார்கள.

இறைமறையாகிய திருக்குர்ஆன் இறை வணக்கமாகிய தொழுகையைப் பற்றிக் கூறும்போதெல்லாம், கூடவே ஜகாத்தையும் குறிப்பிடுகிறது. இதிலிருந்து தொழுகைக்கு அடுத்த முக்கியத்துவத்தை ஜகாத் எனும் ஏழைவரி பெறு வது இனிது புலனாகிறது. ‘வணங்குங்கள்’ ‘வழங்குகள்’ என்பது இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாகும்.

வசதி படைத்தோர் வழங்கும்
வருமான வரி ‘ஜகாத்’

ஏழை வரியாக, ஏழைக்குரிய பங்காகக் கருதப்படும் ஜகாத் ஒருவகையில் வசதிப் படைத்தோர் செலுத்தும் வருமான வரி போன்றதாகும். எனினும் ஜகாத் என்பது நாம் அரசுக்குச் செலுத்தும் வரி வகைகளில் ஒன்றைப் போன்ற தன்று. இறைவன் அளித்த பொருளை, இறைக் கட்டளைப்படி, இறைவழியில் செலவு செய்யும் புனிதச் செயலாகும். இறைவன் பெயரால் வழங்கும் இச்செலவின் அளவுக்கேற்ப பன்மடங்குப் பயனை இறைவன் ஜகாத் வழங்கிய வருக்கு வழங்குகிறான்.

உலகில் உள்ள சமயங்கள் அனைத்துமே ஏழை எளியோர்க்குத் தான, தருமம் செய்யப் பணிக்கின்றன. இறையருள் பெற அதுவும் ஒரு வழி எனப் போதிக்கின்றன. ஆனால், இஸ்லாம் இத்தகைய தான, தருமங்களை முறைப்படுத்தி கட்டாயக் கடமையாக்கி, அவற்றை யார் யாருக்கு எவ்வகையில் வழங்குவது என்பதற்கான வழிவகைகளையும் செம்மையாக அமைத்துள்ளது.

புனிதமிகு ரமளான் பெருநாள் ஏழை எளியோர்க்கு ஈத்துவக்கும் திருநாளாகவும் அமைந்துள்ளது. ஜகாத் முறையானது உண்மையிலேயே ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும்’ அரிய வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் உருவாக்கித் தருகிறது.

‘ஜகாத்’ மூலம் பொருள் தூய்மை

‘ஜகாத்’ என்பது ஆன்மீகத் தொடர்பு கொண்ட பொருளியல் கடமை மட்டுமன்று. இஸ்லாத்தின் அதியற்புத பொருளாதாரக் கொள்கையுமாகும்.

தொழுகையாகிய இறை வணக்கத்தின் மூலம் மனித உள்ளம் இறையுணர்வால் பூத்துக் குலுங்குகிறது. மனமாசு அகல்கிறது. நல்லுணர்வுகளின் அடிப்படையில் நற்குணங்கள் பொங்கிப் பொழிகின்றன. இதனால் மனித மனம் மட்டுமல்லாது ஆன்மாவும் தூய்மை பெறுகிறது. அதே போன்றுதான் உழைத்துத் தேடிய பொருள் தூய்மையடைய குறிப்பிட்ட சதவீதத்தைக் கட்டாயமாக இல்லாதோருக்கு வாரி வழங்கப் பணிக்கிறது இஸ்லாம். இதன் மூலம் வழங்க விழையும் உள்ளமும் வழங்கப்படும் பொருளும் புனிதத் தன்மையடைகிறது. இதைப்பற்றி இறைவன் தன் திரு மறையில் “நபியே! அவர்களுடைய பொருள்களிலிருந்து ஜகாத்தை வசூல் செய்து நீர் அவர்களைத் தூய்மைப் படுத்தி பரிசுத்தமாக்கும்” (9:103) எனக் கூறுகிறான். இதற் கேற்ப ‘தூய்மை’ எனும் பொருளிலேயே ‘ஜகாத்’ எனும் அரபிச் சொல் அமைந்துள்ளது.

ஜகாத்தும் சதக்காவும்

இஸ்லாம் பிறருக்கு வழங்கும் பொருள்தருமத்தை இரு பிரிவுகளாகப் பகுத்து விதியாக்கியுள்ளது. ஜகாத், சதக்கா என்பவைகளே அவை. ஜகாத் என்பது செல்வந்தர்களின் சொத்தில் ஏழைகளுக்குரிய பங்காகும். சதக்கா என்பது ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டி சாதாரண தருமமாகும்.

ஏழை வரியாகிய ஜகாத் பெருமானார் முஹம்மது நபி (சல்) அவர்கட்கும் முன்னதாக உலக மக்களுக்கு வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் பலருக்கும் இறையாணையாக விதிக்கப்பட்டிருந்தது என்பதை இறை மறையாகிய திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. அதே ஜகாத் முறை பெருமானார் (சல்) அவர்கட்கு திருத்தமான முறையில் இறையாணையாகத் தரப்பட்டது.

உழைப்பை உன்னதமாகப் போற்றும் இஸ்லாம், அவ்வுழைப்பின் மூலம் சம்பாதிக்கும் வருமானமும் நேரிய வழியில் நியாயமான சம்பாத்தியமாக இருக்க வேண்டும் எனப் பணிக்கிறது. இவ்வாறு ஆகுமான ஹலாலான வருமானமே ஜகாத் கடமைக்குரியதாகும். இத்தகைய வருமானத்திலும் கவனக் குறைவால் தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தவறான வருமானம் வந்து சேர்ந்திருப்பின் ‘ஜகாத்’ வழங்குவதன் மூலம் அத் தவறும் முற்றாகத் துடைக்கப்பட்டுவிடுகிறது. சொத்தும் தூய்மை பெறுகிறது.

மனித குலம் முழுவதையும் ஒரே இனமாகப் பாவிக்கப் பணிப்பது இஸ்லாமிய மார்க்கம் அறிவாற்றலாலும் உழைப்புத் திறனாலும் பொருளிட்டி பொருளாதார வசதியோடு வாழும் செல்வந்தர்கள், பொருளாதாரத்தில் தாழ் நிலையடைந்த ஏழை, எளிய மக்களின் இடர்களை கலைவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். அவ் வேழை மக்களையும் உடன்பிறந்த சகோதரர்களாகக் கருதி, பொருளுதவி செய்து, அவர்தம் பொருள் வள உயர்வுக்குத் துணை நிற்க வேண்டும். அப்போதுதான் ஒரே குலமாகக் கருதிப் போற்றப்படும் மனித இனம் ஏற்றத் தாழ்வுகளை அகற்றிப் பொருளியல் சமநிலை பெறமுடியும்.

இதன்மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் தனக்காக மட்டும் வாழும் தன்னல உணர்வுக்கு மாறாகப் பிறர்க்கென வாழும் பேராண்மையாளனாகவும் மாறி வாழும் தாராள மனதைப் பெற முடிகிறது.

தனிவுடைமையில் பொதுவுடைமை

ஒவ்வொரு முஸ்லிமும் முயன்று உழைத்துப் பொருளைத் தானாகத் தேடிச் சேமிக்கிறான். ஆனால், அச்செல்வம் முழுமையும் அவனுக்கே சொந்தம் என இஸ்லாம் கருதவில்லை. அச்செல்வத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத எங்கோ இருக்கும் ஏழை, எளியோர்க்கு அச்சொத்தில் பங்குண்டு என விதிக்கிறது இஸ்லாம். அந்தப் பங்குத் தொகையாகிய ஜகாத் தொகையை இடது கை தருவது வலது கைக்குக் கூடத் தெரியாவண்ணம் கொடுக்கப் பணிக்கிறது இஸ்லாம். இதன் மூலம் உணர்வு அளவில் மட்டுமல்லாது செயலளவிலும் மனித குலம் முழுமையும் ஒரே இனம் என்பதையும் அவர்களிடையே ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அவர்களே நிறைவு செய்து சமப் படுத்தி, சமத்துவ நிலையடைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமின் தனியுடைமையானது சமுதாயத்தின் பொதுவுடைமை எனும் உயர்நிலை அடைகிறது.

ஜகாத் கடமையை செவ்வனே நிறைவேற்றும் முஸ்லிம் தான் வாழும் சமுதாயத்துக்காகத் தங்கள் சொந்த நலனை, பொருளைத் தியாகம் செய்யும் மன உணர்வை அழுத்தமாகப் பெறுகிறான். இத் தியாக உணர்வு சமுதாயச் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது. செல்வர்களிடம் குவியும் சொத்து ஜகாத் மூலம் குறைக்கப்படுவதால் பொருட் குவிப்பும் தடுக்கப்படுகிறது.

ஜகாத் முறையின் மூலம் செல்வந்தருக்கும் ஏழைக்குமிடையேயுள்ள இடைவெளி நீக்கப்படுகிறது. இரு சாராரும் இணைந்து நின்று நலம் பெறும் நந்நிலை உருவாகிறது. இதன் மூலம் மனிதத் தன்மை மாண்புறுகிறது.

இனி, ஏழை வரி அல்லது ஏழையின் பங்காகிய ஜகாத் எத்தகைய அடிப்படையில் கணக்கிடப்பட்டு, வழங்கப்படு கிறது என்பதை பார்ப்போம்.

ஜகாத்துக்கு உரியவைகளும்
பங்கீட்டு முறைகளும்

முதலாவது ஜகாத்துக்குரிய சொத்து அல்லது வருமானத்தின் கால அளவு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும். ஒராண்டுக்குக் குறைந்த சொத்திலிருந்து ஜகாத் தொகை பிரித்தெடுக்கப்படுவதில்லை.

ஒரு முஸ்லிம் தனது ஆண்டு வருமானத்தில் தன் செலவு போக மீந்துள்ள தொகையின் அளவைக் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும். அவ்வாறு, மீந்துள்ள தொகையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் குறைவாக இருப்பின் அவர்கட்கு ஜகாத் கடமையாவதில்லை. அதாவது 90 கிராம் தங்கம் அல்லது 620 கிராம் வெள்ளி அல்லது இவை இரண்டின் மதிப்புக்குச் சமமான அல்லது அதற்கு மேலுள்ள தொகைக்கு நாற்பதில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் பங்கிட்டு ஜகாத் வழங்கப்படவேண்டும் என இஸ்லாம் விதிக்கிறது. குடியிருக்கும் வீட்டிற்கும் அன்றாடம் பயன்படுத்தும் பண்ட பாத்திரங்கள் போன்ற பொருட்களுக்கும் இச் சொத்து மதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இரண்டரை சதவீத ஜகாத் என்பது விளை பொருட்களைப் பொருத்த வரையில் சிறிது வேறுபாடு உண்டு. புன்செய் பயிர் வருமானத்துக்கு இரண்டரை சதவிகித ஜகாத் என்றால் நன் செய் பயிர்கட்கு ஐந்து சதவீத ஜகாத் உண்டு.

இத்தகைய ஜகாத்தைப் பெற தகுதியுடையோர் யாரெல்லாம் என்பதையும் இஸ்லாம் தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளது.

ஜகாத் பெறத் தகுதியுடையோர்

ஒரு முஸ்லிமின் செல்வத்திலிருந்து நாற்பதில் ஒரு பங்கை ஜகாத்தாகப் பெறும் உரிமையுடையவர் எட்டு வகையினர் என அவர்களை இஸ்லாம் இனம் பிரித்துக் கூறுகிறது. முதல் பகுதியினர் தங்களது வாழ்க்கையைப் பிறர் துணையின்றி நகர்த்த இயலாத ‘ஃபக்ர்’ எனும் வறியவர்கள். இவர்கள் வறுமை வாய்ப்பட்டபோதிலும் பிறரிடம் கையேந்தி நிற்க அஞ்சும் பகுதியினர்; அநாதைகளைப் போலுள்ள பரம ஏழைகள்; மூன்றாம் பகுதியினர், செல்வர்களிடமிருந்து ஏழை எளியவர்கட்காக ஜகாத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள்; இவர் தாங்கள் வசூலிக்கும் ஜகாத் தொகையில் எட்டில் ஒரு பங்கைப் பெற தகுதியுடையோராவர். நான்காம் பகுதியினர், இஸ்லாத்தில் புதிதாகத் தங்களை இணைத்துக் கொண்டதுடன் இஸ்லாமிய நெறிமுறைகளை மேலும் மேலும் தெரிந்து கொள்ள அவாவும் புதிய முஸ்லிம்கள். இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொள்ள ஜகாத் தொகையைப் பெற உரிமையுடையோராகின்றனர். ஐந்தாம் பகுதியினர், கொத்தடிமை போன்றோர், தங்கள் அடிமைத் தளையி லிருந்து விடுதலை பெற ஜகாத் பொருளுதவி பெற தகுதி யுடையோராவர். ஆறாவது பகுதியினர் சமுதாய நலன் பொருட்டுக் கடன்பட்ட கடனாளிகளும் ஜகாத் தொகைக்கு உரிமையுடையோராவர். ஏழாவது பகுதியினர், இறை நெறியின்பால் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டோரும் இறைவழிக்கு மக்களை அழைத்து செல்ல விழையும் இறை மார்க்க அழைப்பாளர்களும் ஜகாத் தொகைக்குரியோர் ஆவர். நல்ல நோக்கத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பயணிகள் இடை வழியில் பொருள் தட்டுப்பாட்டுக்கு ஆளாகி வருந்தி நிற்கும் வழிப் போக்கர்கள் ஜகாத் தொகை பெற தகுதியுடையோராவர்.

ஜகாத் தொகை வசூலும் விநியோகமும்

ஜகாத் தொகை எவ்வாறு வசூலிக்கப்பட வேண்டும், எவ்வகையில் உரியோர்க்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதற்கும் தெளிவான வழிமுறைகளை இஸ்லாம் வகுத்துக் கூறுகிறது.

தொடக்கக் காலத்திலிருந்து இஸ்லாமிய அரசுகளே செல்வந்தர்களிடமிருந்து ஜகாத் தொகையை வசூலித்து, அத்தொகைக்குரியோர்க்குப் பங்கிட்டு அளித்து வந்தது. இதன் மூலம் ஜகாத் கொடுப்போரும் வாங்குவோரும் மறைபொருளாயினர். இடைக்காலத்தில் ஜகாத்தை நேரிடையாகவே வழங்கிக் கொள்ளும் பழக்கம் எப்படியோ தலைதூக்கி நிற்கலாயிற்று. தற்போது இந்நேரடி முறை இஸ்லாமிய நெறிக்கு முரணானது என்பதை உணர்ந்த இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய நெறி முறைக்கேற்ப வசதி படைத்தோரிடமிருந்து ஜகாத் வசூல் செய்து உரியோர்க்கு வழங்கி வருகிறது. இஸ்லாமிய அரசு இல்லா நாடுகளில், ஊர்தோறும் குழு அமைத்து ஜகாத் வசூல் செய்து, உரியோர்க்கு குழுவே கொடுத்து வருகிறது. இவ்வாறு செய்வதற்கு அரசமைப்புச் சட்டமோ அல்லது ஊர் அமைப்புகளோ எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. ஜமாத்தாகத் தொழும் கூட்டுத் தொழுகை போன்று ஜகாத் கடமையும் கூட்டாக நிறைவேற்றப்படுகிறது. இதன் மூலம் இறைநெறி வகுத்த ஜகாத் முறை உரிய முறையில் நிறைவேறி, கீழ்த்தட்டு மக்களின் வாழ்வில் மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் உருவாக்கத் துணைபுரிகிறது.

ஃபித்ரா தருமம்

ஃபித்ரா எனும் தானத்தின்படி இப்புனித ரமளான் பெருநாளன்று தொழுகை நடத்த பள்ளிவாசல் செல்லு முன் 2 கிலோ கோதுமையை அல்லது அதற்குரிய தொகையை யாரேனும் ஏழை எளியோர்க்குத் தருமமாகத் தந்த பின்னரே பள்ளிவாசலில் தொழுகை நடத்த வேண்டும். இதன் மூலம் பெருநாள் அன்று எல்லோரும் உண்டு களித்துக் கொண்டாட முடிகிறது. அத்தொழுகையே இறைவனால் மகிழ்ச்சியோடு ஏற்கப்படுகின்றது. இதனால்தான் ரமளான் பெருநாள் ஈதுல் ஃபித்ர் என அழைக்கப்படுகிறது.

நன்றி: அனைத்திந்திய வானொலி நிலையம், சென்னை.