பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/திரையன் அளிக்கும் பரிசிற் பெருமை



3. திரையன் அளிக்கும்
பரிசிற் பெருமை

"பாண! உன்னை வாட்டும் வறுமையைக் காட்டிலும் நனிமிகக் கொடிது எம்மை வாட்டிய வறுமை. எங்கள் குடியோடு பிறந்த பெருமையுடையது எம்மைப் பற்றி வருந்திய பசிநோய். எம்குடி என்று தோன்றிற்றோ அன்றே தோன்றிய பழம்பெரும் சிறப்பு வாய்ந்தது எம் பசி. ஆனால் அத்துணைப் பழமை வாய்ந்த அப்பசி இன்று எம்மைப் பொறுத்தமட்டில் பழமையுடையதாகிவிட்டது. இன்று அது எம்பால் இல்லை. ஒரு காலத்தில் இருந்தது என்று பழமை பாராட்டத்தக்கதாகி எம்மைவிட்டு என்றோ அகன்று விட்டது. அதுமட்டுமன்று, இத்துணை நெடுங்காலம் பசியால் வருந்தி, இன்று வளமார் வாழ்வு பெற்றவன் யான் ஒருவன் மட்டும் அன்று. என் சுற்றத்தின் நிலையும் அன்னதே. என் சுற்றமோ என்றால் உன் சுற்றத்தைக் காட்டிலும் மிக மிகப் பெரிது. அவ்வளவு பேரும் பசியால் வருந்தியவர்தாம். இன்று அத்தனை பேருக்குமே வாழ்வும் வளமும் வந்து விட்டன. வளம் என்றால் எத்துணை வளம் என்று எண்ணுகின்றனை. வயிற்றுப் பசி மாற்றும் வளம் என்று எண்ணிவிடாதே. யாம் இப்போது பெற்றிருக்கும் வளத்தால் எம்பசி மட்டுமே பறந்து போய் விட்டது என்று எண்ணற்க. எதிர்ப்படுவார் எவர் பசியையும், அவர்தாம் எண்ணால் எத்துணையராயினும் அன்னார் அனைவர் பசியையும் ஒழித்துவிட்டு, அது செய்து விட்டதால், தன்னளவில் சிறிதளவு தானும் குறையுற்றுப் போகாப் பெருவளவாழ்வு, யாம் இப்போது பெற்றிருக்கும் வாழ்வு பாண! அத்துணை ஏற்றம் எம்வாழ்வில் இடம்பெற்றது ஒருவன் அளித்த கொடைவளத்தால். 'என்ன? தொல்லூழி காலமாக அல்லல் மிகு வாழ்வு கண்டவர், இன்று பிறர்க்குத் தாம் வழங்க வழங்க வற்றாப் பெருவளவாழ்வு பெறுவதாவது? அத்தகு பெரு வாழ்வு ஒருவன் அளித்த கொடைவளத்தால் உளவாவதாவது?' என்று எண்ணி எண்ணி வியக்கிறது உன் உள்ளம் இல்லையா. பாண! இதோ பார். பல்லாண்டு காலமாகப் பனித்துளி அல்லது மழைத்துளி காணாக் கொடுமையால் கருகித் தீய்ந்து போகும் காடு, பெருமழையொன்று பெய்துவிட்டதும், புத்துயிர் பெற்றுத் தான் பொலிவு பெறுவதோடு மலர் என்றும், மலர் நிறை மது வென்றும், காய் என்றும், கனி என்றும் எண்ணித் தொலையாப் பொருள்களை அனைத்துயிர்க்கும் வழங்கி வான்புகழ் பெறும் காட்சியைக் கண்டதில்லையோ? கோடைபோல் கொடுமை புரிந்தது வறுமை; அதனால் காடுபோல் கொடுமையுற்றோம் யாம். மழை போல் வந்து ஒருவன் வழங்க, வாழ்வு பெற்று வனப்புற்றோம் இன்று. பெற்ற பெரும் பொருள் எம் தோள்கள் சுமக்கலாகாப் பெரும் பொருளாகவே, அவற்றைச் சுமந்து கொண்டு வந்து உதவ வல்ல வெள்ளைக் குதிரைகளைக் கொள்ளை கொள்ளையாகக் கொண்டு வருகிறோம். அது மட்டுமா? யாம் கொணரும் பொருள் பிறர் கண்டு பொறாமைப்பட்டு கவரக் கருதவல்ல பெரும் பொருளாதலின், இடைவழியில், ஏதேனும் இடையூறு நேருமோ என்ற அச்சத்தால், ஆறலைக் கள்வர் போலும் கொள்ளையரைக் கொன்றுயிர் போக்கவல்ல வயக்களிறுகளையும் வாரிக் கொண்டு வருகிறோம்.

"பாண! இன்று இத்தகு பெரு வாழும் யான், வறுமையால் துடிக்கும் உன்னையும் உன் சுற்றத்தையும் கண்டுகலங்குகின்றேன். எம்வளத்தில் ஒரு சிறிது வழங்கி உம் வறுமையைத் தீர்க்கத் துடிக்கிறது எம் உள்ளம். ஆனால் பெரும் பாணர் குடிவந்த நீ, உம் பெருமை அறிந்து வழங்கவல்ல வள்ளல் பெருந்தகை விரும்பி வழங்கும் விழுநிதிபெற விரும்புவையே யல்லது, வயிற்றுப் பசி தீர்க்க என்று, எம்போலும் வழிப்போவார் வழங்குவதைக் கனவிலும் கருதாய் என்பதை அறிவேனாதலின், அளிக்க முன் வந்திலேன். ஆகவே, அதை விடுத்து எம்மை இப்பெரு நிலையில் வைத்துப் போற்றி விடுத்த அப்பெரியோனை உமக்கு அறிவித்து, வருவாரை எதிர் நோக்கி வாரி வழங்க வாயிலைத் திறந்து வைத்துக் கொண்டு வீற்றிருக்கும் அவன் வாழ்விடத்தை அடையலாகும் வழி வகைகளைக் கூறுகிறேன். கேட்பாயாக.


"பெருவறம் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவிவானம் துளிசொரிந்தாங்குப்
பழம்பசி கூர்ந்த எம்இரும்பேரொக்கலோடு
வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி
வால் உளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு
யாம் அவண் நின்றும் வருதும்"

(23–28)

(பெருவறம் கூர்ந்த கானம் — பெரிய கோடையால் வறட்சி மிக்க காடு. கல்லென — தழைத்துக் கனியீன்று விளங்கும் பறவையும் மிகுந்து கல்லெனும் ஒலியுடையதாகிக் கவினுறுமாறு. கருவி வானம் துளிசொரிந்தாங்கு — இடி மின்னல்களோடு கூடிய கார்மேகம் மழைநீரைச் சொரிந்தது போல; பழம்பசி கூர்ந்த எம் இரும்பேரொக்கலோடு — தொன்று தொட்டே தொடர்ந்து வரும் பசிநோய்மிக்க எம் பெரிய சுற்றத்தாரோடு: யாம் வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி — யாங்களும், பிறர்க்கு வழங்கினும் வற்றாப் பெரிய செல்வத்தைப் பெற்று! வால் உளைப் புரவியொடு — வெண்ணிறத் தலையாட்டம் வாய்ந்த குதிரைகளோடு, வயக்-

களிறு முகந்து கொண்டு — வன்மைமிக்க களிறுகளையும் வேண்டுமளவு வாரிக்கொண்டு, அவன்நின்றும் வருதும்—அவ்வள்ளல் வாழ் ஊரிலிருந்து வந்து கொண்டேயிருக்கிறோம்.)

3-1 திரையன் புரையில் பெருமை

பெரும்பாணனைத் திரையன்பால் சேர்க்க விரும்பிய பாணன், குடியாலும் கொற்றத்தாலும், கொடையாலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உரவோன் இளந்திரையன்; அவனைப் பாடிப்பரிசில் பெறுவது தனக்கே பெருமையாம் என்ற எண்ணம் பெரும்பாணன் உள்ளத்தில் உருப்பெற்றாலல்லது அவன் அவன்பால் செல்லான் என்பதை அறிந்திருந்தமையால், திரையன் பெருமைகளையெல்லாம் சுருங்கிய வாய் பாட்டான் விளங்க உரைக்க விரும்பினான்.

அவ்வாறு விரும்பியவன், ஒருவற்குப் பெருமை அளிப்பனவற்றுள் தலையாயது அவன் குடிப்பெருமையே யாதலின் திரையன் குடிப் பெருமையை முதற்கண் எடுத்துரைக்கத் தொடங்கினான். முக்கண்ணன், செங்கண்மால், நான்முகன் ஆகிய முழுமுதற் கடவுளர் மூவருள் காக்கற்றொழிலுடையான் திருமாலே ஆதலாலும், அம்மூவருள் அழகிய திருமேனியுடையானும் அவனே ஆதலாலும், உருவும் திருவும் உடைய மன்னரைக் காண்பவரெல்லாம் திருமாலைக் கண்டேன் என்று கூறியே மனநிறைவு எய்துவர் ஆதலாலும், மன்னர் குடிமுதல் திருமாலை முதலாகக் கொண்டு தொடர்கிறது என்ற மரபு உண்மையாலும், தமிழகத்தின் வடவெல்லையாம் தகுதியொடு, திரையன் இருந்து ஆளும் தொண்டை தாட்டிற்குச் சிறப்பளிப்பதாகவும் உள்ள திருவேங்கடமலையில் நின்ற திருக்கோலத்தோடு இருப்பவன் அவனே ஆதலாலும் திரையன் அம்மாலின் வழிவந்தவன் என்பதை முதற்கண் எடுத்துரைத்தான். அவ்வாறு எடுத்துரைக்கும் அந்நிலையில் இளந்திரையனின் அளப்பரிய ஆற்றல் நினைவிற்கு வரவே, அவனோடு தொடர்பு படுத்தும் திருமாலைப்பற்றிக் கூறுங்கால், அவன் ஈரடியால் மூவுலகையும் அளந்து கொண்ட அளப்பறிய ஆற்றலைச் சுட்டிக்காட்டினார். மனைவியைப் பிரிந்தறியாமைக்கு ஏதுவாகிய மாறாக் காதலும் அவள் கண்டு களித்தற்குக் காரணமாம் வடிவழகும் உடையவன் திரையன் ஆகவே, அவன் குடிமுதலாகிய திருமாலைக்கூறுங்கால், திருமகளும் பெருமறுவும் கிடந்து மாண்புதரும் அவன் மார்புநலத்தைப் பாராட்டினார். பின்னர் திருமாலின் மேனிக் கருநீல நிறத்தின் கவின் கண்டுகளித்த பாணன் அந்நிறத்தோடு ஒப்புடைய நிறங்காட்டும் உலகியற்பொருள்களை நினைத்து பார்த்த அளவில், திரையன் குடிவிளங்க உதவிய கடல் திரைகள் கருத்தில் வந்து உறுத்தவே, காயாப்பூப்போலும் பலபொருள்கள் உளவாகவும், கடல்வண்ண அடலேறு எனக் கடல்நீரின் கருநீல நிறத்தையே உவமையாக எடுத்துக் கூறினான்.

திரையன் திருமால் வழி வந்தவன் என்று கூறிய பாணன் அக்குடிப்பெருமை நம்மனோரால் காணக்கூடாதது ஆகவே, இன்றைய உலகத்தவர் காணலாம் பெருமையும் அவன் குடிக்கு உளது என்பதைக் காட்டுதல் வேண்டும் என்று விரும்பினான். மேலும் திரையன்குடி, திரைவழித்தொடர்போடு தமிழ்நிலத்தொடர்பும் பொருந்தியது ஆதலின், கடல்வாணிகம் கருதிக் கலம் ஊர்ந்து வருவாரோடு காவிரிப் பூம்பட்டினத்திற்கு வந்திருந்த நாகநாட்டரசன் மகன் பீலிவளையைக் காதலித்துக் கடிமணம் கொண்டு களித்திருக்குங்கால், ஒருநாள் அவள் திடுமென மறைந்து விட்டாளாக, அவளைக் காணானாய்ச் சோணாட்டு அரசிளங்குமரன் கலங்கியிருப்புழி, 'தன்னூர்க்குச் சென்று விட்டாள் உன் காதலி, இனி அவள் வழித்தோன்றும் உன் மகன் வருவனேயல்லது அவள் வாராள்' என்ற செய்தியைச் சிலர் கூறக்கேட்டு மகன் வரவினை எதிர்நோக்கி மன்னன் இருக்க, நாக நாடடைந்த அந்நங்கை நல்லாள் ஆங்கு பிறந்த தன் மகனுக்கு, அரசனுக்கு அடையாளம் காட்டுவான் வேண்டி ஆதொண்டைக்கொடி அணிவித்து, காவிரிப்பூம்பட்டினம் செல்லும் கம்பளச் செட்டிவழிக் கலம் ஏற்றி அனுப்பினாளாக, இடைவழியில் கலம் கவிழ, கலத்தில் வந்தாருள் கனரசேர்ந்தார் சிலர், காவலன் மகன் ஊர்ந்து வந்த கலத்திற்கு நேர்ந்தது கூற, அது கேட்ட மன்னவன். தாங்கொணாத்துயர் உற்று, அதனால், ஆண்டுதோறும் நிகழ்த்தும் தலைநகர்த் திருவிழாவைத் தான் மறக்க, அது காரணத்தால் தலைநகரைக் கடல்கொள்ள தலைநகர் இழந்து அலைந்து கொண்டிருக்க, காவிப்பூம்பட்டிணத்தில் கரைசேர்ந்தார் சிலரைப் போலவே, மன்னர் மகனும் தமிழ் மண்ணில் அடியிட்டு அரசெய்தி ஆளத்தொடங்கி, அவ்வழியால் தோன்றிய திரையர் குடிவந்த தொல்பெரும் குடிப்பெருமையுடையவன் திரையன் எனத் திரைவழிவந்து தமிழ்க்குடி மூன்றனுள் நடுவண் வைத்து மதிக்கத் தக்க சோழர் குடியோடு தொடர்புகொண்ட குடிப்பெருமையைப் பாராட்டினான்.

திரையன் சோழர் குடியோடு தொடர்புடையவன் என்று கூறக் கேட்ட பெரும்பாணன் உள்ளத்தில், பரந்த இப்பெருநிலத்தை ஆள்வோர் சோழர் குடிவந்தார் மட்டுமல்லரே; சேரர் குடிவந்தாரும் ஆட்சி புரிகின்றனர். பாண்டியர் குடிவந்தாரும் ஆட்சி புரிகின்றனர். ஆட்சி புரிகின்றனர் என்றால் வெறும் பெயரளவிற்கு ஆட்சி புரிபவரல்லர். நிலவுலகத்து மக்களெல்லாம் நின்று போற்றும் நல்லாட்சி புரிகின்றனர். வெற்றி எட்டுத் திக்கும் ஒலிக்க முழங்கும் போர் முரசும் உடையவர். அவர் குடிபோல் திரையன் குடியும் ஒன்று; அவ்வளவுதானே. இதனால் திரையனுக்கு என ஒரு தனிப் பெருமை இல்லையே என்ற குறைபாடு உருப்பெறுதல் கூடும் என்று எண்ணவே, "பெரும் பாண! திரையன் முடிகெழுவேந்தர் மூவர்க்கும் உரிய தமிழ்க்  குடியில் தோன்றியவனே என்றாலும், இவனையும் அவரொப்ப மதித்து விடுதல் கூடாது. எல்லாச் சங்குகளும் கடல் நீரில்தான் பிறக்கின்றன. அதனாலேயே அவை யனைத்தும் ஒரு தன்மை ஆகிவிடா. அவற்றுள் வலம்புரிச் சங்கு ஏனைய சங்குகளைக் காட்டிலும் இறப்ப உயர்ந்தது என்பதை உலகம் அறியும். அதைப் போலவே மூவேந்தர் குடியில் தோன்றினானெனும் திரையன் அம்மூவேந்தர் குடிவந்த வேந்தர் அனைவரினும் சாலச் சிறந்தவனாவான்" என்று கூறி அக்குறைபாட்டுக் குறிப்பையும் போக்கினான் பாணன்.

"வினைக்கண் வேறாகும் மாந்தர்களைக் கொண்ட மாண்புடையதன்றோ இம்மண்ணுலகம்! ஆகவே, குடிப் பிறந்தார் அனைவரும் குணமுடையராதலும் இல்லை. குடிப்பிறந்தாருள்ளும் வடுப்புரியும் வாழ்வுடையார் வாழ்கின்றனரே இவ்வையகத்தில்! உலகியல் இதுவாகவே திரையன் குடிப்பெருமையுடையான் என்பது ஒன்றை மட்டுமே கொண்டு அவனை நல்லவன் என நினைத்துவிடுதல் கூடாதே என்று எண்ணவும் தோன்றுமாதலின், அவ்வெண்ணத்தையும் மாற்றுவான் விரும்பி, "பெரும்பாண! திரையன் பிறந்த குடியால் மட்டும் பெருமையுடையவன் அல்லன்; அவன், அரசர்க்கு ஆகாதன என அறநூல்கள் விலக்கிய அனைத்தையும் அறவே தான் கடிந்து வாழ்வதோடு தன் ஆட்சிக் கீழ் வரும் மக்கள் பாலும் அறமல்லாதன நிகழாவாறு நீக்கிய நல்லோனாவான்" என்று கூறினான். அது கேட்டும் பெரும்பாணன் உள்ளம் நிறைவெய்தியதாகத் தோன்றவில்லை. "நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" என்பதே உலகோர்க்கு, ஆன்றோர் உரைத்த அறம். நல்லது செய்ய ஆற்றாத ஒருவனுக்கு, உன்னால் நல்லது செய்ய இயலாது. போயினும் அல்லது செய்வதையாவது கைவிடுக" எனக் கூறுவதே அவ்வறவுரையின் கருப்பொருளாமாதலின் திரையன் அல்லது செய்திலன் என்பது உண்மை, ஆனால் அதைக் கொண்டே அவன் நல்லன. புரிபவன் என நம்பிவிடுதல் இயலாதே என்று எண்ணி விட்டால் என் செய்வது என்று அஞ்சிய பாணன், "பெரும் பாண! திரையன் அல்லது கடிந்தவன் மட்டுமல்லன்; அற நினைவே உடையவன்; அறமே மொழிபவன்; அறச் செயலே புரிபவன்; ஆக, திரையன் குடியாலும் சிறந்தவன்; குலத்தாலும் சிறந்தவன்; கொள்கையாலும் சிறந்தவன்; அவனைப்பாடிப் பரிசில் பெறுவதால் உன்புகழ் பெருகுவதல்லது குறையுறாது" என்று கூறினான்.

ஆனால், அந்நிலையிலும் "பாண! நீ கூறியன அனைத்தும் நன்று. இத்துணைச் சிறந்தவன் இளந்திரையன் என்றாலும், அவன்பால் இன்றியமையாதிருக்க வேண்டிய மற்றொரு பண்பும் உளதா என அறிந்தல்லது அவனை அடைதல் இயலாது. நல்லவர்கள் வல்லவர்களாகவும் வாழ வேண்டும். நல்லவர் பால் வல்லமை இல்லையேல், வல்லவரால் அந்நல்லோர் அழிக்கப்பட்டு விடுவர் ஆதலின் அவர் நன்மையால் பயன் இன்றாம்; ஆகவே, நல்லோனாகிய திரையன்பால் வல்லமையும் உண்டு சொல்?" என்ற வினா வினை எழுப்பிவிடுவனோ பெரும் பாணன் என ஐயுற்ற பாணன், "பெரும்பாண! திரையன் தான் வல்லவனாதல் மட்டுமன்று; வல்லமை மிக்க பல்வகை வேற்படையும் உடையான்? ஆகவே அவன்பால் இன்றே செல்க. இனியும் எதை எதையோ எண்ணி ஐயங்கொண்டு அடங்கியிருந்து விடாது அவன்பால் செல்லத் துணிவாயாக. செல்லும் எண்ணம் உன் உள்ளத்தில் உருப்பெறுதல் ஒன்றுதான் தடை. உன் அவலமெல்லாம் அப்போதே அழிந்து அகன்றுவிடும். ஆக, அவன்பால் செல்லும் எண்ணம் உண்டாயின் கூறு, இளந்திரையன் இருந்தாளும் காஞ்சிமாநகரின் கவின், அவன் ஆட்சி நிலவும் தொண்டை நாட்டின் வளமும் வனப்பும், ஆங்கு வாழ் மக்களின் பண்பும் பெருமையும், அவன் நாடு கடந்து, அவன் நகர் அடையச் செல்லலாம் இடைவழியின் இயல்பு, அவ்வழியிடைப் பெறலாம் துணைகள் அவ்வழிகளைக் கடந்து செல்லலாம் வகை ஆகியவற்றை விளங்க உரைக்கின்றேன்" என்று கேட்டு, அவன் அளிக்கும் விடையை எதிர் நோக்கி நின்றான்.


“நீயிரும்
இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த்
திரைதரு மரபின் உரவோன் உம்பல்,
மலர்தலை உலகத்து மன்உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர்ப்பரப்பின் வளைமிக் கூறும்
வலம்புரி அன்ன வகை நீங்கு சிறப்பின்,
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன் படர்குலிர் ஆயின்
கேள் அவன் நிலையே, கெடுகநின் அவலம்!"

(28–38)

(முந்நீர் வண்ணன் பிறங்கடையும், உரவோன் உம்பலும், சிறப்பினையும் செங்கோலையும், பல்வேலையும் உடையோனுமாகிய திரையன் என்றும், நீயிரும் திரையன் படர்குவிராயன், கேள் அவன் நிலை, கெடுக அவலம் என்றும் வினை முடிவு செய்க.

நீயிரும்—நீங்களும், இருநிலம் கடந்த—பெரிய நிலத்தைக் காலால் அளந்து கடந்த, திருமறு மார்பின்—திருமகளும், ஶ்ரீவத்ஸ என்ற மறுவும் பொருந்திய மார்பையும், முந்நீர் வண்ணன்—கடல்நீர் போலும் நீல நிறத்தையும் உடைய திருமாலின், பிறங்கடை—வழி வந்தவனும், அந்நீர்திரை தரு மரபின் உரவோன்—அக்கடல் நீரின் அலைகளால் கரைசேர்க்கப் பெற்ற இயல்பினை உடைய உரவோனின், உம்பல் திரையர்
மரபில் வந்தவனும், மலர்தலை உலகத்து—பரந்து அகன்ற இப்பேருலகில், மன் உயிர்காக்கும்—நிலை பெற்ற உயிர்களைக் காத்து நிற்கும், முரசு முழங்கு தானை—வெற்றி முரசு முழங்கும் பெரிய நாற்படையினையுடைய, மூவருள்ளும்—சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களைக் காட்டிலும், இலங்கு நீர் பரப்பின் வளை கூறும் வலம்புரி அன்ன—விளங்குகின்ற நீர்ப்பரப்பாகிய கடலில் தோன்றும் வளைகளுள் மேலாகச் சிறப்பித்துக் கூறப்பெறும் வலம்புரிச் சங்கை போல், வசைநீங்கு சிறப்பின்—குற்றம் தீர்ந்த சிறப்பினையும், அல்லது கடிந்த—அறம் அல்லாதனவற்றைக் கடிந்து நீக்கிய, அறம்புரி செங்கோல்—அறத்தை விரும்பும் செங்கோல் ஆட்சியையும், பல்வேல்—பல்வகை வேற்படையினையும் உடையவனும் ஆகிய, திரையன்—திரையன்பால், படர்குவிராயின் — செல்லுவீராயின், கேள் அவன் நிலையே—அவன் இயல்பைக் கேட்பாயாகச் நின் அவலம் கெடுக—கேட்டதும் நின் மனக்கவலை கெட்டொழிவதாக!)

3-2 அவன் கடியுடை வியன்புலம்

இளந்திரையன் எல்லா வகையிலும் சிறந்தவன் தான் என்றாலும், பேரியாழ் இசைக்கும் பெருமை மிகு குடியில் வந்த பெரும்பாணன் உள்ளத்தில், தன்னால் பாடிப் பாராட்டத் தக்கவன்தான் இளந்திரையன் என்ற எண்ணம் இவன் உள்ளத்தில் எளிதில் உண்டாகாதே; அது உண்டாகித், திரையன்பால் செல்லும் வேட்கை உண்டாகிவிடுமாயின் நன்று; ஆனால், அது உண்டாக வேண்டும் என்ற ஏக்க மிகுதியால், "செல்குவையாயின்" என்று தான்கூற, திரையன் தலைநகர் சேணெடும் தொலைவில் உள்ளது போலும்; செல்லும் வழி இடர் மிகுந்தது போலும், செல்வார் உணவும் உறையுளும் காணாது, இடைவழியில் இடருற்றுக் கெடுவர் போலும், அவ்வருமைப்பாடு தோன்றவேதான், பாணன் செல்குவையாயின் என்று கூறுகின்றனன்; ஆகவே, சென்றால் பெரும் பொருள் பெறலாம் என்றாலும், இத்துணை இடர்ப் பாடுகளையும் தாங்கிக் கொண்டு ஆங்கு அடையும் வரை 'எம் சுற்றத்தினருள் ஒருவரும் உயிரோடு இரார்; ஆகவே, ஆங்குச் செல்வது அறிவுடைமையாகாது' என்று பெரும் பாணன் எண்ணி விடுவனோ என்ற அச்சம் மிகவே, அவன் உள்ளத்தில் அவ்வச்சம் எழாமைப்பொருட்டு காஞ்சி மாநகர் சென்றடையும் இடைவழியின் ஊறற்று உணவு மிகும் இன்ப நிலையை எடுத்துக் கூறத் தொடங்கினான் பரிசில் பெற்று மீளும் பாணன்.

"தொண்டைநாடு சான்றோர் உடைத்து" என்ற உண்மையைப் பெரும் பாணனும், உணர்ந்திருப்பான் என்றாலும், அத்தகு சான்றோர்களுக்கிடையே சாலாதார் சிலரும் இருத்தல் கூடும்; மேலும் செல்வம் கொழிக்கும் வளநாட்டில், அப்பெருவளத்தைப், பாடுபடாமலே தமதாக்கிக் கொள்ள நினையும் கொள்ளையர் சிலர் வாழ்வதும் இயலும் ஆதலின், திரையன் நாட்டில் கொடியோர் சிலர் வாழ, அக்கொடியோரால், தமக்கு இடைவழியில் இடையூறு நேர்தலும் உண்டாங்கொல்? என்று நினைத்து, பெரும்பாணன் நடுங்காமை குறித்து 'பெரும்பாண' இளந்திரையன் காவல் திறத்தில் கரைகண்டவன்; அதனால், அவன் கீழ்ப் பணிபுரியும் காவலர், பேரூர், சிற்றுார்களாம் மக்கள் வாழிடங்களில் மட்டுமேயல்லாமல், காடும் மலையும் போலும் அம்மக்கள் வழங்கும் வழிகளிலும் நின்று காவல் புரிவர். பரந்து அகன்ற அவன் நாடெங்கும் இத்தகைய காவல்முறை நிலவுவதால் வழிச் செல்வர், இடைவழியில் தம்மைக் கண்ட அளவிலேயே அஞ்சி மெய்விதிர்த்து நடுங்குவராகவும், நடுங்கும் அவர்நிலை கண்டும் அவரைப் போகவிடாது, இடைமறித்து, வருத்தி அவர் கைப்பொருள்களைக் கவர்ந்து செல்லும், ஆறலை கள்வர்களை, வழிப்பறிக்காரர்களை நாட்டில் எங்கும் காணல் இயலாது; ஆகவே கள்வர் பற்றி அச்சம் அற்று வழிச் செல்வாயாக என்றான். "அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக், கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக் கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம்".

காவல் சிறப்பால் ஆறலைக் கள்வர் இல்லாது போகலாம். அதனால் அக்கள்வரால் நேரலாகும் வழிப்பறியும் துன்பமும் இலவாகலாம். ஆனால், கடந்து செல்ல வேண்டிய காலமோ கொடிய கோடைகாலம். பகல் எல்லாம் கடும் வெய்யில் காய மாலையிலும், இரவிலும் கருமேகம் திரண்டு கடுமழை பொழியும் அத்தகைய கோடைமழை பெய்யுங்கால், மேகத்தூடே தோன்றும் இடியேறு, கண்ணொளிகெடுக்கும் மின்னலோடு மண்ணில் கடுகிப்பாயும் அவ்விடியேறு தாக்குண்ட உயிரினங்கள், உடல் கருகி மடியும்; பெருமரங்கள் எரிந்து சாம்பலாகும். மாடமாளிகைகள் மண்மேடாகும். காட்டு வழியின் ஊடே சென்று கொண்டிருக்குங்கால், அவ்விடியேற்றால் தாக்கும் போது, அக்காவலர் என் செய்வர்? மேலும் கடந்து செல்ல வேண்டிய வழியோ, காடுகளை ஊடறுத்துச் செல்வது. கடித்துக்கக்கும் கொடு நஞ்சால் உயிர் போக்கும் கருநாகமும், விழுங்கி உயிர் போக்கும் மலைப் பாம்பும், பாய்ந்து உயிர்குடிக்கும் புலி முதலாம் கொடு விலங்குகளும் மண்டிக் கிடக்கும். அவற்றால் எந்நேரத்திலும் இடையூறு நேரலாம். அவற்றால் வரும் ஏதத்தைத் தவிர்த்தல் இயலாதே என, வழியிடையே இயற்கையால் ஏற்படக் கூடும் இடையூறுகளுக்கு அஞ்சி, பெரும்பாணன், காஞ்சி நோக்கிச் செல்லும் முயற்சியைக் கைவிடலும் கூடும் என எண்ணினான் பரிசில் பெற்று மீள்வோன்.

அதனால், "கொடியோர் இலர்" என்றதோடு அமையாது திரையன் அறமே விரும்பும் ஆட்சியுடையவன். "இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு" என வள்ளுவர் கூறுவதும் காண்க. அதனால் கோடை இடிமுழக்கினும், அது கொடுமை செய்யாது, அரவும் வருவார்க்கு வழிவிட்டு விலகிச் செல்லும்; காட்டுக் கொடிய விலங்குகளும், கண்ணுக்குத் தோன்றாது கரந்து வாழும். ஆகவே, காட்டுவழி அல்லவோ என்ற கவலை கொள்ளாது வழியிடையே, வழிநடை வருத்தம் மிகும் போதெல்லாம் ஆங்காங்கே, அச்சம் இன்றி இருந்து இளைப்பாறி இளைப்பாறிச் செல்வாயாக; மேலும், செல்லும் வழியில் கண்ணையும், கருத்தையும்கவர்ந்து களிப்பூட்டும் இயற்கை நலக் காட்சிகள் எங்கும் நிறைந்து கிடக்கும். அவற்றால் ஈர்ப்புண்ட உள்ளம் ஆண்டே இருந்து அவ்வியற்கை இன்பத்தில் தோய்ந்து விடலாகாதா என ஏங்கவும் செய்யும். அத்தகைய இடங்களில் எல்லாம் இருந்து இருந்து செல்வாயாக. மேலும் இடைவழியில் உன்னையும் உன் சுற்றத்தாரையும் காணும் வழியிடையூர் வாழ்மக்கள் உங்கள்பால் அன்பு கொண்டு உங்களைத் தங்கள் விருந்தினராக ஏற்றுப் போற்ற முனைவர். அவ்வாறு உங்களை விரும்புவார் மனைதோறும் தங்கித் தங்கி இன்புற்றுச் செல்வாயாக. ஆகவே எதை எதையோ எண்ணிச் செயலற்று நின்றுவிடாது, உள்ளம் ஊக்கம் கொண்டு சிறகடித்துப் பறக்க, காஞ்சி நோக்கிப் புறப்படுவாயாக என, இடைவழி இயற்கையால் ஆகும் ஏதம் அற்றது மட்டுமல்லாமல், இருந்து மகிழத்தக்க இனிய இடங்களையும் உடையது எனக் கூறி, பெரும்பாணன் உள்ளத்தில், திரையன்பால் செல்லும் எண்ணம் துளிர்விடச் செய்து விட்டான்.


அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக்
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன்புலம்;
உருமும் உறாது; அரவும் தப்பாது;
காட்டுமாவும் உறுகண் செய்யா, வேட்டாங்கு
அசைவுழி அசைஇ; நசைவுழித் தங்கிச்
சென்மோ, இரவல! சிறக்க நின்உள்ளம்!

(39—45)

(அவன் வியன்புலம்—திரையனுடைய பரந்து அகன்ற நாட்டில்; அத்தம் செல்வோர் — வழிப்போவாரை அலறத்தாக்கி — அலற அலறத் தாக்கி; கைப்பொருள் வெளவும் — அவர் கையில் கொண்டு செல்லும் பொருளைக் கொள்ளையடிக்கும்; களவுஏர் வாழ்க்கை—களவுத் தொழிலையே, தொழிலாகக் கொண்டு உயிர் வாழும் வாழ்க்கையுடைய; கொடியோர் இன்று—கொடிய ஆறலை கள்வர் இல்லை; உருமும் உரறாது — இடியேறும் இடித்துத் துன்புறுத்தாது, அரவும் தப்பா—பாம்புகளும் தீங்கு செய்யா; காட்டு மாவும் உறுகண் செய்யா — காட்டு கொடுவிலங்குகளும் கொடுமை செய்யா; ஆகவே வேட்டாங்கு-நீ விரும்பியபடியெல்லாம்; அசைவுழி அசைஇ — தளர்ந்த விடத்தே இளைப்பாறி; நகைவுழித் தங்கி—நீ விரும்பும் இடங்களிலும், உன்னை விரும்பும் இடங்களிலும்தங்கி; இரவல;—இரவலனே, சென்மோ — செல்வாயாக; நின்உள்ளம் சிறக்க—உன் உள்ளமும் சிறந்து உனக்குத் துணை நிற்குமாக.)