மணி பல்லவம் 1/038-039
பரிவும், ஏக்கமும், பசியும், குளிருமாகக் கழிந்த அந்த நீண்ட இரவுக்குபின் கப்பல் கரப்புத் தீவில் பொழுது புலர்ந்தபோது மங்கல நீராடி எழுந்த கன்னிகைபோல் தீவு முழுவதும் புத்தழகு பூத்திருந்தது. மழை இரவுக்குப் பின்னர் விடியும் காலை நேரத்துக்கு எப்போதுமே மிகுந்த வனப்பு உண்டு. தன்மையும் மலர்ச்சியுமாக விடிந்த அந்தக் காலைப் போதில் இளங்குமரனும் சுரமஞ்சரியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. வெளியே எங்கும் குளிர்ச்சி, எங்கும் மலர்ச்சி. அவர்கள் இருவர் நெஞ்சங்களில் மட்டும் வெம்மையும், பிணக்கும் விளைந்திருந்தன. முதலில் இளங்குமரன்தான் துயில் நீங்கிக் கண் விழித்து எழுந்திருந்தான். அப்போது சுரமஞ்சரி எதிர்ப்புறமிருந்த வேறொரு மரத்தடியில் உட்கார்ந்த படியே சாய்ந்து கண்மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்பு வதற்காக அருகில் சென்று நின்று கொண்டு இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டி ஓசையுண்டாக்கினான் இளங்குமரன். அந்த ஓசையைக் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள் அவள். எதிரே அவனைப் பார்த்ததும் கோபத்தோடு முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். சிறு குழந்தையைப் போல் சீற்றம் கொண்டாடும் அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான் அவன்.
அவளுடைய கோலத்தையும், பிணக்கையும் பொருட்படுத்தாமல் நகரத்துக்குச் செல்லும் கப்பல்களைக் கூவியழைத்து ஏதாவது கப்பலில் இடம் பெற்றுக் கொள்ள முயல்வதற்காக மேட்டில் ஏறினான் இளங்குமரன். விரைவில் அவனது முயற்சி பயனளித்தது. பச்சைக் கற்பூரத்தையும் வளைகளையும், பட்டுக்களையும் ஏற்றிக் கொண்டு சீன தேசத்திலிருந்து பூம்புகார்த் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த சீனத்துக் கப்பல் ஒன்று இளங்குமரனின் கூப்பாட்டுக்குச் செவி சாய்த்தது. மாதக் கணக்கில் கடற்பயணம் செய்து துறைமுகத்தை அடைவதற்கிருந்த அந்தக் கப்பலில் சுரமஞ்சரிக்கும் இளங்குமரனுக்கும் இடம் கிடைத்தது. கப்பலுக்குள் ஏறிய பின்பும் இளங்குமரனும், சுரமஞ்சரியும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். கப்பல் நிறையக் கற்பூரம் மணந்து கொண்டிருந்தது.
கப்பலின் தலைவன் மிகவும் இளகிய மனமுள்ளவனாக இருந்தான். நனைந்தும், கசங்கியுமிருந்த அவர்கள் ஆடைகளைக் கண்டு மனம் இரங்கி, “இவற்றை அணிந்து கொண்டு பழைய ஆடைகளைக் களைந்தெறியுங்கள்” என்று புத்தம் புதிய பட்டாடைகளைக் கொண்டு வந்து அவர்களிடம் அளித்தான் அந்தச் சீனத்துக் கப்பலின் தலைவன்.
“பட்டுக்களின் மென்மையை அனுபவித்துச் சுகம் காணும் பழக்கம் இதுவரை எனக்கு இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. தயைகூர்ந்து என்னை விட்டுவிடுங்கள். ஆனால் இதோ என் அருகில் நிற்கும் இந்தப் பெண்ணுக்குப் பட்டாடை என்றால் கொள்ளை ஆசை. இவளுடைய வீட்டில் மிதித்து நடந்து செல்வதற்குக் கூடப் பட்டு விரிப்பைத்தான் பயன்படுத்துவார்கள். இவளுடைய உடலுக்குப் பட்டாடையும் கைகளுக்குப் புதிய வளையல்களும் நிறையக் கொடுத்தால் காவிரிப்பூம் பட்டினத்திலேயே பெருஞ் செல்வராகிய இவள் தந்தையின் நட்பும் உங்களுக்குக் கிடைக்கலாம்” என்று புன்னகை யோடு கப்பல் தலைவனுக்கு மறுமொழி கூறினான் இளங்குமரன். அப்போது சுரமஞ்சரி கண்களில் சினம் பொங்க இளங்குமரனை எரித்துவிடுவது போலப் பார்த்தாள்.
சுரமஞ்சரியின் தந்தையைப் பற்றியும், அவருடைய கப்பல் வாணிகத்தின் பெருமையைப் பற்றியும் இளங்குமரன் இனஞ் சொல்லி விளக்கிய பின்பு கப்பல் தலைவனின் மனத்தில் அவள்மேல் மதிப்பு வளர்ந்தது. உடனே விதவிதமான பட்டு ஆடைகளையும், வளையல்கள், ஆரங்கள் ஆகியவற்றையும் அவளுக்கு முன்னால் கொண்டு வந்து குவித்து, “இதைப் பாருங்கள். அதைப் பாருங்கள்” என்று வேண்டிக் கொள்ளத் தொடங்கி விட்டான் அவன்.
“நான் ஒன்றையும் பார்க்க வேண்டாம். முதலில் நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று சுரமஞ்சரி சீற்றத்தோடு கூறிய பின்பே அந்தக் கப்பல் தலைவனின் ஆர்வம் நின்றது.
கப்பல் காவிரிப்பூம் பட்டினத்துத் துறைமுகத்தை அடைந்தபோது அதன் தலைவனுக்கு நன்றி கூறிவிட்டுக் கீழே இறங்கினான் இளங்குமரன். அவனை அடுத்துக் கீழே இறங்கிய சுரமஞ்சரி அவனிடமோ, கப்பல் தலைவனிடமோ, சொல்லி விடை பெற்றுக் கொள்ளாமலே வேகமாக முன்னால் நடந்து செல்லலானாள். இளங்குமரனும் விரைவாக அவளைப் பின்தொடர்ந்து அருகில் சென்று நின்று கொண்டு “பெண்ணே! இப்படிச் சினத்தோடு முகத்தை முறித்துக் கொண்டு போவதனால் ஒரு பயனுமில்லை. என்னுடைய உதவியை இப்போதும் நான் உனக்கு அளிப்பதற்குச் சித்தமாயிருக்கிறேன். நீ விரும்பினால் உன்னுடைய மாளிகைவரை உனக்குத் துணை வருவேன்” என்றான். இதைக் கேட்ட பின்பும் சுரமஞ்சரியின் முகம் மலரவில்லை; மனம் நெகிழவில்லை.
“என்மேல் அன்பு செலுத்துகிறவர்களின் உதவிதான் எனக்கு வேண்டும். என்னை ‘எவளோ ஓர் அப்பாவிப் பெண்’ என்று நினைத்து வெறும் கருணையை மட்டும் காண்பிக்கிறவர்களிடம் நான் உதவியை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய மாளிகைக்குப் போய்ச் சேர்வதற்கு வழி எனக்குத் தெரியும்” என்று அவன் முகத்தை நிமிர்ந்து பாராமலே எடுத்தெரிந்து பேசிவிட்டு முன்னைக் காட்டிலும் வேகமாக நடந்தாள் சுரமஞ்சரி. அவள் அவனிடம் இப்படிக் கடுமையாகப் பேசிவிட்டுச் செல்வதைக் கண்டு அருகில் நின்ற சிலர் பெரிதாகச் சிரித்தனர். தன்னை ஏளனம் செய்கிற தொனியில் அவர்கள் சிரிப்பு ஒலித்தாலும் இளங்குமரன் அதைக் கேட்காதவன் போல் வேறு பக்கமாகத் திரும்பி நடந்தான். ஏற்றுமதி செய்வதற்குக் குவித்த பொருள்களும், இறக்குமதி செய்து குவித்த பொருள்களுமாக அம்பாரம் அம்பாரமாய்ப் பல்வேறு பண்டங்கள் நிறைந்திருந்த துறைமுகப் பகுதிகளைக் கடந்து வெளியே வந்தான் இளங்குமரன். அன்று காலையிலிருந்தே அவன் மனமும், எண்ணங்களும் சுறுசுறுப்பாயிருந்தன. அங்கே துறைமுக வாயிலில் இருந்த ‘பார்வை மாடம்’ என்னும் மேடையில் ஏறி நின்று பார்த்தால் பூம்புகாரின் அக நகரும், புறநகரும், கடலுக்குள் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை உள்ள காட்சிகளும் தெரியும். பெரிதும் சிறிதுமான கப்பல்களும் காட்சியளிக்கும். துறைமுகத்தில் வந்து இறங்கும் வெளிநாட்டு மக்கள் ஏறிப் பார்ப்பதற்காகவே அமைந்திருந்த மாட மாளிகையாகையால் அது பார்வை மாடம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பார்வை மாடத்தில் ஏறி நின்று பார்த்த இளங்குமரனுக்கு முதல் நாள் மழையில் நனைந்திருந்த நகரும், சுற்றுப் புறங்களும் அற்புதமாய்த் தோன்றின. எல்லையற்ற பெருநீர்ப் பரப்பினிடையே குளிர்ந்த வைகறைப் போதில் பனித்துளி புலராது தலை தூக்கி மலர்ந்து கொண்டிருக்கும் பெரும் பூவைப்போல் மழையில் நனைந்திருந்த நகரத்தில் பகல் பிறந்து விரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தபோது இளங்குமரன் மனத்தில் விசித்திரமானதோர் ஆவல் அரும்பியது. அப்போதே நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கால் போகும் போக்கில் நடந்து சுற்றிவிட்டு வரவேண்டும் போலிருந்தது அவனுக்கு. இப்படிப் பல சமயங்களில், மழையிலும் வெயிலிலும் காரணமும் நோக்கமுமின்றி அநுபவத்தைத் தேடும் அனுபவத்திற்காக ஊர் சுற்றியிருக்கிறான் அவன். கப்பலிலிருந்து இறங்கி வந்த போது புறவீதியில் வளநாடுடையார் வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் தங்கியபின் அங்கிருந்து நேரே படைக்கலச் சாலைக்குப் போய்விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த அவன் இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். உற்சாகத்தோடு ஊர்சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். ஒவ்வோர் இடமாகப் பார்த்து விட்டுப் பௌத்தப் பள்ளியும் புத்தர் பெருமானுக்குரிய ஏழு பெரிய விகாரங்களும் அமைந்திருந்த இடமாகிய ‘இந்திரவிகாரம்’ என்னும் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தான் அவன். தூபிகளோடு கூடிய வெண்ணிற விமானங்கள் ஏழும் தோட்டத்துக்கு நடுவே தூய்மையின் வடிவங்களாகத் தோன்றின. புத்த விகாரங்களுக்கு முன்னால் அங்கங்கே சிறுசிறு கூட்டங்களுக்கு நடுவே நின்று கொண்டு பௌத்த சமயத்தைச் சார்ந்த துறவிகள் அறிவுரைகளைப் பகர்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சில துறவிகள் எங்களை எதிர்த்துச் சமயவாதம் புரியும் திறமையுள்ளவர்கள் வரலாம்’ என்று அழைப்பதுபோல் தத்தம் கொடிகளைக் கம்பங்களின் உயரத்தில் பறக்க விட்டுக் கொண்டு வெற்றிப் பெருமிதத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.
அந்தப் புத்த விகாரங்களுக்கு முன்னால் சமயவாதிகளின் திறமையான பேச்சில் மயங்கிக் கூடியிருந்த கூட்டத்துக்குள் இளங்குமரனும் புகுந்து நின்று கொண்டான். இளைத்த தோற்றத்தையுடைய நெட்டையான பௌத்த சமயத் துறவி ஒருவர் புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் உலகுக்கு விளையும் நன்மைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் கதிரவனும் சந்திரனும் தீங்கின்றி விளங்குவார்கள். நாளும், கோளும், நலிவின்றி நல்லனவாய் நிகழும். வானம் பொய்யாது, வளங்கள் குறையாது. உலகத்து உயிர்கள் துன்பமின்றி இன்பமே நுகரும். மலைகளும், கடலும் துன்பமின்றி இன்பமே நுகரும். மலைகளும், கடலும் பெரும்பயன் நல்கும். பசுக்கள் கலம் நிறையப் பால் பொழியும், உலகத்தில் நோய்களே இல்லாமற் போய்விடும். கொடிய விலங்குகளும் புகை நீங்கி வாழும். கூனும் குருடும், ஜமையும் செவிடும் இன்பமயமாக மாறிவிடும்...” என்று தாமரை மலர் போன்ற வலக் கையை ஆட்டி உயர்த்திப் பேசிக் கொண்டிருந்த அந்தத் துறவிக்கு மிக அருகிற் சென்று அவருடைய வலது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு கேட்டான் இளங்குமரன். “எனக்கு ஒரு சந்தேகம். அருள் கூர்ந்து அதைத் தெளிவாக விளக்கிய பின் நீங்கள் மேலே பேசலாம்.”
“ஆகா! அப்படியே செய்கிறேன் அப்பா. முதலில் உன் சந்தேகத்தைச் சொல்” என்று அவன் பிடியிலிருந்து தம் கையை விடுவித்துக் கொள்ளாமலே கேட்டார் அவர்.
அவனுடைய செய்கையால் அவர் சிறிதும் அதிர்ச்சியோ', அச்சமோ அடைந்ததாகவே தோன்றவில்லை. அமைதியாக நகைத்துக் கொண்டே நின்றார்.
“புத்தஞாயிறு தோன்றுங் காலத்தில் உலகத்தில் பசி, பிணி, துன்பம் ஒன்றுமே இல்லாமற் போகும் என்று சற்று முன் நீங்கள் கூறியது மெய்தானா அடிகளே?”
“மெய்தான்; இதில் உனக்குச் சந்தேகம் ஏன்?”
“அப்படியானால் இப்போது என்னோடு நான் கூப்பிடுகிற இடத்துக்கு வாருங்கள், அடிகளே!” என்று கூறிக்கொண்டே அவரைப் பரபரவென்று இழுத்துக் கொண்டு விரைந்து நடந்தான் இளங்குமரன். அவனுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்க இயலாத துறவி அவனுடன் இழுபடுவதுபோல் தட்டுத் தடுமாறி விரைந்தார்; இந்த வம்பு எதில் போய் முடிகிறதென்று காணும் ஆவலினால் கூட்டத்தில் சிலரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். இளங்குமரனுக்கும், துறவிக்கும் பின்னால் ஒரு பெரிய கூட்டமே தொடர்ந்து நடந்து வரத் தொடங்கியிருந்தது. உலக அறவியின் பொது அம்பலத்துக்குள் நுழைந்து அங்கே பசிப் பிணியாலும், வறுமை வேதனைகளாலும் நொந்து கூடியிருந்த ஏழமைக் கூட்டத்தை அந்தத் துறவிக்குச் சுட்டிக் காண்பித்தான் இளங்குமரன்.
“இவர்களைப் போன்றவர்களைக் கண்டு, இவர்களைப் போன்றவர்களின் துன்பங்களிலிருந்து தான் உங்கள் புத்தருக்கு ஞானம் பிறந்தது. ஆனால் இவர்களைப் போன்றவர்களின் பசியும், நோவும் தீர வழிதான் இன்னும் பிறக்கவில்லை. இவர்களைப் போன்றவர்கள் தலைமுறை தலைமுறையாக இன்னும் உலகத்தில் இருக்கிறார்கள். நோயும், நொடியும், பசியும், பாவமும் இவர்களோடு வழி முறை வழிமுறையாக இருக்கின்றன. நீங்களோ இந்திர விகாரத்து வாயிலில் நின்று கொண்டு புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் உலகமே சுவர்க்க பூமியாக மாறி விடும் என்று கதை அளந்து பாமரர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள். இவர்களுடைய இருண்ட வாழ்க்கையில் புத்த ஞாயிறு தோன்றிப் புத்தொளி பரப்பாதது ஏன்?” இவர்களுடைய குழிந்த வயிறுகளில் சோறு குவியாதது ஏன்? ஒளியிழந்த கண்களில் ஒளி தோன்றாதது ஏன்?” என்று ஆவேசம் கொண்டவன்போல் உணர்வு மயமாக மாறி அவரைக் கேட்டான் இளங்குமரன். அவர் அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். பதில் கூறாமல் மெல்லச் சிரித்தைக் கூர்ந்து நோக்கினார். பதில் கூறாமல் மெல்லச் சிரித்தார். தம்மையும் அவனையும் சுற்றிக் கூடியிருந்த கூட்டத்தை நன்றாக நிமிர்ந்து பார்த்தார்.
சிறிது நேரம் ஏதோ சிந்திப்பவர்போல் அமைதியாக நின்றார். பின்பு இளங்குமரனை நோக்கிக் கூறலானார்:
“தம்பி! உன் கேள்விகள் மிக அழகாக இருக்கின்றன. சார்வாக மதத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் இவ்வளவு அழகாகப் பேச வரும். அவர்கள் தாம் இப்படிப் பொருளற்ற கேள்விகளைக்கூட அழகான சொற்களால் கேட்பார்கள். இறைவன் என ஒருவன் இல்லை என்பார்கள். நல்வினை தீவினைகளின் விளைவை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். தங்கள் இன்ப துன்பங்களுக்குத் தங்களுடைய வினைகளே காரணமென்று புரிந்து கொள் ளாமல் இறைவனே காரணமென்று மயங்கி அவனைப் பழிப்பார்கள்.”
“அடிகளே! நான் யாரையும் எதற்காகவும் பழிக்கவில்லை, இவர்கள் இப்படி வாழ நேர்ந்ததன் காரணத்தைத் தெரிந்துகொள்ள மட்டுமே ஆசைப்படுகிறேன்” என்றான் இளங்குமரன்.
“நல்லது! அதைத் தெரிந்து கொள்வதற்கு நீயும், நானும் சிறிது நேரம் விரிவாகப்பேசி வாதமிட வேண்டும். இதோ இங்கே என்னையும், உன்னையும் சுற்றிக் கூடியிருக்கும் காவிரிப்பூம்பட்டினத்துப் பொதுமக்கள் சாட்சியாக உன்னைக் கேட்கிறேன். சமயவாதம் புரிகிற இருவரும் ஒத்த அறிவுடையவராக இருக்க வேண்டியது நியாயம். என்னோடு சமயவாதம் புரிவதற்கு நீ கல்வியினால் தகுதி உடையவனா என்று முதலில் நான் தெரிந்து கொண்டு விடுவது நல்லது. நீ எந்தெந்த நூல்களைக் கற்றிருக்கிறாய் என்று சொல் பார்க்கலாம்.”
“வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வாட் போர்...” என்று சில பெயர்களை வரிசையாக அடுக்கினான் இளங்குமரன்.
துறவியும், கூடியிருந்தவர்களும் கொல்லென்று சிரித்துக் கைகொட்டி ஏளனம் செய்தார்கள்.
“தம்பீ! உன்னுடைய வாட்டசாட்டமான உடம்பையும் முரட்டுத் தோற்றத்தையும் பார்த்தாலே நீ பெரிய வீரன் என்பது தெரிகிறது. ஆனால், நான் இப்போது கேட்கும் கேள்வி உன் உடம்பின் வளர்ச்சியைப் பற்றி அன்று; மனத்தின் வளர்ச்சியைப் பற்றித்தான் கேட்கிறேன். மனம் வளர்வதற்காக நீ என்னென்ன நூல்களைக் கற்றிருக்கிறாய், சமயங்களையும் தத்துவங்களையும் பற்றி என்னென்ன தெரிந்து கொண்டிருக்கிறாய்? என்னென்ன புரிந்து கொண்டிருக்கிறாய்!” என்று நிமிர்ந்து நின்று கை நீட்டி, வினாவும் அந்தத் துறவிக்கு முன் இளங்குமரனின் தலை தாழ்ந்தது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக உடலின் பலத்தால் எதிர்க்க முடியாத ஓர் எதிரிக்கு முன் தாழ்ந்து தளர்ந்து போய்த் தலை குனிந்து நின்றான் அவன்.
என்ன பதிலை அவருக்குக் கூறுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. சர்வநாடியும் ஒடுங்கித் தளர்ந்து போர் தொடங்குமுன்பே எதிரிக்குத் தோற்றுப் போய் நிற்கும் பேதைபோல் நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை அவனுக்கு.
“புத்தமதத்தைப் பற்றியாகிலும் உனக்கு ஏதாவது தெரியுமா?”
‘உங்களைப் போன்ற மொட்டைத் தலைச் சாமியார்கள் அந்த மதத்தில் நிறைய இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும்’ என்று முரட்டுப் பதிலாகக் கூறி அவரை மடக்கலாமா என நினைத்தான் இளங்குமரன். ஆனால் உடலும் மனமும் குன்றிப்போய் அத்தனை பேருக்கு முன் அவமானப்பட்டு நின்ற அந்தச் சூழ்நிலையில் வாய் திறந்து பேசும் துணிவையே இழந்திருந்தான் அவன்.
‘உனக்கு என்ன தெரியும்? உனக்கு எதைப் பற்றி ஞானம் உண்டு?’ என்று அவன் உள்ளத்தில் பெரிதாய் எழுந்து இடையறாமல் ஒலிக்கலாயிற்று ஒரு கேள்வி. அந்தக் கேள்வியில் அவன் உள்ளத்தின் செருக்கெல்லாம் துவண்டு ஒடுங்கியது.
சுற்றிக் கூடியிருந்த கூட்டத்திலிருந்து வாய்க்கு வாய் தன்னை ஏளனம் செய்து இழந்து பேசும் குரல்கள் ஒலிப்பதை அவன் செவிகள் கேட்டன. அந்தக் கணத்தில் அவன் உடம்பும் மனமும், அதற்கு முன் எப்போதுமே அடைந்திராத கூச்சத்தை அடைந்தன. வெட்கத்தை உணர்ந்தன. வேதனையை அனுபவித்தன.
இந்திர விகாரத்தின் வாயிலில் இருந்து அந்தத் துறவியைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்தபோது தன்னிடமிருந்த மிடுக்கும், கம்பீரமும் இப்போது போன இடம் தெரியாமல் பொலிவிழந்து நின்றான் இளங்குமரன்.
“மறுபடி எப்போதாவது என்னிடம் கேள்வி கேட்க வந்தால் இப்படி வெறுமையான மனத்தோடு, வெறுங்கையை வீசிக்கொண்டு வராதே தம்பீ!
மனம் நிறைய ஞானத்தோடு வலது கையில் சமயவாதம் புரிவதற்கான கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஞான வீரனாக வந்து சேர். மற்போர் வீரனைப் போல் உடம்பை மட்டும் வலிதாகக் காண்பித்துக் கொண்டு வந்து நிற்காதே” என்று அவனுக்குக் கேட்கும் படி உரத்த குரலில் கூறிவிட்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டு திரும்பி நடந்தார்-
அந்தப் பௌத்த சமயத்துறவி.