பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/நிறக்கோல்கள்

5. நிறக்கோல்கள்

பூரித்த அண்டம் பிரிந்து பிரிந்து ஆயிரக்கணக்கான அணுக்களாகி அது காரணமாக உடம்பு வளர்ச்சி அடைகிறது. ஒவ்வோர் அணுவிலும் நிறக்கோல்கள் இருக்கின்றன. ரப்பரில் மிக நுண்ணிய நூல் இழுத்து அதை நீளமாகவும் குட்டையாகவும் சிறு சிறு துண்டங்களாக வெட்டினால் எப்படி இருக்குமோ அவ்வாறு இந்த நிறக்கோல்கள் தோன்றுகின்றன.

ஒவ்வோர் உயிர்ப்பொருளின் அணுவிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நிறக்கோல்களே உண்டு. ஈயின் அணுவிலே 4 ஜோடியும். எலியின் அணுவிலே 20 ஜோடியும் இருக்கின்றன. சோளத்தின் அணுவிலே 10 ஜோடி: தக்காளியின் அணுவிலே 12 ஜோடி; மனித அணுவிலே 24 ஜோடி நிறக்கோல்கள் உண்டு.

மனித அணுவிலுள்ள இந்த நிறக்கோல்களை 24 ஜோடிகளாகப் பிரித்து வைத்தால் ஒவ்வொரு ஜோடியும் பார்வைக்கு ஒரே மாதிரி உருவமுடையதாக இருப்பது தெரியவரும். ஆண் அணுவில் ஒரு ஜோடி அணுக்கள் மட்டும் உருவத்தில் வித்தியாசமாக இருக்கும்.

மனிதவர்க்கத்தின் ஒவ்வோர் உயிரணுவிலும் 24 ஜோடி நிறக்கோல்கள் இருக்கின்றன என்று மேலே சொன்னேன். அதனால் கருவுண்டாவதற்குக் காரணமாகிய விந்தணுவிலும் கருமூலத்திலும் 24 ஜோடி நிறக்கோல்களே இருக்குமென்று நீங்கள் நினைப்பீர்கள், உண்மையில் அவ்வாறு இல்லை. அந்த அணுக்கள் முதிராத காலத்தில் 24 ஜோடி நிறக்கோல்களைத்தான் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை வளர்ந்து கருவுண்டாவதற்குத் தக்கவாறு முதிர்ச்சி அடைவதற்குள் மூன்று வகையாக மாறுதல் அடைந்து ஒவ்வொன்றும் 24 நிறக்கோல்களுடன்தான் வெளியாகின்றன.

எந்தச் சமயத்தில் அண்டம் வெளியாகிறதென்பதை நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. கருமூலக் குழாயில் இது வந்து கொண்டிருக்கும்போது புணர்ச்சியால் வெளியான விந்தணுக்களில் ஒன்று இதைச் சந்தித்தால் பூரிக்கிறது. அவ்வாறு பூரித்துக் கருவாகும் அண்டத்திலே பழையபடி நிறக்கோல்கள் 24 ஜோடிகளாய் விடுகின்றன. அவைகளில் பாதி விந்தணுவிலிருந்து வந்தவை. மற்றப் பாதி அண்டத்திலிருந்தவை. இவ்வாறு பூரித்த அண்டத்திலுள்ள நிறக்கோல்களுக்கு ஆணும் பெண்ணும் சரிசமானமாகக் காரணமாகின்றனர், பாரம்பரியத் தன்மைகள் அமையவேண்டுமானால் இந்த நிறக்கோல்களின் மூலமாகவே அமைய வேண்டும். நிறக்கோல்களில் பாரம்பரியத் தன்மையைத் தாங்கிக் கொண்டிருக்கும் மிகமிக நுட்பமான அங்கங்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் ஜீன்கள் (Genes) என்று சொல்லுகிறார்கள். ஜீன்களின் கூட்டத்தாலேயே நிறக்கோல்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஜீன்களைத் தனியாகக் காண்பது அரிது.