போதி மாதவன்/ஜேத வனம்

 பதினைந்தாம் இயல்

ஜேத வனம்

‘துயரமடர்ந்து வளர்ந்துன்னைச்
சுற்றி வளையும் வேளையிலே
முயலும் முயற்சி யின்றி ஒரு
மூலை தேடி இருப்பது(ம்) ஏன்?
அயலிலுள்ளார் படும் பாடும்
அழுகண்ணிரும் கண்டுனது
மயலை முற்றும் மாற்றுவையே
மனத்தை கன்றாய்த் தேற்றுவையே!”

–உமர்கய்யாம்

றுபது பெரிய கூடங்களும், அறுபது சிறிய கூடங்களும், ஏராளமான அறைகளும் அடங்கிய மிகப் பெரிய விகாரை ஒன்றை அநாத பிண்டிகர் சிராவஸ்தி நகரிலே கட்டி முடித்திருந்தார். நீராடும் அறைகள், உடைகள் உடுக்கும் அறைகள், பண்டகசாலைகள் முதலியவைகளும், கிணறுகளும் குளங்களும் அங்கே அமைந்திருந்தன. புத்தர் பெருமான் சொல்லியிருந்த ஆலோசனைகளின்படியாவும் முறையாக அமைக்கப் பெற்றிருந்தன. சாரீபுத்திரர் அங்கேயே தங்கியிருந்து எல்லா வேலைகளையும் கவனித்து வந்தார்.

அந்த விகாரையை மகாராஜாக்களைத் தவிர எவரும் எளிதில் அமைத்திருக்க முடியாது. எனினும் பணத்தைத் தண்ணிர் போல அள்ளிவிட்டு அநாத பிண்டிகர் அதைக் கட்டி முடித்திருந்தார். விகாரை அமைப்பதற்கு வேண்டிய பெரிய தோட்டத்தை அவர் விலைக்கு வாங்கியதே ஒரு தனிச் சரித்திரம்! அந்த வனம் ஜேதர் என்ற இளவரசருக்குச் சொந்தமாயிருந்ததால், அதற்கு ஜேத வனம்’ என்று பெயர். வள்ளல் இளவரசரைக் கண்டு அதை விலைக்குக் கொடுக்க வேண்டுமென்று வேண்டினார். இளவரசர் அது விலைக்கு இல்லை யென்றார். அந்த வனத்தின் நிலம் முழுவதிலும் தங்கக் காசுகளை நிரப்பி அளித்தாலும் அதை விற்பதற்கில்லை!’ என்று அவர் சொல்லிவிட்டார். பின்னர் அநாத பிண்டிகர் மந்திரிகள் முதலாயினோரின் உதவியைப் பெற்று, இளவரசரின் மனத்தை மாற்றி, அவர் பேச்சிலே குறிப்பிட்டபடி, தங்கக் காசுகளை வனத்திலே பரப்பி, எவ்வளவு தொகையானாலும் கொடுக்கத் தயாராயிருப்பதாக அறிவித்தார். இளவரசரும் முடிவாகச் சம்மதித்தார். பேசியபடியே அநாத பிண்டிகர் தமது மாளிகையிலிருந்த ‘மசுரன்’ என்ற அக்காலத்துத் தங்கப் பவுன் மூடைகளை வண்டிகளிலே கொண்டு வரச் செய்தார். நிலமெங்கும் இடைவெளியில்லாமல் தங்கப் பவுன்கள் நிரப்பப் பெற்றன. வனத்தின் வாசலடியில் சொற்ப இடம் மட்டும் மிஞ்சியிருந்தது. அதற்கும் தேவையான பொற்காசுகளைத் தமது மாளிகையிலிருந்து மீண்டும் எடுத்துவரும்படி வள்ளல் தம் வேலையாட்களுக்குச் சொன்னார்.

அப்போது இளவரசர் ஜேதர் அநாத பிண்டிகர் கோடிக்கணக்கான பவுன்களைக் கொடுத்து அந்த வனத்தை ஏன் வாங்குகிறார் என்ற விவரத்தையெல்லாம் கேட்டறிந்தார். புத்த பகவருக்காகவும், பிக்குக்களுக்காகவும் விகாரை அமைப்பதற்காக நிலத்திற்கு மட்டுமே பொன்னை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்த வள்ளலின் மனப்பான்மையைப் பற்றி அவர் சிந்தித்துப் பார்த்தார். அந்தப் புனிதமான திருப்பணியில் தாமும் கொஞ்சம் பங்குபெற வேண்டும் என்று கருதி, அவர் மிஞ்சியிருந்த இடத்திற்குப் பணம் வேண்டாம் என்றும், அதைத் தாமே பெருமானுக்கு அர்ப்பணம் செய்வதாயும் கூறினார். மேலும் நிலத்திற்கு மட்டுமே தாம் விலை வாங்கிக் கொள்வதாயும், நிலத்தில் நிற்கும் மரங்களை விலை யில்லாமல் தாம் அளிப்பதாயும், நிலத்திலே பரப்பியுள்ள பொன்னில் பாதியை மட்டும் தம்மிடம் செலுத்தும் படியும் அவர் கேட்டுக்கொண்டார். அநாத பிண்டிகரும் சம்மதித்தார். அப்படிக் கொடுத்த பொருளே ஐம்பத்து நான்கு கோடிப் பொற்காசுகள் என்று பௌத்த உரை நூல்கள் கூறுகின்றன! நிலமும் மரங்களும் சாரீபுத்திரரின் பொறுப்பில் ஒப்படைக்கப் பெற்றன.

வானளாவி நின்ற விகாரையை வள்ளல் கட்டி முடித்தார். இளவரசர் ஜேதர் தாம் அளித்திருந்த முகப்பிலுள்ள நிலத்தில் முன்வாயிலும், பண்டகசாலைக்கு ஏற்ற மண்டபம் ஒன்றும் தம் செலவில் அமைத்துக் கொடுத்தார்.

சாரீபுத்திரர் விகாரை அமைப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்து வந்ததோடு, நகரிலும் சுற்றுப் புறத்திலும் இடைவிடாமல் தருமப் பிரசாரம் செய்து வந்தார். அந்தக் கருத்தோடு தான் ஐயனும் அவரை அனுப்பியிருந்தார். அங்கே புறச் சமயங்களைச் சேர்ந்தவர்கள் கண்டு பொறாமைப்படும்படி அவர் செல்வாக்குடன் வேலை செய்து வந்ததால், அவர்களிற் சிலர் அவரைக் கொலை செய்துவிடவும் முயன்றனர். அவர்கள் சூழ்ச்சிகளிலிருந்து சாரீபுத்திரர் தப்பித்துக் கொண்டு, அவர்களையும் தமது தருமத்திற்கு இழுத்துக் கொண்டார்.

எல்லா வேலைகளும் முடிந்ததும், அநாத பிண்டிகர் புத்தர் பெருமானுக்குத் தகவல் சொல்லியனுப்பினார். ஜேதவனத்தையும் விகாரையையும் வந்து ஏற்றுக் கொண்டருள வேண்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார். அவ்வாறே ஐயனும் பல பிக்குக்களுடனே கபிலவாஸ்துவை விட்டு சிராவஸ்தி நகருக்குப் புறப்பட்டு வந்தார்.

அர்ப்பணம்

அசிரவதி[1] நதிக்கரையிலே அமைந்திருந்த அணி நகரான சிராவஸ்திக்குத் ததாகதர். எழுந்தருளுகையில், அநாத பிண்டிகர் தம் குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக் கொண்டு, மேளதாளங்களுடன், பொது மக்கள் யாவரும் தொடர்ந்து வர, அவரை எதிர்கொண்டு வரவேற்றார். ஊர்வலத்தின் முன்னணியில் வள்ளலின் மைந்தன் பெருங்குடிப் பிறந்த ஐந்நூறு இளஞ் செல்வர்களுடன் சென்றான்; அடுத்தாற்போல் அவனுடைய சகோதரிகளான பெரிய சுபத்திரை, சின்ன சுபத்திரை இருவரும் நகைகள் அணிந்த நங்கையர் ஐந்நூறு பேர்களுடன் சென்றனர்; வள்ளலின் மனைவி ஐந்நூறு சீமாட்டிகளுடன் தொடர்ந்து சென்றாள்; கடைசியாக அநாத பிண்டிகர் நகரின் முதன்மையான செல்வர் பலருடன் சென்றார். அரசர்களுக்குரிய மரியாதையுடன் ஜேத வனத்திற்கு ஐயனை அழைத்து வந்தனர். இனிய நீரோடைகளும், தடாகங்களும், மலர்களும், கனிகளும் நிறைந்த மரங்களும் ஜேதவனத்தின் எழிலை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன. எங்கும் தூப தீபங்களின் நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. வழிகளெங்கும் மலர்கள் தூவப்பெற்றிருந்தன.

அநாத பிண்டிகர் தங்கக் கெண்டியிலிருந்து புத்தர் பிரானின் திருக்கரத்தில் நீர்வார்த்து, ஜேதவனத்தையும் தாம் கட்டியிருந்த விகாரையையும் சங்கத்திற்குத் தானமாக அளித்தார். அந்த நேரத்தில், தாம் பிறவியெடுத்த பெரும்பயனை அடைந்தது போல், அவர் மகிழ்ச்சி யடைந்தார்.

அமலரும் அன்போடு அவைகளை ஏற்றுக் கொண்டார். ‘தீமைகளையெல்லாம் விலக்கி ஜேதவனம் இந்த இராஜ்யத்திற்கு நிலையான சாந்தியை அளிப்பதாக!’ என்றும், ‘அநாத பிண்டிகரின் ஆனந்தம் ஒன்று பலவாகப் பெருகி வளரட்டும்!’ என்றும், அவர் வனத்தையும் வள்ளலையும் வாயார வாழ்த்தினார். விகாரைக்கு ஜேதவன விகாரை’ என்றும், பிக்குக்கள் வசிக்கும் மாளிகைக்கு ‘அநாத பிண்டிகர் ஆராமம்’[2] என்றும் இரண்டு வள்ளல்களின் பெயர்களையும் ஒன்று சேர்த்துப் புத்தர் பெருமான் அவைகளுக்குப் பெயர்கள் வைத்தார். இளவரசர் ஜேதர் தமது பெயரே முதலில் விளங்குவதை எண்ணிக் களிப்படைந்தாராம்! அநாத பிண்டிகர் அடைந்த பெருமையை அளவிட்டுரைக்க இயலாது. பிற்காலத்து வரலாறுகளிலே புத்தருடைய பிரதம சீடர்கள் எண்பது பேர்களில் அவரும் ஒருவராய்ச் சேர்க்கப்பட்டிருப்பதே அவர் பெருமைக்குச் சான்றாகும்.

பிரசேனஜித்து

சாக்கிய முனிவர் தமது தலைநகருக்கு வந்திருப்பதை அறிந்து பார்த்திபர் பிரசேனஜித்தும் ஜேதவனம் சென்றிருந்தார். அவர் அருள்முனிவரைத் தனியாகத் தரிசித்து இரு கைகளையும் கூப்பி வணங்கி முகமன் கூறினார். ‘தேடி வைப்பது’ ஊரார் பணம்; தானம் செய்வதே தமது செல்வம்’ என்ற உண்மையைக் கடைப்பிடித்து அநாத பிண்டிகர் கட்டிவைத்த அரிய அறநிலையத்தை அவர் மனமார வாழ்த்திப் புகழ்ந்தார். ‘வனத்திலுள்ள மண மலர்களின் வாசனைகள் யாவும் காற்றிலே ஒன்று சேர்ந்து வீசுவதுபோல், தனி மனிதர்களின் பண்பாடுகள் பலதிறப்பட்ட நிலைகளில் இருப்பினும், இங்கே எல்லாம் ஒன்று சேர்ந்து சங்கமாகக் கூடி எப்பொழுதும் பரிமளித்துக் கொண்டிருக்கும்!’ என்றும், ‘உலகத்துச் செல்வம் ஒரு நிலையில் நில்லாது அழிவுறுவதாலும், முடிசூடிய மன்னனும் கவலைகளால் நலிந்து போவதாலும், புனித வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள சாதாரண மனிதனே உயர்ந்தவன்!’ என்றும் அவர் சங்கத்தைப் பற்றியும் பலமுறை யில் புகழ்ந்துரைத்தார்.

அவருடைய உள்ளம் ஓரளவு பக்குவம் அடைந்திருப்பதை உணர்ந்த அண்ணல், அவருடைய குறைகளையும் அறிந்து அவருக்குச் சில நல்லுரைகள் பகரவேண்டும் என்று திருவுளம் கொண்டார். பணத்திலும் புலன் இன்பங்களிலும் அரசர்களுக்கு அதிக ஆசை இருந்து வந்தது. எனவே அதற்கு நன்மருந்தாக விளங்கும் வண்ணம் ஐயன் அவரைப் பார்த்துப் பேசலானார்.

‘அரசே! ஏதோ முந்திய தீவினையால் தாழ்ந்த நிலையிலே பிறந்தவர்கள்கூட, ஒழுக்கம் நிறைந்த ஒரு பெரியாரைக் கண்டால், அவரிடம் மரியாதை காட்டுகின்றனர். முற்பிறவிகளில் செய்த புண்ணியவசத்தால் இப் பிறவியில் மன்னர் பதவியைப் பெற்றுள்ளவர் புத்தரையே நேரில் காணும்போது எவ்வளவு அதிக மரியாதை கொள்வர் என்பதை எளிதிலே கண்டு கொள்ளலாம்.

‘இப்போது நான் சுருக்கமாகக் கூறும் தரும விளக்கத்தை அரசர் கவனமாய்க் கேட்டு, என் சொற்களிலே கருத்தூன்றி, அவைகளை உள்ளத்திலே உறுதியாய்க் கொள்வாராக!

‘நமது நற்செயல்களும் தீச்செயல்களும் நம்மை விட்டு நீங்காமல் நிழல்களைப்போலத் தொடர்ந்துகொண்டேயிருப்பவை.

அன்புள்ள இதயமே முதற்கண் அவசியமாகும்!

‘நாம் ஒரே மகனைப் பெற்றிருந்தால், அவனை எப்படிப் பேணுவோமோ, அவ்வாறே உமது குடிகளைப் பேணவேண்டும். அவர்களைக் கொடுமைப்படுத்த வேண்டாம்; அவர்களை அழிக்க வேண்டாம்! உமது புலன்களை யெல்லாம் அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும்; நீதியற்ற சமயக் கொள்கைகளைக் கைவிட்டு நேரான பாதையிலே நடக்கவேண்டும். மற்றவர்களைத் தாழ்த்தி நசுக்கி, நீர் மேலெழ எண்ணக்கூடாது. அல்லற்படுவோர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுடைய துன்பம் களையத் துணைபுரியுங்கள்!

மன்னர் பதவி என்ற மாட்சியில் செருக்கடைய வேண்டாம்; இச்சகம் பேசுவோரின் இனிய வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம்!

‘கடுமையான தவங்களை மேற்கொண்டு ஒருவர் துயரப்படுவதில் பயனில்லை ; புத்தரைப் பற்றியும், அவர் போதிக்கும் நீதியான தருமத்தைப் பற்றியும் சிந்தனை செய்து பார்க்கவும்.

‘பிறப்பு, முதுமை, பிணி, மரணம் ஆகிய பாறைகள் நாலுபுறங்களிலும் நம்மைச் சூழ்ந்து நெருக்கி நிற்கின்றன. இந்தத் துக்க மலையிலிருந்து தப்புவதற்கு உண்மையான தருமத்தை அறிந்து பின்பற்றுதல் ஒன்றே வழியாகும்.

‘அறிவு பெற்றவர் அனைவரும் உடல் இன்பங்களை ஒதுக்குகின்றனர். அவர்கள் தங்களுடைய நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்காகக் காமங்களை வெறுத்துத் தள்ளுகின்றனர்.

‘மரம் தீப்பற்றி எரியும்போது புள்ளினங்கள் அதன் மீது குடியிருக்க முடியுமா? ஆசைகளால் ஏற்படும் சித்த விகாரமுள்ள இடத்திலே சத்தியம் தங்கியிருக்க முடியாது. இதையறியாத கல்வி மானைப் பெரிய முனி என்று பாராட்டினால், அவன் பேதையேயாவான்.

‘இதை அறிந்தவனுக்கு ஞானம் உதயமா கின்றது. இந்த ஞானத்தைப் பெறுவது ஒன்றே உயர்ந்த இலட்சியம். இதை அலட்சியம் செய்து விட்டுவிட்டால், வாழ்வே பயனற்றுப் போகும்.

‘எல்லாச் சமயங்களின் போதனைகளும் இதையே கேந்திர நிலையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஏனெனில் இது இல்லையென்றால், பகுத்தறிவே இல்லாமற் போகும்.

இந்த உண்மை துறவிக்காக மட்டும் ஏற்பட்டதன்று; துறவி, இல்வாழ்வோன் ஆகிய ஒவ்வொரு மனிதனுக்கும் இது அவசியம். துறவிக்கும் கிரகத்தனுக்கும் பேதமில்லை. துறவிகளிலே வழுக்கி விழுந்து பாழாய்ப் போவோரும் உளர். இல்வாழ்வோரிலே முனிவர்கள் நிலைக்கு உயர்வோரும் இருக்கின்றனர்.

‘காமமாகிய வெள்ளம் யாவர்க்கும் அபாயம் விளைக்கும்; உலகத்தையே அது அடித்துக் கொண்டு போய்விடுகின்றது. அதன் சுழல்களிலே சிக்கியவனுக்கு மீட்சிபெற வழியில்லை. ஆனால் ஞானம் என்னும் ஓடம் அந்த வெள்ளத்திலிருந்து காக்கும். ஆழ்ந்த தியானமே அதன் துடுப்பு.

‘நாம் நம் செயல்களின் பயன்களிலிருந்து தப்ப முடியாது; ஆதலால் நல்வினைகளையே நாம் செய்து வரவேண்டும்

‘நம் சிந்தனைகளைத் துருவிப் பார்க்க வேண்டும்; அவற்றால் தீயசெயல்கள் விளைந்து விடாமல் கவனிக்க வேண்டும்; ஏனெனில் நாம் விதைப்பதை நாமே அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.

‘ஒளியிலிருந்து இருளுக்குச் செல்வதற்கும், இருளிலிருந்து ஒளிக்குச் செல்வதற்கும் வழிகள் இருக்கின்றன. இருளிலிருந்து அதிக இருளுக்கும், ஒளியிலிருந்து அதிக ஒளிக்குப் போவதற்கும் வழிகள் இருக்கின்றன. ஞானி அதிக ஒளியைப் பெறுவதற்குத் தன்னிடமுள்ள ஒளியைப் பயன்படுத்திக் கொள்வான். எப்போதும் அவன் உண்மையை உணர்ந்து கொள்வதற்காக இடை விடாமல் முன்னேறிக் கொண்டேயிருப்பான்!

“நல்லொழுக்கத்தாலும் ஆராய்ச்சி அறிவாலுமே, உமது மேன்மையைக் காட்ட வேண்டும். உலகப் பொருள்களின் போலித் தன்மையைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவும். சிந்தித்து வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்ந்து கொள்ளவும்.

உள்ளத்தை மேல் நிலைக்கு உயர்த்துக! உறுதியுடன் உண்மையான நன்மையை நாடுக! மன்னர்க்குரிய கடமைகளைப் புறக்கணிக்க வேண்டாம், உமது இன்பம் வெளிப்பொருள்களைச் சார்ந்திருக்க வேண்டாம்; உமது உள்ளத்திலிருந்தே அது வளரவேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால் உலகத்திலே நெடுங்காலம் உமது நற்பெயர் நிலைத்து நிற்கும்; ததாகதருடைய அருளும் கிடைக்கும்!’

பெருமானின் புனித உரைகளைப் பிரசேனஜித்து வணக்கத்தோடு கேட்டுக் கொண்டிருந்து. அவைகளைத் தமது மனத்திலே பதிய வைத்துக்கொண்டார். மன்னர் முதலில் ததாகதரைக் கண்டதும், அவர் தாமே தம்மைப் புத்தர் என்று சொல்லிக் கொள்வதைப்பற்றி ஆட்சேபித்த தாயும், அக்காலத்திலே பிரசித்தமாக விளங்கிய. பூரண காசியபர், பரிவ்ராஜக கோசாலர், சஞ்சயர், அஜிதகேச கம்பளர் முதலியோர் கூடத் தங்களை அவ்வாறு அழைத்துக்கொள்ளவில்லை என்று கூறியதாயும் திபேத்திய வரலாறு ஒன்றில் காணப்படுகின்றது. அது எவ்வாறிருப்பினும், போதிநாதரின் உபதேசத்தைக்கேட்ட பிறகு மன்னரின் மனது முற்றிலும் அமைதி பெற்று, ஐயனிடம் அளவற்ற அன்பு கொள்ளும்படி செய்து விட்டது.

பின்னால் கோசல நாட்டு மன்னர் பகவர் புத்தரிடம் பக்தி கொண்டு அடிக்கடி அவரைத் தரிசித்து வருகிறார் என்பதைக் கண்ட மற்றைச் சமயவாதிகள் மனம் புழுங்கி அழுக்காறடைந்தனர். அவர்களுக்காக அரசர் புத்தரிடம் சென்று அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்படி தமது இருத்தி யாற்றல்களைக் காட்டும்படி பணிவுடன் வேண்டினார். அவ்வாறே பகவரும் வானத்திலெழுந்து கதிரவன் போல எண்ணரிய கதிர்களைப் பரப்பிக் கொண்டு விளங்கினார் என்றும், வேறு சில சித்துக்களும் செய்து காட்டினார் என்றும் சொல்லப்படுகின்றது. காழ்ப்புக் கொண்ட சமயவாதிகள், அவற்றைக் கண்டு மனம் திருந்தி, ஐயனைச் சரணடைந்தனராம். பிரசேனஜித்தும் பௌத்த தருமத்தை மேற்கொண்டு ஒழுகி வந்தார்.

புத்த தரிசனத்திற்கு முன்னால் பிரசேனஜித்து உணவில் கட்டுப்பாடின்றி அறுசுவை உணவுகளை அதிகமாக உண்டு வந்தார். அதனால் அவருக்குப் பகலிலேயும் உறக்கமும் மயக்கமும் இருந்து கொண்டிருந்தன. ஒரு சமயம் அவர் ஜேதவன விகாரையில் பகவர் முன்னிலையில் இருக்கும் போதே அவருக்கு உறக்க மயக்கம் ஏற்பட்டது. அதைக் கண்ட பிறவிப்பிணி மருத்துவராகிய பகவர், அதற்குக் காரணம் பேருண்டி என்பதை அறிந்து அளவறிந்து உண்ண வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவருக்கு எடுத்துரைத்தார். மாறுபாடில்லாத நல்லுணவை அளவோடு உண்டு வந்தால், சோம்பலும், தூக்கமும் விலகிவிடும் என்றும், பெருந்தீனியே உயிருக்கு ஊறுபாடு என்றும் விளக்கிச் சொன்னார். உணவு மிகவும் குறைந்தால் உடலின் சக்தியும் குறையும்; ஆனால் உணவு அதிகமானால் அசதியும் சோம்பலும் தோன்றி, ஊக்கமே ஒழிந்து விடும். இதனாலேயே பகவர் தமது தம்பியாகிய நந்தனுக்குப் பிக்குக்களின் ஒழுக்கத்தைக் கற்பிக்கும்போது, ‘பகைவன், உயிரோடு மட்டும் இருப்பதற்கு ஒருவன் உணவளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், எவ்வளவு அளிப்பானோ, அவ்வளவே ஒருவன் தானாகத் தன் உடலுக்கு அளிக்க வேண்டும்’ என்று கூறியதாக அசுவகோஷர் குறித்துள்ளார்.

பெருமான் உணவு பற்றிப் பேசுகையில் மன்னரின் மருமகனான சுதர்சன குமாரன் அவர்களுடன் இருந்தான். பெருமான் அவனைப் பார்த்து, அரசர் உணவருந்தும் ஒவ்வொரு வேளையிலும் அவன் அவர் அருகே போய் இருந்து கொண்டு, ‘அளவறிந்து உண்பவர்கள் பிணியில்லாமல் நெடுங்காலம் இளமையோடு இன்புற்று. வாழ்வார்கள்’ என்று சொல்லிக் கொண்டேயிருக்கும்படி கூறி வைத்தார். இதை அநுசரித்துப் பகவர் ‘குமார திருஷ்டாந்த சூத்திரம்’ என்ற உபதேசத்தையும் செய்தார்.

அவ்வாறே சுதர்சனன் நாள்தோறும் சொல்லி வந்ததில் மன்னரும் பகவரின் அரிய வாக்கியத்தை நினைவு கொண்டு. மித உணவே அருந்தி வந்தார்; விரைவில் உடல் நலமும் பெற்றார்.

மடிமையே மனிதனின் பகைவன் என்பதைப் புத்தர் பெருமான் பல இடங்களில் வற்புறுத்தியுள்ளார். தீவிர முயற்சியும், தளராத உறுதியுமே மனிதனுக்கு உதவி யானவை என்பதை அவர் இடைவிடாது கூறிவந்திருக்கிறார். ‘கருத்துடைமையை நித்தியமான நிருவாண மோட்சத்திற்கு வழி. கருத்துடையவர் இறப்பதில்லை. மடிமையுடையவர் இருக்கும் போதே இறந்தவராவர்‘[3] என்பது அவருடைய மூல மந்திரங்களில் ஒன்று.

புத்தர் பெருமான் மழைக் காலத்தில் மூன்று மாதங கள் மட்டும் வேணுவனம், ஜேதவனம் போன்ற ஒரு விகாரையில் சீடர்களோடு தங்கியிருத்தல் வழக்கம். அது போல் அவர் போதியடைந்தபின் மூன்றாவது மாரிக் காலத்தில் ஜேதவனத்திலேயே தங்கியிருந்தார். புத்தர் தங்கியிருந்த விகாரைகளிலே ஜேதவனமே முதன்மை யானது.

  1. ரப்தி ஆறு.
  2. ஆராமம் - பிக்குக்கள் தங்கும் இடம்; சங்கத்தார் வசிக்கும் இடம் என்பதால் சங்காராமம் என்று குறிப்பிடுவர்.
  3. ‘தம்மபதம்’.
"https://ta.wikisource.org/w/index.php?title=போதி_மாதவன்/ஜேத_வனம்&oldid=1283893" இலிருந்து மீள்விக்கப்பட்டது