மணி பல்லவம் 1/026-039
பயந்துகொண்டே திரும்பி வந்த ஓவியன் பிரதான வாயிலில் துழையும் போது மாளிகை அமைதியாயிருந்தது. சுரமஞ்சரி முன்னேற்பாடாகச் சொல்லி வைத்திருந்ததனாலோ என்னவோ வாயிற் காவலர்கள் எவரும் அவனைத் தடுக்கவில்லை. அவன் திரும்பிவருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு அடையாளமாகச் சுரமஞ்சரியின் மாடத்தில் மட்டும் தீபங்களின் ஒளி தெரிந்தது.
‘நல்ல செய்தியாயிருந்தால் உடனே சுரமஞ்சரியின் மாடத்துக்கு ஓடிப்போய்த் தெரிவிக்கலாம். நீங்கள் கொடுத்தனுப்பிய மடலை அந்த முரட்டு இளைஞர் வாங்கிப் படித்துவிட்டு என்னிடமே திரும்பிக் கசக்கி எறிந்து விட்டார் என்று தயங்காமல் அவளிடம் போய் எப்படிச் சொல்வது? அவ்வளவு நேரமாக இனிய கனவுகளோடு காத்திருக்கும் அந்தப் பெண் மனம் இதைக் கேட்டால் என்ன பாடு படும்?’
மென்மையான மனம் படைத்த அந்த ஓவியன் தயங்கினான். ஒளி நிறைந்து தோன்றும் சுரமஞ்சரியின் மாடத்திலும் மனத்திலும் இருள் சேர்க்கும் சொற்களைத்தான் போய்ச் சொல்லலாமா, வேண்டாமா என்று தவித்தான். கலைஞர்களுக்கு அவர்களிடம் அமைந்திருக்கும் மென்மையான கலைத் திறமையைப் போலவே, பிறர் கூசாமற் செய்யும் முரட்டுக் காரியங்களைத் தாங்கள் நினைக்கவும் கூசுகிற மென்மையான மனத்தையும் கடவுள் கொடுத்துத் தொலைத்திருக்கிறாரே’ என்று வருந்தினான் அவன்.
தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு இந்த மென்மைதான் பெரிய பலவீனமென்று தோன்றியது அவனுக்கு. இந்த ஒரு பலவீனம் மட்டும் இல்லாவிட்டால் தயக்கம் இன்றிச் சுரமஞ்சரியின் மாடத்துக்கு ஏறிச் சென்று ‘உங்கள் மடலை அவர் கசக்கி எறிந்துவிட்டார் அம்மணீ’ என்று உடனே சொல்லி விடலாமே என்னும் இத்தகைய தயக்கத்தோடு சுரமஞ்சரியின் மாடத்துக்குச் செல்வதற்கான படிகளின் கீழே நின்றான் மணிமார்பன்.
மாளிகையே அமைதியில் ஆழ்ந்திருந்த அந்த அகால வேளையில் தான்மட்டும் தனியாய் அங்கே நிற்கிற சூழ்நிலையே ஓவியனுக்குப் பயமூட்டுவதாயிருந்தது. மூச்சுவிட்டாலும் இரைந்து கேட்கக்கூடிய அந்த அமைதியில் ஓசையெழாமல் படிகளில் ஏறி மேலே மாடத்துக்குச் செல்வது எவ்வாறு என்று அவனுக்குப் புரியவில்லை.
கீழிருந்து மேலே போகும் படிகளில் முதல் பத்துப் பன்னிரண்டு படிகள் வரை ஒரே இருட்டாயிருந்தது. அப்பாலுள்ள படிகளில் மேல் மாடத்து விளக்கொளி இலேசாக மங்கிப் பரவியிருந்தது. தயங்கியபடியே சிறிது நேரம் நின்ற பின், ‘விளைவு என்ன ஆனாலும் சரி! நான் மேலே சென்று சுரமஞ்சரியைப் பார்த்து இளங்குமரன் மடலைத் திருப்பியளித்து அவமானப்படுத்திய விவரத்தைச் சொல்லிவிட வேண்டியதுதான்’ என்று உறுதி செய்து கொண்டு படிகளில் ஏறினான் மணிமார்பன்.
முதற்படியிலிருந்து இரண்டாவது படிக்கு அவன் ஏறியபோது படியோரத்து இருளிலிருந்து யாரோ அவன் வாயை இறுகப் பொத்தி மோதித் தரையில் தள்ளுவது போல் கீழ்ப் புறம் இறக்கி இழுத்துக் கொண்டு வரவே, அவன் உடலில் இரத்தம் உறைந்து உணர்வு மரத்துப் போகத் தொடங்கியது. அவன் திமிறிக் கொண்டு ஓடவோ கூச்சலிடவோ இடங்கொடுக்காத முரட்டுக் கைகளாக இருந்தன அவை.
சிறிது தொலைவு கொலைத் தழும்பேறினவை போன்ற அந்தக் கைகளின் பிடியில் இறுகிக் கொண்டே வந்தபின் சற்றே ஒளி பரவியிருந்த ஓரிடத்தில் கண்களை அகலத் திறந்து பார்த்தபோது, நகைவேழம்பரின் முகம், “கூச்சலிட்டாயானால் அநாவசியமாக இப்போது இந்த இடத்தில் ஒரு கொலை விழ நேரிடும்” என்று அவன் காதருகே குனிந்து வாய் திறந்து கூறினார். வாயைப் பொத்தியிருந்த கையை எடுத்துவிட்டு இடுப்பிலிருந்து குறுவாள் ஒன்றை எடுத்து அவன் கழுத்தின் மிக அருகில் சொருகிவிடப் போவதுபோல் பிடித்துக் காட்டினார் அவர். பகலிலேயே பூத பயங்கரம் காட்டும் அந்த முகம் இப்போது இரவில் இன்னும் குரூரமாகத் தோற்றமளித்தது - மணிமார்பனுக்குச் சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டன. ‘வெளியேறிச் சென்று விடுவதற்கு ஓர் அற்புதமான வாய்ப்புக் கிடைத்திருந்தும் பயன்படுத்திக் கொண்டு தப்பிப் போகாமல் மறுபடியும் திரும்பி இந்த மாளிகைக்கு ஏன் வந்து தொலைத்தோம்?’ என்று வருந்தினான் அவன். நகைவேழம்பருடைய பிடி இழுத்த இழுப்புக்கு மீறாமல் அவன் சவம்போல் இழுபட்டுக் கொண்டு போனான்.
மாளிகைத் தோட்டத்தின் அடர்த்தியான ஒரு பகுதிக்குச் சென்று அடித்துப் போடுவது போல பிடியை உதறி அவனைக் கீழே தள்ளினார் அவர். ஓவியன் நடுங்கின படியே தட்டுத் தடுமாறி மெல்ல எழுந்து நின்றான்.
“எங்கே போயிருந்தாய் இவ்வளவு நேரம்? உண்மையை மறைக்காமல் அப்படியே சொல்.”
“சொல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான் ஓவியன்.
“புதிதாக ஒன்றும் செய்துவிட மாட்டேன். இதோ இந்த இரண்டு கைகளின் பிடியில் இவற்றுக்கு உரியவனை இதுவரை எதிர்த்திருக்கிறவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேருடைய உயிர்களும் எப்படித் துடிதுடித்துச் செத்திருக்கின்றன என்பது உனக்குத் தெரியாது. நீ விரும்பினால் அந்த அனுபவத்தை உனக்கும் அளிப்பதற்கு எனக்குச் சம்மதம்தான்!”
“கொலைகாரனுக்குத் தற்புகழ்ச்சி ஒரு கேடா?”
“போர்க்களங்களில் நிறைய கொலைகள் செய்தவர்களை வீரர் என்றுதானே சொல்கிறார்கள்? அப்படியானால் இன்று உன்னையும் சேர்த்து நான்...”
“போதும் உங்கள் கொலை பெருமை! தெரிந்துதானே கடவுள் உங்கள் முகத்தின் இலட்சணத்தைக் கொலை செய்து வைத்திருக்கிறார்?”
“சந்தேகமென்ன? என் கைகளில் அகப்பட்டிருந்தால் அந்தக் கடவுளையும்...” என்று குரூரமாகச் சிரித்தார் நகைவேழம்பர். அந்த விகார மனிதர் நாத்திகத் தழும்பேறிய மனத்தையுடையவர் என்று தோன்றியது மணிமார்பனுக்கு. எதையும் செய்யக்கூசாத கொடூர சித்தமுடையவர் என்பது அவரைப் பார்த்தாலே தெரிந்தது.
“மறுபடியும் கேட்கிறேன். எங்கே போயிருந்தாய்? யாரைக் கேட்டுப் போயிருந்தாய்?”
“பெரிதாகப் பயமுறுத்துகிறீர்களே! என்னை அடிமையாக விலைக்கு வாங்கியிருக்கிறீர்களா, என்ன? எல்லாம் கேட்க வேண்டியவர்களைக் கேட்டுக் கொண்டு போக வேண்டிய இடத்துக்குத்தான் போயிருந்தேன். என்னைப் பாதுகாக்கச் சொல்லித்தான் உங்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறார்கள்.”
“யார் அப்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்களோ?”
“வேறு யார்? இந்த மாளிகைக்கு உரியவர்தான்!”
“அடடா! அதைச் சொல்கிறாயா? உனக்கு இந்த மாளிகைக்கு உரியவரைத் தெரியாது. அவர் கட்டளையிட்டிருக்கும் சொற்களை மட்டும்தான் உனக்குத் தெரியும். எனக்கு அந்தச் சொற்களின் பொருளும் தெரியும். அவரையும் தெரியும், இந்த மாளிகையில் சொற்களுக்காக அர்த்தம் கிடையாது. அர்த்தத்துக்காகத்தான் சொற்கள் உண்டு.”
“இங்கேதான் எல்லாமே தலைகீழாக இருக்கிறதே...?”
"இன்னும் சிறிது நேரத்தில் நீ என் கைகளினால் துடி துடித்துச் சாகப்போவது உள்பட! ஏனென்றால் இங்கே தலைகீழாகக் கட்டப்பட்ட பின்புதான் கொலையைக் கூடச் செய்வது வழக்கம். சந்தேகமாயிருந்தால் என்னோடு வா. உனக்குக் காட்டுகிறேன்” என்று மறுபடியும் அவனை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தார் அவர்.
ஒரு கையில் ஓவியனையும், இன்னொரு கையில் தீப்பந்தமொன்றையும் பிடித்துக்கொண்டு அந்த மாளிகையின் கீழே பாதாள அறையாக அமைக்கப்பட்டிருந்த பொதியறைக்குச் செல்லும் சுரங்க வழிப்படிகளில் இறங்கினார் நகைவேழம்பர். அந்தப் பாதாள அறையில் முடை நாற்றம் குடலைப் பிடுங்கியது. கொடிய வனவிலங்குகளான புலி சிங்கங்கள் இருக்கும் பகுதியில் அப்படி நாற்றம் வருவதுண்டு. கீழே பொதியறைக்குள் இறங்கிப் பார்த்தபோது மெய்யாகவே அவ்விடத்தில் பக்கத்துக்கு ஒன்றாகப் புலிகள் அடைக்கப்பெற்ற இரும்புக் கூண்டுகள் இருந்தன. கொள்ளிபோல் மின்னும் செந்தழற் கண்களுடன் செவ்வரிக் கோலங்காட்டும் வாட்டசாட்டமான வேங்கைப்புலிகள் இரண்டு கூண்டிலும் பசியோடு உலாவிக் கொண்டிருந்தன. அந்த இருளில் அவை பயங்கரமாய்த் தோன்றின.
“பார்த்தாயா?” என்றார் நகைவேழம்பர். ஓவியனுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு விட்டது. பேச வரவில்லை. தீப்பந்தைத் தூக்கிக் காட்டிக் கொண்டே கூறினார் அவர், “அதோ இரண்டு புலிக்கூண்டுக்கும் நடுவே மேல்விட்டச் சுவரில் ஒரு பெரிய இரும்பு வளையம் தொங்குகிறது பார்த்தாயா? அதில் தண்டனைக்குரிய மனிதனைக் கயிற்றில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மேலே போய் நின்றுகொண்டு இரண்டு புலிக்கூண்டுகளின் கதவிலும் இணைக்கப்பட்டிருக்கும் இரும்புச் சங்கிலியை இழுத்துக் கதவுகளைத் திறந்து விட்டுவிடுவோம். பின்பு புலிகளுக்கு விருந்துக் கொண்டாட்டம்தான். அதோ பார், சுற்றிலும் எத்தனையோ மனிதர்கள் இங்கு அழிந்திருக்கும் சுவடுகள் தெரிகின்றன” என்று தரையில் சுற்றிலும் சிதறிக்கிடந்த எலும்புகளையும் மண்டை ஓடுகளையும் காண்பித்தார் அந்தக் கொடிய மனிதர். மணிமார்பனுக்கு எலும்புக் குருத்துக்களில் நெருப்புக் குழம்பு ஊற்றினாற்போல் உடம்பெங்கும் பயம் சிலிர்த்தது. “உனக்குச் சந்தேகமாயிருந்தால் இதோ பார்! ஆட்களை எப்படித் தலைகீழாய்த் தொங்கவிடுவதென்று காண்பிக்கிறேன்” என்று சொல்லித் தீப்பந்தத்தை அவன் கையில் கொடுத்து விட்டுக் கீழே இறங்கி ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு மேல் உள்ள இரும்பு வளையத்தில் பாதங்களை நுழைத்துக் கோத்தபடி இரண்டு கணம் தாமே தலைகீழாகத் தொங்கிக் காண்பித்தார் நகை வேழம்பர். அப்போது நரவாடை கண்ட அந்தப் புலிகள் உறுமியதையும் வாலைச் சுழற்றி அடித்துக் கொண்டு கூண்டிலிருந்து வெளியே பாய முயன்றதையும் பார்த்த போது ஓவியனுக்குக் குடல் குலுங்கி நடுங்கியது.
ஒரே ஒரு விநாடி அந்த மென்மையான கலை உள்ளத்திலும் கொலைவெறி கன்றிய ஆசை ஒன்று உண்டாயிற்று. ‘அப்படியே தீப்பந்தத்தோடு மேலே ஓடிப்போய்ப் புலிக்கூண்டுக் கதவுகளை இழுக்கும் சங்கிலியைப் பிடித்திழுத்து நகைவேழம்பரைப் பழி வாங்கிவிட்டால் என்ன?’ என்று நினைத்தான் ஓவியன்.