போதி மாதவன்/ஆறு ஆண்டுகளின் அருந்தவம்

எட்டாம் இயல்

ஆறு ஆண்டுகளின் அருந்தவம்

‘ஓடிஓடி ஓடிஓடி
உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி
நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி
மாண்டுபோன மானிடர்
கோடிகோடி கோடிகோடி
எண்ணிறந்த கோடியே!’

–பட்டினத்தார்

வைசுவந்தரத் தவப் பள்ளியிலே கெளதமர் பெருந் தவ முனிவரான ஆலார காலாமரையும், பிறகு உருத்திர கரையும்[1] கண்டு, அவர்களிடம் உபதேசம் பெற்றார். அக்காலத்தில் இவ்விரு வேதியர்களுமே ஞானத்திலும் தவத்திலும் பெரும் புகழ் பெற்றிருந்தனர். கௌதமர் இவர்களைச் சந்தித்த விவரங்கள் ‘மஜ்ஜிம நிகாயம்- மகா சச்சக சூத்திர'த்திலும் ‘அரிய பரியேசன சூத்திர'த்திலும் குறிக்கப் பெற்றிருக்கின்றன.

ஆலார காலாமர்

ஆலார காலாமரும், அவருடைய சீடர்களும் கௌதமரை நன்கு வரவேற்றனர். காலாமர் தாம் அறிந்திருந்த தத்துவங்களை அவருக்குக் கூறினார். ‘அறிவாளராகிய ஒருவர் தம் உள்ளுணர்வினாலே தமது ஆசிரியருடைய சித்தாந்தத்தை விரைவிலே தெரிந்துகொண்டு, அந்த நிலையில் நிலைத்து நிற்கும்படி என் சித்தாந்தம் எளிதாக இருக்கிறது’ என்று சொல்லி, அவருக்கு வேண்டிய விளக்கங்களையெல்லாம் விரிவாக எடுத்துக் கூறினார். கௌதமரும் மிகவும் விரைவிலே அந்தச் சித்தாந்தத்தைக் கற்று மனப்பாடம் செய்து ஓதிய பிறகு, அதன்படி நடக்கவும் ஆரம்பித்தார். அநுபவ பூர்வமாகக் குருவின் உபதேசங்களை அவர் கடைப்பிடித்து வந்தார்.

காலாமர் கூறியதாவது: ‘ஐம்பொறிகளின் மூலங்களாகிய ஐம்புலன்களின் செயல்களையும் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவைகளையும்), மனத்தின் செயலையும் உய்த்துணரும் "நான்" என்பது எது? கைகளாலும், கால்களாலும் இயக்கம் ஏற்படக் காரணமானது எது? “நான் சொல்லுகிறேன்", “நான் அறிகிறேன்; உணர்கிறேன்”, “நான் வருகிறேன்", “நான் செல்கிறேன்", நான் இங்கே தங்குகிறேன்” என்ற கூற்றுக்களில் ஆன்மா குறிக்கப்பெறுகின்றது. உன் உடல் ஆன்மா அன்று; கண், காது, நாசி, நாக்கு, மனம் ஆகியவை ஆன்மா ஆகமாட்டா உடலின் தீண்டுகையை உணர்வது “நான்“. நாசியில் வாசத்தையும் நாவில் சுவையையும். கண்ணில் பார்வையையும், காதில் கேள்வி யையும், மனத்தில் உணர்வையும் உணர்வது “நான்.“ “நான்“ என்பதே கைகளையும், கால்களையும் இயக்குவது. அந்த “நான் தான் ஆன்மா. ஆன்மாவின் உண்மையைச் சந்தேகித்தல் மத சம்பிரதாயத்திற்கு விரோதம்; ஆன்மாவின் உண்மையை உணராமல் முக்தியில்லை. அநுமானத்தால் ஆழ்ந்த ஆராய்ச்சியில் இறங்கினால், உள்ளம் கலங்கி அவநம்பிக்கையே ஏற்படும். ஆனால், ஆன்மாவைப் பரிசுத்தமாக்குவதன் மூலம் விடுதலைக்கு வழி கிடைக்கும். ஜனக் கூட்டத்தை விட்டு விலகித் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, பிச்சையெடுத்து உண்டு வந்தால், உண்மையான விடுதலையை அடையலாம். ஆசைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு, சடப் பொருள் உண்மை யன்று என்பதைத் தெளிவாக அறிந்தால், கூண்டிலிருந்து தப்பும் பறவையைப் போல, அகங்காரம் தன் தளைகளிலிருந்து விடுதலை அடையும். இதுவே உண்மை முக்தி ; ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களே இதைக் கற்று அறிந்து கொள்ள முடியும்.’

கௌதமருக்கு இந்தப் போதனையில் திருப்தி ஏற்பட வில்லை. 'நான் என்னும் அகங்காரத்தை அகற்றாததாலேயே மக்கள் பந்தங்களிலே சிக்கியிருக்கின்றனர்’ என்று மறுத்துக் கூற ஆரம்பித்தார் :

‘ஒரு பொருளையும் அதன் குணத்தையும் நாம் நம் கருத்திலே பிரித்துப் பார்க்க முடிகிறது. ஆனால், பிரத்தி யட்சத்தில் அவ்வாறில்லை. நம் கருத்தில் நெருப்பிலிருந்து வெப்பத்தைப் பிரித்துக் காணலாம். ஆனால், நடைமுறையில் வெப்பத்தை நெருப்பிலிருந்து வேறு படுத்த முடியாது. தாங்கள் குணங்களைப் பிரித்து விட்டுப் பொருளைத் தனியே விட்டு விடலாம் என்று கூறுகிறீர்கள். இந்தத் தத்துவத்தை முடிவு வரை ஆராய்ந்து பார்த்தால், உண்மை அப்படியில்லை என்பதைக் காணலாம்.

‘மனிதன் பல ஸ்கந்தங்களின் சேர்க்கை அல்லலா? நம் முனிவர்கள் கூறுவதுபோல நாம் பல ஸ்கந்தங்களின் சேர்க்கையாகவே இருக்கிறோம் அல்லவா? தூல உருவம், புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாகவே மனிதன் விளங்குகிறான். ‘நான் இருக்கிறேன்’ என்று சொல்லும்போது மனிதரால் குறிக்கப்பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாம் பட்ட ஒரு தனிப் பொருளன்று; ஸ்கந்தங்களின் கூட்டுறவினாலேயே அந்த அகங்காரம் தோன்றுகிறது. மனம் இருக்கின்றது; உணர்ச்சியும் சிந்தனையும் இருக்கின்றன; உண்மையும் இருக்கின்றது; அறவழியில் செல்லும் மனமே உண்மையானது மானிடனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டுத் தனியான ஆன்மா என்னும் அகம் இல்லை. அகங்காரம் தனிப்பட்ட ஆன்மா என்று நம்புவோன் பொருள் களின் தன்மையைத் தெளிவாக உணர்ந்தவன் ஆகான். ‘ஆன்மாவைத் தேடிக் கொண்டு அலைவதே தவறு; ஆரம்பமே தவறாயிருப்பதால், வழியும் தவறாகவே முடியும்.’[2]

‘அகத்தில் நாம் கொள்ளும் ஆசையாலும், “நான் பெரியவன்", “வியக்கத்தகுந்த இச்செயலை நான் புரிந்தேன்” என்று நாம் கருதும் செருக்கினாலும் சிந்தனை யிலே எவ்வளவு குழப்பம் ஏற்பட்டுள்ளது? “நான்“ என்ற சிந்தனை நம் பகுத்தறிவு இயற்கைக்கும் உண்மைக்கும் நடுவிலே நிற்கின்றது, அதை கழித்துவிட்டால் பொருள் களின் உண்மை நிலை புலனாகும். சரியான முறையில் சிந்திப்பவன் அறியாமையை நீக்கி, ஞானத்தை அடைவான். “நான் இருக்கிறேன்", “நான் இருப்பேன்", “நான் இருக்க மாட்டேன்” என்ற எண்ணங்கள் தெளிவான சிந்தனையாளனுக்கு ஏற்படுவதில்லை.

மேலும், அகங்காரம் நிலைத்திருக்கும் என்றால், உண்மையான விடுதலையைப் பெறுவது எங்ஙனம்? கவர்க்கம், மத்தியம், பாதாளம் ஆகிய மூவுலகங்களில் எங்கேனும் அகங்காரம் புனர்ஜன்மம் எடுக்கும் என்றால், திரும்பத் திரும்பப் பிறப்பும் வாழ்க்கையுமாகவே இருக்கும். அகங்காரமும், பாவமுமாகிய சுழலிலேயே நாம் சிக்குண்டிருப்போம்.

‘கலப்புற்ற பொருள்கள் பிரிந்துவிடும்; நாம் பிறப்பு, பிணி, முதுமை, மரணங்களிலிருந்து தப்பவே முடியாமற் போகும். இது எப்படி முடிவான விடுதலையாகும்?’

காலாமர் அநுபவ பூர்வமாக எவ்வளவு அறிந்திருந்தாரோ, அந்த அளவுக்குக் கௌதமரும் அறிந்து கொண்டார். அவர் மூலம் ஏழு சமாபத்திகளையே அறிந்து கொள்ள முடிந்தது. அவை அனைத்தும் வெகுவிரைவிலே கைவரப் பெற்றுக் கௌதமர் அவற்றிலே நிலைத்து நின்றார். பிறகு குருவை அடைந்து, ‘காலாம நண்பரே, தாங்கள் தங்கள் உள்ளுணர்வு அறிவினால் தெரிந்து நிலைத்து நிற்கும் தங்கள் சித்தாந்தத்தின் தன்மை இவ்வளவுதானா!’ என்று வினவினார். காலாமரும், ‘ஆம், இவ்வளவுதான்!’ என்றார்.

கௌதமர் தமக்கும் அந்தச் சித்தாந்தம் முழுதும் அநுபவத்தில் கைவந்து விட்டதாகக் கூறினார். காலாமர் மிக்க மகிழ்ச்சியடைந்து, ‘நான் அறிந்த சித்தாந்தத்தை நீர் அறிவீர்; நீர் அறிந்த சித்தாந்தத்தை நான் அறிவேன். என்னைப் போலவே நீர் இருக்கிறீர்; உம்மைப் போலவே நான் இருக்கிறேன். எனவே, நண்பரே, நாம் இருவரும் சேர்ந்து நம் சீடர்களாகிய முனிவர்களுக்குத் தலைவர்களாக இருப்போம்!’ என்று கூறினார். சீடராக வந்தவரை அவர் தமக்குச் சமமான குருவாக ஏற்றுக் கொண்டார்.

ஆனால் கௌதமர் அதற்கு இணங்கவில்லை. ‘இந்தச் சித்தாந்தம் என்னைத் துறவு வழியில் செலுத்தி, ஏகாந்த நிலையில் மனத்திற்கு அமைதியைக் கொடுத்து, உள்ளுணர்வைப் பெருக்கி, ஞானத்தை அளித்து, நிர்வாண முத்திக்குச் செலுத்தவில்லை. வெறும் ஏழு சமாபத்திகளையே அளிக்கின்றது!’ என்று கருதி, அவர் திருப்தி கொள்ளாமல், சத்தியத்தை நாடி வெளியேறிச் செல்ல விடை கொண்டார்.

உருத்திரகர்

அடுத்தாற் போல் அவர் உருத்திரக முனிவரிடம் சென்று உபதேசம் கேட்டார். உருத்திரகரும் அன்போடு அழைத்து அருகே யிருத்திக் கொண்டு, தமக்குத் தெரிந்த விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொன்னார்.

கருமத்தைப் பற்றி அவர் வற்புறுத்திக் கூறினார். மக்களின் குண வேறுபாடுகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், செல்வ நிலைக்கும், விதிக்கும் அவர்களுடைய கருமமே காரணம் என்றும், அவரவர் கருமத்திற்கு ஏற்ப நன்மையும் தீமையும் ஏற்படுகின்றன என்றும், ஆன்மா புனர்ஜன்மங்கள் எடுப்பதும் கருமத்தின் விளைவு என்றும் அவர் விளக்கிக் கூறினார்.

கௌதமர் மறுபிறப்புப் பற்றியும் கருமத்தைப் பற்றியும் நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தார். அவற்றின் உண்மையை அலசி உணர்ந்து கொண்டார். ‘கரும விதி மறுக்க முடியாததே; ஆனால் அகங்காரம்–ஆன்மா–பற்றிய கொள்கைக்கு அடிப்படையில்லை’ என்று கருதினார். குருவிடம் அவர் கூறியதாவது :

‘இயற்கையிலே எல்லாம் காரண–காரியத் தொடர்புடன் இருப்பது போலவே மனிதனின் வாழ்க்கையும் அவ்விதிக்கு உட்பட்டிருக்கிறது. முந்தி விதைத்ததை நிகழ் காலத்தில் அறுவடை செய்கிறோம்; எதிர்காலம் நிகழ் காலத்தின் விளைவேயாகும். ஆயினும் மாற்றமில்லாத அகங்காரமாகிய ஆன்மா ஒன்று உளது என்பதற்கும், அது ஒரே படித்தாக இருந்து கொண்டு உடல்கள் தோறும் தங்கி வருகின்றது என்பதற்கும் ஆதாரம் எதுவுமில்லை.

'நான் என்று கருதும் தனிப்பான்மை பொருள்களின் சேர்க்கையாலேயே எனக்கு ஏற்பட்டிருக்கின்றது; என் தூல உடலும், மன ஆற்றல்களும் அந்தச் சேர்க்கையின் விளைவுகளே. படிப்படியான பரிணாம வளர்ச்சியால் தோன்றியுள்ள குணங்களைக் கொண்டு அவை ஏற்பட்டிருக்கின்றன. பொறிகளின் தொழில்களுக்கு மூலமாயுள்ள ஐம்புலன்களும் இத்தொழில்களைச் செய்து வந்த முன்னோர்களிடத்திலிருந்து எனக்கு வந்துள்ளன. என் சிந்தனைகள் அவைகளைச் சிந்தித்த மற்றையோரிடமிருந்தும், என் மனத்தில் எழும் சிந்தனைகளோடு அவைகள் கலந்தும் ஏற்படுகின்றன. பல ஸ்கந்தங்களின் சேர்க்கையால் நான் தோன்றுவதற்கு முன்பு, இதே புலன் களைப் பயன்படுத்திக் கொண்டும், இதே சிந்தனைகளைச் சிந்தித்துக் கொண்டும் இருந்தவர்கள் எவர்கள்? முந்திய பிறவிகளில் தோன்றிய நானே அவர்கள்; நேற்றைய நான் இன்றுள்ள நானுக்குத் தந்தையாவது போல, அவர்களே என் முன்னோர்கள்; என் முந்திய செயல்களின் கருமம் இப்போதுள்ள என் வாழ்க்கையின் விதியை நிர்ணயிக்கின்றது.[3]

‘புலன்களின் செயல்களை இயக்கி வரும் ஆன்மா ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், பார்வையின் வழியாக உள்ள கண்களைப் பறித்து எடுத்து விட்டால், அந்த ஆன்மா உலகத்தில் தெளிவாகத் தடையின்றிப் பார்க்க முடியுமோ? செவிகளைப் பிய்த்து எடுத்துவிட்ட பிறகு, அது ஒலிகளை மேலும் தெளிவாகக் கேட்க முடியுமோ? நாசியை வெட்டிய பிறகு, அது நாற்றங்களை மேலும் தெளிவாக முகர முடியுமோ? நாவை வெளியே இழுத்து விட்டால், அது மேலும் தெளிவாகச் சுவையை உணர முடியுமோ? உடலை அழித்து விட்டால், அது மேலும் சுகத்தை அடைய முடியுமோ?[3]

‘குணம்(பண்பு) நிலைத்து நிற்பதோடு, பின் எடுக்கும் ஜன்மங்களிலும் தொடர்ந்து செல்வதை நான் காண்கிறேன்; கரும விதியின் உண்மையையும் நான் காண்கிறேன்; ஆனால் உங்கள் கொள்கைப்படி சகல செயல்களுக்கும் காரணமாக விளங்கும் ஆன்மாவை மட்டும் நான் காண முடியவில்லை. “நான்” என்று அகம் இல்லாமலே மறு பிறப்பு ஏற்படுகிறது. “நான் கூறுகிறேன்,” “நான் செய்வேன்” என்ற சொற்றொடர்களிலுள்ள இந்த ஆன்மா, இந்த அகம், இந்த அகங்காரம் ஒரு மாயை. அந்த அகம் உண்மையாக உளதென்றால், அகங்காரத்திலிருந்து விடுதலையடைதல் எப்படி இயலும்! நரக வேதனையின் பயமே எல்லையற்றிருக்கும்; விடுதலை என்பதும் இல்லாமற்போகும். உயிர் வாழ்வில் ஏற்படும். தீமைகள் நம் அறியாமையிலிருந்தும், பாவத்திலிருந்துப் ஏற்படுகின்றன என்ற நிலை மாறி நம் வாழ்வின் இயல்பே–இயற்கையே–அவைகள் என்று ஏற்பட்டு விடும்.’[4]

கௌதமர் உருத்திரக ராமபுத்திரரிடம் எட்டாவது சமாபத்தியை மட்டும் உபதேசம் பெற்றார். அந்த உபதேசப்படி நடந்த பிறகு, ஆசிரியர் சீடரும் தம் நிலைக்கு வந்து விட்டதை எண்ணிப் பெருமகிழ்ச்சியடைந்து, கௌதமரையும் தம்மோடு இருந்து விடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் கௌதமர் சீடராகிய தம்மைக் குரு நிலையில் அமரச் செய்ததற்காக வந்தனம் கூறி, அவருடைய சித்தாந்தத்திலும் திருப்தியடையாமல், மேலும் சத்திய சோதனை செய்வதற்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஆலயங்களிலுள்ள குருக்கள் முதலியோர்களிடம் போய்த் தம் சந்தேகங்களை நீக்கும்படி வேண்டினார். ஆனால் எங்கும் அவர் தெளிவு காண முடியவில்லை. உயிர்ப் பலிகளால் தேவர்களைத் திருப்தி செய்யும் வழியிலே மக்கள் சென்று கொண்டிருந்ததைக் கண்டு அவர் வருந்தினார். இதனால் ஒழுக்கம் அறவே கைவிடப் படுவதை எண்ணி அவர் மனம் புழுங்கினார். ‘மந்திர தத்திரங்கள் பயனற்றவை; பிரார்த்தனைகள் வெறும் சொற்குவியல்கள்; தொழுது வரம் கேட்டுக் கிடைப்பதும் ஒன்றுமில்லை. காமத்தையும் பேராசையையும் கைவிட்டுத் தீய உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெற்று, வெறுப்பையும் துவேஷத்தையும் நீக்கி வாழ்வதே சரியான வேள்வி; சரியான வணக்கம்’ என்று அவர் சிந்தனை செய்தார்.

உண்மையான ஞானத்தை அடைவதற்காகக் கௌதமர் ஒரே வைராக்கியத்துடன் அலைந்து கொண் டிருந்தார். ஆசிரியர்களிடம் உபதேசம் கேட்டாகி விட்டது. ஆயினும் மனத்தில் அமைதியில்லை. எனவே அவர் தாமாகப் பெரு முயற்சி செய்து, தவத்தில் எத்தனை வகையுண்டோ அத்தனையையும் கைக்கொண்டு, இயன்ற வரை சமாதியில் அமர்ந்து, மெய்யறிவைப் பெறவேண்டும் என்று தீர்மானித்தார். தாமே தமக்கு வழிகாட்டி என்ற முடிவுக்கு வந்தார்.

உருவேலா வனம்

அந்நிலையில் மகத நாட்டில் நைரஞ்சரை[5] நதியின் கரையிலேயுள்ள உருவேலா[6] வனத்தை அடைந்தார். கௌதமருடைய சரித்திரத்தில் இந்த ஆரணியம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. இதிலேதான் ஆறு வருடம் அவர் அருந்தவம் செய்ய நேர்ந்தது. மனத்தினால் எண்ணுவதற்கே, பயங்கரமான கோரமான தவமுறைகளை யெல்லாம் அவர் மேற்கொண்டது இங்கே தான்; முடிவில் அவர் மெய்யறிவு பெற்றுப் புத்தரானதும் இவ்வனத்திலேதான். இவ்வனத்தை முதலில் அவர் பார்த்துத் தேர்ந்தெடுத்த முறையைப் பற்றி அவரே கூறியுள்ள விவரம் வருமாறு:

‘நன்மையானதை நாடித் தன்னிகரற்ற சாந்தியைத் தேடி அலைந்து கொண்டிருந்த நான், மகத நாட்டு மக்களிடையே சுற்றிக் கொண்டிருக்கும் போது, சேனானி நகரத்தின் அருகேயிருந்த உருவேலாவுக்கு வந்து சேர்ந்தேன். அங்கே இரமணீயமான ஓர் இடத்தைக் கண்டேன்; வனத்திலே அது ஓர் இன்பகரமான சோலை; பரிசுத்தமான நீருடன் ஆறு ஒன்று அருகே ஓடிக்கொண்டிருந்தது. அச் சோலையுள் எளிதாகப் போய் வரலாம்; அது மனோரம்யமான இடம்; பிச்சையெடுப்பதற்கும் அருகே ஒரு கிராமமும் இருந்தது. அப்போது நான் இவ்வாறு எண்ணினேன்:

“உண்மையிலேயே இந்த இடம் மனோகரமா யுள்ளது; வனத்திலே அடர்ந்த அழகிய சோலையாகவும் இருக்கிறது; அருகே தெளிந்த நீருள்ள ஆறு ஓடுகின்றது; அருகேயுள்ள இந்தக் கிராமத்தில் நான் உணவுக்குப் பிச்சை ஏற்றுக் கொள்ளலாம்! கடைத்தேற்றத்தில் நாட்டம் கொண்டு பெரு முயற்சி செய்ய விரும்பும் ஒருவனுக்கு இதுவே தகுதியான தலம்!”

‘ஆதலால், சகோதரர்களே, உடனேயே நான், “தவம் முயலுவதற்கு ஏற்ற தலம் இதுவே!” என்று எனக்குள்ளே கூறிக் கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டேன்.”[7]

அங்கே அமர்ந்து கொண்டு சாக்கிய முனிவர்: மக்களின் துக்கத்தையும், வானவில்லைப் போல் பல வண்ணங்களுடன் பொய்மையாக விளங்கும் வாழ்க்கை யையும் பற்றிச் சிந்தனை செய்து நியம நிஷ்டைகளுடன் தனிலே தவம் புரிந்து வந்தார். அப்போது அவரைப் போல மெய்யறிவில் நாட்டம் கொண்ட ஐந்து தாபதர்கள் அங்கு வந்து அவரோடு சேர்ந்துகொண்டனர். அவர் களிமே தீர்க்கமான அறிவுள்ள கௌண்டிந்ய குலபுத்திரர் முதன்மையானவர்; தசபால காசியபர், பாஷ்பர், அசுவஜித், பத்திரகர் என்போர் மற்ற நால்வர் அந்த ஐவரோடும் சேர்ந்து கொண்டு; கௌதமர் படிப்படியாகக் கடுமையான தவ முறைகளை மேற்கொள்ளலானார்.

அம்முறைகளில் சிலவற்றைப் பற்றிப் பிற்காலத்தில் சாரீபுத்திரர் என்ற தமது பிரதம சீடர் ஒருவருக்குக் கூறிய விவரத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

தவத்திலே அவர் தம்மோடிருந்த அனைவருக்கும் முன்னணியிலே இருந்தார். கரடு முரடான வாழ்க்கையையே அவர் மேற்கொண்டார். நியமங்களில் அவர் தவறியதேயில்லை. உடைகளே இல்லாமல் அவர் பல நாட்கள் இருந்தார். ‘அடிகளே, வாருங்கள்!’ என்று அழைத்த இடங்களுக்கும் போவதில்லை. தமக்கென்று கொண்டு வந்து அளித்த உணவைப் புசிப்பதில்லை. வாயிற் படியில் வைத்து அளிக்கும் உணவையும், சாளரங்களின் வழியே நீட்டிய உணவையும் அவர் ஏற்பதில்லை. உணவிலும் எத்தனையோ கட்டுப்பாடுகளை அமைத்துக் கொண்டார். சில சமயங்களில் ஒரே வீட்டில் மட்டும் பிச்சை ஏற்பார்; அதுவும் ஒரு பிடி சோறு தான். சில சமயங்களில் இரண்டு முதல் ஏழு வீடுகள் வரை பிச்சை ஏற்பினும், வீட்டுக்கு ஒரு பிடியே பெற்றுக் கொள்ளுவார். சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஒரு வேளையும், இரண்டு நாட்களுக்கு ஒரு வேளையும், ஏழு நாட்களுக்கு ஒரு வேளையுமே அவர் உண்பது வழக்கம். மாதத்திற்கு இரண்டே வேளைகள் மட்டும் உணவருந்துவதம் உண்டு. இவ்வாறு குறித்த காலங்களுக்கு இடையில் உணவில்லாமலிருக்கப் பழகினார். காய்கள், காட்டுத் தானியங்கள், உ.மி, குறுணை, எள், புல் முதலியவற்றோடு, பசுவன சாணத்தைக் கூட உணவாக உண்டு வந்தார். பல நாள் பட்டினியிருந்த பின்பு, ஓர் இலந்தைப் பழம், எள், அரிசி முதலியவற்றை மட்டும் புசித்து வந்திருக்கிறார்.

ஆயன் காட்டிய அன்பு

ஒரு நாள் அவர் மிகுந்த களைப்பினால் மூர்ச்சித்துக் காட்டு வழியிலே, மாண்டவர் போல, விழுந்து கிடந்தார். வெய்யிலிலே வாடிக் கொண்டிருந்த அவ்வுடலைக் கண்டு அந்த வழியிலே வந்து கொண்டிருந்த ஆயன் ஒருவன் மரக்கிளைகளை ஒடித்து அவரைச் சுற்றிலும் நட்டு நிழலுண்டாக்கி, ஒரு வெள்ளாட்டின் மடிக் காம்பைக் கறந்து அவர் வாயிலே சில துளிகள் பால் விழும்படி செய்தான். அந்தப் பால் தொண்டையுள் இறங்கியதும், கௌதமர் கண் விழித்து, ஒரு கலத்தில் கொஞ்சம் பால் கறந்து கொடுக்கும்படி ஆயனை வேண்டினார். அருளோடு உதவிபுரிய வந்த அந்த ஆயன் மறுத்தான். அவன் தான் தீண்டத்தகாத இடையன் என்பதால், அவன் தீண்டிய பாலை அண்ணல் பருக முடியாது என்பதாலேயே அவன் தயங்கினான்.

காட்டிலும் மேட்டிலும் கூடச் சாதிவேற்றுமை உணர்ச்சி தாண்டவமாடுவதை எண்ணிக் கௌதமர் வருந்திப் பின் வருவாறு கூறினார்:


‘இடர் வரும்போதும்–உள்ளம்
இரங்கிடும் போதும்,
உடன் பிறந்தவர்போல்–மாந்தர்
உறவு கொள்வரப்பா!

‘ஓடும் உதிரத்தில்–வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும்–சாதி
தெரிவதுண்டோ, அப்பா !

‘நெற்றியில் நீறும்–மார்பில்
நீண்ட பூணூலும்
பெற்றிவ் வுலகுதனில்–எவரும்
பிறந்ததுண்டோ அப்பா ?

‘பிறப்பினால் எவர்க்கும்–உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில்–நல்ல
செய்கை வேண்டுமப்பா!’

பின்னர் ஆயன் மனமுவந்து அளித்த பாலைப் பருகிப் பகவர் தளர்ச்சி நீங்கினார்.

கடுந்தவ முறைகள்

உடைகள் விஷயத்தில், கௌதமர் கிடைத்தவைகளை யெல்லாம் உடுத்த ஆரம்பித்தார் சணல் முதலிய வற்றால் நெய்த உடைகளையும், பிணங்கள் மீது போர்த்திய துணிகளையும் குப்பை மேடுகளில் கண்டெடுத்த துணிகளையும், மரவுரிகளையும், கிழிந்த மான் தோல்களையும், புற்களையும், தலை ரோமம், குதிரை மயிர், ஆந்தையின் இறகுகள் முதலியவற்றால் செய்த உடைகளையும் வெவ்வேறு காலங்களில் அவர் அணிந்து வந்தார்.

அவர் தலை ரோமங்களையும் தாடி ரோமங்களையும் கையாலேயே முளையோடு பறித்தெடுத்து விடுவது வழக்கம். பல நாட்களாக உட்காராமல் நின்று கொண்டேயிருந்து பழகினார். முட்களைப் பரப்பி அவற்றின் மீது படுத்துப் பழகினார். நாள்தோறும் மூன்று வேளை குளித்துத் தண்ணீர்க்குள்ளேயே நெடுநேரம் இருப்பதுப் வழக்கமாயிற்று.

உடலைப் பொருட்படுத்தாமல் வதைப்பதில் எத்தனை முறைகள் உண்டோ அத்தனையையும் அவர் செய்து பார்த்தார். மாதக்கணக்காக அவர் குளியாமலேயே இருந்தார். மரப்பட்டை போல உடலில் அழுக்கு அடையாக ஏறியிருப்பினும், அதைக் கைகளால் நீக்க வேண்டும் என்ற சிந்தனை கூட இல்லாமலே இருந்தார். பிறர் அவ்வுதவியை செய்யவேண்டும் என்றும் அவர் நாடவில்லை.

உடலுக்கு என்ன மாற்றங்கள் ஏற்படினும் அவர் எப்பொழுதும் போல் கருணையை மட்டும் கைவிடவே யில்லை. ஈ, எறும்பு, புழு, பூச்சிகள் கூடத் தம்மால் துயருறாமல் இருப்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்

ஏகாந்தமாக இருக்கவேண்டும் என்று தோன்றிய காலங்களில், அவர் இரவும் பகலும் புதர்களுக்குள்ளே போய் மறைந்திருப்பது வழக்கம். பழக்கமில்லாதவர்கள் அந்தப் புதர்களைக் கண்டாலே மயிர்க் கூச்செறியும் என்று அவரே கூறியுள்ளார். புல்லறுக்கவும், மரம் வெட்டவுப் மாடுகள் மேய்க்கவும் வரக்கூடிய மனிதர்கள் தம்மைப் பார்த்துவிடாமலும், தாம் அவர்களைப் பார்த்து விடாமலும் இருப்பதற்காக, அவர் காலோசை கேட்டதுமே தொலை தூரங்களுக்கு ஓடி போய் விடுவார் கோடை காலத்தில் வெய்யிலிலே காய்ந்தும், குளிர், மழை காலங்களில் திறந்த வெளியில் கிடந்தும், வெயிலால் உலர்ந்தும், பனியால் வாடியும் அவர் உடலைச் சித்திரவதை செய்துகொண்டிருந்தார்.

சில சமயங்களிலே கௌதமர் மயானங்களிலே பிணங்களின் எலும்புகளின் மீது படுத்துக் கொள்வார். அவ்வாறு இருக்கும் சமயங்களிலே அவ்வழியாகச் செல்லும் ஆயர்கள் அவர்மீது உமிழ்ந்தும், களிமண்ணை வீசியும், அசுத்தப் படுத்தியதோடு, அவர் செவித்துளைகளில் வைக்கோற் குச்சிகளை நுழைத்து அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதும் வழக்கம். அப்படியிருந்தும், ‘சாரீபுத்திரா, அவர்களுக்கு எதிராக ஒரு தீய சிந்தனையேனும் எனக்குத் தோன்றியதான நினைவே இல்லை. அவ்வளவு தூரம் நான் பொறுமையைக் கைக்கொண்டிருந்தேன், சாரீ புத்திரா!’ என்று அவரே பின்னால் குறிப்பிட்டிருக்கிறார்.


பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து
இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று,
நன் மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும்
தாழ்மை சொல்லிச்
சேய்போல் இருப்பவர்கண்டீர்: உண்மை
ஞானம் தெளிந்தவரே!’

என்று பட்டினத்தடிகள் பாடிய வண்ணம் கௌதம அடிகளும் நடந்து வந்தார்.

மேலே கூறிய பரீட்சைகளுக்குப் பின்னால், இன்னும் பயங்கரமான திட்டங்களையும் நிறைவேற்றிப் பார்க்க வேண்டும் என்று அவர் முனைந்தார். மூச்சை அடக்கவும், உணவையே தீண்டாமல் விரதமிருக்கவும் அவர் செய்த முயற்சிகளையும், அவற்றின் முடிவுகளையும் பற்றிப் பிற்காலத்தில் சச்சகர் என்ற ஜைனருக்கு அவர் கூறிய வரலாறுகளிலிருந்து தெரிகிறது.[8]

சினேந்திரராகிய கௌதமர் பற்களை இறுகக் கடித்து, மேல் வாயோடு நாவை அழுத்திக்கொண்டு, மனத்திலே தீய எண்ணங்கள் தோன்றாமல், நல்ல எண்ணங்களை நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய அக்குள்களிலிருந்து வியர்வை பெருகி வழிந்து கொண்டிருந்தது. பலமுள்ள ஒருவன் மெலிந்தவன் ஒருவனைத் தோள்களையும் தலையையும் பிடித்துக் கீழே தள்ளி அழுத்துவது போல், அவரும் இந்த முறையில் மனத்தோடு போராடிக் கொண்டிருந்தார். அந்நிலையிலும் அவருடைய சக்தி குன்றாமலும், பணிந்து விடாமலும் இருந்து வந்தது. ஆயினும் உடல் களைப்புற்றுச் சோர்ந்துபோய் விட்டது. எவ்வளவு வேதனை ஏற்பட்ட போதிலும், அவர் மனம் நிலைகுலையாமல் நின்றது.

பின்னர் மூச்சை அடக்கப் பயிற்சி செய்தார். வாயாலும் நாசியாலும் மூச்சு வாங்கி விடுவதை அறவே நிறுத்தி விட்டார். காற்று வெளியேறுவதற்காகக் காதுகளின் வழியாகப் பெரிய இரைச்சலுடன் கிளம்பி வந்தது. கொல்லன் உலையிலே துருத்தி ஊதுவதுபோல் செவிகளில் ஓசையுண்டாயிற்று. அப்போதும் அவர் ஆற்றல் குன்றவில்லை; மன உணர்வும் கலங்கவில்லை. பின்னர் அவர் மூச்சை அறவே நிறுத்திப் பழகினார். மூக்கு, வாய், செவி எல்லாவற்றையும் அடைத்து விட்டதால், உடலின் உள்ளேயிருந்த வாயு வெளியேற மார்க்கமில்லாமல் ஒரேயடியாக மூளையைப் போய்த் தாக்க ஆரம்பித்தது. பலசாலி ஒருவன் கூர்மையான முனையுள்ள வாளைக்கொண்டு குடைவது போல் மண்டையில் வேதனை உண்டாயிற்று. அப்போதும் வேதனைகளால் மனம் சலிப்படையவில்லை. மேலும் மேலும் மூச்சையடக்கிப் பழகியதால், அவர் தலையில் தாங்கமுடியாத வேதனை உண்டாயிற்று; வாயு வயிற்றைத் துளைத்தது; கசாப்புக்காரன் கூர்மையான கத்தியால் எருதின் வயிற்றைக் கிழிப்பது போன்ற வலி ஏற்பட்டது. மேலும் மூச்சை அடக்கியதில் தீக் கங்குகளிலே உடலைப் போட்டு வதக்தவதுபோன்ற கொடிய எரிச்சல் உண்டாயிற்று. அந்த நிலையிலும் அவர் மன உறுதியைக் கைவிடவில்லை.

அப்போது தேவர்கள் சிலர், ‘துறவி கௌதமர் மாண்டு போனார்!’ என்றனர். சிலர், ‘இறக்கவில்லை ; இறக்கும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறார்!’ என்றனர். ஆனால் மற்றைத் தேவர்கள், ‘கௌதமர் இறக்கவுமில்லை; இறக்கும் நிலையை அடையவுமில்லை. துறவி கௌதமர் ஓர் அருகத்து. அருகத்தின் நிலை இது தான்!’ என்றனர்.

இதன் பிறகு கௌதமர் உண்ணா விரதத்தை ஆரம்பித்தார். முதலில் சொற்ப ஆகாரத்துடன் ஆரம்பித்துப் பின்பு அறவே நிறுத்திவிட்டார். அந்தக் கொடிய விரதத்தினால் விளைந்த பயனை அவர் மொழிகளிலேயே கூறிவிடுதல் நலமாகும்:

‘என் உடல் முற்றிலும் தளர்ந்து போகும் நிலையை அடைந்தது. போஷிப்பு இல்லாததால் அங்கங்கள் நாணல் குச்சிகளைப் போல் ஆகி விட்டன. பின்புறத்துச் சதைகள் வற்றி எருதின் குளம்பு போல் ஆகிவிட்டன. முதுகெலும்பும் போஷிப்பின்றி முடிச்சு முடிச்சாக வெளியே துருத்திக் கொண்டிருந்தது. வளர்ச்சிக்கு இடமில்லாமல், என் விலா எலும்புகள், இடிந்துபோன வீட்டுக் கூரையின் குச்சிகள் இங்கொன்று அங்கொன்றாகக் குறுக்கிலும் நெடுக்கிலும் வீழ்ந்து கிடப்பது போலக் காணப்பட்டன. போஷிப்பு இல்லாததால் கண்ககள் குழி விழுந்து போயின. ஆழமான கிணற்நிலன் அடியில் தண்ணீர் தெரிவது போல் அவைகள் பள்ளத்தில் வீழ்ந்திருந்தன. காற்றிலும் வெயிலிலும் காய்ந்த கும்மட்டிக்காய் சுருங்காது போல், என் தலையின் தோல் வாடிச் சுருங்க விட்டது. போஷிப்பில்லாததாலேயே! இப்படி நேர்ந்தது.

வயிற்றின் தோலைத் தொட்டுப் பார்க்கலாம் என்று பார்த்ததில், கையில் என் முதுகெலும்பு தட்டுப்பட்டது. முதுகெலும்பைத் தொட்டுப் பார்க்கலாம் என்று பார்த்தால், என் வயிற்றின் தோல் அகப்பட்டது. வயிறும் முதுகும் அப்படி ஒன்றோடொன்று ஒட்டிப் போய்விட்டன.

‘மல மூத்திரம் கழிக்கலாம் என்று எழுந்திருந்தபோது, அப்படியே அதேயிடத்தில் நான் சுருண்டு விழுந்ததுவிட்டேன். . அங்கங்களைத் தடவிக் கொடுக்கலாம் என்று தடவுகையில், உடலின் ரோபங்கள் முளையோடு கிளம்பி உதிர்ந்து விட்டது. இவையெல்லாம் போஷிப்பினமையால் ஏற்பட்டன.’

பொன்மயமான அவருடைய நிறமும் மாறிக் கறுத்து விட்டது. உடலின் பரிசுத்தமும் பளபளப்பும் நீங்க விட்டன.

அப்போது கௌத்தமர் எண்ணியவதாவது: ‘பழங் காலத்துத் தபசிகளும், பிராமணர்களும் அநுபவித்த கூர்மையான, வேதனையான, துக்ககரமான, கொடூரமான துன்ப உணர்ச்சிகளைப் பார்க்கிலும் எனக்கு ஏற்பட்ட வேதனைகள் எவ்வளவோ அதிகமாகவே இருக்க வேண்டும். எதிர்காலத்தில் மற்றவர்கள் தாங்கக்கூடிய வேதனை உணர்ச்சிகளைக் காட்டினும் என் வேதனை உணர்ச்சிகள் மிக அதிகமாகவே இருக்கவேண்டும். இப்போது பிறர் தாங்கும் உணர்ச்சிகளைக் காட்டிலும் என்னுடையவை மிக அதிகமாகவே இருக்கும். ஆயினும், இத்தகைய கொடூரமான, துக்ககரமான வழியிலும், அழியும் வாழ்வுக்கு மேற்பட்ட உண்மையான ஆரிய மெய்ஞ்ஞானத்தையும் உள்ளொளியையும் நான் பெற முடியவில்லை. மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு இதைத் தவிர வேறு வழி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.[9]

கௌதமருக்குத் தம்முடைய சிறு வயதிலே நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. கபிலவாஸ்துவில் அவர் தந்தையாகிய சாக்கிய மன்னர் மற்றைப் பரிவாரங்களோடு பொன் ஏர் கட்டி உழுது கொண்டிருக்கையில், அவர் நாவல் மரத்தடியில் தனியே தியானத்தில் அமர்ந்திருந்ததை இப்போது எண்ணிப் பார்த்தார். அந்தச் சமயத்தில் அவர் அறிவு தெளிவாயிருந்தது; உடலும் களைப்பின்றி ஊக்கமாயிருந்தது. அதை எண்ணிப் பார்க்கையில், உண்ணா நோன்பினால் உடல் தளர்ந்து போவதால், அற்ப ஆகாரமேனும் உட்கொள்ளவேண்டியது அவசியம் என்று அவருக்குத் தோன்றிற்று. சதைகளெல்லாம் கரைந்து, உதிரம் சுண்டி, உடல் வெறும் எலும்புக் கூடாக இருந்த நிலையில், அவர் பட்டினித் தவத்தைக் கைவிட வேண்டும் என்றும், அரிசிக் கஞ்சியேனும் அருந்த வேண்டும் என்று தீர்மானித்தார்.

ஆசைகளை அடக்கிப் பூரண ஞானம் பெறுவதற்கு இது வழியன்று; ஜம்பு மரத்தடியில் சிறு வயதில் நான் கண்ட முறையே சரியான முறை. உடல் வலியை இழந்தவன் உண்மை ஞானத்தைப் பெற முடியாது. பசியாலும், தாகத்தாலும், களைப்பாலும் வாடிய ஒருவன் மன நிலை குலைந்து பின் சாந்தியோடிருக்க முடியாது; பூரணமான அமைதியைப் பெற்றாலன்றி, மனத்தினாலேயே அடைய வேண்டியதாயுள்ள முடிவை அவன் எப்படி அடைய முடியும்? புலன்களை இடை விடாமல் திருப்தி செய்யத்தான் வேண்டியிருக்கிறது: அவைகளை அமைதியாக வைத்துக் கொண்டாலே சித்தமும் தன்னிலையில் நிற்கும். அமைதியுற்ற மனமே தியானத்திற்கு ஏற்றது; தியானத்தின் மூலமே அடைவ தற்கு அரிய, ‘அழிவற்ற, நிலையான சாந்தியை அடைய முடியும்!’[10] என்று அவர் முடிவு செய்தார்.

வீணையின் தந்திகள் அதிகமாக முறுக்கேறினால் அறுந்துபோம்: அதிகமாக நெகிழ்ந்திருந்தால் அவற்றில் இசை பிறக்காது; ஆதலால் அவற்றை முறுக்கேற்றாமலும், நெகிழவிடாமலும் நடுநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதுபோல், உடலாகிய வீணையையும் நிதான நிலையில் வைத்துக் கொண்டாலே அறிவாகிய இன்னிசை பிறக்கும் என்பது அவருக்குத் தெளிவாகி விட்டது. இந்தத் தெளிவே பிற்காலத்தில் அவருடைய பௌத்த தருமத்திற்சூ அடிப்படையான தத்துவமாக அமைந்தது. இதனாலேயே இவருடைய தருமத்திற்கு ‘நிலையான மார்க்கம்’ என்ற கருத்துள்ள ‘மஜ்ஜிம படி பதா’ என்ற பெயருண்டாயிற்று.

மெல்ல மெல்ல நடந்து அவர் நைரஞ்சரை நதியை அடைந்து நீரில் குளித்தார். ஆனால் உடல் நைந்து துவண்டிருந்ததால், அவர் நீரை விட்டு வெளியே கரையேற முடியவில்லை. அருகேயிருந்த மரக் கொப்புக்களைப் பிடித்துக் கொண்டு ஒருவாறு கரையேறினார். பின்பு பக்கத்திலிருந்த ஓர் அரசமரத்தடிக்குச் சென்று அங்கே சிறிது நேரம் வீற்றிருந்தார்.

சுஜாதை அளித்த உணவு

அந்த நேரத்தில் அழகும் குணமும் ஒருங்கே அமைந்த ‘நந்தபாலா’ என்ற சுஜாதை ஆனந்தத்தோடும் ஆச்சரியத்தோடும் அவ்விடத்திற்கு வந்து அமலரைக் கண்டாள். ஒரு கையால் தன் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு, மற்றொரு கையில் ஒரு பொற் கிண்ணத்தில் பாலில் வெந்த பொங்கலை ஏந்திக் கொண்டிருந்தாள். மரத்தின் அடியில் பணிப்பெண் ஒருத்தி களம் மெழுகிக் கோலமிட்டு வைத்திருந்தாள்.

சுஜாதை என்ற சுகுண சுந்தரி அருகேயிருந்த சேனானி கிராமத்துத் தலைவனின் மனைவி. செல்வமும் சிறப்பும் பெற்று அவ்விருவரும் இல்வாழ்க்கை நடத்தி வருகையில் எளிமையும், பொறுமையும், இரக்கமுமுடைய அம்மாதரசி தனக்குக் குழந்தையில்லையே என்று கவலையடைந்து, பல தெய்வங்களுக்கும் நேர்ந்து கொண்டாள். ஆண் குழந்தை பிறந்தால் தங்கக் கிண்ணத்தில் பாலமுது படைத்து வணங்குவதாக அருகேயிருந்த காட்டின் தெய்வத்தையும் வேண்டிக் கொண்டாள். அவளுக்குப் பொற் சிலை போன்ற புத்திரன் பிறந்து மூன்று மாதமாயிற்று. உடனே முன் நேர்ந்து கொண்டபடியே அவள் இனிய அமுது தயாரித்துக் கொண்டு, காட்டுத் தெய்வத்திற்கு அதைப் படைப்பதற்காகக் குழந்தையுடன் புறப்பட்டு வந்தாள். அவளுடைய பணிப்பெண் முன்னாலேயே வந்து இடத்தைச் சுத்தம் செய்கையில், மரத்தினடியில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்த மாதவரைக் கண்டு, அவர் முகத்தில் தோன்றிய சோதியில் மயங்க, அங்கிருந்து ஓடிச் சென்று, சுஜாதையை எதிர்கொண்டு அழைத்து, வனத்தில் வாழும் தெய்வமே அருள் வடிவமாக மரத்தடியில் அமர்ந்திருக்கிறது!’ என்று அதிசயத்தோடு கூவினாள். அதைக் கேட்டுத்தான் சுஜாதை ஆவலோடு ஓடிவந்தாள்.

வந்தவள் வள்ளலைக் கண்டாள்; கண்கள் குளிர்ந்து; உள்ளமும் குளிர்ந்தாள். ‘பகவன்! இந்த இன்னமுதை அருந்தி அருள் செய்யவேண்டும்!’ என்று கூறி, பொற் கிண்ணத்தை அவர் அடியில் வைத்து, உள்ளம் குழைந்து வணங்கி நின்றாள். அன்பும் அறிவும் நிறைந்த அந்த அழகுச் செல்வி அங்கேயிருந்து பார்த்து அகம் மகிழும் வண்ணம், அகளங்க மூர்த்தியும் அவள் படைத்த அமுதை அருந்தி இன்புற்றார்.[11] வாடி இளைத்து அவர் வருந்திய களைப்பெல்லாம் மாறிவிட்டது: ஊக்கமும் ஒளியும் தோன்றின. அழகு பொலியும் திருவதனத்தோடு, அவர் சுஜாதையை வாழ்த்தியருளினார். அவள் மார்போடு அணைத்திருந்த மதலையின் உச்சியில் கைவைத்து, ‘செல்வ! நீ நெடுநாள் இன்புற்று வாழ்வாயாக!’ என்று ஆசி கூறினார். அதன் பின் தாம் யார் என்பதையும் சுஜாதைக்கு விளக்கிக் கூறினார்.


‘காணுதற் கரிய கடவுள் யானலன்;
மண்ணிற பிறந்த ஓர் மனிதனே, அம்மா!
ஆதியில் உலகாள் அரசிளங் குமரன் ;
இந்நாள்,
வையக மாந்தர் மன இருள் போக்கும்
உண்மை ஞான ஒளியினைத் தேடி
ஆறாண் டாக, அல்லும் பகலும்
அலைந்து திரியும் ஆண்டியும் ஆவேன் !
... ... ... ...
ஒப்பிலாச் சுத்த உணவாம் இதனை
உண்டு தெளிந்த உடலைக் கண்டபின்
உண்மையை அறிவதும் உறுதி யாம் எனச்
சிந்தையில் நன்கு தெரிந்து கொண்டனன் !”

பிறகு அவர் அம்மங்கையின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். கோடி கோடியான இந்தியப் பெண்களைப் போலவே, தானம், தருமம் முதலியவற்றில் நம்பிக்கை கொண்டு, கொழுநனையே தெய்வமாக வணங்கி, தூய சிந்தனையுடன் வாழ்க்கையின் துயரங்களை மறந்து, நன்மை செய்தார்க்கு நன்மையே விளையும் என்ற நம்பிக்கையுடன் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் கதையைக் கேட்ட கௌதமர்,


‘அறிவிற் பெரிய ஆசிரி யர்க்கும்
அறிவு புகட்டும் நல் அறிவுடை யவள் நீ !’

என்று பாராட்டிப் புகழ்ந்தார். அவளைப் போன்ற மெல்லிய மலர்கள் நிழலிலேயே பூத்து மலர வேண்டும் என்றும், சத்தியத்தின் பேரொளி அவளைப் போன்ற இளந்தளிர்களை வாடச் செய்துவிடும் என்றும் அவர் எண்ணினார். ‘உன் எண்ணம் நிறைவேறியது போலவே, விரைவிலே நானும் என் சித்தியை அடைவேன் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்து விட்டது! என் கருத்து நிறை வேற வேண்டும் என்று நீயும் என்னை வாழ்த்திவிட்டு செல்வாயாக!’ என்று அவர் கேட்டுக் கொண்டார். அவளும் அவர் சிந்தையின் எண்ணம் சித்தியடையும்படி வாழ்த்திவிட்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றாள்.

கௌதமருடைய வாழ்க்கையில் அவர் எண்பது ஆண்டுகள் உண்ட உணவுகளில், இரண்டு உணவுகளையே அவர் மிகவும் பாராட்டிப் போற்றியிருக்கிறார். அவ்விரண்டில் ஒன்று அன்று சுஜாதை அளித்த அமுதமாகும். அதன் பெருமை சொல்லுந் தரமன்று. கௌதமர் ஞானமடையுமுன் அருந்திய கடைசி உணவு அதுவேயாகும்.

கடைசி முயற்சி

தெளிந்த அறிவும், திடமான மனமும் பெற்று அவர் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று, அன்று, பகற் பொழுதைச் சால மரங்கள் அடர்ந்திருந்த ஒரு சோலையிலே கழித்து விட்டு, மாலை நேரத்தில் ஆற்றோரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மற்றொரு பெரிய அரச மரத்தின் அடியை அடைந்தார். அந்த மரமே ‘பணை ஐந் தோங்கிய பாசிலைப் போதி’[12] என்றும், ‘மகாபோதி’ என்றும் பின்னால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உலகப் புகழ் பெற்று வரும் அசுவத்த மரம். பசும்புல் படர்ந்திருந்த அதனடியிலே அமர்ந்து கொண்டு கௌதமர் தமது முடிவான பெருந்தவத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தார். அப்போது புல் அறுக்கும் சுவஸ்திகா (பாலியில் சோத்தியா) என்பவன் அவ்வழியாக வந்து, அவரைச் சந்தித்து, எட்டுக் கைப்பிடி அளவு புல்லை அவருக்கு அளித்தான். அவர் அப்புல்லை மரத்தடியில் பரப்பிக் கொண்டு அதன் மீது கிழக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

அவரோடு வாழ்ந்து வந்த ஐந்து தபசிகளும், அவர் தவத்தின் மூலம் காணும் உண்மையைத் தமக்கும் உரைத்தருளுவார் என்று அதுவரை நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் பட்டினித் தவத்தை முறித்து, உணவு உண்டு விட்டார் என்பதை அறிந்ததும், அவர்கள் அவர் மீது வெறுப்புற்று, அவரைத் தனியே விட்டு விட்டு வேறிடத்திற்குப் போய்விட்டனர்.

  1. இவருடைய தந்தையின் பெயர் இராமர் என்பதால், இவரை உருத்திரக ராமபுத்திரர் என்று கூறுவதுண்டு; பாலியில் உத்தக ராம புத்தா என்பர்.
  2. ‘மகா வக்கம்.’
  3. 3.0 3.1 மிலிந்தன் பிரச்னைகள் (மிலிந்த பன்ஹா )
  4. ‘மிலிந்தன் பிரச்னைகள் (மிலிந்த பன் ஹா)’
  5. இக்காலத்தில் பல்குனி ஆறு என்று அழைக்கப் பெறுகின்றது; இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் புனிதத் தலமாகிய கயை நகரம் இதன் கரையிலுள்ளது.
  6. இதை ஞான ஆரணியம் என்பர்.
  7. ‘மஜ்ஜிம நிகாயம்-அரியபரியேசன சூத்திரம்’
  8. மஜ்ஜிம நிகாயம்-மகா சச்சக சூத்திரம்’
  9. ‘மஜ்ஜிம நிகாயம் - மகா சச்சக சூத்திரம்’
  10. அசுவகோஷரின் ‘புத்த சரிதை’
  11. சுஜாதை அளித்த பொற்கிண்ணத்தை அப்படியே ஆற்றுக்கு எடுத்துச் சென்று, அங்கே, அமுது செய்து விட்டு அந்தக் கிண்ணத்தைக் கௌதமர் ஆற்றில் மிதக்க விட்ட தாயும், ‘இன்று நான் புத்தர் ஆக முடிந்தால்’ இந்தக் கிண்ணம் வெள்ளத்தை எதிர்த்துச் செல்லட்டும், என்று கூறிய தாயும், அவ்வாறே அந்தக் கிண்ணம் எண்பது பாக நீளம் வரை எதிர்த்துச் சென்று, ஒரு பெரிய சுழியில் தங்கி, நீருள் ஆழ்ந்து ‘நாக உலக மன்னன் காலா என்பவன் இருக்குமிடத்தை அடைந்தாயும் புத்த ஜாதகக் கதை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.
  12. சிலப்பதிகாரம்