மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/003

 

2. பண்டமாற்று

சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசுகொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக் கெள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசுகொடுத்து வாங்கினர்கள். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் காசுகொடுத்துப் பொருளை வாங்கும்முறை இருந்தபோதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்திலே எல்லா நாடுகளிலும் பழங்காலத்தில் பண்டமாற்றுதான் நடந்துவந்தது. மற்ற நாடுகளில் இருந்தது போலவே தமிழகத்திலும் பழங்காலத்தில் பண்டமாற்றுமுறை இருந்தது. சங்க நூல்களிலிருந்து இதை அறிகிறோம்.

இடையன் பாலைக்கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக்கொண்டதை முதுகூத்தனார் கூறுகிறார். ‘பாலோடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று குறு. (221.3-4) அவர் கூறுகிறார் (கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலான தானியங்கள்)

ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய்காய்ச்சினார்கள். தயிரையும் மோரையும் மாறித் தானியத்தைப்பெற்று உணவுசமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகிறார்:

‘நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நல்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருத்தி’

என்று (பெரும்பாண். 155-163) அவர் கூறுகிறார்.

(நுரை – வெண்ணெய்; அளை - மோர்; மாறும் - பண்டமாற்று செய்யும். கிளையுடன் - சுற்றத்தாரை. அருத்தி - உண்பித்து)

ஆனால், இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று செய்யாமல் காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து வைத்தார்கள். குறிப்பிட்ட தொகை காசுசேர்ந்தபோது அக்காசைக் கொடுத்துப் பசுவையும் எருமையையும் விலைக்கு வாங்கினார்கள் என்று இந்தப் புலவரே கூறுகிறார்.

‘நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பொறூஉம்
மடிவாய்க் கோவலர்
’. (பெரும்பாண்; 164-166)

(விலைக்கு அட்டி விலைக்காக அளந்து; பசும்பொன் கொள்ளாள் - நெய் விலையாகவுள்ள காசைப் பெறாமல் அவர்களிடத்திலேயே சேமித்துவைத்து. நல்லான் - பசு. நாகு - பெண் எருமை.)

வேடன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக் கொண்டதைக் கோவூர்கிழார் கூறுகிறார். இடைச்சியரும் உழவனுக்குத் தயிரைக்கொடுத்து நெல்லைப் பெற்றுக் கொண்டனர் என்று இப்புலவரே கூறுகிறார்.

‘கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாடு’
(புறம் 33:1-8)

(வட்டி – பனையோலையால் முடைந்த சிறு கூடை. தசும்பு - பானை. குளக்கீழ் விளைந்த - ஏரிக்கரையின் கீழே விளைந்த. முகந்தனர் கொடுப்ப அளந்து கொடுக்க)

பாணர் உள்நாட்டு நீர் நிலைகளில் (ஆறு, ஏரி, குளங்களில்) வலை வீசியும் தூண்டில் இட்டும் மீன்பிடித்தார்கள். அவர்கள் பிடித்த மீன்களைப் பாண் மகளிர் ஊரில் கொண்டு போய்ப் பயற்றுக்கும் தானியத்துக்கும் மாற்றினார்கள் என்று ஓரம் போகியார் கூறுகிறார்.

'முள் எயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன்பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும்பயறு நிறைக்கும்'
(ஐங்குறு, மருதம், புலவிப்பத்து, 47)

(பாண்மகள் - பாணர் பெண்; கெடிறு - கெளுத்தி மீன். மனையோள் - குடியானவன் மனைவி)

'வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும்.'
(ஐங்குறு, மருதம், புலவிப்பத்து, 48)

(வராஅல் - வரால் மீன். ஆண்டுகழி வெண்ணெல் ஒரு ஆண்டு பழமையான நெல்)

'அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சின்மீன் சொரிந்து பன்னெற் பெரூஉம்'
(ஐங்குறு, மருதம், புலவிப்பத்து 49)

கடற்கரையைச் சார்ந்த உப்பளங்களில் நெய்தல் நிலமக்கள் உப்பு விளைத்தார்கள். உப்பு வாணிகர் மாட்டு வண்டிகளிலே நெல்லைக் கொண்டுவந்து கொடுத்து உப்பை மாற்றிக்கொண்டு போனார்கள் என்று நற்றிணைச் செய்யுள் கூறுகிறது.

'தந்நாட்டு விளைந்த வெண்ணல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
உமணர் போகலும்'.
(நற்றிணை. 183)

(தந்நாடு - உப்பு வாணிகரின் மருதநிலம். பிறநாடு - உப்பு விளையும் நெய்தல் நிலம். உமணர் - உப்புவாணிகர்.)

நெய்தல் நிலத்து முதுமகள் ஒருத்தி தன் உப்பளத்தில் விளைந்த உப்பை மாற்றி நெல் கொண்டுவரச் சென்றாள் என்று கல்லாடனார் கூறுகிறார். 'ஆயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்'? (குறும். 269: 4-6)

(ஆய் - அன்னை, தாய். தரீஇய - கொண்டுவர)

ஊர்த் தெருக்களில் உப்பு விற்ற உமணப் பெண் உப்பை நெல்லுக்கு மாற்றினதை அம்மூவனார் கூறுகிறார்.

'கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலை மாறு கூறலின்'.
(அகம்.140: 5-8)

(சேரி - தெரு; விலைமாறு - பண்டமாற்று)

‘நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளிரோவெனச் சேரிதொறும் நுவலும்’
(அகம், 390: 8-9)

உப்பை நெல்லுக்கு மாற்றிய உப்பு வாணிகர் தமக்குக் கிடைத்த நெல்லைச் சிறு படகுகளில் ஏற்றிக் கொண்டு கழிகளில் ஓட்டிச் சென்றதைக் கடியலூர் உருத்திரன் கண்ணனார் கூறுகிறார்.

'குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி'

என்று (பட்டினப்பாலை 28-30) அவர் கூறுகிறார். உப்பை நெல்லுக்கு மாற்றியதை உலோச்சனார் கூறுகிறார். 'உமணர் தந்த உப்பு நொடை நெல்' (நற்றிணை, 254:6)

கடற்கரையோரத்திலே நெய்தல் நிலத்தில் வசித்த பரதவர் கடலிலே சென்று சுறா, இறால் முதலான மீன்களைப் பிடித்து வந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த மீனைப் பரதவ மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றினார்கள் என்று குன்றியனார் கூறுகிறார். 'இனிது பெறு பெருமீன் எளிதினில் மாறி' (நற்றிணை, 239:3) பரதவர் மகளிர் கடல் மீனை நெல்லுக்கு மாற்றியதை நக்கீரரும் கூறுகிறார்: 'பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத், தயிர்மிதி மிதவை யார்த்துவம்' (அகம், 340: 14-15). 'உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு' என்று குடவாயில் கீரத்தனார் கூறுகிறார் (அகம் 60:4)

பரதவ மகளிர் கடல்மீனைத் திருவிழா நடக்கிற ஊர்களில் கொண்டுபோய் எளிதில் விற்றதைச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்,

'திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழையணி அல்குல் செல்வத் தங்கையர்

விழவயர் மறுகின் விலையெனப் பகரும்
கானலஞ் சிறுகுடி'
(அகம், 320:2-5)

மீனை நெல்லுக்கு மாற்றினார்கள், பண்ட மாற்றினால் கிடைத்த நெல்லை அம்மியில் ஏற்றிக் கொண்டு கழிகளின் வழியே வந்ததைப் பரணர் கூறுகிறார்.

'மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பியின் மனைமறுக்குந்து’
(புறம், 343:1-2)

உழவர் மகளிர் தெருக்களில் பூ விற்றதைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ கூறுகிறார்.

'துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி
வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொறும் நுவலும்
நொதுமலாட்டி'
(நற்றிணை, 118:8-11)

(துகிலிகை - ஓவியர் வண்ணங்களைத் தொட்டு எழுதும் கோல் (Brush); பாதிரி - பாதிரிப்பூ. அலரி - அலரிப்பூ)

பெண் ஒருத்தி மலர் விற்றதைப் பாண்டியன் மாறன் வழுதி தம்முடைய செய்யுளில் கூறுகிறார்.

'துய்த்தலை இதழபைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவுமலர் கொள்ளீரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை யுழவர் தனிமடமகள்'
(நற்றிணை, 97:6-9)

பூ விற்ற பெண்களும் பூவை நெல்லுக்குப் பண்டமாற்று செய்தனர் என்பதைச் சொல்லாமலே விளக்குகிறது.

வேடர்கள் ஒன்றுகூடிக் காட்டில் வேட்டையாடிக் கொன்ற யானையின் தந்தங்களை மதுபானக் கடையில் கொண்டு போய்க் கொடுத்து மதுபானம் அருந்தினதை மாமூலனார் கூறுகிறார்.

'வரி மாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ
அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும்'
(அகம், 61:8-10)

(நறவு - மது; நெல்லின் நாண்மகிழ் - நெல்லரிசியினால் உண்டாக்கப் பட்ட மது)

வேடர் தேனையும் கிழங்கையும் கொண்டு வந்து மதுபானக் கடையில் மாற்றி அதற்கு மாறாக வறுத்த மீன் இறைச்சியையும் மதுவையும் வாங்கி உண்டதையும், உழவர் கரும்பையும், அவலையும் கொண்டு வந்து கொடுத்து அதற்கு மாறாக வறுத்த மான் இறைச்சியையும் மதுவையும் பெற்று உண்டு மகிழ்ந்ததையும் முடத்தாமக்கண்ணியார் கூறுகிறார்.

'தேனெய்யொடு கிழங்கு மாறியோர்
மீனெய்யொடு நறவு மறுகவும்
தீங்கரும்பொடு அவல் வகுத்தோர்
மான்குறையோடு மது மறுகவும்’
(பொருநர் ஆற்றுப்படை, 214-217)

(தேன்நெய் - தேன். மாறியோர் - மாற்றினவர்கள். மீன்நெய் - வறுத்த மீன். நறவு - மது, கள். மான்குறை - மான் இறைச்சி)

கொற்கைக் குடாக் கடலின் கரையோரங்களில் வாழ்ந்த பரதவர், கொற்கைக் கடலில் மீன்பிடித்த போது அதனுடன் முத்துச் சிப்பிகளும் கிடைத்தன. அந்தச் சிப்பிகளை அவர்கள் கள்ளுக் கடையில் மாற்றிக் கள் குடித்ததைப் பேராலவாயர் கூறுகிறார்.

‘பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி
நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேரிசைக் கொற்கை'
(அகம், 296:8-10)

(இப்பி - முத்துச் சிப்பி)

குறிப்பு : பாண்டி நாட்டிலிருந்த பேர் போன கொற்கைக் குடாக் கடல்
பிற்காலத்தில் மணல் தூர்ந்து மறைந்து போய்விட்டது.

எயினர் மது அருந்துவதற்காக மது விற்கும் இடத்துக்கு வந்து எந்தப் பொருளும் இல்லாதபடியால், 'காட்டில் வேட்டை யாடி யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து கொடுப்போம். அதற்கு ஈடாக இப்போது கள்ளைக் கடனாகக் கொடு' என்று கேட்டதை மருதன் இளநாகனார் கூறுகிறார்.

‘அரிகிளர் பணைத்தோள் வயிறணி திதலை
அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பின்

மகிழ்நொடை பெறாஅர் ஆகி நனைகவுள்
கான யானை வெண்கோடு சுட்டி
மன்றாடு புதல்வன் புன்றலை நீவும்
அருமுனைப் பாக்கம்’
(அகம், 245:8-13)

கொல்லி மலைமேல் வாழ்ந்த சிறுகுடி மக்கள், தம் சுற்றம் பசித்திருப்பதனால், தங்களிடமிருந்த யானைத் தந்தங்களைத் தானியத்துக்கு மாற்றிச் சோறு சமைத்து உண்டனர் என்று கபிலர் கூறுகிறார்.

'காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக்
கடுங்கண் வேழத்துக் கோடு கொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரை'
(குறுந்தொகை 100:3-5)

(சிலம்பு மலை. வேழத்துக் கோடு யானைத் தந்தம். ஓரி ஓரி என்னும் தலைவன்)

காசு (நாணயம்)

இவற்றிலிருந்து சங்ககாலத்தில் பண்டமாற்று வாணிகம் நடந்ததை அறிகிறோம். ஆனால், பண்டமாற்று வாணிகம் நடந்த அந்தக் காலத்தில் காசு வழங்கப்படவில்லை என்று கருதுவது கூடாது. அதே காலத்தில், செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக் காசுகள் விலை யுயர்ந்த பொருள்களை வாங்குவதற்குக் பயன்படுத்தப்பட்டன். பண்ட மாற்று நடந்ததைச் சங்க நூல்களிலிருந்து தெரிந்துகொள்வது போலவே, காசுகள் வழங்கி வந்ததையும் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். அந்தக் காசுகள் நெல்லிக் காயின் வடிவம் போல உருண்டு சிறிது தட்டையாக இருந்தன என்று அறிகிறோம். இதனை மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் கூறுகிறார். பாலை நிலத்து வழி யிலே இருந்த நெல்லி மரங்களிலிருந்து உதிர்ந்துள்ள நெல்லிக்காய்கள், பொற்காசுகள், உதிர்ந்து கிடப்பன போலக் காணப்பட்டன என்று அவர் கூறுகிறார்.

'புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்
கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்
பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம் அத்தம்'
(அகம், 363; 6-8)

(புகர் இல் - துளை இல்லாத, கெட்டியான. கடுவளி - பெருங்காற்று. பொலம் செய் காசு - பொன்னாற் செய்த காசு)

உகா மரத்தின் பழம் போல மஞ்சள் நிறமாகப் பொற்காசுகள் இருந்ததைக் காவன் முல்லைப் பூதனார் கூறுகிறார்.

'குயில்கண் அன்ன குரூஉக் காய்முற்றி
மணிக்கா சன்ன மானிற இருங்கனி
உகாஅ மென்சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ்சுரம்'
(அகம், 293:6-9)

(குரூஉகுரு = நிறம். காசு அன்ன - காசு போன்ற. உகா - உகா மரம். சினை - கிளை)

பொற்காசுகளை மாலையாகச் செய்து மகளிர் அறையைச் சுற்றி (மேகலை போல) அணிந்துகொண்டதைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் கூறுகிறார்).

'ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்’
(புறம், 353: 1-2)

காசுகளை மாலையாகச் செய்து அரையில் அணிந்திருந்த பெண் ஒருத்தியை மதுரைப் போத்தனார் கூறுகிறார்.

'அம்மா மேனி ஐதமை நுசுப்பில்
பல்காசு நிரைத்த கோடேந் தல்குல்
மெல்லியல் குறுமகள்.'
(அகம் 75:18-20)

(ஐது - அழகிய, நுசுப்பு - இடுப்பு, இடை, குறுமகள் - இளம்பெண்)

காசுமாலை அணிந்த இன்னொரு பெண்ணை ஓதலாந்தையார் கூறுகிறார்.

'பொலம் பசும் பாண்டில் காசு நிறை அல்குல்
இலங்குவளை மென்றோள்.'
(ஐங்குறு, பாலை, செலவழுங்குவித்த பத்து 10)

களங்காய்க் கண்ணி, நார்முடிச் சேரலைப் பாடிய காப்பி யாற்றுக் காப்பியனார்க்கு 40 நூறாயிரம் பொன் (நான்கு) இலட்சம் அவன் பரிசாகக் கொடுத்தான் என்று கூறப்படுகிறது (பதிற்றுப் பத்து நான்காம் பத்து, பதிகம்) இங்குப் பொன் என்பது பொற்காசு என்று தோன்றுகிறது. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் மேல் 6ஆம் பத்துப் பாடிய காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்க்கு அவ்வரசன், நகை செய்து அணிவதற்காக ஒன்பது காப்பொன்னையும் நூறாயிரம் காணமும் (காணம் - அக்காலத்தில் வழங்கின பொற்காசு) கொடுத்தான். செல்வக் கடுங் கோவாழியாதனைப் பாடிய கபிலருக்குப் பரிசாக அவ்வரசன் நூறாயிரம் காணம் வழங்கினான் என்று ஏழாம் பத்துப் பதிகம் கூறுகிறது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அரிசில் கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் பரிசாகக் கொடுத்தான் என்பதைப் பதிற்றுப்பத்து 8ஆம் பத்துப் பதிகத்தினால் அறி கிறோம். இளஞ்சேரல் இரும்பொறை தன்னைப் பாடிய பெருங் குன்றூர் கிழார்க்கு முப்பத்திராயிரம் காணம் பரிசாகக் கொடுத்தான் என்பதை 9ஆம் பத்துப் பாயிரத்தினால் அறிகிறோம்.

பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குச் சோழன் கரிகாலன் நூறாயிரங்காணம் பரிசு வழங்கினான். இவ்வாறு, காணம் என்னும் பொற்காசு அக்காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம். செங்கம் என்னும் ஊரில் (தொண்டை நாடு), ஈயக் காசுகள் வழங்கிவந்ததை அங்கிருந்து கிடைத்த பழங்காசுகளிலிருந்து அறிகிறோம். அந்த ஈயக் காசுகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருப்பதனால் அவை கடைச்சங்க காலத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வழங்கி வந்தவை என்பது தெரிகிறது. அந்தக் காசில் உள்ள எழுத்துக்கள் தேய்ந்து உருத் தெரியாமல் மழுங்கிப் போனமையால் அவ்வெழுத்துக்களின் வாசகத்தை அறிய முடியவில்லை. அந்தச் சான்றுகள் எல்லாம் அக்காலத்தில் காசு வழங்கி வந்தது என்பதைச் சந்தேகம் இல்லாமல் தெரிவிக்கின்றன.

இந்தக் காசுகள் அல்லாமல், அக்காலத்தில் கடல் கடந்த கப்பல் வாணிகத்தின் மூலமாக உரோம (யவன) தேசத்து நாணயங்கள் தமிழ்நாட்டில் வழங்கி வந்தன. அக்காசுகள் சமீப காலத்தில் ஏராளமாகப் புதையல்களிலிருந்து கிடைத்துள்ளன. அந்தக் காசுகளைப் பற்றிப் பின்னர்க் கூறுவோம்.