மனத்தின் தோற்றம்/மணிமேகலையில் பழக்க வழக்க மரபுகள்

12. மணிமேகலையில் பழக்க வழக்க மரபுகள்


ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை என்னும் காப்பியக் காலத்தில் பல்வேறு மக்களிடையே இருந்த பழக்க வழக்கங்களையும்-மரபுகளையும் காண்பாம்.

மலர் வனம் புக்க காதை

கடவுளர்க்குத் தூய மலர்

கடவுளர்க்குச் சூட்டும் மலர் தூயதாயிருக்க வேண்டும் என்பது ஒருவகை மரபு. மலர் கொய்து போடும் போதும் போட்ட பின்னரும் மலர்க் குடலையை இடுப்பின் கீழ் தொங்கவிடக் கூடாது என்பர். குளிக்காமல் மலர் கொய்யக் கூடாதென்பதும் ஒரு கொள்கை. மணிமேகலை மலர் தொடுத்த போது, தந்தை கோவலனை எண்ணி அழுத கண்ணிர் மலரில் பட்டுவிட்டதால் வேறு மலர்கள் கொய்து வரும்படி மாதவி மணிமேகலையை மல்ர் வனத்திற்கு அனுப்பினாளாம்.

“மாதர் செங்கண் வரிவனப்பு அழித்துப்
புலர்புநீர் உருட்டிப் பொதியவிழ் நறுமலர்
இலங்கிதழ் மாலையை இட்டுரீ ராட்ட
மாதவி மணிமேகலை முகம் நோக்கித்
தாமரை தண்மதி சேர்ந்தது போலக்
காமர் செங்கையின் கண்ணிர் மாற்றித்
தூநீர் மாலை தூத்தகை யிழந்தது
நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்” (8-15)

என்பது பாடல் பகுதி. மூக்கால் மலரை மோந்து பார்த்தலும் கூடாதாம். கழற்சிங்கர் என்னும் அரசனின் மனைவி கடவுளுக்கு உரிய மலரை எடுத்து மூக்கால் மோந்ததால் செருத்துணை நாயனார் என்பவர் அரசியின் மூக்கை அரிந்து விட்டாராம். இதையறிந்த மன்னர் கழற் சிங்கன் மலரை எடுத்த கையையல்லவா முதலில் வெட்ட வேண்டும் என்று கூறித் தம் மனைவியின் கையை வெட்டி விட்டாராம். இவரும் ஒரு நாயனார். எவ்வளவு கடுமைச் செயல் இது! இது பெரியபுராணக் கதை.

சவகர்லால் நேரு ஒரு முறை காஷ்மீர் சென்றபோது அங்கு ஓரிடத்தில் இருந்த நறு மலர்களை அண்ணல்காந்தி யடிகளிடம் கொண்டுவந்து அளித்துச் சிறப்பு செய்வதற்காக எடுத்தாராம். பின் அவற்றை மூக்கால் மோந்தாராம். அப்போது அவருடைய உதவியாளராக உடன் சென்றிருந்த எச். வி. ஐயங்கார் என்னும் தமிழர், நேருவை நோக்கி, மோந்த மலரை அளிப்பது எங்கள் பக்கத்தில் (தமிழகத்தில்) வழக்கமில்லை என்று கூறினாராம். உடனே நேரு மோந்த மலர்களைக் கீழே போட்டு விட்டு வேறு புது மலர்களை எடுத்துச் சென்றாராம். மோந்ததே கூடாதெனின், கண்ணிர் பட்டது சிறிதும் கூடா தன்றோ!

பெண்கள் தனித்து ஏகாமை

மாதவி மணிமேகலையை மலர் வனம் சென்று வேறு மலர் கொண்டு வருக என்றதும், சுதமதி என்ற தோழி, மணிமேகலையைத் தனியே அனுப்பலாகாது; அவளை ஆடவர் கண்டால் அகலார்; அவர்கள் உள்ளத்தில் காம உணர்வு தோன்றாராயின் பேடிகளாகத்தான் அவர்கள் இருக்கவேண்டும்.

“ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடிய ரன்றோ பெற்றியின் நின்றிடின் (24,25)

எனவே,

“மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்” (42,43)

என்று கூறினாள். அந்தக் காலத்திலும் (எந்தக் காலத்திலும்) பெண்கள் காவலுடன் இயங்க வேண்டியவர்களாக இருந் தனர் என்பது இதனால் பெறப்படும். இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால் பங்குக் காலத்தில், மகளிர் ஆடவர் துணையுடன் செல்லினும், ஆடவரை வீழ்த்தி மகளிரைக் கொள்ளை கொள்பவர் கூட்டம் மிக்கிருக்கிறது என்பதை எண்ணுங்கால் வேதனையாய் உள்ளம் வருந்துகிறது.

மண்ணாமை

சமணத் துறவிகள் குளித்துக் கழுவி உடலைத் தூய்மை செய்வதில்லையாம். இதனை,

“மண்ணா மேனியன் வருவோன் தன்னை” (3.91)

என்னும் பகுதியால் அறியலாம். மண்ணுதல் = குளித்தல் - தூய்மை செய்தல். துணியைத் தூய்மை செய்யும் வண்ணான் என்னும் பெயர்ப் பொருளில் மலையாளத்தில் ‘மண்ணான்’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. இதனை நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த ‘திருஞான சம்பந்தர் திருவந்தாதி’ என்னும் நூலில் உள்ள

“கண்டினம் சூழ்ந்தவளை பிரம்போர் கழுவா உடலம்
விண்டினஞ் சூழக் கழுவின வாக்கிய வித்தகனே” (6)
“குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா உடலம் கழுவின வாக்கிய கற்பகமே” (28)

என்னும் பாடல் பகுதிகளாலும் தெளியலாம். கழுவா உடலம் எனினும் மண்ணா மேனி எனினும் பொருள் ஒன்றே. ஒட்டக் கூத்தரின் தக்க யாகப் பரணியிலும்,

“மண்ணா உடம்பு - வருவோன் தன்னை நோக்கி”(219)

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையுதிர்த்தல் தமக்கு பிடிக்காதவர்கள் பிடிக்காத மொழிகளைப் பேசின், அப்பால் போங்கள் என்று வாயால் சொல்லாமல், கையை அசைத்து அப்பால் போகும்படிக் குறிப்பு காட்டுதல் சமணத் துறவியர்களின் பழக்கமாம். குடிகாரன் ஒருவன் சமணத் துறவி ஒருவரை நோக்கிக் கூறாதன கூறிக் கிண்டல் செய்ய, அவனை அப்புறப்படுத்த அவர் கையசைத்தனாராம். இதனை,

“உண்டு தெளிந்து இவ்யோகத் துறுபயன்
கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்மென
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
உண்மென இரக்குமோர் களிமகன்” (2:100-103)
“மையறு படிவத்து மாதவர் புறத்தெமைக்
கையுதிர்க் கோடலின்...” (5:54,55)

என்னும் பகுதிகள் அறிவிக்கின்றன.

ஐம்படைத்தாலி

இந்தக் காலத்தில் குழந்தைகளைக் காக்க அரையில் என்னென்னவோ கட்டுகின்றனர். அந்தக் காலத்தில் அரை யில் ஐம்படைத் தாலி கட்டினர். காத்தல் கடவுளாகிய திருமாலின் வளை, ஆழி, கதை, வாள், வில் என்னும் ஐந்து படைக் கருவிகளைச் சிறிய வடிவில் பொன்னால் செய்து அரையில் கட்டுவர். இதற்குத்தான் ஐம்படைத் தாலி கட்டுதல் என்பது பெயர்.

“செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்து சின்னீர் ஐம்படை நனைப்ப” (3-137,138)
“அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்” (7.56,57)

என்னும் பாடல் பகுதிகளால் இதனை அறியலாம். மற்றும், சங்க இலக்கியம் முதற்கொண்டு பல்வேறு நூல்களில் இச் செய்தி இடம் பெற்றுள்ளது.

கணவனை இழந்தோர்

அந்தக் காலத்தில், கணவரை இழந்தவர் துயரம் தாளாமல் பெருமூச்சு எறிந்து உயிர் துறப்பராம்; அல்லது தீக்குளிப்பராம்; அல்லது தவநோன்பு கொள்வராம். இதனை,

“காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத்தடங்காது
இன்னுயிர் ஈவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளிஏரி புகுவர்
நளிஏரி புகாஅ ராயின் அன்பரோடு
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர்” (2:42-48)

என்னும் பகுதியால் அறியலாம். இரட்டைக் காப்பியங் களுள் மற்றொன்றான சிலப்பதிகாரத்திலும், கணவனை இழந்தவர் பெருமூச்செறிந்து உயிர்விடுதல் கூறப் பட்டுள்ளது. இதற்குப் பாண்டிமாதேவி எடுத்துக்காட்டு.

“காதலற் பிரிந்த நோயோடு உளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி” (4:58,59)
“காதலற் கெடுத்த நோயோடு உளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தனள் (22: 151,152)

என்பன சிலப்பதிகாரப் பகுதிகள். மறுமணம் செய்து கொள்ளாவிடினும் தவ நோன்பு கொள்ளலாம். ஆனால், திக்குளிப்பு தேவையற்றது - கொடுமையானது - ஆண் பெண் சம நிலைக்கு முரணானது. அதாவது, இந்தக் காலத்திற்கு ஒவ்வாதது.

யானை முன் பறை

மதம் பிடித்த யானை வெளியில் செல்லின், மதயானை வருகிறது - அனைவரும் விழிப்பா யிருந்து தற்காத்துக் கொள்க என்று முன்னால் பறையறைந்து செல்வார்களாம்.

“ஒருபாற் படாஅது ஒரு வழித் தங்காது
பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக்
கால வேகம் களிமயக்கு உற்றென” (4:40-44)

என்னும் பகுதியில் ‘பாகும் (பாகரும்) பறையும்... அலவுற்று விளிப்ப’ என்றிருப்பது காண்க.

தொழுது பேசுதல்

அரசரிடம் ஒன்று பேசுவோர் முதலில் அரசனுக்கு வணக்கம் செய்தலும் வாழ்த்துச் சொல்லுதலும் வழக்கம். மணிமேகலை தெருவில் சென்றபோது, அவளைக் காலதர் (சன்னல்) வழியாகக் கண்ட எட்டி குமரன் என்பவன் வாசித்துக் கொண்டிருந்த யாழிசை பிழைபடச் செய்து அசையாதிருந்தான். அவனைக் கண்ட உதயகுமரன் என்னும் சோழ இளவரசன், நீ இவ்வாறு இருப்பதற்குக் காரணம் என்ன என வினவினான். எட்டி குமரன் அரச குமரனை வணங்கிச் சொல்லலானான். இதனை,

“பாங்கிற் சென்று தான்தொழு தேத்தி
மட்டவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டி குமரன் எய்தியது உரைப்போன்” (4.62-64)

என்னும் பகுதி அறிவிக்கும். மற்றும், மணிமேகலையின் தோழியாகிய சுதமதி என்பாள், உதய குமரனை வாழ்த்திப் பேசினாள்:

“வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி
தீநெறிப் படரா கெஞ்சினை ஆகுமதி” (5:28,29)

என்பது காண்க.

பேசத் தொடங்குமுன் மன்னரை வணங்கி வாழ்த்துவது போலவே பேச்சின் முடிவிலும் வாழ்த்துவது மரபு. சுதமதி இவ்வாறு உதயகுமரனை வாழ்த்தி முடித்தாள். இதனை,

“மிகைநா இல்லேன் வேங்தே வாழ்கஎன” (5:79)

என்பதால் அறியலாம். சிலப்பதிகாரத்திலும், இவ்வாறு மன்னனிடம் பேசத் தொடங்கும்போதும் முடித்த போதும் வாழ்த்தும் மரபு பல காதைகளில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரட்டைக் காப்பியங்கள் ஆயிற்றே.

குமரியும் காவிரியும் ஆடல்

வடபுலத்திலிருந்து தமிழகம் வருவோர், குமரியிலும் காவிரியிலும் குளித்தல் வழக்கமாம். சுதமதியின் தந்தை வட புலத்திலிருந்து குமரியும் காவிரியும் ஆடி (நீராடி) வந்தோருடன் சேர்ந்துகொண்டு புகார் வந்தானாம். இதனை,

“குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறைப்
பரந்துசெல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல்மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய
வடமொழி யாளரொடு வருவோன்” (5:37-40)

என்பதால் அறியலாம். குரங்கு செய்கடல் என்பது, இராமனுக்காக வானரர்கள் கடலில் அணை கட்டிய செயலைக் குறிக்குமாயின், இராம - இராவணப்போர் இந்தியாவிற்குள்ளேயே நடைபெற்றது என்போரின் ஆராய்ச்சிக் கருத்து அடிபட்டுப் போகலாம்.

மற்றும், ஒழுக்கம் தவறிய பெண்களும் அத்தீவினையைத் (பாவத்தைத்) தீர்த்துக்கொள்ள வந்து குமரியாடுதல் உண்டாம். வாரணாசி என்னும் ஊரிலிருந்த அபஞ்சிகன் என்னும் அந்தணனின் மனைவி சாலி என்பாள், ஒழுக்கம் தவறியதால் அந்தத் தீமையைப் போக்கிக் கொள்ள வந்து குமரி யாடினாளாம். இதனை,

“ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பணி சாலி காப்புக்கடை கழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சித்
தென்திசைக் குமரி ஆடிய வருவோள்” (13:4-7)

என்னும் பகுதியால் அறியலாம்.

காமத்து இயற்கை

உவவனம் சென்ற மணிமேகலையை அடைவதற்காக வந்த உதய குமரன், மணிமேகலை ஆங்கிருந்த பளிங்கு அறைக்குள் புகுந்துகொண்டபின், அவளை எப்படியாவது யான் அடைவேன் எனச் சுதமதியிடம் கூறிச் சென்று விட்டான். பின்னர் வெளிவந்த மணிமேகலை சுதமதியிடம் பின்வருமாறு கூறுகிறாள்:

கற்போ-தவ உணர்வோ இல்லாதவள், இழிந்த குலத்தினள், காசுக்கு உடலை விற்கக் கூடிய வேசி என்றெல்லாம் என்னை இகழினும் என்னை விரும்பிய அந்தப் புதியவனாகிய - முன்பின் பழகாதவனாகிய உதய குமரன் பின்னே என் உள்ளம் சென்றது. சுதமதியே! இது தான் காமத்தின் இயற்கை போலும் - என்று கூறினாள்:

“கற்புத் தானிலள் கற்றவ உணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை
இதுவே யாயின் கெடுக அதன்திறம்” (5:86-91)

என்பது பாடல் பகுதி. இதனால், தவ ஒழுக்கம் பூண்டோர்க்கும் உள்ளம் தடுமாறுதல் இயல்பு என்பது புலப் படும். பொறுத்தருள வேண்டும் என்ற வேண்டுகோளுடன், குமரகுருபர அடிகளாரின் நீதி நெறி விளக்கம் என்னும் நூலில் உள்ள ஒரு பாடலை இவண் தருகிறேன்.

“ஏந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான்-வாய்ந்த
நயனுடை இன்சொல்லான் கேள்எனினும் மாதர்க்கு
அயலார்மேல் ஆகும் மனம்” ( )

என்பது பாடல். கணவன் எல்லா வகையிலும் சிறந்தவன் எனினும், ஒரு பெண்ணுக்கு மற்றோர் ஆடவன்பால் மனம் நாடக் கூடுமாம். அதாவது, மனம் மாற்றானைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூடுமாம். இப்பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

உயிர்க் கடன்

கொற்றவைக்கு (துர்க்கைக்கு) உயிர்க்கடன் கொடுக்கும் வழக்கம் பண்டு இருந்தது. உயிர்க்கடன் தருவோர் தலைமுடியை மரத்தில் கட்டி விட்டுக் கழுத்தை அரிந்து கொள்வாராம். தலைமுடியை மரத்தில் கட்டி இவ்வாறு கழுத்தை அரிந்து கொண்டபின் தலைகள் மரத்தில் தொங்கிக்கொண்டிருக்குமாம். காடு அமர் செல்வியாகிய கொற்றவையின் கோட்டத்தில் இக்காட்சியைக் காணலாம்.

“உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதுாங்கு நெடுமரம் தாழ்ந்து புறஞ்சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
காடமர் செல்வி கழிபெருங் கோட்டம்” (6:50-53)

என்பது பாடல் பகுதி. சிலப்பதிகாரத்திலும் உயிர்க் கொடை கூறப்பட்டுள்ளது. ஒட்டக் கூத்தரின் தக்கயாக பரணியில்,

“சிரந்தெரிந்தன அரிந்தரிந்து குவைசெய்த
பைரவர்கள் செங்கிலம்
பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை
பரிக்க வந்தவர் சிரிப்பரே” (51)

எனவும், செயங் கொண்டாரின் கலிங்கத்துப் பரணியில்,

“வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறும்
திசைதோறும் விழித்து நின்று
தூங்குதலை சிரிப்பன கண்டு உறங்குதலை
மறந்திருக்கும் சுடர்க்கண் சூர்ப்பேய்”
(கோயில் பாடியது-21)

எனவும் உள்ள பாடல்கள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன.

இறந்தோர் கோயில்

சிறந்தவர்கள் இறந்துவிடின் அவர்கட்குக் கோயில் எடுத்தல் மரபு. இதனை,

“அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கின் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்” (6:54-59)

என்னும் பகுதி அறிவிக்கிறது. சுடுமண் = செங்கல்.

பிணம் படும் பாடு

பிணத்தைச் சுடுவதும் பள்ளம் வெட்டியும் தாழியில் இட்டும் புதைப்பது மன்றி. அப்படியே முழு உருவத்துடன் தரையின் மேலே போட்டுவிட்டுப் போவதும் உண்டு எனத் தெரிகின்றது. சக்கர வாளக் கோட்டம் உரைத்த காதையில் இது விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள

“சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்” (66)

என்னும் அடியில் சுடுவோர் என்றது எரித்தலையும், தொடு குழிப் படுப்போர் என்பது புதைப்பதையும், இடுவோர் என்பது வெளியிலே போட்டுவிட்டுப் போவதையும் குறிக்கும். இந்தக் காலத்தில், சுடுகாடு எனச் சுடும் பகுதியையும், இடுகாடு எனப் புதைக்கும் பகுதியையும் குறிப்பர். அந்தக் காலத்தில் வெளியில் இட்டுச் (போட்டுச்) செல்லும் பகுதியையே இடுகாடு என்பது குறித்ததாகத் தோன்றுகிறது. இதற்கு உரிய சான்று:-

பெண்களின் செம்பஞ்சு ஊட்டிய அழகிய அடிகளை நரிகள் கவ்விச் செல்கின்றனவாம். ஆடை உடுத்தி மறைத்திருந்த அல்குலைக் (பிறப்புறுப்பைக்) கழுகுகள் குடைந்து உண்கின்றனவாம். கடகம் அணிந்த கையை நாய் கவ்விச் செல்கிறதாம். சாந்து பூசிய எடுப்பான அழகிய முலைகளைப் பருந்துகள் கொத்தி உண்கின்றனவாம். ஒருபேய், பெண்ணின் தலையை முழவுபோல் கையில் ஏந்திக் கண்களைத் தோண்டி உண்கிறதாம். இத்தக் காட்சி.

“வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடிகரி வாய்க்கொண்டு
உலப்பில் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலைப்புற அல்குல் கழுகுகுடைந் துண்டு
நிலைத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறிந்த கையைத் தீகாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏங்திள வனமுலை
காய்ந்தபசி எருவை கவர்ந்துண் ஒதையும்
பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
மண்கனை முழவ மாக ஆங்கோர்
கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி
இரும்பேர் உவகையின் எழுந்தோர் பேய்மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இழதோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண்தொட்டு உண்டு கவையடி பெயர்த்து
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்து” (6:109–126)

எனப் புனைந்துரைக்கப் பட்டுள்ளது. இதனால், பிணங்களைச் சுடாமலும் புதைக்காமலும் வெளியே போட்டுவிட்டுச் செல்லும் வழக்கமும் இருந்தது என்பது தெளிவு.

மணிமேகலை நூல் புத்த காப்பியம். புத்தமதம் மணிமேகலை காலத்தில் தமிழகத்தில் சமணம் போலவே பரவியிருந்தது. புத்தமதத்தினர் பிணங்கள் வீணாகாதவாறு பிற உயிர்கள் உண்ணட்டும் என வெளியில் அப்படியே போட்டு விட்டுச் செல்வது உண்டு என்பதற்கு வேறு சான்றுகளும் உண்டு.

புத்த மதத் தலைவரும் அரசியல் தலைவருமாகிய தலாய்லாமா திபேத்தில் இருந்த காலத்தில், செர்மானியர் ஒருவர் ஏழாண்டு காலம் அங்கிருந்தாராம். அவர் எழுதிய ‘திபேத்தில் ஏழாண்டுகள்’ என்னும் நூலின் தமிழ்மொழி பெயர்ப்பை யான் படித்தேன். திபேத்துப் புத்தமதத்தினர், பிணங்களைக் குறிப்பிட்ட மலைப் பகுதிகட்கு எடுத்துச் சென்று, கண்ட துண்டமாக வெட்டித் தூக்கித் தூக்கி எறிவராம். அவற்றைச் சில பறவைகளும் சில விலங்குகளும் பெற்று உண்ணுமாம். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். சிற்றும் சிவனுடைய திருவடிகளை மலரிட்டு வணங்காதவர் களும் திருப்பெயரை ஒதாதவர்களும் காக்கைக்கு இரையாகுவர் என்னும் கருத்தில், நாவுக்கரசர்,

“பூகைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் காமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை யாகிக் கழிவரே” (பொது)

எனப் பாடியுள்ளார். நாவுக்கரசர் காலத்தில் தமிழகத்தில் சமணமும் புத்தமும் மக்களால் பின்பற்றப்பட்டிருந்தன என்பது வரலாறு. காக்கைக்கு இரையாகுவர் என்பதும், அவர்தம் உடல்கள் வெளியில் போடப்படும் என்பதற்குத் தக்க சான்றாகும். இந்தக் காலத்தில் இப்பழக்கம் இல்லாதது நலம்.

பிணங்களைத் தாழியில் (சாலில்) அடைத்துவைக்கும் பழக்கமும் இருந்தது. இந்தச் சாலுக்கு ‘முது மக்கள் தாழி’ என்பது பெயர். இது பல நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

சிறாரைத் தூங்கச் செய்தல்

சிறுவர் கூட்டத்துடன் தேர் இழுத்து விளையாடிக் களைப்புற்றுத் தாங்கும் சிறார்களைக் காற்று கறுப்பன் (பேய் பிசாசு) அண்டாதவாறு, சிறார்காக்கும் பெண்கள், பேய்ப்பகையாகிய வேப்பிலை - வெண்சிறு கடுகுகளைச் சுற்றிப் போட்டுத் தூபம் காட்டிக் கண்ணேறு கழித்து உறங்க வைப்பார்களாம். இதனை

“தளர்நடை ஆயமொடு தங்கா தோடி
விளையாடு சிறுதேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்குக்
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபங் காட்டித் தூங்குதுயில் வதியவும்” (7:54-59)

என்பதால் அறியலாம்.

இரவுக் காவல்

இரவில், அரண்மனையில் உள்ள நாழிகை வட்டில் (கடிகையாரம் போன்றது) காட்டும் நேரத்தைக் கொண்டு, மணி (நேரம்) ஊர் மக்கட்கு உரத்த ஒலி வாயிலாக அறிவிக்கப்படுமாம். ஊர் காப்பாளர் ஊரைச் சுற்றிச் சுற்றித் துடி அடித்துக் கள்வர்களினின்றும் காத்து வருவ ராம். இவற்றை,

“பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள்
கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின்
யாமங் கொள்பவர் ஏத்தொலி அரவமும்” (7:63-65)
“ஊர் காப்பாளர் எறிதுடி ஓதையும்” (7:69)

என்பவற்றால் அறியலாம். குறுநீர்க் கன்னல் என்பது, துளித் துளியாக நீர் சொட்டும் ஏதோ ஒரு வகை அளவைக் கொண்டு அந்தக் காலத்தில் நேரத்தின் அளவை (மணியை) அறிந்து வந்தார்கள் என்பதைப் புலப்படுத்தும்.

தோப்பி

தோப்பி என்பது, நெல்லோடு சில பொருள்களைச் சேர்த்துக் காய்ச்சித் துழவி உண்டாக்கும் ஒருவகைக் கள்ளாகும். இது, வீட்டிலே கூடக் காய்ச்சி உண்டாக்கப் பட்டதாம்.

“முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர்
துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
பழஞ்செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்” (7:70-72)

என்பது பாடல் பகுதி. கலம் புணர் கம்மியர்=கப்பவில் வேலை செய்யும் தொழிலாளர்கள், இவர்கள் தோப்பி உண்கின்றனர். செருக்கு, அனந்தர் என்னும் சொற்களின் பொருள், தேநீரோ (Tea), காபியோ (Coffee) பருகினால் உண்டாவது போன்ற ஒருவகை விரு விருப்பு - உற்சாகம் என்பதாகும். ஈண்டு ‘பழஞ் செருக்கு’ என்பது குறிப்பிடத் தக்கது. வேலை செய்வதால் அலுத்து விருவிருப்பு குறைந்து விடுகிறது. தோப்பி உண்பதால், மீண்டும் பழைய விரு விருப்பு உண்டாகிறதாம். துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு என்பது கள்ளிலே பல வகை உண்டு; அவற்றுள் தோப்பி என்பது ஒருவகை என்னும் குறிப்பைத் தருகிறது. இது வீட்டிலேயும் காய்ச்சப்படும் என்பதயைப் பெரும் பாணாற்றுப் படையிலுள்ள

“நாள் ஆ தந்து நறவு கொடை நொளைச்சி
இல் அடு கள்ளின் தோப்பி பருகி” (141, 142)

என்னும் பகுதியால் அறியலாம். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள பொருள் அப்படியே வருமாறு:-

“விடியற் காலையிலே அவர்கள் பசுக்களை அடித்துக் கொண்டு போந்து அவற்றைக் கள்ளுக்கு விலையாகப் போக்கி, அதற்குப் பின்பாகத் தமது இல்லிலே சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு” - என்பது அது.

கள்ளுக் கடையிலே கள்ளுக்கு விலையாகப் பசுக்களைத் தந்து கள் பெற்றுப் பருகுவதும், பின்பு வீட்டிலே சமைத்த தோப்பிக் கள்ளை உண்பதும் வழக்கமெனத் தெரிகிறது. இது, வீட்டில் செய்யும் தேநீர், காபி போன்றது போலும். தற்செயலான வாய்ப்பு நேர்ந்ததால் ஈண்டு மற்றொரு கருத்தைக் காணலாம்:-

கள்ளுக் கடையிலே கள்ளின் விலைக்கு ஈடாகப் பசுவைக் கொடுத்தார்கள் என்பதால் அறியக்கூடியது ஒன்றுண்டு. அதாவது: அந்தக் காலத்தில் மாடு செல்வமாகக் (காசாகக்) கருதப்பட்டது என்பது. இதனால் தமிழில் மாடு என்னும் விலங்கைக் குறிக்கும் சொல் செல்வத்தையும் குறிக்கலா யிற்று, கன்னட மொழியில் ‘தன’ என்னும் சொல் மாட்டையும் செல்வத்தையும் குறிக்கும்; இலத்தீனில் ‘Pecunia’ என்னும் சொல்லும் மாட்டையும் செல்வத்தையும் குறிக்கும் - என்பதே அந்தக் கருத்து. மீண்டும் கள்ளுக்கு வருவோம். ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய

“சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே
பெரிய கள் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே” (235:1-3)

என்னும் புற நானுற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கள்ளும் அரண்மனையில் ஆக்கியதாகத்தான் இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் வெறுப்புக்கும் ஒறுப்புக்கும் உரிய கள்ளச் சாராயம் காய்ச்சுவது போன்றது அன்று வீட்டில் காய்ச்சும் தோப்பி, இந்தக் காலத்தில் தேநீர், காபி வந்து விட்டதால், வீட்டிலோ - நாட்டிலோ மக்கள் மது காய்ச்சாமல் இருப்பார்களாக.

புனிறு தீர் கயக்கம்

பிள்ளை பெற்ற பெண்கட்குத் ‘தீட்டுக் கழித்தல்’ என்னும் ஒரு பழக்கவினை (சடங்கு) நடத்தல் உண்டு. அதுவரையும் பிள்ளை ஈன்ற பெண் கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு இருப்பதும் நடப்பதும் வழக்கம். வேப்பிலைக்கும் ஐயவிக்கும் (வெண்சிறு கடுகுக்கும்) கடிப் பகை என்னும் பெயர் உண்டு. கடி = பேய், கடிப்பகை = பேய்ப்பகை. புனிறு என்பது, அண்மையில் பிள்ளை ஈன்ற நிலை என்னும் பொருளது. தீட்டுக் கழித்ததும் புனிறு என்னும் நிலை கழிந்து விடுகிறது. கயக்கம் = கலக்கமான நிலை. புதுவை-கடலூர்ப் பகுதியில் சில பல குடும்பங்களில்குறிப்பாக எங்கள் (சு. ச) குடும்பங்களில் பிள்ளை பெற்ற ஒன்பதாம் நாள் தீட்டுக் கழிப்பதும், பெற்ற தாயைக் குளிக்க வைப்பதும் வழக்கம். இந்தக் காலத்தில் இந்த நாள் கணக்கில் குடும்பத்துக்குக் குடும்பம் மாறுதலும் உண்டு. இது மணிமேகலை நூலில் பின்வருமாறு சொல்லப் பட்டுள்ளது: பிள்ளை பெற்ற பெண்கள் தீட்டு கழிவதற்காக, வேப்பிலை - ஐயவி - தூமத்துடன் சென்று குளத்தில் குளிப்பார்களாம்:

“அரவாய்க் கடிப்பகை ஜயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம்
தீர்வினை மகளிர் குளன் ஆடு அரவமும்” (7:73-76)

என்பது பாடல் பகுதி. அரவாய்=வேப்பிலை. வேப்பிலை யின் விளிம்பு அரம்போல் இருப்பதால் அரவாய் என்னும் பெயர் ஈயப்பட்டது.

குளத்தில் பச்சைத் தண்ணிரில் குளித்தார்கள் என்பது இக்காலத்து மேட்டுக்குடி மக்கட்கு வியப்பாயிருக்கலாம். இக்காலத்திலும் ஏழை எளியவர்கள் நிலை இதுதான். வசதி படைத்தவர்கள் பச்சைத் தண்ணீரைத் தொடுவதில்லை. வசதியற்ற ஏழைப் பெண் ஒருத்தி, மருத்துவமனையில் பிள்ளை பெற்று விட்டு வந்து, மூன்றாம் நாளே எருமுட்டை தட்டினாள். ஒரு ரிக்ஷா வண்டிக்காரன் மனைவி இவள், இந்தக் காட்சியை யான் கண்ணால் நேரில் கண்டேன். மற்றும், அந்தக் காலத்தில் விடுதோறும் கிணறு இருக்க வில்லை. நான் சிறுவனாய் இருந்த போது எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிணறு உண்டு. எங்கள் வீட்டின் இரு புறங்களிலும் உள்ள (2 + 2 = 4) நான்கு வீடுகளில் கிண்று இல்லை. அவ்விட்டினர் எங்கள் கிணற்றில் நீர் எடுத்தனர். இப்போது அவர்களும் கிண்று தோண்டிக் கொண்டுள்ளனர்).

இருபதாம் நூற்றாண்டிலேயே இந்த நிலை எனில், பல நூற்றாண்டுகட்கு முன் வீட்டில் கிணறு இன்மையால் குளத்தில் குளித்ததில் வியப்பில்லை. வீட்டில் கிணறு இருப்பினும், திருக்கோயில் குளத்தில் குளிப்பது ஒரு நல்வினை (புண்ணியம்) என்று கருதினர். ஈண்டு,

“மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்” (1:1,2)

என்னும் ஞானசம்பந்தரின் திருக்கோலக்காப் பதிகப் பாடல் பகுதி ஒப்பு நோக்கத் தக்கது. பொய்கை = குளம் (இந்தக் காட்சியைத் திருக்கோலக்காவில் 1941 ஆம் ஆண்டு ஒரு நாள் காலை யான் (சு. ச)நேரில் கண்டுள்ளேன். மற்றும், பத்தாம் நாள் இரவில் நீராட வேண்டும் என ஆரிய மொழி நூல்களில் கூறப்பட்டுள்ளதாம். அதற்கும் தமிழரின் பழக்க வழக்கத்திற்கும் தொடர்பில்லை. ஒற்றைப் படையாம் நாளில் நீராடல் தமிழர் வழக்கம்.

ஊடலில் காலில் விழல்

மனைவி ஊடல் கொள்ளின், ஊடலைத் தீர்க்க அவள் காலில் கணவன் விழுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்குமி என்பவள் ஊடல் கொள்ள, அவளுடைய காமவயப்பட்ட கணவனாகிய இராகுலன் என்பான் அவள் காலில் விழுந்து வணங்கினானாம். (இது முற்பிறப்புச் செய்தி).

“இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு
புலத்தகை எய்தினை பூம் பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழி” (10:20-23)

என்பது பாடல் பகுதி. இது நடக்குமோ நடக்காதோ - இவ்வாறு எழுதுதல் ஓர் இலக்கிய மரபாய் விட்டது. சிவப்பிரகாச அடிகளாரின் பிரபுலிங்க லீலை நூலில் ஒரு பெரிய அடிவணக்கம் கற்பனையாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது:-

சிவன் உமையின் ஊடலைத் தணிக்க உமையின் காலில் விழுந்தாராம். அவரது முடியில் பிறை நிலவு, பாம்பு, கங்காதேவி உண்டு. உமையின் நெற்றிப் பகையாகிய பிறை நிலவும், அல்குல் பகையாகிய பாம்பும் தன் காலில் படும்படி விழுந்ததற்கு மகிழாமல், சககளத்தி (ஒத்த மனைவி) யாகிய கங்காதேவி தன் காலில் படும்படி விழுந்ததற்காக உமா தேவி மகிழ்ந்தாளாம். பாடல்:

“ஆதி பகவன் தனதுாடல் தணிப்பான்
பணிய அவ்விறைவன்
பாதம் இறைஞ்சு மதற்கும் நெற்றிப்
பகையும் அல்குல் பகையுமாம்
சீத மதியும் அரவும் விழும் செயற்கும்
உவகை செயாமல் அலை
மாது பணியுமதற்கு மனமகிழும்
உமையை வணங்குவாம்”

என்பது (துதிகதி-2) பாடல். அலைமாது = கங்கா தேவி.

கம்ப ராமாயணத்தில் கிளைக் கதையாக இரணியன் கதை வருகிறது. திருமாலை வணங்கும்படி இரணியனுக்குக் கூறியபோது, வணங்குதல் என்பது பெண்டிரோடு ஊடல் கொள்ளும் நாளிலும் எனக்கு இல்லை என்று கூறி அண்டங்கள் நடுங்கும்படி இடி சிரிப்புச் சிரித்தானாம்:

“வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் இலதே என்னா அண்டங்கள் நடுங்களுக்கான்”

என்பது கம்பராமாயணப் பாடல் பகுதி. இதனால், மகளிர் ஊடல் கொள்ளும்போது வணங்குதல் உண்டு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

தமரகம் புகுதல்

போர்க்களத்தில் கணவனை இழந்த பெண்கள், கைம் பெண் ஆனதும், தம் தாய் வீட்டில் சென்று தங்கும் வழக்கம் உண்டு. மாலையைப் புனைந்துரைக்கும் (வருணிக்கும்) சாத்தனார், மாலையில் ஞாயிறைப் பறி கொடுத்த புகார் நகரில், கணவனை இழந்து தாய் வீடு செல்லும் கைம்பெண் போல், அந்தி என்னும் கலங்கிய பசலை மெய்யுடைய பொழுது வந்ததாம்.

“அமரக மருங்கில் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒரு மகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென்” (6,137-141)

என்பது பாடல் பகுதி.

குல தெய்வப் பெயர் இடல்

தங்கள் குல தெய்வத்தின் பெயரைத் தம் பிள்ளை கட்கு இடுவது ஒரு வகை மரபு. முருகன் பெயர்களையே வைக்கும் குடும்பங்கள் உண்டு. அதேபோல், திருமாவின் பெயர்களை எந்த அவதாரப் பெயர்களாயிருந்தாலும் சரி . வைப்பவர்கள் உளர். ஐயனார் பெயர்களும் அப்படியே. அங்காளம்மனைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள் அங்கம்மா, அங்கப்பன் போன்ற பெயர்களைக் கொள்வர். அரங்கன் தொடர்பான பெயர், பாண்டுரங்கன், அரங்கசாமி, (அ)ரங்கன், (அ)ரங்கநாயகி, (அ)ரங்கநாதன் முதலிய பெயர்களையே வைக்கும் குடும்பம் உண்டு. இவ்வாறு, கோவலன், தங்கள் குல தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்தின் பெயரையே தன் மகளுக்கு மணிமேகலை என வைத்தான்.

இவ்வாறு இன்னும் பல பழைய பழக்கவழக்க மரபுகள் மணிமேகலைக் காப்பியத்தில் சுவைபெறக் கூறப்பட்டுள்ளன.