மதமும் மூடநம்பிக்கையும்/மூட நம்பிக்கையின் விளைவு

மூடநம்பிக்கை 8


மூடநம்பிக்கையின் விளைவு

மூடநம்பிக்கை செய்யும் தீங்குதான் என்ன? கட்டுக் கதைகளையும், பழங்கதைகளையும் நம்புவதால் ஏற்படும் தீங்குதான் என்ன?

அடையாளங்களையும் அதிசயங்களையும், தாயத்துக் களையும், மந்திரங்களையும், விதியையும், அற்புதங்களையும் கடவுள்களையும், பூதங்களையும், மோட்சங்களையும், நகரங்களையும், நம்புவது, மனிதனின் மூளையைக் குழப்பிவிடுகிறது உலகை ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்றுகிறது; உள்ளத்திலிருக்கும் உறுதிப்பாடுகளையெல்லாம் அகற்றி விடுகிறது; அனுபவத்தை ஒரு கட்டுப்படுத்தும் வலையாக ஆக்கிவிடுகிறது; காரண காரியத்திற்கிடையேயுள்ள அன்புத்தொடர்பை அறுத்து விடுகிறது: இயற்கையிலுள்ள ஒருமைப்பாட்டைக் குலைக்கிறது; மனிதனை ஒரு நடுக்கங் கொண்ட வேலைக்காரனாகவும், அடிமையாகவும் மாற்றுகிறது. இந்தநம்பிக்கையோடு இருந்தால், இயற்கை அறிவு நாம் கடைபிடிக்க வேண்டிய வழியைத், தெளிவாகக் காட்டுவதில்லை! காணப்படாத ஆற்றல்களுக்கு முன்னால், இயற்கை ஒரு பொம்மையாகவே இருக்கிறது! இயற்கைக்கு மீறிய மந்திரக்கடவுள் தம்முடைய மந்திரக்கோலால், உண்மையைத்தொடுகிறார்; அந்த உண்மை மறைந்துவிடுகிறது! காரணங்களில்லாமல் காரியங்கள் நிகழ்கின்றன; காரியங்கள் இயற்கைக் காரணங்கள் எல்லாவற்றினின்றும் தனித்து வாழ்கின்றன! ஏமாற்றம் அரசனாக வீற்றிருக்கிறது அடிப்படை போய்விட்டது! கோபுரம் காற்றில் மிதக்கிறது! பண்புகளிடையிலோ அல்லது உறவுகளிடையிலோ அல்லது முடிவுகளிடையடையிலோ ஒரு ஒற்றுமை கிடையாது! பகுத்தறிவு நாடு கடக்கிறது; மூடநம்பிக்கை முடிசூட்டிக் கொள்கிறது;

இதயம் இறுகுகிறது; மூளை பலவீனமாகிறது!

இயற்கையை மீறிய ஆற்றலின் பாதுகாப்பை அடையவேண்டும் என்ற முயற்சியில் மனிதனுடைய ஆற்றல் களெல்லாம் கொன்னே கழிக்கப்படுகின்றன. நாணயமான உழைப்பு – ஆராய்ச்சி – அறிவின் முயற்சி – நோக்கு – அனுபவம் ஆகியவற்றின் இடங்களைக் கொடுமை – சடங்கு – வழிபாடு – பலி – வழிபாட்டுரை ஆகியவைகள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன; முன்னேற்றம் என்பது முடியாத தொன்றாக ஆகிவிட்டது.

மூடநம்பிக்கை, விடுதலையுணர்ச்சியின் பகையாகவே எப்பொழுதும் இருந்துவருகிறது; எப்பொழுதும் இனியும் இருந்துவரும்.

மூட நம்பிக்கைதான், எல்லா கடவுள்களையும் தேவதை களையும் உண்டாக்கிற்று; எல்லா பூதங்களையும், பேய்களையும் உண்டாக்கிற்று; எல்லாப் பிசாசுகளையும், மாந்திரீகர்களையும் உண்டாக்கிற்று; நமக்குக் குறி சொல்வோரையும், அவதார புருஷர்களையும், தேவதூதர்களையும் கொடுத்தது; வானவெளியில் மோட்சஉலகின் அறிகுறிகளையும் அதிசயங்களையும் நிறையச் செய்தது; காரண காரியத்திற்கிடையே இருந்த தொடர்புச் சங்கிலியை அறுத்தது; அற்புதங்களும் பொய்களும் நிறைந்ததான மளித வரலாற்றை எழுதிற்று மூடநம்பிக்கை பாதிரிமார்களையும் குருமார்களையும் போதகர்களையும் புரோகிதர்களையும், ஆண் துறவிகளையும், பெண் துறவிகளையும், பிச்சை எடுக்கும் மந்திரக்காரர்களையும், குற்றம் புரியும் மகான்களையும், மதவிளக்கங் கூறுவோரையும், மதவெறி கொண்டோரையும், 'அப்படிப்பட்டவர்'களையும், 'இப்படிப்பட்டவர்'களையும் ஏற்படுத்திற்று! மூட நம்பிக்கை மனிதர்களை, விலங்குகள் - கற்கள் ஆகியவற்றின் முன்னால் மண்டியிட்டு விழும்படி செய்தது; பாம்புகளையும், மரங்களையும், காற்றில் வாழும் பைத்தியக்கார பிசாசுகளையும் வணங்கும்படி அவர்களைத் தூண்டியது; பொன்னும் உழைப்பும் வீணாகும்படி அவர்களுக்குத்தப்புவழி கற்பித்தது குழந்தைகளின் குருதியை அவர்கள் சொரியும்படி செய்தது தீச்சுழலில் குழந்தைகளைத் தள்ளி அவர்கள் கொளுத்தும் படிசெய்தது! மூட நம்பிக்கை, எல்லாவித மடாலயங்களையும் ஈசுவரன் கோயில்களையும் கட்டிற்று; எல்லா வகை மாதா கோயில்களையும், மசூதிகளையும் கட்டிற்று; உலகத்தில் தாயத்துக்களையும் மந்திரங்களையும் கொண்டுவந்து நிரப்பிற்று; கடவுள் பொம்மைகளையும் கடவுள் உருவச்சிலைகளையும் கொண்டுவந்து சேர்த்தது; புனித எலும்புகளையும் பரிசுத்த மயிர்களையும் கொண்டுவந்து காட்டிற்று; மதத் தியாகிகளின் குருதியையும் அவர்களின் கிழிந்த துணிகளையும் கொண்டுவந்து வைத்தது;மனிதர்களின் உடலிலிருந்து பேய்களை விரட்டும் என்று சொல்லி மரத்துண்டுகளைக் கொண்டுவந்து நிரப்பிற்று! மூட நம்பிக்கை,சித்ரவதைக்கான கருவிகளைக் கண்டுபிடித்து, அவற்றைப் பயன்படுத்தச் செய்தது; ஆடவரையும் பெண்டிரையும்உயிரோடு வைத்துச் சித்ரவதைக்கு ஆளாக்கியது; கோடிக்கணக்கான மக்களுக்கு விலங்குகளைப் பூட்டிற்ற ; நூறாயிரக்கணக்கான வர்களை நெருப்பிலிட்டு அழித்தது! மூடநம்பிக்கை பைத்தியக்காரத்தனத்தை அந்தராத்மாவின் ஆலோசனை என்று தவறாக எடுத்துக் கொண்டது; பைத்தியக்காரர்கள் உளறுவதை அசரீரிவாக்காக, எண்ணிக்கொண்டது; மகான்கள் மனங்குழம்பிக் கூறுவதை ஆண்டவனின் அறிவு என்று கருதிக்கொண்டது; மூட நம்பிக்கை, நலம்புரிவோரைச் சிறையிலடைத்தது; சிந்தனையாளர்களைச் சித்ரவதை செய்தது; உடலைச் சங்கிலியால் பிணைத்தது; உள்ளத்திற்கு விலங்குகளிட்டது; பேச்சுரிமை முழுவதையும் அழித்தது! மூடநம்பிக்கை எல்லாவித வழிபாட்டுரைகளையும், சடங்கு முறைகளையும் நமக்கு அளித்தது; கீழே விழுதல் முழங்காற் படியிடுதல், வணங்கி நிற்றல் போன்றவைகளெல்லாம் கற்றுக்கொடுத்தது; மக்களை மக்களே வெறுப்பதற்கும் மகிழ்ச்சியை அழிப்பதற்கும், மக்களின் உடலில் காயங்களை உண்டுபண்ணுவதற்கும், புழுதியில் கிடந்து புரளுவதற்கும் மனைவியரையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடுவதற்கும் உடன் வாழ்வோரை வெறுத்து ஒதுக்குதற்கும், பயனற்ற நோன்பிலும் வழிபாட்டுரையிலும் வாழ்நாட்களைக் கழிப்பதற்கும் கற்றுக்கொடுத்தது! மூட நம்பிக்கை, மனிதாபிமானமாவது மிகக்கீழானது, தாழ்ந்தது, கெட்டது என்று கற்றுக்கொடுத்தது; தந்தையார்களைக் காட்டிலும் பாதிரிமார்கள் தூய்மையானவர்கள் என்றும், தாய்மார்களைக் காட்டிலும் பெண் துறவிகள் புனிதமானவர்கள் என்றும் கற்றுக்கொடுத்தது: உண்மையைக் காட்டிலும் பக்தி நம்பிக்கையே உயர்ந்தது என்று கற்றுக்கொடுத்தது; ஏமாற்றுத்தனம் மோட்சத்திற்கு அனுப்பிவைக்கும் என்று கற்றுக்கொடுத்தது; ஐயப்படுவது நரகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் வழிஎன்று கற்றுக்கொடுத்தது; அறிவை விட நம்பிக்கையே சிறந்தது என்று கற்றுக்கொடுத்தது; எதற்கும் சான்று கேட்பது ஆண்டவனைப் பழிப்பதாகும் என்று கற்றுக்கொடுத்தது! மூடநம்பிக்கை முன்னேற்றத்திற்கு எப்பொழுதும் பகையாகவே இருந்து வருகிறது. எப்பொழுதும் பகையாகவே இருந்துவரும்; கல்வியின் எதிரியாக எப்பொழுதும் இருந்துவருகிறது: வரும்; உரிமையின் கொலையாளியாக எப்பொழுதும் இருந்து வருகிறது,வரும்! மூடநம்பிக்கை அறிந்த ஒன்றை அறியாத ஒன்றிற்கும், நிகழ்காலத்தை எதிர்காலத்திற்கும், இந்த உண்மை உலகத்தைக் கண்டறியாத வருங்கால உலகத் திற்கும் பலியிட்டுவிடுகிறது. மூடநம்பிக்கை, சுயநலம் நிறைந்த ஒரு மோட்ச உலகத்தையும் பழிக்குப்பழிவாங்கும் ஒரு நரக உலகத்தையும் நமக்கு அளித்திருக்கிறது! மூட நம்பிக்கை உலகில் வெறுப்பையும், போரையும், குற்றத்தையும் மிகக் கீழ்த்தரமான கொடுமையையும், மிக அருவருப்பான கர்வத்தையும் நிரப்பி வைத்தது! மூட நம்பிக்கை, உலகம் முழுவதுமுள்ள அறிவியலின் ! ஒரே எதிரியாக இருந்து வருகிறது!

மூட நம்பிக்கை என்னும் இந்தப் பயங்கர விலங்கினால், நாடுகளும், இனங்களும் மிகவாக அழிக்கப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாகக் கடவுளின் நம்பிக்கைக் குகந்த பிரதிநிதி, இத்தாலியில் வாழ்ந்து கொண்டு வருகிறார். அந்த நாடு தேவாலயங்களாலும், மடாலயங்களாலும், சத்திரங்களாலும், சாவடிகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறது; எல்லாவகையான போதகர்களாலும், புனித மனிதர்களாலும் அந்த நாடு நிரப்பப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுக் காலம், இத்தாலி, பக்திமான்கள் கொடுத்த பொன்னால் செழிப்புற்றிருந்தது. எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே சென்றன; அந்தச் சாலைகளெல்லாம். காணிக்கைகளை ஏந்திய புனித யாத்ரீகர்களால் நிறையப் பெற்றிருந்தன. அப்படியிருந்தும், எல்லாவகையான வழிபாட்டுரை கொண்டிருந்தும். இத்தாலி கீழ்நோக்கி சென்று, வீழ்ச்சியுற்றுச் செத்துப் புதைந்தது என்றுதான் சொல்லவேண்டும்; காவர், மாஜினி, காரீ பால்டி போன்றவர்கள் தோன்றாமலிருந்திருப்பார்களே யானால், அது இதுநேரம் மண்ணோடு மண்ணாய்ப் புதைந்து, கல்லறைக்குள் சென்றிருக்கும் அது வறுமையும் துன்பமும் அடைவதற்குப் புனித கத்தோலிக்க தேவாலயத்திற்கும் கடவுளின் நம்பிக்கையான பிரதிநிதிகளுக்குமே அது மிகவும் கடமைப்பட்டதாகும். அது வாழ்வு நடத்து வதற்கு, மூட நம்பிக்கையின் எதிரிகளுக்கே அது மிகவும் கடமைப்பட்ட தாகும். சில ஆண்டுகளுக்கு முன்புதான், இத்தாலி, ஜியார்டனோ புரூனோவுக்கு, நினைவுச் சின்னம் எழுப்பும் பெருஞ்செயலை செய்து முடித்தது! புரூனோ "மூர்க்க மிருகத்திற்கு" இரையாகிப் போனவர், இத்தாலி பெற்றெடுத்தவர்களிலே மிகச் சிறந்து விளங்கினவர்!

ஸ்பெயின், ஒருபொழுது, உலகில் பாதிப்பகுதிக்குச் சொந்தக்காரியாய்த் திகழ்ந்தது; அவளுடைய பேராசைக் கைகளில் உலகின் பொன்னும் வெள்ளியும் நிறைந்திருந்தன். அந்த நேரத்தில் உலக நாடுகளெல்லாம், மூட நம்பிக்கை என்னும் இருளில் மூழ்கியிருந்தன அந்தச் சமயத்தில் இந்த உலகமானது புரோகிதர்களால் ஆளப்பட்டு வந்தது. ஸ்பெயின் அதன் மதக் கொள்கையை, விடாப்பிடியாகப் பற்றியிருந்தது. சில நாடுகள் சிந்திக்கத் தொடங்கின ஆனால் ஸ்பெயின் மத நம்பிக்கையை இழக்காமலேயே இருந்தது.சில நாடுகளில் புரோகிதர்கள் தங்கள் ஆதிக்கத்தை இழந்தனர்; ஆனால் ஸ்பெயினில் மட்டும் அவர்கள் ஆதிக்கம் அழியவில்லை ஸ்பெயின் செப மாலையை உருட்டிக்கொண்டும், கன்னி மேரியைத் துதித்துக்கொண்டும் இருந்தது. ஸ்பெயின், அதனுடைய ஆன்மாவைக் காப்பாற்றுவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது அது தன்னுடைய பேராசையால், தன்னைத்தானே அழித்துக்கொண்டது. அது இயற்கைக்கு மீறிய ஆற்றலை நம்பியிருந்தது. அது அறிவைப் பற்றி நிற்கவில்லை, மூட நம்பிக்கையையே பற்றி நின்றது. அதனுடைய வழிபாட்டுரைகளெல்லாம் பதிலளிக்கப்படவேயில்லை. மகான்களெல்லாம் இறந்து போயினர். அவர்கள் என்ன செய்வார்கள். பரிதாபத்திற்குரியவர்கள்! கடவுள் தன்மை கொண்ட மேரி யாதொன்றையும் கேட்டாளில்லை. சில நாடுகள் புதிய நாளின் விடியலில் இருந்தன; ஆனால் ஸ்பெயின் மட்டும் இரவிலேயே தங்கியிருந்தது. சிந்தித்த மனிதர்களையெல்லாம், அது தீயைக்கொண்டும் வாளைக்கொண்டும் தீர்த்துக் கட்டியது. மத விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட்டவர்களின் மீது கொலைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் நாளே ஸ்பெயினின் சிறந்த திருவிழா நாளாகும். மற்ற நாடுகள் வளர்ந்து கொண்டு போகும்போது. ஸ்பெயின் மட்டும் தேய்ந்து கொண்டு சென்றது. நாளுக்குநாள் அதனுடைய அதிகாரம் குறைந்து கொண்டே வந்தது; ஆனால் அதனுடைய பக்தி நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே சென்றது குடியேற்ற நாடுகளை, அது ஒன்றன்பின் ஒன்றாக இழந்து கொண்டே வந்தது; ஆனால் அது, தன்னுடைய மதக் கொள்கையைமட்டும் வைத்துக் காப்பாற்றிக் கொண்டேயிருந்தது, சில நாட்களுக்கு முன்புதான், அது தன்னுடைய கடவுளையும், புரோகிதர்களையும், மந்திரங்களையும், தாயத்துக்களையும், புனிதத் தண்ணீரையும், உண்மைச் சிலுவையின் மரத்துண்டுகளையும் நம்பிக் கொண்டு,பெரிய குடியரசு நாட்டின் மீதுபோர்தொடுத்தது பாதிரிமார்கள்: படையினரை வாழ்த்தியனுப்பினர். புனிதத் தண்ணீரைக் கப்பல்கள் மீது தெளித்தனர். அப்படியிருந்தும், அதனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன; அதனுடைய கப்பல்கள் தாக்கப்பட்டு, உடைக்கப்பட்டுக் கொளுத்தப்பட்டன. அது ஆதரவற்ற நிலையை அடையும் போது, நட்புறவு செய்துகொள்ளப் பணிந்து சென்றது. ஆனாலும் அது தன்னுடைய மதக்கொள்கையை அப்பொழுதும் அப்படியே கொண்டிருந்தது; அதனுடைய மூடநம்பிக்கை அழிந்துவிடவில்லை. பரிதாபத்திற்குரிய ஸ்பெயின்! மதத்திற்கு இரையாகி பக்திநம்பிக்கையால் பாழடைந்தது.

போர்ச்சுகல். நாளுக்குநாள் ஏழையாகிச் செத்துக் கொண்டிருக்கிறது; என்றாலும் அது மத பக்தியைப் பற்றிக் கொண்டு நிற்கிறது. அதனுடைய வழிபாட்டுரைகள் விடை யிறுக்கப்பட்டதில்லை; ஆனாலும் அது இன்னமும் அவைகளை ஓதிக்கொண்டிருக்கிறது, ஆஸ்திரியா, கிட்டதட்ட அழிந்து விட்டது; மூடநம்பிக்கைக்கு இரையாகிவிட்டது. ஜெர்மனி இரவின் இருட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடவுள், கெய்ஸரை அதன் அரியணையில் ஏற்றிவைத்துள்ளார். மக்கள் அவனுக்கு அடங்கியே நடக்கவேண்டும். தத்துவாசிரியர்களும் அறிவியல் அறிஞர்களும், ஆண்டவன் 'அனுமதி'யோடு ஆளும் அவ்வரசன் முன்னால் மண்டியிட்டுத் தாழ்ந்துகிடக்கிறார்கள்; அரசன் அவர்களைப்பொம்மைகளாக மதிப்பிடுகிறான்; எல்லாம் மூடநம்பிக்கையின் விளைவு!