மணமக்களுக்கு/புகுந்த வீடு

புகுந்த வீடு

பெண்ணாகப் பிறந்த ஒவ்வொரு பெண்ணும், பிறந்த குடிப் பெருமையை நிலை நிறுத்தியாக வேண்டும். இதற்காகப் பிறந்த குடிப் பெருமைகளை எல்லாம் புகுந்த வீட்டிற் போய்ப் பேசிக் கொண்டிருப்பதல்ல இதற்கு வழி. ஒரு பெண் பேசினாள். “எங்கள் வீட்டுச் சாக்கடையெல்லாம் பாலும் நெய்யும் ஓடும்” என்று. மற்றொரு பெண் பேசக் கேட்டேன்,“எங்கள் வீட்டில் பிச்சைக்காரர்களுக்குப் போடுகிற அரிசி கூட, இந்த வீட்டில் உலையில் போடுவதில்லை” என்று. உள்ளம் நடுங்கிற்று. அப்படிப் பேசினால், அது பிறந்த குடிக்குச் சிறுமையைத்தான் தேடித் தரும். பிறந்த குடிப் பெருமையை நிலை நிறுத்துவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது புகுந்த குடிப் பெருமையை உயர்த்துவதன் மூலம்தான் முடியும். ஆகவே, இன்றைய மணமகள் புகுந்த குடிப் பெருமையை உயர்த்துவதன் மூலம், பிறந்த குடிப் பெருமையை நிலை நிறுத்தியாக வேண்டும். இது பிறந்த குடிக்கும், புகுந்த குடிக்கும் பெருமை தேடியதாக முடியும், இதை மணமகள் தன் உள்ளத்தில் வைத்து வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது.