மணி பல்லவம் 1/039-039
உலக அறிவியில் பௌத்த சமயத் துறவியிடம் தோற்று அங்கே கூடியிருந்தவர்களின் ஏளனத்தையும் இகழ்ச்சியையும் ஏற்க நேர்ந்தபின், நடைப்பிணம் போல் தளர்ந்து படைக்கலச் சாலைக்குப் புறப்பட்டிருந்தான் இளங்குமரன். மனமும் நினைவுகளும், வாழ்வுற்று வலுவிழந்திருந்த அந்த நிலையில் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எவரையும் எதிரே சந்திக்காமல் இருந்தால் நல்லதென்றெண்ணி ஒதுங்கி மறைந்து நடந்தான் அவன். முதல் நாள் இரவு கப்பல் கரப்பு தீவின் தனிமையில் சுரமஞ்சரி என்னும் பேரழகியைச் சிறிதும் பொருட்படுத்தாமல் நிமிர்ந்து நிற்கும் செருக்கும், தன்மானமும் இன்று எலும்பும் தோலுமாய் இளைத்துப் போன துறவி ஒருவருக்கு முன் தோற்றுத் தாழ்ந்து போய் விட்டதென்பதை நினைத்தபோது அவன் மனம் தவித்தது.
‘என் மனம், என் மனம்’- அவன் மற்றவர்களிடம் பெருமை பேசித் தருக்கிய அதே மனத்தில் ‘என்ன இருக்கிறது?’ என்று கேட்டு விட்டார் அந்தத் துறவி.
முரட்டுத் திமிரையும், வரட்டு ஆணவத்தையும் தவிர அங்கே இருப்பது வேறு ஒன்றுமில்லை என்று நிரூபித்து விட்டார். பலர் நகைத்து இகழும்படி நிரூபித்து விட்டார்.
‘அப்படியில்லை! ஒருபோதும் அப்படியில்லை. என் மனத்தில் கருணையும் இருக்கிறது. ஓவியன் மணிமார்பனுக்கும், சுரமஞ்சரி என்ற பெண்ணுக்கும் துன்பம் நேர்ந்த காலங்களில் நான் கருணை காட்டியிருக்கிறேன். உலக அறவியிலும் இலஞ்சி மன்றத்திலும் உள்ள ஏழைகள் மேலும், இளைத்தவர் மேலும் இரக்கம் கொண்டிருக்கிறேன். பிறருக்கு உதவுவதில் பெருமை கொண்டிருக்கிறேன். இயலாதவர்களுக்கு உதவுவதில் இன்பம் கண்டிருக்கிறேன்.
‘இருக்கலாம்! ஆனால், நம்மால் பிறரிடம் கருணைகாட்ட முடியும் என்ற ஆணவ நினைப்புத்தான் உன்னுடைய கருணைக்குக் காரணம். ‘இரக்கப்பட முடியும்’ என்ற பெருமைக்காகவே இரக்கப்படுகிறவன் நீ! கருணைக்காகவே கருணை செலுத்தவும் இரக்கத்துக்காகவே இரங்கவும், உனக்குத் தெரியாதுதானே?’
இப்படி அவன் மனத்துக்குள்ளேயே அவனைப் பற்றி வாதப் பிரதிவாத நினைவுகள் எழுந்தன. தன்னைப் பற்றிய நினைவுகளைத் தானே தனக்குள் எண்ணி மெய்யின் ஒளியைத் தேட முயன்று தவிக்கும் ஆத்மாநுபவத் தூண்டு தலை அவன் அடைந்தான். அந்தத் தூண்டுதல் ஏற்பட ஏற்பட மனத்தின் கனங்களெல்லாம் குறைந்து மனமே மென்மையானதொரு பூவாகிவிட்டது போலிருந்தது அவனுக்கு. தன் மனத்தின் குறிக்கோள் இப்போது புதிய திசையில் திரும்புவதையும் அவன் உணர்ந்தான்.
பதினெட்டு வயதில் இளமையின் நுழைவாயிலில் அவன் மனத்தில் ஏற்பட்டு அறிய ஆசைப்பசிகள் இரண்டு. ஒன்று உடம்பை வலிமையாகவும் வனப்பாகவும் வைத்துக் கொண்டு எல்லாருடைய கவனத்தையும் கவர வேண்டும்மென்பது. மற்றொன்று விற்போரும், மற்போரும் போன்ற படைக்கலப் பயிற்சிகளில் எல்லாம் தேறித்தேர்ந்த வீரனாக விளங்க வேண்டுமென்பது.
இந்த இரண்டு ஆசைகளும் நிறைவேறி மறந்து போன பின், தன்னுடைய தாய் யார் தந்தை யார், தனக்கு உறவினர்கள் யார் என்று அறியும் ஆசை எழுந்தது. நிறைவேறாத அந்த ஆசையில் நைந்து அது இறுதியில் தாயை மட்டுமாவது காணும் விருப்பமாகக் குறைந்தது. அருட்செல்வ முனிவரின் மறைவுக்குப் பின் அந்த ஆசையும் நிறைவேறும் வழியின்றித் தவிப்பாக மாறி மனத்திலேயே தங்கிவிட்டது.
இன்றோ, முப்பதாவது வயதுக்கு இன்னும் சிறிது காலமே எஞ்சியிருக்கக் கூடிய முழுமையான இளமையின் கனிவில் நிற்கிறான் அவன். அவனுடைய சுந்தர மணித் தோள்களிலும், பரந்த பொன்நிற மார்பிலும், ஏறு போன்ற, நடையிலும், எடுப்பான பார்வையிலும், மெல்லியலார் சொல்லிப் புகழுகிற இளநலம் மலரும் பருவம் இது. இந்தப் பருவத்தில் இன்று அவனுக்கு ஏற்பட்ட ஆசையோ விசித்திரமானதாயிருந்தது. இலக்கண இலக்கியங்களையும், மகா காவியங்களையும், மிகப்பெரிய ஞான நூல்களையும், சமய சாத்திரங்களையும், தத்துவங்களையும் முற்றிலும் முறையாகக் குறைவின்றிக் கற்றுக் காலையில் இந்திர விகாரத்தில் சந்தித்த துறவியைப்போல் ஞான வீரனாக நிமிர்ந்து நிற்க வேண்டுமென்னும் ஏக்கம் அவன் மனத்தில் ஏற்பட்டிருந்தது. வெறும் ஏக்கமாகத் தோன்றிய இது அவன் வாழ்க்கையில் புதிய திசையில் பிறந்த புது வழியாகவும் அமையும் போலிருந்தது. உடம்பை வலிமையாகவும், வனப்பாகவும் வளர்த்ததைப் போலவே மனத்தையும் வளர்க்க ஆசைப்பட்டான் அவன். சோற்றுக்கு இல்லாமையும், துணிக்கு இல்லாமையும் பெரிய ஏழ்மையல்ல; மெய்யான ஏழைமை அறிவின்மைதான். மெய்யான செல்வம் அறிவுடமைதான்’ என்ற புதிய உணர்வு என்றுமில்லாமல் இன்று தன் மனத்தில் ஆழ்ந்து தோன்றுவதற்குக் காரணமென்ன என்பது இளங்குமரனுக்கே புரியாத பெரும் புதிராயிருந்தது.
இந்திர விகாரத்தில் அந்தத் துறவியைச் சந்தித்து அவரோடு வம்புக்குப் போக நேர்ந்திராவிட்டால் இப்படியொரு தவிப்பைத் தான் உணர இடமில்லாமற் போயிருக்குமோ என்று சிந்தித்தான் அவன். அந்தச் சிந்தனையின் போது தன் வாழ்வில் மலர்வதற்கிருந்த அல்லது மலர வேண்டிய வேறு ஓர் அழகிய பருவத்துக்குத் தூண்டுதல் போலவே இந்திரவிகாரத்துத் துறவியின் சந்திப்பு வாய்த்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் உறுதிப் பட்டது.
மனம் சென்ற போக்கில் சிந்தித்தவாறே கால்கள் சென்ற போக்கில் சுற்றிவிட்டு அவன் படைக்கலச் சாலையை அடைந்தபோது நேரம் நண்பகலுக்கு மேல் ஆகியிருந்தது. நீலநாக மறவர் திருநாங்கூரிலிருந்து திரும்பி வந்திருந்தார். ஆனால் மீண்டும் எங்கோ புறப்படுவதற்குச் சித்தமாயிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக வாயிற் புறத்தில் அவருடைய தேர் குதிரைகள் பூட்டப்பெற்றுப் பயணத்துக்குரிய நிலையில் நின்று கொண்டிருந்தது. வழியனுப்புவதற்கு நிற்பதுபோல் படைக்கலச் சாலையின் மாணவர்களும் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். களைப்புத்திர நன்றாக நீராடித் தூய்மை பெற்றபின் உண்பதற்காகப் படைக்கலச் சாலையின் உணவுக் கூடத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த இளங்குமரனை நீலநாக மறவர் உடனே கூப்பிடுவதாக ஒரு பணியாள் வந்து தெரிவித்தான். வயிற்றில் மிகுந்த பசியாயிருந்தாலும், அவரைச் சந்தித்து விட்டுப் பின்பு உண்ணச் செல்லலாமென்று அந்தப் பணியாளுடன் நீலநாகரைச் சந்திக்கச் சென்றான் இளங்குமரன்.
“உன்னை எதிர்பார்த்துத்தான் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறேன், இளங்குமரா! நேற்றிரவுதான் திருநாங்கூரிலிருந்து நான் திரும்பினேன். மறுபடியும் இப்போது திருநாங்கூருக்கே புறப்படுகிறேன். நீயும் என்னுடன் அங்கே வரவேண்டும். நாங்கூர் அடிகள் உன்னைக் காண்பதற்கு மிகவும் ஆவலோடிருக்கிறார். உடனே புறப்படலாம் அல்லவா?” என்று நீலநாக மறவர் கேட்டபோது,
“நான் இன்னும் உண்ணவில்லை” என்பதைச் சொல்வதற்குக் கூசிக் கொண்டு, “புறப்படலாம் ஐயா! நானும் வருகிறேன்” என்று கூறி உடனே இணங்கினான் இளங்குமரன்.
நீலநாக மறவர் தேரில் ஏறுவதற்கு முன் தேர்த்தட்டின் படியில் ஒரு காலும் தரையில் ஒரு காலுமாக நின்று கொண்டு மீண்டும் இளங்குமரனிடம் கூறினார்:
“தம்பீ! சோழ நாட்டிலேயே சான்றாண்மை மிக்க வரும் பெரிய ஞானியுமாகிய அடிகளின் அருள் நோக்கு உன்பக்கம் திரும்பியிருக்கிறது. முக்காலமும் உணரவல்ல அருமை சான்ற பெரியவர்களுடைய அன்பும் ஆதரவும் வலுவில் ஒருவனைத் தேடிக்கொண்டு வருவது பெரும் பாக்கியம். அந்தப் பாக்கியம் இப்போது உனக்குக் கிடைக்க இருக்கிறது! அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வது உன் பொறுப்பு.”
நாத்தழுதழுக்க அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டபோது இளங்குமரனுக்கு என்ன காரணத்தாலோ மெய்சிலிர்த்தது. அவரை உள்ளே அமரச் செய்து தேரை அவனே செலுத்திக் கொண்டு சென்றான். தேர் புற வீதிக்குள் நுழைந்து வளநாடுடையார் இல்லத்தைக் கடந்தபோது வாயிலில் நின்று கொண்டிருந்த முல்லை கையை உயரத் தூக்கி ஏதோ சொல்லிக் கூப்பிட்டதை இளங்குமரன் கவனித்தும் அப்போது அவளுக்காகத் தேரை நிறுத்தவில்லை. அதேபோல் நாளங்காடியின் திருப்பத்தில் எதிரே மிக அருகில் வந்த மற்றொரு தேரில் சுரமஞ்சரியும் வானவல்லியும், வசந்தமாலையும் அமர்ந்திருந்ததைக் கண்டும் அவன் தேரை நிறுத்தவில்லை. ஆனாலும் விநாடியில் தேர்களின் வேகத்தையும் மீறிச் சுரமஞ்சரியின் முகத்தில் தன்னைப் பார்த்ததால் ஏற்பட்ட சிறிது மலர்ச்சியை அவன் கவனிக்கும்படி நேர்ந்தது. காலையில் துறைமுகத்தில் தன்னிடம் கோபித்துக் கொண்டு பிணங்கி ஓடியபோது அவள் இருந்த நிலையையும், இப்போது எதிரே தேரில் சந்தித்தபோது இருந்த நிலையையும் ஒப்பிட்டு நினைத்தான் இளங்குமரன். மிகவும் அழகிய பெண்களின் மனத்துக்குள் அழகைப் போலவே பலவீனங்களும் மிகுதி என்று தோன்றியது அவனுக்கு. தேர் காவிரிப்பூம் பட்டினத்தின் அழகிய பகுதிகளை ஒவ்வொன்றாகக் கடந்து திருநாங்கூருக்குச் செல்லும் வழியில் இளங்குமரனுக்குப் பல அறிவுரைகளைக் கூறிக்கொண்டு வந்தார் நீலநாக மறவர்.
நாங்கூர் அடிகள் என்ன நோக்கத்தோடு இளங்குமரனை அழைத்திருக்கக்கூடும் என்பதையும் விளக்கிக் கூறினார். இளங்குமரனுக்கு அவற்றைக் கேட்டு மிகவும் பூரிப்பு உண்டாயிற்று.
“ஐயா! ஊழ்வினை என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை எத்துணைத் தொடர்பாகக் கோவைப்படுத்துகிறது, பார்த்தீர்களா? இன்று காலையில் தான் தற்செயலாக நேர்ந்த ஓர் அநுபவத்தினால் எனக்கே ஞான நூல்களைக் கற்க வேண்டுமென்று தீராப் பசி எழுந்தது. உடனே யாரோ சொல்லி வைத்ததுபோல் நீங்கள் என்னைத் திருநாங்கூருக்கு அழைத்தீர்கள். எல்லாம் எவ்வளவு இயைபாகப் பொருந்தி வருகின்றன, பாருங்கள்!” என்று நன்றியோடு அவரிடம் கூறினான் இளங்குமரன்.
தான் இந்திரவிகாரத்துத் துறவியிடம் அவமானப்பட்டதையும் மறைக்காமல் அவரிடம் சொல்லிவிட்டான் அவன்.
“இதையெல்லாம் அவமானமாக நினைக்கலாகாது தம்பீ! நோயும், மூப்பும் மரணமுமாக உலகில் மனிதர்கள் நிரந்தரமாய் அடைந்து கொண்டிருக்கிற அவமான இருளில்தான் புத்த ஞாயிறு பிறந்து ஒளி பரப்பியது” என்று அவர் மறுமொழி கூறினார்.
அவர்களுடைய தேர் நாங்கூர் அடிகளின் பூம்பொழிலை அடைந்தபோது, தற்செயலாக நிற்பவர்போல் நாங்கூர் அடிகளே வாயிலில் வந்து நின்று கொண்டிருந்தார். ஆயிரம் கதிர் விரிக்கும் ஞாயிற்றொளி அலை கடற்கோடியில் மேலெழுவதுபோல் அமர்ந்திருந்த அடிகளின் முகத்தைப் பார்த்தபோது இளங்குமரனின் உள்ளத்தில் பணிவு குழைத்தது; அவன் அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். நீலநாக மறவரும் வணங்கினார். அடிகளின் கண்கள் இளங்குமரனையே பார்த்துக் கொண்டிருந்தன.
சிறிது நேர அமைதிக்குப் பின் “நீ மிகவும் பசித்துக் களைத்துப் போயிருக்கிறாய்” என்று இளங்குமரனை நோக்கிச் சிரித்தவாறே கூறினார் நாங்கூர் அடிகள். அவருடைய சிரிப்பு எதிரே இருப்பவர்களின் அகங்காரத்தை அழித்து விடும் ஆற்றல் இருப்பதை இளங்குமரன் உணர்ந்தான்.
“அவன் பசித்திருப்பது மெய்தான்; ஆனால் அந்தப் பசி சோற்றினாலும், நீரினாலும் தீராத பசி, ஞானப்பசி. நீங்கள் தான் அந்தப் பசியைத் தீர்த்தருள வேண்டும்” என்றார் நீலநாக மறவர். அடிகள் முகம் மலர நகைத்தார். பின்பு மெல்லக் கேட்டார்.
“பசி தீர்க்கிறவர்களுக்கு இந்தப் பிள்ளை என்ன விலை கொடுப்பானோ?”
“மனம் நிறைய அறியாமையையும், ஆணவத்தையும் தவிரக் கொடுப்பதற்கு வேறொன்றும் தான் கொண்டு வரவில்லையே ஐயா!” என்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே பதில் கூறினான் இளங்குமரன். அப்போது அவன் கண்களில் நீர் நெகிழ்ந்தது. அழுகிறாற் போல் குரல் நைந்து ஒலித்தது.
அடிகள் இளங்குமரனுக்கு அருகில் வந்து அவனைத் தழுவிக் கொண்டார்.
“நீ வேறு ஒன்றும் விலை தரவேண்டாம். உன்னையே எனக்குக் கொடு. என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்யும் விளை நிலமாக இரு. அதுவே போதும்.”
“என் பாக்கியம்” என்று கூறியவாறே மீண்டும் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் இளங்குமரன்.
“இந்தப் பாதங்களை நன்றாகப் பற்றிக்கொள். இவற்றை விட்டுவிடாதே. உன் அறியாமையும் ஆணவமும் இவற்றின் கீழ்த்தாமே. கரைந்து போகும்” என்று கூறிவிட்டுத் தேரில் ஏறினார் நீலநாக மறவர்.
மறுகணம் அவருடைய தேர் திரும்பி விரைந்தது. நாங்கூர் அடிகள் இளங்குமரனின் கைகளைப் பற்றிக் கொண்டார். மகிழ்ச்சியோடு அவளிடம் கூறலானார்:
“என்னுடைய மனத்தில் உதயமாகும் காவியம் ஒன்றிற்கு நாயகனாவதற்கு முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். அவன் இன்று எனக்குக் கிடைத்து விட்டான்! அந்தக் காவியம் உருவாக இனித் தடையில்லை.”
(முதற் பருவம் முற்றும்)