8. சுரமஞ்சரியின் செருக்கு

ண்மூடித் திறக்கும் நேரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்து விட்டது. ஓவியன் மணிமார்பன் பயந்துபோய் ஒதுங்கி நின்றான். முல்லை திடுக்கிட்டு அலறினாள். நாலைந்து முரட்டு யவனர்களும் பூதாகாரமான மல்லன் ஒருவனும் இளங்குமரனைச் சூழ்ந்து கொண்டு அவனைத் தாக்குவதற்குத் தொடங்கி இருந்தார்கள்.

“நேற்று மாலை கடற்கரையில் வெற்றி கொண்ட சாமர்த்தியம் இப்போது எங்கே போயிற்று தம்பி?” என்று கூறி எள்ளி நகையாடிக் கொண்டே இளங்குமரன் மேல் பாய்ந்தான் அந்த மல்லன். இளங்குமரன் கன்னத்தில் அறைந்ததுபோல் பதில் கூறினான் அந்த யவனத்தடியனுக்கு.

“சாமர்த்தியமெல்லாம் வேண்டிய மட்டும் பத்திரமாக இருக்கிறது அப்பனே! என்னிடம் இருக்கிற சாமர்த்தியத்தை வைத்துக் கொண்டு உனக்கு பதில் சொல்லலாம்; உன்னுடைய அப்பன் பாட்டனுக்கும் பதில் சொல்லலாம். சந்தேகமிருந்தால், தனித் தனியாக என்னோடு மல்லுக்கு வந்து பாருங்கடா. இதோ எதிரே கோவில் கொண்டிருக்கும் சதுக்கப் பூதத்தின் மேல் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை கடைவாய்ப் பற்கள் என்று எண்ணி உதிர்த்துக் காட்டுவேன். ஆனால் ஐந்தாறு பேராகச் சேர்ந்து கட்சி கட்டிக் கொண்டு வந்து இப்படி முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு கையைத் தட்டிவிடுகிற செயலைத் தமிழர்கள் வீரமென்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கோழைத்தனம் என்பதைவிடக் கேவலமான வார்த்தைகள் வேறொன்று இருந்தால் அதைத்தான் உங்கள் செயலுக்கு உரியதாகச் சொல்ல வேண்டும்.”

“சொல்! சொல்! நீ எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிரு. உன் கை, கால்களை முறித்துப் போடாமல் இங்கிருந்து நாங்கள் கிளம்பப் போவதில்லை.”

இப்படி அவர்கள் அறைகூவவும் பதிலுக்கு இளங்குமரன் அறைகூவவும் இருபுறமும் பேச்சுத் தடித்துக் கைகலப்பு நெருக்கமாகிக் கொண்டிருந்தபோது அவர்களைச் சுற்றிக் கூட்டமும் கூடத் தொடங்கிவிட்டது. இடமோ கலகலப்பு மிகுந்த நாளங்காடிப் பகுதி. காலமோ இந்திர விழாக் காலம். கூட்டம் கூடுவதற்கு என்ன குறை? இந்நிலையில் கையில் படையலிட்டு வந்த பொருள்களடங்கிய பாத்திரத்துடனே இருந்த முல்லை மருட்சியோடு என்ன செய்வதென அறியாது திகைத்துப் போய் நின்றாள். தாக்குவதற்கு வந்தவர்கள் கொதிப்புடனும் அடக்க முடியாத ஆத்திரத்துடனும் வந்திருப்பதாகத் தெரிந்தது. அவர்களுடைய முரட்டுப் பேச்சுக்குச் சிறிதும் தணிந்து கொடுக்காமல் இளங்குமரனும் எடுத்தெறிந்து பேசுவதைக் கண்ட போது முல்லைக்கு இன்னும் பயமாக இருந்தது.

‘புறப்படும்போது தந்தையார் எச்சரிக்கை செய்தது எவ்வளவு பொருத்தமாக முடிந்துவிட்டது. இவரைக் கூட்டிக் கொண்டு வந்தால் இப்படி ஏதாவது நேருமென்று நினைத்துத்தானே தந்தை அப்படிக் கூறினார்” என்று எண்ணி நினைத்துப் பார்த்தது அவள் பேதை மனம்.

வரைந்து கொண்டிருந்த ஓவியத் திரைச்சீலையை மெல்ல சுருட்டிக் கொண்டு பயந்தாங்கொள்ளியாக ஒதுங்கியிருந்த ஓவியன் மணிமார்பன் ‘கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற்போகுமோ’ என்பதுபோல் நம்பிக்கை இழந்து நின்றான்.

‘இந்த முரட்டு மனிதரின் பிடிவாதத்தை இளக்கி ஒரு விதமாகப் படம் எழுதிக் கொள்ளச் சம்மதம் பெற்றேன். நூறு பொற் கழஞ்சுகளை அந்தப் பெண்ணிடம் பெற்று விடலாம் என்று ஆசையோடு ஓவியத்தை வரைந்து நிறைவேற்றப் போகிற சமயம் பார்த்து இப்படி வம்பு வந்து சேர்ந்ததே’ என்று நினைத்துத் தளர்ந்து கொண்டிருந்தான் மணிமார்பன். தனக்கு எட்டிக்குமரன் வீட்டு நங்கையிடமிருந்து கிடைக்கவிருக்கும் பெரிய பரிசை அவ்வளவு எளிதாக இழந்துவிட விரும்பவில்லை அந்த ஏழை ஓவியன். ‘இந்த மாபெரும் கோநகரத்தில் எனக்கு எதிரிகளும், வேண்டாதவர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள்’ என்று தன்னால் ஓவியமாக்கப்பட்டுக் கொண்டிருந்தவர் அதற்குச் சிறிது நேரத்துக்கு முன் தன்னிடம் கூறியிருந்த வார்த்தைகளை மீண்டும் நினைத்துப் பார்த்தான் மணிமார்பன். அவரைப் காப்பாற்றவும், தனக்குப் பரிசு கிடைக்கும் சந்தர்ப்பம் நழுவிப் போகாமல் காப்பாற்றிக் கொள்ளவும் ஏற்ற வழியொன்று அந்தக் குழப்பமான சூழ்நிலையில் மணிமார்பனுக்குத் தோன்றியது. பயந்து நிற்கும் இந்தப் பெண்ணோடுதான் அவர் நாளங்காடிக்கு வந்தார். வழிபாடு முடிந்ததும் இந்தப் பெண் அவருக்கும் எனக்கும் எள்ளுருண்டை கொண்டு வந்து கொடுத்த போதுதான் இந்த வம்பே ஆரம்பமாயிற்று. ஆயினும் இப்போது இந்தச் சூழ்நிலையிலே என்னைப் போலவே இவளும் அவருக்கு ஓர் உதவியும் செய்ய இயலாமல் பயந்தாற்போல் நிற்கிறாள். ஆனால் அவருடைய ஓவியத்தை வரைந்து கொண்டு வந்து தந்தால் நூறு கழஞ்சு பொன் தருகிறேன் என்று சொன்னாளே. அந்தப் பேரழகியால் இப்போது அவரைக் காப்பாற்ற முடியும். பல்லக்குச் சுமக்கிறவர்களும் படையற் பொருள்களைச் சுமக்கிறவர்களுமாக அவளோடு நிறைய ஏவலாட்கள் வந்திருக்கிறார்கள். அவளிடம் சொல்லி அந்த ஏவலாட்களில் பத்துப் பன்னிரண்டு பேரை அழைத்து வந்தால் இங்கே நம் மனிதரை எதிர்க்கும் முரட்டு யவனர்களை ஓட, ஓட விரட்டலாமே!’ என்று மனத்தில் ஓர் உபாயம் தோன்றியது அந்த ஓவியனுக்கு.

உடனே அந்த உபாயத்தைச் செயலாக்கும் நோக்குடன் கூட்டத்தை மெல்ல விலக்கிக் கொண்டு எட்டிக்குமரன் வீட்டுப் பேரழகியைத் தேடி விரைந்தான் அவன். அப்படி விரைந்து புறப்படுமுன் இளங்குமரனும் நாளங்காடிக்கு வந்திருந்த அந்தப் பெண்ணையும் உடனழைத்துச் செல்லலாம் என்று எண்ணி அவள் நின்ற இடத்தைப் பார்த்தான் மணிமார்பன். அவளைக் கூட்டத்தின் முன்புறம் காணவில்லை. கணத்துக்குக் கணம் நெருங்கிக் கொண்டு பெருகிய கூட்டம் அவளைப் பின்னுக்குத் தள்ளி விட்டதோ என்னவோ? தானே எட்டிக்குமரன் வீட்டுப் பேரகிழயைக் காணப் புறப்பட வேண்டியதுதான் என்ற முடிவுடன் புறப்பட்டான் ஓவியன். அவள் தன் வேண்டுகோளுக்கு இணங்கித் தன் ஆட்களை உதவிக்கு அனுப்புவாள் என்றே உறுதியாக நம்பினான் அவன். அவனுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவன் ஓவியம் கொண்டு வந்து தரப்போவதை எதிர்பார்த்துத் தன் ஏவலர்கள் புடைசூழப் பல்லக்கில் காத்திருந்தாள் அவள். ஓவியன் பதற்றத்துடனே அவசரமாக வந்து கூறிய செய்தியைக் கேட்டபோது அவளது அழகிய முகம் கோபத்தால் மேலும் சிவந்தது. உடனே ஏவலாட்களை அந்த இடத்துக்கு விரைந்து போய் அவருக்கு உதவச் சொன்னதோடு அல்லாமல் தன்னுடைய பல்லக்கையும் அந்த இடத்துக்குக் கொண்டு போகும்படி கட்டளையிட்டாள் அவள். தன் நினைவு பலித்தது என்ற பெருமிதத்துடன் உதவிக்கு வந்த ஏவலாட்களை அழைத்துக் கொண்டு வேகமாக முன்னேறினான் மணிமார்பன். இதற்கிடையில் அந்த ஓவியனுக்கு இன்னொரு சந்தேகமும் ஏற்பட்டது. அந்த மனிதர் பிடிவாதக்காரர் ஆயிற்றே; ‘பிறருடைய உதவி எனக்குத் தேவையில்லை’— என்று முரண்டு பிடித்து மறுப்பாரோ’ என மணிமார்பன் சந்தேகமுற்றான்.

ஆனால் சிறிது பொறுத்துப் பார்த்தபோது தான் நினைத்திராத பேராச்சரியங்கள் எல்லாம் அங்கே நிகழ்வதை மணிமார்பன் கண்டான். செல்வத்துக்கும் செல்வாக்குக்கும் எவ்வளவு மதிப்பு உண்டு என்பது அன்று அங்கே அவனுக்குத் தெரிந்தது. அந்த எழிலரசியின் பல்லக்கு வந்து நின்றதைப் பார்த்ததுமே தாக்குவதற்கு வந்திருந்த யவனர்களில் மூவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடிவிட்டார்கள். அவள் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி வருவதைக் கண்ணுற்றதுமே இளங்குமரனைச் சூழ்ந்து தாக்கிக் கொண்டிருந்த மற்ற நான்கு யவனர்களும் தாக்குவதை நிறுத்திவிட்டு அவளை நோக்கிப் பயபக்தியோடு ஓடி வந்தார்கள். வணங்கிவிட்டு அவளுக்கு முன் கைகட்டி வாய் பொத்தி நின்றார்கள்.

“அடடா இந்தத் தடியர்கள்தானா?” என்று ஓவியன் மணிமார்பனை நோக்கிக் கேட்டுவிட்டு அலட்சியமாகச் சிரித்தாள் அந்தப் பேரழகி. ஒரு கையை இடுப்பில் ஊன்றிக் கொண்டு வனப்பாக அவள் வந்து நின்ற நிலையும் தன்னைத் தாக்கிய முரடர்கள் அவளைப் பணிந்து நிற்பதும் கண்டதுபோது இளங்குமரனுக்கு முதலில் திகைப்பும் பின்பு எரிச்சலும் உண்டாயிற்று. ‘ஒருவேளை அவளே அவர்களை ஏவித் தன்னைத் தாக்கச் சொல்லியிருக்கலாமோ’ என்று ஒரு கணம் விபரீதமானதொரு சந்தேகம் இளங்குமரனுக்கு ஏற்பட்டது. நிகழ்ந்தவற்றைக் கூட்டி நிதானமாக சிந்தித்துப் பார்த்தபோது ‘அவள் அப்படிச் செய்திருக்க முடியாது. முதல் நாள் மாலை கடற்கரையில் நடந்த மற்போரில் தன்னிடம் தோற்று அவமானமடைந்த யவன மல்லன்தான் தன்னை இப்படித் தாக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டு’மென்று தோன்றியது அவனுக்கு.

இளங்குமரனுக்குக் கேட்க வேண்டுமென்றே பேசுகிறவள் போல் இரைந்த குரலில் மணிமார்பனைப் பார்த்துக் கூறலானாள் அவள்.

“ஓவியரே! நான் இங்கே வந்து நின்றதுமே இந்த ஆச்சரியங்கள் நிகழ்வதைப் பார்த்து எனக்கு ஏதேனும் மந்திர சக்தி உண்டோ என்று வியப்படையாதீர்கள். காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலிருந்து யவனம் முதலிய மேற்குத்திசை நாடுகளுக்குச் செல்லும் பெரிய பெரிய கப்பல்கள் எல்லாம் என் தந்தையாருக்குச் சொந்தமானவை. பட்டினப்பாக்கத்தில் எங்கள் மாளிகைக்கு முன்புறம் நடந்து போகும் போதுகூட இந்த யவனர்களில் பலர் செருப்பணிந்த கால்களோடு செல்வதற்குக் கூசுவார்கள். எங்கள் குடும்பம் என்றால் இவர்களுக்கு மதிப்புக்குரிய தெய்வ நிலையம் போல் பணிவும் அன்பும் உண்டாகும். நான் சுட்டு விரலை அசைத்தால் அதன்படி ஆடுவார்கள் இந்தத் தடியர்கள். நீங்கள் அவருடைய ஓவியத்தை எங்கள் மாளிகையில் வந்து வரையலாம். அவரைத் தாக்க வந்த இதே ஆட்களை உங்களையும் அவரையும் பல்லக்கில் வைத்து எங்கள் மாளிகை வரை தோள் வலிக்க சுமந்துவரச் செய்கிறேன், பார்க்கிறீர்களா?” என்று ஓவியனிடம் கர்வமாகக் கூறிவிட்டு அந்த யவனர்களை இன்னும் அருகில் அழைத்து ஏதோ கட்டளையிட்டாள் அவள்.

உடனே அவர்கள் ஓடிப்போய் எங்கிருந்தோ இன்னொரு பல்லக்கைக் கொண்டு வந்து வைத்தார்கள். “நீங்களும் உங்கள் நண்பரும் ஏறிக் கொள்ளலாம்” என்று சிரித்துக் கொண்டே பல்லக்கைச் சுட்டிக் காட்டினாள் அவள். முதல் நாள் மாலை கடற்கரையில் மணிமாலை பரிசளிக்க வந்ததிலிருந்து தொடர்ந்து தன் வாழ்வில் குறுக்கிடும் அந்த அழகியைச் சற்றே வெறுப்போடு பார்த்தான் இளங்குமரன். அவள் வந்து நின்றதும் சுற்றியிருந்தவர்கள் பரபரப்படைந்து பேசிக் கொண்டதிலிருந்து அவளுடைய பெயர் ‘சுரமஞ்சரி’ என்பதை அவன் தெரிந்து கொண்டிருந்தான். அவ்வளவு பெரிய கூட்டத்தில் தன்னுடைய ஆற்றலால் தான் எதிரிகளை வெல்ல முடியாதபோது அவளே வந்து அபயமளித்துக் காத்தது போல் மற்றவர்கள் நினைக்க இடம் கொடுத்தது அவனுக்கு வருத்தமாக இருந்தது. தான் பெருமையடித்துக் கொண்ட மாபெரும் தன் மானம் அந்த நாளங்காடி நாற்சந்தியில் அவளால் சூறையாடப்பட்டதை அவன் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தான்.

ஆத்திரம் தீர அந்தப் பெண்ணை அலட்சியமாகப் பேசிவிட்டுப் பக்கத்திலிருக்கும் ஓவியன் கையிலுள்ள அரைகுறை ஓவியத்தையும் கிழித்தெறிந்து விட வேண்டும். போல் இளங்குமரனுக்குச் சினம் மூண்டது. ஆனால் அந்த ஏழை ஓவியனுக்கு நூறு பொற்கழஞ்சுகள் கிடைக்கச் செய்வதாகத் தான் வாக்களித்திருந்ததை நினைத்துத் தன் சினத்தை அவன் அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. எனவே பொறுமையாக ஓவியனோடு பல்லக்கில் ஏறி உட்கார்ந்தான் அவன். அவளுடைய பல்லக்கைத் தொடர்ந்து அவன் பல்லக்கும் பட்டினப்பாக்கத்துக்குள் இருக்கும் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரின் மாளிகைக்கு விரைந்தது.

ஆனால் அப்படிப் பல்லக்கில் ஏறிப் புறப்படுமுன் முக்கியமான செயல் ஒன்றை அவன் நினைவு கூரவே இல்லை. திடீரென்று அங்கு நடந்த குழப்பங்களால் தான் முல்லையை உடனழைத்து வந்ததையே இளங்குமரன் மறந்து போயிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/008-039&oldid=1149299" இலிருந்து மீள்விக்கப்பட்டது