பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/அந்தி மல்லிகையும் எலியும்



2. அந்தி மல்லிகையும் எலியும்

பல ஆண்டுகளுக்கு முன்பு மெண்டல் (1822-1884) என்னும் பாதிரியார் ஐரோப்பாவில் பிரன் என்ற இடத்திலுள்ள மடத்தில் இருந்து கொண்டு தாவரங்களிலே வேறினச் சேர்க்கையால் ஏற்படும் பலன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். எட்டு வருஷங்கள் அவர் பல சோதனைகள் செய்து பாரம்பரியத் தன்மைகள் ஓர் ஒழுங்கான முறையில் அமைகின்றன என்று கண்டுபிடித்தார். அவருக்குப்பின் பலர் இதே துறையில் ஆராய்ச்சிகள் நடத்தி அவர் கூறுவது சரியென்று கண்டிருக்கிறார்கள்.

அந்தி மல்லிகையில் சிவப்பு நிறமாகப் பூக்கும் ஓர் இனமும் வெள்ளை நிறமாகப் பூக்கும் ஓர் இனமும் இருக்கின்றன. மெண்டல் அவற்றை எடுத்துக்கொண்டார். அந்த இரண்டு இனங்களையும் சேர்த்தால் என்ன ஆகிறது என்று அவர் சோதனை செய்யலானர்.

பூவிலே மகரந்தத் துாள் இருக்கிறது. அந்தத் துாளிலே ஆண் தன்மை உடையதும், பெண் தன்மை உடையதும் உண்டு. அவை இரண்டும் சேரும் போது பூ காயாக மாறுகிறது. ஒரு பூவிலேயே இரண்டு தன்மைகளையுடைய மகரந்தமும் இருப்பதுண்டு. அவை கலப்பதற்குத் தேனிக்கள் ஒரு காரணமாக இருக்கின்றன. தேனியின் வேலையை மெண்டல் தாமே மேற்கொண்டார் சிவப்பு நிறமுள்ள பூவிலிருந்து மகரந்தத்தூளை எடுத்து வெள்ளை நிறமுள்ள பூவிலே போட்டார். வெள்ளை நிறமுள்ள பூவிலுள்ளதைச் சிவப்புப் பூவில் தூவினார். வேறு பூக்களிலுள்ள மகரந்தம் இந்தப் பூக்களில் சேராதபடியும் கவனித்துக் கொண்டார். காய் காய்த்தது. அது முதிர்ந்து விதையும் கிடைத்தது. அந்த விதையை ஆவலோடு பாத்தியிலிட்டுத் தண்ணீர் ஊற்றினார். அப்படி முளைக்கவைத்த புதிய செடி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பருவமெய்தி அரும்பிப் பூத்தது. அதன் பூக்கள் முற்றும் சிவப்பாகவுமில்லை; வெள்ளையாகவுமில்லை. சிவப்பையும் வெள்ளையையும் கலந்தால் உண்டாகும் வெண்சிவப்பாக இருந்தன! துறவியார் தம் ஆராய்ச்சியை அதோடு நிறுத்திவிடவில்லை. வெண்சிவப்புப் பூக்களை ஒன்றோடொன்று சேருமாறு செய்தார். வேறு இனங்கள் அவற்றுடன் கலக்காதவாறு கவனித்துக் கொண்டார். மறுபடியும் புதிய விதைகள் கிடைத்தன. அவற்றைப் பயிரிட்டார். புதிய செடிகள் உண்டாகிப் பூத்தன. அவற்றின் பூக்கள் மேலும் விசித்திரமாக இருந்தன. சில முழுச் சிவப்பாயும், சில முழு வெள்ளையாயும், சில வெண் சிவப்பாயும் இருந்தன!

இம்மாதிரியாக எட்டு வருஷங்கள் ஆராய்ச்சி செய்ததின் பலனாக அவர் சில உண்மைகளைக் கண்டுபிடித்தார். பாரம்பரியத் தன்மைகள் ஒரு குறிப்பிட்ட திட்டப்படி அமைகின்றன என்பது அவர் கண்ட முக்கியமான உண்மை. அவருக்குப் பின் எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பாரம்பரியத் தன்மைகளைப் பற்றிச் சோதனைகள் செய்திருக்கிறார்கள். ஒருவர் காரெலிகளையும் வெள்ளெலிகளையும் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தார். காரெலிக்கும் வெள்ளெலிக்கும் பிறந்த குட்டிகள் கருமை நிறமாகவே இருந்தன. ஆனால் அவை பருவமடைந்து, தமக்குள்ளேயே இனவிருத்தி செய்தபோது, காரெலிகளும் வெள்ளெலிகளும் அடுத்த பக்கத்தில் உள்ள படத்தில் கண்டவாறு தோன்றின.