மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/025-052


நரசிம்மவர்மன்

குறிப்பு: வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் (1957) என்ற தலைப்பில் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூலிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

1. நரசிம்மவர்மன்

அரசியல்

மாமல்லன் என்னும் இயற் பெயரையுடைய நரசிம்மவர்மன் மகேந்திரவர்மனுடைய மகன். இவனை முதலாம் நரசிம்மவர்மன் என்று சரித்திரம் கூறுகிறது. மாமல்லன் நரசிம்மவர்மன், சளுக்கிய அரசரின் தலைநகரமான வாதாபி நகரத்தை வென்று கொண்டபடியினாலே வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்று பெயர்பெற்றான். இவன், பல்வ இராச்சியத்தை கி.பி. 630 முதல் 668 வரையில் அரசாண்டான். இவனுடைய தலைநகரம் காஞ்சிபுரம்.

வாதாபிகொண்ட நரசிம்மவர்மன், தன் தந்தையாகிய மகேந்திரவர்மன் காலத்தில் மாமல்லன் என்னும் பெயருடன் இளவரசனாக இருந்த போது, கடல்மல்லை என்னும் துறைமுகப்பட்டினத்தில் வாழ்ந்திருந்தான். சோழர்களுக்குக் காவிரிப்பூம்பட்டினமும், பாண்டியருக்குக் கொற்கையும், சேரருக்கு முசிரியும் துறைமுகப்பட்டினமாக இருந்ததுபோல, பல்லவ அரசர்களுக்குக் கடல்மல்லை துறைமுகப்பட்டினமாக இருந்தது. மாமல்லன் அரசனான பிறகு, இத்துறைமுகப்பட்டினத்துக்குத் தன் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரைச்சூட்டி மாமல்புரம் என்று புதுப்பெயர் கொடுத்தான். இப் பட்டினத்தைப் புத்தம் புதிதாக உண்டாக் கினான் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறு. இவ்வூர் நீர்ப்பெயற்று என்றும் மல்லை என்றும் கடல்மல்லை என்றும் பண்டைக்காலத்தில் பெயர் பெற்றிருந்தது. இந்தப் பழைய பெயரை மாற்றித் தன் பெயரைச் சூட்டி மாமல்லபுரம் என்று வழங்கினான். மாமல்லபுரம் என்னும் பெயர் பிற்காலத்திலேர மகாபலிபுரம் என்று மருவி வழங்கப்பட்டது. பாமரமக்கள் இப்போது இதனை மாவலிவரம் என்று கூறுகின்றனர்.

மாமல்லன் முடிசூட்டிக் கொண்டபோது நரசிம்மவர்மன் என்னும் பட்டப்பெயரைப் பெற்றா

மாமல்லன் நரசிம்மவர்மன், மாமல்ல புரத்திலே சில குகைக் கோயில்களை அமைத்தான். அன்றியும், “இரதங்கள்” என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற பாறைக் கோயில்களையும் அமைத்தான். அழகான சிற்ப உருவங்கள் சிலவற்றையும் அமைத்தான். இவற்றைப் பற்றி இந் நூலில் வேறு இடத்தில் கூறுவோம்.

நரசிம்மவர்மன் இளவரசனாக இருந்தபோது, இவனுடைய தந்தையாகிய மகேந்திரவர்மன் ஆட்சியில், சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி, பல்லவ நாட்டின் மேல் படை எடுத்து வந்து அதன் வடபகுதியாகிய ஆந்திர நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டான்.[1] அன்றியும், தலைநகரமான காஞ்சிபுரத்தின் மேல் புலிகேசி படையெடுத்து வந்தான். மகேந்திரவர்மன் புள்ளலூர் என்னும் இடத்தில் எதிர்த்துப் போர்செய்து அவனை முறியடித்தான். இந்தப் போரில் இளவரசனாகிய நரசிம்மவர்மனும் போர் செய்திருக்கக்கூடும்.

மகேந்திரவர்மனுக்குப் பிறகு நரசிம்மவர்மன் அரசனானான். நரசிம்மவர்மன் காலத்தில், இலங்கையரசுக்குரிய மானவம்மா (மான வர்மன்) என்பவன் அரசு இழந்து காஞ்சிபுரத்துக்கு வந்து நரசிம்மவர்மனிடத்தில் அடைக்கலம் புகுந்தான். மானவர்மன் நெடுங்காலம் இவன் ஆதரவில் இருந்தான். காஞ்சியின்மேல் சளுக்கிய அரசன் புலிகேசி படையெடுத்து வந்த காலங்களில் மானவர்மன் நரசிம்மனுடன் சேர்ந்து புலிகேசியை எதிர்த்துப் போரிட்டான். நரசிம்மன் வாதாபியை வென்ற பிறகு, தன் சேனையை மானவர்மனுடன் இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்று மானவர்மனை அந்நாட்டுக்கு அரசனாக்கினான்.

நரசிம்மவர்மன் காலத்திலும் புலிகேசி, மீண்டும் பலமுறை காஞ்சிபுரத்தின்மேல் படையெடுத்து வந்தான். படையெடுத்துவந்த புலிகேசியை நரசிம்மவர்மன் பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் எதிர்த்துப் போர் செய்து முறியடித்தான். போர் நடந்த சூரமாரம், பரியளம் என்னும் ஊர்கள் எவை என்பது இப்போது தெரியவில்லை. மணி மங்கலம் என்பது, செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு தாலூகாவில் உள்ள மணிமங்கலம் என்னும் கிராமம் ஆகும். இது பல்லவரின் தலைநகரமான காஞ்சிபுரத்திற்கு இருபது மைல் தூரத்தில் இருக்கிறது.

மாமல்லன் புலிகேசியைத் துரத்தியதொடு நிற்கவில்லை. தன் தந்தை காலத்தில், பல்லவர்களுக்குரிய ஆந்திர நாடுகளைக் கவர்ந்து கொண்ட புலிகேசி காஞ்சிபுரத்தின் மேல் படையெடுத்து வந்ததையும், பின்னர் தன் காலத்தில் மீண்டும் பலமுறை காஞ்சியின்மேல் படையெடுத்து வந்ததையும் மாமல்லன் மறக்கவில்லை. பல்லவரின் பிறவிப் பகைவனாய் அடிக்கடி பல்லவ அரசருடன் போர்தொடுக்கிற புலிகேசியை அடியோடு அழிக்க வேண்டும் என்னும் எண்ணம் இவனுக்கு உண்டாயிற்று. இதற்காக இவன் சமயம் பார்த்திருந்தான். தக்க சமயமும் வாய்த்தது. புலிகேசி, நரசிம்மவர்மன் மேல் மீண்டும் படையெடுத்து வந்தான்.அப்போது நரசிம்மவர்மன் அவனை எதிர்த்துப் போர் செய்து அவனைக் கொன்றான். பிறகு, புலிகேசியின் தலைநகரமான வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்று அந்த நகரத்தையும் கைப்பற்றினான். இதனால் இவனுக்கு வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்னும் பெயரும உண்டாயிற்று.

கூரம் செப்பேட்டுச் சாசனம் இவனுடைய வெற்றியை இவ்வாறு கூறுகிறது :- “நரசிம்மவர்மனுடைய (சிம்ம விஷ்ணுவினுடைய) பேரன், உதயகிரியிலே சூரியனும் சந்திரனும் தோன்றியதுபோல இந்த அரசகுடும்பத்திலே தோன்றி, இந்த அரசகுடும்பத்தின் தலைவணங்கி யறியாத மன்னர்களின் மணிமுடியில் சூடாமணி போன்று விளங்கிப் பகைமன்னராகிய யானைகளுக்கு அரிமா போன்று, நரசிங்க மூர்த்தியே மண்ணுலகத்தில் அரசகுமாரனாக அவதரித்தாற் போலப் பிறந்தான். இவன் சோழர் கேரளர் களபார் பாண்டியர்களைப் பலமுறை வென்று நூற்றுக் கணக்கான போர்களைச் செய்து ஆயிரங்கை படைத்தவனை (கார்த்த வீரியார்ச்சுனனைப்) போன்று விளங்கினான். மேலும் பரியளம், மணிமங்கலம், சூராமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புறங்காட்டி யோடிய புலிகேசியின் முதுகிலே விஜயம் (வெற்றி) என்னும் சொல்லைச் செம்புப் பட்டயத்தில் எழுதுவதுபோல எழுதினான். பிறகு, கும்ப முனி (அகத்தியர்) வாதாபியை (வாதாபி என்னும் அசுரனை) அழித்தது போல, வாதாபியை (வாதாபி நகரத்தை) அழித்தான்.”[2]

உதயேந்திரச் செப்புப் பட்டயம் இவ்வாறு கூறுகிறது: “பரியள மணி மங்கல சூரமார முதலான இடங்களில் வல்லப ராஜனைப் பலமுறை வென்று, வாதாபியை அழித்த அகத்தியரைப்போல வாதாபியையழித்த நரசிம்மவர்மன், அவனுக்கு (மகேந்திரவர்மனுக்கு) மகனாகப் பிறந்தான்.”[3]

வேலூர்ப்பாளைய சாசனம் இவ்வாறு எழுதுகிறது: “உபேந்திரனை (விஷ்ணுவை)ப்போன்று புகழ்படைத்தவனும் பகைவர் கூட்டங்களை வென்று வாதாபி நகரத்தின் நடுவில் வெற்றித் தூணைக் கைக்கொண்டவனுமாகிய நரசிம்மவர்மன், மகேந்திரவர்மனுக்கு மகனாகப் பிறந்தான்.”[4]

காசாகுடி செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு புகழ்கிறது: “அவனுக்கு (மகேந்திரவர்மனுக்கு) வெற்றி வீரனாகிய நரசிம்மவர்மன் பிறந்தான். இவன், இலங்கையை வென்று, இராமனுடைய வீரப்புகழுக்கு மேம்பட்ட புகழை யடைந்து, பகைவர்களுக்குத் தூமகேதுவைப் போல இருந்து, குடமுனியைப்போல வாதாபியை வென்றான்.”[5] (குடமுனியாகிய அகத்தியர் வாதாபி என்னும் அசுரனை வென்றது போல இன்னும் சளுக்கியரின் வாதாபி நகரத்தை வென்றான் என்பது கருத்து.)

புலிகேசியின் மகனான முதலாம் விக்ரமாதித்தியனுடைய கர்நூல் செப்பேட்டுச் சாசனம், “மூன்று அரசர்கள் சேர்ந்து புலிகேசியை வென்றார்கள் என்று கூறுகிறது.”[6] புலிகேசியைவென்ற மூன்று அரசர்களில் மாமல்லனாகிய நரசிம்மவர்மன் ஒருவன். மற்ற இருவரில் மானவம்மமா என்பவன் ஒருவன். இவன் இலங்கையரசுக்கு உரியவனாய் அரசு இழந்து நரசிம்மவர்மனிடம் வந்து அடைக்கலம் புகுந்து காஞ்சிபுரத்திலேயே நெடுங்காலம் இருந்தவன். இவன் நரசிம்மவர்மனுடன் சேர்ந்துப் புலிகேசியுடன் போர்செய்தான் என்று சூலவம்சம் (47-ஆம் அதிகாரம்) என்னும் நூல் கூறுகிறது.[7] நரசிம்மவர்மனுக்கு உதவியாக இருந்த இன்னொரு அரசன் புதுக் கோட்டையைச் சேர்ந்த கொடும்பாளூரில் இருந்த சமராபிராமன் என்பவன். இந்தச் சமராபிராமன், சளுக்கிய அரசனை அதிராஜ மங்கலம் என்னும் ஊரில் கொன்றான் என்றும், இவனுடைய தகப்பனான பரதுர்க்கமர்த்தனன் வாதாபி நகரத்தை வென்றான். என்றும் கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் சாசனம் கூறுகிறது.[8]

இதில், சளுக்கிய அரசனை அதிராஜமங்கலத்தில் சமராபி ராமன் கொன்றான் என்பதை, சளுக்கிய அரசனான புலிகேசியை அதிராஜ மங்கலம் என்னும் மணிமங்கலத்தில், சமராபிராமன் கொன்றான் என்று சரித்திர ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். போர்க்களத்திலே புலிகேசி இறந்த பிறகு, அவனுடைய வாதாபி நகரத்தின்மேலே நரசிம்மவர்மன் படையெடுத்துச் சென்றபோது, சமராபிராமனுடைய தகப்பனான பரதுர்க்கமர்த்தனனும் அவனுடன் போய் வாதாபியை அழித்தான் என்பது தெரிகிறது.

இவ்வாறு நரசிம்மவர்மன், மானவர்மன், கொடும்பாளூர் சிற்றரசன் (தந்தை மகன் இருவரும்) ஆகிய மூன்று அரசர்களும் சேர்ந்து புலிகேசியை வென்றார்கள் என்பது தெரிகிறது.

நரசிம்மவர்மனுடைய படைத்தலைவராக இருந்தவர் பரஞ்சோதியார் என்பவர். இவருக்குச் சிறுத்தொண்டர் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவர் நரசிம்மவர்மனுடைய யானைப் படைத்தலைவராக இருந்து வாதாபி நகரை வென்றார். இவர் வாதாபி நகரத்தை வென்ற செய்தியைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது:

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரைத் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பூன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்

இன்னனவெண்ணில கவர்ந்தே யிகலரசன் னகொணர்ந்தார்.”

(சிறுதொண்ட நாயனார் புராணம்: 6.)

வாதாபியை (வாதாபி எனினும் வாதாவி எனினும் ஒன்றே) வென்ற பிறகு சிறுத்தொண்டராகிய பரஞ்சோதியார் அரச ஊழியத்தைவிட்டு, பக்தியில் ஈடுபட்டு, இவர் காலத்தில் சமயத்தொண்டு செய்துவந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் என்னும் சைவ நாயன்மார்களுடன் நட்புக் கொண்டிருந்தார். பெரியபுராணத்தில் கூறப்படுகிற சிறுத்தொண்ட நாயனார் என்பவர் இவரே.

நரசிம்மவர்மன் வாதாபியை வென்றது கி. பி. 642-இல் ஆகும் புலிகேசியைக் கொன்று வாதாபியைக் கைப்பற்றியதனால், மகேந்திரவர்மன் காலத்தில் புலிகேசி கவர்ந்து கொண்ட பல்லவ அரசின் ஆந்திரப் பகுதி, மீண்டும் பல்லவர் வசம் ஆயிற்று என்று கருதலாம். அஃதாவது, நரசிம்மவர்மன் தன் தந்தையார் இழந்த ஆந்திரநாடுகளை மீட்டுக் கொண்டான். ஆனால் மீட்கப்பட்ட அந்நாடுகள் நெடுங்காலம் இவனிடத்தில் இருக்கவில்லை; ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதிகள் மீண்டும் சளுக்கியர் வசம் ஆயின.

வாதாபி நகரத்தை வென்ற நரசிம்மவர்மன் அந் நகரத்திலே வெற்றிக் கம்பம் ஒன்றை நாட்டினான். இந்த வெற்றிக் கம்பம் பிற்காலத்தில் உடைக்கப்பட்டது. இந்தக் கம்பத்தின் உடைபட்ட ஒரு பகுதி இன்றும் அந்நகரத்தில் காணப்படுகிறது. சிதைந்துபோன சாசன எழுத்துக்களும் இதில் காண்ப்படுகின்றன. இதில் “மாமாமல்லன்” “ஹிதி¥பஜாங் கரேஸர பல்லவ” “(நர)சிம்மவிஷ்ணு” என்னும் சொற்கள் பல்லவக் கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளான.1

நரசிம்மவர்மன் வாதாபி நகரத்தை வென்ற பிறகு, அந்நகரம் பதின்மூன்று ஆண்டுவரையில் அரசன் இல்லாமல் இருந்தது. இதற்குக் காரணம், புலிகேசியின் மக்கள் அரசுரிமைக்காகத் தம்முள் கலகஞ் செய்து போரிட்டுக் கொண்டதேயாகும். பிறகு கி. பி. 655-இல் புலிகேசியின் பிள்ளைகளில் ஒருவனான விக்கிரமாதித்தியன் (முதலாவன்) சளுக்கிய நாட்டின் அரசனானான். இவன் அரசனானவுடன் சேனையைத் திரட்டிக்கொண்டு பல்லவ நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். இவன் கி. பி. 655-முதல் 381 வரையில் அரசாண்டான். ஆகவே, நரசிம்மவர்மனும் அவனுடைய மகனும் பேரனும் விக்கிரமாதித்தியனுடன் அடிக்கடி மகனும் பேரனும் விக்கிரமாதித்தியனுடன் அடிக்கடி போர்செய்ய நேரிட்டது. விக்கிரமாதித்தியன், நரசிம்மவர்மன் மீட்டுக் கொண்ட ஆந்திரப் பகுதி நாடுகளை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான்.

நரசிம்மவர்மனுக்கு மாமல்லன், வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. மகாபலிபுரத்துத் திரி மூர்த்திக் குகைக் கோயிலில் மல்ல என்னும் பல்லவக் கிரந்த எழுத்துச் சாசனமும், திருக்கழுக்குன்றத்து ஒற்றைக்கல் மண்டபம் என்னும் குகைக் கோயிலிலே “வாதாபிகொண்ட நரசிங்கப் போத்தரசர்” என்னும் தமிழ் எழுத்துச் சாசனமும் காணப்படுகின்றன.

‘வாதபிகொண்ட நரசிங்கப் போத்தரசர்’ என்பது இதன் வாசகம் 7-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்து

தன் தந்தையாகிய மகேந்திரவர்மனைப் போலவே நரசிம்மவர்மனும் பல சிறப்புப் பெயர்களைக் கொண்டிருந்தான்.

மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவ இராச்சியம், வடக்கே வடபெண்ணை ஆறு முதல் தெற்கே வெள்ளாறு வரையில் பரவியிருந்தது. அஃதாவது தொண்டைநாடு சோழநாடு ஆகிய இரண்டு நாடுகளைக் கொண்டிருந்தது.

மகாபலிபுரம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற மாமல்லபுரத்திலே, தர்மராசரதம் என்று வழங்கப்படுகிற கற்கோயிலில் இவனுடைய சிறப்புப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்பாறைக் கோயிலில் காணப்படுகிற இவனுடைய சிறப்புப் பெயர்களாவன

‘ஸ்ரீநரசிம்ம’ என்பது இதன் வாசகம். வடமொழி எழுத்து

ஸ்ரீநரசிம்ம. (இப் பெயர் இரண்டு இடங்களில் எழுதப்பட்டுள்ளது), பிருதிவீசார. (உலகத்தின் சாரமாகவுள்ளவன்), ஸ்ரீபர (செல்வத்தைத் தாங்கியுள்ளவன்), புவன பாஜன (உலகத்தை உரிமையாகக் கொண்டவன்), ஸ்ரீமேக (செல்வக் கொண்டல்), திரைலோக்ய வர்த்தன (மூவுலகத்தையும் வளர்ப்பவன்), விதி (உலக ஒழுக்கத்தை அமைப்வன்), அநேகோ பாய (பல சூழ்ச்சியறிந்தவன்), ஸ்திரபக்தி (நிலைத்த பக்தியுள்ளவன்), மதனாபிராம (மன்மதன் போன்ற அழகுள்ளவன்), அப்ரதிஹத ஸாஸன (மறுக்கமுடியாத ஆணையை யுடையவன்), காம லலித (காமனைப் போன்ற அழகன்), அமேய மாய (காணமுடியாத சூழ்ச்சிகளை யுடையவன்), சகல கல்யாண (எல்லா நன்மைகளையும் உடையவன்), நயனமனோகர (காட்சிக்கு இனியன்), பராபர (ஆற்றல் வாய்ந்தவன்), அநுபம (நிகரற்றவன்), நயாங்குர (அறிவுக் கொழுந்து), லலித (இனியன்), சர்வதோபத்ர (அகில புனிதன்), ஸ்ரீநிதி (செல்வமுடையவன்), திருத்தர (நிகரற்றவன்), விப்ராந்த (மனவெழுச்சியுள்ளவன்), சத்ய பராக்ரமன் (உண்மை வீரன்), ரணஜெய (போரில் வெற்றி கொள்பவன்)2

நரசிம்மவர்மன் காலத்தில் ஹியூங் சுவாங் என்னும் சீன நாட்டுப் பௌத்த யாத்திரிகர் கி. பி. 640-இல் காஞ்சிபுரத்துக்கு வந்து சிலகாலம் தங்கியிருந்தார்; இவன் காலத்திலே சைவ சமயாசாரியர்களான, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்ட நாயனார், நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார், திருநீல கண்டப்பெரும்பாணர், திருநீலநக்கர், முருக நாயனார் முதலியோரும், முதலாழ்வார் மூவரும், திருமழிசை ஆழ்வாரும் வாழ்ந்திருந்தார்கள்.

நரசிம்மவர்மன் சைவ சமயத்தைச் சார்ந்தவன். இவன் தன் வாழ்நாட்களில் பெரும்பாகத்தைச் சளுக்கிய அரசனுடனும் மற்ற அரசர்களுடனும் போர் செய்வதிலே கழித்தான். ஆயினும், மாமல்லபுரத்திலே “இரதங்கள்” என்று கூறப்படுகிற பாறைக் கோயில்களையும் சில குகைக் கோயில்களையும் அமைத்தான். தர்மராச ரதம் என்று இப்போது வழங்கப்படுகிற அத்யந்தகாம பல்லவேசுவரம் என்னும் மாடக் கோயிலிலே பாறைச் சுவரிலே இவனுடைய உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த உருவத்தில் நரசிம்மவர்மன் (மாமல்லன் நீண்ட கிரீடம் அணிந்து, காதுகளில் அணிந்த குண்டலங்கள் தோள்களிலே புரள, கழுத்தில் மணிமாலை விளங்க, மார்பிலே தடித்த பூனூலை அணிந்திருக்கிறான். இடக் கையை இடுப்பில் ஊன்றி வலக் கையைத் தொங்கவிட்டிருக்கிறான். அரையில் மட்டும் பட்டாடை அணிந்திருக்கிறான். அக்காலத்து வழக்கப்படி (போர்வை சட்டை முதலியன அணியாமல்) வெற்றுடம்பாக இருக்கிறான். அகன்று பரந்த முகத்தில் அமைதியும் மன உறுதியும் ஆழ்ந்த சிந்தனையும் தோன்றுகின்றன. பாதங்கள் முற்றுப்பெறாமல் பாறையோடு பாறையாகக் காணப்படுகின்றன. இந்தச் சிற்பத்தை அமைத்த சிற்பி எக்காரணத்தினாலோ பாதங்களை முற்றும் அமைக்காமல் அரைகுறையாக விட்டுவிட்டான்.

நரசிம்மவர்மனுடைய இந்தச் சிற்ப உருவம் பட்ட மகிஷியில்லாமல் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசர்களின் உருவச்சிலைகள் எல்லாம் பட்டமகிஷியரோடு அமைக்கப்பட்டுள்ளன. மாமல்ல புரத்து வராகப் பெருமாள் குகைக்கோயிலில் இருக்கிற மகேந்திரவர்மனுடைய உருவச்சிற்பம் பட்டமகிஷியரோடு அமைந்துள்ளது. அங்கேயுள்ள இன்னொரு சிற்பமும் (சிம்ம விஷ்ணுவின் சிற்பம்) பட்டமகிஷியரோடு அமைக்கப்பட்டிருக்கிறது. மாமல்லபுரத்து அர்ச்சுன இரதத்தில் இருக்கிற பல்லவ அரசரின் சிற்ப உருவமும, உத்தரமேரூர் மாடக்கோயிலில் இருக்கிற மற்றொரு பல்லவ அரசனுடைய சிற்ப உருவமும் பட்டமகிஷியருடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நரசிம்மவர்மனுடைய உருவச்சிற்பம் மட்டும் பட்டமகிஷியில்லாமல் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இச் சிற்ப உருவம் அமைக்கப்பட்ட காலத்தில் பட்டமகிஷி இறந்துவிட்டாள் போலும்.

அடிக்குறிப்புகள்

1. Ind. Atni. Vol. IX. P. 199.

2. S.I.1. Vol. I. குறிப்பு. இந்தச் சிறப்புப் பெயர்களுடன் இந்தக் கற்கோயிலில் அத்யந்தகாம என்னும் இன்னொரு பெயரும் இன்னொருவகையான எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பெயர் நரசிம்ம வர்மனுடைய பேரனான பரமேஸ்வரவர்மனைக் குறிக்கும்.

3. புடைப்புச் சிற்பம் - Bas relief.


நரசிம்மவர்மன் காலத்தில்
தென்னிந்தியா

  1. 1. இந்நூலாசிரியர் எழுதியுள்ள மகேந்திரவர்மன் என்னும் நூல் காண்க.
  2. 1. A Pallava grant from Kuram. P. 144-155. S. I. I. Vol.I
  3. 2. Udayendram Plates of Nandivarman Pallava Malla. S. I. I. Vol. II. P. 361 - 371.
  4. 1. Velurpalayam Plates of Vijaya Nandivarman S. I. I. Vol. II. P. 501-517.
  5. 2. Kasakudi Plates of Nandivarman, Pallava Malla. S. I. I. Vol. P. 342-361.
  6. 3. Karnul Plates of Vikramaditya I, B. B. R. A. S. XV. I. P. 226.
  7. 4. No. 14.P.9-10. Inscriptions (Texts) of the Pudukkottai State. No.14. Chronological List of Inscriptoins of the Pudukkottai State.
  8. 5. Ind. Atni. Vol. IX. P. 199.