மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/019
நன்னரைப் பற்றிய செய்யுட்கள்
நன்ன அரசரையும் அவர்களின் துளு நாட்டையும் பற்றிய செய்யுட்கள் சங்கச் செய்யுட்களில் காணப்படுகின்றன. அப்பாடல்களில் சரித்திர சம்பந்தமான பாடல்களை இந்நூலுள் ஆங்காங்கே மேற்கோள் காட்டினோம். மேற்கோள் காட்டப்படாத வேறு செய்யுள்களை இங்கே காட்டுகிறோம்.
நன்னனுடைய பாரம் என்னும் ஊரையும் அவனுடைய ஏழில் மலையைச் சார்ந்த பாழிக் குன்றையும் பரணர் பாடியுள்ளார்.
இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப்
பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்
களிமயில் கலாவத் தன்ன (அகம் 152:11-14)
நன்னனுடைய பிறந்த நாள் விழா, ஊரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட செய்தியை மாங்குடி மருதனார் தமது மதுரைக்காஞ்சியில் கூறுகிறார். பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்
சேரிவிழவின் ஆர்ப்பெழுந் தாங்கு (மதுரைக்காஞ்சி 618: 619) நன்னனுடைய துளு நாட்டில் பாழி என்னும் நகரத்தில் பெருநிதி சேமித்து வைக்கப்பட்டிருந்ததை மாமூலனார் கூறுகிறார்.
மெய்ம்மலி பசும்பூண் செம்மற் கோசர்
கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
பாக லார்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளு நாட்டன்ன
...................................
சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி யன்ன கடியுடை வியனகர் (அகம் 15: 2-11)
நன்னனுடைய துளு நாட்டில் உள்ள உயரமான மலைகளிலே வளர்ந்த மூங்கிற் காடுகளில் முதிர்ந்த மூங்கில் வெடித்து அதிலிருந்து முத்து (வேய் முத்து) சிதறுவதை முள்ளியூர்ப் பூதியார் கூறுகிறார்.
பல புரி
வார்கயிற் றொழுகை நோன்சுவற் கொளீஇப்
பகடுதுறை யேற்றத் துமண்விளி வெரீஇ
உழைமான் அம்பிணை யினனிரிந் தோடக்
காடுகவின் அழிய உரைஇக் கோடை
நின்றுதின விளிந்த அம்பணை நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கு மண்ணா முத்தம்
கழங்குறழ் தோன்றல பழங்குழித் தாஅம்
இன்களி நறவின் இயல்தேர் நன்னன்
விண்பொரு நெடுவரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலை (அகம் 173:8-18)
நன்னனுடைய துளு நாட்டிலிருந்த ஒரு கோட்டையின் மேல் பகை மன்னன் ஒருவன் படையெடுத்து வந்து கோட்டையை முற்றுகையிட்டான் கோட்டையிலிருந்த நன்னனுடைய வீரர்கள் எதிர்த்துப் போரடினார்கள். ஆனால், அவர்கள் தோற்றுப்போகும் நிலையில் இருந்தார்கள். அதனையறிந்த நன்னன் உடனே தன் சேனைகளுடன் வந்து முற்றுகையிட்ட மன்னனை ஓட்டிக் கோட்டையைக் காப்பாற்றினான். இந்தச் செய்தியை மோசிகீரனார் என்னும் புலவர் கூறுகிறார்.
வினைதவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன்
முனைகொல் தானையொடு முன்வந்திறுப்பத்
தன்வரம் பாகிய மன்னெயில் இருக்கை
ஆற்றா மையிற் பிடித்த வேல்வலித்
தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற
விழைதக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கிற்
கானமர் நன்னன் (அகம் 392: 21-27)
(குறிப்பு: படையெடுத்து வந்த மன்னன் சேர, சோழ, பாண்டியர்களில் யார் என்று கூறப்படவில்லை. முற்றுகையிடப் பெற்ற கோட்டையின் பெயருங் கூறப்படவில்லை. இவை கூறப்பட்டிருந்தால் துளுநாட்டுச் சரித்திரத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பெற்றிருப்போம். ஆனால் இதனைக் கூறிய மோசிகீரனார் சரித்திர நிகழ்ச்சியைக் கூறக் கருதியவர் அல்லர். அகப் பொருட்செய்தியொன்றுக்கு உவமை கூறவந்தவர் தற்செயலாக இந்நிகழ்ச்சியைக் கூறியுள்ளார்.)
நன்னன் தன் பகையரசரை வென்று அவரிடமிருந்து பெற்ற பொருளைப் புலவருக்கு வழங்கினான் என்னும் செய்தியை மாமூலனார் கூறுகிறார்.
ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி
உலைந்த ஓக்கல் பாடுநர் செலினே
உரன்மலி உள்ளமொடு முனை பாழாக
அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் (அகம் 349: 3-8)
மோசிகீரனார் என்னும் புலவர் நன்னனைப் (கொண்கானங் கிழானைப்) பாடிய செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை:
திரைபொரு முந்நீர்க் கரை நணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழைய ராகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
யானும்
பெற்ற தூதியம் பேறியா தென்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
ஈயென விரத்தலோ வரிதே நீயது
நல்கினு நல்கா யாயினும் வெல்போர்
எறிபடைக் கொடா வாண்மை, யறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடலெனக் கெளிதே (புறம்.154)
திணை: பாடாண்டிணை, துறை: பரிசிற்றுறை. கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது.
வணர்கோட்டுச் சீரியாழ் வாடுபுடைத் தழீஇ
உணர்வோர் யாரென் இடும்பை தீர்க்கெனக்
கிளக்கும் பாண! கேளினி, நயத்தில்
பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு
இலம்படு புலவர் மண்டை, விளங்கு புகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தண்டார் அகலம் நோக்கின மலர்ந்தே (புறம் 155)
திணை: பாடாண்டிணை, துறை: பாணாற்றுப்படை கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது.
ஒன்றுநன் குடைய பிறர்குன்றம், என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் காணம்
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினுங் கிடைக்கும் அஃதான்று
நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே (புறம் 156)
திணை: பாடாண்டிணை, துறை: இயன்மொழி. கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது.
✽✽✽