மதமும் மூடநம்பிக்கையும்/அறிவியலும் மதவியலும்

மூடநம்பிக்கை 11


அறிவியலும் மதவியலும்

கிருத்தவ உலகத்தில் மதம் ஆதிக்கம் செலுத்தியிருந்த போது. பல நூற்றாண்டுகள் இருளிலேயே உருண்டோடின. மூடநம்பிக்கை எங்கணும் நிலவி வந்தது. இருபதினாயிரத்தில் ஒருவருக்குக்கூட படிக்கவோ அல்லது எழுதவோ தெரியாது. அந்த நூற்றாண்டுகளிளெல்லாம். மக்கள், அறிவு ஞாயிற்றுத் தோற்றத்தின் பக்கம் தங்கள் முதுகைக் காட்டிக்கொண்டு, அறியாமையும் பக்தியுமாகிய இருட்காடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது முன்னேற்றம் எதுவுமில்லை; கண்டுபிடிப்பு எதுவுமில்லை; ஆராய்ச்சி முடிவு எதுவுமில்லை. எங்கு பார்த்தாலும், வாதனையும், வழிபாடும், குற்றஞ் சாட்டலும், துதிபாடலும் நிறைந்திருந்தன. மதப் புரோகிதர்கள் சிந்தனைக்கும், ஆராய்ச்சியறிவுக்கும் பகைவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஆட்டிடையர்களாக இருந்தார்கள்; மக்கள் ஆடுகளாக இருந்தார்கள்; சிந்தனை, ஐயப்பாடு என்ற ஓநாய்களிடமிருந்து அந்த ஆட்டுக் கூட்டத்தைக் காப்பாற்றுவதே அவர்களுடைய முக்கிய தொழில். மேல் உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவ்வுலகம் ஒரு பயனும் உடையதாகக் காணப்படவில்லை. வருங்கால வாழ்வுக்குத் தயார்படுத்திக்கொள்ளும் முறையிலேயே இவ்வாழ்வு செலவழிக்கப்படவேண்டியதாகக் கருதப்பட்டது. மக்களுடைய பொன்னும் உழைப்பும் தேவாலயக் கட்டிடங்களைக் கட்டுவதற்கும், வைதீகப்–பயனற்ற கூட்டத்தைக் காப்பாற்றுவதற்கும் வீணே செலவழிக்கப்பட்டன. நான் முன்பு கூறியதுபோல, கிருத்துவத்தின் இந்த இருண்ட காலங்களில் ஏதொன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை; ஏதொன்றும் ஆராய்ந்து செய்யப்படவில்லை; மனித வாழ்வு உயர்வதற்கான ஏதொரு திட்டமும் தீட்டப்படவில்லை. இயற்கையை மீறிய ஆற்றலிடமிருந்து, உதவியைப் பெறவேண்டி, கிருத்தவ உலகின் உழைப்பாற்றல்களெல்லாம் வீணாக்கப்பட்டன.

பல நூற்றாண்டுகள் வரையிலும், கிருத்தவர்கள், கிருத்துவின் வெறும் கல்லறையை மீட்பதற்காக மகம்மதுவைப் பின்பற்றினவர்களோடு போரிடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தனர், இந்தக் கவைக்குதவாத கடவுள் பீடத்தின்மீது கோடிக்கணக்கான மக்களின் உயிர்கள் பலியிடப்பட்டன! அப்படியிருந்தும் எதிரியின் படைவீரர்களே வெற்றி பெற்றனர்; கிருத்துவின் கொடியை ஏந்திச் சென்றவர்கள். புயற்காற்றின்முன் இலைகளைப் போல, சிதறுண்டு போனார்கள்.

அந்த இருண்ட காலங்களில், ஒரேயொரு கண்டுபிடிப்பு நடந்தேறியதாகயதாக நான் நினைக்கிறேன். அதுதான் வெடி மருந்துக் கண்டுபிடிப்பு கி பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோஜர் பேக்கன் என்ற மடாலய பாதிரியார் ஒருவர் வெடிமருந்தைக் கண்டுபிடித்தார்; ஆனாலும் ஆண்டவனுடைய ஆசியில்லாமலேயேதான் கண்டுபிடித்தார். என்றாலும், இந்தப் பெருமை நாம் கிருத்தவ மதத்திற்குக் கொடுப்பதற்கில்லை; ஏனென்றால், ரோஜர் பேக்கன், மத எதிரி என்று சொல்லி ஒதுக்கப்பட்டவர்; இம்மாதிரியான பகுத்தறிவுதான் நிலைக்களனாக நின்று வேலை செய்திருக்க வேண்டும் என்று மதவாதிகள் கருதினர். அந்த வைதீக நாட்களில், அறிவுடைய மக்களுக்கு எப்படிப்பட்ட கொடுமைகள் இழைக்கப்பட்டனவோ, அவற்றையொட்டியே ரோஜர் பேக்கனும் குற்றஞ் சாட்டப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். மாதாகோயில் வெற்றி வீரனாக நின்றது. வாளும் கேடயமும் அதன் கையில் இருந்தன; அப்படியிருந்தும் நாணயமற்ற போக்கையும் வலிவையும் உதவியாகக் கொண்டு வெற்றி பெற்றது. அது தனக்குள்ளேயே தோல்வி என்னும் விதைகளை விதைத்துக்கொண்டது. மாதா கோயில் நடக்கமுடியாத செயல்களுக்காக முயன்று பார்த்தது. உலகத்தை ஒரே நம்பிக்கையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று அரும்பாடு பட்டது; எல்லோருடைய உள்ளங்களையும் ஒரு பொதுத் தன்மைக்கு மறப்புரட்சி மூலம் கொண்டு வருவதற்கும் மனிதனின் தனித்தன்மையை அடியோடு அழிப்பதற்கும் ஆனவரையில் பாடுபட்டது. இதனை நிறைவேற்றி வைக்க, அது, தந்திரம் சொல்லிக் கொடுத்த எல்லாவித வித்தைகளையும், முறைகளையும் கையாண்டு பார்த்தது. குற்ற உள்ளம் கண்டுபிடித்துக் கூறிய எல்லாவித முறைகளையும் அது கடைப்பிடித்துப் பார்த்தது.

ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறி யுங்கூட, சில மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அவர்கள் உலக நடவடிக்கைகளிலும், இயற்கையின் பெரிய கண்காட்சியிலும் விருப்பஞ் செலுத்தத் தலைப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வியப்புக்குரிய நிகழ்ச்சிக்குள்ள காரணங்களையும, விளக்கங்களையும் தேடத் தொடங்கினார்கள். மாதாகோயில் சரியென்று நிலைநாட்டின கொள்கைகளைக் கொண்டு அவர்கள் மன நிறைவு கொள்ளவில்லை. இந்தச் சிந்தனையாளர்கள் வானுலகை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டுத் தங்களுடைய சூழ்நிலைகளை உற்றுக் கவனிக்கத் தொடங்கினர். அவர்கள். இவ்வுலக நலத்தை விரும்பும் அளவுக்கு ஆத்மார்த்தமற்றவர்களாகவே இருந்தனர். அவர்கள், உணர்ச்சிகள் வயப்பட்டவர்களாகவும், மதச் சார்பற்றவர்களாகவும், உலக வாழ்வில் திளைத்தவர்களாகவும், பேரறிவு கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

முடிவு என்ன? அவர்கள், புதிது கண்டுபிடிக்கவும், புதியன ஆராயவும், உண்மைகளுக்கிடையேயுள்ள தொடர்பை அறியவும், மகிழ்ச்சிக்குரிய காரணங்களைக் கண்டறியவும், தங்கள் உடன் வாழும் மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கான வழிகள் யாவை என்பதைக் கண்டறியவும் தலைப்பட்டார்கள்!

கோர்க்கும் அச்செழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன; மூர் வகுப்பினரிடமிருந்து காகிதம் பெற்றுக்கொள்ளப்பட்டது; புத்தகங்கள் வெளியிடப்பட்டன; ஒவ்வொரு தலைமுறையினரும் வருங்காலத் தலைமுறையினர்க்கு அறிவுச் செல்வத்தைச் சேமித்துவைத்துக் கொடுக்கக்கூடிய வகையில் ஏதுவான நிலைமை ஏற்பட்டது. சட்டுக் கதைகளும் வதந்திகளும் உலாவிவந்த இடத்தை வரலாறு பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது. தொலைநோக்கு ஆடி (தூர திருஷ்டிக் கண்ணாடி) கண்டுபிடிக்கப்பட்டது. நட்சத்திரங்களின் நிலைமையும் இருப்பிடமும் கண்டுபிடிக்கப்பட்டன; மக்கள் அண்டத்தின் குடிமக்களாக மாறினர். நீராவிப் புகைவண்டி கட்டப்பட்டது; பெரிய வேலைக்காரனாக நீராவி, கோடிக்கணக்கான மக்களின் வேலையைச் செய்து வருகிறது. நடக்க முடியாதவைகளான "கற்பனை அதிசயம் ஒதுக்கித் தள்ளப்பட்டது; பயன்படும் கலவையியல், இடத்தைப் பற்றிக்கொண்டது. வான ஜோஸ்யம் வான இயலாக மாறிற்று. மனித அறிவின் மிகப்பெரிய முயற்சிகளில் மிக முக்கியமானவையாகக் கருதப்படும் மூன்று விதிகளைக் கெப்லர் கண்டுபிடித்தார். நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து இப்பொழுது கவிதையாகவும், பாட்டாகவும் ஆகிவிட்டது. நில ஈர்ப்பின் தொடர்பான கணக்கு விதிகளை, நியூட்டன் நமக்கு அளித்தார். குருதியோட்டத்தின் அமைப்பினை ஹார்வி கண்டுபிடித்தார். அவர் அதன் உண்மையை நமக்குக் கூறினார்; டிராப்பர் அதற்கான காரணத்தை நமக்குக் கொடுத்தார். நீராவிக் கப்பல்கள் அலைகடல்களை வென்றன; புகைவண்டித் தொடர்கள் நிலத்தை நிரப்பின. வீடுகளும் தெருக்களும், புகைக்காற்றால் ஒளிபெறச் செய்யப்பட்டன. தீக்குச்சி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், தெருப்பு மனிதனின் நெருங்கிய நண்பனாக மாறிவிட்டது. நிழற் படம் எடுக்கும் கலை எல்லோர்க்கும் தெரிந்ததாக வளர்ந்து விட்டது. கதிரவன் ஓவியக் கலைஞனாக மாறிவிட்டான். நிலம் வழித் தந்திகளும், கடல்வழித் தந்திகளும் கண்டு பிடிக்கப்பட்டன. மின்னாற்றல் செய்திகளை ஏந்திச் செல்லும் ஏதுவாயிற்று : நாடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமுடையனவாக வளர்ந்தன. மயக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; வலி தூக்கத்தில் மறக்கடிக்கப்பட்டது. புண்ணாற்றல் ஒரு அறிவியலாக வளரத் தொடங்கியது. தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது; அது கேட்கும் செவிகளுக்கு அலைகளாகிய சொற்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இசைப்பெட்டி, புள்ளிகளையும் கோடுகளையும் இசைத்தட்டிலே பெற்றுக்கொண்டு, நமது பேச்சையே நமக்கு மீண்டும் எதிரொலியாகத் தருகிறது.

பிறகு மின்னொளி வந்தது; இரவை பகலாக்கிக் காட்டுகிறது; எந்த மின்குற்றல் கோடை மேகத்தினின்றும் கிளம்பி, பாழையும் அழிவையும் உண்டாக்கிற்றே, அதே மின்னாற்றல், வியப்புக்குரிய பொறிகளை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. முக்கோண ஸ்படிகக் கற்களின் ஆராய்ச்சிகள், கதிரவனின் ஒளிக்கதிரிலுள்ள பொருள்களைத் தெளிவாக்கிக் காட்டுகின்றன. சிறந்த பெருஞ் சிந்தனையாளர்கள், பொருள் – ஆற்றல் ஆகியவற்றின் அழிக்கமுடியாத தன்மையைப் பற்றியும், அழிக்கமுடியாத தன்மை பெற்றவைகளை உண்டாக்க முடியாது என்பதைப் பற்றியும் நிரூபித்துக் காட்டினார்கள். நிலயியல் ஆராய்ச்சியாளர்கள் பாறைகளிலும், மலைகளிலும், மண்ணடுக்குகளிலும் அடங்கிக்கிடக்கும் பொருள்களையும், அவற்றிற்குள் உள்ள மாறுபாடுகளையும் கண்டறிந்து, உலக வரலாற்றின் கதையைச் சிறிதளவு கூறினார்கள்; மரவியலின் கதையையும், விலங்கியலின் கதையையும் கூறினார்கள். மனித விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான எலும்புக் கூடுகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்து மனிதனின் தொடக்கத் தலைமுறைகளை விளக்கிக் காட்டினர்; புனித வேதம் எவ்வளவு பிற்போக்கானது என்பதையும் அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். பின்னர் உள்ளது சிறத்தல் கொள்கை வளர்ந்தது; பொருத்தம் ஏற்படுத்திக் கொண்டன. வாழ்தலும், இயற்கையான தேர்வு செய்து கொள்ளலும் ஆன கொள்கைகள் இடம்பெற்றன. ஆயிரக்கணக்கான அதிசயக் காட்சிகளுக்கு விளக்கந் தரப்பட்டன; அறிவியல் மூடநம்பிக்கை ஏந்தியிருந்த வாளைத் தாக்கி முறித்துப் போட்டது. உயிரணுவின் கொள்கை வளர்ந்தோங்கியது; உயிரணுக்களின் கருத்தோற்றம் ஆராய்ச்சி செய்யப்பட்டது; நுண் நோக்கு ஆடி (பூதக்கண்ணாடி) நோய்தரும் கிருமிகளைக் கண்டுபிடித்துச் சொல்லிற்று; பிளேக்கை எப்படித் தடுக்கலாம் என்பதற்கான முறையையும் சொல்லிக் கொடுத்தது. எண்ணற்ற கண்டுபிடிப்புகளோடு இந்தக் கொள்கைகளும், ஆராய்ச்சி முடிவுகளும், விடுதலையறிவின் குழந்தைகளாகும்!