போதி மாதவன்/நந்தன்
பதினான்காம் இயல்
நந்தன்[1]
‘எறும்புகடை அயன்முதலா
எண்ணிறந்த என்றுரைக்கப்
பிறந்திறந்த யோனிதொறும்
பிரியாது சூழ்போகி
எவ்வுடம்பில் எவ்வுயிர்க்கும்
யாதொன்றால் இடர்எய்தின்
அவ்வுடம்பின் உயிர்க்குயிராய்
அருள்பொழியும் திருவுள்ளம்!”
- வீரசோழியம் உரை
உதய சூரியனைப்போல் கபிலையம்பதியில் புத்தர் பெருமான் அறியாமை இருளை அகற்றி ஒளிபரப்பிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய அருமைத் தம்பியாகிய நந்தன், புதிதாக மணமாகியிருந்த தன் மனைவியுடன், தனது புதிய அரண்மனையின் மாடியிலே கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தான். நந்தன் அழகிலே சிறந்த ஆடவர் திலகம் அவன் மனைவி சுந்தரி அழகிலே அவனுடன் போட்டியிடுபவளாக இருந்தாள். கற்பகத்தின் பூங்கொம்புபோல் விளங்கிய அவளுடைய உடலில் அணிந்திருந்த நவரத்தினங்கள் இழைத்த நகைகள் அவள் எழிலால் அழகு பெற்று விளங்கின. அவளைப் பார்த்தால் மலர்கள் நிறைந்த பூம்பொய்கையைப் பார்ப்பது போலிருக்கும். அவள் புன்னகையைக் கண்டு அன்னங்கள் ஓடிவரும்; கண்களைக் கருவண்டுகள் வட்டமிடும்; ஓங்கி யெழும் மார்பைக் கண்டு தாமரை முகைகள் தலை கவிழும்.
காதலர் பிரிவு
ஒரு சமயம் அரண்மனை மாடியிலே நந்தன் கண்ணாடி பிடித்து நிற்க, அவன் காதலி அதைப் பார்த்தவண்ணம் தன் முகத்தைச் சிங்காரித்துக் கொண்டிருந்தாள். அப்போது நந்தனுடைய மூச்சு கண்ணாடியில் பட்டுவிட்டது. உடனே அவள் கோபமடைந்து, அருகிலிருந்த தாமரை மலரை எடுத்து அதைக்கொண்டு அவனை அடித்தாள். நந்தன் பேரானந்தமுற்றுக் கண்ணாடியை ஒழுங்காகப் பிடித்து நின்றான்.
அந்த நேரத்தில் அந்த அரண்மனையில் பிச்சை ஏற்பதற்காகப் புத்தர் பிரான் உள்ளே நுழைந்து பார்த்து, எவரும் தம்மைக் கவனியாததால், வெளியேறிச் சென்றார். பணிப்பெண்கள் பலரும் பல வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், எவரும் அவர் வரவைக் கவனிக்கவில்லை. சில பெண்கள் சுண்ணம் இடித்துக்கொண்டிருந்தனர்; சிலர் பட்டு உடைகளுக்கு வாசனைத் திரவியங்கள் போட்டுக்கொண்டிருந்தனர்; சிலர் அறைகளைச் சிங்காரித்துக்கொண்டிருந்தனர்; ஒவ்வொருவரும். ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் மாடியிலிருந்து வெளியே பார்த்த ஒரு பெண் ஐயன் அரண்மனையிலிருந்து திருவோட்டுடன் வெளியேறுவதைக் கண்டுவிட்டாள். பெருமானிடம் நந்தனுக்கு அளவற்ற அன்பும் மரியாதையும் உண்டென்பதை அறிந்த அவள், உடனே அவனிடம் ஓடிச்சென்று செய்தியைக் கூறினாள். நந்தன் அதைக் கேட்டு என்ன செய்வதென்று தோன்றாமல் செயலற்று நின்றான். உடனே இருகைகளையும் கூப்பிச் சுந்தரியை வணங்கி, வெளியே சென்று வர விடை கேட்டான. அண்ணல் அரண்மனையில் அமுது பெறாமல் வெறுங்கையோடு வெளியேறியதைக் கேட்டு, அவளும் மனமிரங்கி அனுமதி கொடுத்தாள். ஆனால் தான் நெற்றியில் வைத்த பொட்டுக் காய்வதன் முன்னம் அவன் விரைந்து வரவேண்டும் என்று சொல்லியனுப்பினாள்.
நந்தன் தன் அணிகளும் ஆடைகளும் அசைந்தாடக் காற்று உலுக்கிய கற்பகமரம் போல் கீழே இறங்கி ஓடிச் சென்றான் பின்னர் நடை தளர்ந்துவிட்டது. ஒரு பக்கத்திலே ஐயனிடம் அவனுக்குள்ள மரியாதை அவனை முன்னால் இழுத்துச் சென்றது; மற்றொரு புறத்திலே காதலியின் கடைக்கண் பார்வை அவனைப் பின்னுக்கு இழுத்தது. உள்ளத்தில் உறுதியில்லாமல் அவன் தத்தளித்தான். பிறகு ஒருவாறு முன்நோக்கி விரைந்து, பல தெருக்களையும் தாண்டிச் சென்றான்.
தந்தனின் தடுமாற்றங்கள்
வழியிலே சாக்கியர் பலர் கூடியிருப்பதை அவன் கண்டான். குதிரைகளிலும், தேர்களிலும் ஊர்ந்து வந்தவர்கள் அனைவரும் கீழே இறங்கிப் போதிநாதரை வணங்கிக் கொண்டு நின்றனர். அந்தப் பெருங்கூட்டத்திலே நந்தன் நுழையவில்லை; வெளியேயிருந்து கொண்டே உலக நாயகருக்கு நடைபெறும் மரியாதைகளைக் கண்டு உள்ளம் மகிந்து நின்றான். சிறிது நேரத்திற்கெல்லாம், அவன் விரைவில் திரும்ப வேண்டும் என்ற சுந்தரியின் ஆணை நினைவுக்கு வந்துவிட்டது. அவன் மெதுவாக அங்கிருந்து வெளியேறி, ஒரு சந்தின் வழியாகத் திரும்பிச் சென்றான்.
பெருமான் அன்று சகோதரனுக்கு நல்லறிவு புகட்ட வேண்டும் என்று புறப்பட்டவராதலால், நந்தன் நழுவிச் செல்வதை உள்ளத்தில் உணர்ந்து, தாமும் கூட்டத்தை விட்டு வெளியேறி, விரைவாகக் தம்பியைத் தொடர்ந்து சென்றார்
நந்தன் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கையில், அருள் முனிவர் தன்னைத் தொடர்ந்து வருவதைக் கண்டு, திரும்பி வந்து அவரை வணங்கினான். ‘நான் அரண்மனை மாடியிலிருந்தபோது தாங்கள் வந்தீர்களாம். அரண்மனையில் தங்களை வரவேற்கும் பேறு எனக்குக் கிடைக்காமற் போய்விட்டது! இப்பொழுது நண்பகலாகிவிட்டதால் என்னுடன் வந்து அமுது செய்ய வேண்டுகிறேன்!’ என்று வள்ளலை அன்புடன் அழைத்தான்.
ததாகதர் பசியில்லையென்று சமிக்கையால் காட்டினார். நந்தன் மீண்டும் அவரை வணங்கிவிட்டுப் புறப்பட ஆரம்பித்தான். அண்ணல் தமது பிச்சைப் பாத்திரத்தை, அவன் கையிலே கொடுத்தார். அதைக் கையில் வாங்கி வைத்துக் கொண்டே, அவர் வேறு திசையில் எதையோ பார்த்து நிற்கையில், நந்தன் மெல்ல அரண்மனை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால் அவனால் அந்தச் சந்தைக் கடந்து செல்ல முடியவில்லை. அவன் மேலே நடக்க முடியாமல் அண்ணலின் ஆற்றல் அவனைத் தடுத்து நின்றது. உலகத்தின் துன்ப வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கு இன்றியமையாத அறிவு அவனிடம் குறைந்திருப்பதையும், புலன் இன்பங்களிலே அவன் உள்ளம் வெறிகொண்டு மூழ்கியிருப்பதையும் எண்ணி, ஐயன் தமது மகிமையால் அவனைத் தம்மோடு வருமாறு கட்டாயப்படுத்தினார்.
நந்தன் வருத்தத்தோடு மெல்லத் தொடர்ந்து சென்றான். அரண்மனையிலே சுந்தரி தன் வரவை எதிர்பார்த்துத் துடித்துக்கொண்டிருப்பாளே என்றும், அவள் திலகம் அவ்வளவு நேரத்திற்குள் காய்ந்திருக்குமே என்றும் கவலையுற்றான். முடிவில் இருவரும் நியக்குரோத வனத்தை அடைந்தனர்.
காமம், மோகம் முதலியவைகளை அழித்து, அறம் ஆனந்தத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் அறப் பள்ளியை அடைந்ததும், ததர்கதர் தரும சக்கரம் பொறித்திருந்த தமது. கரத்தால் தம்பியின் தலையைத் தடவிக் கொடுத்து, அருகே அமரும்படி சொன்னார். பிறகு அவன் அறிய வேண்டிய நீதிகளை முறைப்படுத்திக் கூறலானார் :
‘அன்ப! இந்த உடல் வர்ணம் தீட்டிய பொம்மை! இது புண்கள் நிறைந்தது. இந்த உடல் நலிந்து தேய்வது. இது நோய்களின் கூடு; மிகவும் நொய்மையானது. இந்த அசுத்தக் குவியல் உடைந்து சிதறிப் போகும்; வாழ்வின் முடிவு சாவு தான்! ஆதலால் உண்மையான சாந்தியைப் பெறுவதற்கு நீ முயல வேண்டும்.
‘கனவு போன்ற நிலையில்லாத காதல் இன்பத்திலிருந்து உள்ளத்தை விடுவித்து ஒருநிலைப் படுத்த வேண்டும். தீயைக் காற்றினால் அவிக்க முடியுமா? அதுபோல் காம ஆசைக்கு இடம் கொடுத்துத் திருப்தியடையவே முடியாது.
அறச் செல்வமே தலைசிறந்த செல்வம்; மெய்ஞ்ஞானத்தின் சுவையே தெவிட்டாத தீஞ் சுவை; அகத்தின் நிறைவே ஆனந்தம்.
‘நீதியான நல்வாழ்வை நாடி இடைவிடாது செய்யும் முயற்சியே முதன்மையான பயனை அளிக்கும்.
‘மனிதன் அழகை அழிப்பதில் முதுமைக்கு இணை வேறில்லை; துன்புறுத்துவதில் நோய்க்கு இணை வேறில்லை; அபாயங்களில் மரணத்தை விட வேறு என்ன இருக்கிறது? நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இவை ஏற்பட்டே தீரும்.
‘பற்று பெரிய விலங்கு; ஆசை பெரிய வெள்ளம்; காமம் பெருநெருப்பு-உலகிலே இந்த மூன்றும் இல்லாதிருந்தால்தான், உனக்கு இன்பம் நிலைத்திருக்கும்.
‘ஒருவனுடைய அன்புக்கு உரியவர்களிட மிருந்து பிரிவு ஏற்பட்டே தீரும்; துக்கமே தவிர்க்க முடியாத அனுபவமாயிருக்கிறது.
‘ஆதலால் ஞானம் என்னும் கவசத்தை நீ அணிந்து கொள். பொறுமையுள்ளவன் மீது துக்கத்தின் அம்புகள் பாயமுடியாது. சிறு நெருப்பை மூட்டிப் பெரிய புற்குவியலை எரியச் செய்யலாம்; அதுபோல் பிறவியை ஒழிப்பதற்கு உனக்குள்ள வீரியத்தைத் தூண்டிக்கொள்!
‘பச்சிலை வைத்திருப்பவனைப் பாம்பு தீண்டாது; உலகப் பற்றைத் துறந்தவனை–மாயையை வென்றவனைத் துக்கமாகிய பாம்பு தீண்ட முடியாது.
�'தியானத்தினாலும், சமாதியாலும் முடிவான உண்மையை உணர்ந்து கொள்பவன் மரணத்திற்கு அஞ்சமாட்டான்; போர் முறைகளில் சேர்ந்தவன் இரும்புக்கவசம் அணிந்து, நல்ல வில்லும் ஏந்தி வெற்றிக்காகப் போராடுபவன்-யுத்த காலத்திலே சோர்வுற மாட்டான்!’
போதம் விளைக்கும் இப்பொன்மொழிகளைக் கேட்ட நந்தன் உற்சாகமான உரத்த குரலில், ‘நல்லது!’ என் றான்; ஆனால் அவன் உள்ளம் தளர்ந்திருந்தது.
பெருமான் ஆனந்தரை அழைத்து, ‘ஆனந்தா! நந்தன் உளச்சாந்தி பெறுவதற்காக அவனுக்குக் கஷாயமளித்துச் சங்கத்தில் சேர்த்துக் கொள்!’ என்று கூறினார்.
நந்தன் ஆனந்தருடன் போகும் வழியில், ‘நான் பிக்குவாக விரும்பவில்லை!’ என்றான். உடனே ஆனந்தர் அவன் கருத்தைப் பகவரிடம் வந்து கூறினார்.
புத்தர் மீண்டும் நந்தனுக்கு உபதேசிக்கலானார் :
‘உன் தமையனாராகிய நானே துறவியாகி விட்டேன்! உன் சகோதரர்கள் பலரும் என்னைப் பின்பற்றி வந்துவிட்டனர்! நம்முடைய அரச வமிசத்தில் பூர்வத்தில் எத்தனையோ மன்னர்கள் ஆசாபாசங்களை அறுத்துக் கொண்டு மனச் சாந்தி பெறுவதற்காகத் துறவு பூண்டிருந்தார்கள் கொள்ளை நோய் பரவியுள்ள நாட்டிலே உயிரில் ஆசையுள்ளவர் எவரும் தங்கியிருக்க மாட்டார். தான் சாக வேண்டும் என்று கருதுவோனே தங்கியிருப்பான். அவனைப் போல நாமும் நடந்து கொள்ளலாமா? தீப்பற்றி எரியும் வீட்டில் அமைதியுடன் தூங்க முடியுமா? நோய், வயோதிகம் என்னும் கொழுந்துகளுடன் எரியும் மரணத் தீயால் வெந்து கொண்டிருக்கும் உலகை விட்டு வர உனக்கு மனமில்லையா? தூக்கு மேடைக்குச் செல்லும் மனிதன் குடிவெறியில் ஆனந்தக் கூத்தாடி ஆர்ப்பரிப்பது போல, மரண வலைக்குள் சிக்கிய மனிதன் அதை உணராமலிருந்தால் வருந்தத்தக்க விஷயமேயாகும்.
‘உலகம் நிலையற்றது என்பதை உணர்ந்து கொள்! இது ஒரு மாயை! - துக்க வலையை அறுத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்று உனக்கு விருப்பமிருந்தால் மயக்கத்தைக் கைவிடு! - உன் காதலியிடம் கொண்டுள்ள மயக்கத்தை முதலில் நீக்க வேண்டும், மரணம் வந்து அழைப்பதன் முன்னம், இளமை இருக்கும்போதே, மகோன்னதமான நன்மையைப் பெறுவதற்கு உள்ளத் துணிவு கொண்டு எழுவாய், எழுந்து உரிய செயல்கள் கொள்வாயாக!’
நந்தன் அவர் உத்தரவுப்படியே நடப்பதாக உறுதி கூறினான். ஆனந்தர் அவனை அழைத்துச் சென்று அவன் தலைமுடியை மழிக்க ஏற்பாடு செய்தார். அப்போது தான் சிறைப்பிடித்து வரப்பெற்ற காட்டு யானை கலங்குவது போல், அவன் கலங்கிக் கண்ணீர் பெருக்கிக் கொண்ருந்தான். தலை முண்டிதமாயிற்று; காவியுடையும் தரிக்க நேர்ந்தது!
சுந்தரியின் நிலை
அரண்மனையிலே சுந்தரி வழிமேல் விழிவைத்து நெடு நேரம் நாயகன் வரவை எதிர்பார்த்திருந்தாள் அவனைக் காணாமையால் தன் அணிகளைக் களைந்தெறிந்து, மலர்களை உதிர்த்து விட்ட செடிபோல், மலரமளியிலே சாய்ந்திருந்தாள். கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. பணிப்பெண்களின் காலோசை கேட்ட போதெல்லாம் அவளுடைய கண்கள் அறையின் வாசலைப் பார்த்தன. நாயகன் வரவில்லை; அவள் உள்ளத்தில் கோயில் கொண்டிருந்த நந்தனைக் காணவில்லை !
நந்தன் ஏமாற்றுவானா? வேறு யாரோ ஒரு காதலியை நாடிப் போயிருப்பதால்தான் தன்னை அவன் வஞ்சிக்கத் துணிந்தான் என்று அவளுக்குத் தோன்றிற்று. ‘எவளையோ போய்ப் பார்ப்பதற்காகப் புனிதமான பகவரின் பெயரைச் சொல்லிக்கொண்டு போயிருக்கிறான், அந்த முனிவரிடம் உண்மையான பக்தியுள்ளவர் எவரும் பொய் கூறத் துணியார். இப்போது நந்தன் வேறு எவளுக்கோ கண்ணாடி பிடித்துக்கொண்டு நிற்கிறான்!’ என்று அவள் எண்ணினாள். இவ்வாறு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி யெண்ணி அவள் நெஞ்சம் புண்ணானாள்.
அந்நிலையில் பணிப்பெண் ஒருத்தி ஓடிவந்து, ‘இளவரசர் தலையைச் சிரைத்துக்கொண்டு பிக்குவாகி விட்டாராம்! அவர் அழுது புலம்பிக் கொண்டேயிருக்கையில், அவருடைய அண்ணா–ததாகதர்–அவரைத் துறவியாக்கி விட்டாராம்!’ என்று கூறினாள்.
சுந்தரிக்கு வாழ்வே இருண்டுவிட்டது போலாயிற்று. அவள் உள்ளமுடைந்து அமளியிலிருந்து கீழே தரையிலே உருண்டுவிட்டாள். கனிகளின் கனம் தாங்காமல் முறிந்து வீழ்ந்த மலர்க்கொம்புபோல் அவள் தரைமீது கிடந்து துவண்டு கொண்டிருந்தாள். கண்ணீரால் கண்கள் சிவந்தன. உள்ளத்தின் துயரம் உடலை உலுக்கிக் கொண்டிருந்தது.
தாமரைத் தளம் போன்ற கண்கள், தாமரை முகம், செந்தாமரைபோன்ற சிவந்த வண்ணமுள்ள துகில் ஆகிய வற்றுடன் ஒரு மலர்மாலை வெய்யிலில் காய்ந்து வாடுவது போல், அவள் முடங்கிக் கிடந்தாள். தரைமீது வீழ்ந்த திருமகளின் தங்கச் சிலை போலிருந்தது அவள் தோற்றம். அந்த அறையிலே தன் நாயகனுடைய அணிகளையும் ஆடைகளையும் பார்க்கும் போதெல்லாம் அவள் உள்ளம் பற்றியெரிந்தது. தான் மீட்டும் வீணையை அவள் பார்த்ததும், தன் இதய வீணையின் தந்திகள் யாவும் அறுந்து கிடப்பதை எண்ணினாள்! அவளுக்கு எல்லாப் பொருள்களும் கைத்தன; வாழ்வே துயரமாகி விட்டது! அந்த நேரத்தில் அவள் என்ன செய்வதென்று தோன்றாமல், எழுவதும், அமர்வதும், அழுவதும், அரற்றுவதுமாகித் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டும், முகத்தை நகங்களால் பிராண்டிக் கொண்டும் கோரமாகக் குமுறிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய துயரங்களைக் கண்டு ஆற்றாத சேடியர் பலரும் அவளைச் சுற்றி அமர்ந்துகொண்டு, எத்தனையோ ஆறுதல் மொழிகள் கூறினார்கள். எதுவும் அவளது செவியில் ஏறவில்லை. விஷமுண்ட பாணம் நெஞ்சிலே பாய்ந்த பெண் யானைபோல அவள் பிளிறிக் கொண்டிருந்தாள்.
வயது முதிர்ந்த சேடி ஒருத்தி அவளுடைய நிலையைத் தெளிவிக்க விரும்பி, அண்டையிலே சென்று பேச ஆரம்பித்தாள். ‘அரச குலத்தில் உதித்த ஒரு ஞானியின் நாயகி நீ! உனது நாயகர் தருமத்தை மேற்கொண்டதற்காக நீ இப்படித் துயரப்படுதல் சரியன்று. உங்களுடைய இட்சுவாகு வமிசத்திலே துறவு பூண்டு பெருந்தவம் செய்யும் வழக்கம் இன்று நேற்று ஏற்பட்ட வழக்கமன்று. வீரச் சாக்கியர்கள் துறவு பூண்டால், அவர்களுடைய மனைவியர் கற்பே தங்கள் குலதனம் என்று காத்துப் போற்றி வருவார்கள். நீ அழுவதற்குச் சிறிதும் நியாயமேயில்லை. நந்தர் வேறொரு பெண்ணை இச்சித்துச் சென்றால், நீ அழலாம். துறவியாயிருக்கும்போது அவர் உறுதிகுலைந்து ஓடிவந்து விட்டாலும், நீ உட்கார்ந்து அழவேண்டியது தான். ஏனென்றால் நல்ல குடும்பத்திலே தோன்றிய நங்கைக்கு அதைவிட துக்கம் வேறில்லை! நல்லது நடந்து விட்டால், நாம் மனத்தைத் தேற்றிக் கொண்டு களிப்புற வேண்டுமே அன்றிக் கவலைப்பட்டு அழ வேண்டியதில்லை!’ என்று ஆணித்தரமான உண்மைகளை அவள் எடுத்துக் காட்டினாள்.
மற்றொருத்தி, ‘நந்தர் அங்கே நிலைத்திருக்க மாட்டார்! உன்னை எண்ணி விரைவிலே வந்துவிடுவார்!’ என்று ஆறுதல் கூறினாள்.
நந்தனின் கடைத்தேற்றம்
தவப்பள்ளியிலே நந்தன் வெளித்தோற்றத்திலே துறவியாகவும், அகத்திலே தன் காதல் தேவதையை உபாசித்துக் கொண்டும் இருந்ததால், அவனுக்கு அமைதியே ஏற்படாமற் போயிற்று. தன்னைச் சுற்றியிருந்த முனிவர்கள் அருமைக் காதலிகளைப் பிரிந்து எப்படித்தான் தனித்திருந்து தவம் செய்கிறார்களோ என்று அவன் அதிசயித்தான். ‘கொடிய உறுதியுடன் விரதம் மேற்கொண்ட துறவிகள் முன்னும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்! ஆயினும் காதலை அறுத்துக் கொண்டு வெளியேறுவது எளிதான செயலன்று! சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்களுடன் விளங்கும் காதலியின் மதிமுகத்தையும், குயில் போன்ற இனிய குரலையும் யாரும் எளிதில் மறந்துவிட முடியாது, கயிறு, மரம், இரும்பு முதலியவற்றால் செய்த விலங்குகளை எளிதில் தகர்த்து விடலாம்; ஆனால் காதல் விலங்கை உடைப்பது கடினம்!’ என்றெல்லாம் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். புத்தரின் நினைவும், போக ஆசையும் அவனை மாறிமாறி அலைத்துக் கொண்டிருந்தன.
‘நான் தான் வீட்டைவிட்டு வெளியேறினேன்; ஆனால் என் காமக் குரோதங்கள் உள்ளத்தைவிட்டு வெளியேற வில்லையே! பழைய ஆடையைக் களைந்தெறிந்தேன்; ஆயினும் பாவப் போர்வை என்னைவிட்டு அகலவில்லையே! எனக்குத் தெள்ளிய அறிவும், திடமான சித்தமும் வாய்க்கவில்லையே! நான் என் செய்வேன்!’ என்று அவன் ஏங்கி, மீண்டும் அரண்மனைக்கே திரும்ப ஆசைகொண்டான். இல்லறமும் இல்லாமல், துறவறமும் இல்லாமல், நடுவிலே ஊசலாடிக் கொண்டிருத்தல் அவனுக்குப் பெரும் வேதனையாகி விட்டது.
புத்தரும் வெளியே பிச்சைக்குப் போயிருந்தார். நந்தன் துறவைத் துறந்து, தவத்திற்கு விடைகொடுத்து விட்டுக் கிளம்பத் தீர்மானித்தான்
அவன் உள்ளப் போக்கை அறிந்து கொண்ட பிக்கு ஒருவர், அவன் அருகில் வந்து அமர்ந்து, அரிய நீதிகள் பலவற்றை எடுத்துச் சொன்னார். ‘உன் கண்ணீர்த் துளிகள் உன் உள்ளத்தின் அறியாமையை வெளிக்காட்டு கின்றன. உணர்ச்சிகளை வென்று அடக்கி, உயர்ந்த சாந்தியைப் பெற முயற்சி செய்யவேண்டும். உள்ளத்தின் இயல்புகள் ஒன்றல்ல, இரண்டல்ல-ஆனந்தம்! மனத்தின் ஆழத்தை மதிப்பிட்டுக் கூறமுடியாது. மனத்தை ஒரு நிலைப் படுத்துவதே தலைமையான கலை!’ என்று அவர் கூறினார். ‘தீப்பட்டு எரியும் காட்டில் தன் கூட்டை எண்ணிப் பறவை ஓடுவது போலிருக்கிறது உன் எண்ணம்!’ என்று அவர் பல உபமானங்கள் மூலமும் ஞானமார்க்கத்தை விளக்கியுரைத்தார். ‘புல் தானாக வளரும்; ஆனால் பயிரைப் பாடுபட்டுத்தான் வளர்க்க வேண்டும். துக்கம் தானாக வளரும்; ஆனால் இன்பத்தைப் பாடுபட்டே வளர்க்க வேண்டும். உள்ள நிறைவே இன்ப மார்க்கம்!’ என்று கூறி, மனிதன் தன் முயற்சியாலேயே நிலையான இன்பத்தைப் பெற முடியும் என்பதை அவர் எடுத்துக் காட்டினார்.
எல்லாவற்றையும் கேட்டும் நந்தன் மனம் திரும்பவில்லை. பிக்கு பெருமானிடம் நிகழ்ந்ததைக் கூறினார்.
பெருமான் நந்தனைத் திரும்புவதற்கு ஒரு புது முறையைக் கையாள வேண்டும் என்று கருதினார். அவர் அறமுணர்த்திய வரலாறுகளைப் பார்த்தால், உபதேசம் பெறும் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு பலதிறப்பட்ட முறைகளைக் கையாண்டிருப்பது தெரியவரும். சாரீ புத்திரர், மெளத்கல்யாயனர் போன்ற மேதாவிகள் உள்ளக் கனிவோடு அவரை அண்டுகையில், ‘வருக!’ என்று கூறி ஒரு சொல்லாலேயே அவர்களை அவர் ஆட்கொண்டார். அக்கினி காசியபர் சம்பந்தமாக நாகத்தை வென்று, வேறு சில விசித்திரச் செயல்கள் புரிந்து, அவரை வழிபடுத்தினார். இருத்தி ஆற்றல்களை உபயோகிக்கவே கூடாது என்று அவர் சீடர்களுக்கு உபயோசித்து வந்தார். ஆனால் அவர் தமது அருமைத் தந்தையர்க்காகவும், சாக்கியர்க்காகவும் தாமே சில சித்துக்களைச்[2] செய்து காட்டினார். பொதுவாக இனிய உரையாடல் மூலமே அவர் பெரும்பாலான மக்களுக்குத் தமது தருமத்தை விளக்கி வந்த போதிலும், இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் வேறு முறைகளைக் கையாண்டதாக வரலாறுகள் குறிக்கின்றன. பிற்காலத்தில் அங்குலி மாலன் என்ற பெரிய கொள்ளைக்காரனை அவர் ஆட்கொண்டு அருளிய ஒரு தனி முறையாக விளங்குகின்றது, அத்தீயோனின் மனத்தை வசியம், செய்து ‘வா!’ என்று அவர் தம்முடன் அழைத்து வந்துவிட்டார். ஆனால் நந்தன் விஷயத்தில், ஆப்பைக் கொண்டே ஆப்பை அகற்ற வேண்டும் என்ற முயற்சியை அவர் கையாளத் தீர்மானித்தார்.
சலன புத்தியுள்ள தம்பியை அவர் தம்மோடு அழைத்துக்கொண்டு ஆகாய மார்க்கமாக இமயமலை முதலிய பிரதேசங்களுக்குச் சென்று, கடைசியில் வானத்திலே சென்று இந்திரன் உலகையும் அவனுக்குக் காண் பித்தார். அங்கேயிருந்த தேசுமயமான தேவ்கன்னியரிடம் நந்தன் நெஞ்சைப் பறிகொடுத்தான். அவன் உள்ளத்தில் சுந்தரி அமர்ந்திருந்த இடத்தில் அப்சரசுகள் அமர்ந்து கொண்டனர்.
புத்தர் அவனைத் திரும்பப் பூவுலகுக்கு அழைத்து வந்தார். அவன் மனப்பான்மையை அறிந்து, ‘வானுலக வாழ்க்கை வேண்டுமானாலும், சித்தத்தை அடக்கிச் சீலம் பேணித் தவம் செய்யவேண்டும்!’ என்பதை வற்புறுத்தித் கூறினார் அதன்படியே நந்தன், அப்சரசுகளை மனத்திலே பதித்துக்கொண்டு, துறவு நெறி நின்று நோன்பை மேற்கொண்டான்.
சில நாட்களுக்குப் பின்பு ஆனந்தர் அவனைக் கண்டு பேசினார். ‘நீ நல்ல முறையில் திருந்தி, உண்மை நெறியில் நிலைத்து நிற்கிறாய். ஆனால் அப்சரசுகளை அடைய வேண்டும் என்பதே உன் உட்கருத்து என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா?’ என்று கேட்டார். அவன் முகத்தோற்றத்திலிருந்து அவன் மனப்பான்மையை அறிந்து கொண்டார். ‘உன் எண்ணத்தைப் பார்க்கும் போது உன்னிடம் இரக்கமே வருகின்றது! விறகால் தீயை அணைக்க முடியுமா? மருந்துகள் உண்ண ஆசை கொண்டு நோயை வரவழைத்துக் கொள்ளலாமா? அணங்குகள், அப்சரசுகள்–எவர்களாயிருந்தாலும், முடிவில் அவர்களையும் இழக்கத்தான் வேண்டும்! எத்தனை பிறவிகளில் எத்தனை அப்சரசுகளைக் கண்டாயிற்று! உண்மையான சாந்தி–அழியா வாழ்வு–ஒன்றை நாடியே தவங்கிடக்க வேண்டும். எந்தப் பயனையும் கருதி அதை மேற்கொள்ளலாகாது!’ என்று அலர் அறிவு புகட்டினார். ‘சுவர்க்கமும் அழிவுள்ளது; தேவர்களுக்கும் தம் செயல்களுக்குத் தக்கவாறு பிறவிகள் உண்டு. பிறவா நிலையை அடைவதே பேரின்பம்!’ என்பதை விளக்கினார்.
நந்தனுடைய மனமாகிய தேரை இழுத்துச் சென்று கொண்டிருந்த கற்பனைக் குதிரைகள் நின்று விட்டன. அவன் தெளிவடைந்து தேரை நிருவாணப் பாதையில் திருப்பிவிட்டான். முன்னால் அப்சரசுகளைக் கண்டு தன் மனைவியைக் கைவிட்டான்; இப்போது நிர்வாண இன்பத்தைக் கண்டு’ அப்சரசுகளையும் கைவிட்டு விட்டான்!
உடனே அவன் நேரே ததாகதரிடம் சென்று தன் மனமாற்றத்தைத் தெரிவித்தான். கட்டைகளைக் கடையும் போது புகையைக் கண்டுவிட்டால், விரைவிலே நெருப்பு வரும் என்பது நிச்சயமாவதுபோல, அவனுடைய மன மாற்றம் மேற்கொண்டு கிடைக்கப்போகும் பெரிய நன்மைக்கு அறிகுறி என்று ஐயன் மனமகிழ்ந்து கூறி அவனை வாழ்த்தினார்.
‘துக்கத்தை அறவே நீக்கும் அமுதம் உன்னிடத்திலேயே இருக்கின்றது!’ என்று ஆரம்பித்துப் பெருமான் நெடுநேரம் அவனுக்கு அறவழியின் படிகளை வரிசையாக விளக்கி வைத்தார். கட்டுப்பாடான ஒழுக்கமே முக்தி மார்க்க முதற்படி என்று அவர் கூறினார். முடிவில், ‘கருத்தோடு ஊக்கமாயிருத்தலே முதன்மையான அவசியம்; செய்ய வேண்டியவைகளைச் செய்து முடிப்பதற்கு அதுவே அடிப்படை. அமைதி அடைவதில் ஆர்வம் கொண்டால், ஆனந்த வாழ்வை அடைவது நிச்சயம்!’ என்றார்.
நந்தன் அருள்வடிவான அண்ணலின் உதவியால் ஞானமடைந்து, அருகத்தானான்.
பின்னால் ஒரு சமயம் அண்ணலை அடைந்து, அவன், ‘தங்களுக்கு நான் எப்படி நன்றி செலுத்த முடியும்?’ என்று வேண்டினான்.
‘நீ பெற்ற போதத்தைப் பிறர்க்குப் போதிப்பதே நன்றி! தானங்களிலே சிறந்தது தருமதானமே!’ என்றார் ததாகதர்.