மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/011

10. சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை

1. தொல்காப்பியம் : ஐயர் யாத்தனர் கரணம்

ஆதிகாலத்தில் ஆணும் பெண்ணும் தாமாகவே ஒருவரையொருவர் விரும்பி ஒன்று சேர்ந்து வாழ்ந்து குடும்பத்தை நடத்தினார்கள். அக்காலத்தில் திருமணச் சடங்கு செய்யும் முறை இல்லை வயது வந்த ஆணும் பெண்ணும் தமக்குள்ளே மனம் ஒன்றுபட்டு வாழ்க்கையை நடத்தினார்கள். இந்த வழக்கம் உலகத்திலே எல்லா நாட்டிலும் எல்லா மக்களிடையிலும் நிகழ்ந்த முதல் நிகழ்ச்சி. பிறகு இவ்வித வாழ்க்கையிலே பொய்யும் வழுவும் ஏற்பட்டுச் சமூக வாழ்க்கையில் துன்பங்கள் உண்டாயின. அத்துன்பங்கள் உண்டாகாதபடி சமூகத் தலைவர்கள் அக்காலத்தில் கரணத்தைக் கற்பித்தார்கள். அதாவது மணமகனும் மணமகளும் பலர் அறியத் திருமணஞ் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று திருமணச் சடங்கை அமைத்தார்கள். இது ஆதிகாலத்தில் உலகத்திலே எல்லா நாட்டிலும் ஏற்பட்ட நிகழ்ச்சி. இவ்வாறே தமிழ் நாட்டிலும் ஆதிகாலத்தில் கரணம் (திருமணம்) செய்யும் முறை ஏற்பட்டது. மிகப் பழைய காலத்து இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் இச்செய்தி கூறப்படுகிறது.

தமிழ் நாட்டிலேயும் பழங்காலத்தில் ஆணும் பெண்ணும் தமக்குள் ஒருவரையொருவர் காதலித்துக் கணவன் மனைவியாக இருந்து இல்லற வாழ்க்கை நடத்தினார்கள் என்றும், இவ்வாறு நிகழ்ந்தபோது நெடுங்காலத்துக்குப் பிறகு மக்களில் சிலரிடையே பொய்யும் வழுவும் உண்டாகிச் சமூக வாழ்க்கையில் ஒழுங்கீனமும் துன்பமும் குழப்பமும் ஏற்பட்டன என்றும், அவ்வொழுங்கீனத்தை தடுத்துச் சமூக வாழ்க்கையில் அமைதியையும் ஒழுங்கையும் ஏற்படுத்துவதற்காக ஐயர், கணவன் மனைவியாக வாழவிரும்பும் ஆணும் பெண்ணும் பலர் அறியத் திருமணம் செய்யவேண்டும் என்று கரணத்தை (திருமணச் சடங்கை) அமைத்தார்கள் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

என்பது தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல் சூத்திரம்.

இந்தச் சூத்திரத்திலே “ஐயர், யாத்தனர் கரணம் என்ப” என்று கூறப்படுகிறது. இதில் கூறப்படும் ஐயர் என்பவர் யார் என்பதை இங்கு ஆராய்வோம். ஐயர் என்றால் ரிஷிகள், ஆரியப் பார்ப்பனர், பிராமணர் என்று இக்காலத்தில் சிலர் உரை எழுதியுள்ளனர். அதாவது, தமிழருக்குக் கரணம் (திருமணம் செய்யக் கற்பித்தவர் ஆரியப் பார்ப்பனர் என்றும், கற்பு ஒழுக்கத்தைத் தமிழுக்கு ஆரியப் பார்ப்பனர் கற்பித்தனர் என்றும் உரை எழுதியுள்ளனர் இவ்வாறு உரை எழுதினவர்கள் எல்லோரும் பார்ப்பனர் என்பது அறியத்தக்கது.

பண்டைக் காலத்திலே ஆரியருக்கு முன்பே, நாகரிகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் திருமணம் செய்து கொண்டு வாழத் தெரியாமலே இருந்தார்களா? அவர்களுக்கு ஆரியப் பார்ப்பனர் வந்து திருமணம் செய்யும் முறையைக் கற்பித்தார்களா? பார்ப்பனச் சிலர் இவ்வாறு உரை எழுதியிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மையா என்பதை ஆராய்ந்தறிய வேண்டும்.

இந்தத் தொல்காப்பியச் சூத்திரத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் என்னும் பிராமணர் இவ்வாறு உரை எழுதுகிறார். ‘ஆதி ஊழி கழிந்த முறையே அக்காலத்து அந்தந் தொடங்கி இரண்டாம் ஊழி முதலாகப் பொய்யும் வழுவுஞ் சிறந்து தோன்றிய பிற்காலத்தே இருடிகள் மேலோர் கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக் காட்டினார் என்று கூறுவர் என்றவாறு. ஈண்டு ’என்ப‘ என்றது முதனூலாசிரியரையன்று, வடநூலோரைக் கருதியது.’ பிற்காலத்தில் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதப்படுகிற நச்சினார்க்கினியர் ஆகிய பிராமணர், இவ்வாறு ‘ஐயர்’ என்பதற்கு இருடிகள் என்று பொருள் எழுதினார். அதாவது ஆரிய முனிவர் என்று கூறினார்.

இனி, மு. இராகவையங்கார் அவர்கள் ஐயர் என்பதற்கு ஆரியர் அதாவது ஆரியப்பிராமணர் என்று பொருள் எழுதியுள்ளார்.

மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர்க் காகிய காலமும் உண்டே
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களுக்கு இவர் இவ்வாறு விளக்கம் கூறுகிறார்.

“ஆரியராகிய அந்தணர் அரசர் வணிகர் மூவர்க்கும் இருடிகள் ஒருகாலத்தே விதித்துப் போந்த சடங்கொடு கூடிய கற்பு முறையைத் தம் புராதன முறையொன்றில் நின்றொழுகிவந்த தமிழ் நாட்டார்க்கும் ஐயர் விதிக்கும்படி நேர்ந்த காலமுமுண்டென்றும், அங்ஙனம் விதிக்க நேர்ந்ததன் காரணம் - பொய்வழு முதலிய குற்றங்களின்றி நடைபெற்று வந்த புராதன ஒழுக்கமாகிய தமிழர் மணத்தில், பிற்காலத்தே அவை புகுந்து அதன் பழஞ்சிறப்பைக் கெடுத்தமையால் அந்த மணம் ஒழுங்காக நிகழ்தற்பொருட்டேயாம் என்றும் ஆசிரியர் கருதினாராதல் மேற் சூத்திரங்களால் உய்த்துணரப்படும்... முன்னியல்களிற் களவுக் கூட்டத்துக்குரியர் என்று கூறப்பட்ட தமிழர்க்கு ஆரியரது கரண விதியைக் கூறியதன் காரணமென்னை? என்ற ஆசங்கையை நீக்குதற்கே இச் சூத்திரங்கள் கற்பியலின் தொடக்கத்தே ஆசிரியராற் கூறப்பட்டன என்று உணர்க.”1

இனி, பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி எழுதுவதைப் பார்ப்போம். ‘அது (கற்பு முறை) ஆரியர்களால் ஆரியர் அல்லாதவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது’ என்று எழுதுகிறார்.2

மேலும், இவர் தாம் எழுதிய தொல்காப்பிய ஆங்கில உரையில் இவ்வாறு எழுதுகிறார்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

“காதலர் தவறாக நடக்கத் தொடங்கிய பிறகும் பெண்கள் தகுதியற்றவர் என்று கருதப்பட்ட பிறகும் ஆரியரால் கரணம் ஏற்பட்டது என்பர்”

“குறிப்பு: 1. ஐயர் என்னும் சொல் ஆரியர் என்னும் சொல்லின் தற்பவமாகும். ஆரியர் என்னுஞ் சொல் பொதுவாகப் பிராமணர், க்ஷத்திரியர், வைசியரைக் குறிக்குமானாலும் இச்சொல் பிராமணரையே குறிக்கும். ஏனென்றால், வட இந்தியாவிலிருந்து பிராமணர் மட்டுந்தான் தெற்கே வந்தனர் என்று கூறப்படுகின்றனர்”.

They say that Karanam was introduced by Aryas after the lovers began to páove false and ladies were considered unworthy. “Note; Aiyer is the tadbbava of Arya. Though Arya generally refers ot Brahman Kshatriya and Vaisiya, yet is may refer here only to Brahmin since Brahman alone is said to have gone south from north India.”3

தமிழ் நாட்டிலே இருந்துவரும் தெலுங்கராகிய சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி (தமக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லிக்கொண்டே தமிழ் இலக்கியக் காலங்களைப் பற்றித் தவறாக எழுதிக்கொண்டிருப்பவர்) இந்த “ஐயர் யாத்தனர் கரணம்” என்பதற்குத் தமது கருத்தையும் எழுதியுள்ளார். “தமிழ் நாட்டிலே திருமணத்தை மதச்சடங்காக நிறுவினவர் ஆரியர் என்று தொல்காப்பியம் திட்ட வட்டமாகச் சொல்லுகிறது” என்று இவர் உண்மையைக் கண்டவர் போல எழுதிவிட்டார். மேலும் எட்டு வகையான திருமணம் ஆரியருடையதென்றும் அதனைத் தொல்காப்பியம் கூறுகிறதென்றும் எழுதுகிறார்.4

இவ்வாறு நச்சினார்க்கினியரும், மு. இராகவையங்காரும், பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியும், நீலகண்ட சாஸ்திரியும் ஆகிய பார்ப்பனர்கள் ஐயர் என்னும் சொல்லுக்கு ஆரியப் பார்ப்பனர் என்று முன்பின் ஆராயாமலும் அச்சமில்லாமல் எழுதிவிட்டார்கள்.

ஐயர் என்னும் சொல்லுக்கு ஆரியப் பார்ப்பனர் என்று பொருள் உண்டா?

ஐயர் என்னும் சொல் பார்ப்பனருக்கு சாதிப் பெயராக எக்காலத்தில் ஏற்பட்டது?

சங்க காலத்தில் இச்சொல் எந்தப் பொருளில் வழங்கப்பட்டது?

இந்தப் பார்ப்பனர்கள் இந்தச் சூத்திரத்திற்கு எழுதிய பொருள் செம்பொருள்தானா? இது ஏற்கத் தகுந்ததுதானா? இவற்றை இங்கு ஆராய்ந்து உண்மை காண்போம்.

ஐயர் என்னும் சொல் தமிழ் நாட்டில் பிராமணருக்குச் சாதிப் பெயரைச் சுட்டுஞ் சொல்லாக இப்போது வழங்கப்படுகிறது. இச்சொல் பிராமணருக்குச் சார்த்தி வழங்குவது மிகச் சமீப காலத்து வழக்கம். விஜயநகர அரசர் காலந்தொடங்கி (கி.பி. 15-ஆம் நூற்றாண்டு தொடங்கி இச்சொல் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு ஐயர் என்னும் சொல் பிராமணரைச் சார்த்தி வழங்கப்படவில்லை. பழைய கல்வெட்டெழுத்துச் சாசனங்களிலும் பிராமணருக்கு ஐயர் என்னும் பெயர் கூறப்படவில்லை. சங்க காலத்திலும் ஐயர் என்னும் சொல் பிராமணருக்கு வழங்கவில்லை.

ஐ, ஐயன், ஐயர் என்னும் சொற்கள் சங்க இலக்கியங்களில், அண்ணன், தகப்பன், பெரியவன் என்னும் பொருளில் பொதுவாகவும், அரசன் அரசர் குலத்தைச் சார்ந்தவன் என்னும் பொருளில் சிறப்பாகவும் வழங்கி வந்துள்ளன. ஐய, அய என்னும் சொல் தமிழ், சிங்களம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளிலும் மாகதி (பாலி) அர்த்த மாகதி முதலிய பிராகிருத (பாகத) மொழிகளிலும் வழங்கப்பட்ட பழைய சொல். இச்சொல் பிற்காலத்தில், சமஸ்கிருத மொழியில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆர்ய என்று வழங்கப்பட்டது. சமஸ்கிருதத்திலும் ஆர்ய (ஐய) என்னும் சொல், அரசர், உயர் நிலையில் உள்ளவர் முதலியவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

ஐயர், ஐயங்கார் முதலிய சொற்கள் மிகமிகப் பிற்காலத்திலேதான் பிராமண சாதியைக் குறிக்கும் சொல்லாகத் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டன.

ஐயர் என்னும் சொல்லுக்கு இக்காலத்துப் பொருள் வேறு, முற்காலத்துப் பொருள் வேறு. பழங்காலத்தில் வழங்கிய ஐயர் என்னும் சொல்லுக்கு இக்காலத்துப் பொருளையும், பிற்காலத்தில் வழங்கும் ஐயர் என்னும் சொல்லுக்கு முற்காலத்துப் பொருளையும் மாற்றி வழங்குவது அறியாமையாகும், தவறும் ஆகும். அவ்வாறு செய்வது, மொழியின் வரலாறு அறியாதவரின் பிழைபட்ட செயலாகும். மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்படுகிற ஐயர் என்னும் சொல்லுக்கு, மிகப்பிற்காலத்துப் பொருளாகிய பிராமணர் என்னும் பொருளைப் பொருத்திப்பொருள் கூறுவது, வரலாறு அறியாதவரின் தவறான செயலாகும்.

ஐயர்என்னும் சொல் சிறப்பாக அரசர் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் எனக்கூறினேன். உதாரணமாக “ஐயன் ஆரிதன்” என்பதாகும். கடைச்சங்க காலத்துக்குப் பிற்காலத்திலே, புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலை எழுதியவர் ஐயன் ஆரிதனார். இவர் சேர அரசர் மரபைச் சேர்ந்தவர். அரசமரபைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பதற்காகவே 'ஐயன்' என்னும் அடைமொழியுடன் இவர் கூறப்படுகிறார்.

ஓங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட
வாங்குவிற் றடக்கை வானவர் மருமான்
ஐய னாரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே

என்னும் சிறப்புப் பாயிரத்தினால் இதனை அறியலாம்.

ஸ்தாணுரவி என்னும் சேர அரசன் வழங்கிய கோட்டயம் செப்பேட்டுச் சாசனத்திலே, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் “ஐயன் அடிகள்” என்று கூறப்படுகின்றார்.5

ஐயடிகள் காடவர்கோன் என்பவர் சைவ நாயன்மார்களில் ஒருவர். காடவர்கோன் என்பது இவர் பல்லவ அரசர் குலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கிறது. அடிகள் என்பது உயர்வுச் சிறப்பைக் காட்டுகிறது. ஐ என்பது ஐயன் என்பதைக் குறிக்கிறது. ஆகவே, ஐயடிகள் காடவர்கோன், அரசபரம்பரையைச் சேர்ந்தவர் என்பது தெரிகின்றது. இதனால் அரச குலத்தைச்சேர்ந்தவர்களுக்கு ஐயன் என்னும் சிறப்புப் பெயர் வழங்கியது அறியலாம்.

தமிழ்நாட்டுக்கு அருகிலிருக்கும் சிங்களத் தீவாகிய இலங்கைத் தீவிலேயும் பண்டைக் காலத்தில் அரசாண்ட அரச குலத்தவர் அய (ஐயன்) என்றுபெயர் வழங்கப்பட்டனர். இலங்கையில் கலனிப் பகுதியை அரசாண்ட மன்னனின் தம்பி உத்தியன் என்பவன் ஐயன் என்று கூறப்படுகிறான். (மகாவம்சம் XXII.VI 5)6

இலங்கையிலே ராஜகல என்றும் ராஸஹெல என்றும் கூறப்படுகிற இடத்திலே மலைக்குகைகளிலே கி.மு. 2ஆம் நூற்றாண்டிலே பௌத்த பிக்குகள் இருந்தார்கள். அந்தப் பிக்குகளுக்குச் சத்தாதிஸ்ஸன் என்னும் அரசனுடைய பிள்ளைகள் இருவர் தானம் வழங்கினார்கள். அந்தச் செய்தியை அவ்விடத்திலுள்ள சாசன எழுத்து கூறுகிறது. இந்தச் சாசனத்திலே, தானம் அளித்த அரச குமாரர்கள் “மஹா அய” என்றும் “திஸ்ஸ அய” என்றும் கூறப்படுகின்றனர். மஹா அய என்பது (பெரிய ஐயன்) மூத்த அரச குமாரன் என்றும் பொருள் உள்ளது. (இந்த மஹா அய என்பவன் முடி சூடிய பிறகு லாஞ்ச திஸ்ஸன் என்னும் பெயருடன் (கி.மு. 119 முதல் 110 வரையில் அரசாண்டான்). திஸ்ஸ அய என்பது திஸ்ஸ ஐயன் (திஸ்ஸன் என்னும் பெயருள்ள அரச குமாரன்) என்னும் பொருள் உள்ளது.

இலங்கையரசர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அய (ஐயன்) என்று சிறப்புப் பெயர் வழங்கப்பட்டதற்கு இன்னும் பல சான்றுகள் சாசனங்களிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் காட்டலாம். விரிவஞ்சி நிறுத்துகிறேன்.

இதனால், தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஐயன், அய என்று கூறப்பட்டனர் என்பதை அறிகிறோம். எனவே, தொல்காப்பியச் சூத்திரத்தில் கூறப்பட்ட ஐயர் என்னும் சொல்லுக்குப் பொருள் அரசர் என்பது தெளிவாக விளங்குகிறது. சமுதாயத்திலே ஒரு புதிய வழக்கத்தை ஏற்படுத்துவது அரசர்களாலும், அவர் ஆணைபெற்ற அவர் மரபினராலும் தான் இயலும். எனவே, ‘ஐயர் யாத்தனர் கரணம்’ என்பதற்கு அரசர்கள் திருமணச் சடங்கை ஏற்படுத்தினார்கள் என்பது பொருள். இதுவே சரியான நேரான செம்பொருளாகும். இளம்பூரண அடிகள் என்னும் பழைய உரையாசிரியரும் இக்கருத்தையே கூறுகிறார். (இவர் பிராமணர் அல்லர்) அவர் கூறும் உரை வருமாறு:-

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப

என்றது கரணமாகியவாறு உணர்த்துதல் நுதலிற்று.

“பொய் கூறலும் வழூஉப்பட வொழுகலும் தோன்றிய பின்னர் முனைவர் கரணத்தைக் கட்டினார் என்று சொல்வர் என்றவாறு”.

“இரண்டுந் தோன்றுவது இரண்டாம் ஊழியின் கண்ணாதலின் முதலூழியிற் கரணமின்றியே இல்வாழ்க்கை நடந்ததென்பதூஉம் இவை தோன்றிய பின்னர்க் கரணந் தோன்றினதென்பதூஉம் கூறியவாராயிற்று. பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவாவது செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையின் அவையிரண்டும் நிகழாவாமாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று”.

இதில் இளம்பூரண அடிகள் ஐயர் என்பதற்கு முனைவர் என்று பொருள் கூறுவது காண்க. முனைவர் என்பது முதன்மையானவர், மக்கள் சமூகத்தின் தலைவர் என்று பொருள் உள்ள சொல்லாகும்.

எனவே, ‘ஐயர் யாத்தனர் கரணம்’ என்பதற்கு, அரசர்கள் கரணத்தை (திருமணச் சடங்கை) ஏற்படுத்தினார்கள் என்பது பொருள். எனவே, ஆரியப் பார்ப்பனர் திருமண முறையை அமைத்தார்கள் என்று இக்காலத்துப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள உரை, போலியுரை என்று விடுக.

தமிழ்மொழி குறைந்தது மூவாயிரம் ஆண்டு பழமையுடைய மிகப்பழைய மொழி. ஆகவே, இம்மொழிச் சொற்கள் பல, வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பொருளில் வழங்கப்பட்டன. அந்த மரபை அறிந்து பொருள்கொள்ள வேண்டுமே யல்லாமல், மரபு அறியாமல் கண்டதை எழுதிக் குழப்புவது அறிவுடைமையாகாது. ஆராய்ச்சி ஆகாது.

தொல்காப்பியத்தில் கூறப்படுகிற ஐயர் என்னும் பழைய சொல்லுக்குப் பார்ப்பனர், ரிஷிகள் என்னும் பிற்காலத்துப் பொருளைப் பொருத்திக் கூறிப் பார்ப்பனர் தமிழ் நாட்டில் திருமண முறையை ஏற்படுத்தினார்கள் என்று சரித்திரத்துக்கு மாறுபட்ட கருத்தைச் சொல்லி அதனால் தொல்காப்பியம் ஆரியர் தமிழகத்துக்கு வந்த பிறகு எழுதப்பட்ட நூல் என்று இக்காலத்துப் பார்ப்பனர் சிலர் எழுதியிருப்பது பிழைப்பட்ட பொய்க்கூற்று என்பது இதனால் தெளிவுறுத்தப்பட்டது.

ஐயர் என்பது அரசர் என்னும் பொருளுள்ள பழைய சொல் என்பதும், தமிழ்ச் சமூகத்தில் பொய்யும் வழுவும் தோன்றியபோது, தமிழ்நாட்டு ஐயர் (அரசர்) கரண (திருமண) முறையை ஏற்படுத்தினார்கள் என்பதும் தக்க சான்றுகளுடன் நிறுவப்பட்டன.

அடிக்குறிப்புகள்

1. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி. மு. இராக வையங்கார்.

2. “It (Karpu System) was introduced by Aryas to those other than they” An Enquiry into the relationship of Sanskrit and Tamil by P.S. Subramanya Sastri, University of Travancore. 1946.

3. P. 92. Tolkappiyam porul Athikarami by P.S. Subramaniya Sastri, Kuppusami Sastri Research Institute. Mylapore, Madras 1949.

4. P. 124. A History of South India, K.A. Nilakanta Sastri. Second Edition 1958, Oxford University Press.

5. Travancore Archaeological Series. Vol. II P. 61

6. (P. 82, Epigraphia zeylanica Vol. III)

2. வேந்தனும் வருணனும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்

என்று தொல்காப்பியம் (பொருள். அகத்திணையியல், நூற்பா. 5) கூறுகிறது. இதில் கூறப்பட்ட வேந்தன், வருணன் என்னும் தெய்வங்கள் எவை? அத்தெய்வங்களின் வரலாறு என்ன? சிலர் கருதுவது போல அத்தெய்வங்கள் ஆரியத் தெய்வங்கள்தானா? என்பதை ஆராய்வோம்.

தீம்புனல் உலகமாகிய மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்றும், பெருமணல் உலகமாகிய நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணன் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. எனவே தொல்காப்பியர் காலத்தில் இந்த இரண்டு தெய்வங்களும் தமிழர்களால் வணங்கப்பட்டனர் என்பது தெரிகின்றது. பிற்காலத்திலே இந்த இரண்டு தெய்வங்களும் மறக்கப்பட்டு மறைந்து போயின.

வேந்தன் - இந்திரன்

தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள், மிகமிகப் பிற்காலத்தில் இருந்தவர்கள். இவ்வுரையாசிரியர்களில் இளம்பூரணர் முற்பட்டவர். நச்சினார்க்கினியார் முதலிய ஏனையோர் பின்னும் பிற்காலத்தவர். பிற்காலத்து உரையாசிரியர்களாகிய இவர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் எழுதி யிருக்கிறார்கள். எனவே, இவர்கள் தொல்காப்பிய வேந்தனை, இந்திரன் என்று கூறுகின்றனர். அதாவது திராவிடருடைய வேந்தன் என்னும் தெய்வம், ஆரியருடைய இந்திரன் என்று கூறப்படுகிறான். திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய இந்திரன், திராவிட வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டான். இது, தொல்காப்பியர் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி. ஆகையினால்தான், மிக மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் கூறினார்கள்.

திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் (அசோக சக்கரவர்த்தி காலத்தில்) தொடங்கிற்று என்று கருதலாம். ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்படாத மிகப் பழைய காலத்தில், திராவிடராகிய தமிழா வணங்கிய மருதநிலக் கடவுளாகிய வேந்தன் என்னும் தெய்வம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட திராவிட - ஆரியக் கலாசாரக் கலப்பின் காரணமாக ஆரியரின் இந்திரனோடு இணைக்கப்பட்டு, இந்திரன் என்னும் பெயரினால் வழங்கப்பட்டது. பிறகு, பையப் பையப் பழைய வேந்தன் என்னுந் தெய்வம் மறக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய இந்திரன் வழிபடப் பட்டான். சங்க காலத்துக்குப் பிறகு, சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இந்திரனும் மறக்கப்பட்டு மறைந்து போனான்.

வேந்தன் என்னுஞ் சொல், வேந்து, வேந்தமை என்னும் சொல்லடியாகத் தோன்றி அரசர்களின் தெய்வம் என்னும் பொருளில் வழிபடப்பட்டது என்று கருதலாம். ஆளுகை சம்பந்தப்பட்ட இத்தெய்வம் அரசர்களின் தெய்வமாக இருந்தது போலும். தீம்புனல் உலகமாகிய மருத நிலத்திலே அதாவது ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் மக்களுடைய நாகரிகம் தோன்றி வளர்ந்தது என்று சரித்திரங் கூறுகிறது. ஏனென்றால், ஆற்றங்கரையும் ஏரிக்கரையுமாகிய நீர் வளமுள்ள மருதநிலத்திலேதான் உணவுப் பொருள்கள் பயிராயின. உணவு முட்டுப்பாடின்றிக் கிடைத்த இவ்விடங்களிலே மக்களின் நாகரிகம் தோன்றி வளர்ந்ததைச் சரித்திரக்காரர்கள் எல்லோருங் கூறுகிறார்கள். இது உலகத்திலே எல்லா நாடுகளிலும் நிகழ்ந்த நிகழ்ச்சி. இந்த முறைப்படித்தான் தமிழ் நாட்டிலும் மருத நிலங்களில் உணவுப் பொருள்கள் அதிகமாக விளைந்தன.

உணவு உற்பத்தி இருந்தாலும் அமைதியும் ஒழுங்கும் மக்களிடத்தில் நிலைபெற்றால்தான் மனித சமூகம் நாகரிகமாக வாழ முடியும். மக்கள் சமூகத்திலே அமைதியையும் ஒழுங்கையும் உண்டாக்கினவர், ஆதி காலத்தில் பெரும்பாலும் அரசர்தான். ஆகவே தமிழ் நாட்டு அரசர்கள் வேந்தன்மையை (ஆட்சி முறையை) நடத்தினார்கள். வேந்தன்மைக்குத் தெய்வம் வேந்தன். இந்த வேந்தனாகிய தெய்வத்தைதான் பழந்தமிழகத்தின் மருத நிலமக்கள் தெய்வமாக வணங்கினார்கள். அதனால் தான் தொல்காப்பியர் மக்களிடத்தில் இருந்த இந்தத் தெய்வ வழிபாட்டைத் தம்முடைய தொல்காப்பியத்தில் கூறினார்.

தொல்காப்பியர் காலத்துக்கு மிகப் பிற்பட்ட காலத்தில், பல நூற்றாண்டுக்குப் பிறகு, திராவிட - ஆரியக் கலாசாரக் கலப்பு ணைப்பு) ஏற்பட்டது. இந்தக் கலாசாரக் கலப்பு முக்கியமாகத் தெய்வ வழிபாட்டிலே ஏற்பட்டது. திராவிட தெய்வ வழிபாட்டை ஆரியரும் ஆரிய தெய்வ வழிபாட்டைத் திராவிடரும் பையப் பைய ஏற்றுக் கொண்டனர். திராவிடருடைய தெய்வங்களாகிய சிவன், மாயோன் முதலிய தெய்வங்களுடன் ஆரியருடைய உருத்திரனும் விஷ்ணுவும் இணைக்கப்பட்டது போல, வேந்தன் என்னும் திராவிடத் தெய்வத்துடன் இந்திரன் என்னும் ஆரியத் தெய்வம் இணைக்கப்பட்டது. இவ்விதத் திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், சந்திரகுப்த மௌரியனும் அவன் பேரனான அசோக சக்கரவர்த்தியும் அரசாண்ட காலத்தில் தொடங்கியிருக்கக்கூடும். இவ்வாறு வேந்தன் என்னும் தெய்வத்துடன் இந்திரன் என்னும் தெய்வம் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டது. பின்னர் சில நூற்றாண்டுக்குப் பிறகு இரு தெய்வங்களும் மறக்கப்பட்டு மறைந்து போயின.

வேந்தன் தெய்வம் இந்திரனாக்கப்பட்டது மூன்று ஆரிய மதத்தினரின் தொடர்பினால் என்பது தெரிகிறது. பௌத்தர் ஜைனர் வைதீகர் ஆகிய மூன்று ஆரிய மதத்தாரின் தொடர்பினால் தமிழரின் வேந்தன், இந்திரனாக்கப்பட்டான். பௌத்த ஜைன மதங்களின் சிறு தெய்வங்களில் இந்திரனுக்கு முதன்மையான இடம் உண்டு. அது போலவே வேதத்தை முதன்மையாகக் கொண்ட வைதிக மதத்தாருக்கும் இந்திர வழிபாடு உண்டு. ஆனால், வைதிக மதத்தார் இந்திரனை யாகஞ் செய்து வழிபட்டனர். பௌத்த ஜைன மதத்தார் தங்களுடைய இந்திரனை யாகத்தினால் வழிபடவில்லை. மூன்று ஆரிய மதத்தாருக்கும் உடன்பாடான இந்திரன், தமிழரின் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டுத் தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழர் ஏற்றுக்கொண்டு வழிபட்ட இந்திரன் பௌத்த இந்திரனாகத் தெரிகிறான். கடைச்சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்ற இந்திர விழாவிலே, இந்திரன் யாகஞ் செய்து பூசிக்கப் படவில்லைதிருவிழா செய்து பூசிக்கப்பட்டான். அந்த இந்திர விழாவில் பௌத்தருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்திர விழாவை, ஒரு ஆண்டு சோழ அரசன் நிறுத்தினபடியினாலே, பௌத்தத் தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் சினம்கொண்டு அந்நகரத்தை அழித்தது என்று மணிமேகலை என்னும் பௌத்த நூல் கூறுகிறது. எனவே, தமிழ் நாட்டில் தமிழர் பிற்காலத்தில் வழிபட்ட இந்திரன் வைதீக மதத்து ஆரிய இந்திரன் அல்லன் என்பது தெரிகிறது.

பௌத்த மதத்தில் இந்திரனுக்கு முக்கிய இடம் உண்டு. இந்திரன் பௌத்த மதத்தையும் பௌத்த தருமத்தையும் உலகத்தில் நிலைநிறுத்துகிறான் என்பது பௌத்தர் கொள்கை. மணிமேகலை முதலிய சிறு தெய்வங்களை உலகத்திலே ஒவ்வொரு இடத்தில் அமர்த்திப் பௌத்த மதத்தை அவன் காத்து வருகிறான் என்று பௌத்த மத நூல்கள் கூறுகின்றன. பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று ஆரிய மதங்களுக்கும் உடன்பாடாகிய இந்திரன், பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டான் என்பதும், ஆனால் அவன் பௌத்தமத இந்திரனாகக் கருதப்பட்டான் என்பதும் தெரிகின்றன. பிற்காலத்தில் இந்திரனும் வேந்தனும் ஒரே தெய்வமாகக் கற்பிக்கப்பட்ட போதிலும், ஆரியக் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் தமிழர் வணங்கிய மருதநிலக் கடவுள் வேந்தன் என்று பெயர் பெற்றிருந்தது என்பது தொல்காப்பியத்திலிருந்து தெரிகிறது.

திராவிட வருணனும் ஆரிய வருணனும்

இனி வருணனைப்பற்றி யாராய்வோம். வருணன், பெருமணல் உலகமாகிய நெய்தல் நிலமக்கள் வணங்கிய தெய்வம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியங் கூறுகிற வருணன், இக்காலத்தில் பலரும் தவறாகக் கருதுவதுபோல, வைதீக ஆரியர் வழிபட்ட வருணன் அல்லன், தொல்காப்பியம் கூறுகிற வருணனை வைதீக மதத்தாரின் வேதத்தில் கூறப்படுகிற வருணன் என்று கருதுவது பெரும் பிழையாகும். தமிழர் வணங்கிய வருணன் ஆரியக் கடவுள் அல்லன். ஆரிய வேதத்தில் கூறப்படுகிற வருணன் திராவிடக் கடவுளாகிய வருணனே. ஆய்த்தோய்ந்து பாராமல் மேற்போக்காகப் பார்க்கிறவர்களுக்கு வருணன் ஆரியர் தெய்வம் என்று தோன்றினாலும் ஆதிகாலத்தில் அது ஆரிய தெய்வம் அன்று. ஆரியர் அயல் நாட்டிலிருந்து இந்தியா தேசமாகிய பாரத தேசத்தில் புகுந்த போது, வட இந்தியாவில் வாழ்ந்திருந்த திராவிடருடன் கலக்க வேண்டியவரானார்கள். அக்காலத்து வடநாட்டுத் திராவிடருக்கும் புதிதாக வந்த வேதகால ஆரியருக்கும் அந்தத் தொடக்கக் காலத்திலே கலாசாரக் கலப்பு ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட கலப்பினாலே வடநாட்டில்வாழ்ந்திருந்த திராவிடரின் தெய்வமாகிய வருணனை ஆரியர் தங்களுடைய தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். ஏற்றுக்கொண்டு அத்தெய்வத்தைப் பற்றி இருக்கு வேதத்தில் பாடி வைத்தார்கள்.

அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்துவந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ் நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும் அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர். வருணன் முக்கியமாகக் கடல் தெய்வமாகக் கருதப்பட்டான். திராவிடர் அக்காலத்தில் பெரிய கடல் வாணிகராக இருந்தனர். அவர்கள் வருணனை முக்கியமாக வணங்கினார்கள். வேதகாலத்து ஆரியர் வட இந்தியாவில் நுழைந்தபோது அவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட கலாசாரத் தொடர்பினால், ஆரியர் திராவிட வருணனைத் தம் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். ஆனால், வருணன் வணக்கம் ஆதியில் ஆரியர்களுக்குரியதன்று. இவை எல்லாம் ஆராய்ச்சி யாளர்கள் கூறுகிற செய்திகள்.

எனவே, திராவிடராகிய தமிழர் ஆதிகாலத்தில் வருணனைக் கடல் தெய்வமாக வழிபட்டது வியப்பன்று. தமிழர் வணங்கிய திராவிட இனத்துக் கடவுளாகிய வருணனைத்தான் தொல்காப்பியர் தமது இலக்கணத்தில் கூறினார். மேலும், கடற்கரையில் வாழ்ந்த நெய்தல் நிலத்துத் தமிழர், வருணனை வணங்கியதாகக் கூறுகிறார். அந்த வருண வணக்கமும் திராவிட முறைப்படி செய்யப்பட்டது.

சினைச்சுறவின் கோடு நட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்.

என்று பட்டினப்பாலையில் (அடி. 86-87) கடல் தெய்வமாகிய வருணன் வணக்கம் கூறப்பட்டிருக்கிறது. நச்சினார்க்கினியரும் இதை நன்கு விளக்கிக் கூறுகிறார்: ‘இனி நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலைவளந்தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇக் சுறவுக்கோட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும் என்றார்’ (தொல், பொருள் - அகத்திணை 5ஆம் சூத்திர உரை)

ஒருவகைச் சுறா மீனின் வாய்ப்புறத்தில் நீண்ட கோடு (கொம்பு) உண்டு. அது நான்கு அடி நீளம் வரையில் நீண்டு வளர்வதும் உண்டு. தட்டையாக நீண்டு வளர்ந்துள்ள சுறாமீன் கோட்டில் இருபுறங்களிலும் முள்ளுகள் உண்டு. இந்தச் சுறாமீன் கோட்டை நட்டுத் தமிழ்நாட்டு நெய்தல் நிலமக்கள் வருணனை வணங்கினார்கள். ஆரியர் தங்கள் வருணனை இவ்விதமாக வணங்கவில்லை. வருணனை முதலில் போற்றிப் பாடிய ஆரியர் பிறகு அத்தெய்வத்தை இகழ்ந்து பாடியதாகவும் தெரிகிறது.

தமிழ்நாட்டுக் கப்பல் வாணிகரும் வருணனை வணங்கினார்கள். தமிழ்நாட்டு வாணிகன் ஒருவன் இலங்கைத் தீவின் தென்கோடியில் இருந்த தேவநுவர என்னும் ஊரில் (காலி என்னும் ஊரில்) கடல் தெய்வமாகிய வருணனுக்கு ஒரு கோவில் கட்டினான் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன.

எனவே, தொல்காப்பியம் கூறுகிற தமிழரின் வருணன், ஆரியர் வணங்கிய வருணனைக் கடனாகப் பெற்ற தெய்வம் அன்று. ஆதிகாலத்தில் இருந்து திராவிட இனத்தார் வழிபட்டு வந்த வருணனைத் தமிழர் வணங்கினார்கள். அத்தெய்வத்தைத்தான் தொல்காப்பியர் கூறினார். இவற்றையெல்லாம் ஆராயாமல், ஆரிய வேதத்தில் வருணன் கூறப்படுகிறபடியால், அந்த வருணனைத் தமிழர் ஏற்றுக்கொண்டு வணங்கினார்கள் என்று கூறுவதும், வருணனைக் கூறுகிற தொல்காப்பியம், ஆரிய திராவிடர் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்று கூறுவதும் ஆழ்ந்து பாராமல் மேற்போக்காகக் கூறுகிற போலி யாராய்ச்சியாகும். எனவே, இந்திரன் வருணன் என்னும் தெய்வங்களைக் கூறுகிற தொல்காப்பியம் பிற்காலத்து நூல் என்று சிலர் கூறுவது ஏற்கத்தக்கதன்று.

வருணன் வணக்கம் தமிழ்நாட்டில் மறைந்து போனதற்குக் காரணம் பௌத்த மதம். பௌத்த மதத்தின் கடற்காவல் தெய்வமாக மணிமேகலா தெய்வம் கூறப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலைக் காவியம் முதலிய தமிழ் நூல்களும் புத்த ஜாதகம் முதலிய பௌத்தமத நூல்களும் மணிமேகலா தெய்வத்தைக் கூறுகின்றன. பௌத்த மதம் தமிழ் நாட்டுக்கு வந்தபோது, தமிழரின் கடல் தெய்வமாகிய வருணன் இடத்தை மணிமேகலா தெய்வம் பிடித்துக் கொண்டது ஆகவே, வருணன் பையப்பைய நாளடைவில் மறக்கப்பட்டு மறைந்து போனான். பின்னர் மணிமேகலா தெய்வமும் மறக்கப்பட்டு மறைந்து போயிற்று. இதுகாறுங் கூறியவற்றால், இந்திரன் வருணன் வழிபாட்டைக் கூறுகிற தொல்காப்பியம் ஆரிய - திராவிடர் கலாச்சாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்று சிலர் தவறாகக் கூறுவது பொருந்தாது, ஏற்கத்தக்கதன்று என்பது விளக்கப்பட்டது. மேற்பார்வைக்கு மெய்போலத் தோன்றுகிற இப்பொய்க் கூற்றைத் தவறான, உண்மைக்கு மாறுபட்ட பொய்ச் செய்தி என விலக்கித் தள்ளுக.

3. தொல்காப்பியர்காலம்: அர்த்த சாஸ்திரம்

தொல்காப்பியச் செய்யுளியலின் இறுதியிலே முப்பத்திரண்டு தந்திர உத்திகள் கூறப்படுகின்றன. ‘ஒத்தகாட்சி உத்திவகை விரிப்பின்’ எனத் தொடங்கும் நூற்பாவிலே அவ்வுத்திகள் கூறப்படுகின்றன. இந்த முப்பத்திரண்டு உத்திகள், வடமொழியிலே கௌடல்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தின் இறுதியிலும் கூறப்படுகின்றன. சில ஆராய்ச்சிக்காரர்கள் இதைச் சுட்டிக்காட்டி, கௌடல்யரின் அர்த்த சாஸ்திரத்திலிருந்து முப்பத்திரண்டு உத்திகளையும் தொல்காப்பியர் எடுத்துக்கொண்டார் என்று கூறித் தொல்காப்பியம் அர்த்த சாஸ்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டது என்று கூறுகின்றனர்.

வித்தியாரத்தினம் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி, தாம் எழுதிய ‘சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வுரை’ என்னும் ஆங்கில நூலிலே இதைக் கூறுகிறார்: தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்படுகிற தந்திர உத்திகள் பல, கௌடல்யருடைய அர்த்த சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளன என்று அவர் எழுதியுள்ளார்.1

இந்த உத்திகளை எந்த நூலிலிருந்து எந்த நூல் எடுத்துக்கொண்டது என்பதை இவர் சொல்லவில்லை. ஆனால், இவர் எழுதியதின் முன்பின் தொடர்பை நோக்கும்போது, அர்த்த சாஸ்திரத்திலிருந்து தொல்காப்பியம் எடுத்துக்கொண்டது என்னும் கருத்துத் தொனிக்கும்படி எழுதியுள்ளார்.

திரு. எஸ். வையாபுரிப் பிள்ளையும், தொல்காப்பியம் பிற்காலத்து நூல் என்று தாம் வழக்கம்போல் கூறுகிற ஆதாரமற்ற ஆதாரங்களில் இதையும் ஒன்றாகக் கூறியுள்ளார். “கௌடல்யரின் அர்த்த சாஸ்திரம் தொல்காப்பியத்துக்கு விஷயம் கொடுத்திருக்கிறது. அதாவது, இரண்டு நூல்களின் இறுதியிலும் கூறப்படுகிற முப்பத்திரண்டு உத்திகள், ஆனால், கௌடலியரின் காலம் விவாதத்துக்கு உரியதாகையால் இதைப்பற்றிக் கூறாமல் விட்டுவிடலாம்.” என்று அவர் எழுதுகிறார்.2

தாமே சந்தேகப்படுகிற ஒரு சான்றை இவர் ஏன் கூறவேண்டும்? அர்த்த சாத்திரத்தின் காலம் விவாதத்துக்குரியது, ஆகவே அந்தச் சான்றைக் காட்டவேண்டுவதில்லை என்று கூறுகிறவர், அர்த்த சாஸ்திரத்திலிருந்து தொல்காப்பியம் 32 உத்திகளை எடுத்துக் கொண்டது என்று ஏன் கூறவேண்டும்? இது இவருடைய தாழ்வுமனப்பான்மையைக் காட்டுகிற தன்றோ? சம்ஸ்கிருதத்திலிருந்துதான் தமிழில் நூல் எழுத விஷயம் எடுக்கவேண்டும் என்னும் சமஸ்கிருத மூடபக்தி இவரை இப்படியெல்லாம் எழுதச் செய்தது போலும்.

இவ்வாறு சிலர் கூறுவதுபோல, கௌடல்யரின் அர்த்த சாஸ்திரத்துக்கும் தொல்காப்பியத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்பதை ஆராய்வோம். அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடல்யர், அசோக சக்கரவர்த்தியின் பாட்டானாகிய சந்திரகுப்த மௌரியன் காலத்தில் இருந்தவர் என்றும், அவ்வரசனுக்கு அமைச்சராக இருந்தவர் என்றுங் கூறப்படுகிறார். அவர் எழுதிய அர்த்த சாத்திரத்தில், அவருக்குப் பின்னால் வந்த சில ஆசிரியர்கள் பல விஷயங்களை அதில் சேர்த்து எழுதிவைத்தனர் என்றுங் கூறப்படுகிறது. அதாவது, கௌடல்யர் தொடங்கி எழுதிவைத்த அர்த்த சாத்திரத்தில், அவர் எழுதாத பல விஷயங்களை அவருக்குப் பிற்காலத்தில் இருந்தவர்கள் அவ்வக்காலங்களில் புதிய புதிய கருத்துக்களையும் எழுதி அதனுடன் சேர்த்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. எனவே, கௌடல்யரின் அர்த்த சாத்திரத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டு, கௌடல்யர் எழுதிய கருத்து மட்டும் இல்லாமல் வேறு பலருடைய கருத்துக்களும் பிற்காலங்களில் நுழைக்கப்பட்டன என்று தெரிகிறது.

அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் விஷ்ணு குப்தர் என்னும் பிராமணர் என்றுங் கூறப்படுகிறது. இவர் தென்னாட்டுப் பிராமணர் என்றுங் கூறப்படுகிறார். தென்னாட்டுப் பிராமணராகிய விஷ்ணுகுப்தர் தொல்காப்பியத்தை அறிந்தவராகவும் இருக்கலாம். அவர், அர்த்த சாஸ்திரத்தில் சில புதிய விஷயங்களை இடைச் செருகலாகப் புகுத்திச் சேர்த்ததில் தொல்காப்பியரின் 32 உத்திகளையும் அர்த்த சாத்திரத்தில் புகுத்தியிருக்கலாம். அல்லது, தொல்காப்பியத்தை அறிந்த வேறுயாரோ அந்த உத்திகளை அர்த்த சாத்திரத்தில் புகுத்தி எழுதியிருக்கலாம். இவ்வாறு இடைச் செருகல்களைக் கொண்டிருக்கிற அர்த்த சாத்திரத்திலிருந்து தொல்காப்பியர் 32 உத்திகளை எடுத்தார் என்று கூறுவதும், ஆகவே, தொல்காப்பியம் அர்த்த சாத்திரத்துக்குப் பிற்பட்ட நூல் என்று கூறுவதும் ஆதாரமற்ற, ஏற்கக் கூடாத சந்தேகத்துக்கு இடமான சான்று அல்லவா?

அர்த்த சாத்திரத்தின் காலத்தைப் பற்றி உறுதியாகக் கூறமுடியவில்லை. இந்திய ஆராய்ச்சிக்காரர்கள் சிலர் அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்கிறார்கள். மேல்நாட்டு ஆராய்ச்சிக்காரர்கள் அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்கிறார்கள். சம்ஸ்கிருத இலக்கியச் சரித்திரம் எழுதிய கீத். (A.B. Keith) என்பவரும், ஜர்மனி பாஷையில் இந்திய இலக்கிய வரலாறு எழுதிய வின்டர்னிட்ஸ் (Winternitz) என்பவரும் அர்த்த சாத்திரம் கிருஸ்துவுக்குப் பிறகு மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். இவ்வாறு வேறுபட்ட காலங்கள் அதற்குக் கூறப்படுகின்றன.

சிலர் கருதுவது போல அர்த்த சாத்திரம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கொண்டாலும் அதில் இடையிடையே அந்தந்தக் காலத்தில் இடைச் செருகல்கள் புகுத்தப்பட்டிருப்பதால், இதை ஒரு ஆதாரமாகக் கொள்வது கூடாது. பாண்டிய நாட்டு முத்துக்களையும் சேரநாட்டு மிளகையும் முத்தையும் மதுரைச் சேலைகளையும் கூறுகிற அர்த்த சாத்திரம், தொல்காப்பியரின் 32 உத்திகளையும் கூறியதில் என்ன ஆச்சரியம் உண்டு? தமிழ்நாட்டுப் பரதநாட்டியக் கலை வடமொழியில் பரத சாத்திரத்தில் இடம்பெற்றது போலவும், தமிழ் இலக்கியக் கருத்துக்களை பல வடமொழி இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பது போலவும், தொல்காப்பியத்தின் 32 உத்திகளும் அர்த்த சாத்திரத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இங்கிருந்து அங்குச் சென்றது என்று கூறாமல் அங்கிருந்து இங்கு வந்தது என்று கூறுவதுதான் தமிழ்நாட்டுப் பிராமணருக்கும் அவரைப் பின்பற்றும் வையாபுரியார்களுக்கும் பரம்பரை வழக்கமாய்ப் போய்விட்டது. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. எனவே இதை ஆதாரமற்ற செய்தி என விடுக.

அடிக்குறிப்புகள்

1. P. 56. An Enquiry to the relationship of sanskrit and Tamil. P. S. Subramanya Sastri, University of Trarvancore, 1946.

2. P.14,History of Tamil Language and Literature, Prof S. Vaiyapuri pillai, 1956.

4. தொல்காப்பிய ஆய்வுரை - அறிவர்

தொல்காப்பியத்தில் அறிவர் என்போர் கூறப்படுகின்றனர். அறிவர் என்பவர் யார்? அவர்கள் இல்வாழ்வோரா, துறவியரா? அறிவர் என்பர் முழுதுணர்ந்தவர் என்று பொருள் கூறுகிறார் நச்சினார்க்கினியர். அதாவது இல்லற வாழ்க்கையைத் துறந்து தவம் செய்யும் முனிவர் என்று கூறுகிறார். இளம்பூரணர், அறிவர் என்பவர் இல்லற வாழ்க்கையில் இருக்கும் கணிவன் என்று பொருள் கூறுகிறார்.

“அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” எனத் தொடங்கும் தொல்: பொருள் புறத்திணையில் 16ஆம் சூத்திரத்தில் அறிவன் கூறப்படுகிறான்.

மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்

என்று தொல்காப்பியர் அறிவனைக் கூறுகிறார். “காமம் வெகுளி மயக்கம் இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வு மென்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர்வுடையோன் பக்கமும்” என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார். அதாவது, முன் கூறியதுபோலவே, அறிவனைத் துறவி என்று கூறுகிறார்.

இளம்பூரண அடிகள் உரை இது: “குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன்”

இறந்த காலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றலாவெனில், அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிருபடத்துள்.

பனியும் வெயிலுங் கூதிரும் யாவும்
துனியில் கொள்கையொடு நோன்மை யெய்திய
தனிவுற் றறிந்த கணிவன் முல்லை

எனவும் ஓதலின் மேலதே பொருளாகக் கொள்க.

அறிவன் என்றது கணிவனை. மூவகைக் காலமும் நெறியினாலாற்றுதலாவது பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் மூவகைக் காலமும் ‘நெறியின் ஆற்றிய அறிவன்’ என்றார். உதாரணம்:

புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
விண்ணில் வுலகம் விளைவிக்கும் விளைவெல்லாங்
கண்ணி யுரைப்பான் கணி.

இவ்வாறு இளம்பூரண அடிகள் அறிவன் என்பதற்குக் கணிவன் என்று பொருள் கூறுகிறார்.

ஆகவே, நச்சினார்க்கினியர் கருத்துப்படி அறிவன் என்பவன் துறவுபூண்டு தவஞ்செய்து இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் முக்கால நிகழ்ச்சிகளையும் அறியும் முழுதுணர்வுடையவன் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

இளம்பூரணர் கருத்துப்படி, அறிவன் என்பவன் மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் வானத்தில் நிகழும் கோள்களின் நிலையினையும் அறிந்து பயன் கூறும் கணிவன் என்று கருதவேண்டியிருக்கிறது. மாறுபட்ட இவ்விரண்டு கருத்துகளில் எது உண்மை என்பதை ஆராய்வோம்.

வேறு சில தொல்காப்பியச் சூத்திரங்களும் அறிவரைக் கூறுகின்றன. அவை:

சொல்லிய கிளவி அறிவர்க்கு முரிய (தொல். பொருள். கற்பியல் 13)


இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும்
கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் (தொல். பொருள். கற்பியல் 14)

(இதில், அவர் என்றது அறிவரை யுணர்த்திற்று)

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாட்டி யிளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் விருந்தினர்
யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப. (தொல். பொருள். கற்பியல். 52)

பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்த்தே.

(தொல். பொருள். செய்யுள். 189)



பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற வறிவர் கண்டோர்
பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த வறுவரொடு தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்

(தொல். பொருள். செய்யுள். 182)

இச் சூத்திரங்களை நோக்கும்போது அறிவன், அறிவர் என்பவர் துறவிகளாகிய முனிவர் அல்லர் என்பதும், இல்லற வாழ்க்கையில் இருக்கும் கணிவர் என்பதும், கணவன் மனைவியருக்குள் ஊடல் முதலிய நிகழ்ந்தால் அவர்களுக்கு அறிவுரை கூறி இல்லற நெறியில் நிறுத்தினவர் என்பதும் தெரிகின்றன. எனவே, அறிவர் என்பதற்கு நச்சினார்கினியர் கூறும் துறவிகளாகிய முனிவர் என்னும் பொருள் தவறு என்பதும் இளம்பூரண அடிகள் கூறுகிற கணிவர் என்பதே சரியான பொருள் என்பதும் தெரிகின்றன. அறிவர் முகூர்த்தம் கணித்துத் திருமணநாளைக் கூறினர் என்பதைக் கலித்தொகை (குறிஞ்சிக்கலி 39 ஆம் பாட்டு) கூறுகிறது.

நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத்
தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக
வேய்புரை மென்றோட் பசலையு மம்பலும்
மாயப் புரணர்ச்சியு மெல்லா முடனீங்கச்
சேயுவர் வெற்பனும் வந்தனன்

என்பது அச்செய்யுட் பகுதி. இதில் மணமகன் சான்றவரையும் அறிவனையும் முன்னிறுத்தித் திருமணத்துக்கு வந்தான் என்று கூறப்படுகிறது. வந்த அறிவன் முகுர்த்த நாளை நன்கறிந்தவன் என்று கூறப்படுகிறபடியால், அறிவன் கணிவன் என்பதில் ஐயமில்லை.

அகநானூறு 98 ஆம் செய்யுளில் அறிவர் கூறப்படுகிறார். தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது என்னும் துறையுடைய குறிஞ்சித்திணைச் செய்யுளில் இவர் கூறப்படுகிறார்:

அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி
வெறிகமழ் நெடுவேள் நல்குவ னெனினே
செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக்
கான்கெழு நாடன் கேட்பின்
யானுயிர் வாழ்தல் அதனினு மரிதே.

குறுந்தொகை 277 ஆம் செய்யுளிலும் அறிவர் கூறப்படுகிறார்.

ஆசில் தெருவின் ஆசில் வியன்கடை
செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது
ஓரிற் பிச்சை ஆர மாந்தி
அற்சிரை வெய்ய வெப்பத் தெண்ணீர்
சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே
மின்னிடை நடுங்குங் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவர் என்றி
அக்கால் வருவரெங் காத லோரே.

தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியதைக் கூறுகிறது இச்செய்யுள். கார்காலத்தின் இறுதியில் திரும்பி வருவதாகச் சொல்லித் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான் தலைமகன். அவன் சொன்ன கார்காலத்தின் இறுதியை அறிவதற்காகத் தோழி அறிவனைக் கண்டு கேட்கிறாள். இச்செய்யுளில் அறிவன் என்னும்சொல் ஆளப்படவில்லை. செய்யுள் அடிக்குறிப்பிலிருந்து அறிவன் என்பது தெரிகிறது. அறிவன் நன்கு மதிக்கப்பட்டவன் என்பதும் வீடுதோறும் பிச்சை ஏற்று உண்ணாமல் ஒரே வீட்டில் உணவு கொண்டான் (ஓரிற்பிச்சை ஆர மாந்தி) என்பதும், அவன் வைத்திருந்த சேமச்செப்பில் வெந்நீர் அருந்தினான் என்பதும் காலத்தைக் கணித்துக் கூறினான் என்பதும் அறியப்படுகின்றன. ஆனால் இவன் துறவியல்லன்; இல்லறத்தானே.

பிற்காலத்து நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலையில் அரசமுல்லை, அரசவாகை, பார்ப்பன முல்லை, பார்ப்பன வாகை கூறப்படுவதுபோலவே கணிவன் முல்லை, அறிவன் வாகை கூறப்படுகின்றன. இதில் கணிவனும் அறிவனும் ஒருவரே என்பது தெரிகின்றது.

(முல்லை என்பது இயல்பால் பெற்ற வென்றி; வாகை என்பது முயற்சியால் பெற்ற வென்றி என்பர்.)

புறப்பொருள் வெண்பாமாலை பாடாண் படலம் ஓம்படையில் அறிவன் கூறப்படுகிறான்.

இன்னது செய்த லியல்பென விறைவன்
முன்னின் றறிவன் மொழிதொடர்ந் தன்று.

என்பது அச் செய்யுள்.

ஆக கவே, இளம்பூரண உரையாசிரியர் கூறுவது போல, கணிவனும் அறிவனும் ஒருவரே என்பதும் அவர்கள் வான நூலை அறிந்து முகுர்த்தம் முதலிய காலங்களைக் கூறினார்கள் என்பதும் தெரிகின்றன. நச்சினார்க்கினியர் கூறுவதுபோன்று அறிவர் துறவு பூண்ட முனிவர் அல்லர். அறிவர் என்பவர் பிற்காலத்தில் கணிவர் என்று பெயர்பெற்றனர். பண்டைக் காலத்தில் தமிழ் நாடாக இருந்து இப்போது மலையாள மொழி பேசும் நாடாக மாறிப்போன மலையாள தேசத்தில் கணியர் (கணிவர்) இன்றும் இருக்கிறார்கள்.

பழைய தமிழ் நாட்டுச் சொல்லாட்சியையும் பழைய திராவிடப் பழக்கவழக்கங்கள் சிலவற்றையும் அழியாமல் பாதுகாத்து வருகிறது குடநாடாகிய துளு நாடு. திராவிட இனத்தைச் சேர்ந்தவராகிய துளுவர் சமூகத்திலே பழைய அறிவர் இன்றும் இருந்து வருகின்றனர். இப்போது அவர்கள் அறுவர் என்று பெயர் கூறப்படுகின்றனர். சங்ககாலத்தில் தமிழ்நாட்டிலே அறிவர் என்னும் பெயருடன் இருந்தவர்தான் இப்போது துளு நாட்டிலுள்ள அறுவர் என்பவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திராவிட இனத்தவராகிய துளுவருக்குத் திருமணம் செய்து வைக்கிற புரோகிதராகத் துளு நாட்டு ‘அறுவர்’ இன்றும் இருந்து வருகின்றனர். இதனாலும் தமிழ் நாட்டுக்கும் மற்றத் திராவிட நாட்டுக்கும் பண்டைக்காலத்தில் இருந்த ஒருமைப்பாட்டை அறிகிறோம். அறிவர் என்னும் பெயர் பெற்ற கணியர் என்னும் வானநூல் அறிஞர் தமிழ் நாட்டிலும் ஏனைய திராவிட நாடுகளிலும் பண்டைக் காலத்தில் இருந்தனர் என்று தெரிகின்றனர். இதனால், பண்டைத் தமிழகத்தில் அறிவர் என்னும் இனத்தார் இருந்தனர் என்பதும் அவர்கள் பிற்காலத்தில் கணிவர் என்று பெயர் பெற்றிருந்தனர் என்பதும் அறியப்படுகின்றன.

5. நடுகல் என்னும் வீரக்கல்

சங்க காலத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற்றிருந்தவை வீரமும் காதலுமே. அக்காலத்து மக்கள் காதலையும் வீரத்தையும் போற்றினார்கள். ஆகவே, அக்காலத்துப் புலவர்கள், காதல் துறையைக் கூறுகின்ற அகப்பொருட் செய்யுட்களையும் போர்வீரருடைய வீரத்தைக் கூறும் புறப்பொருட் செய்யுட்களையும் அதிகமாகப் பாடினார்கள். சங்ககாலத்திலே முதன்மையான இலக்கியங்கள் இவை இரண்டுமே. பிற்காலத்தில் பக்திப் பாடல்கள் (சமயத் துறைச் செய்யுட்கள்) முதலிடம் பெற்றதுபோல, சங்ககாலத்தில் சமயத்துறைச் செய்யுட்கள் முதலிடம் பெறவில்லை.

வீரத்தைப் போற்றிய சங்ககாலத் தமிழர், போர்க்களத்திலே புறங்கொடாமல் போர் செய்து வெற்றிபெற்ற வீரனைப் போற்றினார்கள். வீரன் போர்க்களத்தில் உயிர் நீத்தால், அவன் வீரத்தைப் போற்றுவதற்காகவும் அவனை நினைவு கூர்வதற்காகவும் நடுகல் என்னும் வீரக்கல் நட்டு வாழ்த்தினார்கள்.

அக்காலத்துத் தமிழர், ஒவ்வொருவகைப் போருக்கும் வெவ்வேறு பெயர் கொடுத்திருந்தனர். பகையரசன் நாட்டிற் சென்று அந்நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு வருவதற்கு வெட்சிப்போர் என்றும், ஆனிரைகளை மீட்பதற்காகச் செய்யும் போருக்குக் கரந்தைப்போர் என்றும், நாட்டைப் பிடிப்பதற்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ ஒரு அரசன் மற்றொரு அரசன்மேல் படையெடுத்துச் சென்று செய்யும் போருக்கு வஞ்சிப்போர் என்றும், படையெடுத்து வந்தவனுடன் எதிர்த்துச் செய்யும் போருக்குத் தும்மைப் போர் என்றும், கோட்டை மதிலை வளைத்துக்கொண்டு முற்றுகையிடும் போருக்கு உழிஞைப் போர் என்றும், கோட்டை மதிலுக்குள்ளிருந்து முற்றுகையிட்டவனுடன் செய்யும் போருக்கு நொச்சிப்போர் என்றும் பெயரிட்டிருந்தார்கள்.

எந்தப் போராக இருந்தாலும், போர்க்களத்தில் நின்று பகைவரை ஓட்டியவனின் வீரத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அவ்விரல் வீரன் போர்க்களத்தில் போர் செய்து உயிர்விட்டால், அவனது வீரத்தைப் போற்றி அவனை நினைவு கூர்தற்கு அவன் பெயரால் நடுகல் என்னும் வீரக்கல்லை நட்டார்கள். அக்காலத்து மக்களின் பழக்க வழக்கங்களைக் கூறுகிற தொல்காப்பியர், அக்காலத்தில் இருந்த நடுகல் நடும் வழக்கத்தையும் தமது நூலில் கூறினார். “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” எனத் தொடங்கும் சூத்திரத்தின் இறுதியில்,

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மறபிற் கல்லொடு புணர்

(தொல். புறத்திணையியல்)

என்று கூறினார்.

போரில் புறங்கொடாமல் வீரப்போர் செய்து களத்தில் வீழ்ந்த வீரனுக்கு நடுகல் நடும்போது, அதற்குரிய கல்லைத் தேடித் தெரிந்தெடுத்தலும், அக்கல்லைக் கொண்டுவருதலும், அக்கல்லில் இறந்தவன் இறந்த விதத்தையும் எழுதி நீராட்டுதலும், அக்கல்லை நடுதலும், அவ்வீரனுடைய புகழை வாழ்த்திப் போற்றலும் என்னும் நிகழ்ச்சிகள் நடந்தன. (சீர்தகு சிறப்பில் பெரும்படை என்பது, போரில் புறங்கொடாமல் இறந்த வீரன் அரசனாக இருந்தால் அவனுக்கு நடுகல் நட்டு அதன்மேல் பெரும்படையாகக் கோவில் அமைப்பது. இதுபற்றித் தனியே கூறுவோம்.)

தொல்காப்பியருக்குப் பிறகு, பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலே இயற்றப்பட்ட சிலப்பதிகாரமும் நடுகல்லைப் பற்றித் தொல்காப்பியர் கூறியதையே கூறுகின்றது. “காட்சி கால்கோல் நீர்ப்படை நடுகல், வாழ்த்து” என்று சிலப்பதிகாரப் பதிகம் (வரி. 84, 85) கூறுகின்றது. அதற்கேற்பவே காட்சிக்காதை, கால்கோட்காதை, நீர்ப்படைகாதை, நடுகற் காதை, வாழ்த்துக் காதை என்று ஐந்து காதைகளையும் கூறுகின்றது. வீரருக்கு நடுகல் அமைத்தது போலவே வீரபத்தினியாகிய கண்ணகிக்கும் வீரக்கல் அமைத்து அவரைப் போற்றியதைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம்.

நடுகல் நடும் வழக்கம் தமிழ் நாட்டில் நெடுங்காலமாக இருந்து வந்தது. அண்மைக்காலம் வரையில், கி.பி. 14ம் நூற்றாண்டு வரையில், அதாவது பிற்காலச் சோழர் ஆட்சியின் இறுதிக்காலம் வரையில் வீரக்கல் அமைக்கும் வழக்கம் இருந்து வந்தது.

திருவள்ளுவர் தமது திருக்குறளிலே நடுகல்லைப் பற்றிக் கூறுகிறார்:

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்ஐ
முன்நின்று கல்நின்றவர் (படைச்செருக்கு)

வீரக்கல் நட்டுப் போரில் உயிர்விட்ட வீரனை நினைவு கூரும் வழக்கம் தொல்காப்பியர் காலந்தொட்டு ஏறத்தாழ கி.பி. 14ஆம் நூற்றாண்டுவரையில் இருந்தது என்று கூறினோம். சங்க இலக்கியங்களிலே நடுகல்லைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

பல்லா தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை யழைப்ப வாட்டி
நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை
விரகறியாளர் மரபிற் சூட்ட
நிரையிவண் தந்து நடுகல் லாகிய
வென்வேல் விடலை

(புறம். 261:11-16 ஆவூர் மூலங்கிழார்)


சிலையே றட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி யதிரல்
நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டுஞ்
சுரன் (அகம்.289 -1-4 இளங்கீரனார்)

கடுமான் என்னும் வீரன் போரில் இறந்தபோது அவனுக்கு நடுகல் நட்டதைக் கோனாட்டு முகையலூர்ச் சிறுகருத்தும்பியார் பாடியது இது:

ஊர்நனி யிறந்த பார்முதிர் பரந்தலை
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நிறுவீப்
போந்தையந் தோட்டில் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லா யினையே கடுமான் தோன்றல்.

(புறம்.265:1-5)


அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் சிற்றரசன் போர்க்களத்தில் உயிர் நீத்தபோது அவனுக்கு நடுகல் நட்டு மயிற்பீலியால் அலங்கரித்து மதுபானத்தைப் படைத்தனர். அப்போது ஒளவையார் பாடிய செய்யுள் இது:

நடுகல் பீலி குட்டி நார்அரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளாதோனே

(புறம். 232:3-6)

நடுகல்லில், இறந்த வீரனுடைய பெயரும் அவன் போரில் இறந்த காரணமும் எழுதப்படுவது வழக்கம், இதை “எழுத்துடை நடுகல்” என்று கூறுகிறார் சீத்தலைச்சாத்தனார். (அகம். 53: 11).

நடுகல்லுக்கு மயிற்பீலி சூட்டித் துடி (பம்பை)யை ஒலித்துப் போர் வீரர்களுக்கு உணவைவிட உகந்ததாகிய மதுபானத்தைப் படைத்து ஆட்டுக் குட்டியைப் பலிகொடுத்து இறந்த வீரனைப் போற்றினார்கள் என்று அம்மூவனார் என்னும் புலவர் கூறுகிறார்.

நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவர்
முனையாத் துந்து முரம்பின் வீழ்த்த
வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரம்

(அகம். 35: 4-10)

பண்டைக்காலத்து நடுகற்கள் நமக்குக் கிடைக்காமற் போனாலும் பிற்காலத்து நடுகற்கள் சில கிடைத்துள்ளன. எபிகிறாபி என்னும் சாசன எழுத்து இலாகாவும், ஆர்க்கியாலஜி என்னும் பழம்பொருள் ஆராய்ச்சி இலாகாவும் சில நடுகற்களைக் கண்டுபிடித்துள்ளன. நடுகற்களில் எழுத்துக்கள் சுருக்கமாகவே எழுதப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம்.

இப்போது ஆந்திர தேசத்துடன் இணைந்தபோனதும், தமிழ்நாட்டின் பகுதியாக இருந்ததுமான சித்தூர் மாவட்டத்துப் புங்கனூர் தாலுகா காப்பள்ளெ கிராமத்தில் உள்ள தமிழ் எழுத்துச் சாசனம். கி.பி. 9ஆம் நூற்றாண்டு. வைதம்ப குலத்துப் பள்ளொ (பல்லவ?) அரசனான சாதெ அரசன் ஆட்சியில், கோணக்கி என்பவன் படையுடன் வந்து தொறு (ஆனிரை) கொண்டு போனதையும், அவ்வமயம் முத்துக்கூரு உடையான் வைதம்ப சூலத்து சூவப்பராசா மகன் போரிகடேசரே என்பவன் சாதே அரசனுக்கு உதவியாகத்தொறு மீட்டுக் கொடுத்ததையும், மீட்ட பிறகு அப்போரில் இறந்ததையும் கூறுகிறது இந்த நடுகல் சாசனம்1.

வட ஆர்க்காடு மாவட்டம் செங்கம் தாலுகா வேலூரில் உள்ள நடுகல் சாசனம். இந்தச் சாசனக் கல்லில், வில்லும் அம்புங்கொண்டு போர் செய்கிற ஒரு வீரனுடைய புடைப்புச் சிற்பமும் இருக்கிறது. விசய நரசிம்மவர்மனுடைய இரண்டாவது ஆண்டில் எழுதப்பட்டது இச்சாசனம். வாணசேகரன் அதியரசர் சேவகனாகிய மீக்கொன்றை நாட்டு மேல்வேளூர் அதிபர் பரயம் ஆளியார் என்பவர், தமது ஊர்த்தொறுவைப் பகைவர் கொண்டுபோனபோது, போர் செய்து தொறுவை மீட்டார். ஆனால், அப்போரில் உயிர் துறந்தார். அவருடைய வீரத்தைப் பாராட்டி நடப்பட்டது இந்த நடுகல்.2

வட ஆர்க்காடு மாவட்டம் செங்கம் தாலுகா வேலூரில் உள்ள நடுகல் சாசனம். சுந்தர சோழன் II உடைய 16ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. மீகொன்றை நாட்டைச் சேர்ந்த வேலூரை வாணகோவரையர் என்னும் சிற்றரசர் ஆண்டபோது, அவ்வூர்த் தொறுவைப் பகைவர் கொண்டுபோக, வாணகோவரையரின் சேவகராகிய (போர்வீரனாகிய) பொங்கள் தொண்டைமான் மகன் வேம்படி என்பவர் பகைவருடன் போர் செய்து தொறுமீட்டார். ஆனால், போரில் உயிர்விட்டார் என்று இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.3

வட ஆர்க்காடு மாவட்டம் செந்தாட்டூரில் உள்ள நடுகல் சகண்டு 832 (கி.பி. 910) செந்தாட்டூரில் பகைவர் வந்து தொறுக்கவர்ந்து சென்றபோது, இகல் மறைமங்கலத்து மாவலிவாணராயரான குடி பரிதாண்டிக்காமனார் அத்தொறுவை மீட்டுப் போரில் இறந்தார் என்பதை இந்நடுகற் சாசனம் கூறுகிறது.

வட ஆர்க்காடு மாவட்டம் வேலூர் தாலுகா ஆம்பூர் காங்கரெட்டித் தெருவில் உள்ள இரண்டு வீரகற்கள். (ஆம்பூரின் பழைய பெயர் ஆமையூர் என்று இச்சாசனங்களிலிருந்து தெரிகின்றது.) கோவிசைய நிருபதுங்கவர்மர் என்னும் அரசன் காலத்தில் நிகழ்ந்த கரந்தைப் போரைக் கூறுகின்றன இவ்வீரக் கற்சாசனங்கள். இச்சாசனங்களின் வாசகம் இவை:

“ஸ்ரீ கோவிசைய நிருபதொங்க விக்கிரம பருமர்க்கு யாண்டு இருபதாவது. படுவூர் கோட்டத்து மேல் அடையாறு நாட்டு ஆமையூர்மேல் நுளம்பன் படைவந்து தொறுகொள்ள பிருதிகங்கரையர் சேவகர் பெருணகரக் கொண்டக் காவிதி அகளங்கத்துவராயர் மகன் சண்ணன் தளரா வீழ்ந்துபட்டான்.(காவிதி என்பது சேனைத் தலைவருக்கு அரசரால் அளிக்கப்படும் பட்டம்.)

“கோவிசைய நிருபதொங்க விக்கிரமபருமர்க்கு யாண்டு இருபத்தாறாவது, படுவூர்க் கோட்டத்துமேல் அடையாறு நாட்டு ஆமையூர்மேல் நுளம்பன் படைவந்து தொறுகொள்ள பிருதிகங்கரையர் சேவகர் அகளங்கத்துவரையர் மருகன் மசிழு... னி வேடன் கலியராமன் பட்டான்4”.

மேற்படி மாவட்டம் முக்குத்தூரில் உள்ள மற்றொரு நடுகல் சாசனம்: “கோவிசெய நரசிங்க பருமற்கு யாண்டு மூன்றாவது. வின்று நாட்டு வடகரை ஆளுந்தகடூர் நாடர் வலிமதுர சேவகர் பாக்கத்துக்குடி அதிகமத்தார் முருகன் முக்குட்டூர்த்தொறு சன்மதுரரு கொள்ளத்தொறு மீட்டுப்பட்டார்5”.

வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகா குளிதிக்கி கிராமத்தில் ஆற்றுக்கு அருகில் உள்ள சாசனம். இது விஜயநந்திவர்மன் என்னும் பல்லவ அரசனின் 52 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது.

“ஸ்ரீ கோவிசெய நந்திச்சுர பருமற்கு யாண்டு ஐம்பத்திரண்டாவது. பெருமானடிகள்மேல் பல்லவரையன் படை வந்து பெண்குழிக் கோட்டை அழித்த ஞான்று வாணவரையர் மாமாடி திரிக எனத்திரிந்து பட்டார் கற்காட்டூர் உடைய கங்கதியரையர் கன்னாடு பெருங்கங்கர்6.

தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஒலக்கூர் சாவடிக்கு அருகில் நடப்பட்டுள்ள நடுகல். இக்கல்லில், வீரன் ஒருவன் கையில் வாளை ஏந்திச் செல்வதுபோல புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் இவ்வூரில் யானைகளைக்கொண்டு கொந்தளிப்பு உண்டாக்கி ஊரை அழித்தபோது, இவ்வூர் மாதிரன் என்பவன் எதிர்த்துப் போராடி இறந்ததை இக்கல்லெழுத்து கூறுகிறது. இதன் வாசகம்:

“கம்பப்பெருமான் ஆனையாடின கொந்தளத்து இவ்வூரழிந்த நாட்பட்டான் இவ்வூர் தொதுபத்தி மாதிரன், ஸ்வஸ்தி ஸ்ரீ7”. சேர நாட்டில் ஆரம்பொழி என்னும் ஊரில் இருந்த வீரகல். இவ் வீரகல்லை, மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கண்டுபிடித்து அதைக் கொண்டுவந்து திருவனந்தபுரம் காட்சி சாலையில் வைத்தார். இதன் ஒரு பக்கத்தில் ஒரு வீரன் இடது கையில் வில்லையும், வலது கையில் கட்டாரியையும் பிடித்துக் கொண்டு நிற்பதுபோல, புடைப்புச் சிற்பம் இருக்கிறது. பின்புறத்தில் கீழ்க்கண்ட சாசனம் வட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

“ஸ்ரீ கோமாறஞ்சடையற் கிருபத்தேழாமாண்டு சேரமானார் படை விழஞத்து புறத்து விட்டுழக்க கரைக்காட்டை அழிப்பான் வர பெருமானடிகளன்பு மிக்குள இரணகீர்த்தியு அமர்க்கழிஉம் உள்ளீட்டினொற்றைச் சேவர் கோட்டை யழியாமைக் காத்தெறிந்து பலரும்பட்ட இடத்து இரணகீர்த்தி உள்வீட்டுச் சேவகன் கொழுவூர்க் கூற்றத்துப் பெருவூர்த் தாதம் பெருந்திணை ஆத்திரத்தாற் பலரோடுங் குத்திப்பட்டான்...8

போர்க்களத்தில் வீரங்காட்டியவர்களுக்கு மட்டுந்தான் வீரக்கல் நடப்பட்டது என்று கருதவேண்டா. புலிகளுடன் போராடி உயிர்விட்ட வீரர்களுக்கும் நடுகற்கள் அமைக்கப்பட்டன. பண்டைக்காலத்துத் தமிழர் வீரச்செயலைப் போற்றும் பண்பினர் ஆகையால், எத்தகைய வீரர்களுக்கும், நடுகற்கள் நட்டுச் சிறப்புச் செய்தார்கள். புலியுடன் போராடுவது, மனிதருடன் போர் செய்வதைவிட அதிக வீரமான செயல். இக்காலத்தில் யானைகளின்மேல் அமர்ந்து, பல பாதுகாப்பான சூழ்நிலைகளுடன் தூரத்தில் இருந்து கொண்டு துப்பாக்கியினால் சுட்டுப் புலிகளைக் கொல்லும் வேட்டையன்று பண்டைக்காலத்துப் புலிவேட்டை. நேருக்கு நேர் புலியுடன் நின்று போரிட வேண்டும். அவ்வாறு புலிகளுடன் போராடி உயிர்விட்ட வீரர்களுக்கும் நடுகல் நட்டுப் பாராட்ட வேண்டியதுதானே. ஆகவே, வீரத்தைப் போற்றிப் பாராட்டிய அக்காலத் தமிழர் அவர்களுக்கும் நடுகல் நட்டனர். அவ்வீர கற்கள் சிலவற்றைக் காட்டுவோம்.

வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகா கீழ்முத்துக்கூர். (இவ்வூரின் பழைய பெயர் முக்குத்தூர்.) இங்குள்ள ஒரு நடுகல்லில் ஒரு வீரன் தனித்து நின்று கட்டாரியினால் ஒரு புலியைக் குத்தி கொல்வது போன்று புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இதிலுள்ள சாசன வாசகம் இது: “ஸ்ரீ மதுரை கொண்ட கோப்சரகேசரிவன்மற்கு யாண்டு முப்பத்து இரண்டாவது. வடகரை முக்குத்தூர் குமாரனடி புழலப்பன் புலிகுத்தின கரைநாடு”.9

கோவிலூர் சிவன் கோவிலில் உள்ள நடுகல் சாசனம் ஒன்று, புலிவேட்டையில் வில்லி ஒருவர் புலியுடன் பொருது உயிர்விட்டதைக் கூறுகிறது.10

தமிழ் நாடாக இருந்து இப்போது ஆந்திர தேசத்துடன் இணைந்துபோன சித்தூர் மாவட்டத்துப் புங்கனூர் தாலுகா எடூரு என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு அப்பால் சிறிது தூரத்தில் ஒரு வயலில் உள்ள புலிராயி என்னும் புலிக்கல். தமிழ்ச் சாசனம். குலோதுங்கசோழனுடைய 39 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ஜயங்கொண்ட சோழமண்டலத்து பெரும் பாணப்பாடி புலிநாட்டு இடையூர் ஆன சென்பியன் ஸ்ரீகரநல்லூரில் இருந்த வில்லி அபிமான முத்தரையன் மகன் மாச்சன் என்பவன் ஒரு புலியுடன் பொருது அதனைக் குத்திக் கொன்று தானும் இறந்தான் என்னும் செய்தியை இவ்வீரக்கல் சாசனம் கூறுகிறது.

வீரபல்லி அரசனான குமாரபல்லி அரசன் சாலிவாகன சகாப்தம் 1289இல் (கி.பி. 1367 இல்) எழுதிய வீரகல் சாசனம். இவர் 150 புலிகளைக் கொன்றதாக இச்சாசனம் கூறுகின்றது."11

ஸ்வஸ்திஸ்ரீ. சகாப்தம் ஆயிரத்து இருநூற்று எண்பத்தொன்பதின்மேல் செல்லா நின்ற பிலவங்க சம்பவத்சரத்து விருஷப ஞாயற்று பூர்வபக்ஷத்து பிரதமையும் சனிக்கிழமையும் பெற்ற ரோஹிணி. நாம் தியாக சமுத்திரப்பட்டை அயோத்யாபுர வாரத்சர ஆபீரராய மாநமர்த்தன் அவிராய மானமர்த்தன் இராயகண்ட பேருண்ட பங்களராய பங்கள சக்கரவர்த்தி சுரியக்கார மகாமகேஸ்வர மத்யம தேசாதிபதி வீரஸ்ரீ வீரபல்லி அரசர் குமாரபல்லி அரசர் நான் இந்நாள்வரைக்கும் கொன்ற புலி நூற்றைம்பது.”12

உதாரணத்துக்காகச் சில நடுகற்களை மட்டும் இங்குக் காட்டினோம். இதுபோன்று நூற்றுக்கணக்கான வீரக்கற்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன. அவைகளை எல்லாம் கூறினால் தனி நூலாகும் என்று அஞ்சிக் கூறாமல் விட்டனம்.

தமிழ் நாட்டுக்கு வடக்கேயுள்ள வடுக தேசமாகிய கன்னட நாட்டிலும் வீரக்கற்களாகிய நடுகல் நடும் வழக்கம் பண்டைக்காலத்தில் இருந்தது. கன்னட நாட்டு வீரக்கற்களைப் பற்றி இங்கு எழுதினால் இடங்கொள்ளும் என்றஞ்சி அவற்றை இங்கு எழுதாது விடுகிறேன்.

அடிக்குறிப்புகள்

1. (Epi. Report. 165 of 1933-34).

2. (Epi. Rep. 69 of 1933-34).

3. Epi. Rep. 67 of 1933-34.

4. Two Tamil Inscriptions at Ambur. E. Hultzsch. Epigraphia Indica Vol. IV, P. 189- 180, Ep. Rep. 1896, P2.

5. Kil Muthugur Inscriptions P 360. Epigraphia Indica Vol. IV.

6. Kulidikki Inscription of Vijaya Nandisvara Varman P. 110-115. Epigraphia In- dica Vol. XXII 1933 - 34.

7. No. 112. S.I.I. Vol. XII.

8. Thavandram Museum stone Inscription of Maranjadaiya. P. 153-159. Travancore Archaeological Series; Vol. I. Ranakirti Tatam A South Indian Warrior of the Eighth Century, P. 146. Kerala Society Papers, Vol. I. (1928-30)

9. Three Tamil Inscriptions at Kil - Muthugur. Epigraphia Indica. Vol. IV. PP. 177-179.

10. (348 of 1921).

11. (205 of 1931 - 32).

12. (No. 471. S.I.I. Vol. VIII P. 249).

6. பெரும்படை

இனி, தொல்காப்பியச் சூத்திரத்தில் பெரும்படை என்று கூறப்பட்டிருப்பதைப் பற்றி ஆராய்வோம்.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகுமரபில் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூவகையில் கல்லொடு புணர

என்பது தொல்காப்பிய புறத்தினையியல் 3ஆம் சூத்திரப்பகுதி. இதில் “சீர்த்தகு மரபில் பெரும்படை” என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை பொருந்தாது. இளம் பூரணர் கூறும் உரை சரியானது. இதற்கு இளம் பூரணர் கூறும் உரை இது:

சீர்தகு மரபின் பெரும்படை - மிகவும் தக்க மரபினையுடைய
பெரும்படை, அஃதாவது, நாட்டிய கல்லிற்குக் கோட்டஞ்
செய்தல். அஃது இற்கொண்டு புகுதலென உரைத்த துறை.

இவ்வுரையிலும் முழு விளக்கம் தரப்படவில்லை. நாட்டிய கல்லிற்குக் கோட்டம் (கோவில்) அமைத்தல் என்று பொதுவாகச் சொல்லியிருக்கிறார். பெரும்படை என்பது, அரசர்கள் போர்க்களத்தில் உயிர் நீத்தால் அவர்களுக்கு நடுகல் நட்டு அக்கல்லுக்குமேல் கோவில் (கோட்டம்) கட்டடம் அமைத்தல் என்பது பொருள். சாதாரண போர் வீரர்களுக்குக் கோட்டம் இல்லாத வெறும் நடுகல்லும், அரசர்களுக்குப் பெரும்படை என்னும் கோட்டமும் அமைக்கும் வழக்கத்தை இது அறிவிக்கிறது. பெரும்படை என்பதற்குச் சாசனங்களில் பள்ளிப்படை என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது.

போர்க்களத்தில் இறந்த அரசருக்குப் பெரும்படையாகிய பள்ளிப்படை அமைக்கும் வழக்கம் உண்டென்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுவதற்கு ஏற்பவே, சாசனச் சான்றும் கிடைக்கின்றது. அது வருமாறு:

“ஸ்ரீ கோவிராஜ கேசரி பன்மரான ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 29-ஆவது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் பெருபாணப்பாடி தூநாட்டு மேற்பாடி யாகிய ராஜாஸ்ரயபுரத்து நகரத்தோம் ஆற்றூர்த் துஞ்சினதேவர்க்குப் பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் எங்கள் நகரத்தில் எடுப்பித்தருளின திரு அருஞ்சிகை ஈஸ்வரத்து மகாதேவர் கோயில்”.1

இந்தச் சாசனத்தில் கூறப்படுவது என்ன வென்றால்: அருஞ்சிகை என்னும் பெயருள்ள ராஜராஜ சோழன் (முதலாவன்) இவ்வூரில் பகைவரோடு போராடுகையில் போர்க்களமாக இருந்த ஆற்றங்கரையில் மாண்டு போனான். அதன் காரணமாக ஆற்றூர்த் துஞ்சிய தேவர் என்று அவனுக்குப் பெயர் உண்டாயிற்று. அவன் இறந்த இடத்தில் நடுகல்லுக்குப் பதிலாகப் பள்ளிப்படை (பெரும்படை) யாகக் கோவில் கட்டப்பட்டது என்பதாம். சித்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமா நாட்டில், முதலாம் ஆதித்த சோழனுக்குப் பள்ளிப்படை (கோட்டம்) அமைக்கப்பட்டிருந்தது என்று ஆர்க்கியாலஜி இலாகா அறிக்கை கூறுகிறது.2

எனவே, நடுகல் என்னும் வீரக்கல் சாதாரண வீரர்களின் பொருட்டும், பெரும்படை என்பது பெரிய அரசர்களின் பொருட்டும் அமைக்கப்பட்டன என்பது தெரிகின்றது.

அடிக்குறிப்புகள்

1. (S.I.I. Vol. III, Part. I. Nos. 15, 16, 17).

2. Annual Report of the Archaeological Dept. South Circle, Madras, Part || 1915-16)

7. வாள் மண்ணுதல்

தொல்காப்பியம் புறத்திணையியலில் "குடையும் வாளும் நாள் கோள் அன்றி" எனத் தொடங்குகிற சூத்திரத்தில் “வென்றவாளின் மண்ணு” என்று ஒரு துறை கூறப்படுகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் "இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்ற வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதல்”, என்று எழுதுகிறார் வாள்மண்ணுதலுக்கு வாண்மங்கலம் என்றும் பெயர் கூறுவர். வாள்மண்ணுதலாகிய வாண் மங்கலத்துக்குச் சாசனச்சான்று கிடைத்திருக்கிறது. இந்தச் சாசனம் இராஷ்டிரகூட அரசன் கன்னர தேவன் (மூன்றாம் கிருஷ்ணன்) என்னும் அரசன் காலத்தில் கி.பி. 949 50 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. மைசூர் நாட்டில் மைசூர் மாவட்டத்தில் மந்தியா தாலுகாவில் ஆதகூர் என்னும் ஊரில் இந்தச் சாசனம் இருக்கிறது.

கங்கவாடி தொண்ணூற்றாராயிரம் நாட்டை அரசாண்டவனாகிய பூதுகன் என்னும் சிற்றரசன், கன்னர தேவனுக்குக் கீழ்ப்பட்டவன். பூதுகனிடத்தில் மணலேரன் என்னும் ஒரு சேனைத் தலைவன் இருந்தான். அக்காலத்தில் கன்னர தேவனாகிய இராஷ்டிரகூட அரசனுக்கும் இராஜாதித்தியன் என்னும் சோழனுக்கும் போர் நடந்தது. இந்தப் போரிலே கன்னரதேவன் பக்கத்தில் பூதுகனும் அவனுடைய சேனைத் தலைவனாகிய மணலேரனும் போர்க்களஞ் சென்று போர் செய்தார்கள். சோழன் வெற்றிபெறும் நிலையில் இருந்தான். அப்போது பூதுகனின் சேனைத் தலைவனான மணலேரன் கள்ளத்தனமாகப் போர் செய்து சோழனைக் கொன்று விட்டான். ஆகவே வெற்றி கன்னர தேவனுக்காயிற்று. இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியடைந்த கன்னரதேவன் பூதுகனுக்குப் பல ஊர்களைத் தானமாகக் கொடுத்துச் சிறப்புச் செய்தான். பூதுகன், இப்போரின் வெற்றிக்குக் காரணமாயிருந்த தன்னுடைய வீரனாகிய மணலேரனுக்கு ஆதுகூர் பன்னிரண்டையும் பெள்வொள நாட்டில் காதியூரையும் தானமாகக் கொடுத்தான். இச்செய்தியைக் கூறுகிற இச்சாசனம் ‘வாள்கழுவிக் கொடுத்தான்’ என்று கூறுகிறது. இந்தக் கன்னடச் சாசனத்தின் இப்பகுதி வாசகம் இது:

20. ஸ்வஸ்திஸ்ரீ. எறியப்பன மகம் ராசமல்லனம் பூதுகம் காதிகொந்து தொம்பத்தறு ஸாஸிரமும் ஆளுத்திரெ கன்னர தேவம் சோழனம் காதுவந்து பூதகம் ராஜாதித்தயம் பிஸுகெயெ கள்ளனாகி ஸுரிகிறிது

21. காதிகொந்து பனவஸெ பன்னிர்ச் சாஸிரமும் பெள்வொள மூநூறும் புரிகெரெ மூனூறும் கிஸுகாடெழ்பதும் பாகெநா டெழ்பத்துவம் பூதுகங்கே கன்னரதேவம் மெச்சு கொட்டம். பூதுகனும் மணலேரம்

22. தன்ன முந்தே நிந்திரிதுதர்க்கெ மெச்சி ஆதுகூர்ப்

23. பன்னெரடும் பெள்வொளத காதியூருமம் பாள்.

24. கச்சுகொட்டம். மங்கள மஹாஸ்ரீ.1

இச்சாசனத்தின் இறுதியில் பாள் கச்சு கொட்டம் என்று எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள்: பாள், பாளு - வாள், கச்சு, கர்ச்சு, கழ்ச்சு - கழுவு பாள் கச்சு கொட்டம் வாள் கழுவிக் கொடுத்தான். இது பற்றி டி. ஏ. கோபிநாதராயர் அவர்களும் எழுதியுள்ளார்.2

வெற்றிவாளை, வெற்றிக்கடவுளாகிய கொற்றவை (துர்க்கை) மேல் இரத்தக்கறை போகக் கழுவும் வழக்கம் இன்னொரு சாசனத்திலும் கூறப்படுகின்றது. சேர நாட்டில் இரவி வேந்தன் (வீரரவி கேரளவர்மன் திருவடி) என்னும் அரசன் காலத்தில் இச்சாசனம் எழுதப்பட்டது.இது இப்போது வாள் விச்சகோட்டம் என்று பெயருள்ள ஊரில் உள்ள பகவதி (கொற்றவை) கோவிலில்இருக்கிறது. வாள்விச்ச கோட்டம் என்று தவறாக வழங்கப்படுகிற இப்பெயரின் சரியான பெயர் வாள் வைத்த கோட்டம் என்பது. இந்தச் சாசனம் செய்யுளாக எழுதப்பட்டிருக்கிறது.

ஆதி யெழு நூற்றுடன் தொண்ணூற்றையா மாண்டி
        லற்பசியேழ் முற்றசமி யவிட்டம் வெள்ளி
மாதிசைசேரின்னாளி லிரவி வேந்தன் மனமகிழப்
        பகவதி வாள் வைத்த கோட்டத்
தோதிலுறு மிறைவி யிருப்பதற்கு மேன்மையுறும்
        முகமண்டபமா மதற்கு நாப்பண்
மூதறிவா லொருகலின் மண்டபமுஞ் செய்வித்தான்
        முல்லைமங்கலன் திருவிக்கிரமன் தானே.3

அடிக்குறிப்புகள்

1. (Atakur Inscriptions of Krishna III and Bituga II -A. D. 949-50. PP. 50-57. Epigraphia Indica. Vol. VI. 1900-01).

2. (A Note on the World Balgalchchu. Indian Aniquary, Vol, X L. 1911 Balgalchchu Gottam, Epigraphia Indica, Vol. VI. P. 35.)

3. No. 125. Three Records of Valvichcha Kottam. Travancore Archaeological Series. Vol. VI, Part. I).

8. கழுதை ஏர் உழுதல்

ஒரு அரசன் பகையரசனுடைய கோட்டையை அழித்து ஏரில் கழுதையைப் பூட்டி ஏர் உழும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்தது. இவ்வழக்கத்தைப் பற்றித் தொல்காப்பியர் கூறியதாகத் தெரியவில்லை. ஆனால், “தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்கு” என்று தொடங்கும் பொருளதிகாரம் புறத்திணையியல் சூத்திரத்தில் வருகிற 'மன்னெயில் அழித்த மண்ணுமங்கலமும்' என்னும் அடிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கழுதை ஏர் உழுதலைக் கூறுகிறார்.

“மன்னெயில் அழித்த மண்ணு மங்கலமும் - மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளைவரகுங்கொள்ளும் வித்திமங்கல மல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடுமங்கலமும்” என்பது அவர் கூறும் உரை.

பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப்பெருவழுதி தன் பகைவருடைய அரண்களை அரண்களை வென்று வென்று இடித்துத் தகர்த்துக் கழுதைகளைப் பூட்டிய ஏரினால் உழுதான் என்று புறநானூற்றுச் செய்யுள் கூறுகின்றது.

கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய்தனை யவர் நனந்தலை நல்லெயில்

(புறம். 15, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமியை நெட்டிமையார் பாடியது.)

அதியமான் மகன் பொருட்டெழினி, பகைவருடைய கோட்டையை அழித்துக் குருதி ஈரத்தோடு இருந்த அந்த இடத்தைக் கழுதைகள் பூட்டிய ஏரினால் உழுது வரகும் கொள்ளும் விதைத்தான் என்று இன்னொரு செய்யுள் கூறுகிறது.

உருகெழு மன்னர் ஆரெயில் கடந்த
நிணம்படு குருதிப் பெருமபாட் டீரத்து
அணங்குடை மரபின் இருங்களந் தோறும்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி
வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ.

(புறம். 392. அதிகமான் மகன் பொருட்டெழினியை ஔவையார் பாடியது.)

சேரன் செங்குட்டுவனும் பகைவரை வென்று கழுதை ஏர் உழுத செய்தியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார்.

வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கி
கவடி வித்திய கழுதையேர் உழவன்
குடவர் கோமான் வந்தான்.
(சிலம்பு. நீர்ப்படை காதை, 225-227)

இவ்வாறு சங்க இலக்கியங்களில், வென்ற அரசர் பகையரசரின் கோட்டைகளை அழித்துக் கழுதையினால் ஏர் உழுத செய்தி கூறப்படுகின்றன. இதே வழக்கம் வடநாட்டிலும் இருந்திருக்கிறது. காரவேலன் என்னும் கலிங்க நாட்டு அரசன் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவன்) ஹத்திகும்பா குகைக்கோவிலில் பிராகிருத மொழியில் எழுதி வைத்திருக்கிற சாசனத்தில் இச்செய்தியைக் கூறியுள்ளான். (ஹதிகும்பா என்னும் இடம் ஒரிசா நாட்டிலே பூரி மாவட்டத்தில் உள்ள புவனேசுவரம் என்னும் ஊருக்கு மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது). வ்வரசனுடைய பல செய்திகளைக் கூறுகிற இந்தச் சாசனம், காரவேலன் பிதுண்ட நகரத்தை அழித்துக் கழுதை பூட்டிய ஏரினால் உழுத செய்தியையும் கூறுகிறது. அந்தச் சாசனத்தின் 11வது வரியிலே, “ச ஆவராஜ நிவேஸிதம் பீதுண்டம் கதபநம் கலேன காஸயதி” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, ஆவ அரசன் அமைத்த பிதுண்டம் என்னும் கோட்டையைக் கழுதை ஏரினால் உழுதான் என்பது பொருள்.1

ஹரிபத்ரீ என்பவர் எழுதிய ஆவஸ்யக விருத்தி என்னும் நூலிலும், ஹேமசந்திரர் எழுதிய வீரசரித்திரத்திலும் இச்செய்தி கூறப்பட்டிருக்கிறதாம். கோணிகன் என்னும் அரசன் வைசாலி நாட்டரசனை வென்று அவனுடைய கோட்டையை இடித்துத் தகர்த்துக் கழுதைகள் பூட்டிய ஏரினால் உழுதான் என்று அந்த நுல்கள் கூறுகின்றன. என்பர். இதனால், அரசர் கழுதையினால் ஏர் உழுத வழக்கம் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் கலிங்க தேசம், வைசாலி முதலிய வடநாடுகளிலும் இருந்தது என்பது தெரிகின்றது.

இதுகாறுங் கூறப்பட்டதிலிருந்து, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் கூறப்பட்ட செய்திகள் அக்காலத்தில் மக்களிடத்திலிருந்த பழக்க வழக்கங்களைத்தான் விளக்குகின்றன என்பது தெரிகின்றது. அந்தப் பழக்க வழக்கங்கள் பிற்காலத்திலும் நெடுங்காலம் வரையில் நடைமுறையில் இருந்தன. என்பதும் சாசனச் சான்றுகளால் அறியப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்

1. The Hatigumpa Inscriptions of Karavela. Pp. 71-89. Epigraphia Indica. Vol. XX.