மனோன்மணீயம்: ஐந்தாம்அங்கம், இரண்டாங்களத்தின் கதைச்சுருக்கம்

மனோன்மணீயம் தொகு

அங்கம் ஐந்து தொகு

இரண்டாம் களம்- கதைச் சுருக்கம் தொகு

அரண்மனையில் கன்னிமாடத்தில், ஊழியப் பெண்கள், தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். அரசன், இளவரசியைப் பலதேவனுக்கு மணம்செய்ய யோசித்திருப்பதைக் கூறியதும், அதற்கு இளவரசி விரும்பவில்லையானாலும், அரசனுக்கு உள்ள மனத்துன்பத்தையும் நெருக்கடியையும் கருதி, அவனுக்கு மேலும்மேலும் மனவருத்தம் ஏற்படக்கூடாது என்று கருதித் திருமணத்திற்கு இசைந்ததும், அரசன் சென்றவுடன் இளவரசி மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டதும், பிறகு, நெடுநேரம் கழித்துத் தெளிந்து எழுந்ததும் - ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றனர்.
அவ்வமயம் இளவரசி மனோன்மணி, நீராடித் திருமணத்திற்குரிய ஆடையணிகளை அணிந்துகொண்டு, வாணியுடன், அவ்விடம் வருகிறாள். ஊழியப்பெண்கள், வேறிடம் போகின்றனர். இளவரசி, தான் இரண்டு வரங்களை அரசரிடம் கேட்டுக் கடிதம் எழுதியதாகவும், அவ்வரங்களை அரசர் கொடுத்ததாகவும் கூறுகிறாள். “வாணி, உன்னை, நடராசனுக்கு மணம் செய்விக்க அரசர் இசைந்துள்ளார். இதோ, அவர் எழுதிய இசைவுக் கடிதம், பார்” என்றுகூறி, இளவரசி, வாணியிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறாள்.
வாணி, கடிதத்தைப் படித்து, “என்ன அம்மா, இது? எனக்கு இது ஒப்பிதம் இல்லை. தாங்கள் மனம் வருந்தியிருக்க, நான் மணம் செய்துகொண்டு இன்புறுவதா? இது முடியாது!” என்றனள்.
“என் தந்தையின் மனம்போல நடப்பது என்கடமை. இந்த நெருக்கடியில் அவர் இட்டம்போல் நடக்காவிட்டால், அவர் பெருந் துயரடைவார்” என்றாள், மனோன்மணி.
“தங்களைப் பலதேவனுக்குத் திருமணம்செய்விப்பது, பகலுக்கும் இரவுக்கும் உள்ள உறவு போன்றது. கிளியைக் கழுகுக்கு மணம் செய்விப்பது போன்றது. தங்களுடைய பெருந்துயருக்கிடையே என்னுடைய திருமணந்தானா பெரிது?” என்று கூறி மறுத்தாள் வாணி!
மனோன்மணி, “வாணி! வருந்தாதே! என் தந்தைக்கு வந்த துன்பத்தைப் போக்குவதற்காகவே, அவருடைய விருப்பப்படி நடந்து, அவருக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதற்காகவே, இத்திருமணத்தை நான் ஏற்றுக் கொண்டேன். மற்றவர்களின் நன்மைக்காகத் தமது சுகங்களைத் துறப்பதுதான், உண்மையான தவம்! உன்னை, நடராசனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்றும், நாராயணரைச் சிறை விடுவிக்க வேண்டும் என்றும் அரசரிடம் கேட்டேன். அவர், அவ்விதமே ஒப்புதல் தந்தார்” என்று கூறினாள்.
வாணி, “அம்மணி! தாங்கள் கனவுகண்டு காதலித்த அவரை -அவர்யாராயினும் ஆகுக- அவரைத் தாங்கள் திருமணம் செய்துகொள்ளும் நாளே நான் திருமணம் செய்துகொள்ளும் நன்னாள்! அதுவரையில், நான் மணம் செய்துகொள்ளேன்! தங்களிடம் பணிவிடை செய்து கொண்டிருப்பேன்!” என்றாள்.
“வாணி! நீ சொல்வது பேதைமை! என் மணம் இன்னும் அரைநாழிகையில் நடக்கப்போகிறது. இதற்குள், நான் கனவிற் கண்ட நாயகன், எப்படி வரப்போகிறார்? நீ, என்னிடம் கொண்டுள்ள அன்பினால், இவ்விதம் கூறுகிறாய்!” என்றாள், மனோன்மணி.
“கடவுள், இல்லையென்றால், இப்படியெல்லாம் நடக்கட்டும்! உண்டு என்றால், அவர் திருவருள் கிடைக்கட்டும்!” என்றாள், வாணி.
மனோன்மணீயம் ஐந்தாம் அங்கம் இரண்டாம் களம் கதைச்சுருக்கம் முற்றியது. தொகு

V தொகு

மனோன்மணீயம்: ஐந்தாம்அங்கம், முதற்களத்தின் கதைச்சுருக்கம்

மனோன்மணீயம்-அங்கம் 05-களம் 02

மனோன்மணீயம்-அங்கம் 05-களம் 03


மனோன்மணீயம் மூலம்(முதல்அங்கம்-பாயிரம்)