9. பெண்ணில் ஒரு பெருமை

பெண்மை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘கண்ணிற் புலனாவதோர் அமைதித் தன்மை’ என்று இளங்குமரன் பலரிடம் பொருள் விளக்கம் கேட்டு அறிந்திருந்தான். இன்று விசாகை என்னும் பெண்ணைப் பார்த்தபோது கேட்டு அறிந்திருந்த அந்தப்பொருளைக் கண்டும் அறிந்தான். கண்களின் பார்வையில், முகத்தின் சாயலில், இதழ்களின் சிரிப்பில் எங்கும் எதிலும் அமைதி திகழ அமர்ந்திருந்தாள் விசாகை.

திருநாங்கூர் அடிகள் இளங்குமரனை நோக்கிப் புன்னகை புரிந்தவாறு கூறலானார்.

“இளங்குமரா! விசாகையின் கதை அழிவற்றது. ‘மனிதர்களால் இவ்வளவுதான் முடியும் என்று வரையறை செய்திருக்கும் அளவுக்கும் அப்பாற்பட்டது. இன்ன காரணத்தினால் இப்படிச் செய்தாள்’ என்று இணைத்து விளக்குவதற்குத் தொடர்பும் அற்றது. அழிவு அற்றதை அழிவைக்கொண்டு, அளவு அற்றதை அளவைக் கொண்டும் தொடர்பு அற்றதைத் தொடர்பைக் கொண்டும் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? விசாகையின் வாழ்க்கையிலிருந்து ஒரு புதிய தத்துவமே மலர்ந்திருக்கிறது. பெண்ணில் இவள் ஒரு புதுமை! வாழ்வில் அறம் செய்கிறவர்கள் பலர். ஆனால் வாழ்வையே அறமாகச் செய்கிறவர்கள் விசாகையைப் போல் சிலரினும் சிலர்தான் தோன்றுகிறார்கள்.

இந்தப் பெண் இங்கு வந்து சேர்ந்த முதல் நாளை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி அது. கார்த்திகை மாத நடுப்பகுதி, அடை மழை பெய்து கொண்டிருந்த காலம். தொடர்ந்து வானம் கண்விழிக்கவே இல்லை. ஆறுகளும், வாய்க்கால்களும், குளங்களும் ஓடைகளும் கரை நிமிரப் புனல் நெருங்கிப் பொங்கிப் பாய்ந்து கொண்டிருந்தன. ஊரே நீர்ப்பெருக்கில் மூழ்கியெழுந்ததுபோல் குளிர்ந்து போயிருந்தது. பூக்கள் வாடவில்லை, செடிகள் கொடிகள் துவண்டு சோரவில்லை, கார்காலம் என்னும் தம்முடைய பருவத்தைக் கொண்டாடிக் குலவுவதுபோல் முல்லைப் புதர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.

இப்போது நான் அமர்ந்து கொண்டிருக்கிற இதே கிரந்த சாலையில் இதே இடத்தில்தான் அன்றும் அமர்ந்து கொண்டிருந்தேன். நாலைந்து மாணவர்கள் என்னைச் சுற்றிலும் இருந்து ஏதோ ஒரு நூலைப் பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியில் மின்னலும் இடியுமாகப் பெருமழை பெய்து கொண்டிருந்தது பாடத்தின் இடையே என்னுடைய மாணவர்களில் ஒருவன், ‘இன்ன செயலை இந்த நேரத்தில் இப்படிச் செய்ய வேண்டும் என்னும் ஊக்கம் மனித மனத்தில் எப்படி எழுகிறது? எப்படி வளர்கிறது? எப்படி நிறைவேறுகிறது?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு என்னிடமிருந்து விடையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது கிரந்த சாலையின் வாயிற்புறத்து மறைவிலிருந்து ஒரு பெண் குரல், ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும்’ ஊக்கமாவது செயலைச் செய்வதற்குரிய நினைவைத் தூண்டும் முனைப்பு. ஊக்கத்தின் வழியே இதை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று துணிகிற ஒழுக்கம் நிகழும். கற்று அடங்கி அமையாத மனத்தில் பண்பு இல்லை. பண்பில்லாத மனத்தில் ஊக்கம் இல்லை. ஊக்கமில்லாத மனத்தில் ஒழுக்கம் இல்லை என்று பதில் கூறியது. உடனே நானும் மாணவர்களும் திகைப்படைந்து எழுந்து போய் வாயிற்புறம் பார்த்தோம். சொட்டச் சொட்ட மழையில் நனைந்தவளாய்ப் பால்வடியும் வதனத்தில் அமைதியே புன்னகையாய்ச் சாயல் காட்டக் கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திக் கொண்டு துறவுக் கோலத்தில் அந்தப் பெண் நின்றாள். என்னைக் கண்டவுடனே அட்சய பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு வணங்கினாள்.

‘இந்த மழையில் யாராவது பிட்சைக்குப் புறப்படுவார்களா? புறப்பட்டு வந்ததுதான் வந்தாய்; எதற்காக வெளியே நனைந்து கொண்டு நிற்கிறாய்? உள்ளே வரலாமே?’ என்றேன்.

துறவு நெறி மேற்கொண்ட எவளோ ஒரு புத்த சமயப் பெண் பிட்சைக்கு வந்திருக்கிறாள் என்று எண்ணியே நான் அப்படிக் கேட்டேன். இவளுடைய பேதைமை மாறாத இளமையைக் கண்டு இந்தப் பருவத்திலேயே இப்படி ஒரு துறவா என்று எண்ணி வியந்துகொண்டிருந்தது என் மனம். அதற்குள் என்னுடைய மாணவன் ஒருவன் எங்கள் பூம்பொழிலின் மடைப்பள்ளிக்குச் சென்று நெய்யிட்ட வெண்சோறும், சில காய்கனிகளும் கொண்டு வந்து இவளுடைய பிட்சைப் பாத்திரத்தில் இடுவதற்குப் போனான். சிரித்தபடியே தான் அதற்காக வரவில்லை என்று குறிப்பினாற் புலப்படுத்துகிறவளைப் போல் தன்னுடைய பிட்சைப் பாத்திரத்தைப் பின்னும் இழுத்துக் கொண்டு விலகி நின்றாள் இவள்.

“நான் ஏற்க வந்திருக்கிற பிட்சைக்கு நானேதான் பாத்திரம். இது அன்று” என்று சொல்லி அட்சய பாத்திரத்தை ஒதுக்கிவைத்தாள்.

பின்பு தான் மழைக்கு ஒதுங்கினாற்போல் நின்ற இடத்தினருகே வைத்துக் கொண்டிருந்த துணி முடிப்பை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு மூன்று ஓலைகள் அடங்கிய திருமுகம் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினாள். மனத்தில் இன்னதென்று விளங்காமல் பெருகும் வியப்புடன் இவள் கொடுத்த ஓலையை வாங்கிப் படித்தேன். ஓலை பாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. மணிபல்லவத் தீவுக்கு அருகில் சமந்த கூட மலையில் வாழ்ந்து வந்த புத்த தத்தர் என்னும் துறவி அந்த ஓலையை எனக்கு எழுதியிருந்தார். அந்தத் துறவி எனக்கு நெருங்கிய நண்பர். பலமுறை காவிரிப்பூம் பட்டினத்துக்கும், திருநாங்கூருக்கும் வந்து பழகியவர். சமயவாதம் புரியுமிடங்களில் எல்லாம் இருவரும் சந்தித்திருக்கிறோம். இரண்டொரு சமயங்களில் நானே அவரை வாதத்தில் வென்று [1] ‘நாவலோ நாவல்’ என்று வெற்றி முழக்கமிட்டுக் கூறியிருக்கிறேன். அவர் பாலி மொழியில் எனக்கு எழுதியிருந்த ஒலையில் அந்தப் பெண்ணைப் பற்றிய வரலாற்றைக் கூறி அறிமுகப்படுத்தியிருந்தார். அன்று அவர் எனக்கு எழுதியனுப்பியிருந்தவற்றை அப்படியே தமிழில் இன்று உனக்கு விவரித்துச் சொல்கிறேன் இளங்குமரா!

'முற்றா இளமையும் முதிராப் பருவமுமாக உங்களிடம் வந்து நிற்கும் இந்தப் பெண்ணின் பெயர் விசாகை. உடம்பும் பருவமும், முதிர்ச்சியடையாவிட்டாலும் மனத்தில் முதிர்ச்சியும் செம்மையும் பெற்றவள் இவள். மற்றப் பெண்கள் பாவையும், அம்மானையும் கொண்டு கன்னி மாடங்களில் பிள்ளைப் பருவத்து விளையாட்டுக்களை விளையாடிப் பொழுது போக்கிக் கொண்டிருந்த வயதிலேயே இவள் அறநூல்களையும் ஞானநூல்களையும் தக்க ஆசிரியரிடம் பாடங் கேட்கத் தொடங்கிவிட்டாள். சில செடிகள் முளைக்கும்போதே தமக்குரிய மணத்தை மண்ணுக்கு மேலே பரவச் செய்து கொண்டு முளைக்கும். அதைப்போல், விட்ட குறை தொட்ட குறையை நிறைவு செய்யப் பிறந்தவளோ என்று பெற்றவர்களே மருண்டு அஞ்சும் புண்ணியப் பிழம்பாயிருந்தாள் இவள்.

இவளைப் பெற்றவர்களும், சாதாரணமானவர்கள் அல்லர். சாவகநாட்டுச் சிற்றரசர்களில் சிறந்தவனும், பெருஞ்செல்வத்துக்குரியவனுமாகிய சூடாமணிவர்மனின் ஒரே மகளாக இவள் பிறந்தாள். உலகின் நிலையாமையும், துன்பங்களும் இளம் வயதிலேயே இவள் மனத்தில் உறைத்துப் பதிந்து விட்டன. மற்றவர்கள் பாக்கியங்களாக நினைத்த அரசபோக ஆடம்பரங்கள் இவளுக்குத் துர்ப்பாக்கியங்களாக உறுத்தின. ‘இவற்றிலிருந்து விடுபட்டுச் செல்! துன்ப விலங்குகளிலிருந்து விடுபட அறியாமல் தவிக்கும் மக்களுக்கெல்லாம் விடுபடும் வழியை விளக்கு’ என்று இவள் மனதில் இடைவிடாத தூண்டுதல் ஒன்று பெருகி வந்தது. நினைவு வராப் பருவத்திலேயே இவள் தன் தாயை இழக்கும்படி நேர்ந்தது.

இவளுடைய ஒப்பிலா அழகையும், அறிவையும் பார்த்து இவள் தந்தை சூடாமணிவர்மன் என்னென்னவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தான். சுயம்வர ஏற்பாடுகள் நடந்தன. விசாகையின் அழகைக் கேள்விப்பட்டிருந்த இளவரசர்கள். எல்லாரும் சூடாமணிவர்மனின் சுயம்வர மண்டபத்தில் கூடினார்கள். கடல் கடந்த நாடுகளிலிருந்தும் விசாகையின் அழகைக் கேட்டு மயங்கியவர்கள் வந்திருந்தார்கள்.

‘எந்தப் பிறவியிலோ செய்த தவப்பயன் இந்தப் பிறவியில் எனக்கு இப்படி ஒரு பெண்ணாய்ப் பிறந்திருக்கிறது’ என்று சூடாமணிவர்மன் கர்வப்பட்டுக் கொண்டிருந்தான். விசாகையின் சுயம்வர நாள் விழாவைச் சாவகநாடே களிப்புடன் கொண்டாடிப் போற்றிக் கொண்டிருந்தது. அறிவும் திருவும், வனப்பும், செல்வமும் ஒருங்கு வாய்ந்த நாயகன் விசாகைக்கு வாய்க்க வேண்டு மென்று மனத்தில் தெய்வத்தை வேண்டிக்கொண்டிருந்தான் சூடாமணிவர்மன்.

சுயம்வர மண்டபத்துக்கு வெளியே இனிய மங்கல வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அரண்மனையெங்கும் வாசனை வெள்ளம் பாய்ந்து பரவிக் கொண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பொன்னும், முத்தும், மணியும், அரசர் தம் முடிகளும் ஒளிர்ந்தன. பெண்களிற் பேரழகியாக வந்து பிறந்தவளைச் சொந்தமாக்கிக் கொள்ள ஆண்களிற் பேரழகர்களாக வந்து பிறந்தவர்கள் எல்லாம் கூடியிருந்தார்கள்.

தோழிகளும், பணிப் பெண்களும் அழகுக்கே அழகு செய்வதுபோல் விசாகையை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். விசாகை பொம்மையைப் போல் வீற்றிருந்தாள். பட்டுச் சிற்றாடையும், பவழ மணிமாலைகளும், பொன்னும் பூவுமாகத் தன் உடம்பைச் சிறை செய்து கட்டுவதாகத் தோன்றியது இவளுக்கு. ‘நீ இதற்காகவா பிறந்தாய்?’ என்று உள் மனத்தில் முள் குத்துவதுபோல் ஒரு கேள்வி நீங்க மாட்டாமல் குத்தி உறுத்திக் கொண்டிருந்தது. கோலக் குழல் முடித்துக் குங்குமத் திலகமிட்டு, நீலப் பட்டுடுத்தி, நித்தில மாலையிட்டுப் பணிப் பெண்கள் விசாகையின் தோற்றத்தில் கவர்ச்சியைப் பிறப்பிக்க முயன்று கொண்டிருந்தபோது இவள் கண்களில் நீர் பிறந்தது. நெஞ்சினுள் எதிலிருந்தோ, எதற்காகவோ விடுபட்டுப் பறக்க வேண்டும் போலத் தவிப்புப் பிறந்தது. எப்போதோ, எங்கேயோ, ஏதோ ஒரு செயலை அரை குறையாக விட்டு வந்திருப்பது போலவும், அதை நிறைவு செய்ய எழுந்து போக வேண்டிய நேரம் நெருங்குவது போலவும் உணர்வு பிறந்தது. விசாகையின் பின்புறம் இவள் கூந்தலில் பூச்சூடிக் கொண்டிருந்த பணிப் பெண்கள் எதிரேயிருந்த கண்ணாடியில், மெளனமாகக் கண்ணீர் வடித்தவாறு தெரியும் தங்கள் தலைவியின் முகத்தைக் கண்டு திகைத்தார்கள். மனத்துக்கு விருப்பமான கணவனைத் தேர்ந்தெடுப்பதற்காக மாலையேந்திச் செல்லும்போது யாராவது இப்படி அழுவார்களா? என்று எண்ணிக் காரணம் புரியாமல் அஞ்சினார்கள் பணிப் பெண்கள்.

‘நம் தலைவி அழவில்லையடி, கண்களுக்கு மை தீட்டும்போது அதிகமாகத் தீட்டிவிட்டார்களோ என்னவோ? மை கண்களில் கரித்து உறுத்துகிறது போலிருக்கிறது. அதனால்தான் கண்களிலிருந்து நீர் வடிகிறது’ என்ற காரணத்தை ஆராய்ந்து கண்டவள் போல் சொல்லிச் சிரித்தாள் ஒரு பணிப்பெண். விசாகை ஒன்றும் பேசாமல் சிலையாக அமர்ந்திருந்தாள். பேச வராத பருவத்து சிறு குழந்தை தனது உற்ற நோவு இன்னதெனச் சொல்லவும் மொழியின்றித் தாங்கவும் ஆற்றலின்றித் தாய் முகம் தேடி நோக்கி அழுவது போலத் தன் தவிப்பைக் கூற இயலாமல் பணிமகளிர் புனையும் அலங்கார விலங்குகளைத் தாங்கியவாறே கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் விசாகை கண்களைப் போல் இவள் மனமும் அழுதது. உணர்வுகளும் அழுதன. எதிரே கண்ணாடியில் தெரியும் தன் முகத்தைத் தானே பார்த்தாள் விசாகை. கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்காக இவள் கை மேலே எழுந்தபோது, ‘உன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்கு முன்னால் உலகத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டாமா, அம்மா! நீ இன்று அபூர்வமாக அழும் இதே அழுகையை ஏற்கனவே பலர் தினந்தோறும் அழுது கொண்டிருக்கிறார்களே; அழுகைக்குக் காரணமான துக்கத்தையும், அந்தத் துக்கம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதையும், அதைப் போக்குவதையும் போக்குவதற்கான வழியையும் நீ காண வேண்டாமா அம்மா?’ என்று தெய்வீகக் குரல் ஒன்று தன் மனத்துள்ளும் செவிகளுக்குள்ளும் ஒலிப்பதை விசாகை கேட்டாள். தன்னுடன் பிறந்து தன் உணர்வுடன் ஒன்றிப் பயின்று தன்னினும் வளர்ந்துவிட்ட தனது மனமே அந்தக் குரலை ஒலிக்கிறதென்று இவளால் விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் இவள் அதற்கு வசப்பட்டாள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடலின் அங்கமான மனம் உடலைக் காட்டிலும் பெருமையுடையதாய் நுண்மையுடையதாய் வளர்ந்து விடுகிறது. அப்படி வளர்வதால்தானோ என்னவோ, மனச்சான்று என்ற ஒருணர்வு உடம்பின் செயல்களிலேயே நல்லது கெட்டது தேர்ந்து நல்லதை ஏற்கவும், தீயதை இடித்துரைக்கவும் துணிகிறது.

கண்ணீர் வடியும் தன் முகத்தின் பிரதிபிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே, ‘எங்கோ விடுபட்டுச் செல்ல வேண்டும்’ என்ற தவிப்பை உணர்ந்தும், உணராமலும் தவித்தபோது விசாகை என்ற உடம்பின் வலிமையை மீறிக்கொண்டு விசாகை என்ற மனத்தின் வலிமை ஓங்கி வளர்ந்து ஆட்கொண்டது. பணிப்பெண்கள் விசாகையை எழுந்திருக்கச் செய்து சுயம்வர மாலையைக் கையில் கொடுத்தார்கள். கண்ணீரைத் துடைப்பதற்காக அருகில் வந்தாள் ஒரு தோழி. அப்போது மறுபடியும் அந்தக் குரல் இவள் உள்ளத்திலிருந்து ஒலித்தது.

‘உன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்கு முன் உலகத்தின் கண்ணிரைத் துடைக்க வேண்டாமா அம்மா? இன்று அபூர்வமாக நீ அழும் இதே அழுகையை ஏற்கெனவே பலர் தினந்தோறும் அழுது கொண்டிருக்கிறார்களே?’

தன் கண்ணீரைத் துடைப்பதற்காக முகத்தருகே நெருங்கிய தோழியின் கையை விலக்கி ஒதுக்கினாள் விசாகை.

“தலைவிக்கு விருப்பமில்லையானால் கண்ணீரைத் துடைக்க வேண்டாம் விட்டுவிடு. சுயம்வரத்துக்கு வந்திருக்கிற அரசகுமாரர்கள் எல்லாம் நம் தலைவி ஆனந்தக் கண்ணீர் சிந்துவதாக நினைத்துக் கொள்ளட்டுமே” என்று வேடிக்கையாகக் கூறினாள் குறும்புக்காரியான பணிப்பெண் ஒருத்தி.

‘ஆனந்தக் கண்ணீராமே! ஆனந்தக் கண்ணீர்! கண்ணீரே ஆனந்தம்தானே? பிறருடைய துன்பத்தினால் நம்முடைய மனம் நெகிழுகிறது என்பதற்கு அடையாளம் தானே கண்ணீர். அன்பு செலுத்துவதிலும், மனம் நெகிழ் வதிலும் ஆனந்தமில்லாமல் துக்கமா உண்டாகும்; ஒருவர் இருவருக்காக மனம் நெகிழ்ந்து அழுவதிலேயே இவ்வளவு ஆனந்தமானால், பிரபஞ்சத்தையே எண்ணிப் பிரபஞ்சத்தின் துக்கத்துக்காகவே மெளனமாக அழுதவர்கள், தவம் செய்தவர்கள், சிந்தித்தவர்கள், மதம் கண்டவர்கள், எல்லாரும் எவ்வளவு ஆனந்தத்தை அடைந்திருக்க வேண்டும்?’

இப்படி எண்ணியவாறே சுயம்வர மண்டபத்துக்குள் நுழையும் வாயிலுக்கு இந்தப் பக்கத்தில் மாலை ஏந்திய கைகள் நடுங்க, மனம் நடுங்க, நினைவுகள் நடுங்க, கண்களில் நீர் நடுங்க விசாகை நின்றாள்.

அளவற்ற துக்கத்தையும், எல்லையற்ற அநுதாபப் பெருக்கையும், குறிப்பதற்கே தமிழில் ஆனந்தம் என்று ஒரு சொல் இருப்பது விசாகைக்கு நினைவு வந்தது. தமிழ்ப் புறப்பொருள் இலக்கணத்தில் போரின்போது வீரக் கணவனை இழந்த மனைவி அவன் நினைவில் மெலிந்து வருந்தும் வருத்தத்தைக் கூறும் பாடலுக்கு ‘ஆனந்தம்’ என்று பெயர் வைத்திருப்பதை இவள் நினைத்தாள். எல்லையற்ற ஆனந்தத்தைத் தந்து கொண்டிருந்த பொருள் அழியும்போது எல்லையற்ற துக்கம் உண்டாகிறது. ஆனந்தத்துக்கும் துக்கத்துக்கும் ஆனந்தமே காரணமாவது பற்றித்தான் தமிழ்ப் புறப்பொருள் இலக்கண ஆசிரியர்கள் துயரத்துக்கும் ஆனந்தம் என்று பெயரிட்டிருக்க வேண்டுமென எண்ணினாள் விசாகை சிந்தனைப் பெருகப் பெருக இவள் கண்களில் நீரும் பெருகிற்று.

கூட்டுக்குள்ளிருந்து வெளியே தலைநீட்டி எட்டிப் பார்க்கும் கிளிக்குஞ்சுபோல், தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சுயம்வர மண்டபத்துக்குள் செல்லும் வாயிலில் எட்டிப் பார்த்தாள் விசாகை.

மண்டபத்தில் வரிசை வரிசையாய் அரச குமாரர்கள் வீற்றிருந்தார்கள். இயற்கையாகவே அழகுடையவர்கள் சிலர். செயற்கையாகப் புனைந்து அழகுப்படுத்திக் கொண்டு வந்திருந்தவர்கள் சிலர். நம்பிக்கையோடு வந்தவர்கள், ஆசைப்பட்டு வந்தவர்கள், நம்பிக்கையும், அவ நம்பிக்கையும் கலந்த மனத்தோடு வந்தவர்கள் எல்லாரும் இருந்தார்கள். எல்லாருடைய கண்களும் இவள் மண்டபத்திற்குள் நுழையப் போகிற வழியையே பார்த்துக் கொண்டிருந்தன. இவளோ எல்லாருடைய கண்களிலும் ஆசை ஒன்றே நிறைந்திருந்ததைப் பார்த்தாள். இவள் கைகளும் கைகளிலிருந்த மாலையும் முன்னிலும் அதிகமாய் நடுங்கின.

சுயம்வர மண்டபத்தில் முதன்மையான இடத்தில் அமைச்சர் பிரதானிகள் புடைசூழ இவள் தந்தை சூடாமணிவர்மன் இருந்தார். மண்டபத்தின் நடுவில் வெண் பளிங்குக் கல்லில் செய்த புத்தர் சிலை ஒன்று அமர்ந்த கோலத்தில் காட்சியளித்தது. அந்தச் சிலையின் சாந்தம் திகழும் முகத்தில் வாயிதழ்கள் எப்போதும் மெல்லச் சிரித்துக் கொண்டே இருப்பதுபோல் ஒரு பாவனை அமைந்திருந்தது.

சாதாரண மனிதர்களுடைய அழுகையிலும் ஆனந்தம் இருக்கிறாற்போல் ஞானிகளுடைய சிரிப்பிலும் துக்கம் இருப்பதை அந்தப் புத்தர் சிலையின் முகம் விசாகைக்குக் கூறியது.

இரண்டு தோழிப் பெண்கள் பக்கத்துக்கு ஒருவராக விசாகைக்கு அருகில் வந்து நின்று கொண்டு இவளைச் சுயம்வர மண்டபத்துக்குள் நடத்தி அழைத்துச் சென்றார்கள். இரண்டு கண்களின் அழகைக் காண்பதற்காக எத்தனையோ கண்கள் மலர்ந்தன. ஆனால் அத்தனை பேருடைய ஆவலையும் கிளரச் செய்த அந்த இரண்டு கண்களில் நீர்நெகிழ்ந்திருந்தது.

தோழிகளின் துணையோடு கைகால் நடுங்கிய நிலையில் விசாகை தளர்ந்தாற்போல் மெல்ல நடந்து வந்து சுயம்வர மண்டபத்தில் வீற்றிருந்தவர்களையெல்லாம் பார்த்தாள்.

‘தன் மகள் எந்த நாட்டு இளவரசனுக்கு மாலையிடப் போகிறாள்’ என்ற ஆர்வம் பெருகும் விழிகளால் இமையாது பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை சூடாமணிவர்மனையும் நிமிர்ந்து நோக்கினாள். பெண்ணின் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன என்பது தந்தைக்குப் புரியவில்லை. தீவினைகளின் விளைவுகள் சூழ்ந்து வரும்போது என் செய்வதென்று தெரியாமல் தடுமாறி நிற்கும் உயிர் போல் விசாகை தயங்கி நின்றாள். மருண்டு பார்த்தாள். கண்ணீர் பெருக்கினாள். ‘குழந்தை ஏன் அழுகிறாள்?’ என்று தோழிகளை அருகில் அழைத்துக் கேட்டான் சூடாமணிவர்மன். ‘கண்ணுக்கு இட்ட மை கரிந்து நீர் வருகிறது. அழவில்லை’ என்று தங்களுக்குத் தோன்றியதைக் கூறினார்கள் அவர்கள். அரசனும் அப்படித் தானிருக்கும் என நம்பினான். உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காக அவள் கண்ணில் நீர் பிறந்திருக்கிறதென்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? பாவம்! உண்மையைத் தெரிந்து கொள்ள இயலாதவரை தங்களுக்குத் தெரிந்ததைத்தானே உண்மையாகக் கொள்ள வேண்டும்?

சுயம்வர மண்டபத்திலிருந்த எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தயங்கி நின்ற விசாகை விரைந்து நடந்தாள். தோழிகள் இவளைப் பின்தொடர முடியாத வேகத்தில் நடந்தாள். மண்டபத்தின் நடுவில் சிரித்துக் கொண்டிருந்த புத்த சிலையை நெருங்கினாள். சுற்றிலும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தபின் தன் கைகளிலிருந்த மணமாலையை அந்தச் சிலையின் பாதங்களில் பயபக்தியோடு வைத்துவிட்டு வணங்கினாள். இவள் கைகளிலிருந்த மாலையைப் பெற்றபின் அந்தச் சிலையின் முகத்தில் சாந்தமும், சிரிப்பும் இன்னும் அதிகமானாற்போல் ஒரு தோற்றம் ஏற்பட்டது. சூடாமணிவர்மன் — இருக்கையிலிருந்து எழுந்து மகளை நோக்கி ஓடிவந்தான்.

“இது என்ன காரியம் செய்கிறாய் மகளே! நீ வாழ்க்கைப்பட வேண்டியவருக்குச் சூட்டும் மாலையை வணங்கப்பட வேண்டியவருடைய பாதங்களில் சூட்டுகிறாயே!”

“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இவருடைய கொள்கைகளுக்கு வாழ்க்கைப்பட்டுவிட்டேன் அப்பா. வேறு விதமாக மனிதருக்கு வாழ்க்கைப்படும் ஆசை எனக்கு இல்லை. அப்படி வாழ நான் பிறக்கவில்லை என்று என் மனமே எனக்குச் சொல்கிறது! வாழ்க்கைப்படுவதற்கு ஒருவரும் வணங்கப்படுவதற்கு ஒருவருமாக இருவரிடம் பக்தி செலுத்த எனக்கு விதியில்லை. என்னை விட்டு விடுங்கள். நான் விடுபட்டுப் போக வேண்டும்!”

“எங்கே போக வேண்டும்? மகளே?”

“உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்குப் போக வேண்டும்.”

“நீ போனபின் என்னுடைய கண்ணீரை யார் துடைப்பார்கள்?”

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று விசாகைக்குத் தெரியவில்லை. தந்தையின் பாதங்களைப் பற்றிக் கொண்டு மேலும் கண்ணீர் பெருக்கினாள். தந்தையின் பாதங்களையும், பாசங்களையும் விலக்கி விட்டு இவள் எழுந்தபோது, தந்தை வேரற்ற ஒரு மரம் போல் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார். அழுக்குகளை நீக்குவது போலத் தன் உடம்பிலிருந்து பொன்னையும், மணியையும், பட்டையும் வேறாக்கி விட்டு விசாகை புறப்பட்டாள். உலகத்தின் கண்ணிரைத் துடைப்பதற்காகத் தன் சுகங்களிலிருந்து விடுபட்டுப் புறப்பட்டாள்...”

  1. அந்தக் காலத்தில் சமயவாதம் செய்ய விரும்புவோர் ஒரு நாவல் மரக்கிளையை நட்டுப் பிறரை வாதத்துக்கு அழைப்பதும், எதிர்வாதம் புரிய வருவோர் வாதத்தில் வென்றபின்பே அக்கிளையைப் பறித்து எறிய வேண்டுமென்பதும் வழக்கு. வாதத்தில் வென்றவர் நாவலோ நாவல் என வெற்றிக் குரல் முழக்குவதும் உண்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_2/009-022&oldid=1149842" இலிருந்து மீள்விக்கப்பட்டது