மதமும் மூடநம்பிக்கையும்/மூடநம்பிக்கையும் அறிவியலும்

மூடநம்பிக்கை 12


மூடநம்பிக்கையும் அறிவியலும்

நாம் அறிந்திருக்கும் கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் கொள்கைகளையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் நாம் மிகச் சொற்பமாகத்தான் அறிந்திருக்கிறோம் என்பது தெரியவரும். வாழ்க்கை என்னும் இருட்படலத்தில், சிற்சில ஒளிக்கதிர்கள் தோன்றியிருக்கின்றன. தட்டுத் துடைக்கும் துணி கீழே விழுவது. விருந்தினர் வருகையை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்றுமட்டும் ஏதும் கிடைப்பதில்லை! பதின்மூன்று பேர்கள் உட்கார்ந்து சாப்பிடுவது ஆபத்தை உண்டாக்கினாலும் உண்டாக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று மட்டும் கிடைப்பதில்லை! ஒரு ஆப்பிள் பழத்திலுள்ள விதைகளின் எண்ணிக்கையோ அல்லது ஒரு மலரிலுள்ள இதழ்களின் எண்ணிக்கையோ ஒரு பெண்ணின் திருமண மாற்றங்களை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! சில கற்களை அணிந்து கொள்வதால் நன்மையும், ஏனையவற்றை அணிந்துகொள்வதால் இழப்போ அல்லது சாவோ ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும்; ஆனால் சான்று ஏதும் இல்லை! திங்களை இடது தோளின் மேலாகப் பார்ப்பது தீய வாய்ப்பை அளித்தாலும் அளிக்கக்கூடும்; ஆனால் சான்று ஏதும் இல்லை! பழைய எலும்புகள், புனிதக் கந்தல்கள், பரிசுத்த மயிர்கள், உருவத் தோற்றங்கள், மரத்துண்டுகள், துருப்பிடித்த ஆணிகள், காய்ந்த குருதி ஆகியவைகள் நலம் பயக்கும் நன்மைகளாக இருந்தாலும் இருக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! வால் நட்சத்திரங்கள், கிரகணங்கள், விண் வீழ்கொள்ளிகள், அரசர்களின் இறப்பையும், நாடுகளின் அழிவையும் அல்லது பிளேக்கின் வருகையையும் முறையே முன்கூட்டித் தெரிவிப்பனவாக இருந்தாலும் இருக்கக் கூடும்; ஆனால், அதற்குச் சான்று ஏதும் இல்லை! பிசாசுகள் மனிதர்களின் உடல்களையும், உள்ளங்களையும் தம் வயப்படுத்தினாலும் படுத்தக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! மந்திரவாதிகள் பூதத்தின் உதவியினால் காற்றுகளை அடக்கவும், நிலத்திலும் நீரிலும் புயல்களை உண்டாக்கவும், கோடை காலத்தில் பனிப் படலத்தையும் பனிக்கட்டிகளையும் உண்டாக்கவும், மந்திரத்தால் வேலை செய்து காட்டவும், பொதுமக்களின் மகிழ்ச்சிக்கு மாறுபாடாகச் சபிக்கவும் ஆன செயல்களைச் செய்தாலும் செய்யக் கூடும்; ஆனால், அதற்குச் சான்று ஏதும் இல்லை! பழைய– புது வேதங்களில் சொல்லப்பட்டுள்ள அதிசயக்காட்சி களெல்லாம் நிரூபித்துக் காட்டப்பட்டாலும் படலாம்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! காய்ந்து வதங்கிப் போன இறந்த உயிர்களின் சதைப்பற்று, மீண்டும் உயிர் பெற்று எழுந்தாலும் எழக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! செத்து விழுந்த பிணம், உயிர்பெற்று எழுந்து, மனைவியும் குழந்தைகளும் இடும் முத்தங்களை உணர்ந்தாலும் உணரககூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! தண்ணீர் திராட்சை ரசமாக மாற்றப்படு வதும் ரொட்டியும். மீன்களும் அதிகமாக்கப்படுவதும், ஆடவர்–பெண்டிர் உடல்களிலிருந்து பிசாசுகள் விரட்டப்படுவதும் ஆன நிகழ்ச்சிகள் நடந்தாலும் நடக்கக் கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! மீன்கள் தமது வாய்களில் காசுகளைக் கொண்டிருந்தாலும் கொண்டிருக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! களிமண்ணும் எச்சிலும் சேர்ந்து ஒளி இழந்த கண்ணுக்கு மீண்டும் ஒளியூட்டினாலும் ஊட்டக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை! மந்திரச் சொற்கள் நோயைப் போக்கிக், குஷ்டத்தை நீக்கி நலம் விளைவித்தாலும் விளைவிக்கக்கூடும்; ஆனால் அதற்கு சான்று ஏதும் இல்லை!

இரும்பு மிதப்பதும் ஆறு பிளப்பதும், காய்ந்த எலும்புகளிலிருந்து நீர் பீறிடுவதும், தேவதூதர்களுக்குப் பறவைகள் உணவு ஏந்திச் செல்வதும், உருவப்பட்ட வாள் முனையில் தேவதைகள் தோன்றுவதும் ஆன நிகழ்ச்சிகள் நடந்தாலும் நடக்கக்கூடும்; ஆனால் அதற்குச் சான்று கிடையாது!

பொய் சொல்லும் ஆவிகளைக் கொண்டு ஜேஹோவா ஒரு அரசனை ஏமாற்றியதும், காட்டுமிராண்டிகள் அதிசயங்கள் பல செய்ததும் நடந்திருந்தாலும் நடந்திருக்கக்கூடும்! ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை!

சாத்தான் என்ற பூதம் ஒன்று இருப்பதும், அவன் தந்திரமும் ஆற்றலும் கொண்ட எண்ணிறந்த பிசாசுகளைக் கொண்டிருப்பதும், மக்களுக்குத் தீங்கைச் சொல்லிக் கொடுப்பது, அவர்களை வெறுப்படையச் செய்வது, தவறான வழிகளில் ஈடுபடுத்துவது, சிறைபிடிப்பது, சிறை யடைப்பது போன்ற தொழில்களை அந்தப் பிசாசுகள் செய்துகொண்டிருப்பதும் ஆன செயல்கள் நடந்தாலும் நடக்கக்கூடும்; ஆனால் நமக்கு ஏற்படும் தொல்லை யெல்லாம், அதற்குச் சான்று ஏதும் இல்லை என்பதே! மதப்புரோகிதர்கள் வாயினால் கூறுவதைத் தவிர வேறு சான்று ஏதும் இல்லை!

நரகம் என்று சொல்லப்படும் ஒரு இடம் இருப்பதும், அங்கு பூதமெல்லாம் வாழ்வதும், சிந்திக்கவும் சிந்தித்த கருத்துக்களை வெளியிடவும் உறுதிபூண்டிருக்கிற மனிதர்களுக்காகவும். புரோகிதர்களுக்கும் புனித வேதங்களுக்கும் மதிப்பு கொடுக்காதிருப்பவர்களுக்காகவும், பகுத்தறிவொளி காட்டும் பாதையில் நடந்து செல்பவர்களுக்காகவும், ஏமாற்றுத்தனத்தையும் பக்தியையும் கொள்ளாது ஆண்மையோடும் நல்ல தன்மையோடும் இருப்பவர்களுக்காகவும் அந்த நரகத்தில் நெருப்புகள் எரிந்து கொண்டிருப்பது உண்மையாக இருந்தாலும் இருக்கக்கூடும்; ஆனால், நான் மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறேன். அதற்குச் சான்று ஏதும் இல்லை என்று!

சுவர்க்கம் என்று ஒன்று இருப்பதும், அதனைக் கடவுள் வாழுமிடமாகக் கொண்டிருப்பதும், அங்கு தேவதைகள் ஓடியும்,ஆடியும், பறந்தும், பாடியும், நரகத்தில் அவதிப்படுவோரின் கூச்சல்களையும், முணுமுணுப்புகளையும் கேட்டு மகிழ்ச்சிகொள்வதும் உண்மையாக இருந்தாலும் இருக்கக் கூடும்; ஆனால் அதற்குச் சான்று ஏதும் இல்லை!

இவையெல்லாம் பைத்தியக்காரர்கள் கண்ட கனவுகளிலும், காட்சிகளிலும் மட்டுமே நிலை நிற்கின்றன!

இயற்கைக்கு மீறிய ஆற்றல் ஒன்று இருப்பதும், அது உலகிலுள்ள பொருள்களையெல்லாம் காப்பாற்றி வருவதும், அது அவைகளுக்கு வழிகாட்டுவதும் ஆன செய்திகள் உண்மையாக இருந்தாலும் இருக்கக்கூடும் ; ஆனால் அந்த ஆற்றல் இருப்பது நிரூபித்துக் காட்டப்படவே யில்லை !

பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கைகள்–எண்ணங்கள், ஆற்றல்–பொருள் வளர்ச்சி–அழிவு, பிறப்பு–இறப்பு. மகிழ்ச்சி–வருத்தம், நல்லவர்கள் துன்புறுவது–தீயவர்கள் வெற்றிபெறுவது ஆகிய இவற்றிற்கிடையே இருக்கும் எந்த அறிவுள்ள நாணயமான மனிதனும், "நான் அதனை அறியவில்லை" என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆனால், நாம் அறிவோம், கடவுள்களும் பூதங்களும், சுவர்க்கங்களும் நரகங்களும் எப்படி உண்டாக்கப்பட்டன என்பதை. நாம் வேத நூல்களின் வரலாற்றையும் தங்களின் உற்பத்தியையும் நன்கு மூட நம்பிக்கை என்னும் விதைகள் எப்படி நடப்பட்டன என்பதையும், அவற்றை எது வளர்த்துவந்தது என்பதையும் நாம் அறிவோம். எல்லா மூட நம்பிக்கைகளும், எல்லாக் கோட்பாடுகளும், எல்லா முட்டாள் தனங்களும், எல்லாத் தவறுகளும், எல்லாக் குற்றங்களும், எல்லாக் கொடுமைகளும், எல்லா நன்மைகளும் தீமைகளும், எல்லா விருப்பங்களும், அச்சங்களும், எல்லாக் கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்பட்டன என்பதை நாம் அறிவோம் பகுத்தறிவு ஒளியின் உதவியினைக்கொண்டு, நாம், துன்புறுத்துவதினின்றும் பயன்படுவதைப் பிரிக்கிறோம்; பொய்யினின்றும் உண்மையைப் பிரிக்கிறோம்.

நாம், இறந்தகாலத்தையும், மனிதன் நடந்தேறிவந்த வழிகளையும் அறிவோம். நாம், மிகச் சொற்ப உண்மைகளையும், மிகச் சொற்ப இயற்கையின் பகுதிகளையும், அறிவோம். இந்தத் தெரிந்த உண்மைகளையும், அறிந்த பகுதிகளையும் வைத்துக்கொண்டு நாம், நமது கற்பனைத் திறனாலும் கலையுள்ளத்தாலும் இறந்த காலத்தைப் புதுப்பிக்கிறோம்; இருக்கவேண்டியவைகளை வருங்காலத்தரையில் அறிவு வண்ணங்களால் தீட்டிக்காட்டுகிறோம்.

நாம் இயற்கையிலே நம்பிக்கை செலுத்துகிறோம்; உடையாத உடையமுடையாத இயற்கைக் காரணகாரியங் களின் தொடர்பில் நம்பிக்கை செலுத்துகிறோம். இயற்கைக்கு மீறிய ஆற்றல் இருப்பதாகச் சொல்லப்படுவதை நாம் மறுக்கிறோம் நறுமணப்புகை காட்டல், மண்டியிடுதல், மணியோசை ஒலித்தல், பாட்டுப்பாடல் செபமணி உருட்டல், வழிபாட்டுரை கூறல் ஆகியவைகளால் மகிழ்ச்சியுறும் கடவுளை நாம் நம்புவதில்லை; அச்சத்தாலும், பக்தியாசையாலும் கூறப்படும் புகழ்ச்சிச் சொற்களை, விரும்பி நிற்கும் கடவுளை நாம் நம்புவதில்லை.

நாம் இயற்கையை நம்புகிறோம். நாம் பூதங்களையோ, பிசாசுகளையோ, நரகங்களையோ கண்டு அஞ்சுவதில்லை. மகாத்மாக்கள், தெய்வீக உடம்புகள், ஆவிகளின் உலாவுகள் மைப்பார்த்தல், எதிர்காலம் அறிதல், தொலைவிலுணர்தல், மனதை அறிதல், கிருத்துவ அறிவியல் இவையெல்லாம் தந்திரமான ஏமாற்று வித்தைகள் என்றே நாம் நம்புகிறோம்; நாணயமான சான்றுகளைக்கொண்டு இவையெல்லாம் நிரூபிக்கப்ட்டதில்லை. சில சமயங்களில் தந்திரம் என்னும் தட்டுகள் நாணயமென்னும் தங்கமுலாம் பூசப்பட்டும், தீமை நன்மை என்னும் முலாம் பூசப்பட்டும், ஏமாற்றப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.

கோடிக்கணக்கான மக்கள், இல்லாத ஒன்றை வேண்டிக்கொண்டும், இயற்கைக்கு மீறிய ஆற்றலின் உதவியைத் தேடிக்கொண்டும், வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்க முயன்றுகொண்டும், விதியின் விளையாட்டை ஊகித்துக் கொண்டும். எதிர்கால இரகசியங்களைப் பறித்துக் கொண்டும் காலந்தள்ளிவருகிறார்கள் என்பதை நாம் அறிவோம் அவர்களுடைய முயற்சிகளெல்லாம் வெறும் வீணே என்பதை நாம் அறிவோம்.

நாம் இயற்கையை நம்புகிறோம். நம்வீட்டிலும் குளிர்காயும் இடத்திலும், மனைவியிடத்தும் மக்களிடத்தும், நண்பர்களிடத்தும் உறவினர்களிடத்தும், உலகின் உண்மைகளிடத்தும் அறிவினிடத்தும், மூளை வளர்ச்சியினிடத்தும் நம்பிக்கை வைக்கிறோம். நாம் மூட நம்பிக்கையை உதறித்தள்ளுகிறோம் ; அறிவியலை வரவேற்கிறோம் நாம், மாயைகளையும், தவறுகளையும், பொய்களையும் அகற்றுகிறோம்; உண்மையைப்பற்றி நிற்கிறோம். நாம், அறியாத தொன்றை அரியணையில் ஏற்றமாட்டோம். நாம், நமது முதுகுப் புறத்தைக் கதிரவனுக்குக்காட்டி நின்று, நம்முடைய நிழலையே கடவுள் என்று கூறி நிற்கமாட்டோம்.

நாம், நாமே ஒரு ஆண்டையை உண்டாக்கிக் கொண்டு, அது அளிக்கும் விலங்குகளை நன்றியோடு பெற்று மாட்டிக்கொள்ள மாட்டோம். நாம் நம்மையே அடிமைகளாக்கிக் கொள்ளமாட்டோம். நாம் தலைவர்களையும் விரும்போம்; சீடர்களையும் விரும்போம். ஒவ்வொருவனும் இலஞ்சத்துக்காளாகாத உறுதிமொழிகளையும், அச்சுறுததல்களுக்குக் கவலைப்படாத தன்மையையும், தனக்கும் தன்னுடைய கொள்கைக்கும் உண்மையாக நடத்திக் கொள்ளும் பண்பையும்கொண்டு விளங்கவேண்டும் என்பதே நமது விருப்பம். கொடுங்கோலன் மண்ணிலேயோ அல்லது விண்ணிலேயோ இருப்பதை நாம்விரும்பவில்லை.

மூடநம்பிக்கை, ஏமாற்றுதல்களையும் வஞ்சித்தல்களையும், கனவுகளையும் காட்சிகளையும், சடங்குகளையும் கொடுமைகளையும், பக்தியையும் பைத்தியக்காரத் தனத்தையும் பிச்சைக்காரர்களையும் போக்கிரிகளையும், குற்றஞ் சுமத்தல்களையும் வழிபாட்டுரைகளையும், மதத் தத்துவத்தையும், சித்ர வதையையும், பரிதாபத்தையும் வறுமையையும், மகான்களையும் அடிமைகளையும், சடங்குகளையும் வேத மந்திரங்களையும், நோயையும் சாக்காட்டையும் நமக்கு அளித்துள்ளது என்பதை நாம் அறிவோம் !

மதிப்பிடத்தக்கப் பொருள்களனைத்தையும், அறிவியல் நமக்கு அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அறிவியல் ஒன்றுதான் நாகரிகத்தைக் கற்பிக்கும் கருவியாகும். அது அடிமையை விடுதலைப்படுத்தியுள்ளது ; நிர்வாணமாயிருந்தவர்களுக்கு உடை உடுத்தியுள்ளது; பசித்திருந்தவர்களுக்கு உணவு வழங்கியுள்ளது; வயதை நீடிக்கச் செய்துள்ளது; நமக்கு வீடுகளையும் குளிர் காயும் இடங்களையும் அளித்திருக்கிறது; படங்களையும் புத்தகங்களையும் தந்திருக்கிறது; கப்பல்களையும் நீராவி வண்டிகளையும் தந்திருக்கிறது; நிலவழித் தந்திகளையும் நீர்வழித் தந்திகளையும் கொடுத்திருக்கிறது; எண்ணற்ற உருளைகளை எப்பொழுதும் உருட்டிக்கொண்டிருக்கும் பொறிகளை அளித்திருக்கிறது; காட்டுமிராண்டியின் மூளையிலிருந்து உதித்த பயங்கரப் பிராணிகளையும் பேய்-பூதம்-பிசாசுகளையும் இறக்கைகெண்ட தேவதைகளையும் அழித்திருக்கிறது!

அறிவியல்தான், உண்மையான உதவிபுரியக்கூடிய ஏதுவாகும். அதுதான் ஆணவத்தை அகற்றி நாணயத்தைப் புகுத்தும்; எல்லா மூட நம்பிக்கைகளையும் தள்ளிவிட்டு உண்மைபேசும் தன்மையைப் புகுத்தும் அது, பயன் படத்தக்கவைகள் எவை என்பதை மதத்திற்குச் சொல்லிக் கொடுக்கும். அது, அழுத்தமான மூடநம்பிக்கை எந்த உருவில் அமைந்திருந்தாலும், அதனை அழித்துவிடும். அது, சிந்தனையற்ற பக்திக்குமேல், சிந்தனையுள்ள ஐயப்பாட்டை வைக்கும். அது, புரோகிதர்கள்– மதவாதிகள்–மகான்கள் ஆகியோர்க்குப் பதிலாகத் தத்துவாசிரியர்கள்–சிந்தனையாளர்கள் கற்றறிந்தவர்கள் ஆகியோரை நமக்கு அளித்திருக்கிறது அது, வறுமையையும் குற்றத்தையும் அகற்றும்; எல்லாவற்றையும்விட சிறந்ததும், உயர்ந்ததும் மதிப்பு வாய்ந்ததுமான செயல், அது உலகம் முழுமைக்கும் விடுதலை வழங்கும் என்பதேயாகும்!

முடிவுற்றது