மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/034-052

3. சமயநிலை

1. பௌத்த சமண சமயங்கள்

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சாக்கிய மதம் என்னும் பௌத்த மதமும் சமண சமயம் எனப்படும் ஜைன சமயமும் தமிழ் நாட்டிலே இருந்தன. ஆனால், அச்சமயங்கள் சிறப்புப் பெற்றிருக்கவில்லை. சைவ வைணவ மதங்களினால் தாக்குண் வலிவிழந்து வீழ்ச்சியடையும் நிலையில் இருந்தன. பழைய பெருமை இழந்து வலிமை குன்றியிருந்தபோதிலும் பௌத்த சமண சமயத்தவரும் அவருடைய பௌத்த சமணக் கோயில்களும் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்தன. நந்திவர்மனுடைய 19-ஆம் ஆண்டில், தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, பெருமாண்டூரில் உள்ள ரிஷபநாதர் கோயில் என்னும் ஜைனக் கோயிலுக்குத் தானம் செய்ததை ஒரு சாசனம் கூறுகிறது.1

அக்காலத்தில் இருந்த சைவ சமயாசாரியாராகிய சுந்தர மூர்த்தி சுவாமிகள், தமது தேவாரப் பதிகங்களின் இடையிடையே த்த சமண சமயங்களைக் குறிப்பிடுகிறார். அவை :

“குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள்
        கொண்டா ராகிலும் கொள்ளக்
கண்டாலுங் கருதேன் எருதேறுங் கண்ணா
        நின்னல தறியேன்”2

“வெற்றரைக்கற் றமணும் விரையாது
        விண்டால முணுந்
துற்றரைத் துற்றறுப்பான்
        துன்னவாடைத் தொழிலுடையீர்”3

“குண்டாடுஞ் சமணரும் சாக்கியரும் புறங்கூறுங்
        கொகுடிக் கோயில்”4

“நமணநந்தியும் கருமவீரனும்
        தருமசேனனும் மென்றிவர்
குமணமாமலைக் குன்றுபோல்நின்று
        தங்கள் கூரை ஒன்றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோண
        மென்றோதி யாரையும் நாணிலா
அமணராற் பழிப்புடையரோ
        நமக்கடிகளாகிய அடிகளே”5

இதில், நந்திகணம் சேனகணம் முதலிய பிரிவுகளைச் சேர்ந்த சமண சமயத் துறவிகள் பிராகிருத மொழியில் மந்திரங்களைக் கூறியதைக் குறிப்பிடுகிறார். பிராகிருத மொழியில் ங, ஞ, ண, ந, ம, ன என்னும் மெல்லோரைச் சொற்கள் அதிகமாக வழங்கப்படுகின்றன. அதைக் குறிக்கவே “ஞமண் ஞாஞண் ஞாண ஞோணம்" என்று கூறினார்.

“கரியமனச் சமண் காடியோடு கழுக்களால்
எரிய வசணவுந் தன்மையோ......”6

“இருந்துண்தேரரும் நின்றுண்சமணுரும்
ஏச நின்றவன்”7

“பொய்ச் சமண் பொருளாகி ஈண்டு நம்பி”8

“நன்மையொன் றிலாத்தேரர் புன்சமணாம்
சமயம் மாகிய தவத்தினா ரவத்தத் தன்மைவிட்டு”9

“நமையெலாம் பலர்இகழ்ந் துரைப் பதன்முன்
நன்மை யொன்றிலாத் தேரர் புன்சமணாஞ்
சமயமாகிய தவத்தினார் அவத்தத் தன்மை
விட்டுழி நன்மையை வேண்டில்”10

“குண்டாடியும் சமணாடியும் குற்றுடுக்கையர்தாமும்
கண்டார்கண்ட காரணம்மவை கருதாது கைதொழுமின்”11

“குண்டாடிய சமணாதர்கள் குடைச்சாக்கிய ரறியா
மிண்டாடியவது செய்தது வானால் வருவிதியே”12

“குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண்சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்டதன்மை விரவாகிய தென்னைகொலோ”13

“மோடுடைய சமணர்க்கும் உடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்ற மன்றே”14

சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஜைனர்களைப் பற்றியும் பௌத்தர்களைப் பற்றியும் இவ்வாறு பல முறைகளில் கூறியிருக்க, ஜைனர்களைப்பற்றி ஒரு இடத்திலும் கூறவில்லை என்று திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது! “ஜைனர்களைப் பற்றி ஒரு குறிப்பாவது காணப்படவில்லை” என்று திரு. எஸ். வையாபுரிப் பளிள்யைவர்கள் எழுதுகிறார்.15 சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக இருந்த பிள்ளையவர்கள் பொறுப்பற்ற முறையில் இவ்வாறு கூறுவது வருந்தத்தக்கது. அதிலும், தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வாறு மாறுபட எழுதுவது கண்டிக்கத்தக்கது. இது உண்மைக்கு மாறுபட்ட தவறான கருத்து என்பது, மேலே சுந்தரர் தேவாரத்திலிருந்து காட்டப்பட்ட மேற்கோள்களினால் நன்கு விளங்குகிறது.

ஜைன பௌத்த மதங்கள் கி.பி.9-ஆம் நூற்றாண்டிலே வலிமை குன்றிய போதிலும் உடனே அவை அழிந்துவிடவில்லை. பையப்பையத் தளர்ச்சியடைந்து கொண்டே அச்சமயங்கள் 12, 13-ஆம் நூற்றாண்டுகளிலும் நிலைநின்றிருந்தன. பௌத்த மதம் பின்னர் அடியோடு மறைந்துவிட்டது. ஆனால், சமண சமயம், குன்றிப்போன நிலையிலாயினும் இன்னும் நிலைபெற்றிருக்கிறது.

2. வைணவ சமயம்

அக்காலத்தில் வைணவ சமயமும் சிறப்படைந்திருந்தது. சைவ சமயத்தைப் போலவே வைணவ சமயமும் பக்தி இயக்கத்தில் ஈடுபட்டுச் சமண பௌத்த மதங்களைத் தாக்கிற்று. தெள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மல்லன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலைநிறுத்தினார். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த வைணவ அடியார்கள் யார் என்பது தெரியவில்லை.

3. சைவ சமயம்

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் சைவ சமயம் உயர்ந்த நிலையில் இருந்தது. சைவ சமய ஆர்வம் நாடெங்கும் பரவியிருந்தது. அப்பர் சம்பந்தர் காலத்தில் இருந்த காபாலிகம், பரசுபதம், பைரவம் முதலிய சைவ சமய உட்பிரிவுகள் இக்காலத்திலும் இருந்தன. இந்த உட்சமயங்கள், பௌத்த சமண சமயங்கள் மறைகிற வரையில் தமிழ் நாட்டில் இருந்து பிறகு பையப் பைய மறைந்துவிட்டன. இந்த மதங்கள் பௌத்த சமண சமயங்களை அழிப்பதில் முனைந்து நின்றதாகத் தெரிகின்றன. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள் முதலியோர் சைவ சமயத்திற்குப் பெரிதும் உழைத்தனர். அவர்களைப்பற்றி இங்கு ஆராய்வோம்.

சுந்தரமூர்த்தி நாயனார்

திருமுனைப்பாடி நாட்டுத் திருநாவலூரில் சடையனார் என்னும் ஆதிசைவப் பிராமணர், இசைஞானியார் என்னும் மனைவியாருடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு நம்பி ஆரூரர் என்று பெயரிட்டு வளர்த்தார்கள். இந்தக் குழந்தை பிற்காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் என்றும் வன்றொண்டர் என்றும் தம்பிரான் தோழர் என்றும் சேரமான் தோழர் என்றும் பெயர்பெற்று விளங்கிற்று.

அக்காலத்தில் திருமுனைப்பாடி நாட்டை அரசாண்டவர் நரசிங்க முனையரையர் என்னும் சிற்றரசர். இவர் சிறந்த சிவபக்தர், சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஒருவர். பல்லவ அரசர்களுக்குக் கீழ் சிற்றரசராக இருந்தவர். நரசிங்க முனையரையர், நம்பி ஆரூரார் என்னும் குழந்தையின் அழகைக் கண்டு அதன்மேல் ஆசை கொண்டார். குழந்தையின் தந்தையாராகிய சடையனாரின் இசைவு பெற்று, அக்குழந்தையைத் தமது மாளிகைக்கு அழைத்துக கொண்டு போய் அன்போடு வளர்த்து வந்தார். அக்குழந்தை இளமைப் பருவத திலேயே ஆதி சைவருக்குரிய ஆகம நூல்களையும் அரசர்க்குரிய யானையேற்றம் குதிரையேற்றம் முதலிய கலைகளையும் கற்றுத் தேர்ந்து காளைப்பருவம் அடைந்தது. பதினாறு வயதடைந்த நம்பி ஆரூரருக்குத் திருமணம் செய்ய எண்ணினார்கள். அதன்படி சடங்கவி சிவசாரியார் என்பவர் மகளை மணம் பேசி நாள் குறித்தார்கள்.

குறித்த நாளிலே திருமணம் நடக்கும் வேளையிலே முதியவர் ஒருவர் கோலூன்றி நடந்து அவ்விடம் வந்து, மணமகனாகிய நம்பி ஆரூரார் தமக்கு அடிமை ஆள் என்று வழக்காடினார். வழக்கின் முடிவில், ஆரூரார் முதியவருக்கு அடிமை என்று தீர்ப்பாயிற்று. முதியவர், ஆரூரரை அழைத்துக கொண்டு திருவெண்ணெய் நல்லூருக்குப் போய் அங்குத் திருவருட்டுறை என்றும் கோயிலில் புகுந்து மறைந்தார். ஆரூரர், கோயிலுள் புகுந்த முதியவரைக் காணாமல் திகைத்துப் பிறகு தம்மை ஆட்கொண்டவர் சிவபெருமானே என்று துணிந்தார். அப்போது அவருக்குக் கடவுளிடம் பக்தி தோன்றிற்று. அவர் திருப்பாடல்களைப் பாடித் துதிப்பாரானார்

கடவுள், தம்மை ஆட்கொண்டதை ஆரூரர் தமது தேவாரததில் கூறுகிறார். 'திருவெண்ணெய்நல்லூரும் திரு நாவலூரும் பதிகத்தில், வெண்ணெய்நல்லூரில் வைத்தென்னை யாளுங்கொண்டார் என்று ஒவ்வொரு பாட்டிலும் கூறுகிறார். அன்றியும்,

“தன்மையினா லடியேனைத்
        தாமாட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள்பேசிட வன்றொண்ட
        னெப்தோர் வாழ்வு தந்தார்”

என்றும் கூறுகிறார். திருவாவடுதுறைப் பதிகத்தில்,

"மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை
        வலியவந் தென்னை ஆண்டு கொண்டான்"

என்றும் கூறுகிறார்.

“அன்றுவந் தெனைய கலிடத் தவர்முன
        ஆளதாக வென்று ஆவணங் காட்டி
நின்று வெண்ணெய் நல்லூர் மிசை
        யொளித்த நித்திலத் திரட்டொத்தினை......”16

என்றும்,

“சொற்பதப் பொருள் இருளறுத் தருளும்
        தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்
அற்புதப்பழ ஆவணங் காட்டி யடியனா
        வென்னை யாளது கொண்ட, நற்பதத்தை”17

என்றும் கூறுவது காண்க.

நம்பி ஆரூராகிய சுந்தரமூர்த்தி நாயனார், பக்திமேலிட்டுத் திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டு பல திருப்பதிகளுக்குச் சென்று கடவுளை வணங்கினார். பிறகு, திருவாரூருக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார். அப்போது, திருவாரூர் திருக்கோயில் ஆலய வழிபாடு செய்துவந்த உருத்திர கணிகையர் குலத்தில் பிறந்த பரவை நாச்சியார் என்பவரைக் கண்டு அவர்மேல் காதல்கொண்டு அவரை மணஞ் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் கோட் புலிநாயனால் என்னும் அடியார் சுந்தரரைத் தமது ஊராகிய நாட்டியத்தான்குடிக்கு அழைத்துச் சென்று சிறப்புச் செய்தார்.

பின்னர், சுந்தரமூர்த்தி நாயனார், தொண்டை நாட்டில் தலயாத்திரை செய்துகொண்டு திருவொற்றியூருக்கு வந்து அங்கே சில காலம் தங்கியிருந்தார். அப்போது சங்கிலி நாச்சியார் என்பவரைக் கண்டு காதல்கொண்டு, மகிழமரத்தடியில் “உன்னைப் பிரியமாட்டேன்” என்று வாக்களித்து அவரை மணஞ் செய்தார். சிலகாலம் சங்கிலியாருடன் வாழ்ந்திருந்து, மீண்டும் திருவாரூருக்குப் போகப் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில், சங்கிலியாருக்குக் கொடுத்த வாக்கைத் தவறி அவரைப் பிரிந்து சென்றபடியினால், அவருக்குப் பார்வை மறைந்தது. அப்போது ஒற்றியூர் இறைவனைப் பாடிய பதிகத்தில்,

“வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
        மற்று நானறியேன் மறுமாற்றம்
ஒழுக்க வென்கணுக் கொருமருந் துரையாய்
        ஒற்றியூ ரெனும் ஊருறை வானே”

என்று பாடினார். இதில், ஒழுக்க என் கண்ணுக்கு ஒரு மருந்து உரையாய் என்பதில், “கண்படலம் நீங்குவதற்குத் தகுந்த ஒரு மருந்தை எனக்குக் கூறுவாயாக” என்று ஒரு பொருளும், கண்ணுக்கு இடுவாயாக” என்னும் மற்றொரு பொருளும் தரும்படியாகப் பாடியிருப்பது காண்க.

மேலும், பார்வை மறைந்ததை மிகத் துயரத்தோடு பாடினார்.

“மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
    கொள்வ தென்னே கணக்கு வழக்காகில்
ஊன்று கோலெனக் காவதொன் றருளாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே”

என்றும்,

“மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்
    மைந்தனே மணியே மண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
    அழையேல் போகுரு டானெத் தரியேன்”

என்றும் பாடியது மனத்தை உருக்குகிறது.

அடியவர் சிலர் வழிகாட்டச் சுந்தரமூர்த்திகள் திருவெண்பாக்கம் சென்று கடவுளை வணங்கித் தமது பார்வை மறைந்ததைக் கூறி வருந்தினார். அப்போது இறைவன் அவருக்கு ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தருளினார். அப்போது அவர் பாடிய பாடல்கள் மேலும் மனத்தை யுருக்குவன.

“பிழையுளன பொறுத்திருவர் என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு காதா! கோயிலுளாயே? என்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.”

இவ்வாறு அவலச்சுவை ததும்பப் பாடிய இவர், காஞ்சீபுரம் சென்று திருவேகம்பரை வணங்கியபோது இவருக்கு ஒரு கண் பார்வை தெரிந்தது. இதனைத் திருவேகம்பப் பதிகத்தின் பதினொரு பாடலிலும்,


"கால காலனைக் கம்பனெம்மானைகாணக்
 கண்ணடியேன் பெற்ற வாறே"

என்று கூறுகிறார்.

பின்னர், திருவாரூர் சென்று ஒரு கண் பார்வையில்லாமல் இருப்பதைக் கூறிப் பதிகம் பாடினார்.

"மீளாவடிமை உமக்கே ஆளாய்ப் பிறரைவேண்டாதே
முளாத் துப்போல் உள்ளே களன்று முகத்தான் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார்தங்கள் அல்லல் சொன்னக்கால்
 வாளாங் கிருப்பீர், திருவாரூரீர், வாழ்ந்து போதீரே."

"ஏற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் ஞநரே பழிபட்டீர்
 மற்றைக் கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்து போதீரே"

"என்றும் முட்டாப் பாடுமடியார் தங்கண் காணாது
 குன்றின் முட்டிக் குழியின் வீழ்ந்தால் வாழ்ந்து போதீரே"

"சந்தம் பலவும் பாடு மடியார் தங்கண் காணாது
 வந்தெம் பெருமான் முறையோ வென்றால் வாழ்ந்து போதீரே."

"பாரூ ரறிய என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர்
 வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதுரே"

அப்போது, இறைவன் அருளால் மற்றக்கண் படலம் நீங்கிப் பார்வை தெரிந்தது. அக்காலத்தில், கலிக்காம நாயனார் என்னும் தொண்டருடன் நண்பரானார்.

சேரநாட்டை அரசாண்ட சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தி நாயனாரைக் காண்பதற்காகத் திருவாரூருக்கு வந்தார். சுந்தரர் அவருடன் நட்பு கொண்டு இருவரும் தல யாத்திரை செய்யப் புறப்பட்டுப் பாண்டிநாடு சென்று அந்நாட்டுத் தலங்களை வணங் கினார்கள். பின்னர் பாண்டிய மன்னன் அரண்மனையில் தங்கினார்கள். அங்கே, பாண்டியன் மகளைத் திருமணஞ் செய்து கொண்ட சோழ அரசன் தங்கியிருந்தான். இவர்கள் நால்வரும் திருப்பரங்குன்றம் சென்று கடவுள் வழிபாடு செய்தார்கள். அவ்வமயம் சுந்தரர், “திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும்” என்னும் பதிகம் பாடினார். அப்பதிகத்தின் கடைசியிலே, தமிழ்நாட்டுப் பழைய முடியுடை வேந்தர் மூவரும் ஒருங்கிருப்பதைக் குறிப்பிட்டுப் பாடினார். அச்செய்யுள் இது :

“அடிகேள் உமக்காட்செய அஞ்சுதும்
        என்றமரர் பெருமானை ஆரூரனஞ்சி
முடியா லுலகாண்ட ஓர்நான்கும் ஒரோன்றினையும்
        படியா யிவைகற்று வல்ல வடியார்
பரங்குன்ற மேய பரமனடிக்கே
        குடியாகி வானோர்க்குமோர் கோவு மாகிக்
குலவேந்தராய் விண்முழு தாள்பவரே”

பாண்டிய நாட்டிலிருந்து வந்த பிறகு சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தியைத் தமது சேர நாட்டுக்கு அழைத்துச் சென்றார். சேர நாட்டில் சிலநாள் தங்கிய பிறகு சுந்தரர் மீண்டும் திருவாரூருக்கு வந்தார். சிலநாட்கள் சென்ற பிறகு, சுந்தரமூர்த்தி நாயனார் மீண்டும் சேர நாடு சென்று சேரமான் பெருமாளுடன் தங்கினார். தங்கியிருந்தபோது, இவ்வுலக வாழ்வை விட்டு வெள்ளையானை ஏறித் திருக்கயிலாயஞ் சென்று சிவகதி பெற்றனர். அவ்வமயம் அவர் பாடிய 18 திருநொடித்தான் மலைப் பதிகத்தில் வெள்ளை யானைமீது ஏறிச் சென்றதைக் கூறுகிறார்.

“வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே.”

“விண்ணுல கத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே.”

“இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர்கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திரமா முனிவர் இவனாரென் எம்பெருமான்
நந்தமர் ஊரனொன்றான் நொடித்தான்மலை உத்தமனே.”

“இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லம்
வந்தெதிர்கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திரமா முனிவர் இவனாரென் எம்பெருமான்
நந்தமர் ஊரனொன்றான் நொடித்தான்மலை உத்தமனே.”

சுந்தரமூர்த்தி நாயனார் தமது பதினாறு வயது முதல் பதினெட்டு வயது வரையில் இரண்டு ஆண்டுகள் கடவுளிடம் பக்திசெய்து அடியாராக இருந்தார். மிகச் சுருங்கிய காலத்தில் சிவகதி யடைந்த சிவனடியார்களில் இவரும் ஒருவர்.

இவர் பாடியருளிய தேவாரப் பதிகங்கள் தொகுக்கப்பட்டு ஏழாந் திருமுறை என்று வழங்கப்படுகிறது. இவர் முப்பத்தெட்டாயிரம் பதிகங்கள் பாடினார் என்பர்.

“பின்புநில நாளின்கண் ஆரூரர் நம்பி
        பிறங்குதிரு வெண்ணெய்நல்லூர் பித்தா என்னும்
இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்
        ஈறாய்முப் பத்தெண்ணா யிரமதாக
இன்புபகன் றவர்நொடித்தான்
        மலையிற் சேர்ந்தார்”

என்பது திருமுறை கண்ட புராணம்.

இப்போது உள்ள திருப்பதிகங்கள் நூறு மட்டுமே. வெள்ளிப்பாடல் என்னும் காரோனைப் பதிகம், பிற்காலத்தில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு பெரிய புராணத்திலே இடையிடையே கூறப்படுகிறது. தடுத்தாட்கொண்ட புராணத்திலும், ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்திலும், கழறிற்றிவார் என்றும் சேரமான் பெருமாள் நாயனார் புராணத்திலும், வெள்ளானைச் சருக்கத்திலும் இவருடைய வரலாறு கூறப்பட்டுள்ளது.

சேரமான் பெருமாள் நாயனார்

இவர் சேரநாட்டரசர். பெருமாக்கோதையார் என்பது இவருடைய பெயர். கடற்கரையை யடுத்த மகோதை என்னும் கொடுங்கோளூரைத் தலைநகரமாகக் கொண்டு அரசாட்சி செய்தார். இவருக்குக் கழறிற்றறிவார் என்னும் பெயரும் உண்டு. சைவ சமயப் பற்றும் சிவபக்தியும் உடையவர். சைவ சாத்திரங்களை நன்கு கற்றவர். தமிழில் கவிபாடும் புலமை மிகுந்தவர்.

இவர் யானையேறி நகர்வலம் செய்தபோது, ஒருவண்ணான் உவர் மண்ணைச் சுமந்துகொண்டு எதிரிலே வந்தான். அவன் உடல் முழுவதும் உவர்மண் படிந்து நீறு பூசியது போலக் காணப்பட்டது. அவனைக் கண்ட சேரமான் பெருமாள் அவனைச் சிவனடியார் என்று நினைத்து, யானையினின்று இறங்கிவந்து வணங்கினார். வண்ணான் அச்சங்கொண்டு, அரசரை வணங்கி, “அடியேனை யாரெனக் கொண்டது! அடியேன் அடிவண்ணான்” என்று கூறினான். பெருமாளும், “அடியேன் அடிச் சேரன். திருநீற்று வேடத்தை நினைப்பித்துர்! வருந்தாமல் போம்” என்று விடையிறுத்தார். இதனால், இவருடையட சிவசமயப் பற்று நன்கு விளங்குகிறது.

மதுரைச் சொக்கநாதப் பெருமான் அனுப்பிய திருமுகப் பாசுரத்தின்படி, இவர் தம்மிடம் வந்த பாணபத்திரன் என்னும் இசைவாணருக்குப் பொருநிதி அளித்தார்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் சிவபக்தியினைக் கேள்வியுற்று, அவரைக் காணவேண்டும் என்னும் விருப்பத்தினால் திருவாரூக்கு வந்தார். வரும் வழியில் சிதம்பரத்தில் தங்கிக் கூத்தப்பெருமானை வணங்கிப் பொன்வண்ணத் தந்தாதி என்னும் நூலை இயற்றி அரங்கேற்றினார். பின்னர்த் திருவாரூரை அடைந்து சுந்தரமூர்த்தி நாயனாரால் வரவேற்கப்பட்டு அங்குத் தங்கி தியாகப்பெருமானை வணங்கினார். அக்காலத்தில், திருவாரூர் மும்மணிக் கோவை என்னும் நூலை இயற்றித் திருக்கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் முன்னிலையில் அரங்கேற்றினார். பிறகு, சுந்தரருடன் வேதாணியம் சென்று, இறைவனை வணங்கிச் சிவபெருமான்மேல் ஒரு அந்தாதி பாடினார். அந்த அந்தாதி இப்போது கிடைக்கவில்லை. பிறகு, பாண்டிய நாட்டில் சுந்தரரோடு தலயாத்திரை செய்து திரும்பி வந்து திருவாரூரில் தங்கினார். சிலநாட்களுக்குப் பிறகு, சுந்தரரை அழைத்துக்கொண்டு தமது ஊருக்குச் சென்றார். சுந்தரர் சிலநாட்கள் கொடுங்கோளூரில் தங்கியிருந்து, மீண்டும் திருவாரூருக்கு வந்தார்.

நெடுநாள் ஆனபிறகு, சுந்தரமூர்த்தி நாயனார் மீண்டும் சேரமான் பெருமாளைக் காண்பதற்குக் கொடுங்கோளூர் சென்றார். அங்கிருந்தபோது திருக்கயிலாயத்திலிருந்து வெள்ளையானை வர, சுந்தரர் அதில் ஏறிக்கொண்டு திருக்கயிலாயஞ் சென்றார். அதனையறிந்த சேரமான் பெருமாள் குதிரை ஏறி, சுந்தரரைத் தொடர்ந்து சென்று கயிலாயம் அடைந்தார். அடைந்து, தாம் இயற்றிய ஆதியுலா என்னும் திருக்கயிலாய ஞான உலாவை அரங்கேற்றினார். அவ்வுலா பின்னர் திருப்பிடவூரிலே வெளியிடப்பட்டது.

இவர் இயற்றிய பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, ஆதியுலா என்னும் திருக்கயிலாய ஞானவுலா ஆகிய மூன்றும் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.

சேரமான் பெருமாள் நாயனாரின் விரிவான வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணத்தில், கழறிற்றறிவார் புராணத்தில் (சேரமான் பெருமாள் நாயனார் புராணத்தில்) காண்க.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், தமது திருத்தொண்டத் தொகைப்பதிகத்தில், “கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்” என்று இவரைச் சிறப்பித்திருக்கிறார்.

நரசிங்கமுனையரையர்

இவர் குறுநில மன்னர், திருமுனைப்பாடி என்னும் நாட்டிற்கு அரசர். பல்லவ அரசன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்தவர். இவரைப் பற்றிப் பல்லவர் சாசனங்களில் கூறப்படவில்லை. ஆனால், அவ்வரசர் காலத்தில் இருந்தவர் என்பது நன்கு அறியப்படுகிறார். இவர் பகைவரைப் போரில் வென்றார் என்று கூறப்படுகிறபடியால், தெள்ளறெறிந்த நந்திவர்மனுக்குத் துணையாக இருந்து இவர் பகைவர்களை வென்றிருக்கக்கூடும். நரசிங்க முனையரையர் பகைவர்களைப் போரில் வென்று, சிவபக்தி யுடையவராக வாழ்ந்திருந்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

“இம்முனையர் பெருந்தகையார்
        இருந்தரசு புரந்துபோய்த்
தெம்முனைகள் பலகடந்து
        தீங்குநெறிப் பாங்ககல
மும்முனைநீள் இலைச்சூல
        முதற்படையார் தொண்டுயீபரி
அம்முனைவர் அடிஅடைவே
        அரும்பெரும்பே றெனஅடைவார்”19


நரசிங்கமுனையரையர் காலத்தில், திருமுனைப்பாடி நாட்டில் ஆதிசைவ குடும்பத்தைச் சேர்ந்த சடையைனார்க்கும் அவர் மனைவியார் இசைஞானியார்க்கும் நம்பியாரூரர் மகவாகப் பிறந்தார். அந்தச் சுந்தரக் குழந்தையை நரசிங்க முனையரையர் கண்டு அன்புகொண்டு பெற்றோரின் இசைவு பெற்று அக்குழந் தையைத் தமது மாளிகையில் வளர்த்து வந்தார்.20 நம்பியாரூரர் என்னும் அக்குழந்தை வளர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் பெயருடன் சைவ சமயகுரவர் நால்வரில் ஒருவராகத் திகழ்ந்தது.

நரசிங்கமுனையரையர் சைவத் தொண்டு செய்து கொண்டிருந்தார். திருவாதிரையில் சிவபெருமானுக்குச் சிறப்புப் செய்து, தம்மிடம் வருகிற சிவனடியார்க்குத் திருவமுது அளித்து அவர்களுக்குத் தனித்தனியே நூறு பொன் கொடுப்பார். ஒரு திருவாதிரையின்போது, நல்லொழுக்கமில்லத தூர்த்தனாகிய ஒருவன், காசு பெறும் பொருட்டு, திருநீறணிந்து அங்கு வந்தார். அந்தத் தூர்த்தனைக்கண்ட மற்றவர்கள் இகழ்ந்து ஒதுங்கினார்கள். அவரைக்கண்ட நரசிங்கமுனையரையர், அவரை இகழாமல், அவர் அணிந்திருந்த நீற்றுக்கு மதிப்புக் கொடுத்து, அவருக்கு இருநூறு பொன் கொடுத்து அனுப்பினார்.

இவ்வாறு சிவபக்தராகத் திகழ்ந்த இந்நாயனார், சைவ அடியார் அறுபத்துமூவரில் ஒருவராகச் சேர்க்கப்பட்டார். இவரால் வளர்க்கப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார், தமது திருத்தொண்டத் தொகைப் பாசுரத்தில்,

“மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்”

என்று இவரைப் போற்றினார். அன்றியும் தமது தேவாரத் திருப்பதிகத்தில்,

“நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முனையரையன்
ஆகரித்தீசனுக் காட்செயுமூர் அணிநாவலூர்......”21

என்று சிறப்பித்துப் பாடினார்.

கடையனார், இசைஞானியார்

திருமுனைப்பாடி நாட்டிலேயுள்ள திருநாவலூரில் வாழ்ந்திருந்தவர் ஆதிசைவ குலத்தவராகிய சடையனார். இவருடைய மனைவியார் இசைஞானியார். இவருக்கு மகனாகத் தோன்றியவர் நம்பி ஆரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனார். சைவ சமய துரவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளை உலகத்துக்களித்த பெருமை வாய்ந்தவர்கள் இவர்கள்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருத்தொண்டத் தொகையில், இவர்களைப் போற்றியுள்ளார்.

“என்னவனாம் அரனடியே யடைந்திட்ட சடையன்
        இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
        ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே”

என்று அவர் பாடியுள்ளார். மேலும் தாம் அருளிய கலைய நல்லூர் தேவாரத்திலும்,

“நண்புடைய நற்படையன் இசைஞானி
சிறுவன் நாவலூர்க் கோன்”

என்று இவர்களையும் தம்மையும் கூறியுள்ளார்.

மானக்கஞ்சாற நாயனார்

கஞ்சாறூரில் பரம்பரரைச் சேனாபதித் தொழில் புரியும் குடும்பத்தில் மானக்கஞ்சாற நாயனார் பிறந்தார். இவர் சிறந்த சிவபக்தர். சைவ அடியார்களுக்குத் தொண்டு செய்பவர். பிள்ளைப் பேறின்றி இருந்த இவருக்குச் சிவபெருமான் திருவருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை வளர்ந்து மணப்பருவம் அடைந்தது.

பெருமங்கலம் என்னும் ஊரிலே ஏயர்குடியிலே பிறந்த கவிக்காமர் என்பவர், சில பெரியோர்களை அனுப்பி, மானக்கஞ்சாறர் மகளைத் தமக்கு மணம் செய்விக்கும்படி கேட்டார். மானக்கஞ்சாறர் அதற்கு உடன்படவே திருமணத்திற்கு நன்னாள் குறிக்கப்பட்டது. அச்சமயத்தில் மாவிரத சைவத்தைச் சேர்ந்த ஒரு முனிவர், மணமகள் இல்லத்திற்கு வந்தார். வந்த முனிஒவரை மானக்கஞ்சாறர் வரவேற்று வணங்கினார். முனிவர், “உமது இல்லத்தில் என்ன சிறப்பு நடை பெறுகிறது?” என்று கேட்க, அடியார், “அடியேன் மகளுக்குத் திருமணம் நிகழ்கிறது” என்று கூறி, மகளை அழைத்து முனிவரை வணங்கச் செய்தார்.

மணமகளுடைய கரியநீண்ட கூந்தலைக் கண்ட மாவிரத முனிவர், “இந்த மயிர் பஞ்சவடிக்குத் தகுந்தது” என்று கூறினார். பஞ்சவடி என்பது மயிரினால் செய்யப்பட்ட பூணூல். மயிரினால் அகலமாகப் பின்னப்பட்ட பூணூலையும் எலும்பினால் செய்யப்பட்ட மணியையும் மாவிரதிகள் அணிவது வழக்கம். மகளின் மயிர் பஞ்சவடிக்கு உதவும் என்று கூறியதைக் கேட்ட மானக்கஞ்சாறர். முன்பின் சிந்திக்காமல், தமது உடைவாளை எடுத்துத் தமது மகளின் கூந்தலை அடியோடு அரிந்து அவரிடம் கொடுத்தார். அவள் மணப்பெண் என்பதை அவர் சிறிதும் சிந்திக்கவில்லை.

அடுத்த நாள் மணமகனாகிய ஏயர்கோன் கலிக்காமனார் வந்து நிகழ்ந்ததை அறிந்து, அவரும் சிவனடியார் ஆகையால், மானக்கஞ்சாறரின் செயலுக்கு மகிழ்ந்தார். ஆனாலும், முண்டிதம் ஆன பெண்ணை மணஞ் செய்யலாமா என்று தயங்கினார். அப்பொழுது சிவபெருமானே வந்து அப்பெண்ணை மணஞ் செய்துகொள்ளும்படி கூற, அவர் மணம் செய்து கொண்டார்.

இவ்வாறு மானக்கஞ்சாறர் சிறந்த சிவபக்தராய் விளங்கிப் பின்னர் சிவபதம் அடைந்தார்.22

“மலை மலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன்” என்று இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் பாராட்டியுள்ளார்.

ஏயர்கோன் கலிக்காமர்

கலிக்காமர் சோழ நாட்டுத் திருமங்கலக்குடி என்னும் ஊரில் ஏயர்குடியில் பிறந்தவர்; ஆகையால், ஏயர்கோன் கலிக்காமர் என்று கூறப்படுகிறார். அரசரிடம் சேனாபதித் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறந்த சிவபக்தர். இவரைப் போலவே, சேனாபதித் தொழில் புரியும் குடும்பத்தைச் சேர்ந்த, மானக்கஞ்சாற நாயனாரின் மகளை இவர் திருமணஞ் செய்துகொண்டு வாழ்ந்தார்.23 இவர், திருப்புன்கூர் என்னும் ஊரிலேயுள்ள திருக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்து கொண்டிருந்தார்.

அக்காலத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பரவையாரிடத்தில் சிவபெருமானைத் தூது அனுப்பிய செய்தியைக் கலிக்காமர் கேள்விப்பட்டார்; பெருஞ் சினங் கொண்டார். சிவபெருமானை ஒரு பெண்ணிடம் தூது அனுப்பலாமா? அவனை நேரில் காண்பேனானால் என்ன நிகழுமோ! என்று சினந்து பேசினார். சுந்தரரிடம் அடங்காச் சீற்றங் கொண்டார். இதனை யறிந்த சுந்தரர் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் கலிக்காமருக்கு வயிற்றில் சூலை நோயை உண்டாக்கி, அவர் கனவில் தோன்றி “இந்நோய். சுந்தரனால் அல்லாமல் தீராது” என்று கூறினார். பிறகு, சுந்தரரிடம், ‘நீ போய் கலிக்காமன் வயிற்று வலியைத் தீர்த்துவிட்டு வா” என்று சொன்னார்.

சுந்தரர் கலிக்காமரிடம் சென்றார். அவர் வருகையை யறிந்த கலிக்காமர், சுந்தரரால் சூலை நோய் நீங்குவதைவிட உயிர் விடுவதே மேல் என்று நினைத்துக் கைவாளினால் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டார். சுந்தரர் வந்து நடந்ததை அறிந்து தாமும் உயிர்விடத் துணிந்து அங்கிருந்த வாளை எடுத்தார். அப்போது கலிக்காமர், அவர் கையைப் பிடித்துத் தடுத்தார். சுந்தரர் இவரை வணங்க, இவரும் அவரை வணங்கினார். பின்னர் இருவரும் நண்பர்காளகித் திருப்புன்கூருக்குச் சென்று கடவுளை வணங்கினார்கள். பிறகு, கலிக்காமர் சுந்தரருடன் திருவாரூருக்குச் சென்று அவருடன் சிலகாலம் தங்கியிருந்து, தமது ஊருக்குத் திரும்பினார்.

“ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் இவரைத் திருத்தொண்டத் தொகையில் பாராட்டியுள்ளார். மேலும், “ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து” அருள் செய்ததையும் திருப்புன்கூர்ப் பதிகத்தில் (3) கூறியுள்ளார்.

கோட்புலி நாயனார்

சோழ நாட்டு நாட்டியத்தான் குடி இவருடைய ஊர்; இவர், அரசனிடம் சேனாபதி தொழில் செய்தவர். சிறந்த சிவபக்தர். சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் இருந்தபோது, அவரிடம் சென்று அவரைத் தமது ஊருக்கு அழைத்தார். அவ்வாறே சுந்தரர் நாட்டியத்தான் குடிக்குச் சென்றபோது, கோட்புலியார் அவரைச் சிறப்பாக வரவேற்றார். வரவேற்றுத் தமது குமாரத்திகளாகிய சிங்கடியார், வனப்பகையார் என்பவர்களை அழைத்து அவரை வணங்கச் செய்தார். பிறகு,

அடியேன் பெற்ற மக்களிவர் அடிமையாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுதுயக் கருணை அளிக்வேண்டும்

என்று வேண்டினார். சுந்தரர் அரனை மறுத்து, “இவர்கள் எனது மகளாகக் கடவர்” என்று கூறி, அவர்களைத் தமது குமாரத்திகளாக ஏற்றுக் கொண்டார்.24 சுந்தரர், கோட்புலியாரையும் அவரது குமாரத்திகளையும் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

“கூடாமன்னரைக் கூட்டத்துவென்றகொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழல் சிங்கடியப்பன்
திருவாரூரன் உரைத்த
பாடீராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம் பற்றறுமே.”25

“நாணியூரன் வனப்பகையப்பன் வன்தொண்டன்”.26

என்றும்,

“சிலையார் வாணுதலாள் நல்ல சிங்கடியப்பன்”27

என்றும்,

இளங்கிளை யாரூரன் வனப்கை யவள் அப்பன்28

என்றும்,

“திருநாவலூரன் வனப்பகையப்பன் வன்தொண்டன்”29

என்றும்,

“நறவம் பூம்பொழில் நாவலூரன்
        வனப்பகை யப்பன் சடையன்தன்
சிறுவன் வன்றென்ட னூரன் பாடிய
        பாடல பத்திவை வல்லவர்”30

என்றும்,

“செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்றெஞ்

சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்துநான் மற்று நினைப்பதே தென்று

வனப்பகை யப்ப னூரன் வன்தொண்டன்”31

“வஞ்சியும்வளர் நாவலூரன் வனப்பகை
யவளப்பன் தொண்டன்”32

என்றும் அவர் பாடியது காண்க.

கோட்புலி நாயனார் சிறந்த சிவபக்தர் என்று கூறினோம். இவர், சிவபெருமானுக்குத் திருவமுது செய்விக்க நெல்லை விலைக்கு வாங்கிக் கொடுத்தார். ஒரு சமயம் அரசன் இவரைப் பகைவருடன் போர்செய்ய அனுப்பினான். போர்க்களம் போவதற்கு முன்பு இவர் நெற்குவியலை விலைக்கு வாங்கிவைத்து, “ஒருவரும் இதனை எடுக்கக் கூடாது” என்று சுற்றத்தாருக்குத் தனித் தனியே சொல்லிவிட்டுச் சென்றார்.

சில காலத்துக்குப் பிறகு நாட்டில் கருப்பு ஏற்பட்டு மக்கள் உணவுக்கு வருந்தினார்கள். அப்போது, இவருடைய சுற்றத்தார் பசி பொறுக்க முடியாமல் இவர் வைத்துப்போன நெற் களஞ்சியத்திலிருந்து நெல்லை எடுத்து உண்டார்கள். போருக்குச் சென்ற கோட்புலியார், பகைவரை வென்று அரசனிடம் சிறப்புப் பெற்று ஊருக்குத் திரும்பிவந்தார். வந்து, நாம் வைத்த நெல் எடுக்கப்பட்டதைக் கண்டு சினங்கொண்டார். அதனை எடுத்து உண்ட தனது சுற்றத்தார் எல்லோரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார்.

“தந்தையார் தாயார் மற்றும் உடன்பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார் பதியடியார்......”

முதலிய எல்லோரையும் வாளினால் துண்டித்தார். கடைசியாக ஒரு சிறு குழந்தையையும் வெட்டத் துணிந்தார். அப்போது, வருடைய ஏவலாளனாகிய கோட்புலி என்பவன் தடுத்து, “இது குழந்தை நெல்லை உண்ணவில்லை” என்று கூறினான்.

“இது நெல்லை உண்ணவில்லை, நெல்லையுண்டவள் பாலையுண்டது” என்று கூறி அதனையும் வெட்டி வீழ்த்தினார். அப்போது சிவபெருமான் தோன்றி, “உன்னால் வெட்டுண்டவர் விண்ணுலகம் எய்தட்டும். நீ நம்மிடம் வா” என்று அருளினார். இவ்வரலாற்றைப் பெரியபுராணம், கோட்புலி நாயனார் புராணத்தில் காண்க.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், இவரை

“அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்”

என்று சிறப்பித்தார்.

சேரமாசிமாறர்

சோழ நாட்டில் திருவம்பர் என்னும் ஊரில் இருந்தவர்; பிராமணர். இவருடைய இயற் பெயர் மாறன் என்பது. சோமயாகம் செய்த படியினாலே சோமயாஜி என்னும் காரணப்பெயர் பெற்றார் என்றும், சோமயாஜி என்பது சோமாசி எனத் திரிந்தது என்றும் கூறுவர். சிவபெருமானிடத்தும் சைவ அடியாரிடத்தும் மிகுந்த அன்புள்ளவர். திருவாரூரில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனாரை அடைந்து, அவரிடத் தில் பக்தி செய்து கொண்டிருந்து கடைசியிலி சிவபதம் அடைந்தார்.

“நட்பரான் சோமாசி மாறனுக்கடியேன்”

என்று சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பாராட்டியுள்ளார்.

பெருமிழலைக் குறும்பர்

மிழலை நாட்டில் பெருமிழலை என்னும் ஊரில் இருந்தவர். சிறந்த சிவபக்தியும் சைவ அடியார்களைப் போற்றிச் சிறப்புச் செய்யும் அடியார் தொண்டும் செய்து வந்தார். அன்றியும் யோகம் செய்யும் யோகியாகவும் இருந்தார். இவர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சிவபக்தியை அறிந்து, அவரிடம் பக்திகொண்டு அவரைச் சிந்தித்து வணங்கி வந்தார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவஞ்சைக்களஞ் சென்றிருந்த போது, அவர் வெள்ளையானை ஏறித் திருக்கயிலாயஞ் செல்லப் போகிறதைப் பெருமிழலைக் குறும்பர், தமது யோக சக்தியால் முன்னமே யுணர்ந்தார். சுந்தரர் இவ்வுலகத்தை விட்டு நீங்குவதற்கு முன்பே, நானும் இவ்வுலகத்தைவிட்டு நீங்குவேன் என்று உறுதி செய்துகொண்டு, தமது யோக சக்தியால் உடலிலிருந்து உயிரைப் பிரித்துக் கொண்டு திருக்கயிலாயம் சென்றார்.

கழற்சிங்க நாயனார்

இவர் பல்லவ அரச குலத்தில் வந்த பல்லவ மன்னன். கழற்சிங்கன் என்பது இவருடைய சிறப்புப் பெயர். இவரே தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆவர்.33

கழற்சிங்க நாயனார் ஒரு சமயம் மாதேவியோடு திருவாரூர் திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினார். அவருடன் சென்ற அரசியார் அங்கிருந்த பூவொன்றைக் கையிலெடுத்து மோந்தார். அதனைக் கண்டு, அங்கிருந்த செருத்துணை நாயனார் சினங்கொண்டு, சிவபெருமானுடைய பூவை மோந்த மூக்கை அரிவேன் என்று கூறி, தம் கையிலிருந்த கத்தியினால் அவர் மூக்கை அரிந்தார். மாதேவியார் கூச்சலிட்டு அலறினார். உடனே கழற்சிங்கர் வந்து “இப்படிச் செய்தவர் யார்” என்று சினந்து கேட்டார். செருந்துணை நாயனார் தாமே இப்படிச் செய்ததாகவும் அதன் காரணத்தையும் கூறினார். அப்போது, கழற்சிங்கர், “மூக்கை அரிந்ததுமட்டும் போதாது; புவை எடுத்த கையையும் துண்டிக்க வேண்டும்” என்று கூறி வாளை எடுத்துத் தமது மனைவியாரின் கையைத் துண்டித்தார். இக் கதையைப் பெரியபுராணம் கழற்சிங்க நாயனார் புராணத்தில் காண்க.

சுந்தரமூர்த்தி நாயனார், இந்த நாயனாரைத் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தில்,

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”

என்று சிறப்பித்திருக்கிறார்.

செருந்துணை நாயனார்

சோழ மண்டலத்து மருகல் நாட்டுத் தஞ்சாவூரிலே இருந்த சிவபக்தர் செருந்துணை நாயனார். இவர் திருவாரூர் திருக்கோயிலில் சென்று வன்மீக நாதரை வழிபட்டு அக்கோயிலில் திருத்தொண்டுகள் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒருநாள், கழற்சிங்க நாயனார் தமது மாதேவியாரோடு அக்கோயிலுக்கு வந்து கடவுளை வணங்கினார். அவருடன் வந்த மாதேவியார், கோயிலில் கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதனைக் கண்ட செருந்துணையார், சிவபெருமானுடைய பூவை மோந்ததற்காகக் கோபங்கொண்டு, அரசியாரின் மூக்கைக் கத்தியினால் அரிந்தார். இவ்வாறு சிவபெருமானிடத்தில் மிகுந்த பக்தியுடையவராக இருந்து கடைசியில் சிவகதியடைந்தார்.

விறன்மிண்ட நாயனார்

இவர் மலைநாட்டிலே செங்குன்றூரில் இருந்தவர். சிவபக்தியும் சிவனடியார் பக்தியும் உடையவர். அவர் திருக்கோயில்களுக்குப் போகும்போது முதலில் சிவனடியார்களை வணங்கிப் பிறகு சிவபெருமானை வணங்கும் இயல்புள்ளவர். இவர் பிற்காலத்தில், திருவாரூரில் சென்று அங்குத் தங்கியிருந்தார்.

திருவாரூரில் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஒரு நாள் கோயிலுக்குச் சென்றபோது, அங்கிருந்த சிவனடியார்களை வணங்காமல் கோயிலுக்குள் சென்றார். அப்போது அவர்களுடன் இருந்த விறன்மிண்டர், “அடியார்களை வணங்காமல் போகிற வன்தொண்டன் அடியார்களுக்கு வேறுபட்டவன்” என்று கூறினார். அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனார், அவருடைய அடியார் பக்தியை வியந்தார். உடனே, திருத்தொண்டத்தொகை என்னும் பதிகத்தைப் பாடினார். இவர் பாடிய திருத்தொண்டத்தொகை, பிற்காலத்தில் திருத்தொண்டர் புராணம் பாடுவதற்கு முதல் நூலாக இருந்தது.

சுந்தரர், திருத்தொண்டத் தொகையில், “விரிபொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்” என்று விறன்மிண்டரைக் கூறினார்.

விறண்மிண்ட நாயனாரைப் பற்றி வேறு சில கதைகள் வழங்கப்படுகின்றன. அக்கதைகள் பெரியபுராணத்தில் கூறப்படவில்லை.

வரகுண பாண்டியன்

வரகுண பாண்டியன் நந்திவர்மன் காலத்தில், பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற அரசனாக இருந்ததோடு, சிறந்த சிவபக்தனாகவும் இருந்தான். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வரசனைத் தமது திருத்தொண்டத்தொகையில் கூறாமற் போயினும், வேறு பதிகத்தில் கூறியுள்ளார். வரகுண பாண்டியனுக்கு மாறன் சடையன் என்னும் பெயரும் உண்டு. இப்பெயரைச் சுந்தரர், திருவதிகைத் திருவீரட்டானப் பதிகத்தில் (8) பொடியாடும் திருமேனி நெடுமாறன் என்று கூறுகிறார். இந்த நெடுமாறன், “நெல்வேலி வென்ற நெடுமாறன்” அல்லன், “பொடியாடும் திருமேனி நெடுமாறன்” ஆவன். வரகுணபாண்டிய னாகிய மாறன் (நெடுமாறன்), மிகுந்த சிவபக்தனாய் போருக்குச் செல்லும்போதும் உடம்பு முழுவதும திருநீறு பூசிப் (பொடியாடிப்) போருக்குச் செல்வான் என்று கூறுப்படுவதால், சுந்தரர் கூறிய “பொடியாடிடுந் திருமேனி நெடுமாறன்” வரகுணபாண்டியனே என்று உறுதியாக நம்பலாம். இவன் பெயர் திருத்தொண்டத்தொகையில் கூறப்படாதபடியால் இவனைச் சிவனடியார்களில் ஒருவனாகப் பெரியபுராணம் கூறவில்லை. ஆனால், இவனுடைய உயர்ந்த சிவபக்தியைத் திருவிளையாடற் புராணங்களும், பட்டினத்துப் பிள்ளையாரும் கூறுகிறார்கள். சிவபக்தனாகிய வரகுண பாண்டியன், நேரில் சிவலோகம் சென்று தரிசிக்கவேண்டுமென்று ஆசைப்பட, அதையறிந்த சிவபெருமான் நந்திதேவரைக் கொண்டு அரசனுக்குச் சிவலோகத்தைக் காட்டியதாகப் புராணக்கதை கூறுகிறது.34

வரகுணபாண்டியனுடைய சிவபக்தியைப்பற்றி வேறு சில கதைகளும் கூறப்படுகின்றன. கள்ளன் ஒருவனைப் பிடித்துக் கொண்டுவந்து இவர் முன்பு விட்டார்கள்; அக்கள்ளன் உடம்பு முழுவதும் திருநீறு பூசியிருந்தான். அதனைக் கண்ட வரகுணபாண்டியன், அவனைச் சிவனடியார் என்று எண்ணித் தண்டிக்காமல் விட்டுவிட்டார். நரிகள் ஊளையிட்டதைக் கேட்டு, அவனை சிவபெருமானை வாழ்த்தியதாக நினைத்து, அவைகளுக்கு உடுத்தும்படி துணிகளை வழங்கினார். கார்காலத்தில் குளத்தில் தவளைகள் அரற்றிய “அரகர” என்னும் ஓசையைக் கேட்டு அத்தவளைகள் சிவபெருமான் பெயரைப் பாடியதாகக் கருதிக் காசையும் பொன்னையும் அக்குளத்திலே தூவினாராம். சிவபெருமான் திருமஞ்சனத்துக்காக எண்ணெய் ஆட்ட எள்ளைக்கொண்டு வந்து காயவைத்திருந்தார்கள். ஒருவன் அந்த எள்ளை எடுத்துத் தின்றான். இந்தப்பாவஞ் செய்தவனைக் கையும் பிடியுமாகப் பிடித்துக்கொண்டுபோய் வரகுணனிடம் விட்டார்கள். இந்தச் சிவபாவத்தை ஏன் செய்தாய் என்று கேட்க, அவன், சிவனுடைய எள்ளைத் தின்றால் சிவகதி கிடைக்கும் என்று கூறினான். அப்படியானால், உன் வாயில் இருக்கும் எள்ளை எனக்கும் கொடு என்று கேட்டாராம்.

சோழநாட்டுத் திருவிடைமருதூரில், இவ்வரசன் இருந்த போது இறந்தவனுடைய மண்டையோடு தரையில் கிடந்ததைக் கண்டு, அதனைக் கையில் எடுத்து, “இந்தப் புண்ணிய நகரத்தில் உன் தலையோடு இருக்க என்ன புண்ணியம் செய்தனையோ! என் தலையோடும் இவ்வாறு சிவ க்ஷேத்திரத்தில் கிடக்கும்படி அருள் கிடைக்கவேண்டும்” என்று வேண்டினாராம். திருவிடைமருதூர்க் கோயிலில், ஒரு நாய் மலம் கழிக்க அதனைத் தமது கையினால் எடுத்து அப்புறப்படுத்திக் கோயிலைத் தூய்மை செய்தாராம். வேப்ப மரத்தில் வேப்பங்காய்கள், சிவலிங்கம் போன்ற உருவத்தோடு இருப்பதைக் கண்டு, அவற்றைச் சிவலிங்கமாகவே எண்ணி, அம்மரங்களுக்குப் பந்தல் அமைத்தாராம். அன்றியும், தமது தேவியைச் சிவ பெருமானுடைய திருக்கோயிலில் ஊழியம் செய்ய அனுப்பினாராம்.

இச்செய்திகளைப் பழைய திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

“மிஞ்சிடை மருதர் கோயில் பதக்கணம் வரும் வீதிக்கண்
அஞ்சிநாய்க் கட்டங்கண் டீதெடுத்தவர்க்கு அவனி பாதி
நெஞ்சினால்கொடுப்பலென்றே நினைத்தனன் எடுப்பக்காணான்
பஞ்சவன் பகுதி யில்லென்றெடுத்தனன் பரிவட்டத்தால்”

“தேம்படு பழனஞ் சூழ்ந்த திருவிடை மருதினெல்லைப்
பாம்பொடு டமதியஞ் சூடும் பரமனார் உருவம் என்னக்
காம்பவிழ்ந் துதிர்ந்த செய்ய கனியுருக் கண்டாங் கெல்லாம்
வேம்புகட் குயர்விமானஞ் சாத்தினான் வேந்தர் வேந்தன்.”

“பரிந்திடை மருதர் நன்னீ ராடமுன் பரப்பும் எள்ளைக்
கரந்தொரு கள்ளன் தின்னக் கண்டவர் கொடுசெலுங்கால்
அருந்திய தென்னை என்ன அரன்றமர்க் கடிமை யாக
வரும்பிறவியின்கண் என்றான் மன்னவனயின்றான் வாங்கி.”

“சோதிசேர் மருதர் தேர்போம்வீதியில் தொழுவான் செல்லும்
போதில் முன்கிடந்த பொல்லாப் புன்தலை ஓடுகண்டு
நாத! இத்தலைபோல் என்தன் நாய்த்தலை ஓடும் இந்த
வீதியிற்கிடக்க என்றே மிலைந்தனன் இலங்குதென்னன்.”

“கள்ளனைக் கட்டிச் செல்லுங் காலையில் கள்ளன் ஈமத்
தெள்ளிய நீற்றின் வீழ்ந்து சிரித்தரகர என்றெய்த (மிக்க
உள்ளம் வாழ்ந்தெதிர்கொள் வேந்தன்விடும்விடும் உயர்பால்
வெள்ளரைக் கள்ளர் என்றோ விளம்புவதெனப் பணிந்தான்.”

“தேடருஞ் சிறப்பின் மிக்க திருவிடை மருதினெல்லைக்
காடிடை நரிகள் விட்ட கடுங்குரல் ஓசை கேட்டுப்
பீடுடை இறைவன் தன்னைப் பேசரும் விருப்பத்தோடும்
பாடிய வென்று தென்னன் பல்பெரும் படாம் கொடுத்தான்.”

“நேசமார் தேவிதன்னை நின்னுடை யடிமைக்கா மென்று
ஆசைகூர்ந் தளித்தவ் வேந்தன், வாவியில் தவளை பல்கால்
தேசுற ஒலிப்பக் கேட்டுச் சிவனையே பாடிற்றென்று
காசொடு பொன்னும் மின்னக் கலந்து தூவினன் கசிந்து.” 35

வரகுண பாண்டியனுடைய இந்தச் சிவபக்தியைப் பட்டினத்துப்பிள்ளையார் மிக அழகாகக் கூறுகிறார்:

“வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையில் கட்விழ்ப் பித்தும்,
ஓடும் பன்னரி ஊளைகேட்ட டரனைப்
பாடின வென்று படாம்பல அளித்தும்,
குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னும் கலந்து தூவியும்,
வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை எள்ளை தின்னக் கண்டு
பிடித்தலும் அவன் இப்பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்,
மருத வட்டத் தொருதனிக் கிடந்
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம்மித் தலையும்
கிடத்தல் வேண்டுமென்று அடுத்தடுத் திரந்தும்,
கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்தன என்று நாய்க்கட்டம் எடுத்தும்,
காம்புகுத்து உதிர்ந்த கனியுருக் கண்டு

வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்,
விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்36

இவ்வாறு, வரகுணபாண்டியன் சிறந்த சிவபக்தனாக விளங்கினான் என்று புராணங்கள் கூறுகின்றன.

பாணபத்திரர்

வரகுணபாண்டியன் அவையில் பேர்போன இசைப்புலவராக இருந்தவர் பாணபத்திரர் என்பவர். இவருடைய வரலாற்றை இந்நூல் இசைக்கலை என்னும் பகுதியில் காண்க. பாணபத்திரரும் சிறந்த சிவபக்தர். இவர்பொருட்டுச் சிவபெருமான் சாதாரி பாடின திருவிளையாடல், திருமுகங்கொடுத்த திருவிளையாடல், பலகையிட்ட திருவிளையாடல்களைச் செய்தருளினார் என்று திருவிளையாடற் புராணங்களினால் அறிகிறோம்.

மாணிக்கவாசகர்

பாண்டி நாடிலே திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்தார். அவருக்குப் பிள்ளைப் பருவத்தில் இடப்பட்ட பெயர் வாதவூரர் என்பது. இவர் இளமைப் பருவத்திலேயே பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ் மொழிக்கல்வியை நன்கு கற்றவர் என்பது இவர் பிற்காலத்தில் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்களிளிலருந்து தெரிகிறது. இவர் தக்க வயதடைந்தபோது பாண்டிய அரசன் இவரைத் தன்னுடைய அமைச்சராக நியமித்தான்; இவருக்குத் தென்னவன் பிரமராயன் என்னும் பட்டப் பெயரும் அளித்தான்.

பாண்டியனுக்குக் குதிரைப்படை தேவையாக இருந்தது. குதிரைகள் வாங்கும் பொருட்டுப் பெருந்தொகையான பொருளைத் தென்னவன் பிரமராயரிடம் கொடுத்துத் துறைமுகத்திற்கு அனுப்பினான் பாண்டியன். அப்பொருளைக்கொண்டு குதிரைகள் வாங்கச் சென்ற அமைச்சர், பெருந்துறை என்னும் துறைமுகத்திற்குச் சென்றார். சென்றவர் அங்குக் குருத்த மரத்தடியிலே மாணாக்கர் சூழவீற்றிருந்த ஒரு ஞானாசிரியரைக் கண்டார். கண்டு அவரிடம் ஞானோபதேசம் பெற்றார். தாம் வந்த காரியத்தை மறந்து பக்தியில் ஈடுபட்டுத் தம்மிடமிருந்த பெரும் பொருளையெல்லாம் சைவத் திருப்பணிக்குச் செலவு செய்தார்.

குதிரைகள் வந்து சேராதபடியினாலே பாண்டியன் திருமுகம் எழுதி அனுப்பினான். அதனைக் கண்ட அமைச்சர் மதுரைக்குச் சென்று, குதிரைகள் வந்து சேரும் தேதியை அரசனுக்குச் சொன்னார். குறித்த நாளில் குதிரைகள் வந்து சேரவில்லை. அரசன், சேவகரை ஏவிப் பொருளை அமைச்சரிடமிருந்து பெற்று வரும்படி கட்டளையிட்டான். சேவகர் சென்று பொருள் தரும்படி வருத்தினார்கள். அமைச்சர் கடவுளை வேண்டினார். அன்று மாலை குதிரைத் திரள் பாண்டி நாட்டிற்கு வந்து சேர்ந்தது. பாண்டியன் மகிழ்ந்து அமைச்சரைத் துன்புறுத்தாமல் விட்டான். ஆனால், வந்த குதிரைகள் அன்று இரவிலேயே நரியைப் போல் ஊளையிட்டுக் கொண்டு ஓடி மறைந்தன. அதனை அறிந்த அரசன், அமைச்சர் மாயம் செய்து ஏமாற்றினார் என்று அவரை, கடும் வெயிலில் நிறுத்தியும் புளியம் வளாரால் அடித்தும் வருத்தினான். அப்போது, வைகை ஆற்றில் வெள்ளம் பெருகிவந்து ஊரை அழிக்கும் நிலையில் இருந்தது. அச்சமயத்தில் அரசன் வாதவூரரை விடுதலை செய்து விட்டான்.

வாதவூரர் திருப்பெருந்துறை முதலிய திருப்பதிகளுக்குச் சென்று திருவாசகப் பாக்களை அருளிச்செய்தும் திருக்கோவையாரை இயற்றியும் பக்தி செலுத்தினார். சிதம்பரத்தில் ஈழ நாட்டரசன் மகளான ஊமைப் பெண்ணைப் பேசச் செய்தார் என்றும் பௌத்தரை வாதில் வென்றார் என்றும் இவர் வரலாறு கூறுகிறது. இவர் திருவாக்குகள் மாணிக்கம் போன்றிருந்தபடியால் மாணிக்கவாசகர் என்னும் பெயர் இவருக்கு வழங்கப்பட்டது. பட்டினத்துப் பிள்ளையார், மாணிக்கவாசகரை பெருந்துறைப்பிள்ளை என்று கூறுகிறார். இவர், தமது முப்பத்திரண்டாவது வயதில் சிவகதியடைந்தார்.

இவர், அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் இருந்தவர் என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. பரஞ்சோதி முனிவர் ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர். பழைய திருவிளையாடற் புராணம் (பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றியது), வாதவூரடிகள் காலத்தில் இருந்த பாண்டியன் பெயரைக் கூறவில்லை. புதிய திருவிளையாடல் புராணம், வாதவூரடிகள் அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் இருந்தவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பரஞ்சோதியார் திருவிளையாடல் புராணம், சரித்திர ஆராய்ச்சி, கால ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற நூல் அன்று. பெரும்பற்ற நம்பி இயற்றிய திருவிளையாடல் புராணம், சரித்திர ஆராய்ச்சிக்கு உதவுகிறது. ஆகவே, சரித்திர ஆராய்ச்சிக்கு உதவாததும் தவறுகளையுடையதுமான புதிய (பரஞ்சோதியார்) திருவிளையாடல், மாணிக்கவாசகரை அரிமர்த்தன பாண்டியன் காலத்தவர் என்று கூறுவது தவறானது.

மாணிக்கவாசகர் தமது திருக்கோவையாரில் வரகுண பாண்டியனைக் கூறுவதால், அவர் அவ்வரசன் காலத்தவர் என்பதே பொருத்தமானதாகும். இந்நூலில், மாணிக்கவாசகர் காலஆராய்ச்சி என்னும் இணைப்பு காண்க.

தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் காலத்திலே பதினாறு சைவ அடியார்கள் இருந்ததைக் கண்டோம். ஆகவே, அக்காலத்தில் சைவ சமயம் உயர்ந்தோங்கி இருந்ததென்பதும், பக்தி இயக்கம் நாட்டில் நன்கு வேரூன்றியிருந்ததென்பதும் தெரிகின்றன.

✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. No. 847. S.I.I. Vol. VII.

2. நாட்டியத்தான் குடி 9.

3. பழமண்ணிப் படிக்கரை 9.

4. கருப்பறியலூர் 10.

5. நமக்கடிகளாகிய அடிகள் 9.

6. முடிப்பது கங்கை 9.

7. திருவாழ்கொளிபுத்தூர் 10.

8. நம்பி என்ற திருப்பதிகம் 9.

9. திருத்தினை நகர் 9.

10. தினைநகர் 9.

11. மறைக்காடு 9.

12. திருச்சுழியல் 9.

13. திருநாகேச்சரம் 10.

14. கோயில் 9.

15. P. 110. History of Tamil Language and Literature, 1959.

16. திருககோலக்கா 5.

17. திருநள்ளாறு 6.

18. திருநொடித்தான் = கயிலாயமலை.

19. நரசிங்க முனையரைய நாயனார் புராணம் 2.

20. தடுத்தாட்கொண்ட புராணம் 5.

21. திருவெண்ணெய் நல்லூரும், திருநாவலூரும் 11.

22. இவருடைய வரலாற்றை மானக்கஞ்சார நாயனார் புராணத்தில் விரிவாகக் காணலாம்.

23. மானக்கஞ்சாற நாயனார் புராணம் 16, 17, 34, 35, 36.

24. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 30-42.

25. திருநாட்டியத்தான்குடி 10.

26. நாட்டு தொகை 11.

27. கற்குடி 10

28. குறுகாவூர் 10.

29. நமக்கடிகளாகிய அடிகள் 10.

30. புகலூர் 11.

31. நள்ளாறு 10.

32. பனையூர் 10.

33. கழற்சிங்க நாயனாரை, இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மன் என்று சிலர் கருதுகின்றனர். அக்கருத்துத் தவறானது என்று தோன்றுகிறது. தெள்ளாறெறிந்த நந்திவர்மனே கழற்சிங்க நாயனார் என்பதை இந்நூலில் வேறு இடத்தில் ஆராயப் பட்டிருப்பதைக் காண்க.

34. வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடல். பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற்புராணம். வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய படலம், பரஞ்சோதியார் திரு விளையாடற் புராணம்.

35. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்: வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளையாடல் 23 - 29.

36. திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 28.