மதமும் மூடநம்பிக்கையும்/அதிசயம் பற்றிய மூடநம்பிக்கை
அதிசயம்பற்றிய மூடநம்பிக்கை
பேய்—பூதம்—பிசாசு ஆகியவற்றிலே மக்கள் கொண் டிருந்த நம்பிக்கை, மாந்திரீகம் என்னும் வேறோர் நம்பிக் கைக்கு அடிப்படையாக அமைந்திருந்தது.
பூதத்திற்கு 'ஆன்மா' ஒன்றைக் காவுகொடுத்தால் அது, அதற்குப் பதிலாகச் சில பல நன்மைகளைப் புரியும் என்று நம்பப்பட்டது. வயதுமுதிர்ந்த கிழவன் தன் ஆன்மாவைப் பூதத்திற்கு ஒப்படைத்து அதன் பாதுகாப்பில் நிறுத்திவைத்தால், அவனது கூனி-உடைந்த முதுகு நிமிர்ந்து நேராகும், கிழத்தன்மை இளைமையாக மாறும் வெள்ளிய மயிர் பழுப்பு நிறம் கொள்ளும், நலிந்த இதயம் துடிக்கும் குழந்தை இதயமாக மாறும் என்றெல்லாம் நம்பப்பட்டன. மந்திரம் ஓதுவதாலும், செபம் செய்வதாலும் கெட்ட பண்புடையவன் பழிக்குப்பழி தீர்த்துக் கொள்ள முடியும். ஏழை பணக்காரன் ஆகமுடியும், பேராசை பிடித்தவன் பெரிய பதவிக்கும்-அதிகாரத்திற்கும் உயரமுடியும் என்றெல்லாம் நம்பப்பட்டன. இப்படிப்பட்ட வாழ்க்கையில், ஏற்படும் எல்லா நன்மைகளையும், பூதமே முன்னின்று செய்வதாகக் கருதப்பட்டது, கெட்ட பூதம் ஒன்றின் ஆசைகளுக்குக் கட்டுப்படாமல் நிற்கக் கற்றுக்கொண்டவர்களுக்கு மோட்ச உலகத்தில் நன்மைகள் காத்துக்கொண்டு இருக்கும் என்றும், ஆனால் ஆசைகளுக்குக் கட்டுப்பட்டவர்களுக்குப் பூதம் இவ்வுலகிலேயே நன்மை புரியும் என்றும் பலரும் நம்பினர் மாந்திரீகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள், பூதத்தோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற காரணத்திற்காக பல அத்தகையோர்க்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எந்தக் கற்பனையாளராலும்கூட தீட்டிக்காட்ட முடியாது. நல்லவர்கள் கூட பூதத்தோடு தொடர்பு கொண்டவர்கள் என்ற குற்றஞ்சாட்டப்பட்டுக் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டனர். அப்படிப்பட்ட காரணங்களால் அழிக்கப்பட்ட குடும்பங்கள், சிறையிலடைக்கப்பட்ட தாய் தந்தை மார்கள், சித்ரவதை செய்யப்பட்ட பெரியவர்கள், எரிக்கப்பட்ட சீலர்கள், அவிக்கப்பட்ட அடுப்புகள், கொல்லப்பட்ட குழந்தைகள், கைகால் முறித்திடும் பலகையில் கட்டப்பட்டுப் பிய்க்கப்பட்ட, சிதைக்கப்பட்ட வயதானவர்கள் - ஏழைகள் உதவியற்றோர் எத்தனை ஆயிரம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!
மூடநம்பிக்கையும் அச்சமும் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடியிருந்த நாட்களைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்! குற்றஞ்சாட்டிய நல்லவர்களையே குற்றவாளியாகக் கருதப்பட்ட நாட்களையும், அறியாமையை வெளிப்படுத்துவதையே குற்றத்தை ஒப்புக்கொள்வதாகும் என்று கருதப்பட்ட நாட்களையும், கிருத்துவ உலகம் முழுவதும் மதிகலங்கியிருந்த நாட்களையும் சிறிது சிந்தித்துப் பாருங்கள்!
இந்தக் கொடுமைகளெல்லாம் மூட நம்பிக்கையின் விளைவுகள் என்பதை நாம் இப்பொழுது நன்கு அறிகிறோம். மக்கள் நுகர்ந்து வந்த வேதனைகளுக்கெல்லாம். அறியாமையே தாயாகும் என்பதை நாம் இப்பொழுது அறிகிறோம். மந்திர சாதனை என்பது ஒரு காலத்திலும் நிகழ்ந்ததில்லை என்பதையும் பூதத்தால் மக்கள் நன்மை யேதும் அடைந்ததில்லை என்பதையும் நாம் இப்பொழுது அறிகிறோம்; ஆனால் நமது காட்டுமிராண்டித் தன்ழையி லிருந்த பக்தியுள்ள முன்னோர்கள் அதுபற்றித் தவறாகவே எண்ணிவந்திருக்கின்றனர்.
நமது முன்னோர்கள் அதிசயவித்தைகளிலும், அதிசய நிகழ்ச்சிகளிலும், அடையாளங்களிலும், கிரகணங்களிலும் வால் நட்சத்திரங்களிலும், எலும்புகளின் மகிமையிலும், பேய் பூதம் பிசாசுகளின் நம்பிக்கை கொண்டடிருந்தனர். ஆற்றல்களிலும் முழு இவையெல்லாம் அதிசயப் பொருள்களாகவும், அதிசய நிகழ்ச்சிகளாகவுமே கருதப்பட்டன. இந்த உலகமானது மந்திரவித்தையால் நிரம்பப் பெற்றதாகவே கொள்ளப்பட்டது பேய்-பூதம்-பிசாசுகளெல்லாம் ஜாலவித்தை நிகழ்த்துவோராக அதாவது ஜாலவித்தைக்காரர்களாகக் கருதப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையாக இயற்கையான காரணங்கள் உண்டு என்பதை முன்னோர்கள் உணர வில்லை. பூதம் ஒன்றை விரும்பும்; அது உடனே நிகழும் சாத்தானுக்குத் தன் 'ஆன்மா'வை ஒப்படைத்தவன், கைகால்களை ஆட்டுவான். சில புரியாத சொற்களைக் கூறுவான், அவ்வளவுதான். உடனே அவன் எதிர்பார்ப்பது நிகழும்! இதில் இயற்கையான காரணங்கள் இருப்பதாக நம்பப் பட்டதில்லை. ஏமாற்றமும் மதிமயக்கமும், பயங்கரமும் அதிசயமும் இவ்வுலகை ஆண்டுவந்தன. இவற்றிற்கெல்லாம் இருந்த அடிப்படை இப்பொழுது தகர்த்தெறியப்பட்டுவிட்டது: பகுத்தறிவு அவைகளைத் துரத்தியடித்து விட்டது. அறியாத்தன்மை, பொய்களுக்கு, நாக்குகளையும் இறக்கைகளையும் கொடுத்தது; அவைகள் பறந்தன; அப்பொழுது ஊமையாகவும் நொண்டியாகவும் இருந்த உண்மைகள் பின்னால் விடப்பட்டன; அவைகள் அலட்சியப்படுத்தப்பட்டு, வெளிப்படுத்தப்படாமல் பின் தங்கின.
அதிசயம் என்றால் என்ன? இயற்கையின் ஆண்டை யான ஆண்டவன், இயற்கையின் உண்மைகளுக்குத் தொடர்பில்லாதவகையில், ஒன்றினைச் செய்துகாட்டுவது. இதுதான், அதிசயம் என்பதற்கு நாணயமாகச் சொல்லக் கூடிய பொருளாக இருக்க முடியும்.
ஒரு மனிதன் முழுவட்டம் ஒன்று வரைந்து, அதன் விட்டம், வட்டத்தின் சுற்றளவில் சரிபாதியாகும் என்று கூறுவானேயானால், அது பூகணிதத்தில் அதிசயமாகக் கருதப்படும். ஒரு மனிதன் நான்கு என்ற எண்ணை இரண்டு தடவையாகக்கூட்டி ஒன்பது வருகிறது என்று காட்டுவானேயானால், அது கணிதத்தில் அதிசயமாகக் கொள்ளப்படும். ஒரு மனிதன் கல் ஒன்றை ஆகாயத்தில் தூக்கி எறிந்து, அது விழும்பொழுது முதல் நொடியில் பத்து அடி தாண்டி, இரண்டாவது நொடியில் இருபத்தைந்து அடி தாண்டி, மூன்றாவது நொடியில் ஐந்து அடி தாண்டுமேயானால். அது இயற்கைப் பொருளியலில் அதிசயமாகக் கருதப்படும். ஒரு மனிதன் உயிர்க்காற்று நீர்க்காற்று உப்புக்காற்று மூன்றையும் கலந்து, தங்கத்தைச் செய்து காட்டுவானேயானால், அது கலவையியலில் அதிசயமாக ஏற்கப்படும். ஒரு மதபோதகன் தன் மதக் கொள்கையொன்றை நிரூபித்துக் காட்டுவானேயானால், அது மதயியவில் அதிசயமாக மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சி ஒன்று ஐம்பது சத வெள்ளிப்பணத்தை ஒரு டாலரின் மதிப்புக்கு உயர்த்திக் காட்டுமேயானால் அது பொருளியலில் அதிசயமாக எண்ணப்படும். சதுரத்தை அப்படியே முக்கோணமாக ஆக்கிக்காட்டுவது சிறந்த அதிசயமாகக் கருதப்படும். ஒரு நிலைக்கண்ணாடி தனக்கு முன்னால் நிற்பவர்களைக் காட்டாமல், தனக்குப் பின்புறமாய் நிற்பவர்களைக் காட்டுமேயானால், அதுவே ஒரு பெரிய அதிசயமாக நினைக்கப்படும். ஒரு கேள்வி கேட்டு, அதன் எதிரொலி அந்தக்கேள்விக்கான விடையாக வருமேயானால், அது அதிசயங்களில் ஒன்றாகக் போற்றப் படும். சுருங்கச் சொல்லுவதானால், இயற்கையின் உண்மைகளுக்கு மாறாகவோ, அல்லது இயற்கையின் உண்மைகளை அலட்சியப்படுத்தியோ செய்து காட்டப்படும் எந்த ஒரு செயலும் அதிசயத்தின்பாற்படும்!
இப்பொழுது, நாம் 'இயற்கையின ஒருமித்த நியதி" என்று சொல்லப்படுவதொரு கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம். அதனதன் இயற்கைப் பண்புகளுக்கேற்ப ஓவ்வொரு பொருளும் நடக்கின்றது. அல்லது நடத்துவிக்கப்படுகின்றது என்பதை நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். ஒரேவிதமான சூழ்நிலையில் முடிவுகளெல்லாம் ஏறத்தாழ ஒரேவிதமாகவே அமைந்திருக்கும் என்பதை நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். ஒரேவிதமான பொருள்கள் ஒரேவிதமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன; ஒரேவிதமான பொருள்கள் ஒரேவிதமான பொருள்களையே உற்பத்தி செய்யும் என்பதையும் நாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். எனவே. இப்பொழுது, நிகழ்ச்சிகளுக்கு இயற்கையான பெற்றோர்கள் உண்டு என்பதையும், அவைகளில் எவையும் குழந்தையில்லாமல் செத்துப்போகாதென்பதையும் நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
'அதிசயக் காட்சிகள்' அனைத்தும் நடைமுறைக்கு என்பதுமட்டுமல்லாமல், அவையெல்லாம் எந்த தல்ல சிந்தனையாளனாலும் சிந்திக்கப்படமுடியாத வையுமாகும்.
இப்பொழுது, நல்லறிவு படைத்த எவனும், அதிசயக் காட்சியொன்று நடத்திக் காட்டப்பட்டது என்பதையோ, இனி நடத்திக் நடத்திக் காட்டப்படும் என்பதையோ ஏற்றுக் கொள்ளமாட்டான்.
அதிசயக் காட்சிகள்பற்றிய நம்பிக்கை, அறியாமை என்னும் நிலத்தில்தான், வளருகிறது!