மணி பல்லவம் 2/011-022
சினங்கொண்டு பாய்ந்த நகைவேழம்பரை எதிர்த்துத் தடுத்தபோது ‘சிங்க நோக்கு’ என்று இலக்கிய ஆசிரியர்கள் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் நேராய் நிமிர்ந்த கம்பீரப் பார்வையை நீலநாக மறவரிடம் கண்டான் ஓவியன் மணிமார்பன். பக்கங்களிலும், பின்புறமும், விலகவோ திரும்பவோ செய்யாமல் எதிரே மட்டும் பார்க்கும் நீலநாகரின் அந்தப் பார்வையே வாளாகவும், வேலாகவும் கூர்மை பெற்றுச் சென்று நகைவேழம்பரைத் தாக்குவதையும் அவன் கவனித்தான்.
தான் ஓர் ஓவியன் என்ற முறையில் விலங்குகளின் அரசனாகிய சிங்கத்தின் உருவத்தைப் பன்முறை தன் கையால் வரைந்திருக்கிறான் அவன். கம்பீரமான அரசர்களின் உருவங்களையும் வீரர்களின் உருவங்களையும்கூட வரைந்திருக்கிறான். ஆனால் குறுவாளை ஓங்கிக் கொண்டு சீறிவந்த நகைவேழம்பரை இடது கையால் அலட்சியமாகத் தடுத்து நிறுத்திய நீலநாக மறவரின் கம்பீரத்தை ஓவியத்தில் வரைவதற்கு முடியுமா என்று மலைத்தான் அவன். கொடுமைக்காரராகவும் கொலைகாரராகவும் தோன்றித் தன்னைப் பயமுறுத்தி நடுங்கச் செய்த அதே ஒற்றைக்கண் மனிதர், கையை அசைக்கவும் முடியாமல் நீலநாக மறவரின் இரும்புப் பிடியில் திணறுவதை இப்போது அவன் கண்டான் அழுத்திப் பிடிக்கப்பெற்ற எதிரியின் பிடியில் நரம்புகள் புடைத்து இரத்தம் குழம்பும் தமது கை வலுவிழந்து உணர்வு குன்றுவதை நகைவேழம்பர் புரிந்து கொண்டாலும் ஆற்றலின்றி இருந்தார். அவர் கை நடுங்கியது. விரல்கள் பிடி நழுவி விரிந்தன. குறுவாள் கீழே நழுவி விழுந்து ஈரமண்ணில் குத்திக் கொண்டு நின்றது.
நீலநாகமறவர் பிடியை விட்டு முறிந்த வாழை மட்டையை உதறுவதுபோல அந்தக் கையை உதறினார். விடுபட்டதும் குபீரென்று கீழே குனிந்து மீண்டும் வாளை எடுக்க முயன்ற நகைவேழம்பரை அவர் அப்படிச் செய்ய முயல்வார் என்றே எதிர்பார்த்தவர்போல் எச்சரிக்கையாயிருந்த நீலநாகமறவர் பின்னுக்குப் பிடித்துத் தள்ளினார். மலைமோதியது போன்ற அந்தத் தள்ளுதலால் தடுமாறி மண்ணில் மல்லாந்து சாய்ந்தார் நகைவேழம்பர். இதற்குள் படைக்கலச் சாலையின் கதவைத் திறந்து கொண்டு அங்கிருந்த இளைஞர்களெல்லாம் கூட்டமாக வெளி வரவே, நகைவேழம்பரோடு கூட வந்திருந்த யவன ஊழியர்கள் மெல்லப் பின்வாங்கினார்கள். நகைவேழம்பரும் மண்ணைத் தட்டிவிட்டவாறு எழுந்து நின்றார். அளவற்ற கோபத்தால் அவருடைய உதடு துடித்தது.
“இப்படிச் செய்ததற்கு உங்களைப் பழிவாங்காமல் விடப் போவதில்லை. நான் யாரென்று உங்களுக்குத் தெரியாது! சமயம் வாய்க்கும்போது தெரியச் செய்கிறேன்” என்று நீலநாக மறவரை நோக்கி இரைந்து கூக்குரலிடுவதுபோல் முழங்கினார் நகைவேழம்பர். அதைக் கேட்ட நீலநாகர் நகைத்தார்.
“பேசிப் பயனில்லை. முடியுமானால் செய்துகொள். கீழே விழுந்துவிட்ட இந்த வாளையும், உன் தைரியத்தை யும் சேர்த்து எடுத்துக் கொண்டு மதிப்பாக வந்த வழியே போவதுதான் இப்போது நீ செய்ய வேண்டிய செயல்!”
குறுவாளை எடுத்துக் கொண்டு திரும்புவதற்கு முன்னால் ‘நீதானே இவ்வளவுக்கும் காரணம். என்றாவது மறுபடியும் என்னிடம் அகப்பட்டால் உன்னை நிர்மூலமாக்கி விடுவேன்’ என்று குறிப்பிடுவதுபோலக் கடமையாக ஓவியனைப் பார்த்து விட்டுச் சென்றார் நகைவேழம்பர். நீலநாகரின் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொண்டு அந்தப் பார்வையின் தாக்குதலிலிருந்து தப்பினான் ஓவியன்.
“ஒற்றைக் கண்ணினாலேயே இப்படி நஞ்சைக் கக்குகிறானே! இந்தக் கொடியவனுக்கு இரண்டு கண்களும் இருந்துவிட்டால் எதிரே தென்படுகிற நல்லவர்களையெல்லாம் இவன் பார்வையே சுட்டெரித்துவிடும். திட்டிவிடம் என்று பார்வையாலேயே கொல்கிற பாம்பு ஒன்று உண்டு” என்றார் நீலநாக மறவர்.
ஓவியன் நாத் தழுதழுக்க அவருக்கு நன்றி சொல்லலானான்:-
“என் உயிரையும், என் நம்பிக்கையையும் அழியாமல் காப்பாற்றி எனக்கு அடைக்கலம் அளித்த கருணை வள்ளல் நீங்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.”
“தெரியாத காரியத்தைச் செய்யாமல் விட்டுவிடுவதே நல்லது தம்பீ? நீ நன்றி சொல்ல வேண்டுமென்பதற்காக நான் உனக்கு உதவி செய்யவில்லை. உள்ளே போகலாம் வா. இன்றிரவு இங்கேயே என்னுடன் தங்கிவிட்டுப்போ. உன்னைப் பார்த்தால் மிகப் பயந்த சுபாவமுள்ளவனாகத் தெரிகிறாய். இந்த நேரத்துக்குமேல் இத்தனை எதிரிகளையும் வேறு வைத்துக் கொண்டு நீ வெளியே போவது நல்லதல்ல” என்று கூறி இளங்குமரனின் ஓவியத்தோடு, மணிமார்பனையும் அழைத்துக் கொண்டு படைக்கலச்சாலைக்குள் சென்றார் நீலநாக மறவர்.
“இந்த ஓவியம் இளங்குமரனே நேரில் நின்று கொண்டிருப்பதுபோல் நன்றாக வரையப்பட்டிருக்கிறது தம்பீ. இதை வரைந்தவர் யாராயிருந்தாலும் பாராட்டுக்குரியவர்” என்று அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே கூறினார் நீலநாக மறவர். உடனே ஓவியன் மணிமார்பன், தான் அந்த ஒவியத்தை வரைய நேர்ந்த நிகழ்ச்சியையும், தானும் இளங்குமரனும் சந்தித்தபின் ஒவ்வொன்றாக நிகழ்ந்த சம்பவங்களையும் நீலநாக மறவருக்கு விவரித்துச் சொன்னான்.
அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நெட்டுயிர்த்தார். “ஓகோ! இவ்வளவு நடந்திருக்கிறதா? இளங்குமரன், இவற்றில் ஒன்றையுமே என்னிடம் கூறவில்லையே?”
“இப்போது அவர் எங்கே போயிருக்கிறார் ஐயா?”
“எந்த இடத்துக்குப்போனால் அவன் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருக்க முடியுமோ, அங்கே அவனை அனுப்பியிருக்கிறேன். நீ பாண்டிய நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் திருநாங்கூர் அடிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். ஞான நூல்களைக் கற்பதற்காக அவருடைய பூம்பொழிலில் அவரோடு போய்த் தங்கியிருக்கிறான் இளங்குமரன்.”
“எங்கள் மதுரை மாநகரத்து வெள்ளியம்பல மன்றத்தில் நாங்கூர் அடிகளின் சமயவாதச் சொற்பொழிவுகளை நானும் கேட்டிருக்கிறேன். அற்புதமான மனிதர் அவர்...”
“அவரிடமிருக்கும் அற்புதங்களைக் கற்றுக் கொண்டு வருவதற்குத்தான் இளங்குமரன் போயிருக்கிறான்.”
“இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் இங்கே காவிரிப் பூம்பட்டினத்தில் இருப்பதைக் காட்டிலும் திருநாங்கூரில் இருப்பதே நல்லது ஐயா! என்ன காரணத்துக்காகவோ பட்டினப்பாக்கத்துப் பெருநிதிச் செல்வரும், இப்போது இங்கே துரத்திக் கொண்டு வந்தாரே, இந்த ஒற்றைக் கண் மனிதரும் அவரை அழித்து ஒழித்து விடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதோ இப்போது நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, இந்த ஓவியத்தில் அவருடைய கழுத்தின் வலது பக்கத்துச் சரிவில் வரையப்பட்டிருக்கிற கறுப்பு மச்சத்தை முதலில் நான் வரையவில்லை. படத்துக்கு அது அழகாயிராது என்றுதான் நான் வரையாமல் இருந்தேன். ஆனால் இந்த ஒற்றைக் கண்ணரும் இவரை வைத்துக் காப்பாற்றுகிற பெருநிதிச் செல்வரும் என்னைப் பயமுறுத்தி வற்புறுத்தி அவருடைய கழுத்தில் இந்த மச்சத்தை வரையச் செய்தார்கள். அவரைப் பற்றிப் பேசிக்கொள்ளும் போதெல்லாம் அந்த இருவருடைய கண்களிலும் ஏதோ பழி வாங்கத் துடிப்பது போல் வெறி தோன்றுவதை நான் சில நேரங்களில் கவனித்திருக்கிறேன். அதனால் தான் எனக்கு அச்சமாயிருக்கிறது. அப்பப்பா! இப்போது நினைத்தாலும் எனக்குக் குடல் நடுங்குகிறது. ஐயா! அந்த மாளிகையில் இந்த ஒற்றைக்கண் மனிதருடைய பாதுகாப்பில் நான் இருந்த ஒவ்வொரு கணமும் சாகாமலே செத்துப் போய்க் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக அந்தப் பெண்ணரசி எனக்கு விடுதயைளித்துப் பரிசும் கொடுத்து வெளியே அனுப்பினாள். அவ்வளவு பெருஞ் செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏன்தான் அப்படிச் சூழ்ச்சிக்காரர்களாகவும், கொடியவர்களாகவும் இருக்கிறார்களோ?”
“உலகத்தில் இரண்டு வகையான செல்வர்கள் இருக்கிறார்கள் என்பதை நீ அறிந்திருக்க நியாயமில்லை மணிமார்பா! தங்கள் செல்வச் செழுமைக்காக மட்டும் பெருமையும் செருக்கும் கொள்கிற செல்வர்கள் ஒருவகை; தங்கள் செழுமைக்காக மட்டுமின்றி பிறருடைய அழிவுக்கும், குறைவுக்கும் சேர்த்துப் பெருமைப்பட விரும்புகிற செல்வர்கள் ஒருவகை. இந்த இரண்டாவது வகைச் செல்வர்களுக்குத் தாங்கள் வளர்ந்து வாழ்வில் அடைகிற மனத்திருப்தியோடு பிறர் தளர்ந்து சீரழிவதைக் கண்டு கிடைக்கிற மிருகத்தனமான மகிழ்ச்சியும் அடையக் கிடைத்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் மனம் நிறையாது.
“ஆனால் இந்தக் கொடுமைக்காரர்களுக்கிடையிலே ஓர் அன்பு மலரும் மலர்ந்து மணந்து கொண்டிருக்கிறது ஐயா! அந்தப் பெண் சுரமஞ்சரி உங்கள் மாணவர் இளங்குமரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். உங்கள் மாணவரோ அந்தப் பெண்ணின் பெயரை எடுத்தாலே சீறி விழுகிறார். இளங்குமரனின் இந்த ஓவியத்தை வரைந்ததற்காக அவள் எனக்குக் கொடுத்த பரிசைப் பார்த்ததாலே அவளுக்கு அவர் மேலிருக்கும் அன்பை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதோ, பாருங்கள்...” என்று சொல்லிவிட்டுத் தன் மடியிலிருந்த மணிமாலையை எடுத்து நீலநாக மறவருக்கு முன் நீட்டினான் ஓவியன்.
நீலநாகர் அதைக் கையில் வாங்கவில்லை. அவ்வளவாக விரும்பிப் பார்க்கவுமில்லை. ஏதோ சிறுபிள்ளை விளையாட்டைப் பார்த்துச் சிரிப்பதுபோல் மெல்லச் சிரித்தார்.
“தம்பி! நீ உன்னுடைய கலைத்திறனைக் காட்டி அதற்குச் சன்மானம் பெற்று வாழ்கிறவன். உனக்கு எவ்வளவு அதிகப் பெறுமானமுள்ள பொருளைப் பரிசு கொடுக்கிறார்களோ, அதையே அளவுகோலாகக் கொண்டு மனிதர்களின் பண்பை அளந்து பார்க்கிறாய். நானாகவோ, இளங்குமரனாகவோ இருந்தால் இத்தகைய பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளவே இணங்கியிருக்க மாட்டோம். நம்முடைய திறமையைப் பாராட்டுகிறவர்கள் அப்படிப் பாராட்டுவதற்குத் தகுதியுடையவர்கள்தாமா என்று சிந்திப்போம். பிறரிடமிருந்து பரிசு என்று எதையாவது வாங்கிக் கொண்டால் அது காரணமாகவே அவர்களுடைய சிறிய தகுதிகளும் நமக்கு மிகப் பெரியவையாகத் தோன்றத் தொடங்குகின்றன. நடுநிலை பிறழ்ந்து நமக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு வசப்பட்டு விடுகிற நம் மனம் ஏதாவது ஒரு பொருளைப் பெற்றுக்கொண்டு அதற்காக மனத்தைத் தோற்கக் கொடுப்பதைக் காட்டிலும் எதையுமே பெற்றுக் கொள்ளாமல் மனத்தை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லதென்று நாங்கள் நினைக்கிறோம்.”
அவருடைய சித்தாந்தம் மணிமார்பனுக்குப் புரியவில்லை. ஆனால் இளங்குமரனிடமிருந்த பிடிவாதமும், முரட்டுக் குணமும் யாரிடமிருந்து அவனுக்கு வந்திருக்க வேண்டுமென்று இப்போது புரிந்தது. இதே மணி மாலையை இளங்குமரன் ஒரு முறை ‘தன்னிடமிருந்து வாங்கிக் கொள்ள மறுத்ததாகச் சுரமஞ்சரி’ கூறியதும் நினைவு வந்தது.
“எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறாள் என்பதற்காக அந்தப் பெண் சுரமஞ்சரியை நான் புகழவில்லை ஐயா! இளங்குமரன் மேல் அவளுக்கு இருக்கும் அன்பு மெய்யானது. இல்லையானால் தன் தந்தை இளங்குமரனைத் தேடிப் பிடித்துச் சின்ற செய்ய எண்ணியிருப்பதை என்னிடம் சொல்லி, அவரை முன் எச்சரிக்கையோடு இருக்கச் செய்யுங்கள் என்று என்னை இங்கே அனுப்புவாளா?” என்று மணிமார்பன் மறுத்துக் கூறியதைக் கேட்ட பின்பும் அவர் அதை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை.
“அப்படி இவர்கள் வந்து சிறைப்பிடித்துக் கொண்டு போகிற அளவு வாயில் விரலை வைத்தாலும் கடிக்கத் தெரியாத பருவத்துப் பிள்ளையல்ல அவன். ஒருவேளை அவனை இவர்கள் சிறை செய்தாலும் நாங்களெல்லாம் தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம்.”
அவருடைய இந்த உறுதி மொழிகளைக் கேட்டபின் இளங்குமரனைப் பற்றிய பயத்தையும், கவலையையும் விட்டுவிட்டு, தான் எப்படி ஊர் போய்ச் சேருவதென்ற சிந்தனையில் ஆழ்ந்தான் மணிமார்பன். மறுநாள் பொழுது விடிகிறவரை அந்த நகரத்தில் தங்கியிருந்து மணி மாலையை விற்றுப் பொற்கழஞ்சுகளாகக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இப்போது அவனுக்கு இல்லை. போது விடிவதற்குள் பாண்டிய நாட்டுப் பயணத்தை இருளோடு இருளாகத் தொடங்கிவிட வேண்டுமென்று எண்ணினான் அவன்.
தன்னையும் தன்னிடமிருக்கும் மணிமாலையையும் சேர்த்துக் கைப்பற்றி விடுவதற்குக் கறுவிக் கொண்டு வந்த நகைவேழம்பர் நீலநாக மறவரிடம் தோற்றுப் போய்த் திரும்பியதோடு அடங்கிப் போய் இருந்து விடுவாரென்று அவனால் நினைக்க முடியவில்லை. இடை வழியில் எங்காவது மீண்டும் தன்னை அவர் மறித்துக் கொண்டு விட்டால் என்ன செய்வதென்ற பயம் அவனை வாட்டியது. சில நாட்களுக்கு முன்பு வரையிலாவது பூம்புகாரின் இந்திர விழாவுக்கு மதுரையிலிருந்து வந்தவர்கள் கூட்டம் கூட்டமாகத் திரும்பியிருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து போயிருக்கலாம். இப்போது எங்கே போய், யாரை வழித்துணை தேடுவது? இங்கிருந்து பாண்டிய நாட்டின் தலைநகரம் நினைத்தவுடன் போய்ச் சேர முடிந்த இடம் இல்லை, திருவரங்கத்தில் ஒருநாள், உறையூரில் ஒருநாள். தென்னவன் சிறுமலைத் தொடர்களைக் கடந்து திருமால் குன்றத்தில் ஒருநாள் என்று இடையிடையே ஓய்வுக்காகத் தங்கிப் பல நாட்கள் பயணம் செய்து வைகையின் வடகரையைக் காண வேண்டும்.
பயணத்தைப் பற்றிய தன் கவலையை நீலநாக மறவரிடம் வெளியிட்டான் அவன். “கவலைப்படாதே, மணிமார்பா! இந்த நகரில் இலவந்திகைச் சோலையின் மதிலுக்குப் பக்கத்தில் சைன சமயத்தைச் சேர்ந்த இல்லறத் துறவிகளாகிய சாவகர்கள் தங்கும் மடம் ஒன்று இருக்கிறது. அந்த மடத்திலிருந்து பாண்டிய நாட்டிற்குப் போகிறவர்களின் கூட்டம் அநேகமாக நாள்தோறும் புறப்படும். விடிவதற்கு முன்னாலேயே உன்னை அங்கே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். அவர்களோடு புறப்பட்டுச் செல்வது உனக்குப் பாதுகாப்பாக இருக்கும்” என்றார் நீலநாக மறவர்.
அடுத்தநாள் போது விடிவதற்கு நாலைந்து நாழிகைகள் இருக்கும்போதே தமது வழக்கம்போல் துயில் நீங்கி எழுந்துவிட்ட அவர் மணிமார்பனையும் எழுப்பி அழைத்துக் கொண்டு இலவந்திகைச் சோலைக்குப் புறப்பட்டார். அங்கே மணிமார்பன் மதுரை செல்வதற்கு வழித்துணை கிடைத்தது.
“மறந்துவிடாதே, தம்பீ! எல்லையற்ற வாழ்க்கைக் கடலில் சந்தர்ப்ப அலைகள் மறுபடி உன்னையும், என்னையும், இளங்குமரனையும் சந்திக்கச் செய்யலாம். சந்திக்கச் செய்யாமலும் போகலாம். நீ வரைந்த இளங்குமரனின் ஓவியம் என்னிடம் இருப்பதால் அதைக் காணும் போதெல்லாம் உன் நினைவு வரும்” என்று விடைகொடுத்தார் நீலநாகர். ஓவியன் கண்ணில் நீர் நெகிழ அந்தக் கம்பீர மனிதரை நோக்கிக் கைகூப்பினான். பின்பு வழித்துணையாக வாய்த்த சாவகர்களோடு யாத்திரையைத் தொடங்கினான் மணிமார்பன்.