மகான் குரு நானக்/சிறுவயதிலேயே ஞானம்

2. சிறு வயதிலேயே ஞானம்

ந்திய மாநிலங்களிலே ஒன்று பஞ்சாப் மாநிலம், ஐந்து நதிகளான ஜீலம், ஜீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் என்ற நதிகள் பாய்ந்து அந்த மாநிலத்தை வளமுள்ள பகுதியாக மாற்றியதால் அதற்கு பஞ்சாப் என்ற பெயர் வந்தது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு பஞ்சாப் ஒரே மாநிலமாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் அந்த மாநிலத்தை நம்மிடம் விட்டுச் செல்வதற்கு முன்பு அதை மேற்குப் பஞ்சாப்பென்றும், கிழக்கு பஞ்சாப்பென்றும் இரண்டாகப் பிரித்து நிர்வாகம் செய்து வந்தார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு, மேற்குப் பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான்் நாட்டுடன் சேர்க்கப்பட்டு விட்டது. கிழக்குப் பஞ்சாப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தான் நாட்டிலுள்ள மேற்குப் பஞ்சாப் மாநிலத்தில் தாள்வாண்டி என்றொரு சிற்றுர் உள்ளது.

தாள்வாண்டி என்ற அந்தக் கிராமத்தில், மேதாகலூராய் என்பவரும், மட்டாதிரிபாத் என்ற அவரது மனைவியாரும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ஒரு நடுத்தர குடும்பமாகவும், அக்கிராமத்தில் செல்வாக்குடனும் இருந்தார்கள். அந்த தம்பதியர் களுக்கு, 1469 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கார்த்திகை முழு நிலாவான பெளர்ணமி நாளன்று குருநானக் பிறந்தார். அக்குழந்தைக்குப் பெற்றோர் நானக் என்று பெயரிட்டார்கள்.

நானக்கின் தமக்கை பெயர் பீபி நானக் என்பதாகும். ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும், ஆஸ்திக்கோர் ஆண் குழந்தையும் போதுமென்ற முதுமொழிக்கேற்றவாறு பெற்றோர்கள் தங்களது இரண்டு குழந்தைகளையும் இரு கண்களாகக் கருதி வளர்த்து வந்தார்கள். குறிப்பாக, ஆண் குழந்தையான நானக்கை அளவிலா அன்புடன் பேணி காத்து வந்தார்கள்.

ஒரே ஒரு ஆண் குழந்தை அல்லவா? அதனால், அக்குழந்தை நன்றாக நடந்து, ஆடிப்பாடி, பேசும் பருவமான ஒன்பது வயது வரை வீட்டிலேயே செல்லமாக வளர்ந்து, பிறகு அதே சிற்றுரிலுள்ள பள்ளியில் பெற்றோர் கல்விக்காகச் சேர்த்தார்கள். பள்ளி ஆசிரியர் ஒர பிராமணர் ஆவார்.

நானக் பள்ளியில் சேர்க்கப்பட்ட நாளன்று, ஆசிரியர் அரிச் சுவடியின் முதல் எழுத்தை நானக்குக்குச் சொல்லிக் கொடுத்து, அதை எழுதுமாறு கூறினார். பையன் அந்த எழுத்தை எழுத வில்லை. கரும்பலகையை உற்றுப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்த சிறுவன் நானக்கைப் பார்த்து, "எழுதச் சொன்னால் எழுதாமல் உட்கார்ந்தபடியே இருக்கிறாயே ஏனப்பா" என்று அமைதியாகக் கேட்டார். பையன் வாயைத் திறக்கவில்லை.

கோபம் வந்தது ஆசியருக்கு பையனை அதட்டி "எழுதப்பா ஏன் உட்கார்ந்து கொண்டே இருக்கிறாய்? எழுது தம்பீ" என்று அதட்டியும் செல்லமாகவும் பையனை கேட்டுப் பார்த்தார் ஆசிரியர்.

உடனே பையன் நானக் 'ஐயா நீங்கள் சொல்லிக் கொடுத்த எழுத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை. இறைவன் படைத்த மூல ஒலியைப் பற்றியே சிந்திக்கிறேன்' என்றார்.

நானக் கூறிய பதிலைக் கேட்டு பள்ளி ஆசிரியர் வியப் படைந்தார். மீண்டும் அவர் நானக்கிடம், 'சிறுவனே, நீ விவரம் விளங்காத பையன். கடவுள் படைப்பைப் பற்றியும், ஏன் அதைப் படைத்தார் என்பது குறித்தும் உனக்கு விளங்கக் கூடிய வயதல்ல; நீ குழந்தையப்பா' என்றார்.

அதற்கு பதில் கூறிய நானக், ஐயா கடவுளால் படைக்கப்பட்ட அந்த ஒலியைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் ஆரம்பமே இல்லை என்றார்.

நானக் வயது என்ன? ஒன்பதுதானே இந்த வயதில் இப்படி ஒரு தத்துவம் பேசுகிறானே சிறுவன். அறிவு அவனிடம் வயதுக்கு மீறி அல்லவா காணப்படுகிறதென்பதை எண்ணிய ஆசிரியர் நானக்கைக் கண்டு வியப்படைந்தார்.

நானக்கின் தந்தையை அழைத்தார் ஆசிரியர். அவரிடம் உனது பையன் ஆன்மீகத் தத்துவம் பேசுகிறானப்யா இந்த வயதுக் குழந்தை எதுவும் இவ்வாறு பேசிடும் அறிவு பெற முடியாது மேதாகலூராய்! எனவே, இந்த சிறுவன் கடவுளின் கொடையாக உனக்கு வந்து பிறந்து விட்டானோ என்று மிக ஆச்சர்யத்தோடு கூறினார்.

தந்தை மேதாகலுராய், தனது மகனை அழைத்துக் கொண்டு வீடு சென்று, ஆசிரியர் கூறிய விவரங்களை அவனைப் பெற்ற தாயிடம் கூறினார். பெற்றோர்கள் தமது மகனுடைய எதிர்கால நிலை என்னவோ என்று வருத்தமடைந்தார்கள்.

ஆனாலும், நானக்கின் தந்தை தனது மகனுக்கு படிப்பு வராதோ இல்லையென்றால் ஆசிரியர் எதற்காக நானக்குக்கு கல்வி போதிக்கும் தகுதி தனக்கு இல்லை என்றார் என்பதை எண்ணி யெண்ணி வருத்தப்பட்டு, அவனுக்குக் கல்வி கற்பிக்க என்ன செய்யலாம் என்று கலங்கிய மனதுடன் இருந்தார்.

நானக்குக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் தகுதி தனக்கு இல்லை என்று ஆசிரியர் கூறிய பிறகு எப்படி தந்தை தனது மகனைப் பள்ளிக்கு அனுப்புவார்? அதனால் முதல் நாளன்று நானக் பள்ளிக் கூடத்துக்குப் போனதோடு, அவருடைய கல்வி வாழ்க்கை முடிந்து விட்டது.

நானக் தந்தையார் தனது சத்திரிய பழக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு மகனுக்கு பூணூல் விழா நடத்திட எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பூணூல் விழாவன்று பூணூல் அணிவிக்கும் பார்ப்பனர் வந்தார். ஓமம் வளர்க்கப்பட்டது. சடங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து கொண்டிருந்தன. மந்திரங்கள் ஒதப்பட்டன. பிறகு புரோகிதர் அரிதயாள் பூணூலைக் கையிலெடுத்தார்.

நானக் அதைத் தடுத்து நிறுத்தினார். விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக 'அபச்சாரம் அபச்சாரம்' என்று முணுமுணுப்பு ஒலிகளை எழுப்பினார்கள். அப்போது நானக் புரோகிதரை நோக்கி, 'ஐயா புரோகிதரே. எதற்காக நான் பூணூல் போட்டுக் கொள்ள வேண்டும்? காரணம் என்ன?' என்று கேட்டார்.

இந்தக் கேள்வி புரோகிதரை கேட்ட கேள்வி மட்டுமா? விழாவிற்கு வந்திருந்த பெரியோர்களையும், பரம்பரையாகப் பூணூல் அணிந்து வருபவர்களையும் கேட்ட கேள்வி அல்லவா இது? எனவே, விழாவுக்கு வருகை தந்திருந்த எல்லாரிடமும் நானக் கேட்ட கேள்வி, ஒரு வித திடுக்கிடும் தோற்றத்தை உருவாக்கிவிட்டது.

புரோகிதர், பூணூல் போட்டுக் கொள்வதற்கான விவரங்களை எல்லாம் சுருக்கமாக நானக்கிடம் கூறினார். சிறு பையனுக்குப் புரோகிதர் பதில் கூறிக் கொண்டிருப்பதை பழமை விரும்பிகள் ஓர் அருவருப்பாகவே கருதினார்கள். அன்று வரை பூணூலணிவதற்குரிய காரணங்களைக் கேட்டறியாதவர்கள் எல்லாம் சிறுவன் கேட்ட கேள்வியால் சரியான பதிலைத் தெரிந்து கொண்டார்கள்.

ஆனால், நானக்குக்கு மட்டும் புரோகிதர் கூறிய விளக்கம் மன நிறைவை அளிக்கவில்லை. ஆனால், நானக்கிடம் இருந்த இறையுணர்வு ஒரு பாடலாக அங்கே எழுந்தது. அவர் பாடினார். அந்தப் பாடலின் கருத்து என்ன தெரியுமா?

"பூணூல் அணிபவர்களே! சாதாரண பருத்தி நூலை அணியாதீர்கள். அதனால் எந்தவிதமான பயனுமில்லை. இரக்கம் என்ற கருத்தியைக் கொண்டு மன நிறைவு என்ற நூலை தயாரியுங்கள். அதில் உண்மையென்ற முடிச்சுக்களைப் போட்டு அணிந்து கொள்ளுங்கள். உண்மையோடு வாழுங்கள், நல்வாழ்வு பெறுங்கள்" என்ற கருத்துக்கள் அந்தப் பாடலிலே இனிமையோடு மிதந்து வந்தன. அவர் பாடிய குரலோசை விழாவிற்கு வருகை தந்தோரை எல்லாம் இனிமையாக மகிழ்வித்தன.

நானக்கின் பெற்றோர்கள் தன் மகனை உதவாக்கரை என எண்ணினார்கள். ஒரே ஒரு நாள் தான் பள்ளிப் படிப்புக்கு போனார். அதோடு கல்வி முடிந்தது. பூணூல் விழாவாவது நடத்தலாம் என்று பெற்றேர் ஆசையோடு விழா செய்தார்கள். அதுவும் புரோகிதர் அறிவைச் சோதிக்கும் விழாவாக மாறியது. அதற்குப் பிறகு எந்த வேலையினையும் நானக் வீட்டில் செய்வதில்லை. எப்போது பார்த்தாலும் ஏதோ சிந்தனையில் மூழ்கியவரைப் போல, கண்களை மூடிக் கொண்டே அவர் அமர்ந்திருக்கும் காட்சி, பெற்றோர்களை வேதனை நெருப்பிலே தள்ளியது.

தனது மகன் நானக் நன்றாகக் கல்வி கற்று, ஏதாவது ஒரு சமஸ்தான்த்தில் உயர்ந்த பதவியில் அமர்ந்து பணியாற்ற வேண்டும். அவனை சுற்றி கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் வேலைக்காரர்கள் கூட்டம் சூழ்ந்திருக்க வேண்டும். தமது குடும்பம் பெருமையுடனும் புகழுடனும் வாழ வேண்டும். மகன் சிறந்த செல்வச் சீமானாகத் திகழ வேண்டும் என்று நினைந்த அவரது தந்தையாரின் ஆசையிலே தவறென்ன இருக்க முடியும்.

குருநானக்கின் பெற்றோர்கள் தன் மகனுக்கு தகுதியும், தரமும் இல்லாததைக் கண்டு அவனின் நண்பர்களின் சகவாசம் சரியில்லையென எண்ணினார்கள். மகன் இப்படி இருக்கிறானே என்பதற்காக ஒரு தகப்பனால் சும்மா இருக்க முடியுமா? அதனால் எப்படியாவது மகனை நல்ல வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று மேதாகலுராய் முடிவு செய்தார். அதற்குரிய வழிகளைத் தனது நண்பர்களிடம் பேசும் போதும் கேட்டார்.

அதற்கு ஒரு நண்பர் மேதாகலுராவுக்கு யோசனை கூறும் போது, இழிவான வேலை ஏதாவது ஒன்றை நானக்கிடம் கூறி, அதைச் செய்யச் சொல்லுங்கள். உடனே அவனுக்கு மான ரோஷம் வரும். நான் செய்ய மாட்டேன். அது கேவலமானது என்று மறுப்பான் பிறகு நீங்கள் கூறுகின்ற யோசனை என்னவோ அதற்கேற்ப நடப்பான் என்றார். இந்த யோசனை ஒரளவுக்கு நானக் தந்தைக்கு உடன்பாடானதாகவே தெரிந்தது.

அதனால், ஒருநாள் மேதாகலுராய் தனது மகனை அழைத்தார். 'நீ தினமும் நமது வீட்டிலுள்ள மாடுகளை ஒட்டிக் கொண்டு,வயற் பக்கங்களிலே மேய்த்துக் கொண்டு வா” என்றார். மகனிடம் என்ன பதில் அவர் எதிர்பார்த்துக் கூறினாரோ அதன்படி நடக்கவில்லை.

தந்தை மாடுகளை மேய்த்துக் கொண்டு வா என்று கூறினால், மகன் மானரோஷத்தோடு தன்னை எதிர்ப்பான். பிறகு அவர் கூறும் எந்த வேலையையும் ஏற்றுச் செய்ய முன்வருவானென்று அவர் எதிர்பார்த்த முடிவு, தந்தைக்கு ஏமாற்றத்தையே தந்தது. ஆனால் நானக், தந்தை கூறிய மாடு மேய்க்கும் தொழிலைச் செய்வதற்கு மனநிறைவோடு, மகிழ்ச்சியாக 'சரி தந்தையே' என்று ஒப்புக் கொண்டார்.

மகன் நானக், தனது யோசனையை ஏற்று ஒப்புக் கொண்டதை அறிந்த தந்தை மனம் மிக நொந்தார். இதற்கா மகனை இவ்வளவு செல்லமாக வளர்த்தோம். கடவுளே இதுவும் உன் சோதனை தானா? என்று மேதாகலுராய் வருத்தப்பட்டார்.

ஒவ்வொரு காலை தோறும் நானக், மாடுகளைத் தொழுவத்தில் இருந்து ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டு இருப்பார். எங்காவது ஒரு மரத்தடியில் அமர்ந்து கடவுள் சிந்தனையிலே மூழ்கிவிடுவார். மேய்ப்பன் மேற்பார்வை இல்லாமலேயே மாடுகள் மேயும், பிறகு மாலைதோறும் அவ்ற்றைத் தொழுவத்திலே ஒட்டி வந்து கட்டி விடுவார்.

நாட்கள் இவ்வாறு உருண்டோடின. தந்தை மேதாகலூராய்க்கு இந்தக் காட்சி ஆனால் மகனுக்கு இந்த வேலை ஏதோ ஓர் இழிவான வேலை என்று தெரியவில்லை. தெய்வத் தொண்டாக தோன்றியது செய்யும் தொழில்.

கிறித்துவ மத நிறவனரான இயேசு நாதருக்கு மேய்ப்பர் என்று ஒரு பெயரும் உண்டல்லவா? ஏன் வந்தது அந்தப் பெயர் அவருக்கு? அவரும் ஆட்டுக்குட்டிகளை மேய்த்தவர் அல்லவா? அவரைப் போல நாமும் மாடுகளைத் தானே மேய்க்கின்றோம். அதனால் தவறில்லையே.

ஆயர்பாடியிலே, பாரத காலத்துக் கண்ண பெருமான் மாடுகளை மேய்த்தாரே அதனால் அவருடைய தெய்வாம்சப் புகழும் பெயரும் கெட்டா போய்விட்டது? யார் எந்தெந்தத் தொழில்களைச் செய்தாலும், அவர்கள் செய்யும் தொழிலே தெய்வம் தானேயென்று எண்ணிய நானக், மாடு மேய்க்கும் தொழிலை ஒரு பேரானந்தப் பிழைப்பாகவே எண்ணிச் செயல்பட்டார்.

ஒரு நாள் வழக்கம் போல மாடுகளை மேய்த்திட ஒட்டிச் சென்ற நானக், அவற்றை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு, இறைஞானச் சிந்தனையிலே ஆழ்ந்து விட்டார். நேரம் பகலானது கடும் வெயில் உலகைச் சுட்டெரித்தது. பசி மறந்தார். சாப்பாட்டை மறந்தார். பட்ட மரத்தின் வெயில் வெப்பம் தன்னைத் தாக்குவதையும் மறந்த நிலையில் அவர் கடவுள் சிந்தனையிலே மிதந்தார்.

வயல்புற வரப்புகள் ஒரமாக மேய்ந்து கொண்டிருந்த மாடுகள், திடீரென வயலில் இறங்கி, பயிர்களை மிதித்து, துவைத்து, வயிறு முட்ட மேய்ந்து, பயிர்களைப் பாழ்படுத்திவிட்டன.

வயலுக்குச் சொந்தக்காரன் இதைப் பார்த்துவிட்டு லபோதிபோ என்று வாயிலடித்துக் கொண்டு ஓடி வந்தான். மாடுகள் வயலில் இறங்கி, பயிர்களைப் படுநாசப்படுத்தி, மண்ணோடு மண்ணாகப் பயிர்கள் மிதிபட்டிருப்பதைக் கண்டான் அந்த ஏழை உழவன்!

மாடுகள் யாருடையது? யார் மேய்ப்பனென்று அவன் சுற்றும் முற்றும் பார்த்தபோது, மாடுகளை மேயவிட்டு விட்டு மரத்தடியிலே தூங்குவது போல கிடக்கும் நானக்கைக் கண்டான் அந்த விவசாயி. வயிறு எரிந்தான் அக்குடியானவன்! நேராக படுத்துக் கிடக்கும் நானக் எதிரிலே வந்து நின்று 'நியாயமா உனக்கு? என் பயிர்களை இப்படிப் பாழ்படுத்தலாமா? மாடுகளை மேய விட்டு விட்டு கண்களை மூடிக் கொண்டு தூங்குவது அக்கிரமம்' என்றெல்லாம் அக்குடியானவன் பயிர் அழிந்த ஆத்திரத்தால் கண்டபடி பேசினான்.

தியானத்திலே இருந்து எழுந்த நானக், சிறிதும் அந்த ஏழை மகன் மீது கோபப்படாமல், 'அன்பரே கோபமோ ஆத்திரமோ படாதீர் இந்த மாடுகள் உனது வயலில் மேய்ந்தால் உனக்கு நட்டம் வராது. மேலும் மேலும் உனது வயல் வளமாக விளையப் போகிறது பார் இதுவரை விளையாத அளவுக்கு உனது வயல் விளைய போவதைப் பார்' என்றார் நானக்

மாடுகள் பயிர்களை மிதித்து மேய்ந்து நாசப்படுத்திவிட்டதை நான் நானக்கிடம் கேட்டால், அவன் என்னைக் கேலி செய்கிறான். அடுத்த முறை நல்ல விளைச்சல் விளையும் என்று கிண்டலும், குத்தலுமாகப் பேசுகிறான் என்று அந்த ஏழைக் குடியனவன் ஓடிப்போய் ஊர்த் தலைவரிடம் அழுது புகார் கூறினான்.

ஊர்த் தலைவரல்லவா? உடனே தனது வேலைக்காரர்களை ஏவி, உழவன் புகார் உண்மைதானா? என்று பார்த்து வருமாறு கூறினார் அந்தப் பணியாட்கள், ஏழை ஊழவனுடன் சென்று அவர்கள் வயல்களைப் பார்த்தார்கள்.

என்ன புகார்களை அநத ஏழை விவசாயி ஊர்த் தலைவரிடம் கூறி அழுதானோ, அதற்கு நேர் மாறாக மாடுகள் பயிர்களை மிதித்துத் துவைத்ததற்கான அடையாளங்களோ பயிர்களை மாடுகள் மேய்ந்ததற்கான அரைகுறை கதிர் தாள்களோ, மொத்தத்தில் மாடுகள் வயல்களில் இறங்கியதற்கான சுவடுகளோ ஏதும் அவர்கள் கண்களுக்குப் புலப்படவில்லை.

ஏழை விவசாயி அழுதான் என்ன சொல்வது என்று திணறினான்! தலைவரிடம் தந்த புகார் பொய்யாய் போய் விட்டதே. எப்படி என்று திகைத்தான். உண்மையா பொய்யா வென்று நடந்ததைப் பார்க்க வந்த தலைவரது வேலையாட்கள், அந்தக் குடியானவனைக் கண்டபடி ஏசினார்கள் தலைவரிடம் சென்று, நானக் மீதும், மாடுகள் மீதும், அந்த வேளாளன் கூறியதெல்லாம் பொய்ப் புகார்கள் என்று கூறிவிட்டார்கள்.

ஆனால், உழவன் ஐயா எனது கண்களிரண்டாலும் பார்த்தது உண்மை, சத்தியம். மறுபடியும் பயிர்கள் எப்படியோ வளர்ந்துவிட்டன ஐயா என்று அழுது கொண்டே கூறினான் அவன். ஆனால் ஒன்று ஐயா, எனது வார்த்தைகளை இப்போது நீங்கள் நம்பமாட்டீர்கள். ஏனென்றால் ஏழை ஆனால் நானக் ஏதோ ஒர் அற்புதம் செய்து நாசமாக்கப்பட்ட எனது பயிர்களை மீண்டும் வளரச் செய்து விட்டார் போகப் போக எனது உண்மையை நீங்கள் உணர்வீர்கள் என்றான்

விவசாயி ஏழைதான். ஆனால், எக்காரணம் கொண்டும் பொய் பேசமாட்டான். நானக்கிடம் ஏதோ ஓர் கடவுள் சக்தி இருக்கிறது என்பது ஊர்த் தலைவரது நம்பிக்கை. அதற்குச் சான்றாக இருக்கிறது இந்த ஏழை விவசாயினுடைய புகார். எனவே எப்படியும் நானக்கின் கடவுள் சக்தி என்ன என்பதைக் கண்டு பிடித்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து அதற்கான நேரத்தை எதிர்பார்த்திருந்தார் தலைவர்.

நாட்கள் நகர்ந்தன மதியம் நேரம் கடும் வெயில்! மாடுகள் புல் மேய்ந்து கொண்டிருந்தன. நானக் தன்னை மறந்தார். தரையில் படுத்தவர் படுத்தபடியே மெய் மறந்து கிடந்தார். என்ன நடக்கிறது என்று அவருக்கே தெரியாத ஒரு தியான மயக்க நிலை அவருக்கு.

சூரிய வெப்பம் நானக் முகத்தைத் தீய்த்துக் கொண்டிருந்தது. அவ்வளவு கடுமையான வெயில் வெப்பம் அவரது முகத்தில் விழுந்து கொண்டிருந்ததும் அவருக்கு ஏதோ ஒரு மெய் மறந்த நிலை.

அந்த நேரத்தில் அவர் படுத்துக் கிடந்த தரையருகே இருந்த அடர்ந்த புதர் ஒன்றிலே இருந்து ஒரு நல்ல பாம்பு சீறியபடியே வெளிவந்தது. நானக் என்ன விழித்துக் கொண்டா இருக்கிறார் பயந்து எழுந்து பாம்பு பாம்பு என்று ஓடிட அந்த பாம்பு நானக் முகத்தை நோக்கிச் சென்றது. தன்னுடைய படத்தை விரித்தது. நானக் முகத்திற்கு மேலே படத்தை அகலமாக விரித்துக் கொண்டும், ஒரடி உயரத்துக்கு மேலே தன்னுடைய உடலைத் தூக்கிக் கொண்டும் அருள்ஞான பிஞ்சுவுக்குக் குடைபோல பிடித்துக் கொண்டே நின்றது

அப்போது அந்த வழியே ஊர்த் தலைவர் எங்கோ போய் விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, இந்தக் காட்சியைப் பார்த்துத் திகைத்து அப்படியே நின்று விட்டார்.

ராய்புலார் என்ற பெயருடைய அந்த ஊர்த் தலைவர் சிறந்த பக்திமான் அப்போதுதான்் அவரது நீண்டநாள் சந்தேகம் உண்மை என்று நிரூபணமாகிவிட்டதை அவர் அறிந்தார்.

உடனே, ஊர்த் தலைவர் ஊருக்குள் சென்று தான் கண்ட உண்மையை ஊராருக்குத் தெரிவித்தார். நேராக மேதாகலூராய் வீட்டிற்கு ஓடிப்போய்தான் கண்டதைக் கூறி நானக் மனிதரல்லர்! அவர் ஓர் அருளாளர் என்று கூறி அவரும் நம்பினார் ஊராகும் நம்பினார்கள்!