பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/பின்னிடுதல்

8. பின்னிடுதல்

எலியின் நிறக்கோல்களில் உள்ள கருமை நிறத்துக்கான ஜீன் ஓங்கி கிற்கிறது; வெள்ளை நிறத்துக்கான ஜீன் பின்னிட்டு (Recessive) நிற்கிறது. இப்படிப் பின்னிட்டு நிற்கும் ஜீன்கள் அடியோடு மறைந்து போவதில்லை. மனிதனுடைய ஜீன்களிலும் இவ்வாறு பின்னிடுபவை உண்டு. செவிட்டூமைகளைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் முழுச் செவிடர்களாக இருப்பதால்

படம் 6.

மற்றவர்கள் பேசுவதைக் கேட்க முடியாது; அதனாலேயே பேசவும் கற்றுக் கொள்ள இயலாமல் ஊமைகளாக இருக்கிறார்கள். இம்மாதிரி செவிட்டூமைகளாக இருப்பதும் பாரம்பரியத் தன்மையே. ஆனால் அதற்கெனவுள்ள ஜீன் பின்னிடுவது. அதனால் செவிட்டூமைப் பெண்ணை அக்குறைபாடில்லாத ஒருவன் புணர்ந்தால் அதன் பயனாகப் பிறக்கும் குழந்தைகள் சாதாரணமாகப் பேசக்கூடிய குழந்தைகளாகவே இருக்கும்.

அவற்றின் காதும் நன்றாகக் கேட்கும். ஆனால் இம்மாதிரி பிறந்த குழந்தை உரிய பருவத்தில் ஒரு செவிட்டூமையுடன் சேர்ந்தால், அதனால் பிறக்கும் குழந்தைகளில் சில செவிட்டூமைகளாக இருக்கும்.

மேலே கூறியவாறு ஓங்கி நிற்பதும் பின்னிட்டு நிற்பதும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எலியைப் பொறுத்த வரையில் கருமை நிறம் முற்றும் ஓங்கி நிற்கிறது. முதல் கலப்பினச் சேர்க்கையில் காரெலிகளே தோன்றுகின்றன. ஆனால் ஒரே ஜாதியைச் சேர்ந்த வெள்ளைச் சேவலுக்கும் சிவப்புக் கோழிக்கும் பிறக்கிற குஞ்சுகள் வெள்ளையாக இருந்தாலும் சில இறகுகள் மட்டும் சிவப்பாக இருக்கின்றன. இவ்வாறு ஓங்கி நிற்பதிலும் பலதரங்கள் உண்டு. சில முற்றும் ஓங்கி நிற்கும்; சில ஓரளவுக்குத்தான் ஓங்கி நிற்கும்.

ஆகவே, இதுவரை ஜீன்களின் மூன்று வகையான தன்மைகளைப் பார்த்தோம். சரிசமமாகக் கலப்பது ஒரு வகை. அதற்கு உதாரணம் வெள்ளை, சிவப்பு அந்தி மல்லிகைகள் சேர்ந்து வெண்சிவப்புப் பூ உண்டாவது. ஒரு தன்மை ஓங்கி நிற்பது மற்றொருவகை. காரெலி வெள்ளெலிச் சேர்க்கையில் கருமையே வெளிப்படுவது. பல பல தரங்களில் ஒரு தன்மை ஓங்கி நிற்பது மூன்றாவது வகை. வெள்ளைச் சேவலுக்கும் சிவப்புக் கோழிக்கும் பிறந்த குஞ்சுகள் இதற்கு உதாரணம்.

வெள்ளை நிறமுள்ள ஓர் ஆணுக்கும், கறுப்பு நிறமுள்ள பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகளின் நிறம் பலவிதமாக அமைகிறதே, அதற்கென்ன காரணம் கூறுவது? மனித நிறக்கோல்களில் நிறத்துக்குரிய ஜீன்கள் மேலே குறிப்பிட்டபடி ஒன்றொன்றுதான் இருக்குமென்பதில்லை; நிறத்துக்கான பல ஜீன்கள் இருக்கின்றன. ஆதலால் அவை சேரும்போது ஒவ்வொரு தடவையும் பூரித்த அண்டத்தில் ஒரே அளவில் இருக்குமென்பதில்லை. அவை எந்த விகிதத்தில் சேர்கின்றனவோ அவற்றுக்குத் தக்கபடி குழந்தையின் நிறம் அமைகிறது.

0