மணமக்களுக்கு/ஆணுக்குக் கற்பு

ஆணுக்குக் கற்பு

6.  இக்கால மக்களிற் சிலர் வள்ளுவர் மீதும் குறை கூறத் தொடங்கி விட்டனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பெண்களுக்கு மட்டும் கற்பை வலியுறுத்தி, ஆண்களை அடியோடு விட்டு விட்டார் என்பதுதான். அது தவறு. உண்மையுமல்ல. ஆண்களுக்குக் கற்பை மிக, மிக வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அதுவும் பெண் மக்களையே உவமையாகக் காட்டிக் கூறியிருக்கிறார்.

“ஆண் மகனே! இதோ பெண் மக்களைப் பார். அவர்கள் எப்படிப் பிறர் துணையின்றித் தங்களைத் தாங்களே காத்துக் கொள்கின்றார்களோ, அப்படி நீயும் கற்பு நெறி நின்று உன்னை நீ காத்துக் கொள்ளாவிடில், உனக்கு ஏதடா பெருமை?” என்று கன்னத்தில் அறைந்தது போல, அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறார். குறளும் இதுதான்:

“ஒருமை மகளிரே போலப் பெருமையும்
 தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.”

மணமகனும், மணமகளும் இவ்விரண்டு குறள்களையும் மனப்பாடம் பண்ணியாக வேண்டும், பிறகு அக்குறள்களை வாழ்க்கைக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.