மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/004

 

3. போக்குவரத்துச் சாதனங்கள்



வாணிகப் பொருள்கள் எல்லாம் ஒரே இடத்தில் உற்பத்தியாவதில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்கள் உற்பத்தியானபடியால், அப்பொருள் களையெல்லாம் ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு வாணிகர் கால்நடைகளையும் வண்டிகளையும் பயன்படுத்தினார்கள். ஆனால், இக்காலத்தில் உள்ள உந்து வண்டிகள், இரயில்வண்டிகள், வானஊர்திகள் போன்ற விரைவான போக்குவரத்துச் சாதனங்கள் இருப்பது போல அக்காலத்தில் இல்லை. ஆகவே அவர்கள் எருது, கழுதை வண்டி, படகு, பாய்மரக் கப்பல்களைப் பயன்படுத்தினார்கள். எருமைக்கடாவை ஏர் உழுவதற்குப் பயன்படுத்தினார்கள். எருமைகளைப் பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் பயன்படுத்த வில்லை. பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் எருதுகள் பயன்பட்டன. எருதுக்கு அடுத்தபடியாகக் கழுதை பொதி சுமக்கப் பயன்பட்டது. கழுதைகள் வண்டியிழுக்கப் பயன்படவில்லை.

சிந்து, பாரசீகம், அரபி நாடுகளிலிருந்து குதிரைகள் அக்காலத்தில் கொண்டுவரப்பட்டன. அவை கடல் வழியாகக் கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. குதிரைகளை அரசர் போர்செய்யப் பயன்படுத்தினார்கள். நால்வகைப் படைகளில் குதிரைப் படையும் ஒன்று. தேர்ப் படையில் தேர்களை (போர் வண்டிகளை) இழுக்கவும் குதிரைகள் பயன்பட்டன. குதிரை வண்டிகளை அரசரும் செல்வரும் பயன்படுத்தினார்கள். ஆனால், அக்காலத்தில் தமிழர் குதிரைகளைப் பொதி சுமக்கவும் வாணிகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு போகிற வண்டிகளை இழுக்கவும் ஏர் உழவும் பயன்படுத்தவில்லை.

அத்திரி

(கோவேறு கழுதைகள்) வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டன. கோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர் வழங்கப்பட்டது. நாகரிகமுள்ள செல்வ நம்பிகள் அக்காலத்தில் கோவேறு கழுதைகளை ஊர்தியாகப் பயன்படுத்தினார்கள். ஆனால், பொதி சுமக்கவும் சரக்கு வண்டிகளை இழுக்கவும் அவற்றைப் பயன்படுத்தவில்லை. ஊர்தியாக மட்டும் பயன்படுத்தினார்கள். அத்திரிக்கு இராச வாகனம் என்று பெயர் வழங்கப்பட்டது.

பாண்டி நாட்டுக் கொற்கைக் கடலுக்கு அருகில் பரதவர் ஊருக்கு ஒருவன் அத்திரி பூட்டின வண்டியில் சென்றான் என்று சேந்தன் கண்ணனார் கூறுகிறார்.

"கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண"
(அகம், 350:6-7)

அத்திரியை ஒருவன் ஊர்ந்து சென்றதை நக்கீரர் கூறுகிறார்.

"கழிச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ
(அகம், 120:10-11)

கடற்கழி வழியாக ஒருத்தன் அத்திரி ஊர்ந்து வந்ததை உலோச்சனார் கூறுகிறார்.

"கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
குளம்பிலும் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே
(நற்றிணை,278:7-9)

மதுரையில் வைகையாற்றில் நடந்த நீராட்டு விழாவிலே சிலர் அத்திரி யூர்ந்து வந்தார்கள் என்று பரிபாடல் (10-ஆம் பாடல் 17 - அடி கூறுகிறது)

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த செல்வக் குடிமகனாகிய கோவலன் கடலாடுவதற்குக் கடற்கரைக்குச் சென்றபோது அவன் அத்திரி ஊர்ந்து சென்றான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. (கடலாடு காதை, அடி 119). சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், ‘அத்திரி - கோவேறு கழுதை, அஃதாவது குதிரையில் ஒரு சாதி’ என்று உரை எழுதியுள்ளார். பழைய அரும்பத உரையாசிரியர், ‘இராச வாகனமாகிய அத்திரி’ என்று உரை எழுதியுள்ளார்; ஆகவே அத்திரி அக்காலத்தில் உயர்தர ஊர்தியாகக் கருதப்பட்டது என்று தெரிகிறது.

குதிரை

குதிரை வெளிநாடுகளிலிருந்து வந்ததையும், அவை போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டன என்பதையும் கூறினோம். அவை வண்டியிழுக்கவும் பயன்பட்டன. குதிரை வண்டிகள் தேர் என்று கூறப்பட்டன. குதிரை வண்டிகளைச் சங்க நூல்கள் கூறுகின்றன; சிறுபாணாற்றுப்படை குதிரை வண்டியைக் கூறுகிறது. (சிறுபாண், 251- 261). புலவர் உலோச்சனார் ஒருவர் குதிரை வண்டியில் வந்ததைக் கூறுகிறார் (அகம், 400: 9-16). அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் தம்முடைய செய்யுள்களில் குதிரை வண்டிகளைக் கூறுகிறார். (அகம் 244: 12-13, 344: 7-11, 314: 8-10). மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் தம்முடைய செய்யுளில் குதிரை வண்டியைக் கூறுகிறார் (அகம், 334: 11-15) மருதன் இளநாகனாரும் நான்கு குதிரை பூட்டிய வண்டியைக் கூறுகிறார் (அகம், 104-3) மாங்குடி மருதனாரும் (குறும், 173: 1-3) புல்லாளங் கண்ணியாரும் (அகம் 154: 11-13) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனாரும் (அகம் 80: 8-13) அரிசில் கிழாரும் (புறம் 146:11) இடைக்காடனாரும் (அகம், 194: 17-91) குதிரை வண்டிகளைத் தம்முடைய செய்யுட்களில் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அக்குதிரை வண்டிகள் வாணிகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வண்டிகளாகப் பயன்படுத்தப்படவில்லை.

மாடும் மாட்டு வண்டியும்

வாணிகப் பொருள்களைக் கொண்டு போவதற்கு எருதுகள் பயன்பட்டன. மாட்டு வண்டிகளில் வாணிகப் பண்டங்களை ஏற்றிக் கொண்டுபோனார்கள். வாணிகர் பலர் ஒன்றாகச் சேர்ந்து பொருள்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போனார்கள். இதற்கு வாணிகச் சாத்து என்பது பெயர். அவர்கள் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். ஏனென்றால் காட்டு வழிப்பறிக் கொள்ளைக்காரர் வந்து பொருள்களைக் கொள்ளையடிப்பதும் உண்டு. கொள்ளைக்காரர்களை அடித்து ஓட்டுவதற்காக வாணிகச் சாத்தினர் வீரர்களையும் தம்முடைய சாத்துடன் அழைத்துச் சென்றார்கள்.

கழுதை

வாணிகர், வாணிகப் பொருள்களை ஊர் ஊராகக் கொண்டு செல்வதற்குக் கழுதைகளைப் பயன்படுத்தினார்கள். பாறைகளும் குன்றுகளும் உள்ள நாடுகளுக்குச் செல்லக் கழுதைகள் முக்கியமாகப் பயன்பட்டன. கழுதைகளின் முதுகுகளின் மேல் சரக்குப் பொதிகளை ஏற்றிக்கொண்டு வாணிகச் சாத்து (வணிகக் கூட்டம்) ஒன்று சேர்ந்து போயிற்று. எல்லைப் புறங்களில் வழிப்பறிக் கொள்ளைக்காரர் வழிபறித்துக் கொள்ளையிடுவதும் உண்டு. அவர்களை அடித்து ஓட்டுவதற்கு வாணிகச் சாத்தர் வில் வீரர்களையும் வாள் வீரர்களையும் துணையாக அழைத்துச் சென்றார்கள். வாணிகப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அவர்கள் நாள் நிமித்தம் பார்த்து நல்லவேளையில் புறப்பட்டனர். வழிப்பறிக் கொள்ளைக்காரர் இவ்வீரர்களையும் கொன்று பொருள்களைக் கொள்ளையடிப்பதும் உண்டு.

'விளரி பரந்த கல்னெடு மருங்கின்
விளரூன் தின்ற வீங்குசிலை மறவர்
மைபடு திண்டோள் மலிர ஆட்டிப்
பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த
படுபுலாக் கமழும் ஞாட்பு.'
(அகம், 89:9-14. மாங்குடி மருதனார்)

(பொறைமலி - பாரம் நிறைந்த. நெடுநிறை - நீண்ட வரிசை)

'நெடுஞ்செவிக் கழுதை குறுங்கால் ஏற்றை
புறம்நிறைப் பண்டத்துப் பொறை’
(அகம், 343: 12-13. மருதனிளநாகனார்)

(ஏற்றை - ஆண் கழுதை)

பலாப்பழம் அளவாகச் சிறுசிறு பொதிகளாகக் கட்டப் பட்ட மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு வணிகச்சாத்தர் ஊர்ப்பயணஞ் சென்றனர். இடைவழியில் சுங்கச் சாவடிகளில் சுங்கஞ் செலுத்தினார்கள். சுங்கச் சாவடிகளில் வில் வீரர்கள் காவல் இருந்தனர்.

'தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவு'

(பெரும்பாண், 77-82, கடியலூர் உருத்திரங்கண்ணனார்) (மிரியல் மிளகு)

கிழக்குப் பக்கத்து நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பக்கங்களில் உண்டான உப்பை, மூட்டைகளாகக் கட்டிக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு மேற்கேயுள்ள ஊர்களுக்கு வணிகர் சென்றனர்.

'அணங்குடை முந்நீர் பரந்த செருவின்
உணங்குதிறம் பெயர்த்த வெண்கல அமிழ்தம்

குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப்
படையமைத் தெழுந்த பெருஞ்செ யாடவர்
நிரைபரப் பொறைய நரைப்புறக் கழுதைக்
குறைகுளம்பு தைத்த கல்பிறழ் இயவு’
(அகம், 207: 1-6. சேந்தம்பூதனார்)

(வெண்கல் அமிழ்தம் - உப்பு. உய்ம்மார் - கொண்டு போக. புள் ஓர்த்து - நிமிர்த்தம் பார்த்து)

வணிகச் சாத்தரை வென்று கொள்ளைக்காரர் வழி பறித்ததைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகிறார்.

'சாத்தெறிந்து
அதர்கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர்.'
(அகம், 167:7-9)

பாண்டி நாட்டவராகிய மருதன் இளநாகனாரும் இதைக் கூறுகிறார்.

‘மழைபெயல் மறந்த கழைதிரங் கியவில்
செல்சாத் தெறியும் பண்பில் வாழ்க்கை
வல்வில் இளையர்'
(அகம், 245:5-7)

(கழை - மூங்கில். சாத்து வணிகர் கூட்டம். இளையர் – வீரர்)

சங்ககாலத்து வாணிபம் தரை வழியாகவும் கடல் வழியாகவும் நடந்தது. தரைவழியாக வாணிகம் செய்த பெருவணிகருக்கு மாசாத்துவன் என்பது பெயர். அக்காலத்தில் சாலைகள் அதிகமாக இல்லை. சாலைகளிலும் எல்லைப் புறங்களிலும் கொள்ளைக்காரர் இருந்தார்கள். கடல் வழியாக நடந்த வாணிகம் தரை வாணிகத்தைவிடச் சற்று அதிகமாகவும் நன்றாகவும் நடந்தது. கடல் வாணிகத்தை நடத்தின பெரிய வாணிகருக்கு மாநாய்கன் (மாநாவிகன், மா+ நாவிகன்) என்பது பெயர். கடற்பிரயாணத்திலும் காற்று, புயல்களினால் கப்பல்களுக்குச் சேதம் உண்டாயின. கடற் கொள்ளைக்காரர் அதிகம் இல்லை. கடல் வாணிகம் இரண்டு விதமாக நடந்தது. கரைவழி ஓரமாகவே கப்பல்களை ஓட்டி நடத்தின வாணிகம் ஒன்று. கரைவழி ஓரமாகச் செல்லாமல் நடுக்கடலில் கப்பல்களைச் செலுத்திக் கடல் கடந்த நாடுகளுக்குப் போய்ச் செய்த வாணிகம் இன்னொன்று.

தரைவழி வாணிகமாக இருந்தாலும், கடல்வழி வாணிகமாக இருந்தாலும், இக்காலத்து வசதிகளைப் போல, அக்காலத்தில் வசதிகள் இல்லை. ஆனாலும் அந்தக் கடினமான சூழ்நிலைகளிலும் தரை வாணிகமும், கடல் வாணிகமும் நடந்தன. தமிழ்நாட்டு வாணிகர் அயல் நாடுகளுக்குச் சென்று வாணிகஞ் செய்தார்கள். மேற்கே இத்தாலி, கிரேக்கதேசம் (யவன நாடு) முதல் கிழக்கே சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) பர்மா, மலாயா வரையிலும் தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே கங்கைக் கரைப் பிரதேசம் வரையிலும் அக்காலத்துத் தமிழர் வாணிகம் நடந்தது.