மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/033-052
2. வேறு அரசர்கள்
வடநாட்டரசர்
விஜயாதித்தியன்
தெள்ளாறெறிந்த நந்திவர்மன் நந்திவர்மன் காலத்தில் பல்லவ நாட்டிற்கு வடக்கே இருந்த அரசர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.
அக்காலத்தில் கீழைச் சாளுக்கிய இராச்சியத்தை அரசாண்டவன் விஜயாதித்தியன் (இரண்டாவன்). இவன் வெங்கியைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டான். இவன், இராஷ்டிரகூட அரசர்களின் கீழடங்கி இருந்தான். கி. பி. 847-இல் காலமானான். இவனுக்குப் பிறகு இவன் மகன் விஷ்ணுவர்த்தனன் (ஐந்தாவன்) அரசனானான். இவன் நெடுங்காலம் அரசாளவில்லை. கி. பி. 848-இல் காலமானான்.
பிறகு, இவன் மகன் விஜயாதித்தியன் (மூன்றாமவன்) அரசாட்சியை ஏற்றான். இவனுடைய அமைச்சன் வினயாதி சர்மன் என்பவன். இவனுடைய சேனைத் தலைவர்கள் கடெயராசன் என்பவனும் அவன் மகனான பாண்டரங்கனும் ஆவர். இவர்களைக் கொண்டு இவன் பல போர்களை வென்றான். பல்லவ அரசருக்கு உரியதாக இருந்த நெல்லூரை (நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது) இவன் கைப்பற்றிக் கொண்டான். கங்க அரசனை வென்றான்.
இராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷனுக்குப் பிறகு அரசாண்ட கிருஷ்ணன் (இரண்டாவன்) என்பவனையும் அவனுக்கு உதவியாக இருந்த காலசூரி அரசன் சங்கிலன் (சங்குவன்) என்பவனையும் கிரணபுரத்தில் வென்றான். இராஷ்டிரகூட தேசத்து அசலபுரத்தையும் சக்கர கூட நகரத்தையும் கெளுத்தி எரித்தான். இவ்வாறு இராஷ்டிரகூட அரசனை வென்று அவனுடைய தலைமையிலிருந்து விலகிச் சுதந்தரனாக் அரசாண்டான் விஜயாதித்தியன். விஜயாதித்தியன் கி. பி. 848 முதல் 892 வரையில் நாற்பத்து நான்கு ஆண்டு அரசாண்டான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவை : குணகன், பரசக்கர ராமன், ரணரங்க சூத்ரகன், மனுஜப் பிரகாரன், விக்ரம தவலன், நிருபதி மார்த்தாண்டன், விருதங்கபீமன், புவனகந்தர்ப்பன், அரசங்ககேசரி, திபுரமர்த்திய மகேஸ்வரன், திரிபுவனாங்குசன் என்பன.
அமோசுவர்ஷன்
தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இராஷ்டிரகூட இராச்சியத்தை அரசாண்டவன் சர்வன் என்பவன். சர்வனுக்கு அமோகவர்ஷன் என்னும் பெயரும் உண்டு. இவன் கி. பி. 814 முதல் 878 வரையில்அரசாண்டான். இவன் அரசாட்சிக்கு வந்தபோது இவனுக்கு வயது பதினான்கு. ஆகவே, இவனுடைய உறவினனும் குஜராத்து தேசத்தில் சாமந்த அரசனாக இருந்தவனும் ஆன கர்க்கன் என்பவன், இவன் வயது அடையும்வரையில் அரசாட்சியை நடத்தினான். இவன், ஏறக்குறைய கி. பி. 830 -இல், வெங்கியிலிருந்து கீழைச்சளுக்கிய இராச்சியத்தை அரசாண்ட விஜயாதித்தியனை (இரண்டாமவன்) வென்று தன் கீழடக்கினான். ஆனால், மேலே கூறியபடி, விஜயாதித் தியன் பேரனான மூன்றாம் விஜயாதித்தியன், தன் சேனைத் தலைவன் பாண்டுரங்கன் உதவியினால் கி. பி. 845-இல் அமோகவர்ஷனை வென்று சுதந்தரம் அடைந்தான்.
அமோகவர்ஷன் கங்க அரசர்களுடன் விடாமல் போர் செய்தான். இப்போர் ஏறக்குறைய இருபது ஆண்டு நடந்தது. கடைசியில் கி. பி. 860-இல் அமோகவர்ஷன் சேனையைக் கங்க அரசன் முறியடித்துத் துரத்தினான். பிறகு, அமோகவர்ஷன் தன் குமாரத்தி சந்த்ரோபலப்பை (சந்தோபலவ்வை) என்பவளை பூதுகன் என்னும் கங்க அரசனுக்கு மணஞ் செய்து கொடுத்தான். இத் திருமணத்துக்குப் பிறகு கங்க ராஷ்டிரகூடப் போர் ஓய்ந்தது.
அமோகவர்ஷன் மாளவ தேசத்தைக் கைப்பற்ற அடிக்கடி படையெடுத்துச் சென்றான். அந்த மாளவ தேசத்தைக் கைப்பற்ற பிரதிஹார அரசனும் முயற்சி செய்தான். அந்தப் போர்களில் அமோகவர்ஷனுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தன. கடைசியில் மாளவ தேசத்தைப் பிரதிஹார அரசன் கைப்பற்றிக் கொண்டான்.
அங்கம், வங்கம், மகதம் என்னும் தேசங்களை அமோகவர்ஷன் கைப்பற்ற முயன்றான். இந்தத் தேசங்கள் பால அரசர்களுக்குரியதாக இருந்தன. ஆகவே, இவன் பால அரசனான தேவபாலனுடன் போர் செய்தான் என்று தெரிகிறது. குஜராத்தை அரசாண்ட சாமந்த அரசனான கர்க்கன் (அமோகவர்ஷனின் உறவினன்) கி. பி. 830-இல் காலமானான். அவனுக்குப் பிறகு, அவன் மகன் துருவன் (முதலாவன்) அரசனானான். துருவனுக்கும் அமோக வர்ஷனுக்கும் எக்காரணத்தினாலோ பகை மூண்டது. 845-இல் துருவன் கொல்லப்பட்டிறந்தான். துருவன் மகன் அகால வர்ஷன், அமோகவர்ஷனுடன் போராடினான். அகால வர்ஷன் இறந்த பிறகு அவன் மகன் துருவன் (இரண்டாவன்) ஆட்சிக்கு வந்தான்.
அந்தச் சமயத்தில் கூர்ஜ்ஜர பிரதிஹார அரசனாகிய போஜன் என்பவன் இராஷ்டிரகூட தேசத்தின்மேல் படையெடுத்துவர முயற்சி செய்தான். இதையறிந்த துருவனும் அமோகவர்ஷனும் தம்மில் போர் செய்வதை நிறுத்திக் கொண்டு இருவரும் சேர்ந்து பிரதிஹார அரசன் போஜனை எதிர்க்க ஆயத்தமாக இருந்தனர். இவ்வாறு இவர்களுடைய போர் கி. பி. 860-இல் சமாதானமாக மு ந்தது. எதிர் பார்த்தபடி, போஜன் இவர்கள்மேல் படையெடுத்து வரவில்லை.
அமோகவர்ஷன் புலவர்களை ஆதரித்தான். கன்னட மொழிப்புலவர்களான ஆதிபுராணம் இயற்றிய ஜினசேனரும், கணித சாரார்த்தத சங்கிரகம் எழுதிய மகா வீராசாரியாரும், அமோகவிருத்தியை இயற்றின சாகடாயனரும் இவ்வரசன் காலத்திலிருந்த புலவர்கள், அமோகவர்ஷன், கன்னடச் செய்யுள் இலக்கண நூலாகிய கவிராஜ மார்க்கம் என்னும் நூலை இயற்றினான். அமோகவர்ஷனுக்கு நிருபதுங்கன், மகாராஜ ஷண்டன், வீரநாராயணன், அதிசயதவ்லன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. நந்திவர்மன் பல்லவ மல்லன் காலத்தில், பல்லவ இராச்சியத்தின் வடக்கிலிருந்த இராஷ்டிரகூட அரசனும் கீழைச் சாளுக்கிய அரசனும் தங்களுக்குள் போர்செய்து கொண்டிருந்தபடியினாலே அவர்களுக்கும் பல்லவனுக்கும் அடிக்கடி போர் நிகழவில்லை. ஆனால், அவன் பேரனான தெள்ளாறெறிந்த நந்திவர்மன், இராஷ்டிரகூட அரசனுடன் போர்செய்ய நேரிட்டது. அவன் குறுகோடு என்னும் இடத்தில் செய்த போரை நந்திக் கலம்பகம் கூறுகிறது. குறுகோட்டைப் போரைப் பற்றி முன்னரே கூறியுள்ளோம்.
தென்னாட்டரசர்
முத்தரையர்
பல்லவ இராச்சியத்துக்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் முத்தரையர் என்னும் சிற்றரசர் அரசாண்டனர். முத்தரையரை முத்தரசர் என்றும் கூறுவர். முத்தரையர் ஆண்ட நாடு, இப்போதைய தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களில் அடங்கி இருந்தது. முத்தரையரின் தலைநகரம் தஞ்சாவூர்.
முத்தரையரை நாலடியார் என்னும் நூல் குறிப்பிடுகிறது.
"பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்"1
என்றும்,
"நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்"2
என்றும் கூறுகிறது.
முத்தரையரைச் சிலர், பாண்டிய அரசரின் குலத்தவர் என்று கூறுகிறார்கள். இது தவறு என்று தோன்றுகிறது. முத்தரையர் களபர அரசரின் வழியினர் போலத் தோன்றுகின்றனர்.
முத்தரையர், பல்லவ அரசருக்குக் கீழடங்கியிருந்தனர். பாண்டியர், பல்லவ இராச்சியத்தின் மேல் படையெடுத்து வந்தால், அவரை எதிர்த்துத் தடுப்பதற்காக முத்தரையர் பல்லவருக்கு உதவியாக இருந்தார்கள். முத்தரையர் பல்லவருக்குக் கீழடங்கி யிருந்தபோதிலும், பாண்டியர் அவரை வென்ற காலத்தில், பாண்டியருக்குக் கீழடங்கியிருந்தார்கள்.
முத்தரைய அரசர் பரம்பரையில் பேர் பெற்ற சில அரசர் இருந்தார்கள். அவர்களுடைய சாசனங்கள் சில செந்தலை, நாரதத்தமலை, சிவலப்பேரி, திருமய்யம், குன்னாண்டார் கோயில் முதலிய இடங்களில் கிடைத்துள்ளன.
மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இருந்த முத்தரையன் சாத்தன் பழியிலி என்பவன். இவன், விடேல் விடுகு முத்தரையனுடைய மகன். சாத்தன் பழியிலி, நார்த்த மலையில் பாறையைக் குடைந்து ஒரு குகைக் கோயிலை அமைத்தான். இவனுக்குச் சிறிய நங்கை என்னும் பெயருள்ள மகள் ஒருத்தியிருந்தாள். இவள், மீனவன் தமிழதிரையன் என்னும் சிறப்புப் பெயருடைய மல்லன் அநந்தன் என்பவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்.3
சாத்தம் பழியிலியின் சாசன எழுத்து. “விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தம் பழியிலி” என்பது இதன் வாசகம்.
சோழ அரசர்
அக்காலத்தில் சோழநாடு பல்லவ அரசுக்குக் கீழ்ப்பட்டிருந்தது. சோழ அரச குடும்பத்தார் உறையூர், திருவாரூர், பழையாறை முதலிய இடங்களில் பல்லவ அரசருக்குக் கீழடங்கிச் சிற்றரசர்களாக இருந்தார்கள். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த சோழ அரசன் குமாராங்குசன் என்பவன். இவனைப்பற்றி நந்திவர்மனுடைய வேலூர்பாளைய சாசனம் இவ்வாறு கூறுகிறது.
"தன்னுடைய வீரத்தினாலே விளங்கப்பட்டவனும் தன்னுடைய ஈகையினாலே கர்ணனுக்குச் சமானமானவனும் நல்ல ஒழுக்கமுடையவனும் வீரமிக்க சோழ குலத்துக்குச் சூளாமணி போன்றவனுமான் குமாரராங்குசன்” என்றும், “சோழ மகாராசன்" என்றும் கூறுகிறது.
தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலே பாண்டிய நாட்டை வரகுணமகாராசனும் அவனுக்குப் பிறகு அவன் மகனான ஸ்ரீ மாறனும் அரசாண்டார்கள். வரகுணனை வரகுண பாண்டியன் என்றும் வரகுண மகாராசன் என்றும் கூறுவர். இவனே முதலாம் வரகுணபாண்டியன் ஆவான். மாணிக்கவாசக சுவாமிகள் தமது திருக்கோவையாரில் கூறுகிற வைகுண பாண்டியன் இவனே. வரகுண பாண்டியனுக்கு மாறஞ்சடையன் என்னும் பெயரும் உண்டு.
இவன் அரசாண்ட காலத்தைத் திட்டமாகக் கூற முடியவில்லை. ஆனால், கி. பி. 825 முதல் 840 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். சின்னமனூர் பெரிய செப்பேட்டுச் சாசனம் இவனைக் கூறுகிறது. ஆனால், அவன் செய்த போர்களைப்பற்றி ஒன்றும் கூறவில்லை.
இவனுக்குப் பிறகு அரசாண்ட இவன் மகன் ஸ்ரீ மாறனுக்கு, ஸ்ரீ வல்லபன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன் என்னும் பெயர்கள் உண்டு. இவன் பல போர்களை வென்றான் என்று சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது.
பாண்டிய அரசர் பரம்பரை4
1. கடுங்கோன் (பாண்டியாதிராசன்)
(கி. பி. 300-க்குப் பிறகு பாண்டி
நாட்டை அரசாண்ட களபரரை
வென்று மீண்டும் பாண்டியர்
ஆட்சியை நிலைநாட்டினான்.)
|
2. மாறவர்மன் அவனை சூளாமணி
|
3. செழியன் சேந்தன்
|
4. அரிகேசரி மாறவர்மன்
(அசமசமன், வில்வேலி
நெல்வேலிப் போரை வென்றவன்.)
|
5. கோச் சடையன் (ரணதீரன்)
6. தேர்மாறன் (இராஜசிம்மன் I)
(அரிகேசரி பராங்குசந் மாரவர்மன்அரிகேசரி5
பல்லவமல்லனை வென்றான்.) (பராங்குசன்)
||
7. ஸ்ரீடிலன் (நெடுஞ்சடையன்) (பராந்தகன்)
ஜடிலன்
இராஜசிம்மன் II
|
வரகுண மகாராசன்
(மாரஞ் சடையன்)
|
ஸ்ரீ மாரன் ஸ்ரீ வல்லபன்
(ஏகவீரன், பரசக்கர
கோலாகலன்)
பாண்டியன் வெற்றி
பாண்டியன் வரகுண மகாராசன், பல்லவ மன்னனான நந்திவர்மன் காலத்திலும் அவன் மகனான தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலும் பாண்டி நாட்டை அரசாண்டான். தந்திவர்மன் காலத்தில் வரகுணன், பல்லவ இராச்சியத்தின்மேல் படையெடுத்துச் சென்று, பல்லவர்க்குரியதாக இருந்த சோழநாட்டை வென்றான். முதலில் டவை என்னும் ஊரைக் கைப்பற்றினான்.6
திண்டுக்கல்லுக்கடுத்த இராமநாதபுரத்தில் மாறஞ்சடையன் காலத்துச் சாசனம், பராந்தகப்பள்ளி வேளானான நக்கம்புள்ளன் என்பவன் ஒரு ஏரியைத் தோண்டினான் என்று கூறுகிறது. இந்த நக்கம் புள்ளன், பாண்டியனுடைய சேனைத் தலைவர்களில் ஒருவன் போலும். பாண்டியன் சோழநாட்டில் சென்று இடவை என்னும் ஊரை வென்றபோது, இந்த நக்கம்புள்ளன் பாண்டியன் சார்பாகப் போர் செய்தான். இந்தப் போர் தந்திவர்மன் காலத்தில் நடைபெற்றது.7
திருச்சிராப்பள்ளி, அம்பாசமுத்திரம் என்னும் ஊர்களில் உள்ள வரகுணபாண்டியனுடைய சாசனங்கள், வேம்பில் என்னும் ஊரைப் பிடித்து அங்கிருந்த கோட்டையை அழித்தான் என்று கூறுகின்றன.8 வேம்பில் என்பது வேம்பத்தூர். இப்போது இது திருவிசலூர் என்று சொல்லப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி குகைக்கோயிலில் இவ்வரசனுடைய இன்னொரு சாசனம் காணப்படுகிறது.9 இன்னொரு சாசனம் சோழ தேசத்தில் மண்ணிநாட்டுத் திருவிசலூரில் இருக்கிறது.9 திருச்சி குகைக்கோயில் சாசனங்கள் இப் பாண்டியனைப் பாண்டியாதிராசன் வரகுணதேவன் என்று கூறுகின்றன.
வாகுணபாண்டியன் காலத்து எழுத்து.
"ஸ்ரீ வரகுணமஹராஜர்" என்பது இதன் வாசகம்.
இதில் வட்டெழுத்தும் கிரந்த எழுத்தும் சேர்ந்துள்ளன.
வரகுணபாண்டியன், சோழ நாட்டை வென்றான் என்பதைப் பழைய திருவிளையாடற் புராணமும் கூறுகிறது.
“மற்று நேரொவ்வா வரகுணன், பெருவலி வளவன்
துற்று சேனையும் சுந்தரன் அருளினால் தொலைந்து
வெற்றி பூண்டபின் மகிழ்ந்தவன் மேதகு நாடும்
கொற்ற மேன்மையும் கொண்டனன் மண்தலம் மதிக்க.”11
இதில், வரகுணபாண்டியன், பெருவலியுடைய சோழனுடைய சேனையைச் சுந்தரேசுவரர் அருளினால் வென்று சோழ நாட்டை அரசாண்டான் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி கூறுகிறார். சோழ அரசர், அக்காலத்தில் குறுநில மன்னராய்ப் பல்லவருக்குக் கீழடங்கி இருந்தனர். ஆகவே சோழர் பெருவலியுடையவர்களாய் இருந்திருக்க முடியாது. பல்லவ சேனையுடன் போர் செய்து, வரகுணபாண்டியன் சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பதே சரித்திர உண்மையாகும். சோழநாட்டைப் பிடித்து அரசாண்டபடியால், வரகுணபாண்டியன் சோழனுடன் போர் செய்து வென்றான் என்று திருவிளையாடல் ஆசிரியர் கருதினார் போலும்.12
மணிவாசகர்
வரகுண பாண்டியனின் அமைச்சராக இருந்தவர் வாதவூரராகிய மாணிக்கவாசகர். சிவனடியாராகி மாணிக்க வாசகர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்பு, வரதவூரர், வரகுண பாண்டியனிடத்தில் தென்வன்பிரமராயன் என்னும் சிறப்புப் பெயருடன் அமைச்சராக இருந்தார் என்று கருதப்படுகிறார். வரகுணபாண்டியன், சோழ நாட்டிலும், பல்வர் நாட்டிலும், இலங்கைத் தீவிலும் படையெடுத்துச்சென்று போர்செய்தான். அதற்காக அவனுக்குக் குதிரைப்படை தேவைப்பட்டது. ஆகவே, பாண்டியன் அவரை ஒறுத்தான் என்று வரலாறு கூறுகிறது. மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சியை இந்நூலில் வேறுஇடத்தில் காண்க.
பாண்டியன் தோல்வி
பல்லவருக்குரியதாக இருந்த சோழநாட்டை வரகுண பாண்டியன் வென்றுகொண்டது, தந்திவர்மன் காலத்திலாகும். தந்திவர்மன் இறந்தபிறகு, அவன் மகன் நந்திவர்மன் பல்லவ இராச்சியத்திற்கு அரசனானான். நந்திவர்மன் காலத்தில் வரகுணபாண்டியன், சோழ நாட்டைக்கடந்து தொண்டை நாட்டிற்கு வந்து, பெண்ணாற்றங்கரையிலிருக்கும் அரசூரில் பாசறை அமைத்துத் தங்கினான் என்று அம்பாசமுத்திர சாசனம் கூறுகிறது.13 இதனால், இவன் பல்லவ அரசனின் தொண்டை நாட்டையும் கைப்பற்ற முயற்சிசெய்தான் என்பது தெரிகிறது. வரகுண பாண்டியன் காஞ்சீபுரத்தின்மேல் படையெடுத்து வந்தான். நந்திவர்மன், வரகுண பாண்டியனைக் காஞ்சீபுரத்துக்குத் தெற்கே 35 மைல் தூரத்தில் உள்ள தெள்ளாறு என்னும் ஊரில் எதிர்த்துப் போர்செய்தான்.14 போர்செய்து வென்றான். போரில் பின்னடைந்து சென்ற பாண்டியனைத் தொடர்ந்து சென்று வெள்ளாறு நள்ளாறு முதலிய இடங்களில் போர் செய்து வென்று, முன்பு பாண்டியன் பிடித்துக்கொண்ட சோழநாட்டை மீட்டுக் கொண்டான். தெள்ளாற்றுப்போர் மிக முக்கியமானது. அதை வென்றபடியால், நந்திவர்மனுக்குத் “தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்” என்னும் சிறப்புப் பெயர்ஏற்பட்டது. தெள்ளாற்றுப் போர், நந்திவர்மனுடைய பத்தாவது ஆண்டில், அதாவது கி. பி. 840 நடந்ததென்று கருதப்படுகிறது.
நந்திவர்மன் பாண்டியனை வென்றபிறகு, பாண்டியன் மகளைத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. அடிகள் மாறன் பாவை என்பது அவ்வரச குமாரியின் பெயர். ‘பல்லவர் குல திலக நந்திவர்மன் மனைவி அடிகள் மாறன் பாவையார்’ என்று சாசனம் கூறுகிறது.15 இந்த மாறன் பாவையார்' என்று மாறனுடைய மகளும், வரகுண பாண்டியனின் பேர்த்தியுமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இலங்கைப் போர்
வரகுண பாண்டியன் இலங்கைத் தீவையும் வென்றான். இந்தச் செய்தியை, மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூலவம்சத்தில் 50-வது அத்தியாயத்தில் காணலாம். அதுகூறும் செய்தியின் சுருக்கம் இது:
இலங்கையைச் சேனன் (முதலாம் சேனன்) என்னும் அரசன் ஆட்சிசெய்த காலத்தில், பாண்டிய அரசன் இலங்கைமேல் படையெடுத்துச்சென்று அதன் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பிறகு, மகா தாளித கிராமம் என்னும் ஊரில் பாசறை தங்கினான். இலங்கையரசன், தன் சேனாபதியான பத்தன் என்பவன் தலைமையில் சேனையை அனுப்பிப் போர்செய்தான். பாண்டியன் சிங்களச் சேனையைச் சிதறடித்தான். ஆகவே, இலங்கை மன்னனாகிய சேனன், தலைநகரத்தைவிட்டுத் தெற்கே மலையநாட்டிற்குப் போய்விட்டான்.
பிறகு, சேனனுடைய தம்பியும் யுவராசனுமான மகிந்தன் என்பவன், பாண்டியனுடன் போர்செய்து இறந்தான். அதன்பிறகு, சேனனுடைய இளைய தம்பியான கஸ்ஸபன் என்பவனும் பாண்டியனுடன் போர்செய்து இறந்தான். கடைசியில், பாண்டியன் இலங்கையின் இராசதானியைக் கைப்பற்றிக்கொண்டு, அரண்மனையிலும் அபயகிரி விகாரை தூபாராம விகாரை முதலிய பௌத்தப் பள்ளிகளிலும் இருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டான்.
தோல்வியுற்ற இலங்கை மன்னனாகிய சேனன், யானைகளையும் பொன்னையும் பொருளையும் பாண்டியனுக்குக் கொடுத்துச் சமாதானம் செய்துகொண்டான். இவற்றைப் பெற்றுக்கொண்டு பாண்டியன் தன் நாடு திரும்பினான்.
இந்தச் செய்தியைக் கூறுகிற சூலவம்சம் என்னும் நூல், இலங்கையின்மேல் படையெடுத்துச்சென்ற பாண்டியன் பெயரைக் கூறவில்லை. அப்பாண்டியன் வரகுண மகாராசன் என்பதை ஆராய்ச்சியினால் அறிகிறோம். வரகுண பாண்டியன், தானே நேரில் சென்று இலங்கையில் போர்செய்யவில்லை. இளவரசனாகிய தன்மகன் ஸ்ரீ மாறனை அனுப்பி அவன்மூலமாக இலங்கையை வென்றான். இதனால்தான், சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம், வரகுண மகாராசன் இலங்கையை வென்றதாகக் கூறாமல், அவன் மகன் ஸ்ரீ மாறன் இலங்கையை வென்றதாகக் கூறுகிறது.16
ஸ்ரீ மாறன்
வரகுண பாண்டியனுக்குப் பிறகு அவன் மகனான ஸ்ரீ மாறன் பாண்டிய நாட்டின் அரசனானான். ஸ்ரீ மாறனுக்கு ஏகவீரன், ஸ்ரீ வல்லபன், பரசக்கர கோலாகலன், பல்லவ பாஞ்சனன், அவனிப சேகரன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு. இவன் அரசாண்ட காலம் ஏறக்குறைய கி.பி. 840 முதல் 861 வரையில் ஆகும். இவன் குன்னூர், சிங்களம் (இலங்கை), விழிஞம் என்னும் ஊர்களில் பகைவர்களுடன் போர் செய்து வென்றான் என்றும், குடமூக்கில் (கும்பகோணத்தில்) வந்து இவனை எதிர்த்த கங்கர், பல்லவர், சோழர், காலிங்கர், மாகதர் முதலியவர்களின் கூட்டுச் சேனையை வென்றான் என்றும் ம் சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது.17 இப் போர்களில், சிங்களப் போரை, இவன் இளவரசனாக இருந்தபோது செய்தான் என்று முன்னமே கூறினோம்.
வரகுண பாண்டியனுடைய மகன் அரசாண்ட காலத்தில், சோழ அரசன் கருநாடகருடன் சேர்ந்து பாண்டியனுடன் போர் செய்ய வந்தான் என்றும், சொக்கப் பெருமான் அட்டாலைச் சேவகனாக வந்து பாண்டியன் சேனையுடன் சேர்ந்து, விடைக் குறியம்பு எய்து பகைவரை வென்று பாண்டியனுக்கு வெற்றியுண்டாக்கினார் என்றும் பழைய திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
"வரகுண மன்னவற்கு மனமகிழ் மைந்தன் வென்றிப்
பொருவிலா அறிவினானோர் பூழியன் மதுரை தன்னுள்"
"வரகுணன் மைந்தன் என்று வந்தித்தான் அன்றுமுன்னாப்
பரவு பாண்டியர்கள் எல்லாம் வந்தித்தார் பகைகள்தீர”
என்றும் மேற்படி புராணம் கூறுவது காண்க.18
இதில், வரகுணன் மைந்தன் என்று கூறப்படுபவன் ஸ்ரீ மாறன் ஆவான். இவன்மேல் படையெடுத்துச் சென்ற சோழன், பல்லவ அரசன் சார்பாகச் சென்றிருக்க வேண்டும்; அக்காலத்தில் சோழன் பல்லவ அரசருக்குக் கீழடங்கியிருந்தவனாகலின்.
(ஸ்ரீ மாறன், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்துக்குப் பிறகு, அவன் மகன் நிருபதுங்கவர்மன் காலத்திலும் இருந்தான். இவனுடைய ஆட்சியின் பிற்காலத்தில், மாயா பாண்டியன் என்பவன் இவனுடன் அரசு உரிமைக்காகக் கலகஞ்செய்தான். மாயா பாண்டியனுக்கு இலங்கையரசன் சேனன் என்பவன் உதவிசெய்தான். பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனும் மாயா பாண்டியனுக்கு மறைமுகமாக உதவிசெய்தான் என்று தெரிகிறது. இந்தப்போரில் ஸ்ரீ மாறன் புண்பட்டுத் தோற்றுப்போனான். இப்போர், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் நிகழவில்லை. அவன் மகனான நிருபதுங்கவர்மன் காலத்தில் நிகழ்ந்தது. ஆகவே, அப்போரைப் பற்றி இங்கு நாம் கருதவேண்டியதில்லை.)
சின்னமனூர் செப்பேடு
வரகுண மகாராசனைப் பற்றியும் அவன் மகனான ஸ்ரீ மாறனைப் பற்றியும் சின்னமனூர் பெரியசெப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது.
வடமொழிப் பகுதி : “.... அவன் மகன், புகழ் பெற்றவனும் ஒழுக்கத்தில் சிறந்தவனுமான இராஜசிம்மன். அவன் மகன் பெரிய வீரனான வரகுணன். அவன் மகன், கேட்பதற்கு மகிழ்ச்சியைத் தரும் புகழுடையவனும் திருமகள் மணாளனுமான ( ஸ்ரீ வல்லபனான) ஸ்ரீ மாறன். இவன் இணையற்ற வீரன்; குடிமக்களால் நேசிக்கப்பட்டவன். மாயா பாண்டியனையும் சேரனையும் சிம்மளனையும் பல்லவனையும் வல்லபனையும் வென்று ஒற்றைக் குடைக்கீழ் உலகத்தை அரசாண்டான்.”
தமிழ்ப் பகுதி : “கொற்றவர்கள்தொழு கழற்கால் கோவரகுண மஹாராஜனும் ஆங்கவற் காத்மஜனாகி19 அவனிதலம் பொறைதாங்கித் தேங்கமழ் பொழிற் குண்ணூரிலுஞ் சிங்களத்தும் விழிஞத்தும் வாடாத வாகை சூடிக்கோடாத செங்கோல் நடாவிக் கொங்கலர் பொழிற் குடமூக்கிற் போர் குறித்து வந்தெதிர்ந்த கங்க பல்லவ சோளகாலிங்க மாகாதாதிகள் குருதிப் பெரும்புனல் குளிப்பக் கூர்வெங்கணை தொடை ஞெகிழ்த்துப் பகுதி ஆற்றலொடு விளங்கின பரசக்கிர கோலாகலனும்.”19
தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலே பாண்டி நாட்டை வரகுண மகாராசன் என்னும் மாறஞ்சடையனும் அவனுக்குப் பிறகுஅவன் மகன் பரசக்கர கோலாகலன் ஆகிய ஸ்ரீ மாறனும் அரசாண்டார்கள்.
நெடுமாறன் யார்?
இக்காலத்திலிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவதிககைத் திருவீரட்டானப் பதிகத்தில் நெடுமாறன் என்று குறிப்பிடுவது வரகுண மகாராசனைத்தான் என்று தோன்றுகிறது. பாண்டியன் வரகுண மகாராசனுக்கு மாறன் சடையன் என்னும் பெயரும் உண்டு. இந்த மாறனைத்தான் நெடுமாறன் என்று சுந்தரர் கூறுகிறார் போலும்.
“பொன்னானை மயிலூர்தி முருகவேள்தாதை
பொடியோடுந் திருமேனி நெடுமாறன் முடிமேற்
றென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்
சேராத சிந்தையான் செக்கர் வானந்தி.”21
என்று அவர் கூறுவது காண்க.
வரகுண பாண்டியனாகிய நெடுமாறன் சோழ நாட்டையும் இலங்கைத் தீவையும் வென்று அரசாண்டபடியாலும் சிறந்த சிவபக்தன் ஆனமையினாலும் அவனைச் சுந்தரர் “பொடியாடுந் திருமேனி நெடுமாறன்” என்று கூறினார் என்று கருதலாம்.
சேரநாடு
சேரமான் பெருமாள்
தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சேரநாட்டையாண்ட அரசர் யார் என்பது சாசனங்கள் மூலமாகத் தெரியவில்லை. ஆனால், இக்காலத்திலிருந்த சுந்தரமூர்த்தி நாயனாருடன் சேரமான் பெருமாள் என்னும் சேர அரசன் நண்பராக இருந்தார் என்று தெரிகிறபடியால், அந்தச் சேரமான் பெருமாள் சேரநாட்டையரசாண்டார் என்று கொள்ளலாம். இந்தச் சேரமான் பெருமாளுக்குப் பெருமாக்கோதையார் என்றும் கழறிற்றறிவார் என்றும் பெயர்கள் உண்டு.22 திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகரமாகக்கொண்டு இவர் அரசாண்டான்.23
சேர அரசன் குடியில் பிறந்த இவர் திருவஞ்சைக் களத்தில் இருந்த சிவன் கோயிலில் திருத்தொண்டு செய்து கொண்டிருந்தார். மிகுந்த சிவபக்தர், சைவ நாயன்மார் அறுபத்துமூவரில் இருவரும் ஒருவர். சேரநாட்டை யாண்ட செங்கோற் பொறையன் என்னும் சேர அரசன், அரசாட்சியைத் துறந்து சென்ற பிறகு, அமைச்சர்கள், அரசாட்சிக்கு உரியவராகிய பெருமாக் கோதையாரையே அரசராகத் தேர்ந்தெடுத்தனர்.24
அக்காலத்தில் சேரநாடு தமிழ்நாடாகவே இருந்தது. மலையாள மொழி அக்காலத்தில் ஏற்படவில்லை. ஆனால் மலையாள நாடு என்று மட்டும் பெயர் பெற்றிருந்தது.
சேரமான் பெருமாள் (பெருமாக் கோதையார்) சிவபக்தர் மட்டுமல்லர்; சிறந்த புலவரும் ஆவர். இவர் இயற்றிய பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) என்னும் நூல்கள் சைவ சமயத் தாருக்குரிய பதினோராந்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.
பாணபத்திரன் என்னும் இசைப் புலவனுக்குப் பொருள் கொடுத்தனுப்பும்படி சொக்கப் பெருமானாகிய ஆலவாய்க் கடவுள், இந்தச் சேரமான் பெருமாளுக்குத் திருமுகப் பாசுரம் அனுப்பினார் என்றும் அதன்படியே இச்சேர அரசன் பாணபத்திரருக்குப் பெரும் பொருளை நன்கொடையாகக் கொடுத்தனுப்பினார் என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. இவ்வரலாறு பெரும்பற்ற நம்பி திருவிளை யாடற் புராணத்திலும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திலும்25 பெரிய புராணத்திலும்26 கூறப்படுகிறது.
பாணபத்திரல், வரகுணபாண்டியன் அவையில் இசைப்புலவ ராக இருந்தார் என்று பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம் கூறுகிறது.27 இதனால், வரகுண மகாராசன் என்னும் பாண்டிய அரசன் காலத்திலே சேரமான் பெருமாள் இருந்தார் என்பது தெரிகிறது. வரகுணபாண்டியன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்தவன் என்று முன்னமே அறிந்தோம்.
சுந்தரும் சேரமானும்
சிவபக்தராகிய சேரமான் பெருமாள், சைவ சமயாசாரியாராகிய சுந்தரமூர்த்தி நாயனாருடன் நட்புடையவராக இருந்தார். இருவரும் சேர்ந்து தல யாத்திரை செய்தார்கள். இவர்கள் பாண்டிய நாட்டில் தல யாத்திரை செய்தபோது, பாண்டிய அரசனுடனும் அவன் மகளை மணஞ்செய்துகொண்டு அங்குத் தங்கியிருந்த சோழ அரசனுடனும் சில நாட்கள் தங்கியிருந்தனர் என்று பெரியபுராணம் கூறுகிறது.28
“தென்னவப்ரகோன் மகளாரைத் திருவேட்டு முன்ரே
தொன்மதுரை நகரின்கண் இனிதிருந்த சோழனார்
அன்னவர்கள் உடன்கூட அணையஅவ ருங்கூடி
மன்னுதிரு வாலவாய் மணிக்கோயில் வந்தணைந்தார்”
“செம்பியனா ருடன்செழியர் தாம்பணிந்து சேரருடன்
நம்பியுமுன் புறத்தணைய நண்ணியபே ருவகையால்
உம்பர்பிரான் கோயிலினின் றுடன்கொடுபோய் இருவர்க்கும்
பைம்பொன் மணிமாளிகையில் குறைவறுத்தார் பஞ்சவனார்”
சுந்தரரையும் சேரமானையும் வரவேற்ற பாண்டியன், வரகுண பாண்டியன் மகனான ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபனாக இருத்தல் வேண்டும்.
சேரமான், சுந்தரருடன் பாண்டிய நாட்டில் தலயாத்திரை செய்த பிறகு சுந்தரரைத் தமது ஊருக்கு அழைத்துச் சென்றார். சிலநாள் கழித்து இருவரும் திருக்கயிலாயம் சென்றார்கள் என்று வரலாறு கூறுகிறது.
இலங்கைத் தீவு
சிலாமேகன்
தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சேனன் என்னும் பெயருள்ள இரண்டு அரசர்கள் இலங்கைத் தீவை அரசாண்டார்கள். முதலாம் சேனன் ஏறக்குறைய கி. பி. 821 முதல் 841 வரையிலும், இரண்டாம் சேனன் கி. பி. 841 முதல் 876 வரையிலும் அரசாண்டார்கள். இவர்களுடைய வரலாறு மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூலவம்சத்தில் 50, 51-வது அத்தியாயங்களில் கூறப்படுகிறது. அதன் சுருக்கம் இது:
ஒன்பதாம் அக்கபோதிக்குப் பிறகு, முதலாம் சேனன் இலங்கைக்கு அரசனானான். இவனுக்குச் சிலாமேகன் என்னும் பெயரும் உண்டு. இவனுக்குத் தலைநகரம் புலத்தி நகரம். இந்தச் சனேனுக்கு உறவினனும் அரசுரிமையுடையவனுமான மகிந்தன் என்பவன் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்திருந்தான். (தமிழ்நாட்டில் எங்கே யாரிடத்தில் அடைக்கலம் புகுந்திருந்தான் என்பது தெரியவில்லை.) சேனன், தன்னுடைய ஆட்களை அனுப்பி மகிந்தனைக் கொன்றுபோட்டு, தன் அரசாட்சிக்குப் போட்டி இல்லதபடி செய்து கொண்டான் சேனனுக்குத் தம்பியர் மூவர் இருந்தனர். அவர்கள் பெயர் மகிந்தன், கஸ்ஸபன், உதயன் என்பன. சேனன், மூத்த தம்பியாகிய மகிந்தனை யுவராசனாக்கினான்.
பாண்டியன் போர்
இவன் காலத்தில் பாண்டிய நாடிலிருந்து பாண்டியன் படையெடுத்து வந்து இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றிக்கொண்டு, மகாதாளிதகாமம் என்னும் ஊரில் சேனையுடன் தங்கியிருந்தான். அப்போது, இலங்கையிலே அநுராதபுரம் முதலிய ஊர்களில் தங்கி வாழ்ந்திருந்த தமிழர்கள், பாண்டியனுடன் சேர்ந்து கொண்டார்கள்.
சேனன், பாண்டியனை எதிர்க்கும்படி தனது சேனாபதியான பத்தன் என்பவன் தலைமையில் சிங்களச் சேனையை அனுப்பினான். பாண்டியன் சேனையுடன் சிங்களச் சேனை போர் செய்து சிதறி ஓடிற்று. தன்னுடைய சேனை தோற்றுப் போனதைக் கண்ட சேனன், பொன்னையும் பொருளையும் எடுத்துக்கொண்டு புலத்தி நகரத்தை விட்டுத் தெற்கே மலைய நாட்டிற்குப் போய்விட்டான். யுவராசனாகிய மகிந்தன், சேனையுடன் வந்து பாண்டியனுடன் போர் செய்தான். போரில், பாண்டியனை வெல்லமுடியாமல் தற்கொலை செய்துகொண்டிருந்தான். பிறகு, அவன் தம்பியாகிய கஸ்ஸபன் போருக்கு வந்து போரிட்டுத் தோல்வியடைந்து கொண்டிவாதம் என்னும் ஊருக்குத் தப்பி ஓடினான். ஆனால், பாண்டிய வீரர்கள் அவனைக் கண்டுபிடித்துக் கொன்றுவிட்டார்கள். பாண்டியன் இலங்கையின் தலைநகரமாகிய புலத்தில் நகரத்தைப் பிடித்துக் கொண்டான்.
தலைநகரத்தைக் கைப்பற்றிய பாண்டியன், அரண்மனையிலும் நகரத்திலும் இருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டான். அபயகிரி விகாரையைச் சேர்ந்த அரதனப்பாசாதத்துப் பொன் புத்த உருவத்தையும், வேறு விகாரங்களிலிருந்த பொன் உருவச் சிலைகளையும் கவர்ந்து கொண்டான். மேலும், தூபாராம விகாரையின் மேற் கூரையில் வேயப்பட்டிருந்த பொற்றகடுகளையும் வெள்ளித் தகடுகளையும் கவர்ந்து கொண்டான். இலங்கை மன்னனுடைய வீரமுரசையும் இரத்தினக் கிண்ணம் முதலியவற்றையும் கைப்பற்றினான்.
மலைய நாட்டிலே ஓடி ஒளிந்த சேனன், பாண்டியனுடன் சமாதானம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டான். யானைகளையும் பொன்னையும் பொருளையும் பாண்டியனுக்குக் கொடுத்து அவனுடன் சமாதானம் செய்துகொண்டான். ஆகவே பாண்டியன் இலங்கையை விட்டுத் தன் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டான்.
சேனன், தலைநகரமாகிய புலத்தி நகரத்துக்குத் திரும்பி வந்து அரசாண்டான். தன் கடைசி தம்பியாகிய உதயனை யுவராசனாக்கினான். சிறிது காலத்தில் உதயன் இறந்து விடவே, தன் மூத்த தம்பியாகிய கஸ்ஸபன் மகன் சேனன் என்பவனை யுவராசனாக்கினான். இவனுடைய அமைச்சர்கள் உத்தரன், வஜிரன், ரக்கஸன் என்பவர். சேனன் இருபது ஆண்டு அரசாண்டான்.
(சேனன் மேல் போர் செய்த பாண்டியன் பெயரைச் சூலவம்சம் என்னும் நூல் கூறவில்லை. பாண்டியன் வரகுண மகாராசன் இப்போரை நடத்தியிருக்க வேண்டும் வரகுண மகாராசன், நேரில் இலங்கைப் போரை நடத்தவில்லை. அவனுடைய மகனும் இளவரசனுமான ஸ்ரீ மாறனுடைய தலைமையில் இலங்கைப் போர் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.)
ஸ்ரீ சங்க போதி
சேனன் இறந்த பிறகு, யுவராசனாக இருந்த சேனன் அரசனானான். இந்தச் சேனன், முதலாம் சேனனுடைய மூத்த தம்பியாகிய கஸ்ஸபனின் மகன். இந்தச் சேனனை இரண்டாம் சேனன் என்பர். இவனுக்கு ஸ்ரீ சங்க போதி என்னும் பெயரும் உண்டு. இவன் கி. பி. 841 முதல் 876 வரையில் அரசாண்டான் என்று முன்னமே கூறினோம். இவனுடைய சேனாபதி குட்கன் என்பவன். இவன் அரசாட்சிக்கு வந்தபோது, முன்பு பாண்டியன் இலங்கையிலிருந்து கொண்டுபோன் பொருள்களை எல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும் என்று எண்ணினான். அதற்காக அவன் பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்து வரச் சமயம் பார்த்திருந்தான். அப்போது, அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.
பாண்டிய நாட்டிலே பாண்டியன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், (மாயா பாண்டியன் என்பவன்) பாண்டிய நாட்டின் அரசுரிமைக்காகக் கலகம் செய்தான்.29 பாண்டியன் அவனை விரட்டித் துரத்திவிட்டான். துரத்தப்பட்டவன் இலங்கைக்கு வந்து சேனனுடைய உதவியை வேண்டினான். பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்துச் செல்ல எண்ணியிருந்த சேனனுக்கு, இது ஓர் நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆகவே, சேனன், தன் சேனாபதியான குட்டகன் தலைமையில் பெருஞ்சேனையைப் பாண்டிய நாடிற்கு அனுப்பினான்.
சிங்களச் சேனாபதி குட்டகன், சேனையுடன் மதுரைக்குச் சென்று பாண்டியனுடன் போர் செய்து வென்று, முன்பு இலங்கையிலிருந்து பாண்டியன் கொண்டுபோன பொருள்களையெல்லாம் மீட்டுக் கொண்டு இலங்கைக்குச் சென்றான். செல்வதற்கு முன்பு, இலங்கை மன்னனிடம் அடைக்கலம் புகுந்த பாண்டியன் உறவினனுக்கு (மாயா பாண்டியனுக்கு) முடிசூட்டிப் பட்டாபிஷேகம் செய்து அவனை அரசனாக்கினான்.30
இந்தச் சேனன் பல தான தருமங்களைச் செய்தான். மாவலி கங்கையாற்றில் மணிமேகலை என்னும் அணையைக் கட்டினான். மணிஹீர ஏரிக்குக் கலிங்கு கட்டினான். கட்டந்த நகரத்துக்கருகிலிருந்த பழைய ஏரியைப் புதுப்பித்தான். சேதிமலையின் மேல்நோயாளிகளுக்கு மருத்துவச் சாலை கட்டினான். இவன் 35 ஆண்டு அரசாண்டான்.
(இவன், தன்னிடம் அடைக்கலம் புகுந்த மாயா பாண்டியனுக்கு முடிசூட்டினான் என்றும் அவனுக்கு எதிராக இருந்த பாண்டியனைப் போரில் கொன்றான் என்றும் சூலவம்சம் கூறுகிறது. ஆனால், சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம், பாண்டியன் ஸ்ரீ மாறன் (வரகுண பாண்டியன் மகன்) மாயா பாண்டியனை வென்றதாகக் கூறுகிறது. "அவன் (வரகுணன்) மகன், கேட்பதற்கு மகிழ்ச்சியைத் தரும் புகழுடையவனாகிய ஸ்ரீ வல்லபனான ஸ்ரீ மாறன். இவன் இணையற்ற வீரன், குடிமக்களால் நேசிக்கப் பட்டவன், மாயா பாண்டியனையும் கேரளனையும் சிம்மளனையும் பல்லவனையும் வல்லபனையும் வென்று ஒற்றைக் குடைக்கீழ் உலகத்தை அரசாண்டான்” என்று சின்னமனூர் பெரிய செப்பேட்டுச் சாசனத்தின் வடமொழிப் பகுதி கூறுகிறது. ஆகவே, இலங்கை நூலாகிய சூலவம்சம், பாண்டியனைச் சிங்கள சேனாபதி கொன்று விட்டான் என்று கூறுவது நம்பத்தகுந்ததல்ல.)
அடிக்குறிப்புகள்
1. தாளாண்மை 10.
2. மானம் 6.
3. Narathamalai Inscriptian P. 27. The Journal of S.I. Association Vol. II. (1911-12).
4. M. Epi. Rep. G.O. No. 574, 17th July 1908, Page 62-68.
5. M.Epi. Rep. GO. No. 503, 27th June 1907, Page 63 - 65.
6. Epi. Col. 690 of 1905.
7. Epi. Col. 690 of 1905.
8. Epi. Col. 413 of 1904, 105 of 1905.
9. Epi. Col. 1914 of 1904, EP. Rep. P. 18.
10. Epi. Col. 17 of 1907.
11. திருவாலவாயுடையார் திருவிளையாடல் 16.
12. திருவிளையாடல் புராணஆசிரியர் காலத்திலும் பல்லவ அரசர் வரலாறு மறைந்திருந்தது போலும் மறைந்து கிடந்த பல்லவர் வரலாறு, சுமார் முப்பது ஆண்டுகளாகத்தான் சாசன ஆராய்ச்சி கொண்டு எழுதப்படுகிறது. அதற்கு முன்பு பல்லவர் வரலாறும், மற்ற அரசர் வரலாறும் பெரிதும் மறைந்து கிடைந்தன.
13. Epi. Col. 105 of 1905.
14. தெள்ளாறு, வட ஆர்க்காடு மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் இருக்கிறது.
15. Epi. Col. 303 of 1901.
16. ஸ்ரீமாறன் அரசாட்சிக் காலத்தில், இலங்கைமேல் படையெடுத்து இலங்கையை வென்றதாகச் சிலர் கருதுகிறார்கள். இது ஆராய்ச்சிக்குப் பொருந்தவில்லை. ஸ்ரீ மாறன் இளவரசனாக இருந்த காலத்தில், அவனுடைய தந்தையாகிய வரகுண பாண்டியன் ஆட்சியில் இலங்கைப்போர் நிகழ்ந்தது என்பதுதான் ஆராய்ச்சிக்கு பொருந்துகிறது.
17. No.206,5.I.I.Vol.III.
18. விடைக்குறி யம்பெய்த திருவிளையாடல் 1. 23.
19. ஆத்மஜனாகி - மகனாகி.
20. No.206,S.I.I.Vol.III.
21. திருவதிகைத் திருவீரட்டானம் 8.
22. சேரமான் பெருமாள் நாயனார் புராணம்—6, 14, 16.
23. சேரமான் பெருமாள் நாயனார் புராணம் 1.
24. சேரமான் பெருமாள் நாயனார் 5, 7, 10, 11, 16.
25. திருமுகங் கொடுத்த படலம்.
26. கழறிற்றறிவர் புராணம், 26. முதல் 39 ஆம் செய்யுள் வரையில்.
27. விறகு விற்ற படலம் - 2.
28. கழறிற்றறிவார் புராணம் -92, 95.
29. வரகுண பாண்டியன் இறந்தபின் அவன் மகன் ஸ்ரீ மாறன் அரசாட்சி செய்த காலத்தில் இக்கலகம் ஏற்பட்டது.
30. சேனனுடைய பாண்டி நாட்டுப் படையெடுப்புப் பற்றி இவன் காலத்துச் சாசனங்களும கூறுகின்றன. இந்தச் சாசனங்களில்,சேனன்,ஸ்ரீ சங்கபோ என்று கூறப்படுகிறான். ஸ்ரீ சங்கபோ என்பது ஸ்ரீ சங்கபோதி ஆகும். E.Z. Vol.II 39.44 FF.E.Z.Vol.I.P.164,176.