மதமும் மூடநம்பிக்கையும்/மூடநம்பிக்கை என்றால் என்ன

மூடநம்பிக்கை 1


மூடநம்பிக்கை என்றால் என்ன?

மூடநம்பிக்கை என்றால் என்ன ?

சான்று கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஒன்றை நம்புவது!

ஒரு அதிசயத்றிற்கு மற்றொரு அதிசயத்தைக் காரணங் காட்டுவது!

உலகம் அதிர்ஷ்டத்தால் அல்லது அந்தராத்மாவால் ஆளப்படுவதாக நம்புவது!

காரணத்திற்கும் காரியத்திற்கும் உள்ள உண்மைத் தொடர்பை அலட்சியப்படுத்துவது!

எண்ணத்தை, நோக்கத்தைக், குறிக்கோளை இயற்கைக்கு அப்பாற்பட்டதாக வைப்பது!

மனமானது பொருளை உற்பத்தி செய்கிறது, அதனை அடக்கி யாண்டுவருகிறது என்று நம்புவது!

பொருளை விட்டுவிட்டு ஆற்றலை மட்டும் நம்புவது: அல்லது ஆற்றலை விட்டுவிட்டுப் பொருளை மட்டும் நம்புவது!

அதிசயச் செயல்கள், மந்திரங்கள், செபங்கள், கனவுகள், ஜோஸ்யங்கள், குறிகள் ஆகியவற்றை நம்புவது!

இயற்கைக்கு மீறிய ஆற்றலை நம்புவது!

மூடநம்பிக்கைக்கு உண்மையான அடிப்படை, அறி நம்பிக்கையின்மீது அதன எழுப்பப்படுகிறது; வெறும் ஆவல் அதன் கும்பமாகும். மூட நம்பிக்கை - அறியாமையின் குழந்தையாகும்; துன்பத்தின் தாயாகும்

கிட்டத்தட்ட எல்லோருடைய மூளையிலும் மூட நம்பிக்கை என்னும் புகைப்படலம் படர்ந்திருக்கவே செய்கிறது.

தட்டுகளைத் துடைத்துக்கொண்டிருக்கிற ஒருத்தி, துடைக்கும் துணியைத் தவறிக் கீழே விட்டுவிட்டால், அவள் உடனே கூறுகிறாள். "இன்று விருந்தினரின் கூட்டம் வரும்" என்று.

துணி கீழே விழுவதற்கும். விருந்தினர்கள் வருவதற்கும் நேரடியான தொடர்பு எதுவும் இல்லை என்பதைப் பெரும்பாலான மக்கள் ஒத்துக்கொள்ளவே செய்வர். கீழே துணி விழும் தன்மை, எங்கேயோ இருக்கின்றவர்கள் உள்ளத்தில், இங்கே வருகை தரவேண்டும் என்ற விருப்பத்தை எவ்வகையிலும் உண்டாக்க முடியாது என்பதைப் பலரும் உணர்வர். துணியைக் கீழே போட்ட குறிப்பிட்ட ஒருத்தியைப் பார்க்க, வருகை தரவேண்டும் என்ற விருப்பத்தை, மற்றவர்கள் உள்ளத்தில் எப்படி ஒரு துணி எழுப்பமுடியும் ? கீழே துணி விழுவதற்கும், பின்னால் நிகழப்போகிற நிகழ்ச்சிகளுக்கும் நடைபெறக்கூடிய தொடர்பு, உறுதியாக, ஒன்றும் இருக்க முடியாது.

ஒரு மனிதன், தற்செயலாகத், தன் இடது தோள் மேலாகத் திங்களைப் பார்க்கிறான் என்றால், அவன் உடனே கூறுகிறான், "இது எனக்குத் துர் அதிர்ஷ்டம்" என்று.

திங்களை இடது தோள் மேலாகப் பார்ப்பதோ அல்லது வலது தோள் மேலாகப் பார்ப்பதோ அல்லது அதனைப் பார்க்காமல் இருப்பதோ திங்களை எந்தவிதத்திலும் பாதிப்பதுமில்லை; உலகிலுள்ள பொருளிடத்துத் திங்களுக்குள்ள ஆக்கத்தையோ அல்லது ஆதிக்கத்தையோ எந்த விதத்திலும் மாற்றப்போவதுமில்லை இடது தோளின் மேலாகப் பார்வையைச் செலுத்துவது, பொருள்களின் இயற்கைப் பண்புகளை, உறுதியாகப் பாதிப்பதில்லை இடது தோளின் மேலாகத் திங்களைப் பார்ப்பவனின் வாழ்க்கையில், சாதாரணமாக ஏற்படக்கூடிய கெட்ட நிலை மைகளுக்கும், இடது தோளின் மேலாகப் பார்ப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நாம் நன்கு அறிகிறோம்.

ஒரு பெண், ஒரு பூவிலுள்ள இதழ்களை எண்ணுகிறாள்; எண்ணும்போது, "ஒன்று, அவன் வருகிறான; இரண்டு, அவன் பார்க்கிறான்; மூன்று, அவன் காதல் புரிகிறான்: நான்கு, அவன் மணம் செய்கிறான்; ஐந்து, அவன் போய் விடுகிறான்" என்று சொல்லுகிறாள்.

உறுதியாக அந்தப் பூ, அந்தப் பெண்ணினுடைய காதலைப் பொறுத்தோ, அல்லது அவளது திருமணத்தைப் பொறுத்தோ, குறியாகக் கொண்டு வளரவில்லை; அதிலுள்ள இதழ்களும் அவைகளைப் பொறுத்து அறுதியிடப்படவில்லை; அவள் அந்தக் குறிப்பிட்ட பூவைப் பறிக்கும் போது, எந்த 'அறிவும்' அவள் முன்வந்துநின்று, அவள் கைக்கு வழிகாட்டியாக அமைவதில்லை. அதுபோலவே, ஒருவரு டைய எதிர்காலம் இன்பகரமாக இருக்குமா, துன்பகரமாக இருக்குமா என்பதை, ஒரு ஆப்பிள் பழத்திலுள்ள விதைகளின் எண்ணிக்கை அறுதியிட்டுக் கூறாது.

ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ஷ்ட—துர் அதிர்ஷ்ட நாட்கள், எண்கள் குறிகள், அடையாளங்கள், நதைகள் என்பவற்றில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பெரும்பாலான மக்கள் வெள்ளிக்கிழமையைத் துர் அதிர்ஷ்டமான நாள் என்று கருதுகிறார்கள். பயணம் புறப்பட, திருமணம் செய்துகொள்ள, ஏதாவது தொழிலில் பங்குபோட அந்த நாள் மிகக் கெட்ட நாள் என்று கருதுகின்றனர். இதற்குச் சொல்லப்படும் ஒரே காரணம் வெள்ளிக்கிழமை துர் அதிர்ஷ்டமான நாள் என்பதாகும்.

கடற்பயணம் புறப்படுதல், காற்றுகளை அல்லது அலைகளை அல்லது நீர் உயர்தல்களை மற்ற நாட்களில் எந்த அளவுக்குப் பாதிக்கிறதோ அந்த அளவுக்குக் குறைவாகவோ அதிகமாகவோ வெள்ளிக்கிழமை என்பதற்காகப் பாதிப்பதில்லை. அப்படியிருந்தும். வெள்ளிக்கிழமை துர் அதிர்ஷ்டமான நாள் என்று கொள்ளப்படுவதற்கு இருக்கும் ஒரே காரணம், 'அப்படிச் சொல்லப்படுகிறது' என்பதுதான்

அதுபோலவே, பதின்மூன்று பேர்கள் உட்கார்ந்து சாப்பிடுவது மிக ஆபத்தானது என்று பெரும்பாலான மக்களால் எண்ணப்படுகிறது. அப்படிப் பதின்மூன்று என்பது ஆபத்தான எண் என்றால் இருபத்தாறு எண்பது அகைப்போல் இருமடங்கு ஆபத்தானதாக ஆகவேண்டும். ஐம்பத்திரண்டு என்பது நான்கு மடங்கு ஆபத்தானதாக இருக்கவேண்டும்

பதின்மூன்று பேர்கள் உட்கார்ந்து சாப்பிட்டால் அவர்களில் ஒருவர் ஓராண்டுக் காலத்திற்குள் இறந்து படுவார் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருடைய உணவு செரிக்கும் தன்மைக்கும், உட்காருவோரின் எண்ணிக்கைக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இருக்க வில்லை; தனிப்பட்டவர்களின் நோய்களுக்கும், எண்ணுக்கும் தொடர்பு இருக்கவில்லை என்பதை நாம் சாதாரணமாக இப்பொழுது அறிகிறோம். பதின்மூன்று பேர்கள் உட்கார்ந்தால் ஒருவர் உறதியாக இறந்துபடுவர் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு எண்ணிக்கையை முக்கியமாக நாம் எடுத்துக்கொண்டோமென்றால் பதின்மூன்று பேர்களைவிடப் பதின் நான்கு பேர்கள் என்பது இன்னமும் அதிகமான ஆபத்தைத் தருவதாகத்தானிருக்க வேண்டும்.

உப்பு வைந்திருக்கும் தட்டைக் கவிழ்த்துவிடுவது என்பது மிகவும் துர் அதிர்ஷ்டமானது. திராட்சைக் குழம்பைச் சிந்துவது என்பது அளவளவு துர் அதிர்ஷ்டமானது அல்ல என்று சொல்லப்படுகிறது

ஏன் உப்புமட்டும் எதிரிடையானதாக மாறவேண்டும்; திராட்சைக் குழம்பு சாதமாக இருக்கவேண்டும்?

படக் கொட்டகையில் ஒன்றைக் கண்ணன் முதலில் நுழைந்தால், மக்களின் எண்ணிக்கை குறையும், படம் ஓடுவது தோல்வியுறும் என்று நம்பப்படுகின்றது.

முதலில் நுழையும் ஒரு மனிதனுடைய கண்பார்வைக் கோளாறு ஒரு சமுதாயத்தின் நோக்கத்தை எப்படி மாற்றிவிடும்? அல்லது சமுதாயத்தின் நோக்கம் எப்படி ஒரு ஒன்றைக் கண்ண னை முதலில் கொட்டசையில் நுழையும்படி செய்யும்? இவைகளுக்குத் தெளிவான விளக்கங்கள் ஒருபொழுதும் கொடுக்கப்பட்டதில்லை. இவ்வாறு சொல்லப்படும் காரணத்திற்கும்-காரியத்திற்கும் நாமறிந்தவரையில் எந்தவகை தொடர்பும் இருப்பதாகத் தெரிய வில்லை!

வெள்ளைக்கல் அணிந்துகொள்வது துர் அதிர்ஷ்டத்தைத்தரும்; சிவப்புக்கல் அணிந்து கொள்வது நலத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. எதிர்காலத்தை இந்தக் கற்கள் எப்படிப் பாதிக்கும்? அவை எப்படிக் காரணங்களை அழித்துக் காரியங்களைத் தோல்வியுறச் செய்யும்? இவற்றின் விளக்கத்தை யாரும் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை!

இப்படியாகப் பல்லாயிரக்கணக்காக அதிர்ஷ்ட-துர் அதிர்ஷ்டப்பொருள்கள், எச்சரிக்கைகள், சகுணங்கள், முன்னறிவுப்புகள் இருக்கின்றன; ஆனால் தெளிவுணர்வும், அறிவுக்கூர்மையும், பகுத்தறிவும் கொண்ட மக்கள் அனைவரும், இவை ஒவ்வொன்றும் அபத்தம் என்றும், முட்டாள் தனமான மூட நம்பிக்கை என்றும் அறிவார்கள்.