10. தலைவணங்கிய தன்மானம்

விசாகையின் கதையை முற்றிலும் கேட்டு முடித்ததும் தான் மீண்டும் இளைத்துப் போய்விட்டதாக உணர்ந்தான் இளங்குமரன். மனத்தின் வலிமையால் உலகத்தை வென்று நிற்பவர்களைப் பற்றி அறிந்தாலும், நினைத்தாலும், அந்தக் கணத்தில் தான் குன்றி ஒடுங்கிப் போனதாக ஏற்படும் மனத்தாழ்வை அவனால் மீற முடியவில்லை.

உலகில் மிகச் சிறந்த வலிமை மனத்தின் வலிமைதான். மிகச் சிறந்த விடுதலையும் மனத்தின் விடுதலைதான். புலன்களிலிருந்து விடுபட்டுச் சிந்திக்கும் தூய மனம்தான் பெரிய சுதந்திரம். புலன்களுக்கும், உணர்வுகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்கள் உடம்பினால் விடுதலை பெற்று என்ன பயன்? என்றெல்லாம் விசாகையின் வரலாற்றைக் கேட்டிருந்த கிளர்ச்சியில் எண்ணினான் இளங்குமரன். அவள் வரலாறு அவன் மனத்தில் தூய்மைக் கிளர்ச்சியைத் தூண்டியிருந்தது.

உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தாமும் கண்ணீர் சிந்திய அந்த விழிகளை இன்னொரு முறை தரிசனம் செய்ய வேண்டுமென்று நிமிர்ந்தான் அவன். விசாகையின் அழகிய கண்களில் இப்போதும் நீர் நெகிழ்ந்திருந்தது. பழைய நிகழ்ச்சிகளைக் கேட்க நேர்ந்ததால் சிறிதளவு அவள் கலங்கியிருந்தாள்.

அடிகள் இளங்குமரனைக் கேட்டார்.

“இவளுடைய வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறாய், இளங்குமரா?”

“நினைப்பதற்குரிய வாழ்க்கை அன்று இது! வணங்குவதற்குரிய வாழ்க்கை ஐயா! இந்த அம்மையாருடைய மனத்தின் வலிமையைப் பற்றிக் கூறியபோது என்னுடைய மனத்தின் ஏழைமையை நான் உணர்ந்தேன்.”

“நல்லது! இவளுடைய கதையை எந்த விளைவுக்காக உன்னிடம் சொல்ல வேண்டுமென்று விரும்பினேனோ அந்த விளைவு உன்னிடம் நிகழ்ந்திருக்கிறது. மேலும் கேள். சாவக நாட்டிலிருந்து இவள் மணிபல்லவத்திற்கு வந்தாள். அங்கே புத்த பீடிகையைத் தரிசனம் செய்தாள். கோமுகிப் பொய்கையைக் கண்டாள். சமந்தகூட மலைக்குச் சென்று அங்குள்ள என் நண்பரான புத்ததத்தரிடம் சமய ஞானம் பெற்றாள். ‘மண் திணிந்த இவ்வுலகத்தில் வாழ்கிறவர்களுக்கு உணவு கொடுத்து உதவுகிறவர்கள் உயிர் கொடுப்பதற்கு இணையான செயலைச் செய்பவர்கள்’ என்ற கருத்துடன் தன் அட்சய பாத்திரத்தைப் பலரிடம் ஏந்தி உணவை நிரப்பி வந்து, நிரம்ப வழியின்றித் தவிக்கும் ஏழை வயிறுகளுக்கு அளித்து மீந்ததைத் தான் உண்ணும் தியாக வாழ்வை இவள் தொடங்கினாள். சமய வாதத்திலும், இன்னும் சில நுணுக்கமான ஞான நூல்களிலும் இவள் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்று கருதிப் புத்ததத்தர் சமந்தகூட மலையிலிருந்து இவளை இங்கு அனுப்பியிருக்கிறார். புத்ததத்தரின் அறிமுக ஓலையோடு மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு கார்த்திகை மாதத்து அடைமழை நாளில், ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும்’ என்ற அரும்பெரும் தத்துவ வாக்கியத்தை ஒலித்துக் கொண்டே இவள் இந்தக் கிரந்த சாலைக்குள் முதன் முதலாக அடியெடுத்து வைத்தாள். இன்று சோழ நாட்டிலே இவள் பாதங்கள் பட்ட இடமெல்லாம் ஏழை களுக்குப் பசி தீர்கிறது. நோயாளிகளுக்கு நோய் தீர்கிறது. துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது.”

“மற்றவர்கள் உங்களிடம் உங்களைப் பற்றியே புகழும்போது அதை விரும்பாத நீங்கள் இப்போது நான் எதிரே இருக்கும்போதே என்னை இப்படி மிகையாகப் புகழ்கிறீர்களே தாத்தா” என்று விசாகை குறுக்கிட்டாள்.

“இந்தப் புகழ் எல்லாம் உனக்கு அல்ல, விசாகை! நீ செய்கிற அறங்களுக்கு மட்டுமே உரியது. உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காக உன் கண்களில் நீரைச் சுமக்கிறாயே, அந்தப் பண்புகளுக்கு உரியது...” என்று பொருத்தமான மறுமொழி அடிகளிடமிருந்து வந்தது.

“அதுதான் உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும் என்று நீங்களே தத்துவம் சொல்லியிருக்கிறீர்களே” என்று முதன் முறையாக விசாகையிடம் பேசினான் இளங்குமரன்.

“தத்துவம் என்னுடையதன்று, நியாய நூல்களிலிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் நான் கற்றது.”

“தத்துவங்களைக் கண்டுபிடிக்கிறவர்களை விடக் கடைப்பிடிக்கிறவர்கள்தான் பெரியவர்கள். கடைப்பிடிக்கிறவர்கள் வாழும் தத்துவமாக உயிருடன் நிற்கிறார்கள். கண்டுபிடிக்கிறவர்கள் ஏட்டளவில் மட்டுமே நிற்கிறார்கள். நீங்கள் வாழும் தத்துவமாக என் முன் இருக்கிறீர்கள்” என்றான் இளங்குமரன்.

“வாழும் தத்துவம் என்று என்னைச் சொன்னால் பொருந்தாது ஐயா! நமக்கெல்லாம் ஞானப் பசி தீர்த்து வாழும் அடிகள்தான் மிகப்பெரிய தத்துவம். அடிகளைச் சுற்றியிருக்கிற ஒவ்வொருவருடைய வாழ்வும் ஒரு சிறிய காவியம். அவர் இவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மகாகாவியத்தைப் போன்றவர்” என்று விசாகை இளங்குமரனிடம் தன்னைப் புகழ்ந்து சொல்லியதைக் கேட்டுச் சிரித்தபடி இருந்தார் நாங்கூர் அடிகள்.

“நான் உன்னைப் புகழ்ந்ததற்கு நீ என்னைப் பழி வாங்குகிறாயா, விசாகை?”

“இந்தப் புகழ் எல்லாம் உங்களுக்கு அல்ல தாத்தா! உங்களுடைய ஞானத்துக்கு மட்டுமே உரியது. பலருடைய ஞானப்பசியைத் தீர்ப்பதற்காக உங்களுடைய மனமாகிய அட்சய பாத்திரத்தில் ஞானத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அந்த நிறைவுக்கு உரியது.”

அவர் தனக்குக் கூறிய பழைய சமாதானத்தை அவரிடமே திருப்பினாள் விசாகை. அவர் குழந்தையைப் போல் சிரித்தவாறு தலைகுனிந்தார். பல நூறு பட்டி மண்டபங்களில் பல நூறு சமயவாதிகளை வென்று அவர்கள் நாட்டிய நாவல் மரக் கிளைகளைப் பறித்து ‘நாவலோ நாவல்’ என வெற்றி முழக்கமிட்டிருக்கிற அந்தப் பெரியவருக்கு விசாகையிடம் விளையாட்டுக்காகத் தோற்றுப் போனதைப் போன்று விட்டுக் கொடுப்பதில் ஒரு திருப்தி உண்டு.

இளங்குமரன் சிந்தித்தான்.

‘இணையிலாத அழகின் வலிமையால் என்னை நெகிழச் செய்திட முயன்ற சுரமஞ்சரியிடம் நான் தோற்கவில்லை. நான் தன்னுடைய உடைமை என்று பேதைத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் வீரசோழிய வளநாடுடையார் பெண் முல்லையிடம் நான் தோற்கவில்லை. அவர்களெல்லாம் என்னுடைய காதலைக்கூடச் சம்பாதிக்க முடியவில்லை. எண்ணெயின்றி முடிந்த சடையும், துறவுக்கோலமுமாக இப்போது என் எதிரே இருக்கும் விசாகை என்ற இந்தப் பெண்ணோ என்னைத் தன்மேல் பக்தி செலுத்துவதற்கே தூண்டுகிறாளே! இது என்ன விந்தை உடம்பும், மனமும், புலன்களும், எல்லாமே வலிமையாக இருக்க வேண்டுமென்று கருதும் நீலநாக மறவர், மனம் வலியதாயிருந்தால் மட்டும் போதுமென்று கூறும் விசாகை, வாழும் தத்துவமாகத் தோன்றும் பூம்பொழி நம்பியாகிய நாங்கூர் அடிகள், எல்லாரையும் இணைத்து நினைத்தது இளங்குமரனின் மனம். தான் கற்பதற்கிருந்த சுவடிகள் தவிர உலகமே பக்கத்துக்குப் பக்கம், ஏட்டுக்கு ஏடு, வேறுபாடுள்ள மாபெருஞ் சுவடியாகத் தோன்றியது அவனுக்கு.

சிறிது நேரம் கழித்து நாங்கூர் அடிகள் பூம்பொழிலில் உலவச் சென்றார். கிரந்தசாலையில் விசாகையும், இளங்குமரனும் மட்டுமே இருந்தார்கள். அப்போது விசாகை, இளங்குமரன் சற்றும் எதிர்பாராத காரியமொன்றைச் செய்தாள்.

“இதில் ஏதேனும் இடுங்கள்! இன்றைக்கு முதல் பிட்சை உங்களுடையதாக இருக்கட்டும்” என்று அட்சய பாத்திரத்தை அவனுக்கு முன் நீட்டினாள். கையில் சுவடிகளைத் தவிர இளங்குமரனிடம் அப்போது வேறு ஒன்றும் இல்லை. இளங்குமரன் எழுந்து நின்றான். அவனுக்கு மெய்சிலிர்த்தது.

“என் இதயத்தில் உங்கள்மேல் எல்லையற்றுப் பெருகும் தூய்மையான பக்தியையே இந்த அட்சய பாத்திரத்தில் இடுகிறேன். அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறிப் பிட்சைப் பர்த்திரத்தின் விளிம்பைத் தொட்டு வணங்கினான் அவன்.

விசாகை கண்கள் மலர அவன் முகத்தைப் பார்த்தாள்.

“அவ்வளவு பெரிய பொருளை ஏற்றுக் கொள்கிற சக்தி இந்தப் பாத்திரத்துக்கு இல்லை ஐயா!”

“பாத்திரமறிந்து பிச்சையிடு என்று சொல்லி யிருக்கிறார்கள் அம்மையாரே; இந்தப் பாத்திரத்தில், இடுவதற்கு ஏற்ற பொருள் பக்திதான்.”

இதைக் கேட்டு விசாகை சிரித்தாள். பொய்மையைச் சிதைக்கும் அந்தச் சிரிப்பில் சத்தியம் ஒளிர்ந்தது.

“உங்களை இதற்கு முன்பே நான் ஒருநாள் பார்த்திருக்கிறேன் ஐயா! ஆனால் அப்போது உங்களிடம் இவ்வளவு பணிவையும், பண்பையும் விநயத்தையும் என்னால் பார்க்க முடியவில்லையே?”

“எங்கே பார்த்தீர்கள் அம்மையாரே?”

“காவிரிப்பூம்பட்டினத்து இந்திர விகாரத்து வாயிலில், ஒரு துறவியை முரட்டுத்தனமாக நீங்கள் கைப்பற்றி இழுத்துப் போனபோது பார்த்தேன். இன்று பாத்திரமறிந்து இடும். பக்திப் பிச்சையில் சிறிது அன்றும் அவருக்கு இட்டிருக்கலாமே?” இளங்குமரன் முதல் அனுபவமாக ஒரு பெண்ணின் கேள்விக்கு முன் நாணித் தலைகுனிந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_2/010-022&oldid=1149836" இலிருந்து மீள்விக்கப்பட்டது