மணி பல்லவம் 1/025-039
இளங்குமரன் சிந்தித்தான். நீலநாக மறவரின் அந்த வேண்டுகோளுக்குத்தான் எப்படி இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. மறுத்துச் சொல்ல முடியாமல் தன்னை அந்த வேண்டுகோளுக்கு ஒப்புக்கொள்ளச் செய்த நீலநாக மறவரின் திறமையை வியந்தான் அவன். அவருடைய பேருருவம் நினைவுக்கு வந்தபோதே அவனுக்குப் பணிவும் அடக்கமும் உண்டாயிற்று.
‘இதனால் சிறிது காலத்துக்கு நீ இந்தப் படைக்கலச் சாலைக்குள்ளேயே எனது கண்காணிப்பில் இருக்க வேண்டும். தனியாக நகருக்குள் எங்கும் போக வேண்டாம் என்று இவர் கட்டளையிடுவது போல் வேண்டிக் கொண்டபோது தன்னால் அதை மறுத்துச் சொல்ல முடியாமற்போன காரணம் என்ன என்பது நீண்ட நேரச் சிந்தனைக்குப் பின்பே அவனுக்குப் புரிந்தது.
‘தூய்மையான மனமும் தோற்றமும் உடைய சில பெரியவர்கள் நமக்கு முன்னால் உட்கார்ந்து பேசுகிறபோது நம்முடைய மனம் அகங்காரவெம்மை அழியப் பெற்று மழை பெய்த நிலம் போலக் குளிர்ந்து குழைந்து விடுகிறது. அப்போது நம்முடைய மனத்தில் பயங்களும், குழப்பங்களும், வாழ்க்கை ஆற்றாமைகளும் இருந்தாலும் கூட அவை நீங்கிவிடுகின்றன. அந்தத் தூய்மைக்கு நமது மனம் தோற்றுப் போகிறது! நீலநாக மறவரை எதிர்த்துப் பேச முடியாமல், தான் அடங்கி நின்றதும் இப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டும்’ என்று இளங்குமரன் உணர்ந்தான். தனக்கு ஏதோ பயங்கரத் துன்பங்கள் வரப்போவதாக நினைத்துக் கொண்டு மற்றவர்கள் அஞ்சி முன்னேற்பாடாகத் தன்னைப் பாதுகாப்பதை அவன் விரும்பவில்லை. ‘பிறருடைய இரக்கத்தையும் அனுதாபத்தையும் எதிர்பார்த்துத் தவித்து அவற்றுக்காகவே ஏங்கிக் கொண்டிருப்பவன் கோழை! பிறர்மேல் அநுதாபமும் இயக்கமும் செலுத்துவதற்குத் துணிந்து நிற்பவன்தான் ஆண்மையுள்ள வீரன்! அநுதாபத்தையும் இரக்கத்தையும் தன்னிடமிருந்து பிறருக்கு வழங்குவதுதான் வீரம். அவற்றை தான் பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வது வீரமன்று’ என்பதுபோல் ஒரு முரட்டுப் பிடிவாதம் சிறுவயதில் இருந்தே இளங்குமரனுக்குப் பொருந்தியிருந்தது.
அவனைத் தனியாக அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அவன் வாய் திறந்து கேட்காமலிருக்கும்போதே அவனது மனத்தில் இருந்த சில கேள்விகளைத் தாமாகவே புரிந்து கொண்டு கூறுகிறவர் போல் குறிப்பாகச் சில கருத்துக்களைக் கூறியிருந்தார் நீலநாக மறவர். அவற்றையெல்லாம் இப்போது இரண்டாம் முறையாக நினைவின் விளிம்புக்குக் கொண்டு வந்து எண்ணிப் பார்த்தான் இளங்குமரன். அவ்வாறு எண்ணிப் பார்த்தபோது அவர் சொல்லியிருந்த ஒவ்வொரு கருத்தும் விடையறியாக் கேள்விகளாகத் தன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த ஒவ்வொரு வினாவுக்கும் விடைபோல் அமைவதும் அவனுக்கு விளங்கிற்று.
“தம்பீ! மனத்தை வீணாகக் குழப்பிக் கொள்ளாதே. மனமும் நினைவுகளும் வளர்ந்து வளம் கொள்ளுகிற வயதில் கவலைகள் புகுந்து அழிக்கவிடக் கூடாது. கவலைகளுக்கு அழிந்து போய்விடாமல் கவலைகளை அழித்து விட வேண்டிய வயது இது! கடலும், மலையும், வானமும், சூரியனும், சந்திரனும், தங்களுக்குத் தாயும் தந்தையும் யாரென்றும் தேடித் துயர் கொள்வதில்லை. பூமிக்குத் தாய் வானம்; வானத்துக்குத் தாய் பூமி, பிரகிருதியே ஒரு தாய்தான் தம்பீ! ஆகாயத்தை உடம்பாகவும், திசைகளைக் கைகளாகவும், சூரிய சந்திரர்களைக் கண்களாகவும், மலைகளை மார்பாகவும், தரையைத் திருவடிகளாகவும் கொண்ட விசுவரூபமே தாயின் வடிவம்தான். அதையே நீயும் தாயாக நினைத்து வணங்கி விடு” என்று அவர் சொல்லியதற்குப் பொருள் ‘தாயை நினைத்து வீணாகக் கலங்காதே’ என்று தனக்கு அறிவுறுத்துவதுதான் என்பதை அவன் தெளிந்தான்.
“நீ செய்வதற்கு இருக்கும் செயலைக் காட்டிலும் உன்னுடைய நோக்கம் பெரிதாக இருக்க வேண்டும். அதைத்தான் இலட்சியம் என்கிறோம். நினைப்பதையெல்லாம் பெரிதாக நினைப்பதற்குப் பழகிக்கொள். நினைவின் எல்லை விரிவாக இருக்கட்டும்” என்று இப்படி பல அறிவுரைகள் கூறிய பின்னே அந்த வேண்டுகோளையும் கூறியிருந்தார் நீலநாக மறவர். நினைக்கும் போதெல்லாம் புதிதாகவும் நினைப்புக்கேற்ற விதமாகவும் மணக்கும் மனோரஞ்சிதப் பூவைப்போல் அவருடைய அறிவுரையின் குறிப்பாகப் பலவற்றை அவன் புரிந்து கொண்டான். எண்ணிப் பார்த்தால், திட்டமிட்டுத் தேவையறிந்து வேண்டிய அறிவுரையை வேண்டிய அளவு வேண்டிய காலத்தில் அவர் தனக்குத் தந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. மறுபடியும் அவருடைய முன்னேற்பாட்டை வியந்தான் அவன்.
கதக்கண்ணன் முதலிய நண்பர்களோடு அன்று மாலையில் ஆலமுற்றத்துச் சிவன் கோவிலுக்குப் போனான் இளங்குமரன். வானத்தை மறைத்து வீழ்துகளைக் காலூன்றிப் பசுமைப் பந்தல் வேய்ந்தது போல் பெரிய ஆலமரமும் அதனருகே கோவிலும் மாலை நேரத்தில் மிக அழகாயிருந்தன. மணற்பரப்பைக் கடந்து கடல் என்னும் நீலமேனி நீர்ச்செல்வி நித்திய யௌவனத்தோடு அலைக்கைகளை அசைத்துக் கொண்டிருந்தாள். மேலைத்திசை வானத்தில் குங்கும வெள்ளம் பாய்ந்திருந்தது. இளங்குமரனும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள். ஆலமுற்றுத்துக் கோவில் படைக்கலச் சாலையைச் சேர்ந்த பகுதியாய் அதற்கு மிகவும் அருகில் இருந்ததால்தான் நண்பர்களின் துணையோடு இளங்குமரனைப் போகவிட்டிருந்தார் நீலநாக மறவர். கோவிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு கடற்கரை மணற் பரப்பில் நண்பர்களுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இளங்குமரன் மீண்டும் படைக்கலச் சாலைக்குத் திரும்பியபோது அங்கே அவனை எதிர் பார்த்து ஓவியன் மணிமார்பன் வந்து காத்துக் கொண்டிருந்தான். தான் அப்போது நீலநாக மறவரின் படைக்கலச் சாலையில் வந்து தங்கியிருப்பதை அந்த ஓவியன் எப்படித் தெரிந்து கொண்டான் என்பது இளங்குமரனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
“நீ மறுபடியும் என்னைத் தேடிக்கொண்டு வந்திருப்பதைப் பார்த்தால் இன்னும் யாராவது என்னுடைய ஓவியத்தை வரைந்து கொண்டு வரச்சொல்லி உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார்களோ என்று சந்தேகமாயிருக்கிறது, அப்பனே! என்ன காரியமாக இப்போது என்னிடம் வந்தாய்?” என்று இளங்குமரன் அவனை விசாரித்தான்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! ஐயா! ஒருமுறை உங்கள் ஓவியத்தை வரைந்து கொடுத்துவிட்டு நான் படுகிறபாடு போதும். ஏழேழு பிறவிக்கு இப்படி அனுபவங்கள் இனிமேல் எனக்கு. ஏற்படவே வேண்டாம்.”
விளையாட்டாகப் பேசுவதுபோல் சிரித்துப் பேசத் தொடங்கியிருந்த இளங்குமரன், ஓவியன் கூறிய மறுமொழியில் வேதனையும், துயரமும் இருந்ததைக் கேட்டுத் திகைத்தான். ஓவியன் அச்சம் கொள்ளும் படியான நிகழ்ச்சிகள் எவையேனும் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் ஓவியனைக் கேட்டான்:
“பதற்றப்படாமல் நிதானமாகச் சொல், மணி மார்பா! என்னுடைய ஓவியத்தை வரைந்து கொடுத்ததனால் இப்படி என்னிடமே வந்து அலுத்துக் கொள்கிறாற்போல் உனக்கு என்ன துன்பங்கள் நேர்ந்துவிட்டன?”
இதற்கு மணிமார்பன் மறுமொழி கூறவில்லை. இளங்குமரனைச் சூழ்ந்து நிற்கும் நண்பர்களைப் பார்த்துத் தயங்கினான். அந்தக் குறிப்பு இளங்குமரனுக்குப் புரிந்தது. ஓவியன் தன்னிடம் தனியாகப் பேசுவதற்கு விரும்புகிறான் என்று உணர்ந்தவனாக அவனை மட்டும் தனியே அழைத்துக் கொண்டு படைக்கலச் சாலையின் வேறு பகுதிக்குச் சென்றான் இளங்குமரன்.
“பிறருக்காக நான் துன்பப்படும்படி நேர்ந்தால் அதைப் பொறுத்துக் கொள்வேன் மணிமார்பா! ஆனால் என்னால் பிறர் துன்பப்பட நேருவதை நான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. விவரமாக நடந்ததைச் சொல். நான் வெளியேறி வந்தபின் பட்டினப்பாக்கத்தில் அந்த மாளிகையில் என்ன நடந்தது? உனக்கு அந்தப் பெண் தருவதாக ஒப்புக் கொண்டிருந்த நூறு பொற் கழஞ்சுகளைத் தந்தாளா இல்லையா!”
“அதையெல்லாம் அப்புறம் சொல்கிறேன். முதலில் இந்த மடலை வாங்கிக் கொள்ளுங்கள். இதைப் படித்துவிட்டுப் பின்பு பேசலாம்” என்று சுரமஞ்சரியின் மடலை எடுத்து நீட்டினான் மணிமார்பன். அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த பகுதியெல்லாம் தன் மணத்தைப் பரப்பியது அந்த நறுமண மடல்.
“ஆயிரங்காலம் பழகி அன்பு கொண்டவளைப் போல் எனக்கு மடல் எழுத இவள் எப்படி உரிமை பெற்றாள்?” என்று அருகிலிருந்த தீபத்தில் மடலைப் படித்துவிட்டுக் கோபத்தோடு கேட்டான் இளங்குமரன், அதைக் கேட்டு மணிமார்பன் மெல்லச் சிரித்தான்.
“எதற்காகச் சிரிக்கிறாய்? சிரிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது?”
“ஒன்றுமில்லை! அனால் சற்றுமுன் நீங்கள் கூறியதை மறுபடியும் நினைத்துப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. உலகத்திலேயே கட்டுப்பாட்டுக்கும் கட்டளைக்கும் அடங்காமல் தன்னிச்சையாகப் பிறந்து வளரும் உணர்வு அன்பு ஒன்றுதான்; அதற்குக்கூட உரிமை தர மறுக்கிறீர்களே நீங்கள்?”
“மறுக்கவில்லை மணிமார்பா! இரண்டு நாள் சந்தித்துப் பேசிவிட்டோம் என்ற செருக்கில், ‘நெஞ்சுளம் கொண்ட அன்பருக்கு. அநேக வணக்கங்களுடன் அடியாள் சுரமஞ்சரி எழுதும் மடல். நான் உங்களை மிக விரைவில் சந்திக்க விரும்புகிறேன். கூடுமானால் உடனே சந்திக்க விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் என் நலனை விட உங்கள் நலன்தான் அதிகம். உங்களிடம் சில செய்திகளை மனம்விட்டுப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கே எப்போது நாம் சந்திக்கலாமென்று இந்த மடல் கொண்டு வரும் ஓவியரிடம் அருள் கூர்ந்து சொல்லி அனுப்புங்கள்’ என்று எழுதியிருக்கிறாளே அப்பனே; இவள் கூப்பிட்ட நேரத்துக்குக் கூப்பிட இடத்திலெல்லாம் வந்து சந்திக்க இளங்குமரன் இவளுடைய ஏவலாள் இல்லையே!” என்று சொல்லிக் கொண்டே மணம் நிறைந்த அந்த வெண்தாழை மடலைக் கசக்கி எறியப் போனான் இளங்குமரன். அப்போது அவன் அப்படிச் செய்து விடாமல் ஓவியன் அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு விட்டான்.
“பூக்களைக் கசக்கி எறிவது மங்கலமான செயல் அல்ல, ஐயா! மென்மையான மனம்படைத்தவர்கள் அதை விரும்பமாட்டார்கள்.”
“எனக்கு மென்மையான மனம் இல்லையென்றே வைத்துக்கொள்! அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். இந்தா, இதை அவளிடமே திருப்பிக் கொண்டு போய்க் கொடு” என்று தானே கசக்கி எறிவதற்கிருந்த அந்த மடலை மணிமார்பனுடைய கைகளில் திணித்தான் இளங்குமரன். மணிமார்பனின் நிலை தவிப்புக்குரியதாகி விட்டது. என்ன செய்தாலும், எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொன்னாலும் இளங்குமரனின் மனத்தை நெகிழச் செய்வதற்கு இயலாதென்று தோன்றியது ஓவியனுக்கு. அதைப் பற்றி மறுபேச்சுப் பேசாமல் அவன் திருப்பிக் கொடுத்த மடலை வாங்கிக் கொண்டு பேச்சை வேறு திசையில் திருப்பினான் மணிமார்பன். இளங்குமரன் பட்டினப்பாக்கத்து மாளிகையிலிருந்து வெளியேறியபின் தனக்கு அங்கு ஏற்பட்ட அச்சமூட்டும் அநுபவங்களை மணிமார்பன் அவனுக்கு விரிவாகச் சொன்னான். தன்னை அந்த மாளிகையிலேயே ஓவியனாக நியமித்திருப்பதையும் சொன்னான். சுரமஞ்சரியின் தந்தையும், நகைவேழம்பர் என்னும் ஒற்றைக்கண் மனிதரும் பலவகையிலும் சந்தேகத்துக்கும் பயப்படுவதற்கும் உரியவர்களாயிருந்ததையும், அவர்கள் இருவரும் இளங்குமரன் மேல் என்ன காரணத்துக்காகவோ கவனம் செலுத்திக் கொண்டிருப்பதையும் விவரித்துக் கூறிவிட்டான் மணிமார்பன்.
இவற்றையெல்லாம் கேட்ட பின்னர் இளங்குமரனின் மனத்தில் மேலும் சந்தேகங்கள் உண்டாயின. அந்த மாளிகையிலிருந்து தான் வெளியேறிய போது அதே ஒற்றைக்கண் மனிதர் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததையும் அவன் நினைவு கூர்ந்தான். ஒற்றைக் கண்ணரைப் போலவே சுரமஞ்சரியின் தோழி வசந்தமாலையும் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததனால்தான் நீலநாக மறவரின் படைக்கலச் சாலையில் தான் தங்கியிருப்பது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் இப்போது இளங்குமரனால் அநுமானம் செய்ய முடிந்தது. பட்டினப்பாக்கத்து எட்டிப்பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரும், அவரிடம் இருக்கும் ஒற்றைக் கண் மனிதரும் எதற்காகவோ தன்னைப் பிடித்து அழிக்கக் கண்ணி விரிக்கிறார்கள் என்று தோன்றியது அவனுக்கு. ‘ஒரு வேளை அவர்கள் விரிக்கும் அந்த வலையில் தன்னைச் சிக்க வைப்பதற்கு இந்தப் பெண் சுரமஞ்சரியும் உடந்தையாயிருக்கலாமோ?’ என்றும் சந்தேகமுண்டாயிற்று இளங்குமரனுக்கு. சுரமஞ்சரியைப் பற்றிய தன்னுடைய சந்தேகத்தை மணிமார்பனிடம் வெளியிட்டு, ‘அப்படியும் இருக்கலாமோ?’ என்று வினவினான் இளங்குமரன். ஆனால் மணிமார்பன் அதை மிகவும் வன்மையாக மறுத்துச் சொல்லிவிட்டான்.
“ஒருபோதும் அப்படி இருக்காது ஐயா! அந்தப் பெண் உங்கள் மேல் மெய்யாகவே அன்பு செலுத்துகிறாள். தன் தந்தையாரும் நகைவேழம்பரும் உங்களைப் பற்றி அப்படி நடந்து கொள்வது அவளுக்கே பிடிக்கவில்லை. அந்தப் பெண் நிச்சயம் உங்களுக்குத் துரோகம் செய்யமாட்டாள். எப்போதாவது அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்து உங்களுக்குப் பேராபத்து வருவதாயிருந்தால் அப்போது உங்களைக் காப்பாற்றுவதற்கு அவள்தான் முன் நிற்பாள். பெண்களின் உள்ளம் அன்பு மயமானது. தங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு வஞ்சகமிழைக்க அன்பு இடந்தராது, ஐயா!”
“அப்படி எல்லாப் பெண்களையும் நம்பிவிட முடியாது, அப்பனே! பெண்களின் வஞ்சகத்தால் உலகத்தில் பிறந்த மகாகாவியங்கள் பல.”
“ஆனால் பெண்களின் அன்பினால் பிறந்த மகா காவியங்கள் அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் ஐயா!”
“அப்படி மகாகாவியங்களைத் தோற்றுவிக்கிற அன்பை அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்தும் நாம் எதிர் பார்க்க முடியாது, மணிமார்பா!”
“மாளிகை என்ன செய்யும் ஐயா! மனம் கொண்டது தான் மாளிகை. அன்பின் சக்தி அளப்பரியது. அதற்கு முன் சாதாரண உணர்வுகள் தோற்றுவிடுகின்றன. ஒரு காலத்தில் இதே பெண்ணின் சிரிப்புக்கு நீங்கள் தோற்றுப் போனால் கூட நான் ஆச்சரியப்படமாட்டேன்.”
ஓவியன் மேலே பேசுவதற்குள் பளீரென்று அவன் கன்னத்தில் ஒரு பேயரை விழுந்தது.
“நாவை அடக்கிப் பேசு, அப்பனே! இப்படி இன்னொருவர் பேசியிருந்தால் பல்லை உதிர்த்துக் கையில் கொடுத்திருப்பேன். போய்விடு.. இனி ஒரு கணமும் இங்கே நிற்காதே” என்று கொதிப்போடு கூக்குரலிட்டுக்கொண்டே அந்தக் கணமே மணிமார்பனைப் பிடரியில் கைவைத்துத் தள்ளி வாயில் வரையில் சென்று துரத்தி விட்டு வந்தான் இளங்குமரன்.
‘பிறரால் எனக்குத் துன்பம் வந்தாலும் பொறுப்பேன், பிறர் என்னால் துன்புற விடமாட்டேன்’ என்று கூறிய அதே மனிதனின் கைகள்தாம் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளின என்பதை ஓலியனால் நம்பவே முடியவில்லை. இளங்குமரன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வான் என்று கனவிலும் மணிமார்பன் எதிர்பார்க்கவில்லை.
கசக்கித் திருப்பியளிக்கப்பட்ட தாழை மடலைப் போலவே அவனும் மன வேதனையுடன் கசங்கிய நினைவுகளோடு அந்த அகால நேரத்திலேயே தனியாகப் பட்டினப்பாக்கத்துக்குத் திரும்பினான்.
தான் சுரமஞ்சரியின் மடலைக் கொடுப்பதற்காக மாளிகையிலிருந்து வெளியேறி மருவூர்ப் பாக்கத்துக்கு இளங்குமரனைக் காணச் சென்று திரும்புவது ஒருவருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தான் ஓவியன். ஆனால் அதுவும் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. நினைத்திருந்ததற்கு நேர்மாறாகவே ஒரு விபரீதம் நடந்தது.