பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/முன்னுரை
முன்னுரை
தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. "இனிமையாய் இயன்ற இளமகளிர்" என்ற பொருள்பட வந்த "தமிழ் தழீஇய சாயலவர்" என்ற தொடரில் வரும், "தமிழ்" என்ற சொல்லே, இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித், தமிழ் மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார், சீவகசிந்தாமணி என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர் திருத்தக்கதேவர்.
இனிய சொற்களைத் தேர்ந்து, இனிமையாகச் சொல்லாட விரும்பிய தமிழர், தாம் கூற விரும்பும் ஒவ்வொரு கருத்தும் இனிமையுடையவாதல் வேண்டும்; இனிக்கும் வகையில் உரைக்கப் பெறுதல் வேண்டும் எனவும் விரும்பினார்கள். அவ்வாறே உரைத்தும் வந்தார்கள். செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச்சிறப்புடையவாம்.
"உள்ளத்தில் உண்மைமொழி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்றார் ஒரு பெரியார். தமிழர் வாக்கு இனிமை வாய்ந்தது என்றால், அவர் உள்ளமும், அவ்வுள்ளம் உந்த உளவாகும் அவர் செயல்பாடும் இனிமை வாய்ந்தனவே ஆகும். இது உண்மை என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் படப்பிடிப்பினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார் அனைவரும் உணர்வர்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் பழம் பெரும் மூதாதையர் தம் பண்பாட்டுப் பெருமையினை, இற்றைத் தமிழரும், பிறரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்ற அவாவின் விளைவாக, அக்காலப் புலவர் மக்கள், ஆயிரம் ஆயிரம் பாக்களைப் பாடிச் சென்றார்கள். ஆனால் அவர்கள் பாடிச் சென்ற அப்பாக்களின் களஞ்சியத்தைக் காக்கத் தவறி விட்டார்கள்.
விழிப்புணர்வு இருந்தவர்கள், அழிந்தன போக, அழியாதிருந்த அப்பழம் பாக்களையெல்லாம் அரிதின் முயன்று தேடிக் கொண்டார்கள்.
அவ்வாறு தேடிப் பெற்ற அப்பாக்களை ஊன்றிப் பயின்ற புலமைசால் பெரியார்கள் பலரும் ஒன்று கூடி இருந்தும், அப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள் வளம், அப்பாக்களின் அடி அளவு ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு, அப்பாக்களையெல்லாம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, என்ற தலைப்புக்களில் தொகுத்து நமக்கு அளித்துச் சென்றனர். அவ்வாறு தொகுக்கப் பெற்ற தொகை நூல்களில், இரண்டாவது வரிசையில் நிற்பதான எட்டுத் தொகை நூல்களில் இடம்பெற்றிருக்கும் பாக்களின் நலங்களை, நம் கால மக்களும் உணர்ந்து மகிழ வேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்ட காரணத்தால், அவ்வரிசையுள் முதற் கண் வைத்துப் பெருமை செய்யப் பெற்றதான நற்றிணையினை "நற்றிணை விருந்து" என்ற தலைப்பிலும், "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பிக்கப் பெற்றதான குறுந்தொகையினை, "குறுந்தொகைக் கோவை" என்ற தலைப்பிலும், ஆறாவது இடம் அளிக்கப் பெற்றது ஆயினும், "கற்றறிந்தார் போற்றும் கலி" என்ற சிறப்பினைப் பெற்றதான கலித்தொகையினைப் 'பாலைச் செல்வி', 'குறிஞ்சிக் குமரி', 'மருதநில மங்கை' 'முல்லைக் கொடி', 'நெய்தற்கன்னி' என்ற ஐந்து தலைப்புகளில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே விளக்கி வெளியிட்டேன்.
அவ்வெட்டுத் தொகை வரிசையுள் நான்காவதாக நிற்பதும், 'ஒத்த பதிற்றுப்பத்து' என்ற பாராட்டினைப் பெற்றதுமாகிய பதிற்றுப்பத்தின் விளக்கத்தினை அளிக்க முன் வந்து முதலும் ஈறும் இல்லாமல் போக, இடையில் எஞ்சி நின்ற எட்டுப் பத்துக்களில் முதல் ஐந்து பத்துக்களை’ முறையே, 'புண் உமிழ்குருதி', 'அடு நெய் ஆவுதி', 'கமழ் குரல் துழாய்', 'சுடர்வீ வேங்கை', 'வடு அடும் நுண் அயிர்' என்ற தலைப்புகளில் வெளியிட்டேன். எஞ்சிய பத்துக்களின் விளக்கங்கள் ஏட்டளவாய் உள்ளன. விரைவில் வெளிவரும்.
சங்க இலக்கியப் பாக்களின் தொகுப்புகளாகிய, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, வரிசையிலே, எட்டுத் தொகையின் சில நூல்களை திறனாய்வு செய்து வெளியிட்ட எனக்கு, அவ்வரிசையில் முதற்கண் வைத்துப் போற்றப்படும் பத்துப் பாட்டுப்பாக்களின் திறனாய்வு செய்ய வேண்டும் என்ற வேட்கை எழுந்தது இயல்பே.
அவ்வேட்கையால் உந்தப்பட்ட நான் 782 அடி முதல் 103 அடி வரை உள்ள அவ்வரிசையுள் அடியளவில் சிறியதாய "முல்லைப் பாட்டினை", முதற்கண் திறனாய்வு செய்து "முல்லை" என்ற தலைப்பில் கழக வெளியீடாக வெளியிட்டேன். அடுத்து பத்துப் பாட்டுள் ஏழாவதாகத் திகழும் 'நெடுநல்வாடை' பாடல் வரிகளை திறனாய்வு செய்து "மனையுறை புறாக்கள்" என்ற தலைப்பிலும், பத்துப் பாட்டுள் நான்காவதாகத் திகழும் "பெரும் பாணாற்றுப்படை" பாடல் வரிகளை "பெரும்பாணாற்றுப் படை விளக்கவுரை" என்ற தலைப்பிலும் எழிலகம் பதிப்பக வெளியீடாக வெளியிட முன் வந்துள்ளேன்.
என் முன்னைய படைப்புகளுக்கு நல்லாதரவு தந்த, தந்து வரும், தமிழ் கூறு நல்லுலகம் இவற்றையும், இவற்றைத் தொடர்ந்து வரும் பத்துப் பாட்டு வரிசை விளக்கவுரை நூல்களையும் ஆதரித்து ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
கா. கோவிந்தன்