மகாகவி பாரதியார்/பாரதியாரும் பையனும்

பாரதியாரும் பையனும்



கொஞ்ச வயதுடையான்—அவன்
கூனற் கிழவனைப்போல்,
அஞ்சி நடந்துசென்றான்—ஐயர்
ஆரட தம்பிஎன்றார் !
அஞ்சலி செய்தநின்றான்—ஐயர்
அவனிடம் உரைப்பார்:—
"நெஞ்சு நிமிர்ந்தநட!—உன்
நேரில்அச் சேவலைப்பார்!"

சொன்னசொல் பையனுளம்—தனில்
சுடர் கொளுத்திடவே,
முன்னைய கூனல்நடை—தனை
முற்றும் அகன் றவனாய்ச்,
சென்னிதனை நிமிர்த்திக்—கொஞ்சம்
சிரிப்பையும் காட்டிச்,
சன்னத்த வீரனைப்போல்—அந்தச்
சாலை வழிநடந்தான்!