மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/026-052
2. வேறு அரசர்கள்
மாமல்லன் ஆன நரசிம்மவர்மன் காலத்திலே, பல்லவ தேசத்தைச் சூழ்ந்திருந்த இராச்சியங்களைப் பற்றியும் அவற்றை அரசாண்ட அரசர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வடநாடு
அக்காலத்தில் வடஇந்தியாவை அரசாண்ட மன்னன் ஹர்ஷவர்த்தனன் என்பவன். இவனுடைய இராச்சியம் வடக்கே இமயமலையிலிருந்து தெற்கே நருமதை ஆறுவரையிலும் பரவியிருந்தது. அக்காலத்தில் பரதகண்டத்து அரசர்களில் பேரரசனாக விளங்கியவன் ஹர்ஷவர்த்தனனே. இவன் கி.பி. 606 முதல் 647 வரையில் அரசாண்டான். இவன் இறந்தபிறகு இவனுடைய பேரரசு சிறு சிறு நாடுகளாகச் சிதறுண்டு போயிற்று. ஹர்ஷனுக்கு மக்கட் பேறு இல்லை. ஆகவே, அவனுடைய இராச்சியத்தை அவனுக்குக் கீழடங்கியிருந்த அரசர்கள் சுயேச்சையாக அரசாளத் தொடங்கினார்கள். ஹர்ஷனுடைய அமைச்சனான அருணாஸ்வன் (அர்ச்சுனன்) என்பவனும் இராச்சியத்தின் ஒருபகுதியைத் தன்வயப்படுத்திக் கொண்டான்.
சீனநாட்டு அரசன், ஹர்ஷவர்த்தனனிடம் தன் தூதர்களை அனுப்பினான். அத்தூதர்கள் இந்தியாவுக்கு வந்தபோது ஹர்ஷன் இறந்துபோய், அவன் மந்திரி அருணாஸ்வன், ஆட்சிசெய்து கொண்டிருந்தான். இவன் சீனத் ஷத்தர்களைக் கொன்றுவிட்டான். ஆனால், துதர்களின் தலைவனாகிய வாங்-ஹூன்-த்ஸி1 என்பவன் தப்பி ஓடித் திபெத்து நாடு சென்றான். திபெத்து நாட்டரசன் சீனமன்னனின் உறவினனாகையால், அவன் சீனத்தூதுவனுக்குத் தன் சேனையைக் கொடுத்து உதவினான். தூதுவன், சேனையுடன் வந்து அருணாஸ்வனுடன் போர் செய்து வென்று அவனைச் சிறைப்பிடித்துச் சென்றான். நரசிம்மவர்மன் காலத்தில் வட இந்தியாவில் நிகழ்ந்த செய்தி இது.
தக்கிணநாடு
ஹர்ஷ இராச்சியத்திற்குத் தெற்கே தக்கிண இந்தியாவைச் சளுக்கியர் அரசாண்டனர். சளுக்கிய இராச்சியம், வடக்கே நருமதை ஆறுமுதல் தெற்கே வடபெண்ணை ஆறுவரையிலும், மேற்கே அரபிக்கடல் முதல் கிழக்கே வங்காளக் குடாக்கடல் வரையிலும் பரவியிருந்தது. இந்தப் பெரிய இராச்சியத்தை நரசிம்மவர்மன் காலத்தில் அரசாண்டவன் புலிகேசி என்பவன். இவனை இரண்டாம் புலிகேசி என்பர். புலிகேசியைப் புளகேசி என்றும் கூறுவர்.
புலிகேசிக்கு சத்யாஸ்ரயன், வல்லவன், வல்லபராசன், பிருதுவி வல்லபன், பரமேசுவரன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. புலிகேசியின் தலைநகரம் வாதாபி என்பது. இதனைப் பாதாமி என்றுங் கூறுவர். புலிகேசி, தன்மேல் படையெடுத்து வந்த ஹர்வூர்த்தனனை வென்று புகழ்பெற்றவன். இவன் புகழ் உலகமெங்கும் பரவியிருந்தது.
புலிகேசி, தன்னுடைய இராச்சியத்திற்குத் தெற்கேயிருந்த பல்லவ இராச்சியத்தையும் தன்னுடைய இராச்சியத்துடன் சேர்த்துக் கொள்ள விரும்பி, அடிக்கடி பல்லவ நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். மண்ணாசை கொண்டு பல்லவநாட்டின்மேல் படையெடுத்து வந்தபோதெல்லாம், இவன் பல்லவர்களால் முறியடிக்கப்பட்டான். கடைசியாகக் காஞ்சிபுரத்துக்கு அடுத்த மணிமங்கலத்தில் நடந்த போரில் புலிகேசி, கொல்லப்பட்டான் என்பதையும், பிறகு நரசிம்மவர்மன் புலிகேசியின் தலைநகரமான வாதாபியைக் கைப்பற்றி அதில் வெற்றிக்கம்பம் நாட்டினான் என்பதையும் முன்னமே கூறினோம்.
நரசிம்மவர்மன் புலிகேசியைக் கொன்று வாதாபி நகரத்தைக் கைப்பற்றியது கி. பி. 642 - ஆம் ஆண்டிலாகும். பிறகு வாதாபி நகரம் 13 ஆண்டுகள் அரசனில்லாமல் இருந்தது. பிறகு கி. பி. 655-இல் புலிகேசியின் இளைய மகனான விக்கிரமாதித்தியன், சளுக்கிய இராச்சியத்தின் அரசனானான். இவனை முதலாம் விக்கிரமாதித்தியன் என்பர். இவன் கி. பி. 655 முதல் 681 வரையில் அரசாண்டான்.
இவனுக்குச் சத்தியாஸ்ரயன், ரணரசிகன், அநிவாரிதன், ராஜமல்லன், வல்லபன், ஸ்ரீ பிருதுவி வல்லபன், மகாராஜாதிராஜ பரமேசுவரன், பட்டாரகன் முதலிய சிறப்புப் பெயர்கள் உண்டு.
இவன் அரசனானவுடன், நரசிம்மவர்மன் கைப்பற்றிக் கொண்ட சளுக்கிய நாட்டின் தென்பகுதிகளை மீட்டுக் கொண்டான். இரண்டாம் புலிகேசியை நரசிம்மவர்மன் வென்று புலிகேசியின் சில நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டதையும், சில ஆண்டுகளுக்குப் பிறகு விக்கிரமாதித்தியன் நரசிம்மன்மேல் படையெடுத்துச் சென்று அவனை வென்று, புலிகேசி இழந்த நாடுகளை மீட்டுக்கொண்டதையும் கர்னூல் சாசனம் இவ்வாறு கூறுகிறது:
“திருமகளுக்கும் மண்மகளுக்கும் மணாளனும், சிறந்த போர் வீரனாய் வடநாடு முழுவதையும் அரசாண்ட ஹர்ஷவர்த்தனனை வென்று பரமேசுவரன் என்று பெயர் படைத்தவனுமான பரமேசுவர சத்யாஸ்ரய மகாராசன் (புலிகேசி ) உடைய அருமை மகனான விக்கிரமாதித்திய சத்யாஸ்ரயன், மூன்று அரசர்களால் தன் தந்தையிடமிருந்து கைப்பற்றிக் கொள்ளப்பட்ட பூமியைத் தன்னுடைய சித்தகண்டம் என்னும் குதிரையின் உதவியினாலும் வாளாயுதத்தின் கூர்மையினாலும் அனேக போர்களை வென்று கைப்பற்றினான்.” இவ்வாறு சாசனம் கூறுகிறபடியினாலே, நரசிம்மவர்மன் புலிகேசியிடமிருந்து கைப்பற்றிய ஆந்திரப் பகுதிகளைப் பிற்காலத்தில் விக்கிரமாதித்தியன் மீண்டும் கைப்பற்றிக் கொண்டான் என்பது தெரிகிறது.2 அன்றியும் தன் தந்தையைப் போலவே விக்கிரமாதித்தியனும், பல்லவ நாட்டின் மேல் பலமுறை படையெடுத்து வந்தான். ஆகவே, பல்லவ மன்னனாகிய நரசிம்மவர்மன் இவனுடன் போரிடவேண்டியதாயிற்று.
புலிகேசி, சாளுக்கிய இராச்சியத்தின் கிழக்குப் பகுதியைத் தன் தம்பியாகிய விஷ்ணுவர்த்தனனுக்குக் கொடுத்தான். விஷ்ணுவர்த்தனன் சுயேச்சையரசனானான். இவன் வெங்கியைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டான். ஆகவே, சளுக்கிய இராச்சியம், மேலைச்சளுடக்கிய இராச்சியம் என்றும், கீழைச்சளுக்கிய இராச்சியம் என்றும் இரு பிரிவாகப் பிரிந்தது. மேலைச்சளுக்கிய இராச்சியத்தை மேலே கூறியபடி இரண்டாம் புலிகேசியும் அவன் மகன் முதலாம் விக்கிரமாதித்தியனும் அரசாண்டார்கள்.
கீழைச்சளுக்கிய இராச்சியம் வடக்கே விசாகப்பட்டணம் ஜில்லாவிலிருந்து தெற்கே வடபெண்ணையாறு வரையில் பரவியிருந்தது. இதனை யரசாண்ட விஷ்ணுவர்த்தனனுக்கு, குப்ஜ விஷ்ணுவர்த்தனன் மகரத்துவஜன், விஷமசித்தி, பிட்டரசன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. இவன் எப்போது காலமானான் என்று திட்டமாகக் கூறமுடியவில்லை.
விஷ்ணுவர்த்தனனுக்குப் பிறகு இவன் மகன் மகாராஜ ஜயசிம்மன் என்பவனும் அவனுக்குப் பிறகு அவன் தம்பி இந்திரவர்மனும் அவனுக்குப் பிறகு அவன் மகன் இரண்டாம் விஷ்ணுவர்த்தனனும் அரசாண்டனர். நரசிம்மவர்ம பல்லவன், மேலைச்சளுக்கிய அரசனான புலிகேசியை வென்று அவனுடைய வாதாபி நகரத்தைக் கைப்பற்றிய போது, இந்தக் கீழைச்சளுக்கிய அரசர்கள் தங்கள் உறவினரான மேலைச் சளுக்கியர்களுக்கு உதவி செய்யவில்லை.
மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் தக்கிண தேசத்தின் நிலைமை இது.
ரேணாடு ஏழாயிரம்
சளுக்கிய இராச்சியத்துக்கும் பல்லவ இராச்சியத்திற்கும் இடையிலே ரேணாடு ஏழாயிரம் என்னும் பெயருள்ள சிறு இராச்சியம் இருந்தது. இது, இப்போது ஆந்திர நாட்டில் அடங்கியுள்ள கடப்பை, கர்நூல் மாவட்டங்களைக் கொண்டிருந்தது. நரசிம்மவர்மன் காலத்தில் இச் சிறு நாட்டை அரசாண்டவன் சோழர் பரம்பரையைச் சேர்ந்த புண்ணிய குமாரன் என்பவன். இவன் சோழ மகாராசன் என்னும் சிறப்புப்பெயர் பெற்றிருந்தான்.
இவன், தன்னைக் கரிகாற் சோழன் வழிவந்தவன் என்றும் நான்கு தலைமுறையாக இவன் முன்னோர் இந்த ரேணாட்டை யரசாண்டு வருகின்றனர் என்றும் மலெபாடு செப்புப் பட்டயத்தில் கூறிக் கொள்கிறான். கடப்பை மாவட்டத்தைச் சேர்ந்த மதனபல்லிக்கு அருகில் உள்ள சிப்பிலி என்னும் ஊரில் இருக்கிற வீரகல் சாசனம் ஒன்று புண்ணிய குமாரன் என்னும் அரசனைக் கூறுகிறது.3
மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் பாரததேசத்தில் சுற்றுப் பிராயாணம் செய்த ஹியூங்சுவாங் - என்னும் சீனநாட்டு யாத்திரிகர் கி. பி. 640-இல் காஞ்சிபுரத்துக்கு வந்து சிலநாள் தங்கியிருந்தார் என்று முன்னமே கூறினோம். இந்த யாத்திரிகர் எழுதியுள்ள யாத்திரைக் குறிப்பில், சளுக்கிய இராச்சியத்திற்குப் பிறகு சுலியெ என்னும் இராச்சியத்தையும் அதற்குத் தெற்கே திராவிட (பல்லவ) தேசத்தையும் குறிப்பிடுகிறார். திராவிட நாட்டிற்குப் பிறகு, சோழநாட்டைக் குறிப்பிடாமல் மலய (பாண்டிய) நாட்டைக் குறிப்பிடுகிறார். திராவிட (பல்லவ) நாட்டிற்கும் மலய (பாண்டிய) நாட்டிற்கும் இடையே சோழ நாட்டை ஏன் இவர் குறிப்பிடவில்லை என்றால், அந்தக் காலத்தில் சோழநாடு பல்லவ இராச்சியத்துடன் சேர்ந்திருந்தது. சோழ அரசர் பல்லவருக்குக் கீழடங்கிச் சிற்றரசராய் இருந்தனர்.
ஆனால், சளுக்கிய நாட்டுக்கும் பல்லவ நாட்டுக்கும் இடையே இருந்ததாக இவர் கூறுகிற சுலியெ என்னும் நாடு, ரேணாட்டைக் குறிக்கிறது என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுவர். இவர்கள் கூறுவது பொருத்தமாகவும் சரியாகவும் இருக்கிறது. சுயீலயெ என்பது சோழியர் (சோழர்) என்பதன் மரூஉ. ரேணாட்டையாண்ட அரசர் தம்மைச் சோழர் வழிவந்தவர் என்று கூறிக் கொண்டது கருதத்தக்கது.
கொடும்பாளூர் நாடு
ரேணாட்டுக்குத் தெற்கே திராவிடநாடு இருந்ததென்று ஹியூங்- சுவாங் கூறுகிறார். இவர் கூறுகிற திராவிட தேசம் என்பது தொண்ட மண்டலத்தையும் சோழமண்டலத்தையுங் கொண்டிருந்தது. இதனைப் பல்லவ அரசர் ஆட்சி புரிந்தனர். பல்லவ இராச்சியத்திற்குத் தெற்கே சீனயாத்திரிகர் கூறுகிற மலயநாடு, அஃதாவது பாண்டிய நாடு இருந்தது.
பல்லவ இராச்சியத்துக்கும் பாண்டிய இராச்சியத்துக்கும் இடையிலே கொடும்பாளூர் நாடு என்னும் சிறு நாடு இருந்தது. அது இப்போது புதுக்கோட்டை என்று வழங்குகிறது கொடும்பாளூர் நாட்டின் தலைநகரம் கொடும்பாளூர் என்பது, கொடும்பாளூர் சிற்றரசர்கள் சுயேச்சையரசராக இருந்தனர் என்பது கொடும்பூளூரிலுள்ள மூவர் சூகாவில் சாசனத்தினால் தெரிகிறது.4
சுயேச்சையரசர்களாக இருந்தபோதிலும் இவர்கள் சில சமயங்களில் பல்லவ அரசர்களுக்கு நண்பர்களாக இருந்தார்கள்.
மூவர் கோயில் சாசனத்தில் கூறப்படுகிற அரசர்களில் நிருபகேசரி, பரதுர்க்கமர்த்தனன், சமராபிராமன் என்னும் அரசர்கள் மூவரும் பல்லவ அரசர்களுக்கு நண்பர்களாக இருந்தார்கள் என்பது இச்சாசனத்தினால் தெரிகிறது.
முதலில் நிருபகேசரி என்னும் அரசனைப்பற்றி ஆராயவேண்டும். ஏனென்றால், மூவர் கோயில் சாசனத்தை இது வரையில் ஆராய்ந்த எல்லா சரித்திர ஆசிரியர்களும் இவனைப்பற்றி ஆராயாமலே விட்டு விட்டார்கள். நிருபகேசரி தனது இளமைப் பருவத்தில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று இந்தச் சாசனம் கூறுகிறது. பாம்புகளோடு வளர்ந்தான் என்றால் பொருள் என்ன? மனிதனாகிய இவன் பாம்புகளுடன் வளர்ந்தான் என்று கூறுவது பொருந்தாது. பாம்பு என்பது நாகம் என்றும் பெயர்பெறும். ஆகவே, பாம்புகளோடு வளர்ந்தான் என்றால் நாகர் என்னும் வகுப்பாருடன் வளர்ந்தான் என்பது கருத்து. அப்படியானால் நாகர் என்பவர் யார்?
நாகர் என்பது பல்லவ அரசரைக் குறிக்கும். எப்படி என்றால், பல்லவ அரசர்களின் மூதாதை ஒருவன், நாக அரசன் மகளை மணஞ் செய்துகொண்டு, நாக அரசனிடமிருந்து அரசாட்சி உரிமையைப் பெற்றான் என்று கூறப்படுகிறான். அவன் மரபு நாகர் மரபு எனப்பட்டது. பல்லவர் பாம்பு (நாக) மரபைச் சேர்ந்தவராகையினாலே, பாம்புக் கொடியையும் பெற்றிருந்தனர்.
சூது என்றால் நாகம் என்பது பொருள். வேலூர்ப் பாளைய சாசனம், பல்லவ அரசர் பரம்பரையைக் கூறும் இடத்தில் சூதுபல்லவன் என்னும் அரசன் பெயரைக் கூறுகிறது. மேலும், வீர கூர்ச்சன் என்னும் பல்லவ அரசன் நாக அரசகுமாரியை மணஞ்செய்துகொண்டு நாக அரசனுடைய அரசாட்சி உரிமைகளைக் கவர்ந்து கொண்டான் என்றும் கூறுகிறது.
காஞ்சிபுரத்துப் பரமேச்சுவிண்ணகரத்தை (வைகுண்டபெருமாள் கோயிலை)க் கட்டிய பரமேசுவரவர்மன் என்னும் பல்லவ மன்னனைத் திருமங்கையாழ்வார் பாம்புக் கொடியையுடையவன் என்று கூறுகிறார்.
“தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத்
திசைப்பச் செருமேல் வியந்து அன்றுசென்ற
பாம்புடைப் பல்லவர்கோன் பணிந்த
பரமேச்சுர விண்ணகர மதுவே.”5
என்று அவர் கூறியது காண்க.
உத்திமேரூரில் உள்ள சுந்தரவரதப்பெருமாள் கோயில் பல்லவ அரசர் கட்டிய மாடக் கோயிலாகும். இக்கோயிலில் துவாரபாலகர் உருவங்கள் முடிதரித்த அரசர் உருவங்கள்போல் இருக்கின்றன. இத்துவாரபாலகருக்கு இரண்டு கைகள் உள்ளன. இந்தத் துவாரபாலகரின் கிரீடத்துக்கு மேலே பாம்புப் படம் எடுத்தது போன்ற உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்துவாரபாலகருக்குச் சூதுராஜன் என்று பெயர் கூறுகிறார்கள். சூது என்பதற்குப் பாம்பு, நாகம் என்னும் பொருள் கூறப்படுகிறது. சூதுராஜன் என்று கூறப்படுகிற இந்தத் துவாரபாலகரின் உருவம், பல்லவ அரசரின் உருவம்போலும். பல்வ அரசன் கட்டிய கோயிலில், நாகப்பாம்புப் படத்துடன் பல்லவ அரசர் உருவம் துவாரபாலகராக அமைக்கப்பட்டிருப்பது பொருத்தமானதுதான்.
எனவே, கொடும்பாளூர் சிற்றரசன் நிருபகேசரி தனது இளமை வயதில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று மூவர் கோயில் சாசனம் கூறும் கருத்து என்னவென்ன வென்றால், அவன் நாக பரம்பரையினரான பல்லவ அரசர்களோடு வளர்ந்தான் என்பதே. இந்த நிருபகேசரி, சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசன் காலத்திலும் அவன் மகன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலும் இருந்தவன் என்று தெரிகிறான்.
நிருபகேசரியின் மகன் பரதுர்க்க மர்த்தனன் என்பவன். இவனுக்கு வரதரபிஜித் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. வாதாபிஜித் என்றால், வாதாபி நகரத்தை வன்றவன் என்பது பொருள். பரதுர்க்கமர்த்தனனுடைய மகன் சமராபிராமன் என்பவன். இவன், யதுவம்சகேது என்றும், சோழன்மகளான அநுபமை என்பவனை மணந்தவன் என்றும் கூறப்படுகிறான். அன்றியும் அதிராசமங்கலத்தில் சளுக்கியனை வென்றவன் என்றும் கூறப்படுகிறான்.
கொடும்பாளூர் அரசர்களாகிய பரதுர்க்க மர்த்தனனும், அவன் மகன் சமராபிராமனும் மாமல்லனான் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் இருந்தவர்கள். அன்றியும் அவனுக்கு நண்பராகவும் இருந்தவர்கள். நரசிம்மவர்மன் மீது சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி படை யெடுத்து வந்தபோது, அவனை நரசிம்மவர்மன் போரில்கொன்று, பிறகு அவனுடைய வாதாபி நகரத்தின்மேல் படையெடுத்துச் சென்று அந் நகரைக் கைப்பற்றிக்கொண்டு, வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்று பெயர்பெற்றான் என்று சரித்திரம் கூறுகிறது. புலிகேசியுடன் நரசிம்ம வர்மன் போர்செய்தபோது, கொடும்பாளூர் அரசனான சமராபிராமனும் பல்லவனுடன் சேர்ந்து சளுக்கியனான புலிகேசியை வென்றான் போலும். ஆகவே, இவன் சளுக்கியனை வென்றவன் என்று பெயர்பெற்றான்.
இவனுடைய தந்தையாகிய பரதுர்க்கமர்த்தனன், நரசிம்மவர்மன் சார்பாக வாதாபி நகரப்போரில் கலந்துகொண்டு வாதாபிநகரத்தை வென்று "வாதாபிஸ்ரீத்" என்னும் பெயரையும் பெற்றான். இதனால், கொடும் பாளூர் அரசர்களாகிய இவர்கள், நரசிம்மவர்மன், புலிகேசியை வெல்வதற்குத் துணையாக இருந்தார்கள் என்பது தெரிகிறது.
இது இன்னொரு விதத்திலும் உறுதிப்படுகிறது. புலிகேசியின் மகனான முதலாம் விக்ரமாதித்தியன், தன் தந்தையான புலிகேசியின் இராச்சியத்தின் தென்பகுதியை மூன்று அரசர்கள் சேர்ந்து கைப்பற்றினார்கள் என்று தன் சாசனம் ஒன்றில் கூறுகிறான். அப்படியானால் புலிகேசியை வென்றவர் மூன்று அரசர்கள் என்று தெரிகிறது. அம் மூவர் யாவர்? மாமல்லனான நரசிம்மவர்மன் ஒருவன். அவனுக்கு உதவியாக இருந்த இலங்கை மன்னன் மானவம்மா என்னும் மான வர்மன் மற்றொருவன். புலிகேசியை எதிர்த்த மூன்றாவது அரசன் யார்? இதற்கு விடை, கொடும்பாளூர் மூவர் கோவில் சாசனம் கூறுகிறது. புலிகேசியை எதிர்த்து வென்ற மூன்றாவது அரசன், (அரசர்) கொடும் பாளூர் மன்னன் பரதுர்க்கமர்த்தனனும் அவன் மகன் சமராபிராமனும் ஆவர்.
எனவே, மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில், கொடும்பாளூர் நாட்டையரசாண்ட கொடும்பாளூர் வேளிரான சிற்றரசர்கள், பல்லவருக்கு உதவியாக இருந்தார்கள் என்பது தெளிவாகிறது.
மூவர் கோயில் சாசனத்தை ஆராய்ந்த சில சரித்திர ஆசிரியர்கள், பரதுர்க்க மர்த்தனனும் சமராபிராமனும், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தவர் அல்லர் என்றும் பிற்காலத்தவர் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் கூற்று ஆராய்ச்சிக்குப் பொருந்தவில்லை;
பாண்டிய நாடு
கொடும்பாளூருக்குத் தெற்கே பாண்டிய நாடு இருந்தது. நரசிம்மவர்மன் காலத்திலே, பாண்டிய நாட்டை அரசாண்டவன் நெடுமாறன் என்னும் பாண்டியன். இவன் சைவ அடியார்கள் அறுபத்து மூவரில் ஒருவன். "நிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் போற்றப்பட்டவன் இவனே. பெரியபுராணத்தில் கூன்பாண்டியன் என்றும் நெடுமாறன் என்றும் இவன் கூறப்படுகிறான். என்றும் நெடுமாறன் இவன் கூறப்படுகிறான். வேள்விக்குடி செப்பேட்டுச் சாசனம் அரி கேசரி, அசமசமன், அலங்க்யவிக்ரமன்,அகாலகாலன்,மாரவர்மன் என்று இவன் பெயர்களைக் கூறுகிறது.
பாழி, திருநெல்வேலி, செந்நிலம், புலியூர் முதலிய இடங்களில் நடைபெற்ற போர்களில் இவன் வெற்றி கண்டான்; பலமுறை கேரள (சேர) அரசனை வென்றான் என்று சாசனங்கள் இவனைப் புகழ்கின்றன. இறையனார் அகப்பொருள் உரையன் இடையிடையே மேற்கோள் காட்டப்படுகிற கோவைச் செய்யுள்கள் (பாண்டிக் கோவை) இவன் மீது பாடப்பட்டன என்பர்.
பாண்டியன் நெடுமாறன் முதலில் சமண சமயத்தவனாக இருந்தான். பின்னர், திருஞான சம்பந்தரால் சைவனாக மாற்றப்பட்டான். இவன் அரசியார் மங்கையர்க்கரசியார். இவர், பல்லவ அரசரின் ஞகழ் சிற்றரசராக இருந்த சோழ அரசனுடைய மகளார். குலச்சிறையார் என்பவர் இவ்வரசனின் அமைச்சர் இவ்வரசன், அரசி, அமைச்சன் ஆயி மூவரும், திருநாவுக்கரசு சுவாமிகள் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்தபோது அவரை வரவேற்று உபசரித்தார்கள். இம் மூவரும் சைவநாயன்மார் திருக்கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காணலாம்.
இவ்வரசனை, வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது:
51. “..... மற்றவற்குப் பழிப்பின்றி வழித்தோன்றி உதய கிரி மத்யம
52. த்துறு சுடர்போலத் தெற்றென்று திசை நடுங்க மற்ற வன் வெளிற்பட்டுக்கு
53. ழியானை செலவுந் திப் பாழிவாய் அமர்கடந்து வில்வேலிக் கடற்றாணையை
54. நெல்வேலிச் செறுவென்றும் விரவிவந்தணையாத பர வரைப் பாழ்படுத்
55. துமறு காலினம் புடை திளைக்குங் குறுநாட்டவர் குலங் கெடுத்து
56.ங் கைந்நலத்த களிறுந்திச் செந்நிலத்துச் செறுவென்றும் பாரளவுந்
57. தனிச் செங்கோற் கேரளனைப் பலமுறை முரிமைச் சுற்றமோடவர் யானை
58. யும் புரிசைம்மதிற் புலியூர்ப் பகனாழிகை இறவாமை இகலா
59. ழியுள் வென்று கொடும் வேலாழியும் வியன் பரம்புமே லாமை சென்
60.றெறிந் தழித்தும் ஹிரண்ய கர்ப்பமுந் துலாபாரமுந் தரணிமிசைப் பலசெய்து
61. அந்தணற்கும் அசக்தற்கும் வந்தணைக என்றீத்தளித்த மகரிகை அணிமணி
62. நெடுமுடி அரிகேசரி அசமசமன்ஸ்ரீமாறவர்மன்”...6
இந்தச் சாசனத்தின் வடமொழிப்பகுதி இவ்வாறு கூறுகிறது:
“கும்பசம்பவன் (அகத்திய முனிவர்) கையினால் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மன்னர்கள் அரசாண்டு கழிந்த பின்னர், மூவுலகத்தாலும் போற்றப்பட்ட நற்குணங்களையும் புகழையும் உடைய மாரவர்மன் என்னும் அரசன் பிறந்தான். இவன், ஆதிசேஷன் போன்ற தனது பெருந்தோளினால் பூபாரத்தை நெடுங்காலந்த தாங்கிக் கொண்டு, ஆதிசேஷனுடைய இளைப்பை மாற்றினான். புலவரைக் காத்த இவன் போர்க்களத்திலே பகைவர் கூட்டத்தை வென்று அமிர்த் கர்ப்பத்தில் பிறந்து (இரணிய கர்ப்பம் புகுந்து) முறைப்படி பொற்குவியலைத் தானம் செய்தான்.”7
சின்னமனூர் சிறிய செப்பேட்டுச் சாசனம் இவனை இவ்வாறு கூறுகிறது :
15. “பகைப் பூபர் தலைபனிப்பப் பரமேஸ்வரன் வெளிற் பட்டு அரிகேச
16.ரி அஸமஸமன் அலங்க்யவிக்ரமன் அகாலகாலன் னெனத்தன
17. க்குரியன பலகுண நாம்முலகுமுழு துகந்தேத்தப் பரா
18. வனிபகுல மிறைஞ்சப் பாரகலம் பொதுநீக்கித் தராசுரர
19. திடரகலத் தனவர்ஷம் பொழிதற்கு வலாஹத்தின் விரதம்கொண்
20. டு துலாபார மினிதேறி ஸரண்யனா யுலகளித்து ஹிரண்ய
21. கர்ப்ப மிருகால் புக்கு கோஸஹஸ்ரத் துடக்கத்துக் குருதா
22. 'னம் பல செய்து வாசவன்போல வீற்றிருந்தனன் வஸு
23. தாபதி மாரவர்மன்”8
மாரவர்மன், பல அரசர்களைப்போரில் வென்றதோடு சேர அரசனையும் வென்று அந்நாட்டைத் தன் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஆகையால் இவன் பரமேசுவரன் என்றும் கூறப்படுகிறான்.
சேரநாடு
பாண்டிய நாட்டிற்கு மேற்கே சேரநாடு இருந்தது. இந்தக் காலத்தில் சேரநாட்டில் இருந்த சேர அரசன் பெயரி தெரியவில்லை. ஆனால், இந்தச் சேரனைப் பாண்டியன் நெடுமாறன் பலமுறை வென்றான் என்று சின்னமனூர்ச் சாசனம் கூறுகிறது. இதனால், சேரநாடு பாண்டிய அரசுக்குக் கீழடங்கியிருந்தது என்பது தெரிகிறது.
இலங்கைத் தீவு
தமிழ்நாட்டின் அருகிலேயுள்ளது இலங்கைத் தீவு. இதற்குச் சிங்களத்தீவு என்றும் பெயர் உண்டு. இது தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில், இலங்கைத் தீவின் அரசியல் நிலை எவ்வாறு இருந்தது என்பதைப் பார்ப்போம்.
இக்காலத்தில் சிங்களத்தீவை அரசாண்ட மன்னன் கஸ்ஸபன் என்பவன். இவனை இரண்டாங் கஸ்ஸபன் என்பவர். கஸ்ஸபனுக்குப் பகைவனாக இருந்து அரசாட்சியைக் கைப்பற்றுவதற்காக அவனுடன் போராடியவன் தாட்டோபதிஸ்ஸன் என்பவன். இவ்விருவருக்கும் நடந்த போரிலே கஸ்ஸபன் வெற்றியடைந்தான். தோல்வியடைந்த தாட்டோப திஸ்ஸன், முடி முதலிய அரசு சின்னங்களைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டான். ஆகவே, கஸ்ஸபன் முடி தரிக்காமலே இலங்கையை அரசாண்டான். தமிழ்நாட்டிற்கு வந்த தாட்டோ பதிஸ்ஸன் படைதிரட்டிக்கொண்டு இலங்கைக்குச் சென்று மறுபடியும் கஸ்ஸபனுடன் போர் செய்தான். அந்தப் போரிலே தாட்டோப் திஸ்ஸன் உயிர் துறந்தான், ஆனால், அவனுடன் இருந்த அவன் மருகனான ஹத்ததாட்டன் தமிழ்நாட்டில் வந்து அடைக்கலம் புகுந்தான்.
கஸ்ஸபன் பல ஆண்டுகள் அரசாண்டான். இவனுக்குப் பல மக்கள் இருந்தார்கள். ஆனால், எல்லோரும் வயது நிரம்பாத சிறுவர்கள். இவர்களில் மானகன் (மானா) என்பவன் மூத்தவன். கஸ்ஸபன் நோய்வாய்ப்பட்டு தான் உயிர் பிழைக்க முடியாதென்று அறிந்து, உரோகண நாட்டிலிருந்த தன் தங்கைமகனான மானா என்பவனை அழைத்து, அவனிடம் தன் மக்களை ஒப்படைத்து, அவர்கள் வயது அடையும் வரையில் அரசாட்சியை நடத்தும்படி அவனை நியமித்தான். அவ்வாறே, மருகனான மானா, கஸ்ஸபனுடைய மூத்தமகனான மானாவையும் அவன் தம்பியரையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டான். கஸ்ஸபன் நோயினால் இறந்தான்.
பிறகு மானா, உரோகண நாட்டிலிருந்த தன் தந்தையாகிய தப்புலன் என்பவனை அநுராதபுரத்திற்கு அழைத்து அவனை இலங்கைக்கு அரசனாக்கினான். இந்தத் தப்புலன் என்பவன், காலஞ் சென்ற கஸ்ஸபனுடைய தங்கையின் கணவன் தப்புலன் இலங்கைக்கு மன்னன் ஆக்கப்பட்டதை அநுராதபுரத்திலிருந்த தமிழர்கள் விரும்பவில்லை. இக்காலத்தில் இலங்கையின் தலை நகரமான அநுராத புரத்தில் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். தமிழரின் செல்வாக்கும் அதிகமாக இருந்தது. ஆகவே தமிழர்கள் தலைநகரமாகிய அநுரையைக், கைப்பற்றிக்கொண்டு, தமிழ்நாட்டில் புகல் அடைந்திருந்த ஹத்த தாட்டனை இலங்கைக்கு வரும்படி அழைத்தார்கள். ஹத்ததாட்டன் உடனே தமிழச் சேனையுடன் புறப்பட்டு அநுரைக்கு வந்தான். இதையறிந்த தப்புலன், அரண்மனையிலிருந்த பொன்னையும் பொருளையும் எடுத்துக கொண்டு அநுரையை விட்டுத் தனது உரோகண நாட்டிற்குப் போய்விட்டான். அவன் மகனான மானாவும் கிழக்கு மாகாணத்திற்குப் போய்விட்டான். ஆகவே, அநுரைக்கு வந்து சேர்ந்த ஹத்ததாட் டன் எதிர்ப்பு இல்லாமல் அரசனானான். ஆனால், கிழக்கு மாகாணத்தில் இருந்த மானா, படையெடுத்து வந்து ஹத்ததாட்டனுடன் போர் செய்தான். அப் போரிலே மானா இறந்தான். தன் மகன் மானா இறந்த செய்தியைக் கேட்டு உரோகனை நாட்டிலிருந்து தப்புலன் துயர மடைந்து இறந்து போனான். இந்தத் தப்புலன் இலங்கை மன்னனாக ஆறு நாட்கள் மட்டும் இருந்தான்.
மானாவைக் கொன்று இலங்கையின் மன்னன் ஆன ஹத்த தாட்டன் தன் பெயரைத் தாட்டோபதிஸ்ஸன் என்று மாற்றிக் கொண்டான். இவனைத் தாட்டோபதிஸ்ஸன் இரண்டாமவன் என்று சரித்திர நூலோர் கூறுவர். இவன் தன் சிற்றப்பன் மகனான அக்கபோதி என்பவனைத் தக்கின தேசத்திற்கு இளவரசனாக்கினான்.
மானா என்பவனிடம் ஒப்படைக்கப் பட்டிருந்த கஸ்ஸப அரச னுடைய மூத்த மகனான மானா என்பவன், இப்போது வயது நிரம்பப் பெற்று, மலையநாட்டை அரசாண்ட ஒரு சிற்றரசனுடைய மகளான சங்கை என்பவளை மணஞ்செய்துகொண்டு, உத்தர தேசத்தில் (இலங்கையின் வடபகுதியில்) ஒருவரும் அறியாமல் மறைந்து வசித்திருந் தான். கஸ்ஸப அரசன் மகனான மானா தன் நாட்டிலே மறைந்து வாழ்கிறான் என்பதையும் அவன் என்றைக்காவது தன்னை எதிர்த்து அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்பதையும் ஒற்றரால் அறிந்த தாட்டோபதிஸ்ஸன் அவன்மேல் கண் வைத்திருந்தான். தாட்டோப திஸ்ஸன் தன்னைத் தெரிந்து கொண்டான் என்பதை யுணர்ந்த மானா, உடனே புறப்பட்டுக் காஞ்சிபுரம் வந்து, நரசீகன் (நரசிம்மவர்மன்) இடத்தில்தான் இன்னான் என்பதையும் தன் வரலாற்றையும் கூறி, அவனிடம் அடைக்கலம் புகுந்தான். நரசிம்மவர்மன் மானாவுக்கு அடைக்கலம் புகுந்தான். நரசிம்மவர்மன் மானாவுக்கு அடைக்கலங் கொடுத்து ஆதரித்தான். பிறகு மானா இலங்கையிலிருந்த தன் மனைவியைக் காஞ்சிபுரத்திற்கு அழைத்துக்கொண்டு அவளுடன் வாழ்ந்து வந்தான். இவன் பல்லவர்களைப் போலவே வர்மன் என்னும் பட்டத்தைத் தன் பெயருடன் சேர்த்து மானவர்மன் என்று வைத்துக் கொண்டான். இலங்கை நூல்கள் மானவர்மன் என்பதை மானவம்மா என்று கூறுகின்றன. மானவர்மன் பல ஆண்டுகள் நரசிம்மவர்மன் ஆதரவில் இருந்தான். சளுக்கியவேந்தன் புலிகேசி, பல்லவ நாட்டின் மேல் படையெடுத்து வந்தபோது, மானவர்மன் நரசிம்மவர்மனுக்கு உதவியாகப் போர் செய்தான்.
சில ஆண்டு கழிந்த பிறகு நரசிம்மவர்மன், மானவர்மனுக்குத் தன் சேனையைக் கொடுத்து இலங்கையரசைக் கைப்பற்றிக் கொள்ளும் படி அனுப்பினான். மானவர்மன் சேனையுடன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டின் வடகுதியைப் பிடித்துக்கொண்டு அநுடராதபுரத்தின்மேல் சென்றான். இதையறிந்த தாட்டோபதிஸ்ஸன் அநுரையை விட்டு ஓடினான். மானவர்மன் அநுரையைக் கைப்பற்றிக் கொண்டான். அவ்வமயத்தில், நரசிம்மவர்மன் காஞ்சிபுரத்தில் நோயாய்க் கிடக்கிறான் என்று ஒரு வதந்தி பரவிற்று. அதைக்கேட்ட பல்லவச் சேனை வீரர்கள் உடனே காஞ்சிபுரத்திற்குப் போய்விட்டார்கள். மானவம்மா சேனைப் பலமில்லாமல் இருப்பதை யறிந்து, தாட்டோப திஸ்ஸன் அநுரையின் மேல் படையெடுத்து வந்தான். சேனைப் பலமில்லாத நிலையில், தாட்டோபதிஸ்ஸனுடன் போர்செய்து அறியாமையால் உயிரை இழப்பதைவிட, தப்பி ஓடி உயிர்பிழைத்து மற்றொருமுறை வந்து அரசாட்சியைக் கைப்பற்றலாம் என்று எண்ணி மானவர்மனும்
அநுரையைவிட்டுக் காஞ்சிபுரம் போய்விட்டான். ஆகவே, தாட்டோப திஸ்ஸன் பழையபடியே இலங்கையை அரசாண்டான்.
தாட்டோபதிஸ்ஸன் 12 ஆண்டு அரசாண்டு காலமான பிறகு, இளவரசனாயிருந்த அக்கபோதி அரசனானான். இவனை அக்கபோதி நாலாமவன் என்று சரித்திரக்காரர்கள் கூறுவார்கள். இவனுக்கு ஸ்ரீ சங்கபோதி என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
இக்காலத்தில் அநுரையில் தமிழரின் செல்வாக்கு அதிகமாக இருந்ததென்று முன்னமே கூறினோம் அல்லவா? அக்கபோதியின் காலத்தில் தமிழரின் செல்வாக்கு உச்சநிலையில் இருந்தது. பொத்தகுட்டன், மகாகந்தகன் என்னும் இரண்டு தமிழ்த் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் அமர்ந்து அதிகாரபலம் பெற்றிருந்தார்கள். தமிழர்களாகிய இவர்கள் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் பொத்தகுட்டன் பெருஞ்செல்வனாகவும் அரசாங்கத்தில் அதிக பலம் உள்ளவனாகவும் இருந்தான். இலங்கையின் மன்னர்களை அரச பதவியிலிருந்து விலக்கவும் நியமிக்கவும் வல்லமையுடையவனாக இருந்தான். பௌத்தச் சமயத்திற்கு இவன் பல தான தருமங்களைச் செய்தான். மாடம்பிய பரிவேணை என்றும் பௌத்தக் கலாசாலையைக் கட்டி அதற்குப் பல ஊழியர்களைத் தானமாகக் கொடுத்த தோடு தந்தவாயிக சாட்டிகா, நித்தில வெட்டி என்னும் கிராமங்களையும் நில புலங்களையும் அம்பலவாபி என்னும் ஏரியையும் அந்தச் சாலைக்குத் தானம் செய்தான்.9 மேலும், அபயகிரி விகாரையைச் சேர்ந்த கப்பூர பரிவேணையிலும், குருண்டபில்லக விகாரையிலும் மகாராஜகர விகாரையிலும் பாசாடைகளை இவன் கட்டினான். விகாரைகளுக்கு மூன்று கிராமங்களைத் தானம் செய்தான்.
மற்றொரு தமிழத் தலைவனான மகா கந்தகனும் பௌத்த மதத்திற்குத் தான தருமங்களைச் செய்தான். இவன் தன் பெயரினால் கந்தக பரிவேணை என்னும் பௌத்தப் பள்ளியைக் கட்டினான்.
இவ்விரு தமிழர்களை அரசியல் தலைவர்களாகக்கொண்டு இலங்கையை யரசாண்ட அக்கபோதி, பதினாறு ஆண்டு அரசாண்டான். பிறகு இவன் பொலநுவரா என்னும் புலத்திநகரத்தில் காலமானான். தமிழத் தலைவனாகிய பொத்தகுட்டன், இளவரசனாக இருந்த தாட்டாசிவன் என்பவனைச் சிறையில் அடைத்து விட்டு, தத்தன் என்பவனை அழைத்து வந்து அவனுக்கு முடிசூட்டி இலங்கைக்கு அரசனாக்கினான். இந்தத் தத்தன் இலங்கையரசரின் பரம்பரையைச் சேர்ந்தவன், தனபிட்டி என்னும் ஊரில் இருந்தவன். இரண்டு ஆண்டுகள் அரசாண்ட பிறகு இந்தத் தத்தன் காலமானான். ஆகவே பொத்தகுட்டன், உணாநகரத்தில் இருந்த ஹத்ததாட்டன் என்பவனை அழைத்து அவனுக்கு முடிசூட்டி அவனை இலங்கைக்கு அரசனாக்கினான்.
ஹத்ததாட்டன் அரசாட்சியை ஏற்றுக்கொண்ட ஆறாம் திங்களில், நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்திருந்த மானவர்மன், பல்லவச் சேனையுடன் இரண்டாம் முறையாக இலங்கையின்மேல் படையெடுத்து வந்தான். ஹத்ததாட்டன், பொத்தகுட்டன் உதவியுடன் மானவர்மனை எதிர்த்துப் போரிட வந்தான். இருவர் சேனையும் ஒன்று சேர்ந்தால் எதிர்த்துப் போரிட முடியாததென்பதையறிந்த மானவர்மன், பொத்தகுட்டன் சேனையையும் ஹத்ததாட்டன் சேனையையும் ஒன்று சேராதபடி பிரித்துவைத்து ஹத்ததாட்டனுடன் போர்செய்து உயிர் இழந்தான். மானவர்மன் இலங்கைக்கு அரசனானான்.
மானவர்மன் வெற்றியடைந்த படியினாலே, பொத்த குட்டன் மலைய நாட்டிலுள்ள மேருகுண்டாம் என்னும் ஊருக்குப் போனான். மேருகுண்டரத்தை யரசாண்ட சிற்றரசன், பொத்த குட்டனுடைய உயிர் நண்பன். இவன் இப்போது தர்மசங்கடமான நிலையை யடைந்தான். எப்படியென்றால், மானவர்மன் இப்போது இலங்கைக்கு மன்னனாய் விட்டான். அவனுக்குப் பகைவனாகிய பொத்தகுட்டனுக்கு அடைக்கலங்கொடுத்துத் துரோகம் செய்ததாகும். இந்தத் தர்மசங்கட நிலையில் அகப்பட்ட இந்த உத்தமன், தன் நண்பனுக்கும் துரோகம் செய்யாமல், அரச துரோகத்துக்கும் உட்படாமல், தன் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தான். தன் நண்பனான பொத்தகுட்டனை வரவேற்றுத் தன் இல்லத்தில் இடங்கொடுத்தான். பிறகு, நஞ்சு இடப்பட்ட அப்பத்தைத் தின்று தன் உயிரைவிட்டான்.
இவன் இவ்வாறு செய்ததைப் பின்னர் அறிந்த பொத்தகுட்டன், தானும் நஞ்சுகலந்த அப்பத்தை உண்டு உயிர்நீத்தான். தான் விரும்பியபடி யெல்லாம் இலங்கையரசர்களை அமைத்து இலங்கை ஆட்சியை நடாத்திவந்த பொத்தகுட்டனுடைய வாழ்வு கடைசியில் இவ்வாறு முடிவுற்றது.
நாடுவிட்டோடி நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்திருந்த மானவர்மன் நெடுங்காலத்திற்குப்பிறகு, நரசிம்மவர்மன் உதவியினாலே இலங்கையின் மன்னனானான். இவன் அரசனானது நரசிம்ம வர்மனுடைய இறுதிக்காலத்தில் ஆகும்.10
மானவர்மனை முதலாம் மானவர்மன் என்பர் வரலாற்றாசிரியர். இவன் கி.பி. 668 முதல் 703 வரையில் இலங்கையை அரசாண்டான்.
அடிக்குறிப்புகள்
1. Wang Hiuen - tse.
2. PP. 226 and 228 J.B.B.R.A.S. Vol. XVI 1882-85.
3. Ep. Rep. 1904 -5. P. 48., Epi.Ind. Vol. XI. P. 337.
4. Ins. Pudu. State No, 14., Chro. Ins. Pudu. State, No. 14.
5. பெரிய திருமொழி 2 ஆம் பத்து. 9ஆம் திருமொழி –5.
6. Velvikudi grant of Nedunjedaiyan, PP. 291 - 309.
7. Velvikudi grant of Nedunjedaiyan, PP. 291 - 309.
8. Copper plate grants sinnamanur. P. 463. South Indian Inscriptions: vol. III, part IV.
9. E.z. II, P. 10. Note 5.
10. J.R.A.S. 1913, P. 523.