பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/ஆயர் மகளிர் அறிவும் அன்பும்



7. ஆயர் மகளிர் அறிவும் அன்பும்

மலைநாட்டு மறக்குடி மக்களின் வாழ்க்கை வளத்தை எடுத்துரைத்த பின்னர், பெரும்பாணன் அடுத்துப் புகவிருக்கும் முல்லை நிலத்து ஆயர் நலம்பற்றிக் கூறத் தொடங்கினார்.

ஒரு பால் மலை நிலமும், மறுபால் வயல் நிலமும் எல்லையாய் அமைய அவற்றிற்கு இடைப்பட்ட நிலமே முல்லை ஆகும். அதனால், முல்லை நிலத்தில் வாழ்பவர், ஆயர் எனும் ஓர் இனத்தவரே ஆயினும், அவ்வாயருள்ளும், மலை நிலத்தை ஒட்டிய பகுதியில் வாழ்வார் வாழ்க்கை முறை ஒரு வகையாகவும், வயல் நிலத்தை ஒட்டிய பகுதியில் வாழ்வார் வாழ்க்கை முறை வேறு வகையாகவும் அமைந்திருப்பது இயல்பே. அவ்விருவகைப்பட்ட வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொண்டாலல்லது ஆயர் வாழ்க்தை முறைகளை முழுமையாக அறிந்து கொண்டதாகாது; அதனால், அவ்விரண்டையும் விளக்க முனைந்து, மலை நிலத்தை ஒட்டி வாழும் ஆயர் வாழ்க்கை வளம் பற்றிய விளக்கத்தை முதற்கண் எடுத்துக் கொண்டார்.

ஆயர்பாடியில் வரிசை வரிசையாகக் காணப்படும் சிறு சிறு குடில்களின் குறுகிய கம்பங்களில், ஆடு தின்னும் தழைகள், அவை நின்று தின்பதற்கான உயரத்தில் கட்டப் பட்டிருக்கும். கூரையாக வேயப்பட்ட ஓலையும் பிறவும் சரிந்து தொங்குவதால், குடிசைவாயில் சிறுதூறுபோலும் தோற்றம் அளிக்கும். மூங்கில் மிலார் கொண்டு பின்னப்பட்ட படலால் அது மூடப்பட்டிருக்கும். ஆட்டு மந்தையோடு சென்று தங்கும் இடங்களில், குட்டிகளை இட்டு மூடி வைப்பதற்காகச் செல்லும் இடந்தோறும் உடன் கொண்டு செல்வதற்காகக், கழிகள் கொண்டு கட்டி, கற்றை கற்றையாக வைக்கோல் வேயப்பட்டு சிறுகுடில் போல் காட்சி தரும் கூண்டு ஒரு பால் கிடக்கும். ஆயர் குடிலையும் ஆயர் உடைமையாம் ஆட்டு நிரையையும் காக்கும் கடமை பூண்டவன் இருக்கவும் துஞ்சவும் உதவும் தோலால் ஆன விரிப்பு ஒருபால் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். பகலில், புனத்தில், மேயும் போது, ஆட்டுக்கிடாய் ஆட்டு மந்தையொடு கலந்து மேய விடப்படும் என்றாலும், இரவில் கிடாக்களை, மந்தையிலிருந்து பிரித்து, நீண்ட கயிற்றில் வரிசையாக இணைக்கப் பட்டிருக்கும் தாம்புகளில் பிணித்து விடுவர். தாமணி என அழைக்கப்படும் அத்தாம்பின் இரு முனைகளையும், இரு பக்கத்திலும் ஈர்த்துக் கட்டுவதற்காக நடப்பட்டிருக்கும் கட்டுத்தறிகள் ஒருபால் காட்சி அளிக்கும். கிடாய் நீங்கிய செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் அடைத்து வைக்க, முள்கொண்டு வேலி அமைத்து ஆக்கிய அடைப்பும், ஆடுகள் கழித்த எருக்குப்பையும் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கும்.

ஆயர் மகளிர், இருள்புலரும் விடியற்காலத்தில், காகமும், கோழியும் துயில் எழுப்ப எழுந்து, தயிர் கடையத் தொடங்கி விடுவர். மழைகாலத்தில் ஆங்காங்கே முளைத்திருக்கும் குடைக்காளான்போலும் வடிவமும், தூய வெண்ணிறமும் வாய்ந்த குமிழ்கள் இடையிடையே தோன்றுமளவு இறுகத் தோய்ந்து இன்சுவை மிகுந்த தயிர் உள்ள பானையுள், மத்திட்டு, மத்தில் சுற்றிய கயிற்றின் இருமுனைகளையும் பற்றி மாறி மாறி வலிப்பர். தயிர் கடையும் போது எழும் ஒலி புலி முழக்கத்தை நினைவூட்டுவதாய் இருக்கும். அவ்வாறு கடைந்து, திரண்டு எழும் வெண்ணையை வேறுபடுத்தி அகற்றிய மோரை, கடையும் போது தெரித்த மோர், மேற்புறமெல்லாம் புள்ளி புள்ளியாகக் காட்சி தரும் பானையுள் நிறைத்துக் கொண்டு, பானையைத் தலையில் மெத்தென்ற சுமட்டின் மீது வைத்துக்கொண்டு, காலையிலேயே மோர் விற்கச் சென்று விடுவர். திறம் கறுப்புதான் எனினும் அக்கறுப்பினும் அழகு மிளிரும் மேனியராகிய ஆய் மகளிர் கூந்தலை ஆற்றறல் போல், வனப்புற வாரி முடித்து, காதில் அணித்திருக்கும் தாளுருவி எனும் அணி, நடைக்கு ஏற்ப, ஆடி அசையுமாறு, மூங்கில் போலும் வடிவும் வனப்பும் வாய்ந்த தோள்களை வீசி வீசி விரைந்து நடந்து மோர் விற்று முடிப்பர்.

மோர் விற்பனையால் கிடைக்கும் சிறுதொகை கொண்டு தம்வீட்டார் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தேவைப்படும் பொருள்களைக் குறைவற வாங்கிக் கொண்டு, நெய் விற்பனையால் பெருந்தொகை கிடைத்த போது, அது கொண்டு பெண்கள் இயல்பாக விரும்பும் பொன் அணிகள் வாங்கிவிட எண்ணாது, தம் குடும்பவருவாய் பெருகத்துணை புரியும், கன்று ஈன்ற எருமையையும், கன்று ஈன்ற பசுவையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்வர். மனைவியர், இவ்வாறு மனைத்தக்க மாண்புடையவராகவும், வளத்தக்க வாழ்வுடையவராகவும் வாய்த்து விடுவதால், ஆயரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து போவார். அவ்வக மகிழ்ச்சிவாய் மடித்து எழுப்பும் சீழ்க்கை ஒலியாக வெளிப்பட்டு வழியும்.

இத்தகைய ஆயர் பாடியுள் புகுந்து விட்டால், அவர்கள் உங்களைத் தங்கள் மனையிலே இருத்தி, குறிஞ்சி நிலத்தில் மோர் விற்று, அதற்கு விலையாக பெற்றுவந்த தினையரிசியாலான சோற்றை, இனிய பாலோடு கலந்து படைப்பர் உண்டு மகிழ்வீராக என்றார்.


"மறிய
குளகு அரையாத்த குறுங்கால் குரம்பைச்
செற்றை வாயில், செறிகழிக் கதவின்
கற்றைவேய்ந்த கழித்தலைச் சாம்பின்,
அதளோன் துஞ்சும் காப்பின், உதள
நெடும் தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்
கொடுமுகத்து உருவையொடு வெள்ளை சேக்கும்
இடுமுள் வேலி, எருப்படு வரைப்பின்,
நள்இருள் விடியல் புள் எழப் போகிப்,
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை அன்ன கூம்புமுகிழ்
உறையமை தீம்தயிர் கலக்கி, நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரிஇ
நாள்மோர் மாறும் நன் மாமேனிச்,
சிறுகுழை துயல்வரும் காதின், பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலை உணவிற் கிளையுடன் அருத்தி,
நெய்விலைக்கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை, நல்ஆன் கருநாகு பெறூ உம்
மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன
பசும்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்".

(147 – 168)

(மறிய—ஆட்டு மறிகளுக்கு உரிய; குளகு அரை யாத்த—தழைகள் இடையிலே கட்டப்பட்ட; குறுங்கால்—குறுகிய கால்களையும்; செற்றை வாயில்—சிறுதூறு போலும் தோற்றம் தரும் வாயிலையும்; செறிகழிக் கதவின்—ஒன்றின் குறுக்கே ஒன்றாகச் செறுக்கப்பட்ட கழிகளால் ஆகி, படல் எனும் பெயர்கொள்ளும் கதவினையும் உடைய; குரம்பை—குடில்களையும்; கற்றை வேய்ந்த—வைக்கோல் கற்றை வேய்ப்பட்ட; கழித்தலை

சாம்பின்-கழிகளைத் தலையிலே உடைய, ஆட்டுக்குட்டிகளை மூட உதவும் கூண்டினையும்; அதளோன் துஞ்சும் காப்பின்—தோல் பாய் உடையோன் இருந்து காக்கும் காவலையும்; உதள நெடுந்தாம்பு—ஆட்டுக் கிடாய்களின் நீண்டதாம்பு; தொடுத்த குறுந்தறி—சுட்டப் பட்ட— சிறிய கட்டுத்தறிகளையும் உடைய முன்றில்—மனைமுற்றத்தில்; கொடுமுகத் துருவையொடு—வளைந்த முகத்தையுடைய செம்மறி ஆடுகளோடு; வெள்ளை சேக்கும்—வெள்ளாடுகள் அடைபட்டுக் கிடக்கும்; இடுமுள்வேலி—வெட்டிக்கொணர்ந்து தட்டுக் கட்டிய முள்வேலியையுடைய; எருப்படு வரைப்பின்—எருக்குவியல் மிக்க ஆயர்பாடியில், நள்இருள் விடியல்—செறிந்த இருள்சுழியும் விடியற்காலத்தில்; புள்ளழப் போகி—பறவைகள் குரல் எழுப்பி எழுப்ப எழுந்து சென்று; புலிக்குரல் மத்தம்—புலி முழக்கம் போலும் ஒலி எழக்கடையும் மத்து; ஒலிப்ப வாங்கி—ஆரவாரிக்குமாறு கயிறுகொண்டு வலித்து; ஆம்பிவான் முகை அன்ன—குடைக்காளானுடைய வெண்ணிற முகைகளையொத்த; கூம்பு முகை—கூம்பி எழும் முகைகளையுடைய; உறை அமை தீந்தயிர் கலக்கி—உறைந்து இறுகிய இனிய தயிரைக் கடைந்து; நுரை தெரிந்து—நுரைவடிவில் வெளிப்படும் வெண்ணெயை வேறுபிரித்து எடுத்து; புகர் வாய்க் குழிசி—மோர்ப் புள்ளிகள் மிகுந்த வாயையுடைய மோர்ப்பானையை; பூஞ்சுமட்டு இரிஇ—மெத்தென்ற சுமட்டின் மீது வைத்துச்சென்று; நாள்மோர் மாறும்—நாட்சாலையில் மோர் விற்கும்; நவ் மா மேனி—நல்ல அழகு வாய்ந்த கறுநிற மேனியையும்; சிறுகுழைதுயல் வரும் காதின்—தாளுருவி என அழைக்கப்படும் சிறிய அணி கிடந்து அசையும் காதினையும்; பணைத்தோள்—மூங்கில் போலும் தோளினையும்; குறுநெறிக்கொண்ட கூந்தல்—சிறுசிறு அறல்கள் நிறைந்தாற்போல் வாரி முடித்த கூந்தலையும்
உடைய; ஆய்மகள்—ஆயர்குடியில் வந்தவள்; அளை விலை உணவின்—மோருக்கு விலையாகப் பெற்ற உணவுப் பொருள்களால்; கிளையுடன் அருத்தி—சுற்றதார் அனைவரையும் உண்ணப்பண்ணி; நெய்விலை—நெய்க்கு விலையாக; கட்டிப் பசும்பொன் கொள்ளாள்—பசும்பொன் கட்டிகளைக் கொள்ளாமல்; எருமை, நல் ஆன் கருநாகு—கன்றீன்ற நல்ல எருமையையும், நல்ல பசுவையும் வாங்கிவரும்; மடிவாய்க் கோவலர்—சீழ்க்கை அடிக்க மடித்த வாயையுடைய கோவலர்க்கு உரிய; குடிவயின் சேப்பின்—மனைகளில் சென்று தங்குவீராயின்; இருங்கிளை ஞெண்டின்—பெரிய சுற்றங்களையுடைய நண்டின்; சிறுவார்ப்பு அன்ன—சிறிய குஞ்சுகள் போலும் வடிவுடைய; பசுந்தினை மூரல்—பசிய தினை அரிசியால் ஆன சோற்றை; பாவொடும் பெறுகுவிர்—பாலோடு பெறுவீர்கள்.)

7-1 ஆனிரை மேய்க்கும் ஆயர்

மலைநாட்டை அடுத்து வாழ்வதால், ஆனிரை ஓம்பி அவைதரும் பால்பயன் அல்லது வேறு வருவாய் காணா ஆயர் இயல்பை இனிது எடுத்துக் கூறியதை அடுத்து, வயல் வளம் மிகுந்த மருத நிலத்தை அடுத்து வாழ்வதால் உழவாலும் வளம் பெருக்கும் ஆயர் இயல்பை எடுத்துரைக்க முனைந்தவ்ர், செல்லும் வழியில் ஆனிரையோடு, மேய்புலத்தில் உறையும் ஆயர் இயல்பை உரைப்பாராயினர்.

பரல்கற்களும் முள்ளும் நிறைந்த காட்டுப் பகுதியிலேயே வாழவேண்டியிருப்பதால், ஆயர்கள் எப்போதும் தோலால் ஆன செருப்பு அணிந்திருப்பர்; செருப்புக்காலோடு ஆனிரையின் பின் அலைவதால், அவர் கால்கள் செருப்புத் தழும்பேறியிருக்கும். ஆணிரைகளை அடித்துத் துரத்துக் கோலும், காட்டை அழித்து விளைநிலம் காண, மரம் செடிகொடிகளை வெட்டி வீழ்த்தப் பயன்படும் கோடரியும் மாறி மாறி ஏந்தும் அவர் கைகளும் காழ்ப்பு ஏறி உரம் பெற்றிருக்கும். வாழிடம் விட்டு ஆனிரைகளோடு வந்து விட்டால், மீண்டும் வாழிடம் அடைய நெடுங்காலம் ஆகும் ஆதலின், செல்லும் இடங்களில் தேவைப்படும் உடை, உணவாக்கும் கலன்கள் ஆகியவை இடப்பட்ட உரிகள் இரு புறமும் தொங்கும் காவடியை சுமந்து சுமந்து, மயிர் அடர்ந்த அவர் தோள்களும் தழும்பேறிக்கிடக்கும். தலை மயிரைப் பசும்பால் தடவி வாரிமுடித்து, கொம்புகளிலும் கொடிகளிலும் பூத்து மணக்கும் பலவண்ணக் காட்டு மலர்களைக் கலந்து கட்டிய மாலையைச் சூட்டிக்கொள்வர். உடுப்பது ஒரே ஆடையாகவும், உண்பது கூழாகவும் கொண்டு, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கு இலக்கியமாய் அமைதி வாழ்வு காணும் அவர்கள் ஈன்ற கன்றுகள் பால் நிறை அன்பு உடையவாகிய ஆனிரைகளைப் பசும்புல் வெளியில் மேயவிடுத்து, இசை இன்பத்தில் ஆழ்ந்து விடுவர்.

முதற்கண் குழல் ஊதவிரும்பி, குழல் ஆக்குதற்கேற்ற மூங்கிலைத் தேர்ந்துகொண்டு, தீக்கடைக்கோலைக் கடைந்து தீ மூட்டி, அதில் காய்ச்சிய கம்பிகொண்டு மூங்கிலில் துளையிடத் தொடங்குவர். மணக்கும் புகை முதற்கண் சிறிதே தோன்றிப் படிப்படியாக மிகமிக, மூங்கிலில் கரிய துளைகள் வரிசையாக அமைய, மூங்கில் ஊது குழலாகிவிடும். குழலை வாயில் வைத்து காதுக்கினிய பாடலைப் பண்ணோசை எழ வாசிக்கத் தலைப்பட்டுவிடுவர். போதும் கேட்டது என வெறுக்குமளவு நீண்ட நேரம் குழல் வாசித்த பின்னர், யாழ் ஓசையில், அவர்க்கு வேட்கை எழும். குமிழ மரத்தினின்றும் வெட்டிக்கொணர்ந்த உள் துளை பொருந்திய கொம்பை யாழ்த் தண்டாகவும், கயிறு போலும், மெல்லிய மரலின் நாரை நரம்பாகவும் கொண்டு, குமிழங்கொம்பை வில் வடிவில் வளைத்து ஈர்த்துக்கட்டிய நரம்பைக் குறிஞ்சி என்னும் பண்ணோசை எழ, விரலால் எறிந்து இசைத்து இன்புறுவர். அவர் எழுப்பும் அவ்வின்னொலி, வண்டுகளின் ரீங்காரத்தை ஒத்திருக்கும் ஆதலால், ஆங்குள்ள மலர்களில் தேன் உண்டு பறக்கும் வண்டுகள், அவ்வோசையைத் தம் இளவண்டுகள் எழுப்பும் ஓசைதானோ எனக்கேட்டு மயங்கும். ஆனிரைகள் வயிறாரமேய்வதற்கேற்ற பசும்புல் நிறைந்த அப்பகுதி ஆயர் எழுப்பும் இசை வெள்ளத்தில் ஆழ்ந்துவிடும்.


"தொடுதோல் மரீஇய வருவுஆழ் நோன்பு அடி
விழுத்தண்டு ஊன்றிய மழுத்தின் வன்கை
உறிக்கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச் சுவல்
மேம்பால் உரைத்த ஓரி, ஓங்குமிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்
கன்று அமர் நிரையோடு கானத்து அல்கி
அம் நுண் அவிர்புகை கமழக் கை முயன்று
ஞேலிகோல் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத்தோட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம் பாலை முனையிற் குமிழின்
புழல்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சிப்
பல்கால் பறவை கிளைசெத்து ஓர்க்கும்
புல்ஆர் வியன்புலம் போகி"

(169–184)

(தொடுதோல் மரிஇய—செருப்பு கிடந்த; வடுவு ஆழ் நோன் அடி—வடு ஆழ்ந்த வலிய அடியினையும், விழுத்தண்டு—ஆனிரைகளை அடித்துத்துயர் விளைவிக்கும் தடியை, ஊன்றிய—தாங்கிய; மழுத்தின் வன்கை—கோடாரியால் ஆன தழும்பு இருந்த வலிய கையினையும்; உறிக்கா ஊர்ந்த—இரண்டு தலைகளிலும்
உறிகள் தொங்கும் காவடி சுமந்ததனால் உண்டாகிய; மறுப்படு மயிர்ச்சுவல்—தழும்பு மிக்க மயிர் முளைத்த தோள்களையும்; மேம்பால் உரைத்த ஒரி—பால்களில் சிறந்த, பசுவின்பால் தடவிய மயிரினையும்; ஓங்கு மிசை—மிக உயர்ந்த உச்சியையுடைய, கோட்டவும் கொடியவும்—கொம்புகளிலும் கொடிகளிலும் மலர்ந்துள்ள; காட்ட பல்பூ—காட்டு மலர்கள் பலவற்றை; விரைஇ மிடைந்த படலைக்கண்ணி—கலந்து கட்டிய கலம்பக மாலையினையும்; ஒன்று அமர் உடுக்கை—உடுத்த ஒற்றை உடையினையும்; கூழ் ஆர் இடையன்—கூழ்உணவு உண்ணும் இடைமகன்; கன்று அமர் நிரையொடு—கன்றுகளை விரும்பும் ஆனிரைகளோடு, கானத்து அல்கி—காட்டிலே தங்கி; அம் நுண் அவிர் புகை கமழ—அழகாய், நுண்ணியதாய் எழும்புகை மணக்க கைமுயன்று—கையால் கடைந்து: ஞெலிகோல் கொண்ட—திக்கடைக் கோலில் உண்டாக்கிய; பெரு விறல் ஞெகிழி—பேராற்றல் வாய்ந்த கொள்ளியான; செந்தீத் தோட்ட—சிவந்த தீயால் துளையிட்ட; கருந்துளைக்குழலின்—கரிய துளைகளையுடைய குழலில் எழுப்பிய; இன் தீம் பாலை முனையின்—இனிய கேள்விச் சுவைமிக்க பாலை என்னும் பண்ணோசையை வெறுக்கின்; குமிழின் புழல் கோட்டுத் தொடுத்த—குமிழ மரத்தின் உள்துளை வாய்ந்த கொம்பில் வளைத்துக் கட்டிய; மரல் புரி நரம்பில்—மரவின் நாராகிய நரம்பினை உடைய; வில் யாழ் இசைக்கும்—வில்வடிவான யாழ் இசைக்கும்; விரல் எறி குறிஞ்சி—விரலாலே எறிந்து எழுப்பும் குறிஞ்சி என்னும் பண்ணை; பல்கால் பறவை—பல கால்களையுடைய வண்டுகள்: கிளைசெத்து ஓர்க்கும்—தம் இனம் எழுப்பும் ஓசையாகக் கருதிக் காது கொடுத்துக் கேட்கும்; புல் ஆர் வியன் புலம் போகி—புல் நிறைந்த அகன்ற மேய்புலத்தைக் கடந்து போய்.)

7-2 உழுது உண்ணும் ஆயர் உறையுள் நலம்

இசை இன்பம் நுகர்ந்தவாறே மேய்புலத்தைக் கடந்து சென்றால், உழுதுண்ணும் ஆயர் வாழும் சிற்றுாரை அடைந்து விடலாம். ஊருள் புகுவதன் முன்னர்க் கண்ணில் படுவது, ஆனிரைகள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் தொழு. தொழுவில் விடப்படும் ஆனிரைகளுக்குக் காட்டுக்கொடு விலங்குகளால் கேடுவாராமை குறித்தும் அத்தொழுவைச் சுற்றிலும் முள் நிறைந்த மரங்கள் காடுபோல் நெருங்க வளர்க்கப் பட்டிருக்கும். அடுத்து ஊருள் புகுந்ததும் வரகு போலும் விளை பொருள்களைக் கொட்டி வைத்திருக்கும் குதிர்கள், கடந்து வந்த காட்டுப் பகுதியில் கண்டு வந்த யானைக் கூட்டத்தை நினைவூட்டுமளவு பருத்தும் உயர்ந்தும் உழுதுண்ணும் ஆயரின் வளமார் வாழ்க்கைக்குச் சான்று பகர்ந்து நிற்கும். நெல்லரிசி தினை அரிசிகளை மூடிக்கொண்டிருக்கும் ஆடையைக் குற்றி அகற்றுவது போல், வரகு அரிசியை மூடியிருக்கும் ஆடையைக் குற்றி அகற்ற இயலாது. அதை அரைத்தே அகற்றுதல் இயலும். அதற்குப் பயன்படும் திரிமரம் எனும் இயந்திரமும் ஆங்கே இருக்கும். தோற்றத்தில், யானையின் கால் போல் காட்சி தரும் அதை இயக்கிச் செயல் படுத்தும் மகளிர்க்கு நிழல் தரும் பொருட்டு, அம்மனை முற்றத்தில் பந்தலும் போடப்பட்டிருக்கும். வீட்டின் நெடுஞ்சுவர், வண்டிச் சக்கரங்களும், உழுகலப்பைகளும் சார்த்தி சார்த்தி வெளிப்புறத்தில் தேய்ந்திருக்கும். உட்புறம், சமைக்க மூட்டிய அடுப்பிலிருந்து எழும் புகை படிந்து கருத்திருக்கும். வீடுகள் வரகு வைக்கோலால் வேயப்பட்டு, பருவ மழை காலத்தில், வானத்தில் கொண்டல் கொண்டலாக எழும் கருமுகில் போல் காட்சி அளித்துக் கவின் பெற்றுத் திகழும். அத்தகைய வீடுகள் நிறைந்த ஆயர் பாடியுள் புகுந்து விட்டால், ஆங்கு அளிக்கப்படும் வரகரிசிச் சோறும் அவரைக் கொட்டைப் பொரியலும், உண்டவர் வாய் மணக்கும் என்றவர் அவை பற்றிச் சிறிதே விளக்கவும் செய்தார்.

வரகு, நெற்பயிர் போல் உயர்ந்து வளராது; வரகுக் கதிரும் நெற்கதிர் போல் நீளமாக இராது. தாளும் குட்டை; கதிரும் குட்டை; அவ்வரகரிசிச் சோற்றை வடித்துக் கொட்டினால், வேலிகளில் நீண்ட நொடி விட்டுப் படர்ந்திருக்கும் சிறு பூளையின் வெண்ணிறம் வாய்ந்த சின்னம் சிறு மலர்களைப் பறித்துக் கொட்டி வைத்தாற் போலும் கவின் மிகு காட்சி அளிக்கும். சோற்றின் வனப்பு இது. மலை நாட்டில் கொத்துக் கொத்தாக மலர்ந்து மணக்கும் வேங்கையின் செந்நிற மலரை நினைவூட்டும் வகையில், கொடியில் கொத்துக் கொத்தாகக் காய்த்திருக்கும் அவரைக் காய்களை உரித்து எடுத்த கொட்டைகளை, உலையுள் நிறைய இட்டு நன்கு துழாவி எடுத்த பொரியலின் மணம் நுகர்ந்தவர் மூக்கைத் துளைக்கும். சுவை, உண்டவர் நா மணக்கப் பண்ணும் சுவை மிகு அவ்வுணவுண்டு இனிதே செல்வீராக என்றார்.


"முள் உடுத்து
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பின்
பிடிக் கணத்தன்ன குதிர்உடை முன்றில்
களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறும்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகைசூழ் கொட்டில்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்
நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன
குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப்
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன
அவரை வான்புழுக்கு அட்டிப் பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவீர்"

(184–196)

(முள் உடுத்து எழு காடு—முள் கொண்டு வளர்ந்த மரங்களால் ஆன காடுகள்; ஓங்கிய தொழு உடை
வரைப்பின்—சூழ எழுந்த மாட்டுத் தொழுவம் அமைந்த பகுதியில்; பிடிக் கணத்து அன்னகுதிர் உடை முன்றில் -பெண் யானைக் கூட்டத்தையொத்த, வரகு முதலியன கொட்டி வைக்கும் குதிர்களை உடைய முன்றிலையும்; களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்—ஆண் யானையின் காலை ஒக்கும் வரகு அரைக்க உதவும் திரிமரம் என்ற இயந்திரம் கிடக்கும் பந்தலையும்; குறும் சாட்டு உருளையொடு கலப்பைசார்த்தி—சிறிய வண்டிச் சக்கரங்களோடு கலப்பையைச் சார்த்தி வைக்கப் பட்டதால்; பறைந்த நெடும் சுவர்—தேய்ந்துபோன நெடிய சுவரோடு கூடிய; புகை சூழ் கொட்டில்—புகை படிந்த கொட்டிலினையும் உடைய; பருவ வானத்துப் பாமழை கடுப்ப—பருவ காலத்து வானத்தில் விரவி எழும் கருமுகிலை ஒப்ப; கருவை வேய்ந்த கவின்குடிச் சீறுார்—கரிய வரகு வைக்கோல் வேய்ந்த அழகிய குடியிருப்பினையும் உடைய சிற்றுார்களில்; நெடும் குரல் பூளைப் பூவின் அன்ன—நீண்ட கொத்துக்களையுடைய சிறு பூளையின் பூக்களை ஒத்த; குறுந்தாள் வரகின்—குறிய தாள்களையுடைய வரகின்; குறள் அவிழ் சொன்றி—சிறிய பருக்கைகளாகிய சோற்றை; புகர் இணர் வேங்கை கண்டன்ன—செந்நிறம் வாய்ந்த கொத்துக் கொத்தான வேங்கை மலர்களைக் கண்டாற் போலும்; அவரை வான் புழுக்கு அட்டி—அவரைக் கொட்டையின் நல்ல பருப்பை நிறைய இட்டு; பயில்வுற்று இன்சுவை மூரல் பெறுகுவீர்—துழாவியதால் இன்சுவை கூடிய பருப்போடு பெறுவீர்கள்.)