மதமும் மூடநம்பிக்கையும்/மூடநம்பிக்கையின் அடிப்படை

மூடநம்பிக்கை 2


மூடநம்பிக்கையின் அடிப்படை

ஞாயிறு-திங்கள் கிரகணங்கள், பின்னால் ஏற்படும் கொள்ளை நோய், கொடும் பஞ்சம் ஆகியவற்றை முன் கூட்டியே அறிவிப்பவைகள் என்றும், வால் நட்சத்திரம் தோன்றுவது அரசர்களின் இறப்பையோ, நாடுகளின் அழிவையோ, போரின் வருகையையோ அல்லது பிளேக்கின் தோற்றத்தையோ முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறி என்றும் பன்னெடுங்காலமாக நம்பப்பட்டு வருகின்றன. வானத்தில் ஏற்படும் வியப்புக்குரிய மாறுதல்களான வடக்கே பால்வெளியில் வெளிச்சம் தோன்றுவது, மதியைச் சுற்றி வட்டம் ஏற்படுவது, பரிதியில் கறைகள் காணப்படுவது, விண்வீழ் கொள்ளி வீழ்வது போன்றவைகள் சிறிது அறிவு வந்த முன்னோர்களுக்கு மிக்க அச்சத்தைக் கொடுத்திருக்கின்றன. இப்படிப்பட்ட வானிலை நிகழ்ச்சிகளால் அச்சுறுத்தப்படும் அழிவைத் தடுக்கவேண்டி, அவர்கள். முழங்கால் படியிட்டுக் கொண்டு, அவைகளை நோக்கி வழிபாட்டுரை கூறியும், பலிகளிட்டும் வணக்கம் செலுத்தினர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு உதவிக்காக வானை நோக்கிக் கதறிடும்போது அவர்களுடைய முகங்கள் அச்சத்தால் கவ்வப்பட்டிருந்தன. அந்தச் சமயங்களில், புரோகிதர்கள் தாங்கள் ஆண்டவனோடு நெருங்கிய பழக்கங்கொண்டவர்களாகவும், கிரகணங்கள், ஞாயிற்றின் கறைகள், வடக்கு வெளிச்சம் வால் தட்சத்திரம், விண்வீழ்கொள்ளி ஆகியவற்றிற்கான பொருள்களை அறிந்தவர்களாகவும், ஆண்டவனின் பொறுமை அற்றுப் போய்விட்டதையும், அவன் பழி வாங்க வாளைத் தீட்டிக்கொண்டுருப்பதையும் அறிந்து கொண்டவர்களாகவும்; இப்பொழுது உள்ள புரோகிதர்களைப் போலவே பாசாங்கு செய்தனர். அவர்கள் மக்கள் இவ்விதத் தொல்லைகளினின்றும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமானால், புரோகிதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன்மூலமும், செபமணிகளை உருட்டுவதன்மூலமும் பக்திக் காணிக்கையை இரட்டிப்பாக்குவதன் மூலமும் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவைத்தனர்.

நில அதிர்ச்சிகளும், பெரும் புயற்காற்றுகளும் மாதா கோயிலில் ஏராளமான மக்களைக் கொண்டுவந்து சேர்த் தன. பெருந்தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும் போதும், கஞ்சத்தனம் கொண்டவன், தன் நடுக்கங் கொண்ட கைகளால், பணப்பையைத் திறந்தான், கிரகணங்கள் ஏற்படும்போது, திருடர்களும், கொள்ளைக்காரர்களும் கடவுளோடு சேர்ந்து கொள்ளையிடப்பட்ட பொருள்களைப் பிரித்துக்கொண்டார்கள். ஏழ்மையும், நாணயமும், அறியாமையும் உடைய பெண்கள், தாங்கள் கடவுளுக்கு வழிபாட்டுரை கூறி மறந்துவிட்டோம் என்பதை நினைத்துக்கொண்டு, தாங்கள் சேர்த்துவைத் திருந்த சிறிதளவு தொகையையும் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.

நாம் இப்பொழுது அறிவோம், வானத்தில் நிகழும் வியப்புக்குரிய நிகழ்ச்சி - தோன்றும் அடையாளங்கள் ஆகியவற்றிற்கும், அரசர்கள், நாடுகள் அல்லது தனிப்பட்டவர்கள் ஆகியோர்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை, என்பதை அவைகளுக்கும், உலகில் வாழும் எறும்புகள், தேனீக்கூட்டங்கள், பூச்சிகளின் முட்டைகள் ஆகியவற்றிற்கும் எவ்வளவு இணக்கம் உண்டோ அதில் கூடியதோ அல்லது குறைந்ததோ அல்ல. அவைகளுக்கும், மனிதர் களுக்கும் உள்ள இணக்கம் கிரகணங்கள் சில இடையீடுகளில் வரும் என்பதை நாம் அறிவோம். அவற்றின் வருகைகூட நம்மால் ஆராய்ச்சியின் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட முடிகிறது.

சில உயிரற்ற பொருள்கள்கூட, தொல்லைகளையும் துயரங்களையும் போக்கி, நன்மை பயக்கும் அருந்தன்மை கொண்டவைகளாகச் சில காலத்திற்கு முன்புவரையிலும் மக்களால் நம்பப்பட்டுவந்தன. புனிதமான ஆண்-பெண் துறவிகளின் எலும்புகள், பெரிய துறவி ஒருவரின் கிழிந்த துணி, தியாகம் செய்தோரின் மயிர், ஏசுவை அறைந்த சிலுவையிலிருந்து எடுக்கப்பட்ட மரத்துண்டு, ஏசுவை அறைந்த துருப்பிடித்த ஆணிகள், பயபக்தியுடையோரின் பற்கள்-விரல், நகங்கள் இன்னும் இது போன்ற பொருள்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றை அரும் பொருளென நம்பிவந்தனர்.

ஒரு எலும்புத் துண்டையோ அல்லது கிழிந்த துணியையோ அல்லது ஒரு மரத்துண்டையோ அல்லது புனிதத் தன்மை கொண்ட மயிர்களையோ கொண்ட பெட்டியை முத்தமிட்டால் அதுவும் காணிக்கை செலுத்றிவிட்டு முத்தமிட்டால் நோயாளியின் நோய் பறந்துவிடும் என்று நம்பப்பட்டது. இத்தகைய காணிக்கைகளால் மாதா கோவிலுக்கு ஏராளமான சொத்து சேர்ந்தது.

அத்தகை எலும்பு அல்லது கிழிந்ததுணி அல்லது மரத்துண்டு ஏதாவதொன்றிலிருந்து அதிசயிக்கத்தக்க நன்மைபுரியும் ஆவி, பெட்டியை விட்டு வெளிக்கிளம்பி நோயாளிடம் சேர்ந்து, கடவுள் சார்பாக அவன் உடலில் நின்று. அவன் நோய்க்குக் காரணமான பிசாசுகளை விரட்டியடிக்கும் என்று மூடத்தனமாக நம்பினர்.

நோய் தீர்க்கும் எலும்புத் துண்டுகள் கிழிந்த துணிகள், புனித மயிர்கள் ஆகியவற்றில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதற்கு, வேறோர் நம்பிக்கை மூலகாரணமாகும். அதுதான, நோய்களெலலாம் பிசாசுகளின் ஏவலின்பேரில் வருகின்றன என்று கொண்டிருந்த நம்பிக்கையாகும். சித்தம் கலங்கியவர்கள், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களே என்று நம்பினர். மயக்கமும், நரம்புத் துடிப்பும் சாத்தான் அனுப்பிய பிசாசுகளால் ஏற்படுபவை என்று கருதினர். சுருங்கக் கூறவேண்டுமானால், மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு தொல்லையும், நரக தேவனின் கொடிய ஏவலாளர்களால் உண்டாக்கப்படுவதாகும் என்று எண்ணினர். இத்தகைய நம்பிக்கை உலகெங்கும் இன்றைய நிலையில்கூட நிலவி வருகிறது. நமது காலத்திலேயேகூட கோடிக்கணக்கான மக்கள் புனித எலும்புகளின் தன்மையில் நம்பிக்கையும், பக்தியும் வைத்திருக்கத்தான் செய்கின்றனர்

ஆனால், இன்று, பிசாசுகள் இருப்பதை, எந்த அறிவுள்ள மனிதனும் நம்புவதில்லை! பிசாசுகள் நோய்கள் உண்டாக்குகின்றன என்பதையும் எந்த அறிவுள்ள மனிதனும் நம்புவதில்லை! மேலும், புனித எலும்புகளோ அல்லது மயிர்களோ, கிழிந்த துணிகளோ அல்லது மரத் துண்டுகளோ நோயைப்போக்கும் என்பதையும் இழந்த நலத்தை மீண்டும் கொண்டுவந்து சேர்க்கும் என்பதையும், எந்த அறிவுள்ள மனிதனும் நம்புவதில்லை!

அறிவுள்ள மக்களனைவரும் அறிவார்கள். அடிகளார் ஒருவரின் எலும்புத் துண்டு விலங்கு ஒன்றின் எலும்புத் துண்டைக் காட்டிலும் எந்த வகையிலும் சீரிய நன்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதை, அதுபோலவே ஒரு நாடோடிப் பிச்சைக்காரனின் கிழிந்த ஆடை, அடிகளார் ஒருவரின் கிழிந்த ஆடையைப் போன்றே ஒரே தன்மையாக விளங்கக் கூடியது என்பதையும் அவர்கள் அறிவார்கள். குதிரையின் மயிரும் மதத் தியாகி ஒருவரின் மயிரைப் போலவே, அவ்வளவு விரைவாகவும், எளிதாகவும் நோய்நொடிகளைப் போக்கக்கூடியதுதான் என்பதையும் அவர்கள் தெளிவாக அறிவார்கள். புனிதப்பொருள் எல்லாம் மதக் குப்பை என்பதை நாம் இப்பொழுது அறிந்திருக்கிறோம். அந்தக் குப்பையைப் பயன்படுத்துவர்களெல்லாம் நாணயமற்றவர்கள் என்பதையும், அதனை நம்பி வாழ்பவர்கள் அத்துணைப் பெரும் முட்டாள்கள் என்பதையும் நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.

தாயத்துக்களிலும், மந்திரங்களிலும். பேய்களிலும் நம்பிக்கை வைப்பது மிகச் சாதாரணமான மூடநம்பிக்கையாகும்.

நமது முன்னோர்கள் இந்த அதிசயப் பொருள்களை நோய் தீர்க்கும் மருந்தாகவோ, அல்லது நோய் போக்கும் ஆற்றலாகவோ கருதவில்லை; மகான்சளின் புனிதப் பொருள்களைக் கண்டு பேய் பிசாசுகள் அஞ்சுகின்றன என்றே கருதினர். அந்தப் பேய் பிசாசுகள் மகானின் எலும்பைக் கண்டவுடனும், உண்மைச் சிலுவையின் மரத் துண்டைப் பார்த்தவுடனும், புனித நீர் தெளிக்கப்பட்டவுடனும் அஞ்சி அந்தந்த இடங்களை விட்டு ஓடிவிடுகின்றன என்று அவர்கள் நம்பினர். ஆகையினாலே அந்தப் பேய் பிசாசுகள் புனிதக் கோயில் மணியின் ஓசையைக் கேட்டு அஞ்சுவதுடன் ஓடி ஒளிந்துவிடுகின்றன என்றும், மெழுகுவர்த்தியின் ஒளியைக் கண்டதும், ஏசுவின் சிலுவையைப் பார்த்ததும் மிக அஞ்சி ஓடுகின்றன என்றும் அவர்கள் கருதி வந்தனர்.

அந்தக் காலங்களில் புரோகிதர்கள் பணம் என்னும் மீனைப் பிடிக்கும் தூண்டில்காரர்களாக இருந்து அதிசயப் பொருள்களைத் தூண்டில்களாகப் பயன்படுத்தி வந்தனர்!