போதி மாதவன்/விசாகை

பதினாறாம் இயல்

விசாகை


‘இருட்பார வினைநீக்கி
எவ்வுயிர்க்கும் காவல்என
அருட்பாரம் தனிசுமந்த
அன்றுமுதல் இன்றளவும்
மதுஒன்று மலரடிக்கீழ்
வந்தடைந்தோர் யாவர்க்கும்
பொது அன்றி நினக்(கு)உரித்தோ,
புண்ணிய நின் திருமேனி!’

–வீரசோழிய உரை

பிற்காலத்திலே சிராவஸ்தி நகரில் புத்தர் பெருமானின் முதன்மையான அடியர்களாக விளங்கியவருள் ஒருத்தி விசாகை. பௌத்தர்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஏழு பெண்மணிகளில் அவள் ஒருத்தி. அவளுடைய தந்தையரான தனஞ்சயர் பெருஞ் செல்வர். அவர் முன்னால் அங்கநாட்டில் வசித்துவந்தவர். பின்னர் மன்னர் பிரசேனஜித்தின் அழைப்பின் பேரில் சிராவஸ்தி நகரில் வசிப்பதற்காக அவர் புறப்பட்டு வந்தார். வழியில் சாகேத நகரிலேயே தங்கியிருக்கலாம் என்று அவருக்குத் தோன்றிற்று. கோசல மன்னரும் அதற்குச் சம்மதித்ததால், அவர் அங்கேயே பெரிய மாளிகைகள் அமைத்துக்கொண்டு வசிக்கலானார். விசாகையும் அவரோடு இருந்தாள். அவள் சிறு வயதிலேயே போதி நாதரின் உபதேசம் பெற்றுப் பௌத்த தருமத்தை மேற்கொண்டிருந்தார். பெருஞ் செல்வமும், அருங் குணங்களும் வாய்ந்த விசாகை பின்னால் பெரும்புகழ் பெற்று விளங்கியதால், அவளை வியந்துரைக்கும் கற்பனைக் கதைகள் பல தோன்றி விட்டன. அந்தக் கதைகளிலிருந்து உண்மையான வரலாற்றைப் பார்க்கிலும், அவளிடம் பௌத்தர்களும் மக்களும் கொண்டிருந்த அன்பே அதிகமாக விளங்குகின்றது. அத்தகைய கதைகளிலிருந்து அவளைப்பற்றி அறியத்தக்க சில குறிப்புக்களைக் கவனிப்போம்.

விசாகைக்குத் தக்க வயது வந்ததும், தனஞ்சயர் சிராவஸ்தி நகரிலே பெருந் தனிகராயிருந்த மிகாரர் என்பவருடைய குமாரன் புண்ணியவர்த்தனனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். விசாகை சகல அழகுகளும் பொருந்தியவள். மதிமுகமும், மயில் தோகைபோல் நீண்டு அடர்ந்து வளர்ந்திருந்த கூந்தலும் தங்கநிற மேனியும் பெற்றிருந்த அம்மங்கை நல்லாள் சிராவஸ்தி . நகரின் தலைசிறந்த செல்வருடைய மாளிகைக்கு ஏற்ற மருமகளாகவே அமைந்திருந்தாள். புண்ணியவர்த்தனனும், அவளுக்கு இசைந்த அழகிய மணவாளன்.

திருமணம்

சாகேதத்திலேயே விவாகம் நடைபெற ஏற்பாடாயிற்று. தனஞ்சயர் பொற்கொல்லர்களிடம் வைரங்கள், முத்துக்கள், மற்றும் இரத்தினங்களில் எழுபதுபடி அளந்து கொடுத்து, அழகிய நகைகள் பல செய்து வாங்கினார். திருமணத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே விருந்தினர்கள் வந்து குழுமியிருந்தார்கள். மிகாரருடைய குடும்பத்தினரும் முன்னதாகவே வந்திருந்தனர் எல்லோருக்கும் மேலாகக் கோசல மன்னர் பிரசேனஜித்தும் தமது பரிவாரங்களுடன் நான்கு மாதங்களாகச் சாகேதத்தில் தங்கியிருந்தார். இலட்சக்கணக்கான ஜனங்களுக்கும் தாராளச் சிந்தையுள்ள தனஞ்சயர் முகம் கோணாமல் விருந்தளித்துக் கொண்டிருந்தார். ஒரு சமயம் சமையலுக்கு விறகு போதாமையால், அவர் தமது பழைய யானைக் கூடங்கள், குதிரை லாயங்களையெல்லாம் இடித்து அவற்றிலிருந்த கட்டைகளை யெல்லாம் விறகாக எரிக்கும்படி கொடுத்தாராம்!

திருமணத்தன்று விசாகைக்குச் செய்திருந்த அலங்காரங்களை அளவிட்டுரைக்க முடியாது. தலையிலிருந்த பாதங்கள் வரை அவள் உடலை மறைத்து நகைகள் அணியப் பெற்றிருந்தாள். தலையில் நவரத்தினங்கள் இழைக்கப் பெற்று மயில் உருவத்திலிருந்த சூளாமணி ஒன்றை அவள் அணிந்திருந்தாள். அந்த மயிலின் கழுத்து முழுவதும் ஒரே மரக்தப் பச்சையில் அமைந்திருந்தது. காற்று வீசும்போது அந்த மயிலின் வாயிலிருந்து வரும் ஒலி உயிருள்ள மயில் அகவுவதுபோலவே இருந்ததாம்! மொத்தம் ஒன்பது கோடி மசுரன்கள்[1] பெறுமதியுள்ள ஆபரணங்களை அவள் அணிந்திருந்தாள். அன்று தனஞ்சயர் அவளுக்கு அளித்திருந்த பரிசுகளில் தங்கம் மட்டும் ஐந்நூறு வண்டிகள் இருந்ததாம்! மற்றும் வெள்ளி முதலிய உலோகங்களில் செய்த பாத்திரங்கள், பண்டங்கள் எல்லாம் வண்டிவண்டியாக இருந்தன. ஆயிரக்கணக்கான பணிப்பெண்களும் விசாகையோடு அவளுடைய புக்ககத்திற்குச் செல்வதற்காகத் தயாராக இருந்தனர். அன்று சாகேத நகரமே ‘திருமண மண்டபம் போல விளங்கிக் கொண்டிருந்தது. இத்தனை வைபவங்களுடன் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

விசாகையும் விருந்தினர்களும் சிராவஸ்திக்குப் புறப்பட்டுச் செல்கையில், அவர்களைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான வண்டிகள் சென்றன. நகரை அடைந்ததும், மிகாரர் தம் மருமகளின் அழகையும், அவள் நகைகளையும் பற்றி ஜனங்கள் சந்தேகம் கொள்ளாத முறையில், அவளைத் திறந்த இரதம் ஒன்றிலே ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அரசரும் பிரபுக்களும் மதிப்பதற்கு அரிய பரிசுகள் பலவற்றை அனுப்பி வைத்தனர். மிகுந்த கோலாகலத்துடன் விசாகை தன் கணவனின் மாளிகையை அடைந்தாள். அங்கே எல்லாச் செல்வங்களும் பெற்று அவள் இனிது வாழ்ந்து வந்தாள்.

மிகாரருக்கு அன்னையாதல்

மிகாரர் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர். ஜைனத் துறவிகளை அவர் போய் வணங்கி வருவதும், அவர் களைத் தமது மாளிகைக்கு அழைத்து வருவதும் வழக்கம், ஒரு சமயம் அவர் விசாகையை அழைத்துக்கொண்டு அத்துறவிகளைத் தரிசிக்கச் சென்றார். ஜைனப் பள்ளியில் தான் சந்திக்கப்போகும் துறவிகள் ஆடைகளில்லாமல் நிர்வாணமாயிருப்பவர்கள் என்பதை விசாகை அறிந்ததும் வெட்கமடைந்து, தன்னை அங்கு அழைத்துச் சென்றதற்காக மாமனாரிடம் மிகவும் வருத்தமடைந்தாள். இதையறிந்த துறவிகள், அவள் புத்தருடைய உபாசிகை என்றும், அவளை மருமகளாக மாளிகையில் வைத்திருப்பதே தவறு என்றும் மிகாரருக்கு அந்தரங்க மாகச் சொல்லிவைத்தனர். ஆனால் அவர் அவர்கள் கூற்றை அதிகமாகப் பொருட்படுத்தவில்லை.

ஒருநாள் மிகாரர் தமது மாளிகையில் உணவு அருந்திக் கொண்டிருக்கையில் வாயிலில் பிக்கு ஒருவர் உணவுக் காகக் திருவோட்டுடன் வந்து நின்றார். மிகாரர் பிக்குக்களுக்கு ஐயமிடுவதற்கு அனுமதிப்பதில்லை யாதலால், விசாகை உள்ளிருந்துகொண்டே, ‘ஐயா பழஞ்சோறு உண்கிறார்!’ என்று சொல்லிப் பிக்குவை வேறிடம் பார்க்கும்படி அனுப்பிவிட்டாள். மிகாரர், தாம் கொதிக்கக் கொதிக்கப் புதிய அன்னத்தை உண்டு கொண்டிருக்கையில், அவள் பழையது என்று சொல்லி ஏளனம் செய்ததாக எண்ணி வருத்தமடைந்து, அவளை உடனே வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறினார். விசாகை தான் அடிமையில்லை என்றும், தான் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்க முடியாது என்றும் மறுமொழி புகன்றாள்.

மிகாரர் இந்த விஷயத்தைப் பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தார். இந்தப் பஞ்சாயத்தார் எட்டுப் பேர்கள். அவர்கள் சாகேதத்திலிருந்து விசாகையோடு தனஞ்சயரால் அனுப்பப் பெற்றிருந்த அவளுடைய போஷகர்கள். அவர்கள் கூடி விசாரித்தனர். விசாகை தான் உணவைப் ‘பழையது’ என்று கூறியது உண்மைதான் என்றும், மிகாரர் உண்டு வந்த உணவு அவர் முந்திய பிறவிகளில் செய்த பழமையான தருமங்களின் பயனாகக் கிடைப்பது என்றும், ஆனால் இந்தப் பிறவியில் அவர் தான தருமங்களை நிறுத்தி விட்டதால் மேலைக்கு வேண்டிய புண்ணியம் அவருக்கு இல்லாமற் போகிறதே என்ற வருத்தத்தால் தான் அவ்வாறு கூற நேர்ந்தது என்றும் விளக்கிச் சொன்னாள். அந்த விளக்கம் எல்லோருக்கும் திருப்தியளித்தது. மிகாரரும் புத்தறிவு பெற்று மகிழ்ச்சியடைந்தார். அப்போது விசாகை தான் அவர் மாளிகையைவிட்டு வெளியேறச் சித்தமாயிருப்பதையும், அங்கேயிருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தாள்.

மிகாரர் அவள் அங்கேயே இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார். விசாகை கூறினாள்: ‘தாங்கள் ஜைனத் துறவிகளை ஆதரிப்பவர்கள்; நான் புத்தரையும் தருமத்தையும், சங்கத்தையும் சரணடைந்தவள். நான் இங்கேயே தங்க வேண்டுமானால், நான் போதிமாதவரின் உபதேசங்களைக் கேட்டுவரவும், பிக்குக்களுக்குத் தானமளிக்கவும் அனுமதிக்க வேண்டும்’. மிகாரரும் அவற்றிற்கு இசைந்தார்.

விசாகை விரைவிலேயே புத்தர் பெருமானுக்கும் பிக்குக்களுக்கும் தனது மாளிகையில் அன்னமளிக்க எற்பாடு செய்தாள். ஜைனத் துறவிகள், கோடீச்வரரான மிகாரர் புத்தரைச் சந்தித்தால் தங்களை அவர் கைவிட நேரும் என்று கருதி, அவருக்கு ஒரு யோசனை கூறியிருந்தனர். புத்தர் மாளிகைக்கு வருகையில் அவர் தம் கண்களைத் துணியால் கட்டி மூடிக்கொள்ள வேண்டும் என்பதே அந்த யோசனை!

பெருமானும் சீடர்களும் விசாகை அம்மை விருப்போடு அளித்த விருந்தை அருந்திய பின்பு, அவள் தன் மாமனாரையும் பெருமானிடம் அழைத்துச் சென்றாள். பெருமான் அறிவுரை பகர்ந்து கொண்டிருக்கையில், மிகாரர் மனம் களித்து அதிலே மூழ்கியவராய்த் தம் கண்களை மறைத்திருந்த துகிலை எடுத்தெறிந்துவிட்டு, ஐயனைக் கண்குளிரத் தரிசித்தார். அதுமுதல் அவரும் பெருமானுடைய சீடரானார். அவருக்கு இந்தப் பாக்கியம் கிடைப்பதற்கு விசாகையே காரணமாயிருந்ததால், அவர் அவளைத் ‘தாயே!’ என்று அன்புடன் அழைத்தார், இதனால் விசாகைக்கு ‘மிகாரரின் அன்னை’ என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. அன்றிலிருந்து மிகாரரின் மாளிகையில் பௌத்த பிக்குக்களுக்கு மட்டுமே அமுது படைக்கப் பெற்று வந்தது. மிகாரரும் தமது நாற்பது கோடிப் பொன் மதிப்புள்ள செல்வங்களை விதைப்பதற்கு நல்ல நிலம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியடைந்தார்.

விசாகையின் தருமங்கள்

தினந்தோறும் விசாகை மூன்று முறை பௌத்த விகாரைக்குச் சென்று வந்தாள். பகலில் உணவு கொண்டு போய் அளித்தாள்; மாலையில் மலர் மாலைகளும் தீபங்களும் கொண்டு சென்றாள். புத்தருக்கும், பிக்குக்களுக்கும் பணிவிடை செய்வதே பெறும் பேறு என்று அவள் கருதி வந்தாள். அவள் தனது செல்வத்தை யெல்லாம் பிக்குக்களுக்காகவும், தருமப் பிரசாரத்திற்காகவும் செலவழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தாள். பிக்குக்கள் தங்குவதற்காக அவள் அமைத்துக் கொடுத்த ஆராமங்களிலே புகழ்பெற்ற முக்கியமான ஒன்று நகரின் கீழ்த்திசையில் இருந்தது. நகருக்குக் கிழக்கே இருந்த தோட்டத்தில் அது அமைந்திருந்ததால், அதற்கு ‘பூர்வ ஆராமம்’ அல்லது ‘பூர்வாராமம்’[2] என்று பெயர் ஏற்பட்டது. புத்தரும், பிக்குக்களும் சிராவஸ்திக்குச் சென்ற காலங்களில் அந்த ஆராமத்திலே நெடு நாள் தங்கியிருப்பது வழக்கம்.

ஒரு நாள் அங்கே சென்று ஐயனைத் தரிசிக்கையில், விசாகை மறு நாள் தனது வீட்டில் பகவரும் சீடர்களும் உணவருந்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பெருமானும் அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.

அன்றிரவு பெருமழை பெய்தது. பிக்குக்கள் தங்கள் காவி உடைகள் நனைந்து விடுமே என்று அவிழ்த்து வைத்து விட்டு, மழைநீர் தங்கள் உடல்களிலே படும்படி இருந்து விட்டனர்.

மறு நாள் அண்ணலுக்கும் அடியார்களுக்கும் விருந்தளித்து முடிந்த பின்பு விசாகை ஐயன் அருகிலே அமர்ந்து கொண்டு, தனக்கு எட்டு வரங்கள் அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

சங்கத்தைச் சேர்ந்த அடியார்களுக்கு என் ஆயுள் முழுவதும் மாரிக்காலங்களில் நான் உடைகள் அளித்து வர விரும்புகிறேன். நகருக்குள் வருகிற பிக்குக்களுக்கும், இங்கிருந்து வெளியே செல்லும் , பிக்குக்களுக்கும், நோயுற்ற பிக்குக்களுக்கும், அவர்களுக்கு பணி செய்யும் பிக்குக்களுக்கும் நான உணவு அளித்துவர விரும்புகிறேன். பிணியாளருக்கு மருந்துகள் அளிக்கவும் விரும்புகிறேன். எப்பொழுதும் சங்கத்திற்கு அரிசிக் கஞ்சியை நானே அனுப்பி வர வேண்டும். சங்கத்தில் சேரும் பிக்குணிகள் நீராடும்போது அணிந்து கொள்ளத்தக்க உடைகளையும் அடியேனே அளிக்க வேண்டும்!’ என்று அவள் தான் கேட்ட எட்டு வரங்களையும் விளக்கிச் சொன்னாள்.

அவ்வாறெல்லாம் ஏன் கேட்கிறாள் என்பதையும் அவள் எடுத்துக் கூறினாள். முந்திய நாள் மழையில் பிக்குக்கள் நனைந்ததையும், மாற்று உடைகளில்லாமல் அவதிப்பட்டதையும், எங்கு உணவு கிடைக்கும், ஆராமங்கள் எங்கேயிருக்கின்றன என்பவற்றையெல்லாம் தெரியாமல் பிக்குக்கள் கஷ்டப்படுவதையும், பெண்டிர் குளிக்கும்போது தக்க உடைகள் இருக்க வேண்டும் என்பதையும் ஐயன் மனமுருகும்படி அவள் விவரித்துச் சொன்னாள்.

இத்தகைய விஷயங்களில் ததாகதர் யாருக்கும் எளிதாக விட்டுக் கொடுப்பதில்லை. ஆயினும் விசாகை கூறிய காரணங்கள் பொருத்தமாயிருந்ததால் அவள் கேட்ட வரங்களுக்குச் சம்மதித்து விட்டார்.

‘இத்தகைய வரங்களால் உனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாய், விசாகா?’ என்று பெருமான் கேட்டார்.

‘பிற்காலத்தில் பிக்குக்களையும், பிக்குணிகளையும் நான் பார்க்க நேரும்போது, அவர்களுக்கு ஒரு சமயப் உடைகளும், உணவும் அளிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருந்தது என்று எண்ணி மகிழ்வேன்! அந்த மகிழ்ச்சியிலிருந்து எனக்குச் சாந்தம் பிறக்கும். சாந்தியிலிருந்து நல்ல ஞானம் கிடைக்கும்!’ என்றாள் விசாகை.

ஐயன் அளவற்ற சந்தோஷமடைந்தார். ‘பாத்திரம் அறிந்து, நல்லோர்களுக்குச் செய்யும் உதவி நல்ல நிலத்தில் விதைக்கப்பெற்ற விதைகளைப்போல் ஏராளமாக விளைவளிக்கும்; உணர்ச்சிகளின் வசப்பட்டு உழல்வோர்களுக்குச் செய்யும் உதவி கரம்பில் விதைக்கப்பெற்ற விதைகளை போலப் பயனற்றுப் போகும்; அவர்களுடைய உணர்ச்சிகளே, புண்ணியங்களை வளர விடாமல் அழித்து விடும்!’ என்று அவர் கூறினார்.

விசாகை பின்னால் நெடுநாள் ஜீவித்திருந்தாள். இருபது ஆண்டுகளில் அவளுக்குப் பத்து ஆண் மக்களும், பத்துப் பெண்களும் பிறந்தார்கள் என்றும், பின்னால் அவர்களுக்கும் ஏராளமான குழந்தைகள் இருந்தன என்றும், அவளைப் பற்றிய கதைகளில் கூறப்பட்டிருக்கிறது. கடைசியில் அவளுக்குக் கொள்ளுப் பேரர்களும், பேர்த்திமார்களுமாக மொத்தம் எண்ணாயிரம் பேர்கள் இருந்தனராம்! மற்றப் புராணக் கதைகளைப் போலவே பௌத்தக் கதைகளிலும் எண்ணிக்கையில் குறைவே இருப்பதில்லை!

பூர்வாராமம்

விசாகை அம்மையின் கிழக்கு ஆராமத்தில் புத்தர் பெருமான் தங்கியிருந்த காலத்தில் ஒரு சமயம் உபவாஸத நாளன்று[3] இரவில் பிக்குக்கள் அனைவரும் வந்து கூடியிருந்தனர். பகவர் அறிவுரை பகர்வார் என்று எல்லோரும் வெகுநேரம் காத்திருந்தனர். ஆனால் பிக்குக்களின் நடுவே அவர் மௌனமாகவே அமர்ந்து கொண்டிருந்தார்.

ஆனந்தர் மெதுவாக எழுந்து தமது உடையால் இடது தோளை மறைத்து முறையாகப் போர்த்துக்கொண்டு, பெருமானிடம் சென்று வணங்கினார். ‘பகவ, இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. பிக்குக்கள் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் பகவர் உபதேசத்தை ஆரம்பிக்கலாமா?’ என்று அவர் வினவினர். ததாகதர் மறுமொழி கூறவில்லை .

இரண்டாவது சாமமும் கழிந்து கொண்டிருந்தது. மீண்டும் ஆனந்தருடைய கேள்விக்கு ஐயனிடமிருந்து பதில் வரவில்லை.

மூன்றாவது சாமத்தில் ஆனந்தர் மூன்றாவது முறையாக விண்ணப்பித்துக் கொண்டார். அப்போது பகவர், ‘கூட்டம் பரிசுத்தமாக இருக்கவில்லை, ஆனந்தா !’ என்றார்.

பெருமான் எவரைப்பற்றி எண்ணி அப்படிக் கூறினார் என்பதை மகா மௌத்கல்யாயனர் சிந்தித்துப் பார்த்தார். கூடியிருப்பவர்களுடைய உள்ளங்களைத் தமது உள்ளத்தால் துருவிப் பார்த்துப் பரிசுத்தமற்றவர் யார் என்பதை அவர் கண்டு கொண்டார். கூட்டத்திலே அமர்ந்திருந்த ஒருவர், முன்னால் திரிசரணங்களைக் கூறித் தருமத்தை மேற்கொண்டிருந்த போதிலும், ஆசைகளுக்கு அடிமைப்பட்டுத் திருந்தாத ஒழுக்கத்துடன் இருந்தார். மௌத்கல்யாயனர் அவரிடம் சென்று. ‘ஐய, எழுந்த பகவர் உம்மைக் கண்டு பிடித்து விட்டார். நீர் இந்தக் கூட்டத்திற்கு உரியவரல்லர்!’ என்று சொன்னார். மூன்று முறை இவ்வாறு கூறியும் அந்த மனிதர் எழுந்திருக்க வில்லை. அன்று கூட்டத்தை நடத்தும் பொறுப்பை வகித்திருந்த மௌத்கல்யாயனர் அவருடைய கையைப் பிடித்து எழுப்பி வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டுக் கதவையும் தாழிட்டார். பிறகுதான் புத்தர் உபதேசம் செய்ய இசைந்தார்.

கடலும் தருமமும்

புத்தர் பெருமான் அன்றிரவு கடலின் விசேட அமிசங்களைக் குறிப்பிட்டு, அதனோடு தமது தருமத்தையும், சங்கத்தையும் ஒப்பிட்டு விளக்கினார். அவர் கூறியதாவது:[4]

‘ஓ பிக்குக்களே! மகா சமுத்திரத்தினிடம் ஆச்சரியமான அபூர்வமான எட்டுக் குணங்கள் இருக்கின்றன; அவைகளை இடைவிடாது கண்டு அதனுள் வாழும் பெரிய பிராணிகள் இன்புற்று அதிலே திளைத்துக் கொண்டிருக்கின்றன.

‘அதே முறையில், ஓ பிக்குக்களே, திருமததிலும் விநயத்திலும் அதிசயிக்கத்தக்க அபூர்வமான எட்டுக் குணங்கள் இருக்கின்றன; அவைகளை இடைவிடாது கண்டு பிக்குக்கள் இன்புற்றுத் தருமத்திலும் விநயத்திலும் திளைத்துக் கொண்டிருக்கிறார்கன். அந்த எட்டுக்குணகம் எவை?

‘ஓ பிக்குக்களே! கடல் (கரையிலிருந்து) போகப் போகக் கொஞ்சங் கொஞ்சமாகப் பள்ளத்திலிருந்து பள்ளமாக, ஆழமாகிக் கொண்டே போகின்றது; திடீரென்று பெரும் பள்ளமாயில்லை. ஓ பிக்குக்களே! அதுபோலவே, இந்தத் தருமத்திலும், விநய ஒழுக்கத்திலும் பயிற்சி பெறுதல் படிப்படியாக அமைந்துள்ளது; ஒவ்வொரு முறையும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக அமைந்துள்ளது; திடீரென்று ஒரேயடியாக அருகத்து நிலையை அடைந்துவிடுவதில்லை. இது முதலாவது குணம்.

‘ஓ பிக்குக்களே! பெருங்கடல் ஒரே தன்மையுடன், கரையைக் கடந்து அப்பால் செல்வதில்லை,–அதுபோலவே, என் உரையைக் கேட்பவர்களுக்காக நான் அமைத்துள்ள விதிகளை அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தாண்டிச் செல்வதில்லை. இது இரண்டாவது குணம்

‘ஓ பிக்குக்களே! மகா சமுத்திரம் உயிரற்ற சடலத்தைத் தன்னகத்தே வைத்திருப்பதில்லை; கடலிலுள்ள எத்தகைய செத்த உடலாயினும், அதை அது விரைவாகக் கரையிலே கொண்டு போய் ஒதுக்கிவிடும். அதுபோலவே, யாராவது ஒருவர் தீயொழுக்கத்துடன், தீய குணங்களுடன், அசுத்தமான அல்லது சந்தேகிக்கத் தக்க நடத்தையுடன், சத்திய விரதங்களை மேற்கொண்டிருப்பினும், சிரமணராயில்லாமல், உள்ளம் மாசடைந்து, ஆசைகளுக்கு அடிமைப்பட்டுப் பயனற்ற ஜன்மமாக விளங்கினால்–அவருடன் சங்கம் எவ்விதத் தொடர்பும் கொள்ளாது; கூட்டம் கூடியதும் விரைவாக அவரை வெளியே கொண் போய்ச்சேர்த்து விடும். அந்த மனிதர் பிக்குக்களின் சங்கத்தின் நடுவில் அமர்ந்திருந்தாலும், அவர் சங்கத்திலிருந்து வெகு தூரத்தில் விலகியிருப்பவராவார்; சங்கமும் அவரிடத்திலிருந்து வெகு தூரம் எட்டியேயிருக்கும். இது மூன்றாவது குணம்.

‘ஓ பிக்குக்களே! மகா நதிகளெல்லாம் பெருங் கடலுள் வீழ்ந்த பிறகு, தங்கள் பெயர்களையும் வரலாறுகளையும் இழந்து, ஒரே மகா சமுத்திரமாகக் கருதப் பெறுகின்றன. அது போலவே, நான்கு வருணத்தார்களும் உலக ஆசைகளைத் துறந்து, ததாகதர் பிரகடனம் செய்துள்ள தருமத் தையும் விநயத்தையும் மேற்கொண்ட பிறகு, தத்தம் பெயர்களையும் குலங்களையும் துறந்து, ஒரே தன்மையான சாக்கிய புத்திய சிரமணர்களாக ஆகிவிடுகிறார்கள். இது நான்காவது குணம்.

ஓ, பிக்குக்களே! உலகத்திலுள்ள ஆறுகளெல்லாம், ஓடி ஓடிச் சென்று, முடிவிலே பெருங் கடலில் சேர்ந்தபோதிலும், வானத்து மழை நீரெல்லாம் அக்கடலிலேயே வீழ்ந்தபோதிலும், அதனால் அது மிகவும் குறைந்திருப்பதாகவோ, மிகவும் நிறைந்திருப்பதாகவோ காணப்படுவ தில்லை. அதுபோலவே, அநேகம் பிக்குக்கள் (நிருவாணப் பேற்றை அடைந்து), தாங்கள் இருந்த சுவடுகள் தெரியாமலே மறைந்து விட்ட போதிலும், அதனால் சங்கம் அதிகம் குறைந்திருப்பதாகவோ, அதிகம் நிறைந்திருப்பதாகவோ காணப்படுவதில்லை. இது ஐந்தாவது குணம்.

‘ஓ பிக்குக்களே! மாபெருங் கடலுக்கு ஒரே சுவைதான் இருக்கிறது–அதுவே உப்புச் சுவை. அதுபோலவே இந்தத் தருமத்திற்கும் விநயத்திற்கும் ஒரே சுவைதான் உண்டு–அதுவே விமுக்தி (நிருவாணம்). இது ஆறாவது குணம்.

‘ஓ பிக்குக்களே! பெரிய சாகரத்திலே முத்துக்கள், பலவிதமான மணிகள் நிறைந்திருக்கின்றன. அது போலவே, இந்தத் தருமத்திலும், விநயத்திலும் முத்துக்களும், பலவிதமான மணிகளும் நிறைந்திருக்கின்றன. அவைகளிலே சேர்ந்தவை நான்கு சதிப் பிரஸ்தானங்கள், நான்கு சம்யக் பிரதானங்கள், நான்கு ருத்திபாதங்கள், ஐந்து பலங்கள், ஏழு போத்தியாங்கங்கள், ஐந்து இந்திரியங்கள். அஷ்டாங்க மார்க்கம் ஆகியவை.[5] இது ஏழாவது குணம். ‘ஓ பிக்குக்களே! - பெருங்கடலிலே பூதாகாரமான உடல்கள் அமைந்த பெரிய ஜந்துக்கள் (பல்லாயிரம் அடி நீளமுள்ளவை) இருக்கின்றன. அதேபோல, இந்தத் தருமத்தையும் விநயத்தையும் கடைப்பிடித்து வரும் மாபெரும் மனிதர்கள் இருக்கின்றனர்; அவர்களிலே முதற்பாதையில் இறங்கியுள்ளவன் (சோதாபன்னன்), அதன் பயனை அடைந்தவன் (சக்குத காமின்), மூன்றாவது பாதையில் இறங்கியுள்ளவன் (அநாகமின்), அதன் பயனை அடைந்தவன் (அருகத்து), அருகத்து நிலையின் பயனை அடைந்தவன் ஆகியோர் அடங்கியுள்ளனர். இது எட்டாவது குணம்.

‘ஓ பிக்குக்களே! இந்தத் தருமத்திலும், விநயத்திலுமுள்ள அதிசயிக்கத்தக்க அபூர்வமான எட்டுக் குணங்களும் இவை. இவற்றை இடை விடாது உணர்ந்து பிக்குக்கள் இவற்றிலே இன்புறுகின்றனர்.’

  1. மசுரன்–அக்காலத்துப் பொற்காசு.
  2. பூர்வம்–கிழக்கு.
  3. ஒவ்வொரு பட்சத்திலும் முதல்நாளும் எட்டாவது நாளும் ஆக, மாதத்தில் நான்கு நாட்கள் பிக்குக்களுக்கு உபவாஸத நாட்களாம். அந்த நாட்களில் புத்தர் பெருமான் பிக்குக்களின் ஒழுக்க விதிகள் பற்றி அருளிய ‘பிராதிமோட்சம்’ என்ற நூல் ஓதப்பெறும்; அதில் கூறப்பெற்றுள்ள விதிகளுக்கு மாறாக நடந்த பிக்குக்கள் தங்கள் குறைகளை வெளிப்படையாகக் கூறி ஒப்புக்கொண்டு, மேற்கொண்டு திருந்திய வாழ்க்கையை அடைவார்கள்.
  4. இந்தச் சொற்பொழிவு ‘சுள்ள வக்க’த்திலுள்ளது.
  5. போதி அல்லது மெய்ஞ்ஞானத்தை அடைவதற்கு 37–தத்துவங்களைப் புத்தர் வகுத்துள்ளார். அவைகளைப்பற்றிய முழு விவரங்களும் அபிதம்ம பிடகத்தில் விளக்கப்பட்டுள்ளன.
    நான்கு சதிப் பிரஸ்தானங்கள்: உடல், உணர்ச்சி, சித்தம், நிருவாணம் (தருமம்) ஆகியவற்றின் இயல்புகளைப் பற்றிய உண்மைகள்.
    நான்கு சம்யக் பிரதானங்கள்: பாவம் வளராமல் தடுப்பதற்கும் நன்மையை வளர்ப்பதற்கும் உரிய நான்கு வகை முயற்சிகள்.
    நான்கு ருத்திபாதங்கள்: சித்தத்தின் இருத்தி ஆற்றலுக்கு அடிப்படைகள்: அடைய வேண்டும் என்ற நினைப்பு, முயற்சி, இதயப் பண்பாடு, ஆராய்ச்சி ஆகிய நான்கு.
    ஐந்து இந்திரியங்கள்: மனோ சக்தியின் வளர்ச்சிக்கு உரிய முறைகள் : சிரத்தை, வீரியம் (விடாமுயற்சி), ஞாபக சக்தி, சமாதி, பிரக்ஞை (மெய்யறிவு) ஆகிய ஐந்து.
    ஐந்து பலங்கள்: மனத்தின் ௸ அங்கங்களுக்குள்ள ஐந்து ஆற்றல்கள்.
    ஏழு போத்தியாங்கங்கள்: மெய்ஞ்ஞானத்திற்குவேண்டிய கருவிகள்: சாமர்த்தியம், ஞாபக சக்தி, வீரியம் (விடா முயற்சி). உள்ளக்களிப்பு, சாந்தி, சமாதி, சமதிருஷ்டி ஆகிய ஏழு.
    அஷ்டாங்க மார்க்கம்: நற்காட்சி முதலிய எட்டுப் படிகளுள்ள நிருவாண வழி.
"https://ta.wikisource.org/w/index.php?title=போதி_மாதவன்/விசாகை&oldid=1283894" இலிருந்து மீள்விக்கப்பட்டது