மகாகவி பாரதியார்/பாரதியார் திருப்பள்ளி யெழுச்சி

பாரதியார்
திருப்பள்ளி யெழுச்சி



நற்பெரு மார்கழி மாதமோர் காலை
நமதுநற் பாரதி யாரொடு நாங்கள்
பொற்பு மிகும்மடு நீரினில் ஆடிடப்
போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்
பெற்ற முதுவய தன்னையார் ஐயரே,
பீடுதரும் "திருப்பள்ளி யெழுச்சி" தான்
சொற்றிறத் தோடுநீர் பாடித் தருகெனத்
தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே.
நீல மணியிருட் காலை அமைதியில்
நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையில்,
கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால்
கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில்,
காலை மலரக் கவிதை மலர்ந்தது !
ககன முழுமையும் தேனலை பாய்ந்தது !
ஞாலப் "பொழுது புலர்ந்த" தென்றார்ந்த
நல்ல தமிழ்க்கவி நாமடைந் தோமே!