மதமும் மூடநம்பிக்கையும்/கடவுள் அருளியதா கவைக்கு உதவாததா

மூடநம்பிக்கை 9


கடவுள் அருளியதா கவைக்கு உதவாததா!

இயற்கைக்கு மேலான ஒன்றாகிய இயற்கையை மீறிய ஆற்றலிடத்து அதாவது கடவுளிடத்து நம்பிக்கையுடையவர்கள், 'கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள்' என்று சிலபல நூல்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூல்கள் எல்லா உண்மைகளையும் உள்ளடக்கிக் கொண்டிருப்பதாக அவர்களால் கருதப்படுகின்றன. அவைகள்,அவர்கள் கருத்துப்படி நம்பவேண்டியவைகளாகும். அவைகளை எவனொருவன் மறுக்கிறானோ அவன் எல்லையற்ற காலம் வரையில் துன்பம் நுகரும்படி தண்டிக்கப்படுவான். அந்த நூல்கள் மனித பகுத்தறிவுக்கு ஒத்துவரவேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டதல்ல, அவைகள் பகுத்தறிவுக்கு அப்பா ற்பட்டவை மனிதன் எவற்றை 'உண்மைகள்'என்று கருதுகிறானோ. அந்த உண்மைகளைப் பற்றி அவைகளுக்குக் கவலையில்லை. அந்த நூல்களோடு ஒத்துவராத உண்மைகள் தவறானவைகள் என்றே கருதப்படும். அந்த நூல்கள் மனிதனுடைய அனுபவத்தோடும், மனிதனுடைய பகுத்தறிவோடும் தொடர்புபடாது. தனித்து நிற்பனவாகும்.

கடவுளால் உரைக்கப்பட்டதாகக் கருதப்படும் நமது நூல்கள் "பைபிள்" என்ற பெயரைப் பெறுகின்றன. இந்தக் கடவுளருளிய நூலை எவன் படிக்க நேரிடுகிறானோ அவன், இதில், முன்னுக்குப் பின் முரண்பாடுகள், தவறுகள் இடைச் சேர்க்கைகள் ஆகியவற்றைக் கண்டு, தன்னுடைய அமைதியான உயிரை வாட்டி வதைத்துக்கொள்ள வேண்டியவனாவான். அவன் இதைப் படிக்கும்போது, சிந்தித்துப் பார்க்கவோ, பகுத்தறிந்து பார்க்கவோ அவனுக்குச் சிறிதும் உரிமை கிடையாது. இதை நம்ப வேண்டியதுதான் அவன் செய்ய வேண்டிய கடமையாகும்.

கோடிக்கணக்கான மக்கள், இந்த நூலைப்படிப்பதிலும், முன்னுக்குப் பின்னுள்ள முரண்பாடுகளைப் பொருத்திக் காண்பிப்பதிலும், பொருளற்றவைகளைத் தெளிவாக்குவதிலும், அபத்தமானவைகளை விளக்கிக் காட்டுவதிலும் தங்கள் வாழ்நாட்களை வீண் நாட்களாக ஆக்கியிருக்கிறார்கள். இப்படிச் செய்யும்போது அவர்கள், ஒவ்வொரு குற்றத்திற்கும், ஒவ்வொரு கொடுமைக்கும் சமாதானம் கூறிக் கொள்கிறார்கள். இதிலுள்ள முட்டாள் தனங்களில், அளவிடற்கரிய அறிவுடைமை இருப்பதாகக்கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்கள். கடவுள் தன்மை கொண்ட வாக்கியங்களிலிருந்து, நூற்றுக்கணக்கான கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த இரண்டு வாசகர்களும் இதன் பொருளை ஒருபடியாக ஒத்துக்கொண்டார்கள் என்று சொல்லுவதற்கில்லை. ஆயிரக்கணக்கானவர்கள் ஹிபுரு, கிரேக்கம் முதலிய மொழிகளைக் கற்றறிந்திருக்கிறார்கள்; காரணம் பழைய-புதிய வேதங்களை, அவை முதலில் எழுதப்பட்ட அந்த மொழிகளிலேயே படித்துத் தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது எண்ணம், அவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகப் படித்தார்களோ, அவ்வளவுக் கவ்வளவு அவர்கள் ஒருவரோடொருவர் வேறுபட்டுக் காணப்பட்டார்கள். இந்த ஒரே நூலில் அவர்கள் இரு வேறுபட்ட கருத்துக்களையும் நிரூபித்துக் காட்டுவர்: ஒவ்வொருவரும் அழிந்து படவேண்டும் என்பதையும் காட்டுவர். எல்லோரும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும் காட்டுவர்; இதில் அடிமைத்தனம் ஆண்டவன் சம்மதம் பெற்றது என்பதும் இருக்கும். எல்லோரும் உரிமையோடு வாழவேண்டும் என்பதும் இருக்கும். பல தார மணம் உரிமையின் பாற்பட்டது என்பதும் இருக்கும். ஒரு மனிதன் ஒரு மனைவிக்கு மேல் கொண்டிருக்கக்கூடாது என்பதும் இருக்கும்; ஆற்றல்களெல்லாம் ஆண்டவன் கட்டளையால் இருக்கின்றன என்பதும் இருக்கும். இருக்கும் ஆற்றல்களை மாற்றவும், அழிக்கவும் மனிதர்கள் உரிமை படைத்தவர்கள் என்பதும் இருக்கும்; மனிதனுடைய நடவடிக்கைகளெல்லாம் முன்கூட்டியே எழுதப்பட்டவை எல்லையற்ற காலந்தொட்டு இருந்துவருபவை என்பதையும் காட்டுவர். மனிதன் சுயேச்சை கொண்டவன் என்பதும் இருக்கும்; இழிந்த மதத்தினர் எல்லோரும் அழிந்துபடுவார்கள் என்பதும் இருக்கும். இழிய மதத்தினர் எல்லோரும் காப்பாற்றப்படுவார்கள் என்பதும் இருக்கும்; இயற்கை காட்டும் ஒளி வழி வாழ்வோர் எல்லையில்லாத் துன்பங்களை ஏற்பர் என்பதும் இருக்கும், தண்ணீர் தெளிக்கப்பட்டு 'ஞான ஸ்நானம்' செய்யவேண்டும் என்பதும் இருக்கும்; 'ஞான ஸ்நானம் பெறாமல் உயிர் உய்வதற்கு வழிஇல்லை என்பதும் இருக்கும், 'ஞானஸ்நானத்தால் பயனில்லை என்பதும் இருக்கும்; கடவுளின் தந்தை-மகன்-பூதம் மூன்று தன்மையையும் நம்பவேண்டும் என்பதும் இருக்கும். தந்தைக் கடவுளின் தன்மையை மட்டும் நம்பினால் போதும் என்பதும் இருக்கும்; 'ஹீபுருக் குடியானவர்' கடவுளாக இருந்தார் என்பதும் இருக்கும், அவர் அரை மனிதர், அவருடைய உண்மையான தந்தையாக இல்லாதவரும், ஆனால் தந்தை என்று சொல்லப்படுபவருமான ஜோஸ்பின் மூலமாக டேவிட் குருதியில் அவர் தோன்றியவர், ஆதலால் கிருத்துவைக் கடவுள் என்று நம்பவேண்டிய அவசியமில்லை என்பதையும் காட்டுவர்; அவருக்கு முன்னால் புனிதபூதம் வந்ததை நீங்கள் நம்பவேண்டும் என்பதையும் காட்டுவர். அதனை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதனால் ஒரு வேறுபாடும் தோன்றாது என்பதையும் காட்டுவர்; ஞாயிற்றுக்கிழமையைப் புனித நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதையும் காட்டுவர், கிருத்து அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்பதையும் காட்டுவர்; கிருத்து தேவாலயம் ஒன்றை நிறுவினார் என்பதையும் காட்டுவர், அவர் எந்த தேவாலயத்தையும் நிறுவவில்லை என்பதையும் காட்டுவர்; இறந்து பட்டவர்களெல்லாம் எழுப்பப்படுவார்கள் என்பதையும் காட்டுவர், அப்படி எழுப்புதல் என்பது இல்லை என்பதையும் காட்டுவர்; கிருத்து மீண்டும் வருவார் என்பதையும் காட்டுவர், அவர் தமது கடைசி வருகையை முடித்துவிட்டார் என்பதையும் காட்டுவர், கிருத்து நரகத்திற்குச் சென்று, அங்கு சிறையலிருக்கும் ஆவிகளுக்கு உபதேசம் புரிந்தார் என்பதையும் காட்டுவர். அவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை என்பதையும் காட்டுவர்: பூதங்களெல்லோரும் நரிகத்திற்குப் போவார்கள் என்பதையும் காட்டுவர். இல்லை, அவர்களெல்லோரும் மோட்சத்திற்குப் போவார்கள் என்பதையும் காட்டுவர்; பைபிளில் சொல்லப்பட்ட அதிசயங்களெல்லாம் செய்து காட்டப்பட்டன என்பதையும் காட்டுவர், அவைகளில் சில செய்து காட்டப்படவில்லை, ஏனென்றால் அவை சிறுபிள்ளைத் தனமாகவும், முட்டாள் தனமாகவும், மடத்தனமாகவும் இருக்கின்றன என்பதையும் காட்டுவர், பைபிளிலுள்ள எல்லாப் பகுதிகளும் கடவுளால் சொல்லப் பட்டன என்பதையும் காட்டுவர், அவைகளில் சில கடவுளால் சொல்லப்படாதவை என்பதையும் காட்டுவர்; செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரித்துக் காணும்போதும், ஒரே பொதுவான தீர்ப்பு இருக்கவேண்டும் என்பதையும் காட்டுவர், பொதுப்படையான தீர்ப்பு என்று ஒரு பொழுதும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் காட்டுவர்; ரொட்டித்துண்டும் திராட்சை ரசமும் கடவுள் சதையாகவும் குருதியாகவும் மாறுகின்றன என்பதையும் காட்டுவர். அவைகள் அப்படி மாறவில்லை என்பதையும் காட்டுவர்; கடவுளின் தந்தை –மகன்–பூதம் ஆகிய முத்தன்மையுருவம் படைத்தவர் என்பதையும் காட்டுவர், கடவுளுக்குச் சதையோ இரத்தமோ இல்லை என்பதையும் காட்டுவர், பாபங்களைக் கழுவுமிடம் ஒன்று உண்டு என்பதையும் காட்டுவர் அப்படி ஒரு இடமும் இல்லை என்பதையும் காட்டுவர்; 'ஞானஸ்நானம்' செய்யப்படாத குழந்தைகள் அழிந்துபடும் என்பதையும் காட்டுவர். அவைகள் காப்பாற்றப்படும் என்பதையும் காட்டுவர்; சீடர்களின் கோட்பாட்டை நாம் நம்பவேண்டும் என்பதையும் காட்டுவர், சீடர்கள் ஒரு கோட்பாட்டையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் காட்டுவர்; புனிதபூதந்தான கிருத்துவின் தந்தையாகும் என்பதையும் காட்டுவர், ஜோஸப்பே கிருத்துவின் தந்தையாவார் என்பதையும் காட்டுவர்; கடவுள் விரோதிகள் கொல்லப்பட வேண்டும் என்பதையும் காட்டுவர்; தீமையை நீங்கள் எதிர்க்கக்கூடாது என்பதையும் காட்டுவர், நம்பாதவர்களை நீங்கள் கொல்ல வேண்டும் என்பதையும் காட்டுவர், உங்களுடைய பகைவர்களிடம் நீங்கள் அன்பு காட்டவேண்டும் எனபதையும் காட்டுவர்; நீங்கள் நாளைக்கு ஒன்று வேண்டுமே என்று எண்ணக்கூடாது. என்பதையும் எடுத்துக்காட்டுவர், தொழில் நடத்திச் சம்பாதித்துச் சேர்ப்பதிலே கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதையும் காட்டுவர்: உங்களிடத்திலுள்ளதைக் கேட்பவர்களுக்கெல்லாம் கொடுங்கள் என்பதையும் காட்டுவர், தனது வீட்டுக்கு வேண்டியதைச் சேர்த்துக்கொள்ளாதவன், மதாதரியைக் காட்டிலும் தாழ்ந்தவன் என்பதையும் காட்டுவர் !

இந்த எல்லாக் கோட்பாடுகளையும், இந்த எல்லா முரண்பாடுகளையும் பாதுகாக்கவேண்டிய, ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன: இலட்சக்கணக்கான விரிவுரைகள் ஆற்றப்பட்டிருக்கின்றன; கணக்கற்ற வாள்கள் குருதியில் தோய்த்தெடுத்துச் சிவப்பாக்கப்பட்டிருக்கின்றன; ஆயிரமாயிரம் இரவுகள், மாறுபட்டவர்களை எரித்த கொள்ளிக் கட்டைகளின் தீயொளியால், வெளிச்சமாக்கப்பட்டிருக்கின்றன!

பல நூற்றுக்கணக்கான விளக்கவுரைக்காரர்கள். வெளிப்படையாகத் தெரியக்கூடியவைகளைத் தத்துவார்த்தம் பொதிந்தனவாகவும், ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்தனவாகவும் செய்து காட்டுகிறார்கள். நாட்களையும், பெயர்களையும், எண்களையும், வழிவழிமுறைப் பட்டியலையும், மனித அறிவுக்கு எட்டாதனவாகக் கடவுள் தன்மை நிறைந்தனவாக அவர்கள் ஆக்கிக் காட்டியுள்ளார்கள். அவர்கள், கவிக்கற்பனையை மிகச் சாதாரண நிலைமைகளாகவும், கட்டுக்கதைகளை வரலாறுகளாகவும், கற்பனை உருவங்களை முட்டாள் தனமானவையும் நடக்கமுடியாதனவும் ஆன உண்மைகளாகவும் செய்துள்ளார்கள். அவர்கள் புராணக் கதைகளோடும் அசரீரி வாக்குகளோடும் கடவுள் காட்சிகளோடும் கனவுகளோடும், ஏமாற்றுக்களோடும் தவறுகளோடும், கற்பனைச் செய்திகளோடும், அதிசயங்களோடும், அறியாதவர்களின் தவறுகளோடும் பைத்தியக்காரர்களின் கூற்றுக்களோடும், நோய் கொண்டவரின் உளறல்களோடும் மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கான புரோகிதர்களும், இந்தக் கடவுளருளிய நூலில் பல அதிசயங்களைத் தாங்களாகவே சேர்த்துள்ளார்கள்; விளக்கங் கொடுப்பதன் மூலமும், முட்டாள் தனத்தின் அறிவுடமையைக் காண்பிப்பதன் மூலமும், அறிவுடைமையின் முட்டாள் தனத்தைக் காண்பிப்பதன் மூலமும், கொடுமையின் அருள் திறத்தைக் கூறுவதன் மூலமும், நடக்கமுடியாதவைகளின் நடக்கக்கூடிய தன்மையை விளக்குவதன் மூலமும் பற்பல அதிசயங்களைப் புதிதாகச் சேர்த்துள்ளார்கள்.

மதவாதிகள் பைபிளை ஒரு ஆண்டையாகவும், மக்களை அவரின் அடிமைகளாகவும் ஆக்கினார்கள். இந்த நூலை வைத்துக்கொண்டு அவர்கள் அறிவின் பல்வேறு திறங்களையும், மனிதனின் இயற்கையான மனிதத் தன்மையையும் அழித்துவிட்டார்கள். இந்த நூலை வைத்துக்கொண்டு, அவர்கள், மனித இதயங்களிலிருந்த பரிவைப் போக்கிவிட்டார்கள்; நீதியும் நேர்மையும் கொண்ட கருத்துக்களையெல்லாம் தாழ்த்திவிட்டார்கள்; அச்சம் என்னும் இருட்டறையில் மனித உயிர்களைச் சிறை அடைத்துவிட்டார்கள்; நாணயமாக ஐயப்படுவதைக் குற்றம் என்று செய்துவிட்டார்கள் !

அச்சத்தின் காரணமாக, இவ்வுலகம் ஏற்ற துன்பங்களின் அளவைச் சிந்தித்துப் பாருங்கள்! மனங்குழம்பிய வெறியர்களாக விரட்டப்பட்ட கோடிக்கணக்கான மக்களை, எண்ணிப் பாருங்கள்! பயங்கரமானவைகளாகத் தீட்டிக் காட்டப்பட்ட இரவுகளைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள்; அச்சமூட்டும் பிசாசுகளாலும், பறந்துகொண்டும், ஒடிக்கொண்டும், ஊர்ந்துகொண்டும் இருந்த பேய்களாலும், படமெடுத்துச் சீறி எழும் பாம்புகளாலும், கொடூரமான எரியும் கண்களோடு உருவமற்று விளங்கிய கொடிய பிசாசுகளாலும் நிரப்பப்பட்ட இரவுகளைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் !

இறப்பைப்பற்றிய அச்சம், கால எல்லையற்ற துன்பத்தைப் பற்றிய அச்சம், நரக நெருப்பிலும் நரகச் சிறையிலும் என்றென்றும் போட்டுப் பழிவாங்குவது பற்றிய அச்சம், நீங்காத நாவறட்சி பற்றிய அச்சம், நீங்காத வருத்தம் பற்றிய அச்சம், செருமுதலும் பெருமூச்செறிதலும் பற்றிய அச்சம், வலி தாங்காமல் கதறும் கூச்சல் பற்றிய அச்சம், எல்லையற்ற வலியினால் முணுமுணுப்பது பற்றிய அச்சம் ஆகிய பல்வேறு வகை அச்சங்களைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்!

கெட்டிப்பட்ட இதயங்கள், உடைந்த நெஞ்சுகள், இழைக்கப்பட்ட கொடுமைகள், தாங்கிக்கொள்ளப்பட்ட வேதனைகள், இருட்டடையச் செய்யப்பட்ட வாழ்க்கைகள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் !

கடவுள் அருளியதாகச் சொல்லப்படும் இந்த பைபிள், கிருத்தவ உலகத்திற்கு ஒரு சீர்கேடாக இருந்து வருகிறது, இருக்கிறது; இது கடவுளருளியதாகக் கருதப்படும் காலம் வரையிலும், அப்படியேதான் இருந்து தீரும்!