மனோன்மணீயம்: நான்காம்அங்கம், ஐந்தாங்களத்தின் கதைச்சுருக்கம்
பார்க்க:
தொகுமனோன்மணீயம்
தொகுஅங்கம் நான்கு
தொகுஐந்தாங்களம்- கதைச் சுருக்கம்
தொகு- அரண்மனையில், சுந்தர முனிவரை, அரசன் சென்று காண்கிறான். போரில் பின்னடைந்து வருந்தும் அரசனுக்கு, அவர் ஆறுதல் கூறுகிறார். “புயல் காற்றுக்கு வளைந்து கொடுக்கும் மூங்கில், பின்னர், நிமிர்ந்து நிற்கிறது. வளையாத நெடுமரம், வேரோடு பெயர்ந்து விழுந்து அழிந்துவிடுகிறது” என்று கூறுகிறார். மூங்கில், மரத்துக்கு இணையா? அதை யார் மதிக்கிறார்? ஆணிவேருடன் அற்றுவீழ்ந்தாலும், மரத்தையே போற்றுவர் பெரியோர். அடிகளே! என் உயிரைப் போரில் போக்குவேன்! அதுவே என் முடிவு!” என்றான், அரசன்.
- “அரசே! பொறும், பொறும்! நெருப்புக்கோழி, தன் தலையை மட்டும் மறைத்துக்கொண்டு, தன் உடல்முழுவதும் மறைந்திருப்பதாக நினைத்துக்கொள்வது போல இருக்கிறது, உம்முடைய நியாயம். அலைகொலை புரிந்து கொள்ளையிடுவோர், களவுசெய்து பிறர் பொருளைப் பறிப்போர் முதலிய குற்றவாளிகளும் அகப்பட்டுக்கொண்டால், மரணத்துக்கு அஞ்சாமல் கழுவேறுகிறார்கள். துன்பம் வந்தால், அதனைப் பொறுப்பதா அல்லது உயிர்விடுவதா தகுதி? கடலில் போகும் மரக்கலம், புயற்காற்றில் அகப்படுமானால், அதனை ஓர் இடத்தில் சேர்த்துப் புயல்போகும் அளவும் காத்திருந்து, மீண்டும் பயணம் மேற்கொள்வான் மாலுமி! அப்படியின்றி, அதனைப் புயலில் அகப்படவிட்டு அழிந்துவிடுவான் அல்லன். புகழுக்காக உயிர்விடத் துணிந்தீர்; ஆனால், உமது கடமையை மறந்தீர். நீர் நம்பிய பாய்மரம் பழுது. கோட்டையை நம்புவதில் பயனில்லை. பெருங்காற்று அடங்கும்வரையில், ஒதுங்கியிருப்பது நல்லது” என்று கூறினார், முனிவர்.
- அரசன், அதற்கு இணங்கவில்லை. போர்செய்து களத்தில் உயிர்விடுவதே தன் கருத்து என்பதை வற்புறுத்துகிறான். முனிவர், இளவரசி மனோன்மணியைக் காப்பது அவன்கடமை என்றும், அரசன் காக்காமற்போனால் அவளைக் காப்பது தமது கடமை என்றும் கூற, அதற்கு என்ன விரகு உள்ளது என்று அரசன் கேட்கிறான். முனிவர், கோட்டையிலிருந்து தமது ஆசிரமத்துக்கு ஒரு சுரங்கவழி செய்திருப்பதாகவும், அவ்வழியின் வாயிலாக அரசனும், அரசகுமரியும் தப்பிச்செல்ல முடியும் என்றும் கூற, அரசன், இளவரசியை அதன் வழியாகத் தப்பவைக்கும்படியும், தான் போர்செய்யப் போர்க்களம் செல்லப்போவதாகவும் கூறிச் சுரங்கவழியைக் காட்டும்படி கேட்கிறான். முனிவர், நள்ளிரவில் வந்து காட்டுவதாகச் சொல்லிப் போகிறார்.
- அரசன், இளவரசிக்காகக் கவலைப்படுகிறான்; முனிவர் மீதும் ஐயங்கொள்கிறான். ‘சுரங்கவழியைக் காட்டாமலே போய்விட்டார். உண்மையில் சுரங்கம் உண்டா? இல்லையா? சுரங்கவழியை முனிவர் கட்டியமைக்க முடியுமா? இவரால் அல்லவா இந்தப்போர் வந்தது? இவர் சொல்லிய திருமணம் காரணமாகத்தானே, புருடோத்தமன், போர்செய்ய வந்தான்?’ என்று தனக்குள் எண்ணுகிறான்.
- பிறகு, குடிலனை அழைப்பித்து, அவனிடம் முனிவர் கூறிய சுரங்கவழியைப் பற்றியும், அவர் அவ்வழியாகத் தன்னைத் தப்பிப்போக அழைத்தது பற்றியும் சொல்கிறான். சுரங்கவழி, கோட்டையில் முனிவர் தங்கும் அறையில் இருக்கும் என்று குடிலன் ஊகித்தறிந்து, அதனை இகழ்ந்து பேசுகிறான். “இவ்வளவு பெரியகோட்டையை அமைத்த நமக்குச் சுரங்கவழி அமைக்கத் தெரியாதா? அது அவசியமில்லை என்றுதானே செய்யாமல் விட்டோம்” என்று கூறுகிறான். முனிவருடன், இளவரசியைச் சுரங்கவழியாக அனுப்புவது சரியா என்று அரசன் கேட்க, அனுப்புவதில் தவறில்லை என்றும், ஆனால், திருமணம் செய்துவைத்த பிறகு அனுப்பவேண்டும் என்று கூறுகிறான். “திருமணம் செய்ய இது தகுந்த காலமா? யாருக்கு, அவளைத் திருமணம் செய்விப்பது?” என்று அரசன் கேட்கக் குடிலன், தன் மகனுக்குத் திருமணம் முடிக்கலாம் என்று குறிப்பாகக் கூறுகிறான். நெருக்கடியான காலத்தில் வேறு வழியில்லை என்று கண்டு, அரசன், அதற்கு ஒப்புக்கொள்கிறான். ஆனால், மனோன்மணி, இத்திருமணத்திற்கு இசைவாளோ என்று ஐயுறுகிறான். வஞ்சகனாகிய குடிலன், “இளவரசி, இசைவாள், அவளுக்குப் பலதேவன்மேல் ஆசை உண்டு. அதற்கு மாறுபாடாகத் தாங்கள் கருதுவதுதான் அவளுக்கு வருத்தமாக இருக்கும். பலதேவனும் அவள்மேல் காதல் கொண்டிருக்கிறான்” என்றுசொல்ல, அரசன், உண்மையென நம்பி, இன்று இரவு, இரண்டாவது யாமத்தில் திருமணம் செய்யலாம் என்றுகூறி, மனோன்மணியிடம் இச்செய்தியைக் கூறிவருகிறேன் என்று சொல்லிப் போகிறான்.
- தனியே இருக்கும் குடிலன், தன்சூழ்ச்சி நிறைவேறியதைக் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறான். மனோன்மணி, திருமணத்தை மறுப்பாளோ என்று நினைத்து அஞ்சுகிறான். “மறுக்கமாட்டாள்; விருப்பம் இல்லாவிட்டாலும், மௌனமாக இருப்பாள்; மௌனம் ஒப்புதலின் அடையாளம் என்றுகூறித் திருமணத்தை நிறைவேற்றி விடலாம். நல்ல காலம்! நாராயணனும் சிறையில் இருக்கிறான்; முனிவர் வருவதற்குள் திருமணத்தை முடித்துவிட்டால், பிறகு, அவர் என்ன சொல்லமுடியும்? முனிவர், சுரங்கம் செய்திருக்கிறார் என்று அரசர் கூறினார். அதைப் பார்க்கவேண்டும் நமது ஆபத்துக் காலத்துக்கு, அது உதவியாக இருக்கும்... ஐயோ! இந்தச் சேவகர்களுக்கு, எவ்வளவு பணம் கொடுத்தோம். என்னென்ன வெகுமதி அளித்தோம்! நன்றிகெட்ட நாய்கள்! நமக்குப் பகைவராக உள்ளனர். அந்தப் படுபயல் நாராயணன், இனித் தப்பமாட்டான். என் சூழ்ச்சிகளையெல்லாம் நாசமாக்கினவன், அவன். இனி, அவன் கழுமரம் ஏறவேண்டியது தான்” என்று பலவாறு எண்ணுகிறான்.
மனோன்மணீயம், நான்காம் அங்கம், ஐந்தாம் களத்தின் கதைச்சுருக்கம் முற்றிற்று
தொகுமனோன்மணீயம்: நான்காம்அங்கம், இரண்டாங்களத்தின் கதைச்சுருக்கம்