மனத்தின் தோற்றம்/கம்பரின் காலம்

16. கம்பரின் காலம்


கம்பரின் காலம் பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. கம்பர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினர் என ஒரு சாராரும், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். இவற்றுள், கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்தே சரியானது. இதற்கு உரிய சான்றுகள் வருமாறு:

கம்பர் சோழ நாட்டினர்; சோழ மன்னரின் அவைக்களப் புலமைத் தொடர்பு உடையவர்; சோழ மன்னர் மூவரின் அவைக்களப் புலவராயும் ஆசானுமாயும் இருந்த பெரும் புலவர் ஒட்டக் கூத்தரோடு முரண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்தவர்; தம் மகன் அம்பிகாபதியைச் சோழன் கொன்றதாலும் பிற காரணங்களாலும் சோழ மன்னனைப் பகைத்துக்கொண்டு சோழ நாட்டை விட்டு வெளியேறியவர்.

மேற்கூறிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு காணுங்கால், கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்து வலுப்பெறும். ஆனால், சிலர், கம்பரும் ஒட்டக் கூத்தரும் ஒரு காலத்தவரல்லர் - அம்பிகாபதி கம்பர் மகன் அல்லன்-என்றெல்லாம் கூறுவர். இது சரியன்று. கம்பரையும் கூத்தரையும் தொடர்புறுத்தியும் கம்பரொடு அம்பிகாபதியைத் தொடர்புறுத்தியும் பல நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. “அள்ளாமல் குறையாது இல்லாமல் பிறக்காது” என்னும் முதுமொழி நூற்றுக்கு நூறு உண்மை யில்லாவிடினும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே. எனவே, கம்பரும் கூத்தரும் ஒரு காலத்தவரே. மறைமலை அடிகளார், ரா. பி. சேதுப்பிள்ளை, ரா. இராகவையங்கார் முதலிய தமிழ் ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்து, கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பதே.

ஒட்டக் கூத்தர், விக்கிரம சோழன் (கி.பி. 1120-1135), இரண்டாங் குலோத்துங்கன் (1136.150), இரண்டாம் இராசராசன் (1151-1163) ஆகிய மூன்று சோழர்க்கும் அவைக்களப் புலவராயிருந்தவர்; இம் மூவர்மேலும் உலா' பாடியவர். இந்த உலா நூல்கள் மூன்றும் 'மூவர் உலா' என்னும் பெயரால் வழங்கப் பெறும். இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நோக்குங்கால், கூத்தரும் அவர் காலத்தவராகிய கம்பரும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண் டினர் என்பது தெளிவுறும்.

'கம்பரும் கூத்தரும் ஒரு காலத்தவர் அல்லர்; எனவே, கம்பர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினரே' என்பவரின் கருத்துப்படி கம்பரையும் கூத்தரையும் காலத்தால் பிரித்து விடினும், கம்பர் ஒன்பதாம் நூள் றாண்டினராகார். இதற்கு உரிய சான்றாவது:

கம்பர் சோழ அரசோடு தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் இறுதியில் முரண்பாடு கொண்டு சோழ நாட்டை விட்டு வெளியேறினார் என்பதையும் பெரும் பாலும்-பலரும் ஒத்துக் கொள்கின்றனர். கம்பர் தொடர்பு கொண்டிருந்த சோழன் பேரரசனாகத்த்ான் இருந்திருக்க வேண்டும். எனவே, கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் எனக் கூற வியலாது. ஏனெனில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ அரசு இருக்கும் இடம் தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்தது. கி.பி. 879-897ஆம் ஆண்டுக் காலத்தவனாகிய அபராசித பல்லவன் காலம்வரை சோழ நாடு பல்லவ அரசின்கீழ் இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவனாகிய விசயாலயச் சோழன் (கி.பி. 850.870) பல்லவர்க்குக் கப்பம் கட்டி ஒரு சிற்றரசனாய் உறையூர்ப் பகுதியில் ஒடுங்கிக் கிடந்தான். அப்போது தஞ்சைப் பகுதியை முத்தரையர் மரபினர் ஆண்டு வந்த னர். நாளடைவில், விசயாலயச் சோழன் முத்தரையரை வென்று தஞ்சைப் பகுதியைக் கைப்பற்றினான்.

விசயாலயனுக்குப் பிறகு அவன் மகனாகிய முதலாம் ஆதித்தச் சோழன் (கி.பி. 871-907) படிப்படியாகப் பல்லவரை வென்று, சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் தன்னுடையனவாக்கிக் கொண்டான். இவனுக்குப் பல ஆண்டுகட்குப் பின்னால், முதலாம் இராசராசன் (985-1014) காலத்தில்தான் சோழ அரசு மிகப் பெரிய வல்லரசாகத் திகழத் தொடங்கியது. இது, மூன்றாம் இராசேந்திரச் சோழன் (1247-1279) காலம் வரையும் நிலைத்திருந்து, பின்னர் வீழ்ச்சியுற்றுப் பாண்டியரால் பற்றப்பட்டது. இந்தச் செய்திகளின் அடிப்படையில் ஒரு முடிவு காண்பாம்:

இறுதிப் பல்லவனாகிய அபராசிதன் 897ஆம் ஆண்டு வரை பல்லவ நாட்டையும் சோழ நாட்டையும் ஆண்டிருக் கிறான். அபராசித பல்லவனைக் கொன்ற முதலாம் ஆதித்தச் சோழன் 907ஆம் ஆண்டுவரை ஆண்டிருக்கிறான். எனவே, சோழப் பேரரசு பிற்காலத்தில் மீண்டும் உருவாகத் தொடங்கிய காலம் கி.பி. 897ஆம் ஆண்டுக்கும் 907ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்துக்குள்ளே யாகும். இந்தக் காலக் கணிப்பு சிறிது முன் பின்னாகவும் இருக்கலாம். இந்த அடிப்படையில் நோக்குங்கால், சோழ அரசோடு பெரிய தொடர்பு கொண்டிருந்த கம்பர் சோழ அரசு ஒடுங்கிக் கிடந்த ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகத் தோன்றவில்லை. ஆனால், சோழ அரசு சிற்றரசா யிருந்தாலும் அரசு அரசுதானே?-ஏன் அக்காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாது?-என்று சிலர் வினவலாம். மற்ற வரலாற்றுச் சூழ்நிலைகளையும் பார்க்க வேண்டுமே! கம்பருக் கும் ஒட்டக் கூத்தருக்கும் இடையே தொடர்புக் கதைகள் பல சொல்லப்படுவதை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. கம்பர் வரலாறு முழுவதையும் கூர்ந்து நோக்குங்கால், அவர், பேரரசுச் சோழர் காலத்தவராகவே தென்படுகிறார்.

ஆனால், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்னும் கொள்கையினர் சிலர், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (கி.பி. 871-907) அரசாண்ட ஆதித்தச் சோழன் காலத்தில் கம்பர் வாழ்ந்தார்; அதனால் அவர் ஆதித்தச் சோழனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில், தம் நூலில், இராமனுடைய முன்னோர் சூரிய, குலத்தில் வந்தவர்கள் என்பதை அறிவிக்கும் இடத்தில், (1 - வரலாற்றுப் படலம் - 3).

“ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்” என்று பாடி ஆதித்தன் பெயரைச் சுட்டியுள்ளார் என்று கூறுவர். ஆதித்தன் என்பதற்குச் ‘சூரியன்’ என்ற பொருள் உண்டு. கம்பர் ஆதித்தச் சோழனை நினைவு கூராமல், இயற்கையாக ‘ஆதித்தன்’ என்று கூறியிருக்கக் கூடாதா? அல்லது தம் தந்தையின் பெயராகிய ‘ஆதித்தன்’ என்பதைத் தந்தையின் நினைவாகத் தம் நூலில் பெய்திருக்கக் கூடாதா? எனவே, இது பொருத்தமான சான்று ஆகாது.

மற்றும், இக்கொள்கையினரால், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்பதற்கு அடிப்படைச் சான்றாக எடுத்துக்காட்டப் படுகின்ற,

“எண்ணிய சகாத்தம் எண்ணுற் றேழின்மேல்
சடையன் வாழ்வு
கண்ணிய வெண்ணெய் கல்லூர் தன்னிலே
கம்பு நாடன்
பண்ணிய இராம காதை பங்குனி
அத்த நாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்
கேற்றி னானே”

என்னும் ஊர் பேர் தெரியாத (அநாமதேயப்) பாடலுக்கு, சில கம்பராமாயண ஒலைச் சுவடிகளின் ஈற்றில் காணப் படுகிற பின் வரும் பாடல் பதில் இறுக்கும். அப்பாடல்:

“ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறொழித்துத்
தேவன் திருவெழுந்துார் நன்னாட்டு-மூவலூர்ச்
சீரார் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
காரார் கா குத்தன் கதை”

என்பதாகும். (சகரர் ஆயிரத்து நூறொழித்து = பன்னிரண்டாம் நூற்றாண்டு; குண ஆதித்தன் சேய் = கம்பர்; காகுத்தன் = இராமன்). இப்பாடல், கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்துடையது.


மற்றொரு சான்று: சோழநாட்டைவிட்டு வெளியேறிய கம்பர், இறுதியாகப் பாண்டிய நாடடைந்து இயற்கை எய்தியதற்குமுன், (தொண்டை நாடு எனப்படும் பல்லவ நாடு சோழர் கைக்கு மாறியதால் அங்கே தங்காமல்) ஆந்திர அரசனாகிய ஓரங்கல் நாட்டுப் பிரதாப ருத்திரனிடம் சென்று சிறிது காலம் தங்கியிருந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது. இந்தப் பிரதாப ருத்திரனும், ஒட்டக் கூத்தரால் உலா பாடப்பெற்ற சோழ மன்னர்களும் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் எனச் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. பிரதாப ருத்திரனோடு தொடர்பு கொண்ட கம்பரும் இக்காலத்தவரே.

எனவே, கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பது விளங்கலாம்.

★ ★ ★