மகான் குரு நானக்/தெய்வம் ஒன்றே

3. தெய்வம் ஒன்றே

மிழ் சித்தர்கள் தவங்களை இயற்றி, யோகிகளாக மாறி, தமிழ்ப் பண்பாடுகளுக்கு ஏற்றவாறு ஆன்மீகத் தத்துவங்களை வளர்த்து, மக்களுக்கு இறைஞானத்தைப் போதித்தார்களோ, அதே போன்ற கொள்கைகளை, சித்தாந்தங்களை வட நாட்டு மக்களுக்கும் கூறிட கடுந்தவமியற்றிய கர்ம யோகி குருநானக்கென்ற ஞானி பஞ்சாப் மாநில மக்கள் அவரை அவதார புருஷர் என்றார்கள். நானக்கின் தந்தைக்கோ நம்பிக்கை ஏற்படவில்லை.

அவர் வாழ்ந்த ஊர்த் தலைவரான ராய் புலார், தான் கண்ட அற்புதத்தை அவரது தந்தையிடம் நேருக்கு நேர் கூறிய போதும்கூட, நானக் தந்தைக்கு நம்பிக்கை உருவாகவில்லை. மாறாக, மகன் மீது மட்டற்ற கோப உணர்ச்சியே கொண்டிருந்தார். அதற்கு அவர் காரணம் கூறும் போது, மாடுகளை மேய்க்கச் சென்றவனுக்குத் தொழிற்கடமை, பொறுப்பு இருந்தால் மாடுகள் வயலிலே புகுந்து மேய்ந்து துவம்சம் செய்யுமளவுக்கு விட்டிருப்பானா என்பது போன்ற உளுத்துப் போன காரணங்களை அவர் பேசிக் கொண்டே இருந்தார். பலர் பல உண்மைகளைக் கூறியும் அந்த பழமை விரும்பி மாறாமலே இருந்தார். குருநானக்கின் தந்தை அவனை மாடு மேய்க்க விட்டது பெரும் தவறு என்று எண்ணி மாடு மேய்க்கும் தொழிலுக்குப் போக வேண்டாமென்று எண்ணினர்.

நானக்கும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றபடி தனது தலையை ஆட்டி இனி போக மாட்டேன் என்ற அடையாளத்தைத் தந்தைக்கு உணர்த்தி விட்டார். இப்போது அவருக்கு நேரம் கிடைத்தது. தியானத்திற்கு நிறைய நேரம் செலவழித்தார். தந்தை அதைக் கண்டு வருத்தமுற்றார்.

நானக் வயது பதினாறு - பதினேழானது அதற்காக தனது குடும்பம் மீது பற்றோ, பொறுப்போ ஏதுமே எழவில்லை அவருக்கு ஒருநாள் தந்தை நானக்கைக் கூப்பிட்டு, 'மகனே! பொருளில்லார்க்கு இந்த உலகம் இல்லையப்பா! அடுத்த உலகமான அருள் உலகத்தையே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்! தவறு மகனே அது பொருள் இல்லா ஏழையை எவனும் மதிக்கமாட்டான். அருள் உலகத்து நடவடிக்கைகளின் வழிபாடு களைச் செய்யக் கூட பொருள் தேவையப்பா வெறும் யோகமும், தியானமும் செய்வதால் பொருள் வராது; சேராது. எனவே, விவசாயமாவது செய்! வளமாக வாழ்வாய்! இப்படியே ஆன்மீகவாதியாக இருந்தால், நான் செத்ததற்குப் பிறகு நீ மிகவும் துன்பப்படுவாய் நானக். நன்றாக யோசனை செய் மகனே என்று கெஞ்சாத குறையாய் மகனிடம் கூறினார்.

தந்தையே! நான் இப்போது விவசாயம் செய்து கொண்டு தான்னே இருக்கின்றேன். விடாமுயற்சியோடும், பக்தியோடும் நான் வேளாண்மை செய்து கொண்டுதான் இருக்கின்றேன். உண்மையப்பா இது நம்புங்கள் என்னை என்றார் நானக்.

திருதிருவென விழித்தார் மேதாகலூராய். "என்னப்பா சொல்கிறாய்? விவசாயமா செய்து கொண்டு இருக்கிறாய்? அதனால் பெற்ற லாபம் என்ன?" என்று நானக்கின் தந்தை தன் மகனைக் கேட்டுவிட்டு, இவனுக்கு ஏதாவது சித்தப் பிரமை ஏற்பட்டிருக்குமோயென்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்போது நானக் "அப்பா, எனது உடலே வயல், உள்ளெளியே உழவன் அடக்கம் என்ற நீரைப் பாய்ச்சுகின்றேன்; தெய்வீகம் என்ற விதையை விதைத்துக் கொண்டிருக்கிறேன். அன்பு எனும் பயிர் முளை கிளம்புகிறது. உண்மை எனும் இடத்திலே இருந்து அதைக் காத்து வருகிறேன். மகிழ்ச்சியின் பெருங்களிப்பே எனக்கு கிடைக்கும் ஊதியம். அந்தக் களிப்பே என் ஆன்மாவின் வளத்துக்குரிய ஆதாரமாக அமைந்துள்ளது" என்றார் நானக்.

என்ன கூறுகிறான் மகனென்று தந்தைக்குப் புரியவில்லை. விவசாயத் தொழில் அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ, ஏதேதோ வாதம் பேசி நம்மைத் தட்டிக் கழிக்கிறான் மகன் என்று எண்ணிக் கொண்டார் தந்தை.

ஒருவேளை மகன் வியாபாரத் தொழிலிலாவது விருப்பம் காட்டுவானாவென்று எண்ணிய தந்தை 'நானக் கடை வைத்துக் கொடுக்கட்டுமா? வியாபாரமாவது செய்கிறாயா?' என்று கேட்டார்.

'அப்பா, எனது உடல் ஒரு கடிை அதில் தெய்வீகம் எனும் சாமான்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். அந்தக் கடையிலே இருந்து உண்மை' எனும் செல்வத்தை வருமானமாகப் பெறுகிறேன் என்றார் நானக் தந்தையிடம்.

நாம், கேட்டதற்கு நானக் ஏதேதோ பதில் கூறுகிறானே என்று நினைத்தாரே தவிர, என்ன சொல்கிறான் தனது மகன் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை அவரால் 'குதிரை வாணிகம் செய்கிறாயா மகனே?' என்று கேட்டார் தந்தை!

குதிரை வியாபாரமா? நான் என்ன அரேபியனா? என்று கேட்கவில்லை நானக், தன் தந்தையை "உண்மை என்பதுதான் குதிரை அந்தக் குதிரையை விற்பவன்தான் உண்மையான வாணிகன் அந்த உண்மை என்ன ஊதியம் தரும் தெரியுமா அப்பா? நற்குணம் என்ற வருவாய் தான் அது. இறைவனை அடைவதற்கு வழி அதுதான்' என்று நானக் தந்தையிடம் கூறினார். 'சரி எதுவும் வேண்டாம் உனக்கு அரசு பணி ஏதாவது செய்கிறாயா நானக்?' என்று கேட்டார் தந்தை!

"அப்பா, இறைவன் ஒருவனே என் தலைவன். அவனைப் பணிந்து இறை ஊழியம் செய்வதே எனது தொழில். கடவுளின் பார்வை பெறுவதுதான் எனக்குப் பேரின்பம். நான் பெறுகின்ற ஊதியமும் அதுதான்” என்றார் நானக். இவ்வாறு கூறிய அவர், உடனே இறை தியானத்தில் அமர்ந்து விட்டதைக் கண்டு தந்தை நின்று கொண்டே இருந்தார்.

நானக் தனது தியானத்திலிருந்து எழ அதிக நேரமானது. அதுவரை அவரது தந்தை மேதாகலூராய் மகன் எதிரிலேயே நின்று கொண்டிருந்தார். அதையும் கவனியாமல் நானக், தனது அறை யிலே சென்று அமர்ந்தார். அப்போது அவரது அம்மா மகனை உண்பதற்காக அழைக்க வந்தார்.

'மகனே, நேரம் காலம் ஏதுமில்லாமல் கடவுளையே பூஜை செய்து தியானித்துக் கொண்டிருக்கிறாயே, இது சரியன்று பெரிய ஆன்மிக ஞானிகளாலும், வேதாந்தி - சித்தாந்திகளாலும் கண்டறிய முடியாத ஒரு பரம்பொருளை, நீ தேடிக் கொண்டு வாழ்நாளை வீழ்நாளாக்குவது நியாயமன்று உன்னால் எல்லாம் கடவுளைக் காணமுடியுமென்று நினைக்கிறாயா மகனே' என்று வருத்தம் தவழ்ந்த முகத்தோடும் குரலோடும் கேட்டார் தாயார்.

அதற்கு நான்க், 'பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்பது தாங்கள் அறியாததா அம்மா? பிறப்பால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பது கிடையாதம்மா! கடவுளைக் காண்பதற்குத் தனித் தகுதி பெற்றவர்கள் யார்? ஒருவரும் இல்லை தாயே! கடவுளை எந்த நேரமும் மனதில் நிறுத்தி யார் தியானம் செய்கிறார்களோ, அவர்களால்தான் காண முடியும் கடவுளை. அவர்கள்தான் உயர்ந்தவர்கள் பிறப்பால் அன்று யார் கடவுளை மறந்து விடுகிறார்களோ, அவர்கள் தாழ்ந்தவர்கள் இதுவும் பிறப்பால் வருவதல்ல தாயே! செயலால் தான் என்று நானக் தனது தாய்க்கு தமிழ்நாட்டுச் சித்தர்களது எண்ணத்தையே எதிரொலித் தார். இவ்வாறு தனது அன்னையிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் தியானத்தில் அவரையம் அறியாமலேயே அவர் மூழ்கிவிட்டார்.

இப்போது என்ன வயது தெரியுமா நானக்குக்கு? பதினேழு முடிந்தது. இந்த இளம் வயதிலேயே நானக், உளம் உருக, உடல்உருக, கடவுள் தியான வழிபாடுகளிலேயே காலம் கழித்து வந்தார். தகப்பனாருக்கு இந்தச் செயல் மேலும் வருத்தத்தையே தந்தது.

மகனிடம் இப்படிப்பட்ட ஒரு தெய்வீக வழிபாடு இருப்பதை மேதாகலுராய் ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. இவ்வாறு நினைத்த நேரத்தில் தியான மயக்கத்தில் மகன் ஆழ்ந்து கிடப்பதை அவர் ஒரு வியாதியாகவே நினைத்துக் கொண்டார். அந்த நோயை இன்னதென அறிந்து கொண்டு மருத்துவம் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒரு தெம்பு அவர் உள்ளத்திலே தெரிந்தது. அதனால், அடுத்த ஊரிலே இருந்த மருத்துவரை அழைத்து வந்து மகனது உடலைச் சோதனை செய்யும்படி கூறினார் தந்தை!

நானக்கின் தந்தை அவரை அழைத்துக் கொண்டு வரும் போதே தனது மகன் உடல் நலக் குறைவை எப்படியாவது சுகப்படுத்த வேண்டும் என்று மருத்துவரைக் கேட்டுக் கொண்டதற் கேற்ப, மருத்துவர் நானக் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நானக் தனக்குள்ளே சிரித்துக் கொண்டு, பின்பு மருத்துவரைப் பார்த்து 'மருத்துவரே! உங்களுடைய உள்ளம் என்ற நாடியை முதலில் சோதித்துப் பாருங்கள்' என்றார்.

நானக் கூறியதைக் கேட்டதும் மருத்துவர் ஒரு கணம் திகைத்து நின்றார். மறுபடியும் அவர் மருத்துவரைப் பார்த்து, மருத்துவரே! எனக்கு என்ன நோயென்று உமக்குத் தெரியுமா? வேறு ஒன்றுமில்லை. கடவுளிடம் இருந்து பிரிந்து விட்டதால் உருவான பிரிவுநோய். அதன் ஆற்றாமையால் நான் வருந்திக் கொண்டிருக் கிறேன். அந்த வருத்தமே எனது நன்மைக்கும், நல்வாழ்விற்கும் ஒர் அடையாளமாக உள்ளது. அதனால் வருத்தமே ஒரு நோயாகவும், அதைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இருக்கிறது. இரண்டுமே ஒன்றுக்குள் ஒன்றாகவே இருக்கின்றன என்றார்.

நானக் பேசிய தத்துவார்த்தங்களைக் கேட்ட மருத்துவர். பதினேழு வயதுடையவன் பேச்சா இது? ஏதோ எல்லாம் உணர்ந்த ஒரு ஞானியைப் போல பேசுகிறானே என்று திகைத்து நின்றார். அவருடைய தத்துவ விளக்கம் வைத்தியரைத் திணறடித்தது. "இந்த வாலிபன் சாதாரணமான ஒரு சிறுவனல்ல. மக்களை ஞான வழியில் திருப்ப வந்த ஒரு தீர்க்கதரிசி, அதனால், அவர் உடல்நலத்தைப் பற்றி அக்கறை கொள்ள அவசியமில்லை" என்று மருத்துவர் நானக்கின் தந்தையிடம் கூறிவிட்டுச் சென்றார்.

சரக்குகளை விலைக்கு வாங்கி மற்ற கடைக்கு விநியோகம் செய்ய நானக்கிடம் 20 ரூபாய் கொடுத்து சந்தைக்கு அனுப்பி வைத்தார் தந்தை.

மகன் நானக், தனது நண்பனுடன், தந்தை கூறிய அறிவுரைக்கேற்றவாறு அடுத்த ஊரிலே கூடும் சந்தைக்குச் சென்றார். அப்போது அவர் சென்ற வழியிலே சாமியார்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு ஒரே பசி! கையிலே பணமில்லை! அதனால் களைத்து ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து விட்டார்கள்.

என்ன காரணம்? ஏன் இப்படிச் சோர்ந்து படுத்துவிட்டீர்கள் என்று நானக் அவர்களை விசாரித்தபோது, சாமியார்கள் பசியால் களைத்து நடக்க முடியாமல் படுத்துக் கிடக்கும் விவரத்தை அறிந்து கொண்டார். தனது நண்பர் பாலாவிடம் தந்தை கொடுத்த இருபது ரூபாயையும் கொடுத்து, சாமியார்கள் பசியைப் போக்கிட ஏதாவது உணவுகளை வாங்கி வருமாறு பக்கத்து ஊருக்கு அவரை அனுப்பி வைத்தார். சாமியார்களின் பசியை நானக் தீர்த்தார்.

இருபது ரூபாயை வியாபாரத்திற்காகப் பெற்றுச் சென்ற மகன் திரும்பி வருகிறானே, எவ்வளவு லாபம் சம்பாதித்து வந்திருக்கிறானோ என்ற ஆசையோடு ஓடி வந்து, மகனே சென்றாயா சந்தைக்கு? சரக்குகளை வாங்கி மற்ற கடைகளுக்கு விற்று எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்? என்று தந்தை கேட்ட போது, சாமியார்களுக்கு பசிதானம் செய்துவிட்ட மன நிறைவோடு வந்த நானக், வெறுங்கையோடு வந்ததைக் கண்டு தந்தைக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. அப்போது நானக் நண்பன் பாலா நடந்த விவரத்தை மேதாகலூராயிடம் கூறினார். நானக்கின் தந்தை அவன் சொல்வதைக் கேட்டவாறே நானக்கைப் பார்த்தார். அவர் பத்மாசனத்தில் ஆழ்ந்து இருந்தார்.

மேதாகலுராய் தனது மகள் பீபி நானகியை, சுல்தான்பூர் ஆளுநராக இருந்த தெளலத்கான் லோடியிடம் அமைச்சராக இருந்த திவான் ஜெய்ராம் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். பீபி நானகி செல்வச் சீமாட்டி நல்ல செல்வாக்கு படைத்த குடும்பத்தில் வாழ்ந்து வந்தார். அந்த அம்மையாருக்குத் தன் தம்பியின் மீது அளவற்ற பாசம் உடன்பிறப்பல்லவா?

தனது தம்பி நானக், பெற்றோரை நல்லபடியாக வைத்திருக்க வில்லையே என்ற கவலை. அதனால், தம்பியை தனது வீட்டுக்கு அழைத்துவந்து, கணவரிடம் கூறி, கவர்னரிடம் ஏதாவதொரு நல்ல வேலையை வாங்கிக் கொடுத்து, தாய்வீட்டை நன்னிலைக்குக் கொண்டு வரலாமே என்று அவர் திட்டமிட்டார். தாள்வாண்டிக்கு வந்தார் தமக்கை தந்தையிடம் தனது எண்ணத்தை எடுத்துரைத்தார். அப்பா சம்மதம் தந்தார். அதனால் தம்பியை அழைத்துக் கொண்டு சுல்தான்பூர் வரத் திட்டமிட்டார் பீபி நானகி.

தாள்வாண்டி ஊர்த் தலைவர் ராய்புலார், நானக்கின் நெருங்கிய நண்பர் மட்டுமல்லவே - அவர் ஒர் அவதார மனிதர் என்ற நம்பிக்கையைக் கண்ணால் கண்டு ஊராருக்கு உரைத்தவர் அல்லவா? அப்படிப்பட்ட தனது நண்பர், தம்மை விட்டுப் பிரிந்து தனது தமக்கை வீடு செல்வதை எண்ணி வருத்தப்பட்டு, தமது வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று, 'எனக்கு தங்களது வாழ்த்தும் அறிவுரையும் வழங்கி விட்டுச் செல்ல வேண்டும் என்று கண்ணீர் தளும்ப, தழதழத்தக் குரலில் கேட்டுக் கொண்டார்.

"அன்பரே மக்களுக்கு உண்மையோடு தொண்டு செய்யுங்கள். யாருக்கு உங்களது உதவி தேவையோ அவர்களுக்குத் தவறாமல் உதவுங்கள். துன்பப்படும் மக்களின் துயர் துடைக்கக் கவனம் செலுத்துங்கள். தாங்கள் மக்களுக்கு வழங்கும் நீதியைக் கருணை யோடு வழங்குங்கள். இறைவனுடைய எல்லா நலமும் பெற்று நல்வாழ்வு பெறுவீர்கள்." என்ற அறிவுரையை ஊர்த் தலைவர் ராய்புலாருக்குக் கூறினார். பிறகு அவரிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு தனது தமக்கையுடன் சுல்தான்பூர் சென்றார்.

சுல்தான் பூரில் அக்காள் கணவர் ஓர் அமைச்சராதலால், அவர் தனது மைத்துனர் நானக்குக்கு தானியக் களஞ்சியம் காப்பாளர் என்ற வேலையைக் கவர்னரிடம் பெற்றுத் தந்தார். அந்த வேலையைப் பெற்றுக் கொண்ட நானக் தனது மைத்துனர் பெயருக்கு இழுக்கேதும் நேரிடாதவாறு பொறுப்புடன் பணியாற்றி வநதாா.

தனது தம்பி, கணவர் பெற்றுக் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்து வருவதைக் கண்ட தமக்கையார், தம்பியைப் பற்றி இனி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. தம்பி திருந்தி விட்டான் என்று மகிழ்ச்சியடைந்தார்.

தம்பிக்கு நல்ல இடத்திலே பெண் பார்த்து திருமணம் செய்து விடலாம் என்ற முடிவுக்கு தமக்கை வந்தார். கணவரிடம் இது பற்றி கலந்துரையாடினார். தம்பியின் சம்மதத்தைப் பெற்றிட நானக்கிடமும் கூறினர். அக்காள் வார்த்தையை தம்பி மறுக்காமல் ஒப்புக் கொண்டார். இந்தச் செய்தியை தனது தந்தை மேதாகலூராய்க்கும் மகள் தெரிவித்தார்.

அமைச்சர் மைத்துனர் தானியக் களஞ்சியக் காப்பாளர் பதவியும் நிரந்தரமானது. அதனால் பீபி நானகி, தனது தம்பிக்கு பணக்காரர் வீட்டுப் பெண்ணாகப் பார்த்து பேச்சு வார்த்தையும் நடத்தி, பெண்வீட்டாரது சம்மதத்தையும் பெற்றார். பெண்ணின் பெயர் மட்டாசுலாகனி என்பதாகும். நல்ல குடும்பத்திலே பிறந்த அந்தப் பெண்ணுக்கும் நானக்குக்கும் திருமணம் நடந்தது. தாய் தந்தை, உறவினர் அனைவரும் ஆசி கூறி மணத்தை முடித்து வைத்தார்கள். தமக்கைக்கோ பேரின்பம்! உதவாக்கரை என்று தனது தந்தையால் வெறுக்கப்பட்டு வந்த தம்பியை அழைத்துக் கொண்டு வந்து, தனது கணவரின் ஆசியோடு நல்ல வேலையைப் பெற்றுத் தந்து, நல்ல குடும்பப் பெண்ணை, நற்குணவதியை, பணக்காரர் வீட்டுப் பெண்ணாக்ப் பார்த்து தனது தம்பிக்கு மனம் செய்து வைத்து, ஒரு பொறுப்புள்ள குடும்பஸ்தனாக்கி விட்டோமே என்ற மகிழ்ச்சியிலே தமக்கை பேரின்பம் கண்டார்.

நானக்கின் இல்லற வாழ்க்கை இனிமையாக நடந்து வந்ததின் அடையாளமாக, அவருக்கு பூரீசந்த் என்ற ஆண் குழந்தையும், லட்சுமி சந்த் என்ற பெண் குழந்தையும் பிறந்தார்கள். திருமணம் நடந்து மூன்று ஆண்டுகளாயின. இப்போது அவருக்கு வயது இருபது!

சுல்தான்பூர் வட்டாரத்தில் மழை இல்லை. வயல்கள் வறண்டன. மக்கள் உணவுப் பஞ்சத்தால் கடும் வேதனையடைந்து சொல்ல முடியாத கஷ்டங்களைப் பட்டு ஊர் ஊராக அலையும் நிலை ஏற்பட்டு விட்டது.

சுல்தான் பூர் மிகவும் நற்குணவான் என்று மக்களால் போற்றப் பட்டவர் மனித நேயம் கொண்ட மக்கள் தொண்டர். அவர் மக்கள் படும் உணவுப் பஞ்சத்து வேதனைகளை நேரில் சென்று பார்த்து. ஆறாத் துயரம் அடைந்தார். அப்படிப்பட்ட அவர் என்ன செய்தார் தெரியுமா?

நானக்கை அழைத்தார் உணவுப் பஞ்சத்தினால் மக்கள் துன்பப் படக்கூடாது என்று அவருக்குக் கூறி, மக்களில் யார் வந்து விலைக்குக் கேட்டாலும், இல்லை என்று சொல்லாமல் தான்ியங்களைக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நானக்கும் அதுதான் சரியான யோசனை என்று கூறி, அவரது உத்தரவுப்படியே நடப்பதாகச் சொல்லி விட்டு வந்தார்.

மறுநாள், அரசாங்கத் தானியக் களஞ்சியத்தில் யார் வேண்டுமானாலும் சென்று உணவு தானிய வகைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று தண்டோரா போடப்பட்டது. மக்கள் தாங்க முடியாத மகிழ்ச்சியால் அலைமோதிச் சென்று கூட்டம் கூட்டமாக தானிய வகைகளை விலைக்கு வாங்கலானார்கள்.


நானக் அல்லவா தானியக் களஞ்சியக் காப்பாளர் அவரே மக்களுக்குரிய தானியங்களை அளந்து கொடுத்து வந்தார். தானியங்களை அளவுக் கருவிகளால் ஒன்றிரண்டு மூன்று என்று அளந்து போடுவார். பதின்மூன்று என்ற எண் வந்துவிட்டால் உடனே தன்னை மறந்து தானிய வகைகளை அளந்தது அளந்தபடியே தியானத்தில் மூழ்கிவிடுவார். அதற்குப் பிறகு அவரைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்றே அவருக்குத் தெரியாது. தானியம் வாங்க வந்த மக்கள் சிலர் ஒழுங்காகப் பணத்தைப் போட்டுவிட்டுப் போய் விடுவார்கள். அதைப் பற்றியெல்லாம் நானக்குக்கு ஒன்றும் தெரியாது.

பதின்மூன்று என்ற எண்வரும்போது ஏன் தானியம் அளப்பதை அப்படியே நிறுத்தி விடுகிறார்? என்று மக்கள் யோசித்தார்கள். அந்த எண் வரும் நேரத்தில் மட்டும் ஏன் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார்?

பஞ்சாபி மொழியில் பதின்மூன்று என்ற எண்ணுக்கு தேரா என்று பெயர். அந்தத் தேரா என்ற சொல்லுக்கு 'உன்னுடைய' அல்லது 'உங்களுடைய’ என்று பொருள். அதனால், தேரா என்று எண்ணும்போது, 'உன்னுடைய' என்னும் பொருளையே நானக் எண்ணிக் கொண்டார். அதாவது, கடவுளே! உன்னுடைய சேவைக்கே நான் இருக்கிறேன்' என்று நானக் நினைப்பார். அந்த நினைவு வந்ததும் தம்மை மறந்து அவர் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார்! என்ற காரணம் பிறகுதான் எல்லாருக்கும் தெரிய வந்தது.

நாட்கள் இவ்வாறு சென்றன. தானியங்களை விற்றதற்கோ, அதற்கு வசூலான பணத்திற்கோ கணக்கு வழக்கில்லை. கடவுளின் சேவைதான் தானியத்தை அளந்து மக்களுக்குக் கொடுப்பது என்றெண்ணிய நானக்குக்கு கணக்கு எழுத நேரம் ஏது? அல்லது கணக்கு எடுக்க வைக்க காலம் ஏது?

கவர்னருக்கு இந்தச் செய்திகள் எல்லாம் தெரிந்தது. தானியக் களஞ்சியத்துக் கணக்குகளை எடுக்குமாறு கவர்னர் உத்தரவிட்டார். அரசு அதிகாரிகள் களஞ்சியத்திற்கு வந்து கணக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட நானக், களஞ்சியத்தை விட்டே வெளியேறிவிட்டார்.

களஞ்சியத்தில் கணக்கு எடுக்கச் சென்ற அதிகாரிகள். தானிய வகைகள் மலைமலையாகக் குவிந்து கிடப்பதைக் கண்டார்கள்.

பணப்பெட்டியைத் திறந்து பார்த்தார்கள். பெட்டி நிரம்பிப் பணம் வழிந்து கிடந்தது. தானியங்கள் விற்பனை ஆனதற்கான அடையாளங்கள் ஏதும் தென்படவில்லை. அதே நேரத்தில் பணம் நிறைய நிரம்பிக் கிடந்தது. ஒன்றுமே புரியாத அரசு அதிகாரிகள், வியப்பால் களஞ்சியக் கிடங்கை விட்டு வெளியேறினார்கள்.

நானக் தானியக் களஞ்சியத்தை மட்டும் விட்டு வெளியேற வில்லை. இல்லற வாழ்க்கையை விட்டு விட்டே சென்றுவிட்டார். ஆம், அவர் துறவியானார் தனது எண்ணத்தை நானக், தனது தமக்கையின் கணவரிடம் கூறினார்; வெளியேறினார்.

அவர் தமக்கையிடமும், மைத்துனரிடமும் கூறிவிட்டு வெளியேறும்போது "நான் இல்லற வாழ்க்கையிலிருந்தே வெளியேறுகிறேன். ஏனென்றால், எனது பிறவியின் முதல் வேலை முடிந்துவிட்டது. இல்லறத்தில் இருந்து துறவறத்திற்குப் போகிறேன். மனிதப் பிறவியில் எப்படி உண்மையாக வாழ வேண்டும் என்பதைக் குடும்பத்தில் வாழ்கின்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவே செல்லுகின்றேன். இல்லறத்தில் வாழும்போதே இறைவனை அறிவது எப்படி என்பதை உலகத்துக்கு உணர்த்தவே போகின்றேன்” என்று நானக் கூறினார்.

தமக்கையும், மைத்துனரும் போக வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறினார்கள்! கண்ணிர் விட்டார்கள். இருந்தும், நானக் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார். உலக மக்களுக்குரிய ஞானவழிகளை உபதேசங்களாக ஊர்தோறும் உரைக்கவே நானக் சுல்தான்பூர் நகரைவிட்டுப் புறப்பட்டார்.

நானக் துறவறத்தைக் கவர்னர் கேள்விப்பட்டு வருந்தினார். உண்மையான ஒரு மக்கள் ஊழியரை தெய்வாம்சம் பெற்ற ஒரு தானியக் களஞ்சியக் காப்பாளரை இழந்து விட்டோமே என்று திவான் ஜெய்ராமிடம் தனது கவலையைத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் பீபி நானகி கண்ணிர் சிந்தியபடியே இருந்தார்.